ஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்! Featured

01 11 2019

ஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்!

பேராசிரியர் பி.இரத்தினசபாபதி

திராவிடர் கழகத்தினர் மட்டுமல்லாது, சமுதாய அமைப்பால் பார்ப்பனியம் புகுத்திய ஜாதிகள் பலவாய்ச் சிதறுண்டு கிடக்கும் அனைத்து மக்களாலும் ஒரு சேர எதிர்க்கப்படுவது வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 (பா.ஜ.க.யின் அடிவருடிகள், ஆர்.எஸ்.எஸ். சதிகாரர்கள் தவிர).தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு?. வரைவு தேசியக் கல்விக் கொள்கையை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளலாம் எனச் சில மாநிலங்களும் சிறிது மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தலாம் எனச் சில மாநிலங்களும் கூறும்போது தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பானேன்? எதிர்க் குரல் எழுப்புவதே தமிழ்நாட்டின் போக்கா? இவற்றிற்கெல்லாம் ஒரே பதில் - இது தந்தை பெரியார் பிறந்த மண் என்பதுதான்!

தந்தை பெரியாரின் வகுப்புரிமைப் போராட்டங்கள்

தந்தை பெரியார்தம் அரிய சிந்தனையாலும் வலுவான போராட்டத்தாலும் வென்றெடுத்தது சமூக நீதியாகும். தமிழகத்தைப் பொருத்தவரை சமூக நீதியாகக் கருதப்படும் இடஒதுக்கீட்டின் வரலாறு நெடியது. தந்தை பெரியார் பேராயக் கட்சியில் (காங்கிரஸ் கட்சியில்) முனைப்போடு செயல்பட்ட காலத்திலேயே வலியுறுத்திய கொள்கை வகுப்புரிமை எனப்பட்ட இடஒதுக்கீடு. நூற்றுக்கு மூவராய் இருக்கும் பார்ப்பனர்கள் அனைத்து நிலையிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த நிலையைத் தடுத்தாக வேண்டும் எனக் கருதிய தந்தை பெரியார், பேராயக் கட்சியின் மாநில மாநாடுகள் அனைத்திலும் வகுப்புரிமைத் தீர்மானத்தை வலியுறுத்தினார். 1919இல் திருச்சி, 1920 இல் நெல்லை, 1921 இல் தஞ்சை, 1922இல் திருப்பூர், 1923இல் மதுரை, 1924இல் திருவண்ணாமலை என அவர் பேராயக் கட்சியில் இணைந்த காலம் தொடங்கி வெளியேறிய காலம் வரை வகுப்புரிமைக்காக மாநாடுகளில் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். ஒவ்வொரு மாநாட்டிலும் ஏதோ ஒரு சாக்குப்போக்குச் சொல்லித் தீர்மானம் தவிர்க்கப்பட்டது. இறுதியாக 22.11.1925 அன்று காஞ்சிபுரம் மாநாட்டில் அது மறுக்கப்பட்ட போது தம்மைப் பேராயக் கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார் தந்தை பெரியார். அவர் வலியுறுத்திய வகுப்புரிமைக் கொள்கையை நீதிக்கட்சி ஏற்றதால்தான் அக்கட்சியில் செயலூக்கம் உடைய தலைவரானார்.

இவ்வாறாக தந்தை பெரியாராலும், அவர் இணைந்திருந்த நீதிக் கட்சியாலும் வலுயுறுத்தப் பட்ட வகுப்புரிமை நீதிக் கட்சி ஆட்சியில் அரும்பியது. அன்றைய சென்னை மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு இந்தியத் துணைக்கண்ட விடுதலைக்குப் பின் இத்துணைக்கண்டம் எங்கும் செயலாக்கம் பெற இந்திய அரசமைப்புச் சட்டம் வழிவகுத்தது. எனினும்,அரசால் பேணப்படுகின்ற அல்லது அரசு நிதியங்களிலிருந்து உதவித்தொகை பெறுகின்ற கல்வி நிறுவனம் எதிலும் , குடிமகன் எவரையும் சேர்ப்பதற்குச் சமயம், இனம், குலம், மொழி மட்டுமோ அவற்றில் எதனை மட்டுமோ காரணங்களாகக் கொண்டு மறுத்தல் ஆகாது. [இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 29(2)] என்பதைக் காட்டி மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத இரு பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டு முறையினை எதிர்த்து வழக்காடி வெற்றியும் பெற்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்

தொடர்ந்து, வலுவான போராட்டத்தால் பெற்ற வகுப்புரிமை பறிக்கப்பட்டதை அறிந்த தந்தை பெரியார் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பால் மிகப் பெரிய சமூகநீதி மறுக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். வெகுண் டெழுந்து பொதுமக்கள் போராட்டமாக ஆக்கினார். மறுக்கப்பட்ட வகுப்புரிமை - அரசமைப்புச் சட்டம் 15ஆம் பிரிவில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக மீண்டும் கிடைத்தது. அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் அதுவே. அத்திருத்தம்,

விதி 15(4) - குடிமக்களுக்குச் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய எந்த வகுப்பினருக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அவர்களின் முன்னேற்றம் கருதி அரசு எந்தத் தனி ஏற்பாட்டினைச் செய்வதையும் இந்த விதியின் ஒரு பிரிவு அல்லது 29இன் 2ஆவது உட்பிரிவு தடைசெய்யாது என்பதாகும். இத்திருத்தம் தந்தை பெரியாரின் வலிமையான எதிர்ப்பால் ஏற்பட்டது. கல்விக்காக மக்களின் எழுச்சியால் ஏற்பட்டது.இவ்வாறான கடும் போராட்டத்தின் விளைவாகப் பெற்றதே வகுப்பு உரிமையாகும்.

வகுப்புரிமைக்கு எதிரான கல்விக் கொள்கை

வகுப்புரிமைக்கு எதிரானது பாரதிய ஜனதா அரசு. அவ்வெதிர்ப்பினைக் கடந்த 2019 சனவரி 13இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. உயர் ஜாதியினராகக் கருதப்படுவோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு ஒதுக்கீடு தரப்பட்டு, அரசமைப்புச் சட்ட 15(4)அய் நீர்த்துப் போகச் செய்துள்ளது; சமூக நீதியைப் புறக்கணித்துள்ளது. இத்தகைய புறக்கணிப்பு வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் உட்பொதிவாகக் காணப் படுகிறது. இந்திய அரசமைப்பு குறிப்பிடும் S.C./S.T. பிரிவினர் சமுதாய நிலையில் மிகவும் பின்தங்கியவராவர். இப்பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் மத்தியில் 22.5% ஒதுக்கீடு உண்டு. வரைவு புதிய கல்விக்கொள்கை 2019இல் இந்த ஒதுக்கீடு பற்றி பேசவே இல்லை. இதுவரை ஒதுக்கீட்டில் இடம்பெறாத உயர் வகுப்பினரை disadvantaged section எனக் கொண்டு அவர்களுக்கு உரிய சலுகைகள் பற்றியே வரைவுக் கொள்கை கருதுவதாகக் காணப்படுகிறது. 484 பக்கங்களைக் கொண்ட வரைவுக் கொள்கை disadvantaged section என்பதை 52 இடங்களில் குறிப்பிட்டு அதற்குச் சலுகைகள் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறது; ஆனால், Scheduled Caste, Scheduled Tribes என்னும் தொடர்கள் 4 இடங்களில்தான் பெயரளவில் குறிக்கப் படுகின்றன. போராடிப் பெற்ற வகுப்புரிமை புதைக்கப்படுகிறது. எனவே, வகுப்புரிமைப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் கொள்கையினை ஏந்தி நின்ற தமிழ்நாட்டு மக்கள் இந்தக் கல்விக் கொள்கையினை எந்நிலையிலும் ஏற்கமாட்டார்கள்.

மொழிப்போர்

பெரியார் பிறந்த மண் தமிழகம் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருப்பது அது கடந்த அய்ம்பது ஆண்டுகளாக கடைப்பிடித்துவரும் இருமொழிக் கொள்கையாகும். தமிழின் தனிப் பெருமையினைக் காக்கத்தான் எத்தனை போராட்டங்கள்! பார்ப்பனியம் நுழைந்த நாள் முதல் தமிழகம் பார்ப்பனியத்தின் அடையாளமான சமஸ்கிருதத்தினை எதிர்த்து வந்துள்ளது. இந்தியின் வாயிலாகச் சமஸ்கிருதத்தை இந்நாட்டில் புகுத்தியே தீருவோம் என வல்லுறுதி கொண்டிருக்கும் கூட்டத்தை எதிர்க்கும் போர், துணைக்கண்ட விடுதலைக்கு முன்பே 1938இல் தந்தை பெரியாரால் தொடங்கிவைக்கப்பட்டது. அவ்வாண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் கல்விக் கூடங்களில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று இராசகோபாலாச்சாரியார் அரசு, ஆணை பிறப்பித்தது. பெரியாரின் விரலசைவிற்கு வில்லம்பெனப் பாயும் தமிழ்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்தனர். தந்தை பெரியார் அவர்கள் விடுதலை ஏட்டில் தீட்டிய கட்டுரைகள் அனைத்தும் கோழைகளையும் வீரர்களாக்கியது; நாடி, நரம்புகளையெல்லாம் முறுக்கேற வைத்தது; போர் முழக்கம் செய்ய வைத்தது. பெரியாரின் ஒவ்வோர் எழுத்தும் வெடிகுண்டுகளாக மாறி எதிரிகளை நடுங்கவைத்தது (பி.எஸ்.இளங்கோ (1975), சர்.தியாகராயர் முதல் டாக்டர் கலைஞர் வரை, பக். 158-59). 1938 ஜூன் திங்கள் தமிழகத்தின் தலைநகரம் சென்னை மாநகரத்தில் மொழிப்போர் தொடங்கியது. ஆடவர்களும் அன்னையர்களும் ஈடுபட்ட அவ்வெதிர்ப்பினைத் தமிழர் தொடுத்த முதற்போர் எனக் குறிப்பிடுகிறார் பி.எஸ்.இளங்கோ.

பெரியாரின் படை வென்றது

அப்போரில் இராசகோபாலாச்சாரி அரசால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலரும் பிணைக்கப்பட்டனர். தொண்டர்கள் பலர் சிறை புகுந்தனர். தாலமுத்து, நடராசன் என இரு தொண்டர்கள் சிறையிலேயே உயிர் நீத்தனர். தமிழகம் என்றுமே கண்டிராத இனயிழிவு எதிர்ப்புப் போராகவும் மாறியது அம் மொழிப்போர். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மொழிப்போரின் தந்தை, பெரியாரின் படை வென்றது. கட்டாய இந்தி ஒழிந்தது. அம் மொழிப் போரின் தாக்கம், இந்தி மொழி கல்வியில் புகும்போதெல்லாம் தமிழகத்தில் காணப்பட்டுத் தமிழின் தனித்தன்மையும் உயர்வும் பேணப்பட்டுவருகிறது. இந்தித் திணிப்பிற்கு முடிவுகட்டுமாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால், தந்தை பெரியாரால் கருத்தூட்டம் பெற்ற அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில், 1967ஆம் ஆண்டு முதல் இரு மொழிக்கொள்கை சட்டமாகியது.

இரு மொழிக்கொள்கை

இருமொழிக் கொள்கை இனிதே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்விக்கொள்கை என்னும் பெயரில் இந்தி மொழியும் சமஸ்கிருதமும் கல்வியில் நுழையப் பார்க்கிறது. இந்தி எதிர்ப்பு தொடர்பாகத் தந்தை பெரியார் ஏற்றிய போராட்டக் கனல் அணைந்துவிடவில்லை. ஆகவேதான் இக்கல்விக் கொள்கை எதிர்க்கப்படுகிறது; எதிர்க்கப்படும். கல்வியில் வலிந்து கவர்ந்திருந்த பார்ப்பனர்களின் போக்கையும், இந்திமொழித் திணிப்பையும் தமிழ்மக்கள் உணருமாறு அருந்தொண்டாற்றியவர் தந்தை பெரியார். இவ்வரலாற்றுத் தடம் என்றும் அழியாது.

தகுதி, தரம்

தகுதி, தரம் என்னும் போர்வையில் உயர் பதவிகளைப் பறிக்க நினைத்த உயர் ஜாதியினரின் சூழ்ச்சியை முறியடிக்க பணிமூப்பு அடிப்படையில் பணி உயர்வுகள் வழங்கவேண்டுமென வலியுறுத்தி எல்லாத் துறைகளிலும் ஊழலைத் தவிர்க்க முனைந்தவர் தந்தை பெரியார். தகுதி தரம் என்பனவெல்லாம் உயர் ஜாதியினர் தங்கள் மேன்மைக்காக வகுத்துக் கொண்ட சூழ்ச்சி வலை. இதற்குள் சிக்காமலிருக்க தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் பணிமூப்பு அடிப்படையில் பணி உயர்வுகள் தரப்படுகின்றன. சிறந்ததோர் இம்முறையினை சிதைப்பதாக வார்க்கப்பட்டுள்ளது - வரைவு தேசியக் கல்விக் கொள்கை. இன்று வரை இடரின்றி இயக்கிவரும் பணிமூப்பு முறையினைத் தவிர்த்துத் தங்களுக்குரிய வாய்ப்புகளை வரவழைக்க முனையும் பா.ஜ.க. அரசின் கேடயமாகக் காணப்படுவது தேசியக் கல்விக்கொள்கை. இதனைத் தமிழ்நாடு எப்போதும் ஏற்காது.

பன்முகத்தன்மை

இந்தியா ஒரு நாடன்று; பல்வேறு வேற்றுமைகளைத் தன்னகத்தே கொண்ட துணைக்கண்டம். பன்முகத் தன்மையுடைய இப்பெருநாட்டில் மாநிலங்களுக்குத் தனித்தியங்கும் உரிமை வேண்டும். பொதுக்கல்வி மாநிலப் பட்டியலில் ((State List) ) இருந்த நிலை மாறி, இந்திய அரசமைப்பு, 42ஆவது சட்டத் திருத்தத்தின் வாயிலாக இசைவுப் பட்டியலுக்கு (Concurent List) மாற்றப்பட்டது. அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அப்போதைய நிலையில் மாநிலக் கட்சிகளால் எதிர்க்க இயலவில்லை. ஆறிய கஞ்சி பழங் கஞ்சி ஆயிற்று. இந்தச் சூழலில் வரைவு தேசியக் கல்விக் கொள்கை மாநில கல்வித் துறைகளை முடமாக்குகிறது. மாநிலங்களின் தன்னாட்சி தடுக்கப்பட்டு கல்வியின் எல்லாப் பிரிவுகளிலுமே நடுவண் அரசின் செயலாண்மையே தென்படுகிறது. இக்கொள்கை நடைமுறைக்கு வருமெனில், மாநில அரசுகளுக்கு இடைத் தரகர்களின் பணிதான்.

சிந்தித்துச் செயல்படுக!

எந்தத் தமிழரும் வரைவு தேசிய கல்விக் கொள்கையில் சிதறலாக ஊன்றப்பட்டிருக்கும் பார்ப்பனிய நச்சு விதைகளை நோக்கத் தவறார். பெரியாரின் கருத்துக் கண்ணாடியை அணிந்து நோக்கும் தமிழகம் அவற்றைத் தெளிவாகவே அடையாளம் காண்பதற்குரிய திறன் கொண்டது. நச்சு விதைகள் பொதிந்துள்ள அவ் வரைவு தேசியக் கல்விக் கொள்கையினை ஏற்காது; எதிர்க்கும். எவர் தடுப்பினும் நில்லாது. ஏனெனில், இது பெரியார் பிறந்த மண்! unmaionline.com 1-15 sep 2019