தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று செல்வா கூறியது ஏன்? -

thinakkural.lk 02 09 2014
தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று செல்வா கூறியது ஏன்? -

தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று 1970 யூலையில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த பின் தமிழரசுக் கட்சித் தலைவராயிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கூறினார். இன்று அதை, அக்கூற்றைப் பலர் பலவாறு பயன்படுத்துகின்றனர். இனிமேல் தமிழினத்திற்கு விமோசனம் இல்லை என்ற கருத்தில் அவர் கூறியதாகவே பலரும் நம்புகின்றனர்.

அப்படியிருக்க முடியாது. ஒரு இனம் தனது மொழியை, மதத்தை, பாரம்பரிய பண்பாடுகளைக் கைவிட்டு தற்கொலை செய்து கொண்டால் மட்டுமே அழிவடைய வழியுண்டு. மொழியில், மதத்தில், பாரம்பரிய பண்பாட்டில், அதன் மேன்மையில் பற்றுறுதியுடன் உள்ள எந்தவொரு இனமும் அழியாது. அழிக்கப்படவும் முடியாது. நாம் இன்று அழிவை நோக்கிச் செல்கின்றோம் என்றால் அதற்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை மறக்கக்கூடாது. மாற்றாரை, நாம் அழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பவனை மட்டும் குறைகூறி, விமர்சித்துக் கொண்டிராது நம்மைப்பற்றி நாமே சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.  

தமிழ் மொழியின் உரிமையைப் பயன்படுத்தப் பின் நின்று கொண்டு, தமது அன்றாடக் கடமைகளைத் தமிழ் மொழியில் ஆற்ற வழியிருந்தும் அதைப்பயன்படுத்தாமல் இருந்து கொண்டு நமது சமயத்தில் நம்பிக்கையில்லாது சமயமாறுதலுக்கு உள்ளாகிக் கொண்டு, பாரம்பரிய பண்பாடுகளைப் பின்பற்றுவதை விடுத்து பிறநாட்டு கலாசாரத்தை வரிந்தேற்றுக் கொண்டு இருக்கும் போது தமிழர்களின் இன அடையாளம் அகற்றப்பட, மறைக்கப்பட நாமே வழியமைத்துக் கொடுத்த பாவிகளாவோம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து இப்படிப் பல வாழ்த்துக்களைக் கூட தமிழ்மொழியில் கூறப் பின்னிற்கும், மறுக்கும் நம்மவர்கள் நிறையவேயுள்ளனர். வாழ்த்தும் மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால் அதுவே ஏற்கப்படும், செல்லுபடியாகும் என்று நம்பும் நம்மவரில் பலர் தமிழ் மொழியை வாழ்த்தும் மொழியாகப் பயன்படுத்துவது நாகரிகமற்றது என்று கூட நம்புகின்றனர். புதுமணத் தம்பதியினரை மனப் பூர்வமாகத் தாய்மொழியில் வாழ்த்தும் போது அதற்குள்ள பெறுமதியை, சக்தியை உணராத நம்மவர்கள் தந்தை செல்வா அன்று கூறியதன் உட்பொருளை அதன் ஆழத்தைப் புரிந்து கொள்வது முடியாத ஒன்றே. ஆம். சிந்திக்கும் போது செல்வாவின் கூற்று தீர்க்கதரிசனம் மிக்கதாகவே கருதப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழினம் ஒற்றுமை இழந்து சிதறிப்போய் தனது தனித்துவத்தை இழக்கும் நிலை உருவாக வழியுள்ளது.

சந்தர்ப்பவாதிகள் தமிழர் அரசியலில் புகுந்து தமிழர் மத்தியிலே குழப்பமேற்படுத்தி சுயதேவைகளை நிறைவேற்றும் அநாகரிக அரசியல் தமிழர் மத்தியிலே உருவாக வழியேற்படும் என்றோ அன்று செல்வா எதிர்வு கூறினார். அது மெய்ப்பிக்கப்பட்டும் விட்டது. தமிழர் வரலாற்றில் குறிப்பாக வடபுலத்துத் தமிழர் வரலாற்றில் அதுவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சொந்த இலாபங்களுக்காக அரசியல் நடத்திய பாரம்பரியம் இருந்ததாக வரலாற்றுப் பதிவேதும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளால் பராளுமன்றத்திற்குத் தெரிவான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களெவரும் 1970 வரை ஆளும் கட்சியின் அரவணைப்பில் குளிர் காய்வதற்காக கட்சிதாவிய வரலாறில்லை. கொள்கையில் உறுதி கொண்ட கனவான்களாகவேயிருந்தனர். 1970 பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் வடபுலத்து தமிழர்களின் பதவிநாட்டமற்ற, சுயலாப நோக்கமற்ற பண்பட்ட அரசியலுக்கு கேடு நேர்ந்தது. வடபுலத்துத் தமிழர்களையும் விலை கொடுத்து வாங்கலாம் என்ற நிலை உருவானது. தமிழரசுக் கட்சியிலல்ல, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான மூன்று வடபுலத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தமிழர் பாரம்பரியமாகக் கட்டிக்காத்த அரசியல் பண்பாட்டிற்குச் சாவுமணி அடித்தது. உண்மை அதுவாகவே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் வட்டுக் கோட்டை, நல்லூர், கிளிநொச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலிருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான மூவரும் கூண்டோடு கைலாசம் போவது என்பது போல் ஒன்றிணைந்து அன்றைய ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக மாறினார்கள். தம்மைத் தெரிவு செய்த மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து தான்தோன்றித்தனமாக ஆட்சியாளருடன் சங்கமித்தனர். அவர்களில் ஒருவரான நல்லூர் பா.உ.அருளம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அரசியல் நிர்வாகம் வழங்கப்பட்டது. மற்ற இருவரும் வெறுமனே இருக்கும் நிலை ஏற்பட்டது. ஒருவர்  வட்டுக்கோட்டை ஆ.தியாகராஜா, மற்றவர் கிளிநொச்சியில் 1965 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது 1970 இல் கட்சிமாறி தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட வீ.ஆனந்தசங்கரி. இவையும் வரலாற்றில் தெளிவாகவே பதியப்பட்டுள்ளன. வரலாற்றைக் கற்கும், அறியும் ஆர்வமின்மையால் நம்மவருக்கு இது தெரிவதில்லை.

வெற்றிவாய்ப்புக்காக கட்சிமாறுபவர்களையும், வெற்றிபெறுவதற்காக தேடிப்பிடித்து வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளையும் தமிழர் சமூகம் நம்பியதால் ஏற்பட்ட பின்விளைவு இன்றும் தொடர்வதை அவதானிக்கலாம். பாரம்பரிய தமிழர் கட்சி, ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமைவகித்த கட்சி பாராளுமன்றத்திலிருந்து முற்றாக துடைத்தெறியப்பட அதே கட்சிசார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளே காரணமாயமைந்தனர். இதுவும் வரலாறு. தமிழர்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்திருந்து செயற்படாது இணைந்து செயற்பட வேண்டுமென்ற உயர் நோக்கில் 1972 இல் உருவாக்கப்பட்டதே தமிழர் கூட்டணி. இக் கூட்டணி உருவாக, தமிழரசுக் கட்சி பலவீனமடைந்தமையால் தந்தை செல்வா வகுத்த திட்டமே என்று அண்மையில் வீ.ஆனந்தசங்கரி என்பவர் கருத்து தெரிவித்திருந்தார். இது முற்றிலும் தவறானது.

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். பொது நோக்கில் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் மொழிவழித் தொழிற் சங்கங்களே ஈடுபட்டன. தமிழரசுக் கட்சிக்கு எதுவிதபங்களிப்பும் இல்லை. அச்சங்கங்களில் ஒன்றான அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவிருந்த எனது பங்கு மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை இணைப்பதாயமைந்தது. அதில் வெற்றியும் கண்டவன் என்ற முறையில் இதைத் தெளிவாகக் கூறும் உரிமை எனக்குண்டு. தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்ட காலத்தில் ஆனந்தசங்கரி அன்றைய சிறிமாவோ அம்மையாரின் அரசுக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டவர் என்பது வரலாற்றில் தெளிவாகவுள்ளது. தமிழர் கூட்டணி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயரை அதில் அங்கம் வகித்த அமைப்புகள் சகலதினதும் ஏற்பின்றி ஒரு சிலரால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று மாற்றப்பட்டதை ஆட்சேபித்து மதிப்புக்குரிய சௌமியமூர்த்தி தொண்டமான் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும் வரலாற்றுப்பதிவு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றம் தமிழினத்தின் அவலமாகிவிட்டது. கட்டியெழுப்பப்பட்ட ஒற்றுமைக்கு வேட்டுவைக்கப்பட்டது. இதுவே தமிழினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தால் பெற்றுக் கொண்ட பெறுபேறு. 1970 க்குப் பின்னரான அரசியல் சூழ்நிலைகள், நிகழ்வுகளாலும் செல்வநாயகம், பொன்னம்பலம் போன்றோரின் மறைவினாலும் தமிழர் அரசியல் அரங்கு பலபுதிய நடிகர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இன்று தலைவர்கள் பெருகிய இனமாகத் தமிழினம் உள்ளது. அன்று அதாவது கொல்வின் ஆர்.டி.சில்வாவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் உருவாக்கிய அரசியல் அமைப்பு நிர்ணயசபையிலிருந்து  அவ்வமைப்பில் தமிழர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செல்வநாயகம் தலமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது அதைவிமர்சித்து எழுந்து நின்று இருக்கைகளையும் உயரத்தூக்கி"டாட்டா போய்வாருங்கள். இனி வரவேண்டாம்' என்று குரலெழுப்பியவர்கள் கூட இன்று தமிழர்களின் தலைவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வது நகைச்சுவையாகவுள்ளது. நாற்பது ஆண்டுகள் கடந்தாலும் உண்மை மறையாது.

அரிதாரம் பூசி சுய உருவத்தை மறைத்து மேடையில் நடிக்கும் நடிகர்களைப் போன்று அரசியல் மேடையில் நடிப்போர் பெருகி தமிழினத்தைச் சீரழிக்கப்போகின்றார்கள் என்று அன்றே செல்வநாயகம் எடைபோட்டமையாலேயே இனித்தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார் போலும். தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளில் சிக்கித்தவிப்பதை உலகமே கவலையுடன் நோக்கும் இந்நாட்களில் சுயவரலாறு மறந்து கடந்தகால வரலாற்றை மக்கள் மீட்டுப்பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் எதையும் உளரலாம், எப்படியும் நடக்கலாம் என்று செயற்படும் சமூகத் தலைவர்கள் திருந்தாதவரை, மக்கள் உணராத வரை தமிழினத்தைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற கூற்றும் அர்த்தமுள்ளதாகவே அமைந்திருக்கும்.