சுயமரியாதை - 29 பகத்சிங்கைப் பாராட்டிய குடியரசு!

14 08 2018

சுயமரியாதை - 29 பகத்சிங்கைப் பாராட்டிய குடியரசு!

உப்புச் சத்தியாகிரகம் நாடெங்கும் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாகவே நடந்தந்து. எனினும்,அதற்குப் பிறகு ஏற்பட்ட சமரசங்களும், பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கில் ஏற்றப்பட்டதும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தன. காந்தியார் இந்திய அரசியலுக்கு வந்தபின் அப்போதுதான் முதன்முதலில் சில எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஆயுதமேந்திய புரட்சியாளர்களின் இந்திய விடுதலைக்கான போராட்டம் 1920களில் வேகம் பெற்றது. வெள்ளையர்களால் ஆசாத் கொலை செய்யப்பட்டது, சாண்டர்ஸ் என்னும் காவல்துறை அதிகாரியைப் பகத் சிங் கொன்றது, சட்டசபையில் குண்டு வீசியது போன்ற பல நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் நடந்தன.அனைத்தையும் தாண்டி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கில் ஏற்றப்பட்ட நிகழ்ச்சி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1929 வரை யார் என்றே அறியப்படாமல் இருந்த பகத்சிங் 1931இல் தூக்கில் ஏற்றப்பட்டபோது, நாடறிந்த நாயகன் ஆனார். அவர்களைத் தூக்கு மேடையில் இருந்து காந்தியாரால் காப்பாற்ற முடியும் என்று நேரு தொடங்கி, சாதாரண மக்கள் வரையில் அனைவரும் நம்பினர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காந்தியார் ஈடுபடவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இர்வின் பிரபுவோடு சமாதான ஒப்பந்தமும் செய்து கொண்டார். அதனை மக்களின் ஒரு பகுதியினர் - குறிப்பாக இளைஞர்கள் - கடுமையாக எதிர்த்தனர். சிலவிடங்களில் காந்தியாருக்கு இளைஞர்கள் சிலர் கறுப்புக் கொடி காட்டும் அளவிற்கு நிலைமை போயிற்று. 

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பகத்சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து முதலில் தலையங்கம் எழுதிய ஏடு 'குடியரசு'தான்! 1931 மார்ச் 23 அன்று இரவு 7.33 மணிக்குப் பகத் சிங்கும் அவரது தோழர்களும் தூக்கில் ஏற்றப்பட்டனர். ஆறே நாள்களில் (29.03.1931) அது குறித்துச் சுயமரியாதை இயக்க ஏடான குடியரசு எழுதியது. இன்று இருப்பது போல் தொலைத் தொடர்பு ஏதும் இல்லாத அன்றைய சூழலில், அவ்வளவு விரைவாகச் செய்திகளைத் திரட்டித் தலையங்கம் எழுதிய செய்தி வியப்புக்குரியதே!

"திரு காந்தியவர்கள் (பகத் சிங்கைத் தூக்கில் ஏற்றிய) திரு இர்வின் அவர்களை மகாத்மா என்று கூறி, அந்தப்படியே அழைக்கும்படியாக, தேச மகா ஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு இர்வின் பிரபு அவர்கள் திரு காந்தி அவர்களை ஒரு மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன" என்று பெரியார் எழுதுகின்றார். மேலும், பகத் சிங்கிற்கு சமத்துவமும், பொதுவுடைமையும் தான் கொள்கைகள் என்று கருதுகிறோம் என்றும் அத்தலையங்கம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு பகத்சிங்கைப் பற்றிச் சில செய்திகளை அறிந்துகொண்டு அது குறித்து எழுதிய குடியரசு இதழ், வெள்ளைக்காரர்களின் தவறான முடிவை நையாண்டியாகக் குறிப்பிடுகிறது. "நமது அரசாங்கத்தார், இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து, மாகாணத்திற்கு நான்கு பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்று மனதார வேண்டுகிறோம்", என்ற குறிப்போடு அந்தத் தலையங்கம் முடிகிறது.
இவ்வாறு ஆங்கிலேயர்களின் செய்கையை எள்ளி நகையாடிய அதே வேளையில், காந்தியாரின் போக்கையும் பெரியார் வெளிப்படையாகக் கண்டிக்கிறார். காங்கிரசை விட்டுப் பிரிந்த பின்னரும், காந்தியாரின் சீடராகவே இருந்த பெரியார், நீதிக்கட்சித் தலைவர்களும் கதர் உடை உடுத்த வேண்டும் என்று கூறிய பெரியார் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு காந்தியாரின் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக விலகி வந்து விடுகின்றார். "காந்தி பகிஷ்காரம்" என்னும் அளவிற்கு அவருடைய கருத்து மாறுகின்றது. 
(தொடரும்) subaveeblog 13 oct 2016