விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு

05 09 2018

விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு

இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது.எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது.ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அதை அவர் ஓரளவுக்கு வெளிப்படுத்தவும் செய்தார். எனினும், எந்தவொரு கட்டத்திலும் விக்னேஸ்வரனை கூட்டமைப்பை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கிற நிலைக்கு, அவர் வரவில்லை. விக்னேஸ்வரனை வெளியேற்றாமல் தவிர்த்தமைக்கு, இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவது, விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அணியொன்று, தமிழ்த் தேசிய அரசியலில், கூட்டமைப்புக்கு எதிராக வளர்வதை, அவர் விரும்பவில்லை.இரண்டாவது, கூட்டமைப்பு - விக்னேஸ்வரன் முரண்பாட்டின் போது, கொழும்பிலுள்ள மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரின் தலையீடும், சமரச முயற்சியும் இருந்தமையாகும்.‘தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்தவர். மற்றும், 2009 பின்னடைவுக்குப் பின், தமிழர் அரசியலைக் கட்டிக்காத்தவர்’ என்கிற அடையாளங்கள் தன்னுடைய காலத்துக்குப் பின்னும், தன்னோடு தொடர வேண்டும் என்பதையே சம்பந்தன் விரும்புகிறார். அரசியல் தீர்வுக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முடங்கிப் போய்விட்டன. இவ்வாறான நிலையில், கூட்டமைப்பில் ஏற்படும் பிளவு, புதிய அணியொன்றின் எழுச்சிக்கு, வித்திட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார்.விக்னேஸ்வரன் பிரச்சினையில் அவர், இன்றளவும் உறுதியான முடிவொன்றுக்கு வரமுடியாமல்த் தவிப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். ஆனால், வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிய, இன்னும் இருப்பது ஒரு மாதமேயாகும். எப்படியும் அடுத்த வருடத் தொடக்கத்தில், தேர்தலொன்றைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியான நிலையில், இறுதி முடிவொன்றை அவர் எடுக்காமல், அதிக காலம் ஒத்திவைக்க முடியாது.

சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான நெருக்கம் என்பது, அரசியல் சார்ந்தது மட்டுமல்ல; அது, வாழ்க்கை நிலை சார்ந்தது. அதுவொரு வகையில், மேட்டுக்குடி நெருக்கம்.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராகக் கொண்டு வந்தது சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் என்று வெளியில் தெரிந்தாலும், அவர்கள் இருவரும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை, இணங்கச் செய்யும் கருவிகளாகவே, பெரும்பாலும் இருந்தார்கள்.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் நெருக்கமான, கொழும்பிலுள்ள மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அண்மையில் மறைந்த மூத்த சட்டத்தரணி ஆகியோரின் தலையீடுகளே, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கியது. அதுதான் கூட்டமைப்பில், இரண்டாம் கட்டத் தலைமையொன்று வடக்கிலிருந்து உருவாகுவதையும் தடுத்தது.

சுமந்திரனை நேரடி அரசியலுக்கு அழைத்து வரும் போது, சம்பந்தனிடம் இருந்தது, தமிழ்த் தேசிய அரசியலைத் தென்னிலங்கையோடும் சர்வதேசத்தோடும் தன்னோடு இணைந்து கையாள்வதற்கான நபர் ஒருவரின் தேவையாகும். அதைச் சுமந்திரன் குறிப்பிட்டளவு நிறைவேற்றினார். அதுமட்டுமல்லாது, கட்சி அரசியல் சார்ந்தும் அவர் முன்னேறி வந்தார்.ஆனால், விக்னேஸ்வரனை வடக்கு அரசியலுக்கு கொண்டுவரும் போது, ஆயுதப் போராட்ட அடையாளமற்ற, மும்மொழிப் புலமையுள்ள ஒருவரின் அவசியம் இருப்பதாக சம்பந்தன் நம்பினார். அத்தோடு, எந்தப் பிரச்சினைகளையும் செய்யாது, தான் சொல்வதைக் கேட்டுச் செய்யும் கிளிப்பிள்ளையாக, விக்னேஸ்வரன் இருப்பார் என்றும், அதற்குத் தனக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான நட்பும், மேட்டுக்குடி உறவும் துணையாக இருக்கும் என்றும் நினைத்தார்.ஆனால், விக்னேஸ்வரன் கிளிப்பிள்ளையாக இருக்கும் கட்டத்திலிருந்து, அதிகார தலைமைத்துவ அரசியல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி குறித்த, அவரது இலக்கு பொய்த்த புள்ளியில், தன்னை ஒரு கலகக்காரராக மாற்றினார். கூட்டமைப்பை நோக்கிக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அது, இன்றைக்கு விக்னேஸ்வரனை தற்போதுள்ள இடத்துக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது.

சம்பந்தனுக்கு, விக்னேஸ்வரனின் பலவீனமும், விக்னேஸ்வரனுக்கு சம்பந்தனின் பலவீனமும் தெரியும் என்பதுதான் இறுதி முடிவொன்று அடையப்படாமல், கூட்டமைப்பு - விக்னேஸ்வரன் முரண்பாடுகள் நீள்வதற்குக் காரணமாகும்.தான் என்ன செய்தாலும், கொழும்பிலுள்ள மூத்த ஜனாதிபதி சட்டத்தரணியைக் கொண்டு சம்பந்தனைக் கையாளலாம் என்பது விக்னேஸ்வரனின் எண்ணம். கூட்டமைப்போடு முரண்படத் தொடங்கிய கடந்த மூன்று வருட காலத்தில் அதுவே, விக்னேஸ்வரனைக் காப்பாற்றி வந்த காரணிகளில் முக்கியமானது.விக்னேஸ்வரனால் தனிக் கட்சியொன்றை ஆரம்பிக்கப்பட்டாலும், யாழ்ப்பாணம் தாண்டி ஒரு தலைவராக அடையாளம் பெற முடியாது என்கிற நிலை, விக்னேஸ்வரனின் பெரிய பலவீனமாகும். அதை வைத்துக் கொண்டு, அவரைக் கையாள வேண்டும் என்று சம்பந்தன் நினைக்கிறார். அதாவது இருவரும், ஒருவர் மற்றொருவரின் பலவீனங்களின் வழி, பயணம் செய்ய நினைக்கிறார்கள்.

ஆனால், சம்பந்தனின் நிலைப்பாடுகள், எண்ணங்களைத் தாண்டி, தீர்க்க முடியாத கட்டத்தை கூட்டமைப்புக்கும் (நேரடியாகச் சொல்வதானால், தமிழரசுக் கட்சிக்கும்) விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் எட்டிவிட்டன.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக் கூட்டங்களிலோ, தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்களிலோ அனைவரையும் பேசவிட்டு, இறுதியாகத் தன்னுடைய முடிவை மறுதலிக்க முடியாத அளவுக்கு முன்வைப்பதில் சம்பந்தன் கில்லாடி. அவர் அப்படித்தான் இதுவரையும் விடயங்களைக் கையாண்டும் வந்திருக்கின்றார்.ஆனால், விக்னேஸ்வரன் பிரச்சினையில், சம்பந்தன் நிலைப்பாடுகளை, அவர் எதிர்பார்க்காத அளவிலேயே மறுதலிக்கும் நிலைப்பாடொன்று, தமிழரசுக் கட்சிக்கு உண்டு. குறிப்பாக, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் அந்தக் கட்டத்தை எப்போதோ அடைந்துவிட்டார்கள்.

ஜனாதிபதி செயலணியின் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி, விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை, நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சம்பந்தன் வாசித்துக் காட்டி, முடிவைக் கேட்கும் நிலையொன்று காணப்பட்டது.கூட்டமைப்பின் குழுக் கூட்டங்களின் போது, சம்பந்தனுக்கு முன்னால், மற்றவர்களின் குரல் பெரும்பாலும் உயர்வதே இல்லை. சுரேஷ் பிரேமசந்திரன் இருக்கும் வரை, ஓரளவுக்கு விமர்சனப் பாணியை முன்னெடுப்பார். அதுவும் கூட, ஒரு வகையில் இறைஞ்சும் தன்மையை ஒத்திருக்கும். ஆனால், இன்றைக்கு சம்பந்தன் எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டமைப்புக்குள் இருப்பவர்களின் குரல் உயர்ந்துவிட்டது. அவரால் சமாளிக்க முடியாத கட்டமொன்று மெல்ல ஏற்பட்டிருக்கின்றது.விக்னேஸ்வரனைத் தொடர்ந்தும் வடக்கு மாகாண சபைக்குள் தக்க வைப்பதன் மூலம், கூட்டமைப்பில் உடைவு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும், தனக்கு நிகராக இன்னொரு தலைமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று சம்பந்தன் நினைக்கிறார்; அதன்போக்கில் அவர் இயங்கவும் நினைக்கிறார்.

ஆனால், அவரது நிலைப்பாடுகளுக்கு அப்பாலான யதார்த்தம் ஒன்று இருக்கின்றது. அது, கூட்டமைப்பின் எதிர்காலம் சார்ந்தது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் சார்ந்ததுமாகும்.ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் சம்பந்தனுக்குப் பின்னரான தலைமை என்பது, கேள்விக்குறியாக மாறிவிட்டது. இரண்டாம் கட்டத் தலைமையொன்றுக்கான அங்கிகாரம் இன்னமும் பெரிய அளவில் உருவாகியிருக்கவில்லை. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமந்திரன் போன்றவர்கள் உருவாகி வந்தாலும், அவர்களை வடக்குக்குள் அல்லது கிழக்குக்குள் மாத்திரம் அடங்கி விடுதல் என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் பின்னடைவாக இருக்கும்.அப்படியான கட்டத்தில்தான், நிர்வாகத்திறமையும் அரசியல் கையாளுகையுமுள்ள இரண்டாம் கட்டத் தலைமைகளை வடக்கு - கிழக்கிலிருந்து உருவாக்கியிருக்க வேண்டும். அதனை, விக்னேஸ்வரனை முன்னிறுத்தி கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்தாவது பெற்றிருக்கலாம். அதனைவிட்டு, விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள், வடக்கு அரசியலில் மாத்திரமல்ல, தமிழர் தாயக அரசியலிலேயே ஆரோக்கியமற்ற தன்மையையே தக்க வைத்திருக்கும்.

சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா மூவருமே 75 வயதைத் தாண்டியவர்கள். இவர்களுக்கு அப்பால் சொல்லிக் கொள்ளக் கூடிய தலைவர்களாக கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் ஒரு சிலரே.அப்படியான நிலையில், மூத்தவர்கள் புதிய தலைமைகளை உருவாக்குவதும், இரண்டாம் கட்டத் தலைமைகளுக்கு வழிவிடுவதுமே ஆரோக்கியமானது. அதைச் செய்ய வேண்டிய கட்டத்தில் சம்பந்தன் இருக்கிறார். அதன்போக்கில், அவர் விக்னேஸ்வரனை விடுவிப்பதுதான் சிறந்தது. 

புருஜோத்தமன் தங்கமயில் / tamilmirror.lk  2018 ஓகஸ்ட் 29