தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 184)

28 12 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 184)

ஏகத்துவமும் த்வைதமும்

சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டினதும் 1(1) சரத்தானது, 'சகல மக்களுக்கும்' உரியதாக உரைக்கும் சுயநிர்ணய உரிமை, இலங்கைக்கும் பொருந்துமா என்பது, இங்கு எழக்கூடிய முக்கியமான கேள்வியாகும்.1980 ஜுன் 11ஆம் திகதி, சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR), சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகிய இரண்டிலும் இலங்கை கையெழுத்திட்டு, குறித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் அங்கத்துவம் பெற்றுக்கொண்டது.ஆனால், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதால் மட்டும், குறித்த உடன்படிக்கையின் சரத்துகள், நேரடியாக இலங்கையில் செல்லுபடி உடையதாகாது. இதற்குக் காரணம், இலங்கை ஒரு 'த்வைத' (dualist) அரசாகும்.சர்வதேச சட்டங்களின் நேரடிச் செல்லுபடித் தன்மையைப் பொறுத்து, அரசுகள் ஏகத்துவ (monist) அரசுகள், த்வைத (dualist) அரசுகள் என்று, இருவகைப்படுத்தப்படுகின்றன.

ஏகத்துவவாதிகள் உள்நாட்டு, சர்வதேச சட்டங்களை ஒருமைத் தன்மையோடு அணுகுகிறார்கள். அதாவது, ஏகத்துவ நாடுகளில், உள்நாட்டுச் சட்டங்கள் எவ்வாறு நேரடியாக, உள்நாட்டில் அமுல்படுத்தப்படுகிறதோ, அதேபோன்றே, சர்வதேசச் சட்டங்களும் அதாவது, குறித்த அரசாங்கங்கள் பங்குதாரராகியுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், பாரம்பரிய சர்வதேசச் சட்டங்கள் என்பனவெல்லாம் நேரடியாக உள்நாட்டில் அமுலாகும்.சுருங்கக் கூறின், உள்நாட்டுச் சட்டங்களுக்கு ஒப்பானதாக, சர்வதேசச் சட்டங்களும் ஏகத்துவ அரசுகளில், நேரடி வலுவுடையதாக அமைகின்றன. ஆகவே, சர்வதேசச் சட்டங்களை உள்நாட்டில் வலுவுடையதாக்கவும் நடைமுறைப்படுத்தவும் மீண்டும் உள்நாட்டில் தனித்துச் சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை.

ஆயினும், சில ஏகத்துவ அரசுகளில் சர்வதேச உடன்படிக்கைகள், பாரம்பரிய சர்வதேசச் சட்டங்கள் ஆகியவை, நேரடியாக அமுலாவது தொடர்பில் வேறுபாடுகள் உண்டு, இவை, பகுதியளவு ஏகத்துவ அரசுகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.இதற்கு மாறாக, த்வைதவாதிகள் உள்நாட்டுச் சட்டங்களையும் சர்வதேச சட்டங்களையும் வெவ்வேறானதாகப் பார்க்கிறார்கள்.இவர்களைப் பொறுத்தவரையில், சர்வதேசச் சட்டங்கள் என்பது, உள்நாட்டில் நேரடியாக வலுப்பெறாது என்பதுடன், சர்வதேசச் சட்டங்கள் உள்நாட்டுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.அதாவது, குறித்த சர்வதேசச் சட்டமொன்று, உள்நாட்டில் வலுப்பெற, அந்தப் பெயர்ப்பைச் செய்யும் உள்நாட்டுச் சட்டமொன்று, இயற்றப்பட வேண்டும். இந்தப் பெயர்ப்பு, இடம்பெறாத வரை, சர்வதேசச் சட்டங்கள் உள்நாட்டில் சட்டமென்ற அந்தஸ்தைப் பெறாது.

அப்படி, உள்நாட்டில் சட்டமென்ற அந்தஸ்தைப் பெறாத சர்வதேசச் சட்டத்தை, உள்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதோடு, அந்தச் சர்வதேசச் சட்டத்துக்கு முரணான உள்நாட்டுச் சட்டங்கள் தொடர்ந்தும் வலுவிலிருக்கும்.ஆகவே, சர்வதேச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டதன் மூலம், ஒரு த்வைத அரசானது குறித்த சர்வதேசச் சட்டத்தைச் சுவீகரித்திருந்தாலும், அதை உள்நாட்டுக்குப் பெயர்ப்புச் செய்யாதவரை, அது உள்நாட்டில் வலுப்பெறாது என்பதுடன், அந்தச் சர்வதேசச் சட்டத்துக்கு முரணாகவுள்ள உள்நாட்டுச் சட்டங்கள், தொடர்ந்தும் வலுவிலிருக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில், குறித்த அந்த அரசாங்கமானது, குறித்த சர்வதேசச் சட்டத்தை, மீறுவதாகவே கருதப்படும்.

இலங்கையும் சுயநிர்ணய உரிமையும்

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த பெரும்பாலான நாடுகள், ஏகத்துவ அரசுகளாக இருப்பதை நாம் அவதானிக்கும் அதேவேளை, ஐக்கிய இராச்சியம், 'த்வைத' அரசுக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கிறது.ஐக்கிய இராச்சியத்தைப் போலவே, இலங்கையும் ஒரு 'த்வைத' அரசாகும். ஆகவே, மேற்குறித்த இரண்டு ஒப்பந்தங்களிலும் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தாலும், அதிலுள்ள அனைத்துச் சரத்துகளும் உள்நாட்டுச் சட்டங்கள் மூலம், உள்நாட்டுக்குப் பெயர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, குறித்த உடன்படிக்கைகள் உள்நாட்டில் வலுவுடையதாகும்.இலங்கை அரசானது, 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்பானது, மேற்குறித்த இரு உடன்படிக்கைகளும் வழங்கும் உரிமைகளின் பெரும்பான்மையானவற்றை, உள்நாட்டுக்குப் பெயர்த்துள்ளதாக உரைத்தது. ஆயினும், சில உரிமைகள் உள்நாட்டுக்குப் பெயர்க்கப்படவில்லை என்ற பெரும் வாதம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்தது.இதில், குறித்த உடன்படிக்கைகள் இரண்டினதும் 1(1) சரத்தானது, 'சகல மக்களுக்கும்' உரியதென வழங்கும், சுயநிர்ணய உரிமை மிக முக்கியமானது.

இலங்கையின் அரசமைப்பில் வழங்கப்பட்டிராத, சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கையிலுள்ள உரிமைகளை, உள்நாட்டில் பெயர்க்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்ட 2007ஆம் ஆண்டின், 56ஆம் இலக்கச் சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கைச் சட்டம் இயற்றப்பட்டபோதும் கூட, சுயநிர்ணய உரிமை அதில் அங்கம் வகிக்கவில்லை.இதற்குக் காரணம், சுயநிர்ணய உரிமை என்பது, அதன் ஆரம்பகால கொலனித்துவ விலக்கக் காலகட்டப் பொருள்கோடலுடன் அணுகப்பட்டமையே ஆகும். குறித்த, சர்வதேசக் குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கைச் சட்டம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தில் உள்ள, கலந்தாய்வு நீதியாதிக்கத்தின் படி, உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி குறித்துரைத்த வினாக்களுக்கு, 2008 மார்ச் 17ஆம் திகதி தீர்மானமளித்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வானது, சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை வழங்கும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.'...சுயநிர்ணய உரிமையானது, மனித உரிமைகள் செயற்குழுவால் நிறுவப்பட்டுள்ளதன்படி, சட்டவாக்கத்தினூடாக நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. இந்த நிலைப்பாடானது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் 2625(XXV)இல் உள்ளடங்கியுள்ள சர்வதேசச் சட்டத்தின் கொள்கைப் பிரகடனத்தின் படி, மேலும் உறுதி செய்யப்படுகிறது...'

அரசமைப்பின் மூன்றாவது சரத்தின்படி, 'இலங்கைக் குடியரசில், இறைமை மக்களுக்கு உரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும்' என்பது, இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டியதாக இருக்கிறது.ஆகவே இறைமையானது, முழு மக்கள் மீதும் சாற்றப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு குழு, முழு மக்களில் ஒரு பகுதி, தனித்த சுயநிர்ணய உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று தர்க்கிக்க முடியாது.ஆகவே, 2008இல் இலங்கையின் உயர்நீதிமன்றமானது, ஏறத்தாழ 30 ஆண்டுகள் பழைமையான, 'நட்பான உறவுகள்' பிரகடனம் (Friendly Relations Declaration) என்றறியப்படும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின், 1970ஆம் ஆண்டின் 2625(XXV) இலக்கத் தீர்மானத்தின்படி, மக்களின் சுயநிர்ணய உரிமையானது, எந்தவகையிலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள சமவுரிமையையும் இன, சமய, நிறப் பாகுபாடுகள் எதுவுமின்றி, அனைத்து மக்களுக்குமான அரசாங்கத்தைக் கொண்டுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதாகப் பொருள்கொள்ளப்படாது என்ற சுருங்கிய, கொலனித்துவ விலக்க காலகட்டத்துக்குரிய பொருள்கோடலை அங்கிகரித்து ஏற்றிருந்தது.

இது சுயநிர்ணய உரிமை தொடர்பில், 1970 பிரகடனத்துக்குப் பிறகு, உலக அளவில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்திற்கொள்ளாது விட்டிருந்தமை, மிகவும் வருத்தத்துக்கு உரியதாகும்.இந்தப் பொருள்கோடலின் அர்த்தம் யாதெனில், இலங்கையில் பன்மையான மக்கள் இல்லை, 'இலங்கையர்' என்ற ஒரு மக்கள்தான் இருக்கிறார்கள், அந்த, 'இலங்கையர்' முழுமைக்கும் சுயநிர்ணய உரிமையுண்டு. ஆனால், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள், தனித்த 'மக்கள்' அல்ல; ஆகவே, அவர்கள் தனித்துச் சுயநிர்ணய உரிமையைக் கோர முடியாது என்பதாகும்.சுயநிர்ணய உரிமை தொடர்பில், சர்வதேச குடிசார், அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) என்பது, 'மக்கள்' (People) என்ற ஒருமைச் சொல்லை அல்லாது, 'மக்கள்' (Peoples) என்ற தொழில்நுட்ப ரீதியிலான பன்மைச் சொல்லையே பயன்படுத்தியிருந்தது.(தமிழில், 'மக்கள்' என்ற சொல், ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவானதாகவே கையாளப்படுகிறது) இந்த விடயம் கூட, குறித்த தீர்மானத்தில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஆகவே, தமிழ் மக்கள் 1950களிலிருந்து தொடர்ந்து கோரி வரும், தமது சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரம் என்பது, தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட, தமிழரசுக் கட்சியினருக்கு எதிராக, சந்திரசோம என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு, இலங்கையின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைகிறது.இந்த வழக்கில், தமிழரசுக் கட்சியானது இலங்கையின் ஆட்புல எல்லைக்குள், தனி அரசொன்றை ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்ட கட்சி என்று சாற்றுமாறு, அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தின் கீழான 157A(4) சரத்தின் கீழ், மனுதாரரான சந்திரசோம என்பவர் உயர்நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.தமிழரசுக் கட்சி இலங்கையின் ஆட்புல எல்லைக்குள், தனிஅரசை ஸ்தாபிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதா, இல்லையா என்ற தீர்ப்பின் ஆய்வில், சுயநிர்ணய உரிமை பற்றிய விடயமும் இடம்பெற்றிருந்தது. அன்றைய பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப் தலைமையில், மூன்று நீதியரசர்களின் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப்பால் வழங்கப்பட்டிருந்தது.

தன்னுடைய தீர்ப்பில், மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் மேம்படுத்தப்பட்டதோர் அபிப்பிராயத்தை வௌிப்படுத்தியிருந்தார்.'க்யுபெக்' பிரிவினை தொடர்பிலான, கனடிய உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "மக்களானவர்கள், ஏலவே உள்ள அரசுக் கட்டமைப்புக்குள் தமக்கான சுயநிர்ணயத்தை பெற்றுக்கொள்ளவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது" என்பதையும் "தனது ஆட்புல எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும் சமத்துவம், எதுவித பாகுபாடுகளுமின்றிப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தைக் கொண்டதும், தன்னுடைய உள்ளக ஏற்பாடுகளில் சுயநிர்ணயக் கோட்பாட்டைக் கொண்டமைந்ததுமான ஓர் அரசானது, சர்வதேசச் சட்டத்தின் கீழ், தன்னுடைய ஆட்புல ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து பேண உரித்துடையது என்பதுடன், அந்த ஆட்புல உரிமைப்பாட்டை, ஏனைய அரசுகள் அங்கிகரிக்க வேண்டிய உரித்தையும் உடையது" என்பவற்றை மேற்கோள் காட்டிய அவர், சர்வதேச நீதிமன்றத்தின் கொசோவோ தொடர்பிலான தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த உள்ளக, வௌியகச் சுயநிர்ணயங்கள் இடையேயான வேறுபாடுகளையும் அத்தீர்ப்பில் நீதிபதி ட்ரின்டேட் வழங்கியிருந்து, தனித்த அபிப்பிராயத்தில், சுயநிர்ணய உரிமை என்பது, கொலனித்துவ நீக்க காலத்துக்கு மட்டுமானது அல்ல என்ற விடயத்தையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

இவற்றை மேற்கோள் காட்டிய, பிரதம நீதியரசர் டெப், சுயநிர்ணய உரிமைக்கு உள்ளகப் பரிமாணம் ஒன்று உண்டு என்றும், அது ஒரு நாட்டுக்குள், அந்நாட்டிலுள்ள மக்களால் கையாளப்படமுடியும் என்றும், அவ்வாறு சுயநிர்ணய உரிமையானது, ஏலவேயுள்ளதோர் அரசின் ஆட்புல எல்லைக்குள் பயன்படுத்தப்படும் போது, அத்தகைய சுயநிர்ணயக் கோரிக்கையானது தனி அரசொன்றை ஸ்தாபிக்கும், பிரிவினைக் கோரிக்கையை விளைவிக்காது என்று உரைத்திருந்தார்.2018இல் வந்த இந்தத் தீர்ப்பு, மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு தீர்ப்பாகும். இதன் மூலம், இலங்கையின் உயர் நீதிமன்றமானது, முதன்முறையாக, உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், உள்ளகச் சுயநிர்ணயமானது, அரசொன்றின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் முரணானது அல்ல என்பதையும் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

( தொடரும்) yarl.com  mar5 2019