மோடியின் பதவியேற்பு

thinakaran.lk 01 06 2014

மோடியின் பதவியேற்பு 

உலக சனத்தொகையில் சுமார் 18 வீத மக்கள் தொகையின் அதிகாரம் பெற்ற தலைவராக நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சுமார் 120 கோடி மக்கள் சனத்தொகையை கொண்ட இந்தியாவின் பலம்வாய்ந்த அரசாங்கத்தின் பிரதமராக இவர் பதவியேற்றுள்ளார்.

ஆசியாவில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் வெற்றியை இம்முறை தான் இந்தியா மிகச் சிறந்த முறையில் கொண்டாடியிருக்கிறது. சாதாரண பாரம்பரியங்களைத் தாண்டி புதிய பாரம்பரியத்தோடு இந்தியாவின் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஆரம்பத்தையே மிகச் சிறப்பாக மேற்கொண்ட பெருமை நரேந்திர மோடியைச் சாரும். சிறுகட்சிகளின் தொல்லைகளால் ஒரு நாடு தனது முன்னேற்ற வேகத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்திருக்கிறது.

எனவே,சிறு கட்சிகளின் பங்களிப்பில் தங்கியிராமல் தனிக்கட்சியாக எதுவித தடைகளும் இன்றி நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல தனக்கு மக்கள் ஆணையைத் தரும்படி திரு. நரேந்திர மோடி தேர்தல் பிரசார காலத்தில் கேட்டிருந்தார். அதற்கிணங்க மக்களும் வாக்களித்து 543 ஆசனங்களைக் கொண்ட லோக் சபாவில் 339 ஆசனங்களை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வழங்கினர். இதன் மூலம் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவில் பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல பிராந்திய நாடுகளுக்கும் பலமாக அமைந்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி...

இந்த சந்தர்ப்பத்தில் திரு. நரேந்திர மோடி பற்றி சில விடயங்களை நாம் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். இவரது முழுப் பெயர் நரேந்திர தமோதாடஸ் மோடி என்பதாகும். இவர் ஒரு சிறந்த இந்து பக்தர். நவராத்திரி காலங்களில் ஒன்பது நாளும் விரதம் இருக்கும் பக்தர். குறிப்பாக காளியம்மனின் பக்தராக இவர் கருதப்படுகிறார் முன்னர் பாரதிய ஜனதா கட்சி காரியாலயத்தில் தேநீர் கடையில் தனது பணியை ஆரம்பித்த திரு. நரேந்திர மோடி, பின்னர் கட்சியில் இணைந்து பாரிய சேவை ஆற்றினார். தனது பதவியேற்பு நிகழ்வில் தேநீர் கடைக்காரர்களை அழைப்பதற்கும் அவர் மறக்கவில்லை. இவரின் பிறப்பு ராசி விருச்சிக ராசியாகும். நடப்பு ராசி கன்னி ராசியாகும். இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை சிறந்த காலம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்திலேயே நரேந்திர மோடிக்கு இந்தியாவின் உச்ச வரம்பு நிர்வாக பதவி கிடைத்திருக்கிறது.

1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆந் திகதி பிறந்தவர். தனது இருக்கை மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கும் பக்குவம் கொண்டவர். நரேந்திர மோடி திருமணம் முடித்தாலும் அந்த வாழ்க்கையில் கூடுதல் ஈடு பாடு காட்டாமல் நாட்டுக்கான அரசியல் வாழ்க்கையில் கூடுதல் அர்ப்பணிப்புக்களை செய்துள்ளார். எப்போதும் நாட்டுக்குப் பொருத்தமான தேசிய உடைகளையே அணிவார். தனியாக தீர்மானம் எடுக்கக் கூடிய வல்லமை படைத்தவர். அரசியல் ஞானத்தோடு பொறுமை, அன்பு, பரிவு மற்றும் புத்திசாலித்தனமும் கொண்ட ஓர் அரசியல் தலைவராவார். அத்துடன் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத் மாநிலத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தியடையச் செய்தவர்.

இந்தியாவை அபிவிருத்தி செய்ய 10 வருடங்கள் தேவை என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத் மாநில பொருளாதார வளர்ச்சி மிக சிறந்த மட்டத்தில் காணப்பட்டது. மோடியின் பொருளாதார கொள்கை குறித்து, ஏனைய மாநிலங்களும் உலக நாடுகளும் பாராட்டு தெரிவித்தன.

இலங்கையுடனான தொடர்பு

நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்றதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் திரு. நரேந்திர மோடியை தொடர்பு கொள்வதற்கு முன்னர் மோடியை விரைவாக அணுகி நட்பை வளர்த்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இது இலங்கைக்கு ஒரு அனுகூலமான விடயமாகும். இதனால் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தம்மால் ஆற்றக் கூடிய சில முக்கிய சேவைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய புதிய பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் கலந்துரையாடக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தீவிரவாத போக்குகொண்ட வைகோ, திருமளமாவளன் மற்றும் தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களை புறந்தள்ளக்கூடிய செயற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் அநாவசியமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நட்பை முதல்வர் ஜெயலலிதா இழந்து விட்டார். மேலும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றாத காரணத்தினால் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துடன் மேலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இது இலங்கையை பொறுத்த மட்டில் ஒரு சாதகமான நிலைமையாகும். திரு. நரேந்திரமோடி தமது பதவியேற்பு நிகழ்வுக்கு தமிழ் நாட்டின் சுப்பர் ஸ்டார் ராஜனிகாந்த், நடிகர் விஜய், விஜயகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சில உள்ளூர் சக்திகளின் அழுத்தம் காரணமாக இறுதி கட்டத்தில் ரஜனிகாந்த் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதிலிருந்து தவிர்த்துக் கொண்டார்.

ஏனெனில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பங்குபற்றாத நிகழ்வில் அதே மாநிலத்தை சேர்ந்த மற்றுமொரு முக்கிய பிரமுகர் பங்குபற்றினால் அது ஜெயலலிதாவுக்கு பாரிய அவமானமாகவே கருதப்படும். அப்படி செய்தால் சில தினங்களுக்கு முன்னர் வெளியான ரஜனிகாந்தின் ‘கோச்சடையான் திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ரஜனிகாந்திற்கு இருக்கிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டதனாலேயே புலி சார்பு அமைப்புக்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் மோடியை நெருங்க முடியாமல் போய் விட்டது. இது இலங்கைக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் ஆரோக்கியமான நிலைமையாகும். அத்துடன் மோடியின் பதவியேற்பு விழாவில் சார்க் பிராந்திய நாட்டுத் தலைவர்களை அழைத்த முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். இந்த அழைப்பு கிடைத்ததும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் பணிப்பின் பேரில் இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதாவது 98 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். அதே போன்று பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 131 இந்திய மீனவர்கள் அனைவரையும் பாகிஸ்தான் விடுவிக்க தீர்மானித்தது. இந்த விடயத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்க்க தரிசனத்ததுடன் செயற்பட்டார். இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கலந்து கொண்டமை வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாகும். இந்தியாவின் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் கலந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வான் பாதுகாப்பு உட்பட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்தியா சுமார் 6000 துருப்பினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. பிirst iசீprலீssion has to bலீ a bலீst iசீprலீssion, iஜீ not it will bலீ thலீ last iசீprலீssion இதன் பொருள், முதல் சந்திப்பு சிறந்ததாக இருத்தல் வேண்டும். இன்றேல் அது பொருத்தமற்ற இறுதி சந்திப்பாக மாறிவிடும். இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திய ஜனாதிபதி மஹிந்தவுக்கே அனைத்து பாராட்டுக்களும் உரித்தாக வேண்டும்.

ஜயரஞ்சன் யோகராஜ் சிரேஷ்ட ஊடகவியலாளர்