விக்னேஸ்வரனும் குழப்பங்களும்
11 10 2018
விக்னேஸ்வரனும் குழப்பங்களும் – கபில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றாக வெளிப்படுத்தியதில்லை. அச்சுறுத்தலுக்குரிய ஒரு வளர்ச்சியாகவே, கூட்டமைப்பை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்பட்டன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மிகையான, பொய்யான புரளியான செய்திகளை வெளியிடுவதும், நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக அடையாளப்படுத்துவதும், வழக்கமான போக்காகவே இருந்து வந்துள்ளது
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஊடகப் பரப்பில் மாத்திரமன்றி இப்போது சிங்கள, ஆங்கில ஊடகப் பரப்பிலும் அதிகளவில் உலாவும் ஒருவராக மாறியிருக்கிறார்.வடக்கில் இராணுவ இருப்புக்கு எதிரான அவரது நிலைப்பாடுகள், சமஷ்டி தொடர்பான அவரது கருத்துகள் என்பன முதலமைச்சர் விக்னேஸ்வரனை எதிர்மறையான கோணத்தில் காட்டுவதில் சிங்கள ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தி வந்தன.வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவுக்கு வர இன்னும் 25 நாட்கள் வரையே இருக்கின்ற நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அடுத்தகட்ட அரசியல் பயணம் பற்றிய செய்திகள், விவாதங்களுக்கு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இப்போது, அதிக முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் ஆரோக்கியமான ஒன்றாக வெளிப்படுத்தியதில்லை. அச்சுறுத்தலுக்குரிய ஒரு வளர்ச்சியாகவே, கூட்டமைப்பை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்பட்டன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிய மிகையான, பொய்யான புரளியான செய்திகளை வெளியிடுவதும், நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக அடையாளப்படுத்துவதும், வழக்கமான போக்காகவே இருந்து வந்துள்ளது.இத்தகைய பின்னணிச் சூழலில் இருந்து பார்க்கும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சிங்கள ஊடகப் பரப்பில் அதிகரித்துள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது கடினமல்ல. அதாவது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தும் வாய்ப்புள்ளவராக அவரை அடையாளம் கண்டுள்ள சிங்கள ஊடகங்கள், அதனைச் சார்ந்த செய்திகளை வெளிப்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளன போலும்.
அண்மையில் ஒரு சிங்கள இதழில் வெளியான செய்தியை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. அடுத்த மாதம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை-, கூட்டணியை அறிவிக்கப் போகிறார் என்பதே அந்தச் செய்தியின் சுருக்கம்.அவருடன், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கூட்டுச் சேரப் போவதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.இந்த இரண்டு கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கீரியும் பாம்புமாகவே இருக்கிறார்கள். இற்றை வரைக்கும் அவர்களுக்குள் இணங்கிப் போவதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லை என்பது தான் உண்மை. அதனை சிலவேளைகளில் குறித்த சிங்கள ஊடகம் அறியாமல் இருந்திருக்கலாம்.அதுபோக, இன்னொரு சிங்கள ஊடகத்துக்கு ஆனந்தசங்கரி ஒரு செவ்வியைக் கொடுத்திருந்தார். அதில் அவர், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலுக்குப் பொருத்தமானவரில்லை,அவர் தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய விரும்பினால் வேறேதாவது வழியில் முயற்சிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வந்தால், அவருக்கு தமது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியைத் தந்து விடத் தயாராக இருக்கிறேன் என்று சில காலத்துக்கு முன்னர் கூறிய ஆனந்தசங்கரி தான் இப்போது, அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று கூறியிருக்கிறார்.அவர் இப்படிக் கூறுவது புதிதான விடயமல்ல தான்.என்றாலும்,விக்னேஸ்வரனின் கூட்டணியில், ஆனந்தசங்கரியின் கட்சியும் இடம்பெறப் போகிறது என்று ஒரு சிங்கள ஊடகமும், அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று அதே ஆனந்தசங்கரி கூறியதை இன்னொரு சிங்கள ஊடகமும் சமகாலத்தில் செய்தியாக்கியிருந்தமை தான் ஆச்சரியமானது.
கிட்டத்தட்ட இதே முரண்பட்ட கருத்துச் சூழல் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், 2009இல் ஏற்றுக்கொண்ட வகிபாகம் மற்றும் அணுகுமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்று கூறியிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்தவாரம், அதே கூட்டமைப்பில் போட்டியிடத் தயார் என்றும் கூறியிருக்கிறார். (8ஆம் பக்கம் பார்க்க)
விக்கினேஸ்வரனும்…. (தொடர்ச்சி)
அதற்காக அவர் சில நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறார் என்பது வேறு விடயம்.கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டால், மீண்டும் கூட்டமைப்பில் போட்டியிடலாம் என்ற வகையில் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.கூட்டமைப்பை பதிவு செய்வதோ, கூட்டமைப்பு தலைமைத்துவத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதோ நடக்கக்கூடிய காரியமன்று. இது அவருக்குத் தெரிந்ததால் தான் அப்படிக் கூறினாரோ தெரியவில்லை.எதுஎவ்வாறாயினும், தோல்வியடைந்து விட்டதாக அவரே அறிவித்து விட்ட கூட்டமைப்பில் மீண்டும் போட்டியிட இணங்குவது என்பது அவருக்கு தலைகுனிவான விடயம் தான்.முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விரும்புகிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியாக தமிழரசுக் கட்சி அவரை நிறுத்தத் தயாராக இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
விக்னேஸ்வரன் வெளியேறுவது, கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் என்று புளொட் கருதினாலும், விக்னேஸ்வரனுக்குப் பின்னால் ரெலோவின் ஒரு குறிப்பிட்ட சிலர் சென்று விடக் கூடும் என்ற கருத்துக்கள் காணப்பட்டாலும், தமிழரசுக் கட்சிக்குள் அவருக்கு எதிரான நிலை வலுப்பெற்று விட்டது.அண்மைக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றியும், அதன் தலைமைத்துவம் பற்றியும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அவரைத் தொடர்ந்து கூட்டமைப்புக்குள் ஒட்ட வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்களையும் கூட சலிப்படைய வைத்து விட்டது.விக்னேஸ்வரன் இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழரசுக் கட்சி தயாராகி விட்டது.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையிலான ஆகப் பிந்திய விரிசல் தீவிரமடைந்த பின்னர், சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு நடக்கப் போவதாக பரவலான செய்திகள் வெளியாகின. அதுபற்றிய எதிர்பார்ப்புகளும் பலமாக காணப்பட்டன.
வேண்டா வெறுப்பாக அத்தகைய சந்திப்புக்கான வாய்ப்புகள் கோரப்பட்ட போதும், அதற்கான சூழல் உருவாகவில்லை.தமக்கும் சம்பந்தனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, கூட்டமைப்பின் தலைமை மீது முதலமைச்சர் பழியைப் போட்டுக் கொண்டிருந்தது சம்பந்தனுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.அவரும் கூட, தன்னை விக்னேஸ்வரன் சந்திக்க விரும்பினால் எப்போதும் சந்திக்கலாம் என்று கூறி விட்டு, அதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் நழுவிக் கொண்டு வருகிறார்.ஆக, இப்போதைய நிலையில், இரண்டு பேரும் சந்தித்துக் கொள்வதை விரும்பவில்லை.. அல்லது சந்திக்காமல் இருப்பதே நல்லது என்று அவர்களுக்குள் ஓர் இணக்கம் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.
வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிந்த பின்னர், தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.அவரது அடுத்தகட்ட அரசியலுக்கான தளம் அதுவே என்பதால், அதன் மீது கவனம் செலுத்துவதே அவசியமாக இருக்கும்.எனினும், முதலமைச்சர் பதவி போன பின்னர் தன் மீது வரக் கூடிய குற்றச்சாட்டுகளை சமாளிக்க இப்போதே பாதுகாப்பு வியூகங்களை அவர் வகுக்கத் தொடங்கி விட்டார்.வடக்கு மாகாண சபையின் வினைத்திறன் தொடர்பாக, தன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் வரும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இப்போதே- அதிகாரத்தில் இருக்கும் போதே- தரவுகளைத் திரட்டி ஒரு அறிக்கையைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.வடக்கு மாகாண சபை என்ன செய்தது என்ற விளக்கங்களைக் கொடுப்பதே அந்த அறிக்கை. அடுத்த கட்ட அரசியல் பயணத்துக்கான தடைகளை அகற்றுவதற்கு இந்த அறிக்கை முதலமைச்சருக்கு முக்கியமானது.ஏனென்றால், வரும் நாட்களில், கூட்டமைப்புத் தலைமை கூட, “எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தான் முதலமைச்சரிடம் கொடுத்தோம், அதனை அவர் கெடுத்து விட்டார்” என்று, தான் பிரசாரம் செய்யப் போகிறது.அதனை எதிர்கொள்வதற்குத் தான், முதலமைச்சரும் இத்தகைய அறிக்கையை வெளியிடத் தயாராகி வருகிறார். அத்துடன், வடக்கு மாகாணசபையின் தோல்விக்கும், சபையின் ஒரு பகுதி உறுப்பினர்களே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முதலமைச்சர் இப்போதே அழுத்தமாக கூற முற்பட்டிருக்கிறார்.
2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. நீதியரசர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பாரா என்ற வலுவான கேள்வி இருந்தது.முதலமைச்சர் பதவி அவரை விட்டுச் செல்லும் இந்தச் சூழலிலும் கூட இத்தகைய கேள்வி இன்னும் வலுவடைந்திருக்கிறதே தவிர குறையவில்லை.விக்னேஸ்வரன் பற்றிய அரசியல் பார்வைகள் மாற்றமடைந்திருந்தாலும், அவர் மீதான அரசியல் வசீகரத்தன்மை குறைந்து விட்டதாகத் தெரியவில்லை.அந்த வசீகரத் தன்மை எந்தளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும். ilakkiyainfo.com 30 09 2018