சுயமரியாதை - 35 நீதிக்கட்சியா, காங்கிரஸா - எது சிறந்தது?

06 09 2018

சுயமரியாதை - 35 நீதிக்கட்சியா, காங்கிரஸா - எது சிறந்தது?

தோழர் சிங்காரவேலரின் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இறுதியில் அது குறித்த தன் கருத்தைப் பெரியார் கூறியிருந்தார். அந்தக் குறிப்பு, "சரியாகவோ, தப்பாகவோ ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தம் 6, 7 வருடங்களாக இருந்து வருகிறது" என்று தொடங்குகிறது. எனவே நீதிக்கட்சியுடனான உறவை அவர் முழுமையாக நியாயப்படுத்தவில்லை.. இருப்பினும், காங்கிரஸ் கட்சி உறவை விட, நீதிக்கட்சி உறவு குறைவானது இல்லை என்று எழுதுகிறார்.ஜஸ்டிஸ் கட்சியில் பண ஆதிக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். காங்கிரஸ் கட்சியிலோ சாதி ஆதிக்கம் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களால் பணத்தைத் தூக்கி எறிய முடியவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் பூணூலைத் தூக்கி எறிய முடியவில்லை. இவ்வாறு இரண்டு கட்சிகளையும் ஒப்பிட்டு எழுதிவிட்டு, இறுதியில் தெளிவாக, " என்னைப் பொறுத்தவரை பணக் கொடுமையை விட, பூணூல் கொடுமையே பலமானதும், மோசமானதும் என எண்ணுகிறேன்" என்று குறிப்பிடுகின்றார். இத்துடன் நிறுத்தி விடாமல், 'மற்ற பல விஷயங்களில் தோழர் சிங்காரவேலு அவர்கள் அபிப்பிராயம்தான் அநேகமாக நானும் கொள்கிறேன்" என்கிறார்.

பெரியாரின் பின் குறிப்பு இரண்டு செய்திகளைத் தெளிவுபடுத்துகிறது. கொள்கை வேறுபாட்டைத் தவிர இருவருக்கும் இடையில் தனிப்பட்ட பகை ஏதுமில்லை என்பதை அது உறுதிப்படுத்துகிறது. 'நமது தலைவர்' என்று சிங்காரவேலரும், தோழர் என்று பெரியாரும் குறிப்பிடுவதன் மூலம், ஒருவரை ஒருவர் மதித்துள்ளனர் என்பதும் தெரியவருகிறது.பெரியார் ஏன் நீதிக்கட்சியையும், காங்கிரசையும் ஒப்பிடுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். அந்தக் கட்டத்தில் பொதுவுடைமை எண்ணம் கொண்ட சிங்காரவேலர் உள்ளிட்ட தோழர்கள் காங்கிரசைச் சற்று நெருங்கி நின்றனர். சமூக விடுதலையை விட, அரசியல் விடுதலையே அன்றைய முதல் தேவை என்று கருதினர். அந்த இடத்தில்தான் இரு தரப்பினருக்குமிடையே வேறு வேறு நிலை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. அதன் விளைவாக இரு அணிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு விட்டது. 1934 ஜூலையில் இந்தியா முழுவதும் பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டு விட்டது. எனவே அவர்கள் மேலும் கூடுதலாகக் காங்கிரசை நெருங்கி நின்றனர்.

1935ஆம் ஆண்டு 'புது உலகம்' என்னும் புதிய இதழ் தொடங்கப்பட்டது. அதில் சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றோரின் படைப்புகள் இடம் பெற்றன. சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் மூன்றாம் தொகுதியில், அப்போது சிங்காரவேலர் எழுதிய பல கட்டுரைகளைக் காண முடிகிறது.புது உலகில், "சுயமரியாதை, ஜஸ்டிஸ், காங்கிரஸ்" என்ற தலைப்பின் கீழ் சிங்காரவேலர் ஒரு நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். அதில், சுயமரியாதைக் கட்சியினர், ஜஸ்டிஸ் கட்சியினர் ஆகிய இருவராலும் தேசம் பிளவுண்டு கிடக்கிறதே அல்லாமல், பொதுமக்களுக்கு யாதொரு நன்மையையும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகின்றார். "எந்தக் கட்சியாலும் காங்கிரசுக்குள்ள செல்வாக்கைப் பெற முடியாதென அறிக" என்று அழுத்தம் திருத்தமாக, காங்கிரஸ் ஆதரவு நிலையை வெளிப்படுத்துகின்றார். இன்னமும் ஒரு படி மேலே போய், "பிராமணர் அல்லாதவர்கள் பிராமணர்களால் அடக்கி ஆளப்படுகின்றார்கள் என்று சொல்வது இழிவான மதியீனம் (despicable nonsense)" என்று கூறுமளவுக்குச் சிங்காரவேலர் சென்றுவிடுகிறார்.

"ஈரோட்டுப் பாதை" என்னும் தலைப்பில் தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள கட்டுரையோ இதனைவிடக் கடுமையாக உள்ளது.

(தொடரும்) subaveeblog 30 oct 2016