வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல்

28 09 2018

வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல்

மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும்.எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும்.வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு நான்கு பேர்; வாரத்துக்கு ஒருவர், தமது உடலை விட்டு, வலிந்து உயிரைப் பிரித்து விடுகின்றார்.உலகில் ஆகக் கூடிய தற்கொலைகள் சம்பவிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் காணப்படுகின்றது. இலங்கையில், ஆகக் கூடிய தற்கொலை நிகழும் பிரதேசங்களாக வடக்கும் கிழக்கும் உள்ளன. அதற்குள்ளும் இனங்கள் வரிசையில், தமிழர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.

இந்த நிலைமை ஏன், இதற்கான பிரதான காரணம் என்ன, இதைத் தடுத்து நிறுத்த, குறைக்க முடியாதா, இதற்குத் தீர்வுகாண ஆட்சியாளர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன, எதிர்காலத்தில் இதன் வீச்சைக் குறைக்கலாமா, அல்லது கூடிக்கொண்டே போகின்றதா?

தமிழ் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு ஆயிரம் காரணங்களை வரிசையாக அடுக்கினாலும், போரும் போர் ஏற்படுத்திய வடுக்களும் பிரதான பங்கு வகிக்கின்றன.ஓரூர் அல்லது ஒரு சமூக மக்கள் கூட்டங்கள் யாவும், ஒரே விதமான, கொடூர சூழலுக்கும், தொடர்ந்தும் இன்னல்களை அனுபவித்தால் அல்லது உட்படுத்துவதால், சமூக மட்டத்தில் கூட்டாக உருவாக்கப்படும் நிலையே, ‘சமூக வடு’ எனப்படுகிறது.நீண்ட கொடிய போரில், உறவுகளை இழத்தல், உறவுகள் காணாமல் ஆக்கப்படல், அசையும் அசையாச் சொத்துகளை இழத்தல், கலவரங்கள், பசி​ - பட்டினி, இடப்பெயர்வுகள் என்பன சமூக வடுக்களை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.போரை ஓயச்செய்தவர்கள், போருக்கான காரணங்களையும் போர் ஏற்படுத்திய சோகங்களையும் ஓயச்செய்யாமையால், தமிழ் மக்கள், தங்கள் உயிரை வலிந்து ஓயச்செய்யும் சம்பவங்கள் எகிறுகின்றன.“வடக்கு, கிழக்கில் 88 சதவீதமான மீள்குடியேற்றம், பூர்த்தி செய்யப்பட்டுள்ளது” என்று, இலங்கைக்கு உதவும் சர்வதேச நிறுவனங்களுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபை, தமிழ் மக்களின் காணிகளை, அதிகார சபைக்கு உரியது என, அதிகாரத்தனமாக கையப்படுத்தி வருவதாகவும் அதைக் காலப்போக்கில், சிங்கள மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், பல காணிகள் அவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேசத்தில் வாழும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.சில நாள்களுக்கு முன்னர், முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்கரைவெளி என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், தமது காணிகளைத் துப்புரவு செய்த போது, மகாவலி அதிகார சபை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது.

1925ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறுதி உறுதிகளை, பலர் வைத்திருந்த நிலையில், காணி அபகரிப்பு அநியாயங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், எதை அடிப்படையாகக் கொண்டு, 88 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன என ஜனாதிபதி கூறுகின்றார். வடக்கு, கிழக்கில் முழுமையாக விடுவிக்க வேண்டிய நூறு சதவீதம் என்று அவர் குறிப்பிடும் பகுதிகள் எவை?

தமது ஆட்சிக்காலத்தில், முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் அங்கு குடியேற்றங்கள் நடைபெற்றன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.காணியையும் ஊரையும் இழந்தவனுக்கு யார் ஆட்சி என்றால் என்ன? ஆனால், அரசின் பின்புலத்துடன், சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது மட்டும் வெளிச்சம். ஜனாதிபதி கூறிய, விடுவிக்க வேண்டிய மிகுதி 12 சதவீதத்துக்குள், தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்த காணிகள் வருகின்றனவா?

ஓர் இரவுக்குள், ஊரை விட்டுத் துரத்தி, அங்கு பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றிய (1984) மணலாறு, மிகுதியாக விடுவிக்க வேண்டிய 12சதவீதத்துக்குள் வருகின்றதா? அங்கு, தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதும் மீள் குடியேற்றம் தானே?

அங்கு, அரசாங்கத்தின் சகல சலுகைகள் உட்பட, பல்வேறு வசதிகள் வாய்ப்புகளோடு குடியேறிய பெரும்பான்மையின மக்கள், இதற்கு அனுமதிப்பார்களா? உரியதை உரியவனிடம் கொடுப்பதே நியாயம் என்ற பெருந்தன்மை வருமா? தமிழர்களின் காணிகளை விட்டு விலகுமாறு, ஆட்சியாளர்கள், சிங்கள மக்களைக் கேட்பார்களா?

அப்பிரதேசங்கள், தாரை வார்க்கப்பட்டவைகள் எனத் தமிழ் மக்கள் திடமாக நம்புகின்றார்கள். நல்லாட்சியால் நல்லவை நடக்கும்; அக்காணிகள் தமக்கு மீளக் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள், தகர்ந்து விட்டன. அதற்குக் காரணம், நல்லாட்சியின் இயலாமையும் விரும்பம் கொள்ளாமையும் ஆகும்.

பாட்டன், பாட்டி என மூதாதையர் சீரும் சிறப்புமாக வாழ்ந்த, வாழவைத்த காணிகள், தமக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை என்ற வாழ்நாள் கவலையுடன், தமிழ் மக்கள் உள்ள வேளையில், எவ்வாறு அவர்களுக்கு வளமான வாழ்வுந்துதல் வரும்?

புரட்டாதி மாதம் 21ஆம் திகதி, சர்வதேச சமாதான தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. மக்கள் தங்கள் முரண்பாடுகளை, வன்முறைகள் இன்றி, ஒன்றாகக் கூடிக் கதைத்து, தமது வாழ்வாதார உயர்ச்சியை நோக்கிச் செயற்பட்டால், அதைச் சமாதானம் எனலாம்.சமாதானம் பல பண்பியல்புகளை உள்ளடக்கியுள்ளது. அதில் முக்கியமானதாக, அரசாங்கம், மக்களுக்குப் பொறுப்புக் கூறுதல் ஆகும். போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு, தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் (ஐ.நா) பொறுப்புக் கூற வேண்டிய, பொறுப்பான நிலையில் உள்ள அரசாங்கம், தனது பொறுப்புகளை, கடமைகளை ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் எப்படித் தட்டிக் கழித்தல், காலங்கடத்தல் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறது; இருந்து வந்துள்ளது.இப்படித்தான் நடைபெறுகின்றது என்பது, தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும்; தமிழ் மக்களுக்கும் தமது நடிப்புத் தெரியும் என்பதும் அரசாங்கத்துக்கும் புரியும்; ஐ.நாவுக்கும் விளங்கும்.

ஆனால், தமிழ் மக்களுடன் சேர்ந்து, கட்டிப் பிடித்து கண்ணீர் விடும் நிலையிலேயே ஐ.நா சபையும் உள்ளது. தமிழ் மக்களது கண்ணீருக்குக் காரணமான கதைகளுக்கு முடிவு கட்ட முடியாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவு கொடுக்க முடியாமல் உள்ளது.உலகின் பொது நீதிமன்றமான ஐ.நாடுகள் சபை, தமக்கு வெளிச்சத்தைத் தரும் என்ற தமிழ் மக்களது எதிர்பார்ப்பு, இன்று பெரிய வினாக்குறியுடன் தொக்(ங்)கி நிற்கின்றது. இரு தரப்பு அணிகளுக்கிடையில், போர் நிகழும் வேளை, முதலில் செத்து மடிவது ‘உண்மை’ என்பார்கள். அது போலவே, தமது பக்க உண்மை(கள்) செத்து மடிந்து விடுமோ என, தமிழ் மக்கள் நாளாந்தம் செத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆயுதப் போரால் வடக்கு, கிழக்கில் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், தங்கள் இல்லங்களை இழந்து விட்டனர். நல்லாட்சி அமைந்தவுடன் இல்லங்கள் தொடர்பான பிரச்சினை இல்லாமல் போகும் என, பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தகர வீடா, கல் வீடா, வீட்டுக்காரர் கட்டுவதா, ஒப்பந்தகாரர் கட்டுவதா, இந்தியா கட்டுவதா, சீனா கட்டுவதா? என்ற வீணான பிடுங்குப்பாடுகளுக்குத் தீர்வு காண முடியாமல், பல ஆண்டுகள் சென்று விட்டன.ஏற்கெனவே, கடந்த ஆட்சியில் ஐந்து இலட்சம் உதவு தொகையில், வீட்டைக் கட்ட ஆரம்பித்து, வீடும் கட்டிமுடிய, அனைத்து நகைகளும் கைநழுவி விட்ட நிலையில், மக்கள் உள்ளனர்.இல்லம் சரி செய்வதற்கே, உள்ளம் சரி வராத நிலையில், போர்க்குற்ற விசாரணை, அரசமைப்பு மூலமான நிரந்தரத் தீர்வு எல்லாம், வெறும் பேச்சுக்கு மட்டுமே அன்றி, செயல் உருப்பெறுவதற்கான நிகழ்தகவுகள் எத்தனை சதவீதம் உண்டு என்பது, அவரவர் உய்ந்தறியக் கூடிய விடயமாகும்.பாரிய பேரிடருக்கு, சற்றும் விருப்பின்றி வலிந்து முகம் கொடுத்த தமிழ்ச் சமூகம், தனது பண்புகளையும் பெறுமானங்களையும் தக்க வைக்க, இன்னமும் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது.

தங்களது பாதுகாப்பு, மாண்பு, உரிமைகள் என்பவற்றுக்காகக் கொடிய போரின் பிற்பாடு, கூடவே இருந்து, நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய அரசாங்கம், நெருக்கடிகளைத் தொடர்ந்தும் வழங்கி வருவதாகவே தமிழ் மக்கள் உணர்கின்றனர்.ஒவ்வொரு தனிநபர்களிலும் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒவ்வோர் இ(ம)னங்களிலும் அமைதி நிலவினால் மாத்திரமே, ஒட்டு மொத்த நாட்டிலும் சமாதானம் நிலவும். இல்லையேல், ஓரினம் வாழ்வுந்துதலுடனும் பிறிதோர் இனம் சாவுந்துதலுடனும் பயணிக்கும்.நம்பிக்கை தான் வாழ்க்கை என்று கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். சின்னச் சின்ன, பெரிய பெரிய நம்பிக்கையிலேயே ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றான். ஆனால், அந்த நம்பிக்கையை முற்றிலும் தொலைத்து விட்டே, ஈழத்தமிழர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதே முற்றிலும் உண்மை. ஏனெனில் அவர்களது பட்டறிவு, நம்பிக்கையீனங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

tamilmirror 25 09 2018