சுயமரியாதை - 30 சாதி ஏற்பும், தீண்டாமை எதிர்ப்பும்

18 08 2018

சுயமரியாதை - 30 சாதி ஏற்பும், தீண்டாமை எதிர்ப்பும்

1933 ஆம் ஆண்டு ஜூலை மாதக் குடியரசில், காந்தியார் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றைப் பெரியார் எழுதியுள்ளார். 'அரசியல் சர்வாதிகாரி'யாகவே அவர் மாறிவிட்டார் என்று பெரியார் குற்றம் சாற்றுகின்றார். அப்படி அவர் மாறியதற்கு அவருடைய சீடர்கள் மட்டுமின்றி, அவரும் கூட ஒரு காரணம் என்கிறார்."அவர் போட்டுக்கொண்ட மத வேஷமும், கடவுள் சம்பந்தமான பேச்சும், மற்றும் சத்தியம், அஹிம்சை, சத்தியாகிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும்" அவரை ஒரு அரசியல் தலைவர் என்ற நிலையிலிருந்து உயர்த்தி ஒரு மகானாகவும், மகாத்மாவாகவும் ஆக்கி விட்டன . அவருடைய சீடர்களோ அவரை ஒரு ரிஷி என்பது போலவும், ஒரு முனிவர் என்பது போலவும், இன்னும் சொன்னால் ஒரு இயேசு, ஒரு நபி, ஒரு வைஷ்ணவ அவதாரம் என்பது போலவும் எல்லாம் பிரச்சாரம் செய்தும், விளம்பரம் செய்தும், லவுகித்தும், அரசியல், வைதீகம் ஆகிய இரண்டு நிலைகளிலும் உயரத் தூக்கி வைத்தனர் ' என்று எழுதிச் செல்கிறார் பெரியார்.

இவ்வாறு எல்லாம் செய்ததன் மூலம்,அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக ஆக்கிவிட்டனர் என்பதே குடியரசு கட்டுரையின் சாரம். ஆனால் இன்று காந்தியத்தின் கதி என்ன ஆகிவிட்டது என்று பார்த்தீர்களா என்கிறார். 1920 வரையில் பெசன்ட் அம்மையாரின் நிலையும் இப்படித்தான் இருந்தது என்று கூறும் பெரியார், அதனைச் சற்று விளக்கியும் கூறுகின்றார்.

"பகவத் கீதை பிரச்சாரத்தாலும், கடவுளிடத்தில், மஹாத்மாக்களிடத்திலும் தான் தினம் பேசுவதாகவும், முன் ஜென்மம், பின் ஜென்மம் முதலியவைகள் எல்லாம் தனக்குத் தெரிகின்றதாகவும் சொன்னதாலும், மற்றும் என்னென்னவோ சொல்லிக் கொண்டதாலும் அந்த அம்மாளும் அரசியலில் தலைமை வகிக்கப் பெற்று, கொஞ்ச காலம் அரசியலில் சர்வாதிகாரியாக இருந்து, இந்தியா மாத்திரமல்லாமல் ஒரு காலத்தில் உலகம் முழுவதுமே விளம்பரம் பெற்றிருந்ததை பார்த்தால், காந்தியத்திற்கும், பெசண்டியத்திற்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை பார்க்கலாம்" என்று அந்தக் கட்டுரை விரிவாகப் பேசுகின்றது.பிறகு பெசன்ட் அம்மையார் அரசியலில் தன்னுடைய செல்வாக்கை இழந்ததைப் போலவே இப்போது காந்தியாரின் செல்வாக்கும், பகத்சிங் தூக்கு, இர்வின் ஒப்பந்தம் ஆகியனவற்றிற்குப் பிறகு குறையத் தொடங்கியுள்ளது என்பது அவர் தரும் விளக்கம்.காந்தியாரைப் பற்றிய பெரியாரின் பார்வை மூன்று நிலைகளில் இருந்தது. முதலில் அவர் காந்தியாரின் 'பக்தராகவே' இருந்தார். பிறகு, நாடே அவர் பின்னால் நின்றபோதும் சற்றும் தயக்கமின்றித் தன் விமர்சனத்தை எடுத்து வைத்தார். இறுதியில், காந்தியார் தன்னுடைய வருண-சாதி பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்ட பிறகு, 'அவரை இனிமேல் பார்ப்பனர்கள் உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள் என்றே 1947 இறுதியில் எழுதினர். அவர் எழுதியபடியே 1948 ஜனவரியில் காந்தியார் கொல்லப்பட்டார். அப்போது காந்தியாரின் கொலையை வன்மையாகக் கண்டித்து எழுதிய பெரியார் இந்தியாவிற்குக் காந்தி நாடு என்றே பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

பெரியாரைப் போலவே, காந்தியார் வாழ்ந்த காலத்திலேயே அவரைக் கடுமையாக விமர்சனம் செய்த இன்னொரு தலைவர் அண்ணல் அம்பேத்கார்தான்.இருவரின் விமர்சனத்திற்கும் அடிப்படை நோக்கம் ஒன்றுதான். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், தீண்டாமையை மட்டும்தான் காந்தியார் எதிர்த்தாரே அல்லாமல், வருண-சாதிக் கோட்பாட்டை எதிர்க்கவில்லை, அப்படி ஓர் அமைப்பு தேவை என்றே எழுதியும், பேசியும் வந்தார். அதன் காரணமாகவே, சமூக நீதிப் போராளிகளான பெரியாரும், அம்பேத்காரும் அவரை எதிர்த்தனர்.அதன் பொருட்டே, தமிழ்நாட்டிற்கு வரும் காந்தியாரை அனைவரும் பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் அவருக்குப் பணமுடிப்பு போன்றவைகளை வழங்கக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை 1933 ஆம் ஆண்டு 'புரட்சி' ஏடு தெரிவிக்கின்றது.

(தொடரும்) subaveeblog 16 10 2016