சுயமரியாதை - 39 "மடையர்கள், வஞ்சகர்கள், மடச்சாம்பிராணிகள்"

24 09 2018

சுயமரியாதை - 39 "மடையர்கள், வஞ்சகர்கள், மடச்சாம்பிராணிகள்"

1937-39இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பொதுவுடைமைக் கட்சியினர், பிரிட்டிஷ் ஆதரவு நிலை, பிரிட்டிஷ் எதிர்ப்பு நிலை என இரண்டாகப் பிரித்துப் பார்த்தனர். இந்தி எதிர்ப்பு என்பது மறைமுகமான வெள்ளையர் ஆதரவு என்று தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். 11.06.1938 இல் ஜனசக்தி வெளியிட்ட அவர்களின் கட்சி நிலைப்பாட்டைச் சற்று நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தி எதிப்பாளர்களின் உண்மையான நோக்கம் அதுவன்று எனக் கூறும் ஜனசக்தி, "இந்தச் சாக்கில் காங்கிரஸை எதிர்த்து, ஏகாதிபத்தியத்திற்கு நல்ல பிள்ளைகளாக நடப்பதுதான் அவர்களுடைய உண்மையான முயற்சி" என்கிறது. ஆதலால் அவர்களை பற்றிய கடுமையான விமர்சனம் அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிரஞ்சீவிப் பட்டம் கட்டி அதன் குடை நிழலிலேயே இந்நாட்டார் சுதந்திரத்தையும், சுபீட்சத்தையும் அள்ளி அள்ளி அனுபவிக்கலாம் என எவரேனும் நினைத்தால், ஒன்று அவர்கள் ஒன்றும் புரியாத மடக் சாம்பிராணிகளாக இருத்தல் வேண்டும் அல்லது ஏகாதிபத்தியத்திற்குக் காவடி எடுப்பதன் மூலம் விலாப் புடைக்க, வயிறு வெடிக்க கொழுக்கும் சுயநல ஓநாய்களாக இருத்தல் வேண்டும். மடையர் பேச்சையும், வஞ்சகர் வீச்சையும், நியாய புத்தியும், நல்ல எண்ணமும் படைத்த எவரும் காதறுந்த ஊசி அளவு கூடப் பொருட்படுத்த மாட்டார்கள்" என்று கடுஞ் சொற்களால் சாடியுள்ளனர்.

1937 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போர் குறித்து, ஏறத்தாழ ஓர் ஆண்டு காலம் தம் கருத்து எதனையும் பொதுவுடைமைக் கட்சி கூறவில்லை. பெரியாரின் உள்நுழைவுக்குப் பிறகு, அது மக்கள் போராட்டமாக உருப்பெற்ற நிலையில் இக்கருத்தினை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதனை அவர்களே இப்படிக்கு கூறியுள்ளனர் - "(ஹிந்தி எதிர்ப்பு) பொது ஜனங்களின் மனதில் லேசாகப் பரபரப்பை உண்டுபண்ணியிருக்கிறது. இதுவரையில் இந்த விஷயத்தில் நாம் யாதொரு அபிப்பிராயமும் தெரிவிக்கவில்லை. பொதுஜன சிந்தனை குழம்பி நிற்கும் இன்று இந்த விஷயத்தில் நமது கருத்தை அவசியம் தெரிவித்துவிட வேண்டும் என்று உணருகிறோம்" என்று தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? "தேசிய போராட்டத்திற்கு தேசிய பாஷை அவசியம் என்பது கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடி காட்டுகிற மாதிரி. பலதிறப்பட்ட பாஷைகள் பேசப்படும் நம் நாட்டில், தேசிய போராட்டத்திற்குப் பொது ஜன சக்தியை திரட்ட வேண்டுமானால், ஒரு பொது மொழி எவ்வளவு அவசியம் என்பது எடுத்துக்கூற வேண்டியதில்லை" என்பதே அவர்களின் கருத்தாகஇருந்துள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தையே முதன்மையாகக் கருதிய அவர்கள், அந்தப் பார்வையிலேயே மொழிக் கொள்கையையும் அணுகியிருப்பது தெரிய வருகின்றது.அப்படி ஒரு பொது மொழியாக எதனைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கும் ஜனசக்தி விடை கூறியுள்ளது. "தேச மக்களின் பெரும்பான்மையோரால் பேச முடிகிறதும், பேசினால் அறிய முடிகிறதுமான பாஷையே பொது பாஷையாய் இருக்க எல்லா வகையிலும் தகுதி உடையது. அப்படியானால், ஹிந்தி (ஹிந்துஸ்தானி)தான் இந்தியாவின் பொது பாஷையாக இருக்க முற்றிலும் தகுதி உடையது என்று அழுத்தம் திருத்தமாக அறைகிறோம்" என்கின்றனர்.இந்தியைப் பொது மொழியாகப் பரிந்துரைக்கும் இக்கட்டுரை, இந்தியும், இந்துஸ்தானியும் ஒன்று என்பதைப் போன்ற குழப்பத்தையும் கொண்டுள்ளது.இறுதியாக, "சமீபத்தில், இவ்விஷயமாக வெளிவந்துள்ள சர்க்காரின் அறிக்கையையும், ராஜாஜியின் விளக்கத்தையும் நன்றாகச் சிந்தித்துப் பார்த்து இந்தி எதிர்ப்பு என்னும் விஷ வலையில் சிக்கி உழலும் வாலிபர்கள் திருந்துவார்களாக!" என்ற 'அறிவுரையுடன்' கட்டுரை நிறைவடைகின்றது.

(தொடரும்) subvee blog 12 11 2016