தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா?

30 11 2019

தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா?

தேர்தலுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, தத்தம் தரப்பு நியாயங்களைப் பட்டியல்படுத்தி, அவற்றை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகளில், ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறத. இவை யாவும் 'அறிக்கை அரசியல்' என்ற பழைய மொத்தையில் கள்ளருந்தும் கலாசாரமாகவும் புளித்துப்போன உப்புச்சப்பற்ற வியாக்கியானங்களாகவுமே காணப்படுகின்றன.இத்தகைய போக்குகள், தமிழ்த் தேசிய இருப்பின் ஊடாகச் சமகால அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாத நிலைமையை, குறைபாட்டையே வௌிப்படுத்தி நிற்கின்றன.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அதன் பங்காளிக் கட்சிகளிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்வினையாகச் செயற்படும் ஏனைய கட்சிகளிடமும் தூரநோக்குப் பார்வையோ தரிசனமான திட்டங்களோ காணப்படவில்லை.

இந்த நிலைமையானது, தமிழ்த் தேசிய அரசியலில் ஆரோக்கியமான சூழலாகத் தெரியவில்லை. அரசியல் விடுதலை குறித்த தமிழரின் பயணத்தில், தமிழ் மக்களும் அவர்களின் தலைமைகளின் அரசியல் காய்நகர்த்தல்களும் சொல்லொண்ணா ஏமாற்றங்களையும் துயரங்களையும் சந்தித்துள்ள சம்பவங்களையே, வரலாற்றில் தொடர்ச்சியாகக் காணமுடிகின்றன.'காலம் கடந்த ஞானம்' வேண்டியதொரு காலகட்டத்தில், தமிழ்த் தேசிய இனமும் அதன் அரசியல் தலைமைகளும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இன்னும் முழுவதுமாக வர முயற்சியாமல் இருப்பது, மிக மிக அபத்தமானது.

தமிழ் மக்கள், தமது வாழ்வாதாரத் தேவைகளையும் அடிப்படை உரிமைகளையும் குறைந்தபட்சம் ஒரு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில், அதிஉயர் அதிகாரப் பகிர்வின் மூலம், தமது அரசியல் உரிமையை வேண்டி நிற்கின்றனர் என்பதை, தாமாக முன்வந்து, ஒரு சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாஸ முன்வைத்த தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.இதன் மூலம், இத்தீவில் அனைத்து மக்களும் ஒருதாய் மக்களாகச் சம அந்தஸ்துடன் வாழ, வழி பிறக்கும் என்று நம்பினர். மாறாக, இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்கள், இனவாதம் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேசிய பலம்பொருந்திய வேட்பாளர்களில் ஒருவரைத் தமிழ் பேசும் மக்கள் ஆதரித்தனர். ஜனநாயக நாட்டின் பிரஜைகள் என்ற வகையில், தமக்குரிய ஜனநாயக உரிமைகளும் சுதந்திரமும் என்ற அடிப்படையில், தமக்குப் பிடித்த ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதரித்தனர். இவை தவிர, இதற்கு இனவாதம் பூசுவது பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையும் தவறான பார்வையுமாகும்.இத்தகைய நடவடிக்கைகள், அதிருப்தி உணர்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, வேறு எதையும் சாதித்து விடாது. எனவே, பிளவுபட்ட சமூகங்களை இணைப்பதைத் தவிர்த்து, தொடர்ச்சியாகப் பிளவுபட்ட பாதையில் பயணிக்க முயல்வது, தேசத்துக்கு ஆபத்தாகவே முடியும்.எனவே, புதிய ஜனாதிபதி இத்தகையதொரு கரடுமுரடான பயணத்தை மேற்கொள்ள மாட்டார். ஏனெனில், அத்தகைய பயணம், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்ற முடியாத சிக்கல் நிலையைத் தோற்றுவிப்பதுடன், இந்நாட்டைச் சர்வதேசத்திடம் இருந்தும் ஒதுக்கிவிடக்கூடிய அபாயங்களையும் சந்திக்கும்.

ஏனெனில், இலங்கை அரசியலில் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளைக் காரணம் காட்டியே, பல்வேறு நாடுகளின் அரசியல் காய்நகர்த்தல்களும் வியூகங்களும் அமைந்துள்ளன. இத்தகைய சிக்கல் நிறைந்த அணுகுமுறைகளில் இருந்து விடுபடுவதன் மூலம், அரசாங்கம் நேர்மையான வழிகளில், தமது ஆட்சி அதிகாரத்தை முன் நகர்த்த முடியும். இல்லையேல், பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிவரும்.இலங்கையின் பொருளாதாரம், நம்பிக்கை தரும் அளவில் இல்லை; இத்தகையதொரு சூழ்நிலையில், கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏழாயிரம் நியமனங்கள், அதிகரிக்கப்பட இருந்த சம்பளம், முகாமைத்துவக் கொடுப்பனவுகள் யாவும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலைமைகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சிக்குச் சிக்கலைத் தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைப் பற்றிய உணர்வலை மேலோங்கியதால், வயிற்றைப் பற்றிச் சிந்திக்கத் தவறிய மக்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதைப்பற்றி சிந்திக்க முற்படுவர். இது தேர்தலில் ஆளும் தரப்புக்கு முக்கிய பிரச்சினையாக மாறும்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில், "நாட்டைக் காப்பாற்றியவர் ராஜபக்‌ஷ" என்ற அனுதாபம், சிங்கள மக்களின் இருந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில், இந் நிலைமைகள் இல்லை.ஏனெனில், தொகுதி வாரியான பிரதிநிதிகள், மாவட்டப் பிரதிநிதிகள், தனியாள் செல்வாக்கு, கட்சிச் செல்வாக்கு எனப் பல்வேறு சக்திகள் செல்வாக்குச் செலுத்தும் நிலைமை காணப்படும்.இத்தகைய நிலையில், தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என நோக்கின், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, மாற்றுத் தலைமை ஒன்றை, சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், சுரேஷ் பிரேமசந்திரன், ஸ்ரீகாந்தா, அனந்தி சசிதரன் போன்றவர்களை இணைத்துக்கொண்டு, ஓர் அரசியல் கட்சியை ஸ்தாபிக்கும் முயற்சிகள், வடக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த முயற்சிகள், தமிழ்த் தேசிய உணர்வின் உந்துதலால் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னெடுக்கப்படுகிறதா? என்பதை மேற்படி கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமே முகவரி பெற்றவர்கள். தற்போது இவர்கள், கூட்டமைப்பை விட்டு விலகியதால், நிராகரிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துச் செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.மேலும், வடக்கின் கள நிலைவரங்களின் படி, அங்கு வெற்றி பெற முடியாத சூழலில், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வேலைத்திட்டத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர். இதன் மூலம், தமிழரது வடக்கு மாகாணப் பிரதிநிதித்துவத்தை, தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.மேலும், இவர்கள் கிழக்கின் அரசியல் நிலைவரங்களை அடியோடு கவனத்தில் கொள்ளவில்லை. அங்கு, மேற்படி கட்சிகளுக்கு ஆதரவுத்தளம் அமைப்பு ரீதியாக இல்லை. இத்தகைய சூழலில் மாற்றுத் தலைமை எனக் கூறிக்கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலில் போட்டியிடும் போது, பல விபரீதங்கள் ஏற்படலாம்.

வடக்கின் அரசியல் நிலைமைகள் வேறு; அங்கு பெரும்பான்மைச் சமூகம், தமிழ்ச் சமூகமாகும். ஆயினும், தமிழர் அபிலாசை தொடர்பாகக் குரல் கொடுப்பதாக இருந்தாலும் பிரிந்து நின்று குரல் கொடுப்பதாக இருந்தாலும் அங்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பில்லை.ஆனால், கிழக்கை பொறுத்தவரையில் இது ஒரு விசப்பரீட்சை. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக, விரக்தியுற்ற ஒவ்வொருவரும் தமது போக்குக்கு ஏற்ப, ஒவ்வொரு கட்சியை தொடங்குவது சுலபமாக இருக்கலாம். ஆனால், கிழக்கு மக்களது வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது.தவிர, இவர்களால் கிழக்கில் ஒரு பிரதிநிதித்துவத்தைக் கூடப்பெற முடியாது. ஏனெனில், எத்தகைய அரசியல் வேலைத் திட்டங்களோ, மக்கள் படையோ இவர்களுக்கு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களத்தில் குதித்துள்ள தேர்தல்கால பூச்சாண்டி பூதங்களாகவே மக்களால் பார்க்கப்படுவர்.

ஆயினும், எதிர்காலத்தில் தமிழர் இருப்பின் நலன் கருதி, ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ், இணக்கப்பாட்டு அரசியலில் இனவாதமற்ற, முற்போக்குச் சிந்தனையுள்ள கட்சியுடன் இணைந்து, தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தையும் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும்.தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தின் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்த இலட்சியப் பயணத்தின் தேசிய இலக்கினை அடையும் வரையில், இந்தப் போராட்டம், 'போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் மாறாது' என்ற கொள்கை அடிப்படையில், தமிழ் மக்களது தேசிய அபிலாசைகளை வெற்றிகொள்ள, தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய அரசியலில் ஓரணியில் ஒன்றுபட வேண்டியது, காலத்தின் தேவை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த சதவீதத்தை விட, மேலும் அதிகளவில் வாக்களிக்க வேண்டிய கடமையும் ஜனநாயகப் பொறுப்பும் தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே, தமிழ் மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய, அதிகளவில் வாக்களிக்கவேண்டும்; வாக்குச் சிதறடிப்பவர்களை இனங்கண்டு, நிராகரிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலில், கிழக்கு நிலைவரத்துக்கு ஏற்ப, போட்டி தவிர்த்து, ஓரணியில் தமிழர் திரள வேண்டும்.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஐ.தே.க சார்பாகச் செய்யப்பட்டது போல், இம்முறையும் நிலைவரத்துக்கு ஏற்ப, ஆட்சியில் பங்குதாரராக வேண்டிய தேவை உள்ளது. அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேரம் பேசும் சக்தியாகத் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவதுடன் அதிகபட்ச பிரதிநிதித்துவம் உள்ள கட்சியுடன் சேர்ந்து, ஆட்சியில் பங்காளராக வருவதன் மூலமே தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளை, இணக்கப்பாட்டு அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம், முன்னோக்கி நகர்த்த முடியும்.எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் ஐந்தாண்டு காலத்துக்கான வடக்கு, கிழக்கு அரசியல், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, கல்வி, வாழ்வாதார வேலைத்திட்டங்களை மக்கள்முன் தெளிவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதை விடுத்து, கடந்தகால அரசியல் நாடகங்களை முன்னெடுப்பது, ஆரோக்கியமான ஒரு பயணமாக அமையாது.

  இலட்சுமணன்tamilmirror.lk 28 11 2019