கறுப்பும் காவியும் - 14 "கறுப்புக் கடவுள்"

15 03 2019

கறுப்பும் காவியும் - 14 "கறுப்புக் கடவுள்"

ஒருவன் எந்த வருணத்தில் பிறந்தவன் என்று முத்திரை குத்தப்படுகின்றானோ, அதே வருணத்திலேயே வாழ்ந்து, வளர்ந்து மடிந்து போக வேண்டும். இந்த வருணப் பாகுபாடு, தலைமுறை தலைமுறையாகத் தொடரும். இதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மை அச்சுறுத்துவதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகச் சில சமாதானங்கள் கவனமாகக் கூறப்பட்டுள்ளன. வருணம் என்பது பிறப்பினால் இல்லை, சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்களால் (sattuva,rajas, tamas Gunas) தீர்மானிக்கப்படுவதால், மேலேறவும், கீழிறங்கவும் வாய்ப்புகள் உள்ளன என்று மனு கூறுவதாக ராதாகிருஷ்ணன் சொல்கிறார் ("Manu admits the possibility of ascent and decent"). அந்த வாய்ப்புகள் கூட அவாள் மூவருக்கும்தான். நான்காவது குணம் பற்றி பேச்சே இல்லை பாருங்கள். நம் பழைய திரைப்படப் பாடல் ஒன்று கூட, "கல்வியா, செல்வமா, வீரமா?" என்று போட்டி நடத்தும். உழைப்பைப் பாட்டில் கூடச் சேர்க்கவில்லை. சரி விடுங்கள், சத்திரியராகப் பிறந்த விசுவாமித்திரர் தவம் செய்து ராஜரிஷி ஆனதும், பார்ப்பனராகப் பிறந்த பரசுராமன் ஆயுதம் ஏந்தி சத்திரியர்களைப் படுகொலை செய்ததும் அந்த அடிப்படையில்தானோ என்னவோ!

வருணம் சாதியாக உருவெடுத்தபின், இந்தப் பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எந்தக் குணத்தின் அடிப்படையிலும், எந்தத் திறமையின் அடிப்படையிலும் சாதி தீர்மானிக்கப்படுவதில்லை. பிறப்பு ஒன்றே அடிப்படை. பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஏற்றத்தாழ்வு என்பது காவியின் அடித்தளம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது கறுப்பு வரலாற்றின் முதல் குரல்!

இந்து தருமம் மாற்றவே முடியாதது என்பதில்லை என்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால் அதனை யார் மாற்ற முடியும் என்பதையும் விளக்கிச் சொல்கின்றார்.

"ஆட்சியாளர்கள் தருமத்தை நிர்வகிக்கலாமே தவிர அதனைச் செல்லாது என்று அறிவிக்கவோ, திருத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். பார்ப்பனச் சிந்தனையாளர்களே மாற்றத்தை அறிமுகப்படுத்தினர்" (The rulers are not allowed to annul or alter Dharma., but are only to administer it.The changes in the Dharma are introduced by the BRAHMIN thinkers)

ஆக்கல், காத்தல், அழித்தல் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டார்கள். ஏன் பிறருக்கு அந்த உரிமை இல்லை என்பதையும் மனு சொல்லிவிட்டாராம்.

"எண்ணற்ற முட்டாள்களின் கருத்துகளை விட, ஓர் அறிவாளியின் சிந்தனையில் உதித்த முடிவு, கூடுதல் தகுதியுடையதாகும்" (The considered conviction of one wise man is more worthy than the opinions of a myriad fools)

நம் நாட்டில், நம் உழைப்பில், நம்மோடு வாழ்ந்து கொண்டு நம்மையெல்லாம் முட்டாள்கள் என்று சொன்னவர்தான், நமக்கும் சேர்த்து, நம் நாட்டிற்கே குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். கேட்டால், அவர் சொல்லவில்லை, மனு சொல்கிறார் என்று சொல்லிவிடுவார்கள். மனு என்பவர் ஒரு தனி மனிதர் இல்லை. அது ஒரு குழுவின் பெயர் என்பார் அம்பேத்கர். அதாவது ஒரு பார்ப்பனக் குழுவினர், கி,மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில், புஷ்யமித்திரன் என்னும் பார்ப்பனர் ஆட்சியில் இயற்றிய வைதீக-வேத மதத்திற்கான சட்டமே அது. அந்தச் சட்டம் இன்னும் இந்நாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டு கொண்டிருக்கிறது.

1794 ஆம் ஆண்டு, சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கிலேய நீதிபதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு மட்டுமின்றி, அதன் அடிப்படையிலேயே, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துச் சட்டம் (The Hindu Law) என்பதையும் உருவாக்கினார். அதனால்தான், "வெள்ளைக்காரன் நமக்கெல்லாம் இந்து என்று பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோமோ....இல்லையேல் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போயிருப்போம்" என்று சங்கராச்சாரியார் தன் நூலில் (தெய்வத்தின் குரல்) ஆதங்கப்படுகிறார். மனு நீதி என்பது சாதிக்கொரு நீதி சொல்லும் நூல். பொது சிவில் சட்டம் வேண்டும் என்று இன்று ஒரு குரல் கேட்கிறது. மனு நீதியோ, குற்றவியல் சட்டத்தையே பொதுவாக வைக்கவில்லை. இந்தக் குற்றத்தை, இந்தச் சாதிக்காரன் செய்தால் இது தண்டனை, அந்தச் சாதிக்காரன் செய்தால் அதற்கு வேறு தண்டனை என்று பாகுபாடு காட்டி, அந்தப் பாகுபாட்டை நீதி என்றும் சொல்லிய நூல் உலகிலேயே மனு நீதியாகத்தான் இருக்க முடியும்.

மனு நீதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுலோகங்கள் உள்ளன. சாதி அடிப்படையிலும், பால் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பதும், அவற்றிற்கேற்பத் தண்டனைகளை வழங்குவதும் இந்நூலின் உள்ளடக்கம். தன் சமூகத்தைத் தவிரப் பிற சமூகங்களில் பெண்கள் மணம் முடிக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே (இயல் 3 - சுலோகம் 13, 14) இந்நூல் பேசுகின்றது. இதனைத்தான், தன் நூல் முழுவதும் மேற்கோளாக டாக்டர் ராதாகிருஷ்ணன் எடுத்துக் காட்டுகின்றார்.

தான்தான் இந்த உலகையே படைத்ததாகக் கிருஷ்ணர் சொல்வதை நாம் பகவத் கீதையில் பார்க்கிறோம். ஆனால் அந்தக் "கறுப்புக் கடவுளையே" ஆரியர்கள்தாம் படைத்தனர் என்கிறார் ராதாகிருஷ்ணன். அவர் வரிகளிலேயே அதனைப் படிப்போம்:-

"ஆரியர்கள், தாழ்ந்த தரமற்ற நாகரிகம் கொண்ட மக்களைச் சந்தித்தது முதல், வேறுபட்ட அப்பெரும் மக்கள் தொகையினர், சமூக, ஆன்மிகத் திசைகளில் வளர்ச்சியடையச் சில வழிமுறைகளைக் கண்டனர். ஆரியரல்லாத அந்தக் கறுப்பு மக்களிலேயே சிலரைக் கூட ஏற்றுக்கொண்டு, தந்தைமைக் குணமுடைய கடவுளின் செய்திகளைக் கூறுமாறு அவர்களை ஆரியர்கள் உருவாக்கினார்".

(From the time the Aryans met the peoples of a lower grade of civilization, they devised ways and means by which the different portions of the population could develop in social, spiritual directions. The Aryans even accepted a non-Aryan representative of the "black" peoples and made him deliver the message of the fatherhood of God)

The Aryans even accepted என்னும் தொடரைக் கவனியுங்கள். கறுப்பர்களைக் கூட (போனால் போகிறது என்று) ஆரியர்கள் கடவுளின் செய்திகளைக் கூற அனுமதித்தார்களாம். அந்தக் 'கறுப்பு மக்களுக்கான கடவுள்' யார்? அடுத்த வரியிலேயே "கிருஷ்ணா" என்று கூறிவிட்டு, அந்தக் கறுப்புக் கடவுளைப் பற்றி என்னவெல்லாம் அவர் கூறுகின்றார் என்பதைக் 'கிருஷ்ண பக்தர்கள்' கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். (தொடரும்) jul 24 2018