உலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு

thinakaran.lk 26 08 2014

உலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு

vட்டயபுரத்திலே பிறந்த பாரதி தனது கவிதைத் திறத்தால் உலகையே தனதாக்கிக் கொண்டான் என்று கூறுவதைவிட உலகம் முழுவதும் பாரதியைத் தனதாக்கிக் கொண்டது என்று கூறுவது பொருத்தமானதாகும். தென்புதுவை நகரத்தின் மேற்கே ஒரு மாஞ்சோலை. வேடுவர்கள் கூடும் அளவுக்கு ஏராளமான பறவையினங்களும் பிறவும் கூடும் நல்லதொரு சோலை, இளம்பருதி வேளையிலே சோலையிலே உயர்ந்த மாங்கொம்பரிலே நீலக் குயிலியைக் காணுகிறான் புலவன். அதன் மோகனப் பாட்டினிலே பண்கடந்த இசை வெள்ளத்தைக் கேட்கிறான். அமரர் தாம் இதைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லையே என அங்கலாய்க்கிறான். ‘குக்குக் கூ....’ என்ற குயிலின் ஓசையிலே தன்னையே மறக்கிறான் பாரதி. மெய்மறந்த நிலையிலே, அவனது கற்பனை சிறகடித்துப் பறக்கின்றது. பிறப்பைப் பற்றிய வேதாந்தம் வேகமாகச் சுழலுகின்றது. மாடலன், நெட்டைக்குரங்கன், சேரமான் புதல்வன், வேடர் தலைவன், திருமகள் குயிலி இத்தரணியிலே பளிச்சிடுகிறார்கள். மாடலனை மாடாக உருவகித்தான். நெட்டைக்குரங்கன் குரங்காக மாறுகிறான். சேரமான் புதல்வன் பாரதியாக மாறுகிறான். தன்னையே நாயகனாக மாற்றுகிறான். இந்த விந்தைக் கற்பனையின் காவியந்தான் குயில் பாட்டு.

அருங்காப்பியம்

பாரதி “புத்தம் புதிய கவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை. யான் செய்துள்ளேன்” என்றதற்கொப்ப தன்னையே கதாநாயகனாக வைத்து குயில்ப் பாட்டு எனும் அருங்காப்பியம் படைத்தான். ஈற்றிலே, “மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதொரு கற்பனையின் சூழ்ச்சி எனக்கண்டு கொண்டேன். ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே ஆனாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்று இடமிருந்தால் கூaரோ? என்று தமது காப்பியத்துக்கு விளக்கமளிக்க, அடியெடுத்துக் கொடுத்து உயர்ந்ததொரு காப்பியம் படைக்கிறான்.

ஆம். பாரதியின் குயில் பாட்டிலே மனித உணர்ச்சி, காதலின் பல கோணங்கள். ஏமாற்றங்கள், குயில், மாடு. குரங்கு ஆகிய அஃறிணைப் பொருள்கள் மேலேற்றி அவற்றுக்கும் உள்ளம் இருக்கின்றது, உணர்ச்சி இருக்கின்றது என்று நம்மையெல்லாம் உணர வைக்கிறான். குயிலின் கூவல் புலவரின் காதுகளிலே பாட்டாகப் பரிணமிக்கின்றது. காதல், காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல், சாதல்! என்ற பாட்டிலே காதலின் தத்துவமெல்லாம் அடங்கியிருக்கின்றன. அன்பர்களே உலகத்துப் பெருங் காப்பியங்களிலே அக்காப்பியங்களின் அடிநாதமாய் விளங்குவது இக்காதல் உணர்ச்சியே என்பதைக் காதலின் தத்துவம் விளக்குகின்றது. பாரதியின் குயில் பாட்டு படிக்கப் படிக்க உவகை ஊட்டுவதாகும் முதலாம் நாளிலே புலவனோடு கொஞ்சு மொழி பேசி, விஞ்சு காதல் விளக்க மளித்து, “அன்போடு நீர் இங்கு அடுத்த நாலாம் நாளில் வந்தருள வேண்டும். மறவாதீர் மேற்குலத்தீர் சிந்தை பறிகொண்டு செல்கின்aர். வாரீரேல் ஆவிதரியேன்” என்று தனது தீராக் காதலை எடுத்து விளக்கி மறைந்து விடுகின்றது.

மோகனப் பாட்டு

புலவன் காதலினால் கலங்குகிறான். பார்த்த விடமெல்லாம் கோலைக் குயிலின் உருவமன்றி வேறொன்றும் அறியான். புத்திமனம் தடுமாறுகின்றான், ஒரு விதமாக விடிந்து விடுகின்றது. காலிரண்டும் சோலைக்கு இழுக்க சோலையிலே குயிலைக் காணுகிறான். ஆனால், அங்கே அவன் கண்ட காட்சி. குயில் புலவனை வஞ்சித்துவிட்டு அங்கே குரங்கோடு நேசம் பயில்கின்றது. இந்த இடத்தில் புலவன் பெண்மையின் இரகசியங்களையெல்லாம் வார்த்தை ஜாலங்களினால் கொட்டி விடுகிறான். உலகிற்கே உபதேசம் செய்கிறான். உலக இலக்கியம் படைத்து விடுகிறான். கேளுங்கள் பாரதியின் வார்த்தைகளை “மற்றை நாட் கண்ட மரத்தே குயிலில்லை, சற்று முற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே, வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே - கண்ணாலே நான் கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! பெண்ணாலே அறிவிழக்கும் பித்தரெல்லாங் கேண்மினோ! காதலினைப் போற்றும் கவிஞரெல்லாங் கேண்மினோ மாதரெலாங் கேண்மினோ! வல் விதியே கேளாய் நீ!

இவ்வாறு கூறிய பாரதி குயிலின் மோகனப் பாட்டிலே தன் மனதைப் பறிகொடுத்த குரங்கின் காதல் உணர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றான். கண்னைச் சிமிட்டிக் கொண்டே காலாலும் கையாலும். மண்ணைப் பிராண்டி எங்கும் வாரி இறைக்கின்றது. இவ்வாறு நடக்கின்றது குரங்கின் காதல் பிரதிபலிப்புக்கள். குயிலினைக் கொன்றுவிட எண்ணுகிறான் புலவன். ஆனால் குயில் மறைந்து விடுகிறது. மூன்றாவது நாள் தன்னை மறந்து மீண்டும் சோலைக்குச் செல்கிறான் ஆசைக் குயிலியைக் காண்பதற்கு. அங்கு குயில் மாட்டோடு மருகிக் கனிவாய் மொழிந்து காதல் பயில்கின்றது. “நந்தியே பெண்டிர் மனதைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சி தரும் மூர்த்தியே! உன்மேல் காதல் கொண்டேன். தையல் எனைக் காத்தருள்வீர்”, இவை குயிலின் காதல் மொழிகள்.

குயிலியின் அழகு

நான்காம் நாள் பொய்மைக் குயில் வந்திடக் கூறிய நாள். பொய்மையும். மாயமும் நிறைந்த குயிலின் காதல் லீலைகளைக் கண்ணாரக் கண்டிருந்தும் அதன் இனிய பாடலின் வாய்ப்பட்டு. புத்தி தடுமாறிப் போகிறான் பாரதி சோலைக்கு. மற்றை நாட்கண்ட இடத்திலே குயிலைக் காணுகிறான். நீசக் குயிலே! உன் நிலை அறிந்தேன். பொய்மையே ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதியையும் எண்ணி நீ பாடும் புலைப்பாட்டினையும் மீண்டும் நான் கேட்கவோ என்னை அழைத்தனை? என்று கோபம் வெறியாகக் கேட்கிறான். அடுத்து என்ன நடக்குமோ என்ற துப்பறியும் நாவலில் நாம் காணும் ‘சஸ்பென்ஸ்” (மறைக்கவர்ச்சி) இங்கும் வருகின்றது. எல்லாப் பெண்களையும் போலக் குயிலியும் சமாளித்து விடுகின்றாள். அழகான கதை கூறுகிறாள். முனிவர் மூலம் தான் அறிந்த தனது பூர்வ ஜென்மக் கதையைக் கூறுகின்றாள். ஏற்கனவே கூறிய மாடலனும் முற்காலத்திலே வேடர் குலத் தலைவனின் மகன், குயிலின் மாமன் மகள் மாடலன் கண்ணெதிரே வருகின்றான். மாடலன் குயிலியின் அழகிலே மையல் கொள்கிறாள். இது ஒருதலைக் காமம். குயிலி, மாடலனின் அன்பிற்காக அவன் மேல் பரிதாபப்படுகிறாள். மற்றோர், வேடகுலத் தலைவன் மகன் நெட்டைக் குரங்கனுக்கும் குயிலியை மணம் பேசுகின்றார்கள்.

குயிலின் மனம் அவன் மீதும் செல்லவில்லை. மாறாக வேட்டைக்கு வந்த சேரமான் மகன் இளவரசன் மேல் மையல் கொள்கிறாள். இந்த இடத்திலே புலவன் பெண்மையின் இரகசியத்தை நமக்கு எடுத்து உணர்த்தி உலக காவியம் படைக்கின்றான். விருப்பமாக இருந்தும் விருப்பம் இல்லாதது போன்று நடிக்கின்றாள் குயிலி. மீண்டும் ஒரு “சஸ்பென்ஸ்” சேர இளவரசன் குயிலியை அணைத்தான். அதனை மாடலனும் குரங்கனும் கண்டு விட்டனர். பதைத்தனர். வாளுருவி வந்தனர். என்ன நடக்குமோ என்று ஏங்குகின்றோம். வீரமிக்க இளவரசன் வீழ்வதற்கு முன்னர் அவ்விருவரையுமே வெட்டி வீழ்த்துகின்றான். ஆனால் இளவரசனோ குயிலியின் கண்களில் நீர் கொட்ட அவள் மடியிலே மடிகிறான். இக்கதையைக் கூறிய முனிவர் மீண்டும் தொண்டை நாட்டிலே பிறந்திருக்கும் இளவரசனை எதிர்கொள்வாய் என்கிறார்.

கவிதைக் காதலி

குயில் கதையைக் கூறிப் புலவனின் கரத்திலே வந்து வீழ்ந்து, “பெரியோனே, எனது பேச்சை நம்பாது விடில் கொன்றுவிடு” என்று குமைகின்றது. “அன்புடனே யானும் அக்குயிலைக் கொண்டு முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. பெண்ணொருத்தி அங்கிருந்தாள். அவன் மேனிநலத்தினையும் வெட்டினையும் கட்டினையும், மற்றவர் திருடிச் செல்ல வசமாமோ?” யார் அந்தப் பெண்? முற்பிறவியிலே மகாகவி பாரதி காதலித்த அப்பெண்மணி யார்? குயிலா? அல்லது குயிலின் ‘குக்குக் கூ...’ என்ற ஒலியா? பாரதியே கூறட்டும். மகாகவி பாரதியின் முற்பிறப்புக் காதலி கவிதைப் பெண் அவனது கவிதைக் காதலி தென்புதுவை மாஞ்சோலையிலே குயிலாக உருவெடுத்தாள். ‘குக்குக் கூ...’ என்ற குயிலின் கூவல். பாரதியின் குயில் பாட்டிலே பெண்மையின் தன்மையைக் காணுகிறோம்.

மனிதனின் பொறாமையைக் காண்கின்றோம். அந்தப் பொறாமையை ஆசை வெற்றிகொள்வதையும் காணுகின் றோம். சோதிமிக்க நவ கவிதையைக் காணுகின்றோம். சேர இளவரசனின் வீரத்தைப் பார்க்கின்றோம். வேதாந்தக் கதைகளைக் காணுகின்றோம். அங்கே வேதப் பொருளையும் காணுகின்றோம். பாரதியின் குயில் பாட்டுத் தரும் காதல் ஓவியம் கம்பனின் கவியின்பத்தை ஒத்திருக்கின்றது. “இராமன் சீதையை நோக்கினான்.” இந்த இடத்திலே கம்பன் கையாண்ட சொற்களையே பாரதியும் கையாளு கின்றான். “நின்னையவள் நோக்கினாள், நீ அவனை நோக்கி நின்றாய் அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்து விட்டீர்” என்ற பொருளில் “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” என்ற கம்பனின் அடியை நினைவுபடுத்துகின்றது. எனவே பாரதியின் குயில் பாட்டும் ஒரு உலக இலக்கியமாக போற்றப்பட வேண்டியதாகும்.

அருட்திரு கலாநிதி எஸ். ஏ. ஐ. மத்தியூ, கல்முனை.