உலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற "தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள்

thinakkural.lk 04 08 2014 

உலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற "தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள்

"தமிழ்த்தூது' தனிநாயகம் அடிகளைப் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்று பொதுவாகக் கூறலாம். எந்த வகையில் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று வினவினால் உடனே அவர்கள் கூறுவது. "உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை' ஆரம்பித்து வைத்தவர் என்றும், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விழா ஒரு தமிழ் எழுச்சி விழாவாக நடந்தது என்பதுமாகும். தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி மகாகவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்' என்றும் தன்னுடைய கற்பனை வேட்கையைக் கவியாக வடித்துவைத்தான்.

இதே பாரதிதான் "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெறுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னமே தனது தீர்க்கதரிசனமான நாட்டுப் பற்றினால் பாடிவைத்தான். பாரதிக்கு ஆங்கிலம் மற்றும்  இந்திய மொழிகள் சிலவற்றில்தான் பரிச்சயம் இருந்தது, ஆனால் யாமறிந்த மொழிகளிலே என்று அவர் கூறியது உலகநாடுகளில் உள்ள பல மொழிகளை உள்ளடக்கியோ என்று எம்மைக் கற்பனை பண்ணத் தூண்டியது. ஆனால் தனிநாயகம் அடிகளார் என்ற அவதார புருஷரது தீவிர தமிழ்ப் பற்று, பன்மொழித் திறமை, மொழி ஆய்வுத் திறமை, ஒப்பியல் ஆற்றல், பல நாடுகளுக்கு பிரயாணங்கள் செய்து தமிழையும், வேற்று மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்ததினால், பாரதியினுடைய இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்ததுபோன்ற பேராற்றலை நாம் கண்டு, கேட்டு, படித்து பெருமை கொள்கின்றோம். அந்தவகையில் அவர் தமிழுக்கு ஆற்றிய சாதனைகளை இனி வரவிருக்கும் தலைமுறையினரால் மறக்கவும் முடியாது, எட்டவும் முடியாது, போற்றுதல் செய்வதைத் தவிர.

இவ்வொப்பற்ற தலைமகனான தனிநாயகம் அடிகளார் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கரம்பொன் என்னும் ஊரில் ஸ்டனிஸ்லஸ் கணபதிப்பிள்ளை செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளை என்ற தம்பதியினருக்கு மூத்த மகனாக 02.08.1913 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் தமக்குப் பிறக்கும் முதலாவது ஆண் குழந்தையை கத்தோலிக்க சமயப்பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தபோதும், பாடசாலைக் கல்வியில் சிறந்து விளங்கிய சிறுவன், விடாப்பிடியாக அந்தப் பணியில் ஈடுபட மறுப்பைத் தெரிவித்தான். இவ்வாறு வளர்ந்துவரும் காலத்தில் பல நூல்களைப் படித்ததினால்"அரிது அரிது மானுடப்பிறவி அரிது', "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ' என்பதை உணர்ந்து, தான் இந்த உலகை விட்டு நீங்குமுன் சமுதாயத்திற்கு முடிந்தளவு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தேன்றியதும், தன் பிடிவாதத்தை விட்டு, இல்லற வாழ்வை ஒதுக்கி துறவறம் பூண்டால்தான் உலகத்திற்கு நற்பணி செய்முடியும் என்று கருதி சமயசேவையில் ஈடுபட சம்மதத்தைத் தெரிவித்தபோது, பெற்றோர் மிகுந்த மனமகிழ்வு எய்தினர்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாண சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு மாநகரில் உள்ள குருத்துவக் கல்லூரியிலும் தன் மெய்யியற் கல்வியை முடித்து, அதன் பின் திருவனந்தபுர பேராயர் அனுசரணையுடன் பிரசித்திபெற்ற உரோமாபுரி பல்கலைக்கழகத்தில் மறைக் கல்வியைக் கற்றுவந்தார். அங்கு கற்கும் காலத்தில்  இலத்தீன், இத்தாலிய மொழி, ஸ்பானிஷ், போர்த்துக்கேயம், பிரெஞ்ச், ஜேர்மன், கிரேக்கம், எபிரேயம் ஆகிய பல உலகமொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். அதே காலத்தில் தமிழ் மொழி பயில்வதற்கு ஆர்வம் கொண்டு "வீரமாமுனிவர் கழகம்' என்ற ஒரு நிறுவனத்தை இவரும், இவரது நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்தனர். அதேநேரம் வத்திக்கான் தமிழ் ஒலிபரப்பு நிலையத்தில் பணியாற்றியபோது "தேமதுரத் தமிழோசை உலகம் எல்லாம் பரவும்வகை செய்கின்றோம்' என்று மிகுந்த மகிழ்வடைந்தார். பின்னர் பல்கலைக்கழகக் கல்வியை உரோமில் முடித்துக்கொண்டு தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவராகச் சேர்ந்து அன்று  தமிழ்துறைத் தலைவராக விளங்கிய தெ.போ.மீனாட்சிசுந்தரனாருடைய சிறந்த மாணவனாகவும், நண்பனாகவும் திகழ்ந்து  கலைப் பட்டங்களையும் பெற்றார்.

1952 ஆம் ஆண்டு இலங்கை திரும்பியவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இதன்பின் 1961 ஆம் ஆண்டு மலேசியப் பல்கலைக்கழகத்தில் இணைந்து பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலே 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசியாவில் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அந்த நாட்டுப் பிரதம அமைச்சர் துங்கு அப்துல் ரகுமானினதும், அமைச்சர்களான வி.ரி.சம்பந்தன், மாணிக்கவாசகம் ஆகியோரினதும் உதவியுடன் உலகம் வியக்கும் வகையில் நடாத்தி வைத்தார். இந்த முதல் மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகளும், 40 பார்வையாளர்களும் கலந்து கொண்டது மாத்திரமல்ல, 150 ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆராயப்பட்ட, ஒரு அளப்பரிய சாதனையைப் படைத்தார். இதேபோன்று  1968 ஜனவரியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிஞர் அண்ணாத்துரை  தலைமையில் சிறந்த முறையில் இரண்டாவது மாநாட்டை நடாத்தி உலகத் தமிழரின் பேரபிமானத்தைப் பெற்றார்.

இதேபோன்று மூன்றாவது மாநாட்டை 1970 இல் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடாத்தினார். அதன்பின்னர் நாலாவதாக 1974 ஆம் ஆண்டு இலங்கையில் யாழ்ப்பாண நகரில் ஊர்திகள் ஊர்வலத்துடன் பேரெழுச்சியாக பெருவிழா அரங்கேற்றப்பட்ட காட்சியை நான் நேரில் கண்டதை என்றென்றும் மறக்கமுடியாது. அதேநேரம் இந்த மாநாடு முடிவடையும் தறுவாயில் மிக மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் சேர்த்து, மனச்சோர்வு ஏற்படும் விதத்தில் முடிவுற்றமை, தமிழ் மக்கள் நெஞ்சத்தில் ஆண்டாண்டு காலத்திற்கும் அழிக்கமுடியாத களங்கமாக நிலைத்து நிற்பது எமது துர்ப்பாக்கியமே.

இந்நிகழ்வுடன் மனம்சோர்ந்த அடிகளார், தான் தமிழுக்குச் செய்த பணிபோதும் என்ற மனநிறைவுடன் இப்பணியைத் தொடர்வதற்கு அமுதன் அடிகள் போன்ற ஈடுபாடுடைய ஒரு தலைமுறையினரை உருவாக்கிவிட்டேன் என்ற மனநிறைவுடன், இறுதிக் காலத்தை நான் பிறந்த ஊரான பண்டத்தரிப்பு என்ற கிராமத்தில் உள்ள மறைத் தியான இல்லத்தில் ஓய்வு நிலையில் இருந்து, 1980 ஆம் ஆண்டு செப்டெம்பர் 01 ஆம் திகதி இறைபதம் எய்தினார். இப்படிப்பட்ட இணையில்லாத் தமிழ்மகனை அவரது நூற்றாண்டு நினைவு கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது அயராத, இணையற்ற தமிழ்ப் பணிகளை மீட்டுப் போற்றுவதும், அவரது ஆத்மா சாந்தி அடையும் வகையில் அவர் வழியில் ஓரளவாவது நடப்பதும்தான், நாம் அவருக்கு சமர்ப்பிக்கும் சிறந்த காணிக்கையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ந.கருணைஆனந்தன் ஸ்தாபகத் தலைவர் நாவலர் நற்பணி மன்றம். -