அரசியலில் ஒழுக்கம் பேணப்படவேண்டும்

thinakkural.lk 13 05 2014

அரசியலில் ஒழுக்கம் பேணப்படவேண்டும்

தனிமனித வாழ்வில் ஒழுக்கம் பேணப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒழுக்கம் தவறும் போது அது பல தவறுகளுக்கும் தப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றது. உலகிலுள்ள ஏனைய உயிரினங்களை விட மனிதன் பகுத்தறிவு என்ற மேலதிக அறிவைக் கொண்டு உயர்ந்து நிற்கின்றான். ஏனைய உயிரினங்கள் இயற்கையோடொட்டி வாழும் நிலையில் மனிதன் மேலதிகமாக ஆறு தேவைகளைத் தானே தேடிப்பெற்று வாழ்க்கையை நடத்த வேண்டிய பொறுப்பை சுமக்கின்றான். மனிதனுக்கு வாழ உரிய இருப்பிடம் , உடை, கல்வி, தொழில், செல்வம், திருமணம் என்பன அவசியப்படுகின்றன.

அவற்றை முறையாகப் பெற்று அனுபவிக்கும் உரிமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறித்தவற்றை முறையாகப் பெறாது, தவறான வழியில் அடைய முற்படும் போது தனிமனிதன் குற்றவாளியாகின்றான். குறித்த தேவைகளைத் தானும் முறையாகப் பெற்று அனுபவிப்பதுடன், அவற்றை ஏனையோர் பெறுவதைத் தடை செய்யா இருப்பது மனிதப் பண்பாகின்றது.  

மனித உரிமையும் அதுவே. உலகிலுள்ள சமய தத்துவங்களும் அதனையே பகிர்கின்றன. மொழி மனித குலத்தில் இணைப்பு ஊடகமாக விளங்குகின்றது. இன்று மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளை மறுப்பதும், வழிகாட்டும் சமய நெறிகளைக் கைக்கொள்ளாதிருப்பதும் மொழியை மக்களிடையே வேறுபாட்டை வளர்க்கும் சாதனமாக கொள்வதும் மனிதகுல நிம்மதிக்கு ஊறு விளைவிக்கும் மாபெரும் குற்றமாகியுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் சீராக அமையாத போது நிகழும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கச் சட்டங்களும் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தண்டப்பணம், சிறை, மரணதண்டனை என்று பல்வேறுபட்ட தீர்ப்புக்கள் தனிமனிதன் மேற்கொள்ளும் குற்றங்களுக்காக வழங்கப்படுகின்றன.

அதாவது நாட்டு மக்கள் நேர்மையாக , நிதானமாக, நிம்மதியாகத் தாமும் வாழ்ந்து மற்றவர்களது வாழ்வில் குறுக்கீடு செய்து அவர்களது நிம்மதியைக் குலைக்காமலிருக்க வேண்டும் வஞ்சிக்காதிருக்க வேண்டும் என்பதே நோக்காக அமைந்துள்ளது. இந்த தனிமனித ஒழுக்க விதிகள் நாடாளாப் புறப்பட்ட அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதே இன்றைய கேள்வியாகியுள்ளது. அரசியல்வாதிகள் மனித வர்க்கத்திலிருந்து புறம்பானவர்களா என்ற ஐயம் ஏற்படுகின்றது. நாட்டில் நிலவும் நடைமுறைகளை ஆராயும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது. அரசியல் வாதிகள் சாதாரண மனித செயற்பாட்டிற்குரிய பொது விதிகளுக்கப்பாற்பட்டவர்களென்ற கருத்துள்ளதோ தெரியவில்லை. பிரத்தானிய ஆதிக்கத்திற்குட்பட்டு விடுதலை அடைந்த நாடுகளில் நம்நாடும் ஒன்று.

நம் நாட்டின் அரசியல்வாதிகள் தம்மைப் பிரித்தானிய மகாராணியின் தரத்தில் வைத்து நோக்குகின்றனரா என்றும், சட்டத்தில் அதற்கு வழியுள்ளதா என்றும் பகுத்து அறிந்து கொள்ள வேண்டும். ஆம். பிரித்தானிய அரசரோ, மகாராணியோ தவறு செய்ய மாட்டார்கள் என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே கோட்பாட்டை அடியொற்றியே நம்நாட்டின் அரசியல்வாதிகள் தவறு செய்யமாட்டார்கள் என்று நம்பப்படுகின்றது போலுள்ளது. சிந்திக்க வேண்டும் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும். தனிமனிதன் தவறு செய்தால் தண்டனை . அரசியல்வாதியென்றால் அதற்கு அங்கீகாரம் .

இது ஜனநாயக அரசியலின் சாபக்கேடாகியுள்ளது. எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் என்பர் அது வெறும் கூற்றாகவேயுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மகாராஜாக்களாக, மகாராணிகளாக தவறிழைக்கா பிரத்தானிய அரசர் மற்றும் மகாராணிகளைப்போல வாழ்கின்றார்கள், வலம் வருகின்றார்கள். அரசியலை நாறடிக்கின்றார்கள். ஜனநாயகம் என்ற போர்வையில் அரசியல் ஒழுக்கம் சீர்கெட்டுவிட்டது. "இன்றிருப்போர் நாளையிங்கு இருப்பதென்பது உண்மை' என்பது ஒருபாடல்வரி. இன்று ஒரு கட்சியில் இருப்பார் நாளை எங்கிருப்பாரோ என்று எண்ணக் கூடிய நிலையில் அரசியல் அரங்கு அசிங்கப்பட்டுள்ளது. தனிமனிதன் சுயநல நோக்குடன் செயற்பட்டால் குற்றமாகக் கணிக்கப்படும் போது அரசியல்வாதிகள் அவ்வாறு செயற்பட்டால் அது குற்றமாகக் கணிக்கப்படாது வாழ்த்தி வரவேற்கும் பண்பும் காணப்படுகின்றது. கண்டிக்கப்படுவதுமில்லை, தண்டிக்கப்படுவதுமில்லை. அரசியல் ரீதியாக இழைக்கப்படும் சமூகக் குற்றங்கள் சம்பிரதாயங்களாக மாறிவிட்டன.

இந்த நிலையில் நாட்டில் அரசியல் ஒழுக்கம் பேணப்படுவதில்லை. அரசியல் ஒழுக்கம் இழந்த நாட்டில் அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களும் சமூக, நாட்டு நலனுக்கு மாறான செயற்பாடுகளும் மேலோங்கி அரசோச்சும். அதனால் , அரசியல் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளாக அரசியல் களமிறங்குவோர் தம்மை நம்பிய மக்களது நம்பிக்கையை புறக்கணித்து செயற்பட்டால் அது குற்றமாக நோக்கப்படாத இன்றைய நிலை அரசியல் குற்றங்களுக்கு வழிசெய்துள்ளன என்றால் அதுவே உண்மை. ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் நம்பியுள்ள ஒருகொள்கையை , கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்து தமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள்.

அதுவே ஜனநாயக நாட்டின் நடைமுறை. குறித்த காலத்துக்குத் தெரிவாகும் பிரதிநிதிகள் மக்கள் முன் தாம் வைத்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கைவிட்டு தேர்தலின் போது தாம் ஆவேசமாக விமர்சித்தவர்களின் பக்கத்திற்குத் தாவும் போது அது தம்மை நம்பிய மக்களை ஏமாற்றும், வஞ்சிக்கும் குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் தனிமனிதன் வாக்குத்தவறினால் வஞ்சகன், ஏமாற்றுக்காரன் , போக்கிரி என்ற பட்டங்களையும் சுமப்பதுடன் சட்ட விதிகளுக்கமைய நீதித் துறையால் தண்டிக்கப்படும் நிலையுமுள்ளது. தனிமனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவமளிக்கப்படுகின்றது. தனிமனிதன் நேர்மையாக, உண்மையாக, வஞ்சகமற்றவனாக வாழவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால் அரசியலில் இது விதிவிலக்காயுள்ளது. இவ்வாறான நிலை கைவிடப்பட வேண்டும். களையப்பட வேண்டும். மக்களை அவர்களது நம்பிக்கையைப் புறந்தள்ளி சுயநல நோக்கில் செயற்படும் அரசியல் களம் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தொழில் துறையில், அரசதொழில் துறையில் ஒருவரை இணைத்துக் கொள்ள அடிப்படைக் கல்வித்தகைமை கோரப்படுகின்றது. திறமை பரீட்சிக்கப்படுகின்றது. வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகின்றது. நன்னடத்தைச் சான்றிதழ் கோரப்படுகின்றது. சிலபோது ஏதாவது குற்றங்களில் ஏற்கனவே ஈடுபட்டவரா என்று அறிந்து கொள்ள காவற்துறைச் சான்றிதழும் கோரப்படுகின்றன. நாட்டின் சட்டங்களை இயற்றும் அதியுயர் பணியிலும், நாட்டை நிர்வகித்து வழிநடத்தும் பாரிய பொறுப்பிலும் செயற்பட வேண்டிய மக்கள் பிரதி நிதிகளாக செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளுக்கு ஒரு சாதாரண அரசாங்க சேவையாளரிடம் எதிர்பார்க்கும் தகைமைகள் கூட எதிர்பார்க்காமல் இருப்பது விநோதமானது அல்லவா? மனநோயாளிகளும், உடலுறுப்புக்கள் இயங்காதவர்களும் கூட தாராளமாக அரசியலில் ஈடுபடமுடிகின்றது.

இவையெல்லாம் சமுதாயச் சீர்கேடுகளாயமைகின்றன. அவற்றிற்கு வழி செய்துவிடுகின்றன. நாட்டிலே அன்றாட நிர்வாகத்தைச் சீரிய முறையில் இயக்க உதவுபவர்களே மக்கள் பிரதிநிதிகள். தவறு ஏற்படும் போது சுட்டிக் காட்டி நெறிப்படுத்தவே ஆளும் அரசியல் தரப்புக்கு எதிர்த்தரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் நோக்காகவுமுள்ளது. ஆளும் தரப்பு தனது நிர்வாகச் செயற்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை எதிர்த்தரப்பு சுட்டிக்காட்டினால் அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து சீர் செய்ய வேண்டுமே தவிர குற்றங்குறைகளைப் பூசிமெழுகவோ, மறுத்துரைக்கவோ, மறைக்கவோ முயலக் கூடாது. அதுவே ஜனநாயகக் கோட்பாட்டின் நோக்கு. அது இன்று கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது கவலைக்குரியது.

எவ்வாறாவது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று செயற்படுவதையும் காணமுடிகின்றது. இந் நாட்டில் ஆட்சியைப்பிடிக்க உள்ளதைத் தக்கவைக்க தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால் இந் நாட்டில் அரசியல் வெறிச்சோடிவிடும் அளவிற்கு தமிழர்கள் முக்கியப் படுத்தப்பட்டுள்ளனர். முதன்மைப் படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை வரலாற்றில் சமத்துவமாக ஐம்பதுக்கு ஐம்பது கேட்டது இனவாதமாக்கப்பட்டது. அரசியல் இலாபம் ஈட்டிக்கொள்வதற்காக, சிங்கள மக்களைக் கவருவதற்காக இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை , வாக்குரியை பறிக்கப்பட்டது. பின்னர் தமிழ் மொழியுரிமை பறிக்கப்பட்டது. தரப்படுத்தல் முறை கல்வியுரிமையில் கைவைக்கப்பட்டது. தொழிலுரிமை மட்டுப்படுத்தப்பட்டது. இன வெறிப்பயங்கர வாதங்களின் மூலம் வாழ்வுரிமை சொத்துரிமைக்குத்தாக்கம் ஏற்படுத்தப்பட்டது. கூட்டாட்சிக் கொள்கை பிரிவினையாக நோக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆயுதப் போராட்டம் அடக்கப்பட்டது.

இன்று ஒரேநாட்டில் சமத்துவமாக, ஒற்றுமையுடன் வாழலாம் என்று கூறும் போது பிரிவினைவாதத்தைத் தமிழர்கள் கைவிட்டு இன்று பாராளுமன்றத்தினூடாக முழுநாட்டையுமே கைப்பற்ற எத்தனிக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. தமிழர்களைப் பகடைக்காய்களாக வைத்து அரசியல் நடத்தும் ஏனைய சமூக அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு இந் நாட்டில் என்ன உரிமையுள்ளது. அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையோ கூறுவதாயில்லை. "எலிக்குத் திண்டாட்டம் பூனைக்கு கொண்டாட்டம்' என்பது போல் தமிழர்களைத் திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தர , பண்பற்ற சிந்தனை இந் நாட்டில் ஆழப்பதிந்துள்ளது.

இன்று மாற்றின அரசியல்வாதிகள் மட்டுமன்றி மதவாதிகளும் தமிழருகெதிரான இன வாதத்தைக் கையிலெடுத்துள்ளமை காணக்கிடைக்கின்றது. தமிழ் மக்களது நிம்மதியான வாழ்வுக்கு அச்சுறுத்தல்கள் பல நிதர்சனமாகக் காணப்படும் இன்றைய நிலையில் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் நாட்டில் நிலவும் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாது தம்மிடையே முட்டிமோதிக் கொள்கின்றனர். அறிக்கைமேல் அறிக்கை விடுகின்றனர். கோள் சொல்லி இலாபம் பெறுகின்றனர். கடந்தகால தமது தனிப்பட்ட வரலாறுகளை, செயற்பாடுகளை மறந்துவிட்டு , மறைத்து விட்டு புனிதர்கள் போல தம்மை மக்கள் நம்பவேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். உண்மை வரலாறு சரியாக, தெளிவாக பதிப்பபட்டேயுள்ளது. இன்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது அரசியல் கட்சிப்பதிவல்ல. அரசியல்வாதிகளின் , தமிழ்மக்கள் பிரதிநிதிகளின் இணைந்த செயற்பாடுகளே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவதானத்துடன் ஆராயும்போது மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அரசியல் ஆதாயத்திற்காகவும், அந்தஸ்துக்காகவும் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளே நம்மத்தியில் பெருகிவிட்டதை உணரமுடிகின்றது வேதனை தருகின்றது.

கடந்துவந்த பாதையிலே நாம் சந்தித்த துன்பங்கள், வேதனைகளிலிருந்து விடுபட தனிப்பட்ட கொள்கை வேறுபாடுகளுக்கப்பாலிருந்து சமூக நோக்கில் சிந்தித்து செயற்படும் பண்பட்ட அரசியலை மேற்கொள்ள நம்மவர்கள் தயங்கக்கூடாது. மறைவாகச் செயற்படும் பிரித்தாளும் சக்திகளின் கைப்பொம்மைகளாக அன்றி நேர்மையாக சமூக நலனை மட்டும் நோக்காக கொண்ட விலைபோகாத பெறுமதிமிக்க தமிழர் தரப்பே இன்றைய தேவை. விதண்டாவாதங்களும், அதிகார ஆசையும் இதுவரை தமிழர் சமூகத்திற்குச் செய்து வந்த சித்திரவதைகள் இனியும் தொடரக்கூடாது. தமிழ் அரசியல் வாதிகளைமக்கள் பிரதிநிதிகளை கோமாளிகளாக , விலைபோகும் பிராணிகளாக நோக்கும் நிலை சமுதாய மதிப்பிறக்கத்திற்கு வழிசெய்யும் . மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட முன்னிற்கும் நம்மவர்கள் தமது தனிப்பட்ட கௌரவத்தை காத்து அதன் மூலம் சமூகத்தின் கௌரவத்தையும் காக்கவேண்டும். புத்தியிருந்தால் மட்டும் புரிந்து கொள்ள வழியுண்டு. -