"இலங்கை விவகாரம் ; மன்மோகன் சிங் அரசின் கொள்கையையே பின்பற்றுகிறது மோடி அரசு'

thinakkural.lk 03 07 2014

இலங்கை விவகாரம் ; மன்மோகன் சிங் அரசின்  கொள்கையையே பின்பற்றுகிறது மோடி அரசு

இலங்கைப் பிரச்சினை , தமிழக மீனவர் விவகாரம், கச்சத்தீவுப் பிரச்சினை என்பனவற்றில் காங்கிரஸ் தலைமையிலான  அரசு பின்பற்றிய கொள்கையையே பாரதீய ஜனத அரசும் பின்பற்றுவதாக கூறியுள்ள  "தினத்தந்தி '   பத்திரிகை இலங்கையுடன் நட்புறவோடு புதிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்து தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத் தரவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளது.   இது  தொடர்பாக அப் பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர்  தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது  ;   

தமிழ் நாடு தனக்கே  சொந்தமான பல உரிமைகளை இலங்கை மீனவர்கள் பிரச்சினையிலும் , கச்சதீவு பிரச்சினையிலும் இழந்து நிற்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து  18 கிலோ மீற்றர்  தூரத்தில்  285 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு குட்டித்தீவு , கச்சதீவு, காலம் காலமாக ராமநாதபுரம் சேதுபதிக்கே சொந்தமாக இருந்த கச்சதீவு பகுதியில்  மீன்கள் நிறைய இருப்பதாலும் அங்கு தங்களுக்குகென கடற்படை பயிற்சித் தளம் அமைக்கலாம்  என்றும் இலங்கை எப்படியாவது கைப்பற்ற கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருந்தது.  இந்த நேரத்தில்  1974 ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்த நேரத்தில் ஐ.நா. அவையில் இருந்த  15 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழு இந்தியாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முனைந்தது.அப்போது அந்தக் குழுவின் தலைமை பொறுப்பில் இருந்த இலங்கையின் ஆதரவோடு இந்தியா அந்த தீர்மானத்தை முறியடித்தது. இதற்கு நன்றிக்கடனாகத் தான் இந்திராகாந்தி கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கெ õடுத்தார் என்று ஒரு கூற்று இன்னும் அரசியல் அரங்கில் உலா வருகிறது.  1974 ஆம் ஆண்டு இதற்காக இந்தியா  இலங்கை ஒப்பந்தம் போட்டப்பட்டு அதன் காரணமாகத் தான் காலம் காலமாக தமிழக மீனவர்களின் அனுபவத்தில் இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. 

தமிழினின் உரிமையே பறிபோன அந்த நேரத்தில் இதை எதிர்த்து பெரிய அளவில் போர்க் குரல் எழுப்பப்படவில்லை.  1991  ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா கோட்டையில் சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிய நேரத்தில் கச்சத்தீவை மீட்போம் , இதற்காக மத்திய அரசாங்கத்துடன் வாதாடவும்  தேவை ஏற்படின் போராடவும் இந்த அரசு தயாராகவுள்ளது. இந்திய விடுதலை நாள் விழாவில்  நாம் இழந்த இந்த மண்ணில் ஒரு பகுதியை திரும்ப மீட்கும் சூளுரையாக இதனை தெரிவிக்க விரும்புகிறேன் என்று முழங்கினார். அதற்குப் பிறகு தமிழ் நாட்டில் அனைவரும் போராடினர். நீதிமன்றத்தின் கதவுகளையும் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தட்டினர்.   அந்த நேரம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இந்தியாவிற்கு சொந்தமான எதையும் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்காததால் கச்சதீவை மீட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசாங்கம் சொல்லி வரும் கருத்தையே கூறியது. இந்தத் தீவு தொடர்பான தாவா இந்தியாவில் ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் நடுவே நடந்தது.அப்போதே இரு நாடுகளுக்கும்  இடையே ஏற்றுக் கொள்ளக் கொள்ளப்பட்ட எல்லை எதுவும் இல்லாமல் இருந்தது.  1974 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி அனைத்து சரித்திர சான்றுகளையும் சரிபார்த்த பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது என்று  கச்சதீவு இலங்கைக் கடல் எல்லையில் தான் வருகிறது என்  சொல்லாமல் சொல்லிவிட்டது. 

இப்போது மீண்டும் சென்னை மேல் நீதிமன்ற மற்றொரு வழக்கு விசாரணையில் இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கச்சதீவு பிரச்சினையில் என்ன ராகத்தை மீட்டியதோ அதே ராகத்தைøத் தான் பா.ஜ.க. அரசும் மீட்டுகிறது. பா.ஜ.க. அரசும் இரு நாடுகளுக்கும் இடையே கடல் எல்லை  1974, 1976  ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டு விட்டது. இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தப்படி மீனவர்கள்  எல்லை தாண்டி மீன்பிடிக்கப் பாரம்பரிய  உரிமை எதுவும் கிடையாது. பாரம்பரிய உரிமை என்பது இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய கப்பல்கள் செல்லும் உரிமை தான் என்று  மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.   

வெளிவிவகார கொள்கையில் இலங்கை பிரச்சினை என்றாலும் சரி மீனவர்கள் பிரச்சினை என்றாலும் சரி கச்சதீவு பிரச்சினை என்றாலும் சரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின்பற்றிய அதே கொள்கையைத் தான் பா.ஜ.க. அரசும் பின்பற்றுகின்றது. 1974 ஆம ஆண்டு ஒப்பந்தம்  1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கட்டும். பதவி ஏற்கும் போதே  அண்டை நாடுகளுடன் குறிப்பாக இலங்கை, பாகிஸ்தானுடன் நட்புறவோடு தொடங்கிய நரேந்திர மோடி இலங்கைப் பிரச்சினையிலும் இலங்கையோடு நட்புறவோடு ஒரு புதிய பேச்சு வார்த்தையைத் தொடங்கி தமிழக மீனவர்களுக்கான உரிமைகளை எல்லாம் மீட்டுத் தர வேண்டும் என்பதுதான்  தமிழக மக்களின் கோரிக்கையாகும்.