தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 179) சாதியும் தேசியமும்

21 11 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 179)

சாதியும் தேசியமும்

சேர் ஐவர் ஜென்னிங்கஸ், இலங்கையின் மக்கள் கூட்டம் பற்றிய தன்னுடைய அவதானத்தைப் பதிவு செய்கையில், சிங்களவர்களும் தமிழர்களும் பல்வேறு சாதிகளின் சேர்க்கைதான் என்கிறார்.அதாவது, 'நாம் சிங்களவர்', 'நாம் தமிழர்' என்ற இன அல்லது தேச பிரக்ஞை உருவாக அல்லது உருவாக்கப்பட முன்பு, இலங்கையின் மக்கள் கூட்டம் இன, தேச ரீதியில் கட்டமைந்ததை விட, சாதி ரீதியில்தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது. சிங்களவர்கள் தொடர்பில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலும் இதுவே நிதர்சனமாகும்.இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில், குறிப்பாக யாழ்ப்பாணத்தை மய்யமாகக்கொண்ட தமிழர்களைப் பொறுத்தமட்டில், சாதிச் செல்வாக்கு என்பது, 20ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியைத் தாண்டியும் மிகவும் செல்வாக்குமிக்க ஒன்றாகவே இருந்து வந்தது. இன்றும் சமூக மட்டத்தில், அதன் செல்வாக்குக் குறையவில்லை என்று சொல்பவர்களும் உளர்.

சாதி ஏற்றத்தாழ்வுகள், மனித குலத்தின் மிகப்பெரும் சாபக்கேடுகளில் ஒன்று என்பது மறுக்கமுடியாத உண்மை. நாகரிக வளர்ச்சியில், சாதிக்கொடுமைகளைப் பற்றிய புதுப் பிரக்ஞை, அண்மைய தசாப்தங்களில் ஏற்பட்டதன் காரணத்தால், சாதிகள் பற்றி வௌிப்படையாகப் பேசப்படுவதில்லை. இதனால் சாதியோ, சாதிக்கட்டமைப்போ மறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. சமூக வாழ்க்கையில், அதன் வகிபாகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழ்த் தேசம் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றை, முழுமையாக உணர்ந்து கொள்வதற்குத் தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பை ஓரளவேனும் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். குறிப்பாக, இலங்கைத் தமிழரிடையேயான சாதிக் கட்டமைப்பு, சாதிச் செல்வாக்கு பற்றிய புரிதல் தவிர்க்கமுடியாததாகும்.சாதி என்பது, இந்தியச் சூழலமைவில் வர்ணாச்சிரம தர்மத்திலிருந்து பிறக்கிறது என்பது, பலரும் சுட்டிக்காட்டும் கருத்தாகும். பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணாச்சிரம அடிப்படையிலிருந்தே, இந்தியச் சாதிக் கட்டமைப்பும் படிநிலைகளும் உருவாயின.பிராமணன், சாதிக் கட்டமைப்பின் உயர் ஆதிக்க நிலையிலுள்ள சாதிக்கட்டமைப்பே, இந்திய சாதிக்கட்டமைப்பாகும். இதன் விளைவாக எழுந்த பிராமணிய ஆதிக்கமும் அதற்கெதிரான எழுச்சியும் தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், திராவிட இயக்கத்தையும் திராவிட தேசியத்தையும் தோற்றுவித்தது.

'திராவிடம்' என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டாலும், இந்த எழுச்சி, தமிழகத்தில் தமிழரிடையே ஏற்பட்ட எழுச்சியாகும். இந்த எழுச்சியின் அடிப்படையும் நோக்கமும், பிராமண எதிர்ப்பாகும். இந்த எழுச்சியின் விளைவாக, சாதிப்படிநிலையின் உச்சத்திலிருந்து பிராமணர்களின் ஆதிக்கம் நீக்கப்பட்டு, படிநிலையில் இடைச்சாதிகளாகக் கருதப்பட்டவற்றின் ஆதிக்கம் மேலோங்கியது.'சாதி வேண்டாம்' என்ற குரலுடன், திராவிட தேசியம் கருவுற்றிருந்தாலும், அதனால், சாதிப் படிநிலையின் ஆதிக்கத்தை மாற்ற முடிந்ததே ஒழிய, சாதியையும் சாதி வேறுபாட்டையும் மாற்றிவிட முடியவில்லை.

தமிழ்நாட்டின் சாதிக்கட்டமைப்புக்கும் படிநிலைக்கும் இலங்கைத் தமிழர்களின் சாதிக்கட்டமைப்புக்கும் படிநிலைக்கும் அடிப்படையில் பெரும் வேறுபாடு உண்டு. இந்தியாவில் உள்ளது போன்ற பிராமணிய ஆதிக்கம், இலங்கைச் சாதிக்கட்டமைப்பில் கிடையாது. இலங்கைத் தமிழர்களின் சாதிக்கட்டமைப்பையும் படிநிலையையும் பொறுத்தவரையில், வௌ்ளாளர்கள் (வேளாளர்கள்) எனப்படுவோரே, சாதிப்படிநிலையின் உச்சத்தில் இருக்கிறார்கள்.இதில் தமிழர்கள், சிங்களவரிடையேயும் ஒற்றுமைகள் உண்டு எனலாம். தமிழர்களில் வௌ்ளாளர்களைப் போல, சிங்களவர்களிடையே 'கொவிகம' சாதி கருதப்படுகிறது. இந்த இரு சாதிகளும், விவசாய நிலங்களை உடைமையாகக் கொண்ட சாதிகள்.

அநகாரிக தர்மபால, 'சிங்கள - பௌத்த' தேசியத்தை விதைக்கும் போது, சாதிகளைக் கடந்த இன-மத தேசியமாகவே அதைக் கட்டமைத்திருந்தார். ஆனால், அநகாரிக தர்மபாலவின் சமகால எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சி, 'யாழ்ப்பாணத் தமிழ், சைவ, வௌ்ளாள' மறுமலர்ச்சியாக அமைந்திருந்தது என்று, டக்மா ஹெல்மன் இராஜநாயகம் சுட்டிக்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது.மிஷனரி ஆதிக்கத்தின் கீழாக, கொலனித்துவத்துக்கு எதிரான சுதேசிய மறுமலர்ச்சி எழுச்சியின் போதுகூட, சிங்களவர்கள் சாதிகளைத் தாண்டியதொரு 'சிங்கள-பௌத்த' தேசியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கிய போதும் கூட, இலங்கைத் தமிழர்களிடையேயான சாதிப் பிரக்ஞை கைவிடப்படவில்லை.மேலும், இந்திய வர்ணாச்சிரம படிநிலைக்கொப்பாக, இலங்கைத் தமிழரிடையேயான சாதிக்கட்டமைப்பு அமையவில்லை என்பது தென்னிந்திய, இலங்கைத் தமிழரிடையேயான பெரும் வேறுபாடுகளில் ஒன்று.

அதற்காக, இலங்கைத் தமிழ்ச் சமூக வாழ்க்கையில், பிராமணர்களின் வகிபாகம் ஒன்றுமில்லை என்றும் கூறிவிட முடியாது. கோவில்கள் பெரும்பாலும் வௌ்ளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தாலும், கோவில் பூசைகள் வைதீக மரபின்படி, பிராமணர்களாளேயே முன்னெடுக்கப்பட்டன. வழிபாட்டு முறைகளுள் பிராமண ஆதிக்கத்தை, வௌ்ளாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் அல்லது அனுமதித்தார்கள் எனலாம்.இந்த இடத்தில், இன்னும் இரண்டு விடயங்கள் கவனிக்கத் தக்கவை. இந்திய வர்ணாச்சிரம தர்ம அடிப்படைகளினூடாக நோக்கினால் 'யாழ்ப்பாண, தமிழ், சைவ, வௌ்ளாளர்கள்', சூத்திரர்களாகவே கருதப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, பிராமணர்களையும் விட, வௌ்ளாளர்களே ஆதிக்கம் மிக்க, சாதிப் படிநிலையில் உயர்ந்த சாதிகளாகக் கருதப்படுகிறார்கள்.இதை ஒரு முரண்பாடாகக் கருதிய ஆறுமுகநாவலர், 'யாழ்ப்பாண, தமிழ், சைவ, வௌ்ளாளர்களை' சற்சூத்திரர்கள் என்ற இன்னொரு விசேட பிரிவாக வகைப்படுத்துகிறார். மேலும், இலங்கைத் தமிழர், குறிப்பாக யாழ்ப்பாணத்தவர் 'இந்து' என்ற அடையாளத்தை விட, 'சைவம்' என்ற அடையாளத்தையே முன்னிறுத்துகிறார்கள்.இலங்கையின் பாடசாலைக் கல்வியில், சமயபாடம் என்பது, கட்டாய பாடங்களில் ஒன்று ஆகும். அதில் கற்பிக்கப்படுவது கூட, 'இந்து சமயம்' அல்ல; மாறாக, 'சைவ சமயம்' ஆகும். இவை ஒவ்வொன்றும் இந்திய வர்ணாச்சிரமக் கட்டமைப்பிலிருந்து, தம்மை வேறுபடுத்தி அடையாளப்படுத்த, இலங்கைத் தமிழர் எடுத்துக்கொண்ட முயற்சிகளாகக் கூடக் கருதலாம்.உண்மையில், ஆறுமுகநாவலர் அறிமுகப்படுத்திய 'சற்சூத்திர' அடையாளம் அவசியமற்றது. ஏனெனில், இலங்கைத் தமிழர் என்ற சமூகம், இந்திய வர்ணாச்சிரம பிராமணிய சாதிக்கட்டமைப்பின் அடிப்படையில் கட்டமைந்த சமூகம் அல்ல. ஆகவே, அதை வர்ணாச்சிரமக் கண் கொண்டு பார்த்திருந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நிற்க!

தமிழ்த் தேசியம் என்பது, ஏ.ஜே. வில்சன் குறிப்பிட்டது போல, 'சிங்கள பௌத்த தேசியவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்பட்ட, தற்காப்புத் தேசியவாதம்' என்றால், அதற்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இடையேயான சாதி ஆதிக்கத்துக்கும் என்ன தொடர்பு?இந்த விடயத்தில்தான், மானுடவியல் ஆய்வாளர் ப்றையன் ஃபஃபன்பேகரின் ஆய்வுக் கருத்தொன்று முக்கியமானதாகிறது. 1960களில் சாதிப்பாகுப்பாட்டுக்கு எதிரான பெரும் எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருந்தது.குறிப்பாகக் கோவில்களுக்குள் நுழைவதற்குக் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடைக்கெதிராக, மக்கள் எழுச்சி ஏற்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில், வௌியான புள்ளிவிவரமொன்று, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்த ஏறத்தாழ 1,309 கோவில்களில், வெறும் 17 சதவீதமான கோவில்களே, அனைவரும் செல்லத்தக்க திறந்த அனுமதியுடைய கோவில்களாக இருந்தன.இந்தச் சாதியப் பாகுபாட்டை எதிர்த்து, கோவில் நுழைவுப் போராட்டங்கள், யாழ்ப்பாண மாவட்டமெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்தன. கோவிலுக்குள் நுழைதல், கோவில் தேர்த்திருவிழாவின் போது, தேர் வடத்தைத் தாமும் பிடித்தல் என வௌ்ளாளர் ஆதிக்கத்துக்கு எதிராகச் சிறுபான்மைச் சாதியினர் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் கோவில் நுழைவுப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு, 1968இல் இடம்பெற்ற மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டம் ஆகும். இதில், 'கணித மேதை', 'அடங்காத் தமிழன்' சீ. சுந்தரலிங்கம் முன்னின்று, தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்திருந்தமை மிகவும் முக்கியமாகிறது.இவர் சாதிவெறியரல்லர்; மாறாக, சா.ஜே.வே. செல்வநாயகத்தை எதிர்த்துத் தேர்தலில் நின்ற அவர், 'வேலா', 'சிலுவையா' என்ற மதமய்யத் தேர்தல் பிரசாரத்தின் காரணமாகத்தான், குறித்த கோவில் நுழைவுப் போராட்டத்தை எதிர்த்திருந்தார் என்று, ஒரு தரப்பு நியாயம் சொல்கிறது.இருந்தபோதிலும், இந்தக் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் வௌ்ளாளர் சாதி ஆதிக்கத்தையும் அவற்றுக்கும் தமிழ்த் தேசியத்தின் உருவாக்கத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி, ப்றையன் ஃபஃபன்பேகர் தரும் ஆய்வுப் பார்வை, ஆழமான சிந்தனைக்கு உரியது.

சிறுபான்மைச் சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களின் இந்தக் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல, தெற்கின் ஆதிக்க கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவும் இருந்தது.இந்தக் கோவில் நுழைவுப் போராட்டங்களை எதிர்த்த ஆதிக்க சாதியினர், குறிப்பாக வௌ்ளாளர்கள், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையினர் ஆகிறார்கள். அதேவேளை, தமிழ்த் தேசியத்துக்கானதும், தமிழ்த் தேசமும் தமிழருக்கென்று தனி அரசு ஒன்றும் அமைய வேண்டும் என்ற குரலும் இதே ஆதிக்க வௌ்ளாளர்களிடமிருந்தே வந்ததையும் அவதானிக்கலாம்.

தமிழருக்குத் தனிநாடுதான் தீர்வு என்று முதன்முதலில் பகிரங்கமாகச் சொன்னவர்களுள் 'அடங்காத்தமிழன்' சீ.சுந்தரலிங்கமும் ஒருவர். இவற்றைத் தனது ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டும் ப்றையன் ஃபஃபன்பேகர், வடக்கில் தனிநாட்டுக்கான கோரிக்கை, ஆதிக்கசாதி வௌ்ளாளர்கள் இடமிருந்து வந்தமையானது, அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர்களான அவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்கும், தக்கவைப்பதற்குமே என்று கருத்துரைக்கிறார்.அவர் மேலும் கருத்துரைக்கையில், தமிழர்களிடையே சிறுபான்மைச்சாதிகளிடம் ஏற்பட்ட எழுச்சியைத் தணிக்க, 'சிங்கள-பௌத்த' தேசியத்திலிருந்தும், அதன்வாயிலான பேரினவாதத்திலிருந்தும் தம்மைத் தற்காத்துக்கொள்ள, தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய 'தமிழ்த் தேசியம்' என்ற கட்டமைப்புப் பயன்பட்டதாகவும் அவர் கருத்துரைக்கிறார்.

இதனால், தமிழ் மக்களிடையேயான உள்ளார்ந்த பிளவுகள் சரிசெய்யப்படாமலேயே, வௌியிலுள்ள ஒரு பிரச்சினை, பொதுப்பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டு, அதற்காக உள்ளக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது, வௌியகப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக, உள்ளக ஒற்றுமையை வலுப்படுத்தும் தந்திரோபாயம் கையாளப்பட்டது என்பதுதான் ஃபஃபன்பேகரின் வாதமாக இருக்கிறது.ப்றையன் ஃபஃபன்பேகரின் இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டுவதால், இலங்கையின் தமிழ்த் தேசியம் என்பதே, வௌ்ளாளர்களின் ஆதிக்கத்துக்கானது என்ற கருத்தை ஆமோதிப்பதாகக் கருதப்படக்கூடாது. அது உண்மையுமல்ல.

ஆனால், தமிழ்த் தேசியத்தின் பிறப்புக்கான பல்வேறு காரணங்களில், வௌ்ளாளர்களின் ஆதிக்க நலனும் ஒரு பங்குவகித்திருக்கிறது என்பதும் தமிழ்த் தேசியத்தின் பிறப்பை ஆராயும் போது, கருத்திக்கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகிறது.இலங்கையின் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பங்கள் தொடர்பில், ப்றையன் ஃபஃபன்பேகரின் ஆய்வுக் கருத்தில் சில நியாயங்கள் இருந்தாலும், இலங்கையில் தமிழ்த்தேசியம், அதன் பின்னர் வடிவமைந்த விதம், பயணித்த பாதை வேறானதாக அமைந்தது.அது, ஆதிக்க சாதிக் கட்டமைப்பிலும் கணிசமான அதிர்வுகளையும் தற்காலிக மாற்றங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆயுத இயக்கங்களின் வருகையும் எழுச்சியும் இந்த மாற்றத்தின் முக்கிய காரணங்களாயின.

( தொடரும்) yarl.com  jan 29, 2019