சுயமரியாதை - 44 பெரியார் வாழ்கிறார்!

29 10 2018

சுயமரியாதை - 44 பெரியார் வாழ்கிறார்!

சேலத்தில் 27.08.1944 அன்று நடைபெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற மாநாட்டில், தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயர் 'திராவிடர் கழகம்' என்று மாற்றப்பட்டது.இப்பெயர் மாற்றம் குறித்து இன்றும் தவறான பல தகவல்கள் உலவிக் கொண்டுள்ளன. மாநாட்டின் காலை வேளையில் தமிழர் கழகம் என்றுதான் பெயர் சூட்டப்படுவதாக இருந்தது என்றும், பிறகு தமிழரல்லாத தலைவர்கள் அப்பெயரைத் திராவிடர் மாற்றிவிட்டனர் என்றும் சற்றும் உண்மையில்லாத செய்தியைச் சிலர் பரப்பி வருகின்றனர்.

"மதிய உணவு இடைவேளையில் சத்தியமூர்த்தி ஐயர் தொலைபேசியில் சொன்ன அறிவுரைப்படிதான் திராவிடர் கழகம் என்னும் பெயர் மாற்றம் நடந்தது. பிராமணரின் பேச்சைக் கேட்டுத்தான் பெரியார் இப்படிச் செய்தார்" என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டது 'எழுகதிர்' என்னும் மாத இதழ். என்ன வேடிக்கை என்றால், சத்தியமூர்த்தி ஐயர் 1943 மார்ச் மாதமே இறந்துபோய் விட்டார். அவர் எப்படி 1944 ஆகஸ்டில் தொலைபேசுவார்? இதனைத் தோழர் விடுதலை ராஜேந்திரனும், நானும் அப்போதே சுட்டிக்காட்டி எழுதினோம். இன்றுவரை அந்த ஏடு ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. திராவிட எதிர்ப்பாளர்களின் நாணயம் இப்படித்தான் உள்ளது.1938 தொடங்கி, பல மாவட்டக் கிளைகளும் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். விடுதலை ஏட்டில் தேதி வாரியாக அந்தத் தீர்மானங்களைப் பார்க்க முடிகிறது. மாநாட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 'குடியரசு' ஏட்டின் தலையங்கத்திலேயே, "நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு" என்னும் முழக்கங்களோடு சேலம் வருக என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

தோழர்கள் அண்ணாதுரை தீர்மானம், பாண்டியன் தீர்மானம் ஆகிய இரண்டு தீர்மானங்களையும் சேலம் மாநாட்டில் நிறைவேற்றி விட வேண்டும் என்று ஆகஸ்ட் 19ஆம் தேதியே பெரியார் எழுதியுள்ளார். அண்ணாவின் தீர்மானம்தான் திராவிடர் கழகப் பெயர் மாற்றம். பாண்டியன் (சௌந்தர பாண்டியனார்) தீர்மானம் என்பது, சுயமரியாதைக் கொள்கைகள் அனைத்தும் திராவிடர் கழகச் சமுதாயக் கொள்கைகள் என்பதாகும்.எனினும் இப்பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் எதிர்த்தனர். அவர்களும் மாநாட்டுப் பந்தலில் எதிர்க்கவில்லை. தீர்மானம் ஒருமனதாகத்தான் நிறைவேறியுள்ளது. மாநாடு முடிந்தபின் அறிக்கை விட்டனர். அப்போதும் அவர்கள் தமிழர் கழகம் என்ற பெயரை எல்லாம் முன்மொழியவில்லை. தென் இந்திய நல உரிமைச் சங்கமாகவே இருக்க வேண்டும் என்றுதான் கூறினர்.

அதே பெயரில் கட்சி நீடிக்க வேண்டும் என்று கூறி, 17.09.1944 இல் சென்னையில் மாநாடு என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அதில் 20 முதல் 30 பேர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று,(கடைசித் தீர்மானம்) "ஜஸ்டிஸ் மேடைகளில் இனிமேல் கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்புப் பேச்சுகள் கூடாது" என்பதாகும். அக்கூட்டத்தின் மூன்றாவது தீர்மானத்தின்படி, பி. ராமச்சந்திர ரெட்டியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியாரால் தமிழ் அழிந்துவிட்டது, திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்கள் பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டனர் என்றெல்லாம் புலம்புகின்றவர்கள், பெரியாருக்கு எதிராகத் தொடங்கப்பட்ட கட்சியின் தலைவர் ஒரு ரெட்டியார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரிலேயே கட்சி தொடரும் என்று தீர்மானித்தனர். பெயர் தொடர்ந்தது. கட்சி தொடரவில்லை.

அதே நாளில், 20000 மக்களுக்கு முன்னால், திருச்சி மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றினார். அவர் உரையின் ஒரு பகுதி இதோ: "திராவிடர் கழகம் என்பதை எதிர்ப்பது யோக்கியமாகாது. திராவிடர் கழகம் என்ற பெயரை எதிர்க்கின்றவன் ஒருவனாவது உண்மையிலேயே யோக்கியனாக இருக்க மாட்டான். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம். எவனாவது அந்தக் காலத்தில் எதிர்த்தானா?திராவிட வாலிபர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வெளியில் வந்து மக்கட் பணி புரிய வேண்டும். மக்கட்குத் தொண்டாற்றக் கூடியவன் மான அவமானத்தைக் கவனித்தல் கூடாது. வீட்டைக் கவனிக்கக் கூடாது. என்னைப் பற்றிக் குறை கூறுவோர் பலர். அதிலும் பணம் சார்பு சம்பந்தமாகக் கட்டுப்பாடாகச் செய்யும் பிரச்சாரம், பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் விஷமப் பிரச்சாரம் ஆகியவை மலைபோல்! நான் அவைகளையெல்லாம் கவனிக்காமல் இருப்பதால்தான், என்னுடைய மானம் அப்படியே நிலைத்து நிற்கிறது. எது சொன்னாலும் ஆம் அப்படித்தான், முடிந்ததைப் பார் என்பேன். சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் எதிரி ஜெயித்து விடுவான்.நான் சமாதானம் செய்வது என் மனத்துக்குத்தான்.

வாலிபத் தோழர்களே! உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் நீங்கள் கொண்டு காரியத்தைத் துணிவுடன் நடத்துவீர்களானால், வெற்றி உங்களை வந்து பணியும்"திராவிடர் கழகம் தொடங்கிய வேளையில் பெரியார் சொன்ன அறிவுரை இதுதான். உண்மை, ஒழுக்கம், துணிவு ஆகிய மூன்றும் உடையவர்கள் இன்றும், என்றும் பெரியாரின் தொண்டர்களாய், சுயமரியாதைச் சுடரொளிகளாய், திராவிட இயக்க அடலேறுகளாய் இத்தமிழ் மண்ணில் உலா வருவார்கள்! மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள்!!

தடை பல கடந்து பெரியார் இன்றும் வாழ்கிறார், என்றும் வாழ்வார்!!

(தொடர் நிறைந்தது) நன்றி subveeblog 01 dec 2016