தென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா?

thinakkural.lk 07 07 2014 

தென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா?

பல்லாண்டுகால பரிதாப நிலைக்குள்ளாகியிருக்கிறது இலங்கை. பல துறைகளிலும் முன்னேறி தனது முற்போக்கு நிலையை முழு உலகுக்கும் காட்டுவதாக கூறப்படுகின்ற தேசம், தனது சொந்த மண்ணின் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் கருமித் தனத்தையும் கடும் போக்கையும் விட்டு கீழிறங்கியதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் கடுமையான பின்னடைவை இலங்கை சந்திக்க நேரிடலாம் என்ற ஆரூடம் இன்று வரையில் ஆரவாரமாகவே இருக்கிறது.

தென்னாபிரிக்காவுக்கான சமிக்ஞை

அரசியலுக்கும் அரசுக்கும் என்ன நடக்கும், எது நடக்கும் என்பதை எவராலும் எழுந்தமானத்தில் கூறமுடியவில்லையாயினும் அரசைப் பொறுத்தவரை, இலங்கையின் சார்பில் பலவாக்குறுதிகளை வெளிநாடுகளுக்கும், சர்வதேசத்தாபனங்களுக்கும் வழங்கியமை தெரியாதவிடயமல்ல. நிறைவேற்றுகின்ற விடயத்திலும், செயற்பாடுகளை முன்கொண்டு செல்கின்ற விடயத்திலும் கர்ஜித்து நிற்கவேண்டிய தேசம் கரிசனையே இன்றி, தன் இஷ்டப்படி நியாயங்களைக் கூறுவதிலும் நியாயப்படுத்துவதிலும் காலத்தைக் கடத்திவருகிறது. ஞானர்களால் தேசத்துக்கு ஏற்படுகின்ற பின்னடைவை களைந்தெறிகின்ற ஞானமும் குறைவு  தேசியப் பிரச்சினைகளை களைந்தெறிவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதும் குறைவு. பிரச்சினையைத் தீர்த்துவைக்க முற்படுவதுமில்லை அதிகாரத்தை பகிருவதுமில்லை தமிழ்க் கூட்டமைப்புடனான தனியான பேச்சுவார்த்தையுமில்லை என்ற நிகழ்ச்சி நிரலோடு பயணிக்கும் இலங்கையின் மற்றுமொரு அக்கறையற்ற நகர்வே தென்னாபிரிக்காவுக்கு காண்பித்த சாதக சமிக்ஞை எனலாம்.

அந்தவகையில் தென்னாபிரிக்காவின் ரமபோஷாவின் வருகை பற்றி எதுவும் தெரியாதது போன்று இலங்கை பேசுகிறது. சுற்றுலாவில் வருவதுபோன்று கிண்டலடிக்கப்படுகிறது. எந்தப் போஷா வந்தாலும் தமிழ்க் கூட்டமைப்புடனான தனியான பேச்சுவார்த்தை அதிகாரப்பகிர்வு கிடையாது என்ற தோரணையில் விளக்கமளிக்கப்படுகிறது. ஆக மொத்தம் நடக்கப்போவது எதுவுமில்லை என்ற கோஷமே மேலோங்கி நிற்கிறது. எது எப்படியிருந்த போதிலும், தென்னாபிரிக்காவின் ரமபோஷவை இலங்கையின் திரிபோஷவாக மாற்ற முடியாதா? என்ற கேள்வியை கேட்க முடிகிறது. கர்ப்பிணித்தாய்மாரின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்குக்காகவும் வளர்ச்சிக்காகவும் கொடுக்கப்படுவது திரிபோஷ மா என்பது தெரிந்ததே. அதேபோன்று சிறுபிள்ளையின் போஷாக்குக்காகவும் அது கொடுக்கப்படுகிறது. வயிற்றிலிருக்கும் குழந்தை போன்று அல்லது உண்ணப்பருவம் ஆரம்பிக்கும் குழந்தை போன்று இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை போன்று  இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை காணப்படுகிறது. அதிகாரப்பகிர்வு செய்து தேசியப் பிரிச்சினையைத் தீர்த்து வைக்குமளவுக்கு போஷாக்கு குறைந்து அல்லது அறவே இல்லாதது போன்று காணப்படும் இலங்கை, ஏன் தனது நாட்டுக்கு வரும் ரம்போஷவை திரிபோஷ போன்று கருதக்கூடாது?

வாக்குபலம் பாராளுமன்றப்பலம் என்ற போஷாக்குடன் இருக்கும் அரசுக்கு போஷாக்கு போதாது என்று தென்படுமிடத்து ரமபோஷவை, திரிபோஷ என்று நினைத்து களத்தில் இறங்கவேண்டியதே உசிதமானது. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த நிலையை தொடரவிடுவது? ரமபோஷவின் முயற்சியை ஒரு இறுதிச்சந்தர்ப்பமாக அக்கறையுள்ளவர்கள் கூறுகின்றனர். தென்னாபிரிக்காவின் கையில் கொடுத்தால் நாட்டைத் துண்டாடுவதற்கு நிகரான நிலைக்கு அதிகாரப்பகிர்வை கொண்டு செல்ல நேரிடலாம் என்று தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக் கொள்கின்ற, அதகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் சுட்டிக்காட்டி அபாய எச்சரிக்கை விடுக்கின்றனர். கடந்தகால இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை கையாண்ட விதம் போன்றே ரமபோஷவும் கையாளப்படுவார் போன்று தெரிகிறது. புதிய உத்வேகம், புதிய பரிமாணம், புதிய யுக்தி , புதிய வேலைத்திட்டம் கொண்டு ரமபோஷவை திரிபோஷவாக பார்ப்பதையும் விட அல்லது தமிழ் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்கள், கோஷங்கள், கோரிக்கைகள் போன்றவற்றுக்கு அர்த்த புஷ்டியுடன் செவிசாய்ப்பதையும் விட சிங்களப் பெரும்பான்மை வாக்குகளை காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்று ஜனாதிபதி நினைக்கக்கூடும்.

கண்துடைப்பு கண்கட்டு வித்தை

எது எப்படியிருந்தபோதிலும் இலங்கையும், இலங்கையின் சமகால ஆட்சியாளர்களும் நகருகின்ற விதம் தேசிய அரசியல் கட்டமைப்பில் வேறு அரசுகள் பதவியேற்றாலும் தேசியப்பிரச்சினைத் தீர்வுக்கான பாதையை நாடுவது தேசத்துரோகச் செயல் என்ற பதிவினை தோற்றுவிக்கலாம். நாட்டை பிரிவினைவாத சக்திகளிடமிருந்து கட்டிக்காத்துவந்த பிரத்தியேக நிலையை துரத்திவிட்ட சதிகாரர்களாக எதிர்காலத்தில் என்றைக்காவது ஆட்சியமைக்கக்கூடியோர் நாமஞ் சூட்டப்படுவார்கள். அதிகாரப்பகிர்வை அகராதியில் இருந்து அகற்றிவிடும் பாதையில்  நகர்ந்த வண்ணமுள்ள சமகால ஆட்சியாளர்கள் எத்தகைய அழுத்தமானதும், தர்மசங்கடமானதுமான நிலையில் தமது பாதையை மாற்றிக் கொள்வர் என்பதை ஊர்ஜீதமாகக் கூறமுடியாதுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது ஒரு கண்கட்டு வித்தை என்பதே தமிழ்க் கூட்டமைப்பின் இன்றுவரையான நிலைப்பாடாக இருந்துவருகிறது. அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஜானதிபதி வேட்பாளராக ராஜபக்ஷ 2005 இல் கவனத்தில் நின்றபோது நடைமுறையில் மெய்மைகளைப்பின்பற்றுபவர் மஹிந்த என்று சிலாகித்தவேளை சமகாலத் தமிழ் கூட்டமைப்பினர் "தம்பி, டீலிங் கவனம்' என்று மூலோபாயமாகவோ, சமயோசிதமாகவோ கருத்துக்களைக் கூறுவதற்கு சந்தர்ப்பம் இருந்திருக்குமோ தெரியவில்லை. விளக்கமளிப்பும் குற்றச்சாட்டும் இன்று திங்கட்கிழமை இலங்கையில் கால்பதிப்பதாக கூறப்படுகின்ற தென்னாபிரிக்க ஜனாதிபதியின் இலங்கை தொடர்பிலான விஷேட பிரதிநிதியும், அந்நாட்டு உப ஜனாதிபதியுமான ரமபோஷாவின் வருகை தொடர்பில் திட்டமான எத்தகைய நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று அரசின் சார்பில் குரல்தரவல்ல அதிகாரியான அமைச்சர் றம்புக்வெல்ல ஊடகவியலாளர்களுக்கு கூறினார். பரஸ்பரம் கருத்தார்ந்ததல்லத கேள்வியும் பதிலுமாயமைந்த அவரது விஜயம் தொடர்பான விடயத்தில் அவரது குழுவினரது வருகை மட்டில் அமைச்சரவை எதுவும் தெரியாதுள்ளதாகவும் வெளிநாட்டு அமைச்சுத்தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவையாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, ரமபோஷா குழுவினரின் விஜயம் தொடர்பில் பரபரப்பற்ற நிலைமை காணப்படுவதற்கான காரணம் தென்னாபிரிக்கப்பங்காற்றுகையை அரசில் அங்கம் வகிக்கின்ற கடும் போக்குவாத கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியப் பிறப்புரிமையடிப்படையில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தென்னாபிரிக்கா புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்வாறான அரசுக்குள்ளேயிருக்கின்ற தேசியவாதச் சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான தூதுக்குழுவின் வருகை ஐயத்துக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வாளர்களின் கருத்து எவ்வாறாயினும் எதிர்வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணையின் பால் தோன்றியுள்ள விறைப்பான நிலைமைகள் காரணமாக தென்னாபிரிக்கத் தூதுக்குழுவின் மீதான கவனம் திரும்பியுள்ளது. பல கோணங்களிலும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள அரசுக்கு குறித்த தூதுக்குழுவின் விஜயம் ஒரு சிறிய நிம்மதியைக் கொடுக்கலாம்.  சிறுபான்மை மனக்குறையான அரசியல் தீர்வுகாண்பதற்கான முனைப்பைக் காட்டுதல், நல்லிணக்கம் பொறுப்புக் கூறல்களை மையமாகக் கொண்ட அரசின் வேலைத்திட்டத்தை ஒருபகுதியாக காண்பிக்கலாம் என்றெல்லாம் ஊகிக்கப்படுகிறது. உண்மையில், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்டதாக சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், மனித உரிமைகள் பேரவையை இட்டுச் சென்ற விடயங்கள்,

பிரச்சினைகள் தீர்விற்கான அரசின் அர்ப்பணிப்பின்மையேயாகும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த வகையில் அரசாங்கம் சொற்களாலன்றி செயல்களால்தனது அர்ப்பணிப்பை காண்பிக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பிலான முயற்சி அடியோடில்லை என்றே சுட்டிக்காட்டப்படுகிறது. அதிகரித்துவருகின்ற சர்வதேச அழுத்தம் காரணமாக நல்லிணக்கத்துக்கான  கலந்துரையாடலுக்காக எழுந்து நிற்பது போல் தோற்றமளிக்கின்ற இலங்கை அத்தகைய நடவடிக்கைகளில் அதிகமானவை கொழும்பிலிருந்து கிளம்பும் எதிர்ப்பலையோடு எதிர்மறையான முடிவை கண்டடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தென்னாபிரிக்காவின் ஆலோசனைகள்

உண்மையில், பொது நலவாய அரச தலைவர்கள் கூட்டத்துக்கு முன்பாக உச்சக்கட்டத்தில் காணப்பட்ட சர்வதேச அழுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தென்னாபிரிக்காவின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் அழைத்துச் சென்றது. தென்னாபிரிக்காவின் மெய் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அக்கறையை வெளிப்படுத்தினார். அப்போதிலிருந்து ஒன்பது மாதங்கள் கழிந்து விட்டன. அத்தகைய  முன்னெடுப்பு தொடர்பில் எத்தகைய நகர்வையும் காணவில்லை. இலங்கை அமைச்சர்கள் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டது. உபஜனாதிபதி ரமபோஷவையும் சந்தித்தது. என்றாலும் சம்பந்தப்பட்ட விஜயம் எத்தகைய முனைப்பையும் தோற்றுவிக்கவில்லை. இதேவேளை பிரகடனமாகியுள்ள ஐ.நா. சர்வதேச விசாரணையே, தென்னாபிரிக்காவின் பங்காற்றுகையில் அரசாங்கத்தின் கரிசனையை புதுப்பித்திருக்கலாம் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இத்தகைய முடுக்கிவிட்டு முடக்கிவிடும் தந்திரங்கள் இராஜதந்திரமாக முடியாது. தனக்கந்தரமாக வரக்கூடிய அவதந்திரமாக மாறக்கூடும்.

அத்தகைய தந்திரமான நடவடிக்கைகள் சில வேளை சுயவீழ்ச்சியையும், அபாயமான நிலையையும் ஏற்படுத்தவும் கூடும். இலங்கை அரசாங்கம், தேர்தல்களுக்கு தயாராகும் தருணம் தென்னாபிரிக்காவின் மெய்மையை கண்டறிய முனைவதைவிடவும் வாக்குவங்கியின் மெய்மையை உறுதிப்படுத்திக் கொள்வதையே யோசிக்கும். இலங்கை அரசு தனது அர்ப்பணிப்பை காண்பிக்கத் தவறினால், தென்னாபிரிக்காவும் தனது ஆர்வத்தை இழந்து விடும்.

கொடூரமான இன ஒதுக்கல் கொள்கையிலிருந்து மீண்டெழுந்த வரலாற்றைக் கொண்ட நாடு. திட்டவட்டமாக இலங்கைக்கு வழங்கக்கூடிய ஆலோசனைகள் அந்த நாட்டிடம் இருக்கலாம். வித்தியாசமான அடிப்படைக் காரணங்கள் கொண்டு அமைந்ததாக இருநாடுகளினதும் பிணக்குகள் காணப்படினும், மெய் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றின் தீர்வுக் துணுக்குகள் இலங்கையின் நிலைமையில் ஏதேனும் பிரயோசனத்தைக் கொண்டிருக்கலாம். ஆகவே இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும், தாஜா பண்ணுவதற்காகவுமன்றி இலங்கையில் நிஜமான சமாதானத்தையும், மீளிணக்கத்தையும் ஆய்வு செய்யும் ஒன்றாக தென்னாபிரிக்க வகிபாகத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென புத்திஜீவிகள் கூறுகின்றனர். கட்டுரையாளர் சட்டத்தரணியும், சுயாதீன தேசிய முன்னணி (ஐ.நா) யின் தலைவரும், ஒலி, ஒளிபரப்பாளருமாவார்.