தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 186)

11 01 2020

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 186)

வரலாற்று முரண்கள்

வடக்கு, கிழக்குத் தமிழர்களின், 'தாயகம்' என்ற கோரிக்கையை, வரலாற்று ரீதியாக மறுப்பவர்கள், அந்தப் பிரதேசம், வரலாற்று ரீதியாகத் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல என்பதை, வரலாற்றுச் சான்றுகள் சிலவற்றை முன்னிறுத்தி, நிறுவ எத்தனிப்பதை அவதானிக்கலாம்.வன்னிப் பகுதியானது, இராஜரட்ட இராசதானிக்கு உட்பட்டதாக இருந்தது; மட்டக்களப்பானது, ஆரம்ப காலத்தில் ருகுணு இராச்சியத்துக்கு உட்பட்டதாகவும் பின்னர், கண்டி இராச்சியத்துக்கு உரியதாகவும் இருந்தது என்று நிறுவுவதன் ஊடாக, தமிழர் தாயகக் கோரிக்கையை, நிராகரிக்கும் தமது வாதத்தை, அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

மறுபுறத்தில், அநகாரிக தர்மபாலவுடன் தோன்றிய, 'புரட்டஸ்தாந்து பௌத்தம்', இன்று 'சிங்கள பௌத்தம்' எனப் பேரினவாதமாகவும் பெருந்தேசியவாதமாகவும் கூர்ப்பும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில், தமிழர்களின் தாயகக் கோரிக்கையை, வரலாற்று ஆதாரங்கள் ஊடாகத் தகர்க்க முனையும் முயற்சியின் இன்னோர் அத்தியாயமாக, பௌத்த வரலாற்றுச் சின்னங்களும் சிதைவுகளும் பயன்படுத்தப்படுகின்றன.வடக்கு, கிழக்கில் காணப்படும் மிகப்பழைய பௌத்த ஸ்தலங்கள், சிதைவுகள், சின்னங்கள் என்பவை, 'அது, சிங்களவர்களின் பூமியாக இருந்தது; வந்தேறு குடிகளான தமிழர்கள், அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தார்கள். ஆகவே அவை, தமிழர்களின் பிரதேசங்கள் அல்ல; மாறாக அவை, தமிழர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, சிங்களவர்களின் பிரதேசம்' என்றவாறான, அடிப்படை ஆதாரங்கள் அற்ற, மேம்போக்கானதும் வெறுப்பும் துவேசமும் நிறைந்ததுமான வாதத்தை, சில பேரினவாதிகள் முன்வைப்பதை நாம் அவதானிக்கலாம்.இந்த இடத்தில்தான், நாம் 'சிங்களவர்கள், 'சிங்களப் பௌத்தர்கள்' என்ற அடையாளச் சிக்கலை, மீண்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.

பௌத்த சின்னங்கள் இருப்பதால் மட்டும், ஒரு பிரதேசம் சிங்களவர்களுக்கு உரியது என்று வாதிடுவதானது, 'வரலாற்றுக் காலத்திலிருந்தே, சிங்களவர்கள் அனைவரும் பௌத்தர்கள்; பௌத்தர்கள் அனைவரும் சிங்களவர்கள்' என்ற அடிப்படையற்ற எடுகோளின்படியான வாதமாகும். இந்த எடுகோள், வரலாற்று ரீதியிலும் மானுடவியல் ரீதியிலும் தவறானது என கே.எம்.டீ. சில்வா, எச்.எல். செனவிரத்ன, ஸ்ரான்லி ஜே. தம்பையா, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்ப்றிச் போன்ற ஆய்வாளர்கள், மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.'சிங்கள பௌத்தர்கள்' என்ற கணநாத் ஒபேசேகர மற்றும் றிச்சட் கொம்ப்றிச் சுட்டிக்காட்டும், 'புரட்டஸ்தாந்து பௌத்தம்' என்ற அடையாளமானது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அநகாரிக தர்மபாலவின் பௌத்த மறுமலர்ச்சிச் செயற்பாடுகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அடையாளமாகும்.

ஆகவே, இன்றுள்ளதைப் போல, 'சிங்களவர்கள் அனைவரும் பௌத்தர்கள்; பௌத்தர்கள் அனைவரும் சிங்களவர்கள்' என்ற சிங்கள பௌத்தம் இணைந்த அடையாளம், வரலாற்றுக் காலத்தில் இருக்கவில்லை.அப்படியானால், வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த வரலாற்று அடையாளங்கள், என்ன சொல்கின்றன என்ற கேள்விக்கான பதில், நேர்மையானதும் சுதந்திரமானதுமான வரலாற்று ஆய்விலேயே தங்கியிருக்கிறது. ஆனால், அது தொடர்பில், தர்க்க ரீதியாக ஏற்புடைய, சில ஊகங்களை நாம் நோக்கலாம்.

தமிழும் பௌத்தமும்

வட பாரதக் கண்டத்தில் தோன்றிப் பரவிய பௌத்தமானது, தென் இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு எப்போது வந்தது என்ற கேள்விக்கு, பொதுவாக கடைச்சங்க காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலமான 2ஆம், 3ஆம் நூற்றாண்டு காலத்தில் வந்திருக்கக்கூடும் என்று, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.இதற்கு, அக்காலப்பகுதியில் எழுதப்பட்ட நூல்களிலுள்ள, பௌத்த தத்துவ ஆதிக்கம், முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சங்கம் மருவிய காலப் பகுதிக்குரிய நூல்களில், பௌத்த ஆதிக்கம் சில இடங்களில் மேலோங்கி இருப்பதையும் அவதானிக்கலாம்.ஆயினும், அக்காலத்துக்கு முன்னதாகவே சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய பெருங்காப்பிய நூல்களும் தமிழர்களிடையே இருந்த பௌத்த செல்வாக்கை எடுத்துரைப்பதாக அமைந்தமையையும் இங்கு கோடிட்டுக் காட்டுதல் அவசியமாகும்.ஆனாலும், தமிழகத்தில் பௌத்தத்தின் பரவுகையை அறிவதற்கு, பௌத்தம் எப்போது தமிழகத்துக்கு வந்தது என்பதைக் குறித்தறிவதற்கு, இலக்கியச் சான்றுகள் மட்டும் போதுமானதல்ல; மாறாகப் புறச்சான்றுகளையும் கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும்.

அந்தவகையில், புறச்சான்றுகளை கருத்தில் கொண்டால், கி.மு 258இற்குரிய அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டொன்று இவ்வாறு கூறுகிறது: 'தர்ம விஜயம் எனும் வெற்றியே, மாட்சி மிக்க அரசரால் (அசோகச் சக்கரவர்த்தியால்) முதற்றரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி, இந்த இராச்சியத்திலும் இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனைத் தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்தத் தர்ம விஜயம் அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது' என்கிறது. அதாவது, தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தர்ம விஜயத்தை, அதாவது பௌத்த தருமத்தைப் போதித்து, அதைப் பரவச்செய்வதில், அசோகர் வெற்றி கண்டார் என்று இந்தச் சாசனம் உரைக்கிறது.

அசோகர் இலங்கையில் பௌத்தத்தைப் பரப்பியதை, இலங்கை வரலாறு தௌிவாகவே ஏற்றுக்கொள்கிறது. அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மஹிந்தரின் வருகையோடு (இவரை அசோகரின் தம்பி என்று சில இந்திய நூல்கள் குறிப்பிடுகின்றன), அவர் அன்றைய அநுராதபுர இராச்சிய மன்னன் தேவநம்பியதீசனுக்கு, பௌத்தத்தைப் போதித்து, அவனைப் பௌத்தனாக்கியதோடு, இலங்கையின் பௌத்த வரலாறு ஆரம்பிக்கிறது.விஜயனில் தொடங்கிய, சிங்கள வரலாற்றுடன், பௌத்தம் இந்தப் புள்ளியில்தான் இணைவு பெறுகிறது. இதற்கிடையேயான காலம், சமய நம்பிக்கைகள், வழக்காறுகள் பற்றி, இலங்கை வரலாறு கருத்திற்கொள்ளத் தவறுகிறது; அல்லது அக்கறைப்படவில்லை என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனால், இவை இங்கு அவசியமில்லை. அசோகர் காலத்தில், இலங்கை வரை பௌத்தம் வந்திருக்கிறது என்று சொன்னால், இடைநடுவில் தென்னிந்தியா கைவிடப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிது. அப்படியானால், இலங்கை நூல்கள் கூட, தென்னிந்தியாவில் பௌத்தம் பற்றி, தமிழ் பௌத்தம் பற்றி ஏன் குறிப்பிடுவதில்லை?இதற்குப் பழங்கால இந்தியா என்ற வரலாற்று நூலில், வின்ஸன்ட் ஸ்மித் கூறும் தர்க்கம் ஏற்புடையதாகத் தெரிகிறது. தென்னிந்திய மன்னர்களுக்கும் இலங்கை இராச்சியங்களின் மன்னர்களுக்கும் இடையில், வரலாற்று ரீதியாகச் சில உறவுகள் இருந்ததுபோல, நிறையப் பகைகளும் இருந்தன.

குறிப்பாகத் தென்னிந்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளால் ஏற்பட்ட அச்சமும் பகையும் இருந்தன. இந்தப் பகைகளின் காரணமாக, தென்னிந்தியாவைப் பற்றி குறிப்பிடுவதையே, இலங்கை நூல்கள் தவிர்த்து இருக்கலாம் என்று வின்ஸன்ட் ஸ்மித் ஊகிக்கிறார்.எது எவ்வாறாயினும், கடைச்சங்க காலத்தின் பின்னரும், சங்கம் மருவிய காலத்திலும் தென்னிந்தியாவின் தமிழகத்தில், பௌத்தம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. சாதி பேதமற்ற சமத்துவம், கல்விச்சாலைகள் அமைத்து அனைவருக்கும் அறக்கல்வி, அனைவருக்கும் மருத்துவ உதவி என்று பௌத்தத்தை வடஇந்தியாவிலிருந்து அனைத்துத் திசைகளுக்கும் கொண்டு சேர்த்த பௌத்த துறவிகளின் பணிகள் பௌத்தத்தின் செல்வாக்கை, அது சென்ற இடங்களில் எல்லாம் வேரூன்றச் செய்தன.

யோசித்துப் பார்த்தால், உலகின் முதல் 'மறுபிரவேச மதம்' (evangelical religion) பௌத்தம்தான். கல்வி, மருத்துவம், சமூக இணைப்பு ஆகியவற்றின் ஊடாக, அது உலகெங்கும் பரப்பப்பட்டது. கி.பி 2ஆம், 3ஆம் நூற்றாண்டு முதல், 4ஆம், 5ஆம் நூற்றாண்டு வரை, தென்னிந்தியாவில் பௌத்தத்தின் பொற்காலமாகும்.

அதன்பின்னர், ஜைன (சமண) மதம் பௌத்தத்தின் செல்வாக்கைக் குன்றச் செய்து, தலையெடுத்ததுடன், அதன் பின்னர் ஏறத்தாழ நான்கு, ஐந்து நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்று, ஜைன (சமண) மதத்தின் செல்வாக்கைக் குறைத்தன.ஆகவே 2ஆம் நூற்றாண்டுக்கும் 5ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் தென்னிந்தியாவில், தமிழகத்தில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது வரலாற்று ரீதியிலான உண்மை. அதாவது, தமிழ் பௌத்தம், காஞ்சிபுரத்திலும் அதை அண்டிய பல பிரதேசங்களிலும் தென்தமிழகத்திலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கின்றன.

ஆகவே, தமிழகத்துக்கு மிக அண்டிய பிரதேசங்களான, இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் இந்தத் 'தமிழ் பௌத்தம்' பரவி இருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். ஆகவே, அண்மையில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜவரோதயம் சம்பந்தன், "வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த எச்சங்கள், தமிழ் பௌத்தர்களுக்கு உரியன" என்ற தொனியின் தர்க்க வலு, இங்கு கோடிட்டுக்காட்டப்பட வேண்டியதாகிறது. இலங்கை வரலாற்றில், மீள மீள வலியுறுத்தப்பட வேண்டிய பொருளாகவும் இது அமைகிறது.ஆகவே, வடக்கு, கிழக்கில் பௌத்த எச்சங்களும் அடையாளங்களும் காணப்படுவதால், அது சிங்கள பௌத்தர்களின் மண் என்று வாதிடுவது, அபத்தமேயன்றி வேறில்லை.

தாராளவாதிகளின் மறுப்பு

'தமிழர் தாயகம்' தொடர்பில் பேரினவாதிகள், இனத்தேசியவாதிகள் கூறும் கருத்துகள் இவ்வாறு அமைகையில், மறுபுறத்தில் மேற்கத்தேய தாராளவாத கருத்தியலாளர்களுக்கும் தமிழர்களின் தாயகக் கோரிக்கை, ஏற்புடையதாக இல்லை.தத்துவ ரீதியாகத் தாராளவாதிகள், தமிழர்களின் தாயகக் கோரிக்கையை மறுக்கிறார்கள். தாராளவாதிகளுக்கு இனத்தேசியம் என்பது ஏற்புடையதொரு தத்துவமல்ல. அவர்கள், சிவில் தேசியத்தையே ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆகவே, எந்த இனம் சார்ந்த தேசியக் கோரிக்கையும் அதன் பாலான இனரீதியான சுயநிர்ணயம், தாயகக் கோரிக்கைகள் ஆகியவற்றை, இனத்தேசியத்தை நிராகரிக்கும் அதே அடிப்படைகளில், அவர்கள் நிராகரிக்கிறார்கள்.ஆனால், இலங்கையின் தாராளவாத ஜனநாயகத்தில் உள்ள, சிக்கல் யாதெனில், சிங்கள பௌத்த தேசியவாதமானது, ஜனநாயகக் கட்டமைப்பில் அதற்கிருக்கும் பெரும்பான்மை எண்ணிக்கைப் பலத்தின் காரணமாக, மிக இலகுவாகத் தாராளவாத ஜனநாயக முகமூடிக்குள் தன்னை மறைத்துக் கொண்டு, தன்னுடைய பேரினவாதத் தேசிய நலனைத் தாராளவாத ஜனநாயக முகமூடியின் பின்னால் நின்றே சாதித்துக் கொள்கிறது.

இதற்கு முக்கிய உதாரணமாகவும் தமிழ் மக்கள் 'தாயகம்' என்ற கோரிக்கையை, வலுவாக முன்வைக்கவும் காரணமாக அமைந்தது, திட்டமிட்ட குடியேற்றங்களாகும்.நிலத்தை அபிவிருத்தி செய்தல் என்ற பெயரில், சிறுபான்மை இனமொன்றின் இருப்பையும் அடையாளத்தையும் சவாலுக்கு உட்படுத்தியதொரு விடயம்தான் இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள். அதனால்தான், பண்டா-செல்வா காலத்திலும், தமிழ் மக்கள் இதைச் சுட்டிக்காட்டிக் கடுமையாக எதிர்த்தார்கள். இன்று ரணில்-சம்பந்தன் காலத்திலும், தமிழ் மக்கள் இன்னும் வலுவாக இதை எதிர்த்து வருகிறார்கள்.தமிழர்களின் 'தாயகம்' என்ற கோரிக்கை, வெறும் இனத்தேசிய பகட்டாரவாரம் அல்ல; மாறாக, நடைமுறை ரீதியில் எழுந்துள்ள பெரும் சவாலுக்கு எதிரான மாற்று மருந்து.

( தொடரும்) yarl.com  mar 19 2019