சுயமரியாதை -32 சுயமரியாதைக்குள் சமதர்மம்

25 08 2018

சுயமரியாதை -32 சுயமரியாதைக்குள் சமதர்மம்

சோவியத் நாட்டிற்குப் போய் வந்தபின்தான் பெரியாருக்குப் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு வந்தது என்று பலரும் கூறுகின்றனர். அது உண்மையன்று. பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு வந்த காரணத்தால்தான் அவர் சோவியத் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.1929 செப். குடியரசு இதழில், பினாங்கு கே.என். மருதமுத்து என்பவர் எழுதியுள்ள கட்டுரைக்குத் தலைப்பே "சமதர்மம் ஓங்குக" என்பதுதான். 1929-31 ஆகிய ஆண்டுகளில் சமதர்மம் குறித்துப் பல கட்டுரைகள் குடியரசில் வெளிவந்துள்ளன.

1931 டிசம்பரில் பெரியார், ஐரோப்பா மற்றும் சோவியத் நாடுகளுக்குப் பயணம் செய்தார். ஏறத்தாழ ஓர் ஆண்டு அந்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு 1932 இறுதியில்தான் தமிழகம் திரும்பினார். திரும்பும்போது இலங்கை வழியாக வந்தார். ஆனால் 1931 ஜூலையில் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை வாலிபர் சங்க மாநாட்டிலேயே பொதுவுடமைக் கொள்கைகளை ஆதரித்துப் பேசியுள்ளதோடு, தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளார். சௌந்தரபாண்டியனார் தலைமையில் நடைபெற்ற அம்மாநாடு சுயமரியாதை இயக்கத்தின் மாநாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும், தன் சோவியத் பயணத்த்துக்கு முன்பே, பொதுவுடைமைக் கட்சி அறிக்கையினைத் தமிழில் மொழிபெயர்த்துக் குடியரசு ஏட்டிலும் பெரியார் வெளியிட்டார். 1848இல், மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வெளியிட்ட அந்த அறிக்கையின் தமிழாக்கம் முதன்முதலில் குடியரசு ஏட்டில்தான் வெளியாயிற்று. 1931 அக்டோபர் 4 ஆம் நாளிட்ட குடியரசில், அம்மொழிபெயர்ப்பின் முதல் பகுதியைக் காண முடியும். எனினும் அவ்வறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை. இரண்டு பகுதிகள் மட்டுமே வந்துள்ளன. அதன்பிறகு பெரியார் வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்டு விட்டார்.

அவருடைய சோவியத் பயணம், பொதுவுடைமைக் கொள்கைகள் மீது அவர் கொண்டிருந்த பிடிப்பு மேலும் உறுதியாவதற்கு உதவியுள்ளது என்பது உண்மையே. தமிழகம் திரும்பிய பெரியார், மேடைகளில் பிள்ளைகளுக்கு லெனின், ரஷ்யா போன்ற பெயர்களைச் சூட்டினார். 'இதென்ன ஊர்ப் பெயரை எல்லாம் பெரியார் பிள்ளைகளுக்கு வைக்கின்றனரே' என்று சில கேட்டனர். 'சிதம்பரம்', 'பழனி' எல்லாம் என்னவென்று பெரியார் திருப்பிக் கேட்டார்.இவை எல்லாவற்றையும் தாண்டி, பெரியார் தாயகம் திரும்பியவுடன் செய்த முதல் செயல்பாடே,சமதர்மக் கொள்கைகளைக் கட்சிக்குள் கொண்டுவர முயன்றதுதான். அவர் வெளிநாட்டில் இருந்தபோது,அவருடைய வேண்டுகோளின்படி, தோழர் சிங்காரவேலர், சுயமரியாதை சமதர்மக் கட்சியின் வரைவறிக்கை ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதனைக் குடியரசில் வெளியிட்டதுடன், 1932 டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில், அதனை ஆய்வு செய்வதற்கான கூட்டமொன்றும் ஈரோட்டில் கூட்டப்பட்டது.

அந்த வரைவறிக்கையை இயக்கத்தின் முதன்மையான உறுப்பினர்கள் சிலர் ஏற்கவில்லை. சௌந்தரபாண்டியனார், ஆர்.கே. சண்முகம், பூவாளூர் பொன்னம்பலனார், எஸ். ராமநாதன் ஆகியோருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அழகிரிசாமி, குத்தூசி குருசாமி போன்றோர் இதனைச் சில காலம் தள்ளிப் போடலாம் என்றனர். எனினும் பெரியார் அதனை விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டு, சில திருத்தங்களுடன் நிறைவேற்றினார். அதனை நடைமுறைப்படுத்த 33 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
(தொடரும்) subaveeblog 22 10 2016