எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை : இருபது கேள்விகளும் எமது பதில்களும் 3

07 12 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை  : இருபது கேள்விகளும் எமது பதில்களும் 3

ஜாதிய கொடுமைகள் செய்வது பார்ப்பனர்களா? மற்ற ஜாதியினரா?

கேள்வி 9: நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்கிற விவரங்கள் உங்களிடம் உண்டா?

பதில் 9 : நாங்கள் என்ன காவல்துறையா நடத்துகிறோம்? இந்தக் கேள்விக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? எதனால் இக்கேள்வி கேட்கப்படுகிறது? அர்த்தமற்ற கேள்வி என்றாலும் பதில் சொல்ல விரும்புகிறோம்.முதலில் இக்கேள்விகளையெல்லாம் கேட்பதே ஒரு பார்ப்பனர்தான் என்பது எங்களுக்குப் புரியும். பெரியார் தொண்டர்கள் ஆள் அசைவை மட்டுமல்ல, அவர்கள் எழுத்தைக் கொண்டே ஆளைக் கணக்கிடுவோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் ஜாதியோடு தொடர்புடையது அல்ல. தனிநபர் இயல்பை, சூழலை, நடத்தையைப் பொறுத்தது. நல்லவர்கள் எல்லா ஜாதியிலும் உண்டு, எல்லா மதத்திலும் உண்டு. அதேபோல் கெட்டவர்களும் எல்லா ஜாதியிலும் மதத்திலும் உண்டு. இதில் ஜாதிவாரி, மதவாரி கணக்கெடுப்பு என்பது தவறு.

நீங்கள் கேட்கும் கேள்வியின் நோக்கம் புரிகிறது. பார்ப்பனர்கள் இவற்றில் அதிகம் ஈடுபடுவதில்லை. அவர்கள் நல்லவர்கள் என்று இதன்மூலம் சொல்ல முயல்வது புரிகிறது.கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியே உண்டு. கோயிலில் பக்தையைக் கற்பழித்த பார்ப்பனர் உண்டு. கடத்தல், நாட்டைக் காட்டிக் கொடுத்தல் செய்த பார்ப்பனர்கள் உண்டு. காந்தியையே சுட்டவன் ஒரு பார்ப்பான்தானே? இது கிடக்கட்டும்.தங்கள் ஆதிக்கத்தையும், சனாதனத்தையும் காத்துக் கொள்ள சுயநலத்திற்காக பகுத்தறிவாளர்களைக் கொல்லுதல், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களைக் கொல்லுதல் போன்ற குற்றம் புரிகின்றவர்கள் பார்ப்பனர்கள்தானே?

ஆயிரமாயிரமாண்டுகளாய் தான் மட்டுமே (தன் ஜாதி மட்டுமே) படிக்க வேண்டும். மற்றவன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆதிக்கம் புரிந்து, சமுதாயத்தில் உயர்நிலையில் தன்னை அரசு ஆதரவோடு வைத்துக்கொண்ட பார்ப்பன இனம் ஒரு பக்கம்; கல்வியில்லாது, உடலுழைப்பை நம்பி ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி, அடக்கி வைக்கப்பட்டு, தீண்டக் கூடாது என்று தள்ளிவைக்கப்பட்ட சமுதாயம் மறு பக்கம். இங்கு தவறுகள் எங்கு அதிகம் நடக்கும்? அவற்றுக்குக் காரணம் யார்?

வன்னியர், முக்குலத்தோர் உள்ளிட்ட 89 ஜாதியினரை தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரையாகவே வைத்திருந்தார்கள். வன்னியர், முக்குலத்தோரெல்லாம் குற்றவாளிகளா? அவர்களில் உயர்குணமும், தியாகமும் புரிந்தவர்கள் ஏராளம் இல்லையா?எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கொடுக்கப்பட்ட பின் அவர்களிடம் இருந்த குற்றங்குறைகளும் இன்றைக்கு குறைந்துவிட வில்லையா?சுற்றுச் சூழலும் சமுதாய அமைப்பும் குற்றவாளிகள் உருவாகக் காரணமாகின்றன. எனவே, இது ஜாதியைப் பொறுத்ததல்ல. சமுதாயம் ஒட்டுமொத்தமாக முயன்று அரசின் துணையோடுதான் இவற்றைக் களைய வேண்டும்.

கேள்வி 10: கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு, தெருவில் நடமாடத் தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்கிற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எதிர்த்துக் குரல் எழுப்பும் துணிவு உங்களுக்கு உண்டா?

பதில் 10 : கோவில் நுழையத் தடை, தடுப்புச் சுவர், இரட்டை டம்ளர், கவுரவக் கொலையெல்லாம் பார்ப்பனர் உருவாக்கிய ஜாதிக் கொடுமைகளின் விளைவுகள். உண்மையான குற்றவாளி அவர்களே! ஜாதிமுறை எக்காலத்துக்கும் வேண்டும் என்று இன்றளவும் முயற்சி செய்யக்கூடியவர்கள் அவர்கள்.

இவற்றை ஒழிப்பதில் எல்லா ஜாதியைச் சேர்ந்த பெரியவர்களும் முயற்சி செய்திருக்கிறார்கள். காரணம், எல்லா ஜாதியிலும் உயர்ந்தவர்கள், சமதர்மவாதிகள், மனித நேயர்கள் உண்டு. எனவே, இதை வைத்து இதில் எந்த ஜாதிக்கு அதிகப் பங்கு என்றெல்லாம் தராசு பிடிக்க முடியாது. ஆனால், சில உண்மைகளை எல்லோரும் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். நந்தனை கோவிலுக்குள் நுழையாமல் தடுத்து, அவர் பிடிவாதம் பிடிக்க, அவரை நெருப்பில் தள்ளி கொளுத்தியது யார்?

இராமலிங்க வள்ளலார் ஜாதி வேண்டாம் என்றதற்காக அவரை அடித்துக் கொன்றது யார்?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடையாய் இருப்பது யார்?

தமிழை பூசை மொழியாக ஆக்கக் கூடாது, அது நீசபாஷை என்றது யார்?

காந்தியாரையே வீட்டிற்குள் அனுமதிக்காது தாழ்வாரத்தோடு அனுப்பியது யார்?

பார்ப்பனர் வீட்டில் மலம் எடுக்கக் கூட ஒரு தாழ்த்தப்பட்டவன் வரக்கூடாது. அதைவிட உயர்ஜாதிக்காரன் வந்துதான் பார்ப்பான் கழித்த மலத்தை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் மாநகராட்சியில் தீர்மானம் போடச் செய்தது யார்?இரட்டைக் குவளை எதிர்ப்பு, தடுப்பு சுவர் எதிர்ப்பு, கோயில் நுழைவு, ஜாதியொழிப்பு இவற்றிற்கு திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களும், செய்த தியாகங்களும் எத்தனை எத்தனை? தருமபுரி ஜாதிக் கலவரமானாலும், ஜாதி ஆணவக் கொலைகளானாலும், ஜாதி அடிப்படையில் கொடுமைகளை அதை எதிர்த்து, களத்தில் முதலில் நிற்கும் இயக்கம் திராவிடர் கழகம் என்பதே வரலாறு. பார்ப்பன ஊடகங்கள் அதைச் சொல்லாது மறைக்கும்.இதையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைய இளைஞர்களை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்! முடியாது! முறியடிப்போம்!

கேள்வி 11: அதிமுக கட்சி ஒரு திராவிடக் கட்சியாயிற்றே! ஜெயலலிதா முதல்வராய் இருந்தபோது அவரை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் இருந்ததா?

பதில் 11: பார்ப்பனப் பெண் ஆட்சி என்பதால் அதை என்றைக்குமே நாங்கள் எதிர்த்ததில்லை. தி.மு.க. தவறு செய்தபோது, ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தோம். இடஒதுக்கீடு உயர வழி செய்தமைக்கு பட்டம் கொடுத்துப் பாராட்டினோம். தப்பு செய்தால் யாரையும் எதிர்ப்போம்; சமூகநீதி காக்கும் யாரையும் பாராட்டுவோம். எங்கள் தைரியம் அவாளுக்கு நன்றாகவே தெரியும் வோய்! இன்றைக்கு அளவுக்கு அதிகப் பலத்துடன் மத்தியில் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் ஆட்சி நடக்கும் நிலையிலும் அதன் கொடுமைகளைத் துணிவுடன் எதிர்க்கும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம் என்பதைப் புரிந்துகொள்ளவும். பகுத்தறிவாளர் கழக தொடக்க மாநாட்டின் நிறைவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையைக் கேட்டுவிட்டு பின் பதில் சொல்லும்!

கேள்வி 12: அந்த ஒரு "பிராமணப்'' பெண்ணின் காலில் விழுந்த ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது நீங்கள் கண்டித்தது உண்டா?

பதில் 12: யார் காலில் விழுந்தாலும் அதைக் கண்டிப்பதில் முதலாக நிற்பது நாங்கள் என்பதை நாடே நன்கறியும். யாருக்கும் அஞ்சும் இயக்கம் இதுவல்ல. காலில் விழாத ஒரே கண்ணிய இயக்கம் திராவிடர் கழகம்! காலில் விழுபவர்களைவிட காலில் விழுவதைப் பெருமையாய் நினைக்கின்றவர்கள் தாம், முதலில் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது உமக்குத் தெரியாதா?

(தொடரும்...) நேயன் unmaionline.com dec 1-15 ,2019