சுயமரியாதை -36 எது முதல் தேவை?

10 09 2018

சுயமரியாதை -36 எது முதல் தேவை?

தோழர் ஜீவா அவர்கள் எழுதியுள்ள 'ஈரோட்டுப் பாதை' என்னும் கட்டுரை குறு நூலாகவே வெளிவந்துள்ளது. பேராசிரியர் வீ.அரசு தொகுத்துள்ள ப.ஜீவானந்தம் ஆக்கங்கள் - பகுதி ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது. அது ஒரு கார சாரமான கட்டுரை. சிலவிடங்களில், ஜீவாவின் எழுத்தா இது என்று ஐயப்படக்கூடிய அளவிற்குத் தரம் சற்றுத் தாழ்ந்தும் காணப்படுகிறது. நீதிக்கட்சியுடன் சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்பட்ட உறவை ஜீவா மிகக் கடுமையாகக் கண்டிக்கிறார். 'சாக்கடையில் சறுக்கி விழுந்தார் ஈ.வெ.ரா' என்று கூட எழுதுகின்றார். காங்கிரசை விட்டுப் பெரியார் வந்தது முதலே தவறான பாதையில்தான் ஈரோட்டுப் பாதை அமைந்துள்ளது என்பது போலச் சில செய்திகள் காணக்கிடக்கின்றன. "ஈ.வெ.ரா.வோ வகுப்புவாதச் சகதியை அள்ளிக் காங்கிரசின் முகத்தில் எறிந்துவிட்டுத் தேசிய ஸ்தாபனத்தைத் துறந்தார்" என்று 1925ஆம் ஆண்டு பெரியாரின் நிலைப்பாட்டைப் 10 ஆண்டுகளுக்குப் பின் ஜீவா விமர்சிக்கிறார்.

பெரியாரைத் தனிப்பட்ட முறையில் பாராட்டுவதைக் கூட ஏற்க இயலாத நிலையில், "ஏகாதிபத்திய அடிமை நாவலர் ஏ.ராமசாமி முதலியார், ஈ.வெ.ரா.வைத் தமிழ்நாட்டு ரூசோ என்று வாயாரப் பாராட்டுகிறார்" என்று எழுதுகின்றார். இறுதிப் பகுதியில் மிகக் கடுமையான விமர்சனத்துடன் அக்கட்டுரை நிறைவடைகிறது. "அழுகிப்போன ஜமீன்தாரி, நிலச்சுவான்தாரி வர்க்கத்தின் பாதை, பிற்போக்குப் பணமூட்டைகளின் பாதை, ஈரோட்டுப் பாதை" என்பன அவ்வரிகள். இந்த அளவிற்குப் பெரியார் மீதும், சுயமரியாதை இயக்கத்தின் மீதும் ஜீவா போன்றவர்களுக்குக் கோபம் ஏற்பட என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கலாம். 'பொது உடைமையா, பொது உரிமையா?' எது முதலில் வேண்டும் என்ற வினாவும், 'அரசியல் விடுதலையா, சமூக விடுதலையா?' எது உடனடித் தேவை என்னும் வினாவும்தான் இரண்டு இயக்கங்கள் இம்மண்ணில் தோன்றக் காரணம் என்று கூறலாம். இவ்வினாக்களுக்கு ஒரே விடை இருந்திருக்குமானால், இரண்டு இயக்கங்களும் ஒருங்கிணைந்து ஒரே இயக்கமாக, வலிமையான இயக்கமாகத் தமிழ்நாட்டில் இன்று வளர்ந்து நின்றிருக்கும்.

1935 முதல் இன்று வரை அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என்றாலும், இரு இயக்கங்களுக்கும் இடையே அவ்வப்போது நட்பும், பகையும் மாறி மாறி வந்துள்ளன. ஆனாலும் இந்தியா 1947இல்அரசியல் விடுதலை அடையும் வரையில் இரு கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் ஏற்படவே இல்லை. அரசியல் விடுதலையே,, சமூக விடுதலைக்கு முன் நிபந்தனை என்று உறுதியாகக் கருதிய பொதுவுடைமைத் தோழர்கள் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகியும், காங்கிரஸ் இயக்கத்தை நெருங்கியும் சென்றது அன்றைய போக்காக இருந்தது. "அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றித்தான், சமூக வாழ்வைச் சீர்திருத்த முடியும் என்பது சரித்திரம் கண்ட உண்மை" என்று எழுதிய பொதுவுடைமையினர், சுயமரியாதை இயக்கத்தின் போக்கு, "குதிரைக்கு முன் வண்டியைக் கட்டுகிற வேலை" என்று கேலி பேசினர். பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்புவதைக் கைவிட்டதையும் அவர்கள் கடுமையாகச் சாடினர். அதற்கு உரிய விடையாக, புரட்சியாளர் லெனின், ஜெர்மன் ஏகாதிபத்தியத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டபோது, அவர் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் பெரியார் ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டினர்.

லெனின் எழுதியுள்ள Left wing communism on infantile disorder என்னும் நூலில், "நீங்கள் பயணம் செய்யும் காரினை ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் சுற்றி வளைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அக்கொள்ளையரிடமிருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால், உங்களது பணம், அடையாள அட்டை, துப்பாக்கி, கார் அனைத்தையும் நீங்கள் கொடுத்தாக வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி அது ஒரு சமாதான நடவடிக்கைதான்.......இத்தகைய சமாதான நடவடிக்கையினை, கொள்கைக்கு முரணானது, கொள்ளையர்களுக்குத் துணை போவது என்று அறிவுள்ள மனிதன் சொல்ல மாட்டான்" என்று எழுதியிருப்பார் லெனின். அதே நிலைதான் அன்று சுயமரியாதை இயக்கத்திற்கும் ஏற்பட்டது. வெள்ளையர்களால் கட்சி அழிக்கப்பட்டு விடுமானால், சுயமரியாதைச் சிந்தனைகளைத் தொடர்ந்து பரப்புவதற்கு ஆள் இல்லாமல் போய்விடும். எனவே கட்சியைக் காப்பாற்ற, தாற்காலிகமாகப் பொதுவுடைமைக் கருத்துக் பரப்பலை நிறுத்த வேண்டியதாயிற்று என்பது இந்தப் பக்கத்து விளக்கமாக இருந்தது.

(தொடரும்) subaveeblog 03 nov 2016