தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வரலாறு வழி காட்டுகிறது -

thinakkural.lk 07 06 2014

தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வரலாறு வழி காட்டுகிறது -  

வரலாறு என்றால் அது நேற்று மட்டும் அல்ல. நேற்றைய நடப்பு, இன்றைய வரலாறு. இன்றைய நடப்பு, நாளைய வரலாறு. ஆகவே வரலாறு என்பதில் நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்றும் பின்னி பிணைந்து உள்ளன. -  

இன்றைய வரலாறாகிவிட்ட நேற்றைய ஒரு நடப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு இன்னுமொரு பாடத்தை கற்று தந்துள்ளது. பாராளுமன்றத்தில் அவரை ஒரு கட்சி தலைவராக அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதான எதிர்க்கட்சி கொறடா ஜோன் அமரதுங்க, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோர் கூறிவிட்டார்கள். இதை கண்டும் காணாதது போல் அரசு தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தனவும் இருந்துவிட்டார். அதாவது ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற பேதமில்லாமல் பிரதான கட்சி அரசியல்வாதிகள் தங்கள் முகத்தை காட்டி அமைச்சர் ஹக்கீமை அவமானப்படுத்திவிட்டார்கள். 

thinakural21ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி சின்னத்தில் போட்டியிட்டு ஆளும் தரப்புக்கு மாறிய கட்சி. அந்த கோபம் ரணிலுக்கு இருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் அரசு பக்கம் போனது தவறான முடிவாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தமது நிலைபாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுக்க முழுமையான உரிமை இருக்கின்றது. இதை எவரும் மறுக்க முடியாது. பாராளுமன்றில் தனி ஒரு கட்சியாக போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதால், உங்களை தனி கட்சியாக அங்கீகரிக்க மாட்டேன் என பெரிய கட்சி முதலைகள் கூறுவது பிழை. இது கூட்டணி தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனி கட்சி என்பது நாடறிந்த அரசியல் உண்மை. இதை மறுப்பது என்பது சிறுபான்மை கட்சிகள் எப்போதும் தமக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என பெருங்கட்சிகள் விரும்புவதை காட்டுகின்றன.

 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்த தொல்லைகள் இல்லை. அது இந்த பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு துன்பமடைவதில்லை. இந்த அடிப்படையில் இ.தொ.கா. அதாவுல்லா கட்சி, ரிசாத் பதிதூனின் கட்சி போன்ற பெரும்பான்மை கட்சி சின்னங்களில் போட்டியிட்ட கட்சிகள் எல்லாம் தனி கட்சிகள் அல்ல என நாளை இவர்கள் சொல்லி விடலாம். இந்த விடயத்தை ரவுப் ஹக்கீம் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்க இருப்பதாக தெரிய வருகிறது. இந்த பிரச்சினை தம்மை பாதிக்காவிட்டாலும் கூட, பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சினை எடுக்கப்படும் போது கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இனவாதம் உச்சந்தலைக்கு ஏறி இருக்கும் இந்த வேளையில் பெரும்பான்மை கட்சிகள் இவ்விதம் நடப்பது ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல. இது தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் கூடிப்பேசி ஒன்று பட வேண்டும் என்ற அரிய பாடத்தை மீண்டும் ஒருமுறை கற்று தருகின்றது.

சமீபத்தில் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் கல்முனையில் கூடிபேசியுள்ளன. எதிர்க்கால கூட்டுச் செயல்பாடு பற்றி பேசினார்கள் என செய்திகள் சொல்லின. ஆனால், பேசி முடிந்து, அதையிட்டு தமிழ்த் முஸ்லிம் மக்கள் சந்தோசமடைந்த வேளையில், ரவுப் ஹக்கீம் எதிர்காலத்தில் எவருடனும் கூட்டு செயல்பாட்டை நாம் கவனமாகத்தான் செய்வோம் எனக்கூறியிருந்தார். அவர் கூட்டமைப்பை மனதில் நினைத்து சொன்னாரா என்பது அல்லாவுக்கு தான் தெரியும். ஆனால், அதை அவர் சொல்லி வாய் மூடமுன் பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை, தனி ஒரு கட்சி தலைவர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என பெருங்கட்சிகள் கூறிவிட்டன.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து கூட்டமைப்புடன் இணைந்து முதலைமைச்சர் பதவியையும் பெற்று ஆட்சியமைக்க இருந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைவிட்டது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஒன்று, அப்படி செய்து இருந்தால் முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதல்கள் நாட்டில் இடம் பெற்றிருக்கும் என கூறபட்டது. பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் அப்படி முடிவு எடுத்தாலும், அந்த கட்சியின் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பல உறுப்பினர்கள் கட்சி மாறி அரசுடன் இணைந்துகொண்டிருப்பார்கள் எனவும் கூறப்பட்டது. ஆகவே தான் ரவுப் ஹக்கீம் அரசுடன் இணையும் முடிவை எடுத்தார் என சால்ஜாப்பு கூறப்பட்டது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கொண்டாலும் கூட நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பயமுறுத்தல்கள் முடிவுக்கு வரவில்லை. எனவே இந்த காரணம் இன்று காணாமல் போய் விட்டது. கிழக்கு முதலமைச்சர் பதவி இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படுமென்ற உறுதிமொழியும் தொக்கி நிற்கிறது. 

thinakural22இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் வரலாறு கற்றுத் தரும் பாடங்களை இனியாவது கவனமாக பரிசீலிக்க வேண்டும். தமது உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி அரசுடன் இணைந்து கொள்வார்கள் என்று மீண்டும், மீண்டும் வெட்கமில்லாமல் கூறுவதை நிறுத்த வேண்டும். பாராளுமன்றத்திலும், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கொள்ளாவிட்டால், ஐந்து முஸ்லிம் காங்கிரஸ் எம்பீக்கள் அரசுடன் இணைவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்று அன்றும் ஒரு செய்தி கசிந்தது. இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இத்தகைய கட்சி மாறிகளின் பயமுறுத்தல்களுக்கு இடம்கொடாமல் இறுக்கமாக நடந்துகொண்டால்தான் கட்சி மாறிகள் முஸ்லிம் மக்கள் முன்னால் அம்பலப்படுவார்கள். கட்சியின் கௌரவமும் பாதுகாக்கப்படும் என்பதை இனியாவது ஸ்ரீலங்கா முஸ்லம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு, முஸ்லிம் மக்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற பாடத்தை வரலாறு நன்றே கற்று கொடுத்துள்ளது. உண்மையில் புலிகளின் அவசர முன்யோசனையற்ற சில முடிவுகள் காரணமாகவும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் காட்டிக்கொடுப்பு செயற்பாடுகள் காரணமாகவும் அன்று இந்த தமிழ்முஸ்லிம் பிளவு ஏற்பட்டது. thinakural23இன்று முஸ்லிம் மக்களை அரவணைக்க வேண்டும் என கூட்டமைப்பு விரும்புவது தெரிகிறது. ஆனால், கூட்டமைப்பு முஸ்லிம் மக்களை நேரடியாக பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. ஆகவே முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டு செயற்பாடு அத்தியாவசியம். அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுடன் சங்கமித்து இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்குள்ளே நெருக்கடிகளை சந்திக்கும் கட்சி என்றபடியால், அக்கட்சியுடன் கூட்டமைப்பின் கூட்டு நகர்வுகள் வரவேற்க கூடியன.

அதுபோல் தென்னிலங்கையில் செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் , கூட்டமைப்பு ஏற்கனவே இணைந்து செயற்படுகிறது. ஆனால், இந்த செயற்பாடு வடமாகாண, மேல்மாகாண தேர்தல் காலங்களில் மாத்திரம் நடைபெறும் கூட்டு செயற்பாடாக இருக்கக் கூடாது. இன்று தமிழ் பேசும் தளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளே இந்நாட்டின் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் கட்சிகளாக இருக்கின்றன. எனவே இன்றைய ஆணவம் பிடித்த பேரினவாத யதார்த்தம் தொடர்பில் வரலாறு கற்றுத்தரும் பாடங்களை சம்பந்தனும், ரவுப் ஹக்கீமும், மனோ கணேசனும் கற்றுத் தெளிய வேண்டும்.