மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 2)

18 07 2019

மதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 2)

மாற்றம்

பலி கொடுத்தல் முறை - இப்போது மாறிவிட்டது. உயிர்பலி கொடுப்பதற்கு மாறாக - குங்குமம் பூசிய பூசணிக்காயையோ எலுமிச்சம் பழத்தையோ வெட்டிக் குருதி சிந்துவதுபோல் காட்டப்படுகிறது.அம்மை நோய் வந்தால் மாரியம்மன் - கோவில் பூசாரிக்கு இளநீர், பனங்கற்கண்டு, கோழி, ஆடு எனப் பூசைப் பொருட்களும் காணிக்கைகளும் முன்பு குவியும்; இன்று மறைந்துவிட்டது.தூய சைவர்கள் கூட அச்சம் காரணமாக ஆடு, கோழி பலி கொடுத்து இறைச்சியைப் பிறருக்கு வழங்கிவிடுவது அன்றைய வழக்கம்.சுடலை, மாரி, சூலக்கல் மாரி - என ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தெய்வங்கள், இன்று மக்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்டன.

அய்யப்பன், ஆதிபராசக்தி, மூகாம்பிகை முதலிய புதிய தெய்வ வழிபாடுகள் இப்போது அறிமுகமாகியுள்ளன.தாயின் வயிற்றிலிருந்து நாம் வந்ததற்கு அடையாளமே நமக்குள்ள தொப்புள். பிறப்பு இல்லாமல் தானாகவே தோன்றிய கடவுளுக்கு எப்படித் தொப்புள் வந்தது? அறிவியல் எழுப்பும் இந்த வினாவிற்கு விடை சொல்லத் தெரியாமல் விழிக்க வேண்டி உள்ளது."எல்லாம் மாறியே தீரும்" என்னும் விதிக்குக் கடவுள்களும் கூட தப்ப முடியவில்லை - என்பதையே கடந்த கால வரலாறு காட்டுகிறது.

கடவுளர் காட்டும் சமுதாய வரலாறு

   நம் முன்னோர்கள், தம் செயல் ஒவ்வொன்றிலும் ஒரு வரலாற்றை நுணுக்கமாக மறைத்துவைத்துச் சென்றுள்ளனர்.நாம் வழிபடும் கடவுள்களும் இயற்கைப் பொருட்களும் - எத்தனையோ வரலாற்று உண்மைகளைத் தமக்குள் அடக்கி வைத்துள்ளன. ஊன்றிப் பார்த்தால் தான், அந்த உண்மைகள் புலப்படும்.சிவன், திருமால், முருகன், விநாயகர் முதலிய பெருந் தெய்வங்களும் மற்ற குல தெய்வங்களும் நம் வரலாற்றை நமக்கு நினைவூட்டும் வரலாற்றுச் சான்றுங்கள்.   உண்டியல், வேண்டுதல், திருப்பணி, நன்கொடை, விழா, வேடிக்கை என்ற வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டால் - வரலாற்றை விளங்கிக் கொள்வது கடினம்.

மனித அடையாளம்

 இன்றைக்கு நாம் உள்ளது போல, நம் முன்னோர் இருந்ததில்லை. இன்றைய மனித இனம் - பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.அன்றைய மனிதர் கூட்டமாக வாழ்ந்தனர். ஓர் இடத்தில் நிலைத்து வாழாமல் உணவு கிடைக்கும் பக்கம் நகர்ந்து கொண்டிருந்தனர்; நாடோடியாக வாழ்ந்தனர்.குலக்குறி (Totem)  ஒவ்வொரு மனிதக் குழுவிற்கும் ஓர் அடையாளம் வேண்டும்! ஏதோ ஒரு விலங்கின் பெயரையே ஒவ்வொரு கூட்டமும் தொடக்கத்தில் அடையாளமாகக் கொண்டிருந்தது. பின்னாளில் மரம், செடி, கொடி முதலிய ஏதோ ஒன்றின் பெயர் குலங்களின் பெயராய் அமைந்தது.மனிதக் குழுக்களுக்கு விலங்கின் பெயர் அமைந்தது எப்படி என்று குழம்ப வேண்டியதில்லை. இன்றும் நாம் பேசுகிறோமே."அந்த நேரத்தில் ஒரு பன்றி மட்டும் குறுக்கேவராமல் போயிருந்தால் - பேருந்து வந்த வேகத்தில்நான் தப்பியிருக்க முடியாது"பேசுபவரின் குறிப்பிலிருந்து உயிரைக் காப்பாற்றிய விலங்கின் மீது அவருக்குள்ள நன்றியுணர்வை உணர்கிறோம்.

பழங்கால மனிதர் கூட்டமும் இப்படித்தான். தத்தம் சிக்கலோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடைய விலங்கை நன்றியுடன் நினைத்தன; வழிபட்டு வணங்கின. அந்த விலங்கின் பெயரையே தம் கூட்டத்திற்கு அடையாளமாக்கிக் கொண்டன.பழங்கால மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள். வேட்டையில் கிடைக்கும் உணவை நம்பியே, அவர்கள் வாழ்க்கை இருந்தது.சில சிக்கலான சூழல்களில் பங்கு பெற்ற விலங்குகளும் இயற்கை பொருட்களும் - ஒவ்வொரு குலங்களின் அடையாளம் ஆயின. அந்த அடையாளமே குலக்குறிகள் எனக் கூறப்படுகின்றன.சிறுசிறு குலங்கள் நாளடைவில் இணைந்து பெரிதாயின. இவை இனக் குழுக் கூட்டங்கள் (Tribal confederation) எனப்பட்டன. குலங்கள் கலந்ததால் - அவற்றை வழிபாட்டில் பல்வேறு குலக்குறிச் சின்னங்களும் கலந்து இணைந்தன. (5)இவ்வுண்மைகளைத் தெளிப்படுத்துவனவே இன்றைய கடவுள் உருவங்கள். முருகன், சிவன், விநாயகன் முதலிய ஒவ்வொரு கடவுளிடத்தும் - இந்த வரலாற்று உண்மைகள் பின்னிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

முருகன்

முருகனுக்குச் சேவல் மட்டுமே பழைய அடையாளம். மயில், பாம்பு, முதலியவை பிற்காலத்தில் சேர்ந்தவை. சங்க இலக்கியங்களில் வள்ளி, தெய்வானை இரு மனைவியர் செய்தி முருகனுக்குக் கூறப்படவில்லை.சேவல் ஓர் இனக் குழுவின் அடையாளம். சேவல் குழு மயில் குழுவை வென்றது. இரண்டும் சேர்ந்து பாம்புக்குழுவை வென்றன. அதன் அடையாளமே இன்றைய முருகன்.பழங்குடி நிலையிலிருந்த சிறுகுழுக்கள் நாளைடைவில் நிலைத்து நாகரிகமடைந்தன; உலோகங்களின் பயனை உணர்ந்து கொண்டன. அப்போது, குலக்குழுக்கள் இனக் குழுக்களாக விரிவடைந்த வரலாறே - இன்றைய முருக உருவமாய் அமைந்துள்ளது.மயிலின் கால்களில் பாம்பு அகப்பட்டிருப்பதையும், சுமைதாங்கும் வாகனமாய் மயில் அமைந்திருப்பதையும், சேவல் மட்டும் கொடியாக உயர்ந்திருப்பதையும் இன்றைய முருகவடிவத்தில் காணலாம்.15, 16 ஆம் நூற்றாண்டுகளில் முருக வழிபாடு தமிழ் நாட்டில் மேலோங்கியது. விசயநகர மன்னர்கள் போன்ற வேற்றவர் கைகளில் தமிழகம் ஆட்பட்ட நேரம் அது. தமிழர்களின் தனித்தன்மையை வலியுறுத்துவதாகவே - முருக வழிபாடு அப்போது முன் நிறுத்தப்பட்டது. தேவை கருதி நிகழ்ந்த செயல் இது. (6)

சிவன்

காக்கை, பாம்பு, பிறைநிலா, புலி, மான், தீ, அருகம்புல் போன்றவை இனக்குழுக்களின் இனக்குறியீடுகள் (Totemic Symbols). (7)குளங்கள் ஒன்றிணைந்த போது, குலக்குறிகளும், ஒன்றிணைந்த உண்மையை சிவன் உருவத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.வேளாண் மக்களோடு எருது (காளை) இணைந்த வரலாற்று உண்மையும் சிவன் கதைகள் தெரிவிக்கும்.

விநாயகர்

யானை என்பது ஒரு குழுவின் குலக்குறி (Totem), யானைக்குழு பல குழுக்களை வென்றது; பெரிதாய் விரிவடைந்தது; அரசாக மாறியது. இந்த வரலாற்று உண்மைகளையே விநாயகர் உருவம் வெளிப்படுத்துகிறது.எலிக்குழுவை யானைக்குழு வென்றது. யானைக்குக் கீழ்ப்பட்ட காரணத்தால், வாகனமாக்கப்பட்டது எலி.குலக்குறியான விலங்கு, குலங்கள் பெருகும் பொழுது ஓர் பெரிய இனக்குழுக் கூட்டத்தின் தெய்வமாகி விடுகிறது. விநாயகர் வழிபாடு இவ்வகையில் தோன்றியதே!இந்த வரலாற்று உண்மைகள் தெரியவராத இடைக்காலத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மூத்த மகன் விநாயகர் என்பது போன்ற புராணக்கதைகள் கிளம்பின. அவை இன்றும் பாமரன் மூளையை நிரப்பி நிற்கின்றன.

(வளரும்…)

- புலவர்செந்தலைந.கவுதமன், சூலூர் - பாவேந்தர்பேரவை, கோவை keetru.com 12 06 2019