சுயமரியாதை - 31 நெருப்பிருந்த பனிக்காலம்

21 08 2018

சுயமரியாதை - 31 நெருப்பிருந்த பனிக்காலம்

காங்கிரஸ், காந்தியார் எதிர்ப்பும், கம்யூனிச ஆதரவுமாக 1930களில் கால் வைத்தது சுயமரியாதை இயக்கம். அதற்கு முன்பே கூட, பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே பெரியார் இருந்துள்ளார். பொதுவுடமைக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் சில வேறுபாடுகள் இருந்த போதும், ஒற்றுமைகள்தாம் மிகுதி என்பதைத் தயங்காமல் சொல்லலாம். தந்தை பெரியாரும், தோழர் சிங்காரவேலரும் 1928இல் சந்தித்துள்ளனர். தமிழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சந்திப்பு என்று அதனைக் கூறலாம். இருபெரும் மேதைகளாகவும், இருபெரும் புரட்சியாளர்களாகவும் விளங்கிய அவர்களின் சந்திப்பால், வர்க்கம், வருணம் என்னும் இருபெரும் தடைச் சுவர்களை இடித்துத் தமிழகம் முன்னேறுவதற்கான பாதை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் 1908 ஆம் ஆண்டே ஒரு மாநாட்டில் சந்தித்துள்ளனர் என்று ஆய்வாளர் பா. வீரமணி கூறுகின்றார். எனினும் அது ஒரு சாதாரண நிகழ்வே. 1928க்குப் பிறகே இருவரும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினர். 1928-34 அவர்கள் சேர்ந்திருந்த காலம் ஆகும். அதனை நெருப்பிருந்த பனிக்காலம் என்று சொல்லலாம்.

அதற்கும் முன்பாக, சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட நேரத்திலேயே தொழிற் சங்கக் கூட்டமொன்றில் பெரியார் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அந்த உரையை மேலோட்டமாகப் பார்க்கும்போது தொழிற் சங்கங்களுக்கு எதிரானது போலத் தோன்றும். ஆனால் மறு வாசிப்பில் அதன் உட்பொருளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 1926ஆம் ஆண்டு சென்னை, ராபின்சன் பூங்காவில் தொழிலாளர்கள் இடையே பேசியுள்ள பெரியார், "இந்த தொழிற் சங்கத்திலேயெல்லாம் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை" என்று தன் உரையைத் தொடங்குகின்றார். தொழிலாளர்களுக்கு இந்தக் கூற்று ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன்பிறகு தன் ஆற்றாமைக்கான காரணத்தைப் படிப்படியாக அவர் விளக்குகின்றார். குறிப்பாக மூன்று காரணங்களால் தொழிற் சங்கங்களின் மீது தமக்கு 'அதிருப்தி உண்டாகியிருப்பதாக'க் கூறுகின்றார்.

முதலாவதாக அவர் முன்வைத்த காரணம், தொழிற் சங்கங்கள் வெறும் கூலி உயர்வுக்காக மட்டுமே போராடுகின்றன என்பதுதான்."வெறும் கூலி உயர்வுக்குப் போராடுகிற தொழிலாளி இல்லை, லாபத்தில் பங்கு கேட்கிற தொழிலாளி வர வேண்டும்" என்றார். இரண்டாவதாக, தான் போராடிப் பெறுகின்ற கூலி உயர்வையும் பெரும்பாலானவர்கள் கோயில் திருவிழாக்களிலும், மொட்டை அடித்தல்,காது குத்தல் போன்ற சடங்குகளிலும் வீணாகச் செலவழித்து விடுகின்றனர் என்று கவலைப் பட்டார். மூன்றாவது அவருடைய கவலை, தங்கள் சங்கங்களுக்குத் தாங்களே தலைமை தாங்காமல் வெளியிலிருந்து யாரையோ ஏன் கூட்டி வர வேண்டும் என்பது.மூன்று பார்வைகளும் மிக நியாயமானவை என்பதை நாம் உணரலாம். பொதுவுடைமை, பகுத்தறிவு, தன்மானம் ஆகிய மூன்றுமே மூன்று கோணங்களில் வெளிப்பட்டுள்ளன என்பதும் நமக்குப் புரிகிறது. .தொழிற் சங்கங்களுக்குத் தொழிலாளர்களே தலைமை ஏற்க வேண்டும் என்பதனை ஒரு சுவையான குட்டிக் கதையின் மூலமும் அவர் அக்கூட்டத்தில் விளக்கியுள்ளார்.

ஒரு குட்டையில் கிடந்த தவளைகள் எல்லாம் ஒருநாள் கடவுளைப் பார்த்து, எங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று கேட்டனவாம். கடவுள் உடனே ஒரு மரக்கட்டையை அந்தக் குட்டையில் தூக்கிப் போட்டு, இதனை உங்கள் தலைவராக வைத்துக் கொள்ளுங்கள் என்றாராம். தவளைகள் 'அந்தத் தலைவரை' மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டன. சில நாள்களுக்குப் பின் மீண்டும் கடவுளிடம் வந்த அதே தவளைகள், "இந்தத் தலைவர் எதற்கும் பிரயோஜனமில்லை. எப்போதும் எதுவும் செய்யாமல் பேசாமலே இருக்கிறார். ஏதாவது செயல்படுகிற மாதிரி ஒரு தலைவரைக் கொடுங்கள்" என்று கேட்டனவாம்.

இந்த முறை கடவுள் ஒரு பாம்பைத் தூக்கி போட்டு இவரை வைத்துக் கொள்ளுங்கள், நன்றாகச் செயல்படுவார் என்று கூறினாராம். மரக்கட்டை ஏதும் செய்யாமல் இருந்தது. பாம்போ ஒரு நாளைக்குப் பத்துத் தவளைகளையாவது தின்று தீர்த்தது. மீண்டும் தவளைகள் பதறியடித்துக் கடவுளிடம் வந்து, "அய்யா, எங்களுக்கு இனி வேறு தலைவரே வேண்டாம். எங்கள் தலைவரை நாங்களே எங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லினவாம்.பெரியாரின் பொதுவுடைமைப் பார்வையும். பாதையும் இப்படித் தொடங்கின.

(தொடரும்) subaveeblog 19 10 2016