சார்க் நாடுகளை அரவணைக்கும் மோடியின் நட்புறவு அரசியல்

thinakaran.lk  18 08 2014

சார்க் நாடுகளை அரவணைக்கும் மோடியின் நட்புறவு அரசியல்

வறுமைக்கு எதிரான போராட்டத்தில் தோளோடு தோள் கொடுக்கு மாறு சார்க் நாடுகளுக்கும் அயல் தேசங்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரத்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் கடந்த வெள்ளிக்கிழமை (15.08.2014) கொண்டாடப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். “சகல சார்க் நாடுகளுக்கும் வறுமை பொதுவான சவாலாகக் காணப்படுகிறது. உறுப்பு நாடுகள் வறுமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம். நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். சார்க் நாடுகளுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேசமயம் வறுமைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா எதிர்பார்க்கிறது” என திரு. மோடி தனது உரையின் போது கூறி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அழைப்பு சார்க் பிராந்திய நாடுகளுக்கு புதுத்தெம்பை ஏற்படுத்தியிருக்கிறதென்றுதான் கூற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மக்கள் தனி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையொன்றுதான் இந்தியாவில் 30 வருடங்களுக்குப் பின் ஏற்பட்டிருக்கின்ற தனிக்கட்சி அறுதிப் பெருமான்மை ஆட்சியாகும். இந்தப் புதிய மாற்றமும் புதிய தலைமையும் சார்க் பிராந்தியத்தின் ஒற்றுமைக்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதன் பின்பு பங்கேற்றிருந்த முதலாவது தேசிய வைபவம் இந்த சுதந்திர தினமாகும். இங்கு தனது இந்து பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கின்ற உடையோடு சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து செங்கோட்டையில் கம்பீரமாகக் காணப்பட்ட பிரதமர் மோடி, சார்க் பிராந்திய வறுமை ஒழிப்புக்கே முக்கியத்துவமளித்துப் பேசினார்.

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறிய மோடி, தனது பதவிப் பிரமாண வைபவத்துக்கு அதிதிகளாக அழைத்தது சார்க் பிராந்தியத் தலைவர்களைத்தான். இது யாருமே எதிர்பாராத ஓர் அரசியல் திருப்ப மாக அமைந்தது. இவருடைய உறுதியான தலைமையும் சார்க் பிராந்திய நாடுகளை கட்டியணைக்கும் தீர்க்க தரிசனமான நடவடிக்கையும் பிராந்திய நாடுகள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. உண்மையில், சார்க் வறுமை ஒழிப்புக்காக முதலில் குரல் கொடுத்த நாடு இலங்கை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச, அதன் பின்னர் வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒவ்வொரு சார்க் உச்சிமாநாட்டின் போதும் சார்க் பிராந்திய வறுமை ஒழிப்புப்பற்றி அழுத்தம் கொடுத்தே வந்திருக்கிறார்கள். ஆகவே பிரதமர் மோடியின் அழைப்பு இலங்கையின் ஆண்டாண்டு கால கோரிக்கைக்குக் கிடைத்ததோர் அங்கீகாரமாகும்.

இலங்கையைப் பொறுத்த வரைக்கும் இந்தியா நீண்டகால நட்பு நாடு இலங்கை இந்திய நட்புறவுச் சங்கம் 1949 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இரு நாட்டு உறவுகளில் விரிசல்கள் ஏற்படவில்லை. மாறாக இந்தியாவின் புதிய தலைமையின் கீழ் மேலும் வலுவடைகிறதென்பதே உண்மையாகும். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது இந்தியா நடுநிலை வகித்தது. இது இலங்கை மக்களையும் எங்கள் நாட்டுத் தலைமையையும் கண்ணியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்தியா நம் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இவைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வடபகுதிக்கான ரயில் பாதை நிர்மாணிக்கும் பணிகள் இவ்வருட இறுதியுடன் பூர்த்தியடையும் தறுவாயில் இருக்கிறது. இதேபோல இந்தியாவின் பாரிய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 15,000 ஏற்கனவே பூர்த்தியடைந்துள்ளன. அடுத்தாண்டு இறுதிக்குள் 50,000 வீடுகளும் கட்ட முடிந்துவிடுமென இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா கூறுகிறார். ஹம்பாந்தோட்டையிலும் வடக்கிலும் கைத்தொழில் கிராமங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேநேரம் கடல் போக்குவரத்தின் உறவுப் பாலமாக இருந்த தூத்துக்குடிக்கான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியா தீர்மானித்திருக்கிறது.
இன்னுமொரு முக்கிய விடயமும் கைகூடும் போல் தெரிகிறது. தென் பகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கும் இந்தியா, அதன் பணிகள் பூர்த்தியடைந்ததும் கதிர்காமத்திலிருந்து இந்தி யாவின் புத்தகயாவரைக்கும் ஒரே ரிக்கட்டில் பயணிக்கக் கூடிய வகையில் திட்டம் வகுக்கப்படுவதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டுகிறார். சுருக்கமாகச் சொன்னால் யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியா 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்திகளை இலங்கையில் முன்னெடுத்துள்ளதெனத் தெரிய வருகிறது. இவைகளெல்லாம் இரு நாடுகளின் உறவில் ஏற்பட்டுள்ள மைற்கற்களாகும். இலங்கை - இந்திய வர்த்தக உடன்படிக்கையானது இருதரப்பு வர்த்தகம் முதலீடு ஆகியவற்றின் சடுதியான அதிகரிப்புக்கு வழிவகுத்தது எனலாம். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் புதிய அரசு கூடிய கவனம் செலுத்துகிறது என்பது உண்மை. பிராந்திய வல்லரசாக இருக்கின்ற இந்தியா, பொருளாதாரத்தில் முன்னேறினால் அது பிராந்திய நாடுகளுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்.