சுயமரியாதை - 28 பார்ப்பனர் அல்லாதோர் ஆட்சி!

10 08 2018

சுயமரியாதை - 28 பார்ப்பனர் அல்லாதோர் ஆட்சி!

பார்ப்பனர் அல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கல்வியிலும், பிற துறைகளிலும் உயர்த்துவதற்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்று பெரியார் கருதினார். ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் கல்வியால்தான் மேம்பாடு அடைய முடியும் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே நேரத்தில் தானோ, தன் கட்சியோ நேரடியாக ஆட்சிக்கு வருவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால்தான் ஆட்சியமைக்கத் தன்னைத் தேடி வந்த இரண்டு வாய்ப்புகளை அவர் வேண்டாமென்று மறுத்தார். சென்னைத் தலை மாகாண ஆளுநராக இருந்த ஆர்தர் ஜேம்ஸ் ஹோப் ஆட்சி அமைக்குமாறு பெரியாரை நேரடியாகவே அழைத்தார். பெரியார் மறுத்துவிட்டார். ராஜாஜியே ஒரு முறை, நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், நானும் இன்னும் இரண்டு மூன்று பேரும் அமைச்சகர்களாக இருக்கிறோம் என்று 1937இல் சொன்னபோதும் அதனை மறுத்துவிட்டார். பிறகுதான் ராஜாஜி அந்தப் பொறுப்பை ஏற்றார்.

இவ்வாறு தேடிவந்த வாய்ப்புகளை ஏன் மறுத்தேன் என்பதற்கு அவர் ஒளிவு மறைவின்றி விடை சொல்லியுள்ளார். "மக்கள் யாராக இருந்தாலும், அரசியலில் சுயநலமற்று நேர்மையாக, நாணயமாக நடந்து கொள்வார்கள் என்பது இயற்கைக்கு விரோதமான காரியமாகும். மனித சுபாவத்தை வைத்தே இதனை நான் சொல்லுகிறேன்" என்று கூறும் பெரியார், இதனைச் சாதாரண மனிதர்களின் போக்கைக் கொண்டு முடிவு செய்யவில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். "பெரிய பெரிய தலைவர்கள், 'மகான்கள்', 'மகாத்மாக்கள்' என்பவர்களை கணக்கில் வைத்துக் கொண்டுதான் இதனைச் சொல்லுகிறேன்" என்று விளக்கம் தருகிறார். அதே நேரத்தில், அரசு அதிகாரத்தின் மூலமே பார்ப்பனர் அல்லாத மக்களுக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும் என்பதையும் அவர் ஏற்கிறார். அதனால்தான், நீதிக்கட்சி என்று அறியப்படும் தென் இந்திய நல உரிமைச் சங்கம் கூட, 'அரசியல் கலந்த நலச் சங்கம்', 'அரசியல் கலவாத நலச் சங்கம்' என இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்று தன் கருத்தை எடுத்துரைக்கின்றார். இங்கே அரசியல் என்று பெரியார் குறிப்பிடுவது, தேர்தலில் நிற்கும் அரசியல் என்ற பொருளில்தான் என்பதை நாமறிவோம். மற்றபடி அரசியல் கலக்காதது என்று எதுவும் இல்லை என்பதைப் பெரியார் நன்கு அறிந்தே இருந்தார்.

நீதிக்கட்சி அப்படி இரண்டு பிரிவுகளுக்குத் தயாராக இல்லாத நிலையில், தேர்தல் அரசியல் கலக்காத ஒரு பிரிவாகத் தன் அமைப்பையே மறைமுகமாக மாற்றிக் கொண்டார். அதனைப் புரிந்து கொண்ட நீதிக்கட்சித் தலைவர்கள் 1920களின் இறுதியில், நீதிக்கட்சியின் தலைமையை ஏற்கும்படி பெரியாரை வேண்டினர். ஆனால், "இருக்கட்டுங்க, பாக்கலாங்க: என்று கூறி அந்த வாய்ப்பைத் தள்ளி விட்டுவிட்டார். பிறகு 'திராவிடன்' ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டார். அதுவும், 'குடியரசு' இதழின் போக்கில்தான் திராவிடனையும் நடத்த முடியும் என்ற நிபந்தனையை அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே அதற்கு இசைந்தார்.தான் ஆட்சிக்கு வர விரும்பாத போதும், பார்ப்பனர் அல்லாதோர் ஆட்சியில் அமர வேண்டும் என்று விரும்பினார். "நல்ல ஆட்சி, கெட்ட ஆட்சி என்பதைக் கூட அதிகம் சிந்திக்காமல், பார்ப்பனர் ஆட்சி, பார்ப்பனர் அல்லாதோர் (தமிழர்) ஆட்சி என்கின்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துத் தீவிரமாகக் கலந்து கொண்டு வந்திருக்கிறேன்" என்று தன்னுடைய நிலைப்பாட்டிற்கு அவரே விளக்கமும் தந்துள்ளார். "பதவி பெற்று ஆட்சி நடத்துகிற அரசாங்கம் ஒவ்வொன்றிலும் நான் சில கடமைகளை ஏற்று, ஆதரித்தும், எதிர்த்தும் வந்திருக்கின்றேன்" என்கிறார்.

தன் ஆதரவு பெற்று அமையும் அரசிலும், பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான சில உரிமைகளைப் பெற்றுத்தர முயற்சி செய்துள்ளேனே அல்லாமல், தனக்காக என்று தனிப்பட்ட முறையில் எதனையும் கேட்டதில்லை என்று தன் நிலையைக் கூறும் அவர், சுப்பராயன், முத்தையா (முதலியார்), பொப்பிலி அரசர் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது, அவர்களை அணுகிச் சமூக மாற்றங்களுக்கு உதவுமாறு கேட்டதைக் குறிப்பிடுகின்றார்.

தன்னலமற்ற இந்தப் 'பெரியாரைத்தான்' இன்று சிலர் கூச்சமே இல்லாமல் தூற்றிப் பேசுகின்றனர்.

(தொடரும்) subaveeblog 10 oct 2016