10 எம்.எல்.ஏ-க்களால் ஆட்சிக்கு சிக்கல்!'‍ - உளவுத்துறை ரிப்போர்ட்டால் `ஷாக்'கான ஈபிஎஸ்

 21 06 2019

10 எம்.எல்.ஏ-க்களால் ஆட்சிக்கு சிக்கல்!'‍ - உளவுத்துறை ரிப்போர்ட்டால் `ஷாக்'கான ஈபிஎஸ்

இரட்டைத் தலைமைகுறித்து வெளியான கருத்துகள்குறித்து கட்சியின் சீனியர்கள் ஆலோசித்துவரும் நேரத்தில், உளவுத்துறை 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குறித்து ரிப்போர்ட் அளித்துள்ளது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், எம்.எல்.ஏ-க்களிடம் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தி.மு.க 13 தொகுதிகளிலும் அ.தி.மு.க 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு ஆட்சியை நடத்துவதற்கான மெஜாரிட்டி கிடைத்துள்ளது. இந்த நிம்மதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். இந்தச் சமயத்தில்தான், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ-வும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க இரட்டைத் தலைமைகுறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். தற்போது, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். இந்த இரட்டைத் தலைமையின் கீழ் ஒன்றரைக் கோடி அ.தி.மு.க தொண்டர்கள் செயல்பட்டுவருகின்றனர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலின் முடிவு அ.தி.மு.க-வில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 தேர்தல் தோல்விக்குப் பிறகு ராஜன் செல்லப்பாவும் ராமச்சந்திரனும் எதற்காக இந்தக் கருத்தை வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்தனர் என்ற கேள்வி கட்சித் தலைமையில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசித்துவரும் நேரத்தில், இன்னொரு அதிர்ச்சித் தகவல் கட்சித் தலைமைக்கு உளவுத்துறை மூலம் கிடைத்துள்ளது. சமீபத்தில், உளவுத்துறை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள ரிப்போர்ட்டில், 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் தி.மு.க தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அந்த எம்.எல்.ஏ-க்களின் பெயர், பேசியதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அந்த ரிப்போர்ட் போடப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க தரப்பிலிருந்து யார், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுடன் பேசினார் என்ற விவரமும் ரிப்போர்ட்டில் உள்ளது.

இந்த ரிப்போர்ட்டில் இடம்பெற்ற 10 எம்.எல்.ஏ-க்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, 6 எம்.எல்.ஏ-க்கள், நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எப்போதும் நாங்கள் இந்த ஆட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஆனால், 4 எம்.எல்.ஏ-க்களின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் பேசிய தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அப்போது, முதல்வர் பழனிசாமி தரப்பிலிருந்து தி.மு.க-வுடன் கைகோத்துக்கொண்டு இந்த ஆட்சியை கவிழ்ப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது என்ற பதில் வந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர், ``இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்றதால் ஆட்சிக்குத் தேவையான மெஜாரிட்டி அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், தி.மு.க கூட்டணியின் பலம் சட்டசபையில் அதிகரித்துள்ளது. இதனால், இந்த ஆட்சியை தி.மு.க தரப்பிலிருந்தும் தினகரன் தரப்பிலிருந்தும் கவிழ்க்க முயற்சிகள் நடக்கலாம் என்ற சந்தேகம் ஆளுங்கட்சிக்கு எழுந்தது. இதனால், தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குள்ளான அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களின் நெருக்கமானவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்தோம். அப்போது, 10 எம்.எல்.ஏ-க்களின் நடவடிக்கைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு சென்ற டீம் மூலம் அ.தி.மு.க மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதை உறுதிசெய்தோம். இதையடுத்து, தி.மு.க மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து கண்காணித்தபோது, அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தெரியவந்தது. 7 சி முதல் 10 சி வரை பேரம் பேசப்பட்டதை உறுதிசெய்தோம். இதனால் அவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பேரம் பேசியதற்கான ஆதாரங்கள்குறித்து ரகசிய ரிப்போர்ட் போட்டுள்ளோம்" என்றார்.

உளவுத்துறையின் ரிப்போர்ட்டை உறுதிப்படுத்தும் வகையில் சில அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் நம்மிடம் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ``ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், எத்தனை முறை அமைச்சரவையை மாற்றியிருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். உளவுத்துறையை முழுமையாக நம்பும் ஜெயலலிதா, அமைச்சர்கள் அல்லது ஆளுங்கட்சி நிர்வாகிகள்மீது ரிப்போர்ட் வந்தாலே அவர்களை மாற்றிவிடுவார். ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியல்ல. ஜெயலலிதாவால் அமைச்சரானவர்கள் அந்தப் பதவியில் நீடித்துவருகின்றனர். அவர்கள் நடவடிக்கைகள் ஆளுங்கட்சியிலிருக்கும் எங்களால்கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கட்சித் தலைமை குறித்தும் பயம் இல்லை. கட்சியிலும் ஆட்சியிலும் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அந்தத் தரப்பினர் மட்டுமே செல்வாக்குடன் இருந்துவருகின்றனர். எங்களைப்போன்றவர்கள் கொடுக்கும் சிபாரிசுகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், கட்சியிலும் பொதுமக்களிடையிலும் எங்களுக்குள் இருந்த செல்வாக்கு குறைந்துவருகிறது. ஒரு தரப்பு மட்டும் செல்வச் செழிப்போடு இருந்துவருகின்றனர். இந்தத் தேர்தலில்கூட கிடைக்கும் வரை லாபம் என்ற ரீதியில்தான் சில பொறுப்பாளர்கள் செயல்பட்டனர். இதுதான் அ.தி.மு.க கூட்டணி தோல்விக்கு முக்கியக் காரணம். மேலும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தாலும் ஒற்றுமையாகச் செயல்படவில்லை. இதுவும் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம்

அ.தி.மு.க-வில் தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்று தெரியவில்லை. எதையும் கட்சித் தலைமை கண்டுகொள்வதில்லை. எங்களின் மனக்குமுறல்களை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க-வினரால் ஒதுக்கப்பட்ட நிர்வாகிகள் தினகரன் பக்கம் சென்றனர். அங்கேயும் முக்கியத்துவம் கிடைக்காததால் தி.மு.க-வுக்கும் மாற்றுக் கட்சிக்கும் செல்கின்றனர். இந்தச் சமயத்தில் தி.மு.க தரப்பிலிருந்து கொடுக்கப்படும் வாக்குறுதிகளைப் பரிசீலனை செய்யும் சூழலுக்கு சில எம்.எல்.ஏ-க்கள் தள்ளப்பட்டுள்ளனர். கட்சித் தலைமை இப்படியே இருந்தால் நிச்சயம் இந்த ஆட்சி நீடிக்காது. அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமைதான் எங்களுக்கு வேண்டும்'' என்றனர். தி.மு.க தரப்பிலிருந்து பேசியவர்கள்,``அ.தி.மு.க-வில் அதிருப்தியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க எதுவும் செய்ய வேண்டாம். அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசலே ஆட்சியைக் கவிழ்த்துவிடும்'' என்றனர். vikadan.com 10 06 2019