திருக்குறள் கூறும் பகலவன் Featured

04 11 2019

திருக்குறள் கூறும் பகலவன்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதற்குப் பொருள்: எப்படி எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் அகரம் முதன்மையாக உள்ளதோ, அதுபோல இந்த உலகத்திற்குக் கடவுள் முதன்மையாக உள்ளது என்று உரைகாரர்கள் கற்பித்து உள்ளார்கள். விஞ்ஞானப்படிப் பார்த்தால் உலக உற்பத்திக்குக் கடவுள் ஒன்று அவசியம் இல்லை. அது இயற்கையாகவே நிகழக்கூடியது என்கின்றார்கள். மற்றும் இந்த உலகமானது சூரியனில் இருந்து சிதறி விழுந்த ஒரு தீப்பிழம்பானது குளிர்ச்சியடைந்து பூமியாயிற்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். ஆகவே சூரியனே இந்தப் பூமி உண்டாவதற்கு ஆதாரமானவன்; ஆதிகாலந்தொட்டு இருந்து வருபவன் என்பதோடல்லாமல், மேல் நாட்டினரும் முன் காலத்தில் சூரியனைத் தான் வணங்கி வந்திருக்கிறார்கள்; ஆதலால் பகவன் என்பது சூரியனைத்தான் குறிக்கும். 'விடுதலை' 22.3.60

தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் பார்ப்பனர். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச் சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும் உலகத்துக்குங்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடைய முடியும். 'விடுதலை' 22.3.60

ஆனாலும், எதற்கெடுத்தாலும் குறள், குறள் என்று சொன்னால் நாம் எப்படி முன்னேறுவது? திருவள்ளுவர் 2000 வருடத்துக்கு முன்னாலே தோன்றிய ஒரு சிறந்த அறிவாளி. அப்போது அவர் கருத்துக்குப் பட்டதை எடுத்துச் சொன்னார். அவர் சொன்னவை முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னது இனி வரப்போகும் உலகத்துக்கு ஒத்ததாக இருக்குமா? எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என்பது எவ்வாறு பகுத்தறிவுக்கு ஒத்ததாகும். 'விடுதலை' 2.2.59

- பெரியார்

தேசிய வியாபாரம்!

சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநல சேவை என்பதில் ஈடுபடுகின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் கவலைக்கும் உள்ளாகி, அனேகவித தொல்லைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலோ சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், கவலையும் இல்லாமல் நேருக்கு நேராகவே, உடனுக்குடனே பதவி, உத்தியோகம், பணம், கீர்த்தி, அதிகாரம் முதலியவைகள் மாற்றுப் பண்டமாக அடையப்பட்டு வருகின்றன. இவற்றிக்குக் காரணம், பொதுமக்களை மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி, வைத்திருப்பதால், அந்த மூட நம்பிக்கையானது அந்த மக்களைத் தேசிய வியாபாரிகளிடமும் சிக்கி, ஏமாந்து கஷ்டப்படும்படி செய்துவருகின்றது.

இந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அனேகர் இவ்வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததன் பின், 'லிமிடெட் கம்பெனி'யாக இருந்தது, 'அன்-லிமிடெட் கம்பெனி'யாகி - அதாவது ஒரு வகுப்பாருக்கு மாத்திரம் என்று இருந்தது எல்லா வகுப்பாருக்கும் பங்கு எடுத்துக் கொள்ள சவுகரியம் ஏற்பட்டு - பிறகு, அதற்கு அனேக (பிராஞ்சு) கிளை இயக்கங்களும் உண்டாகி, இப்போது வரவரப் பெருகி, ஏறக்குறைய சிறிது கல்வியும் தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே தேசிய வியாபாரத்தில் கலந்து, அளவுக்கு மீறிய - அதாவது தங்களது யோக்கியதைக்கும், தகுதிக்கும் எத்தனையோ பங்கு மீறியதான இலாபத்தை, பயனை அடையும்படியாகச் செய்துவிட்டது.

- பெரியார் - 'குடிஅரசு' 1.3.1931

சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், இந்தியாவில் தேசியம் என்கின்ற பதமே தப்பான வழியில், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார் -அதாவது மேல் சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.

- பெரியார் - 'குடிஅரசு' 19.5.1929

keetru.com jul 2008