அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம்

12 04 2015

அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம் 

"தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்ற தலைப்பில் 'சுதந்திரனி' ல் எழுதிய (29.09.48) அரசியல் கட்டுரைமூலம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கவனத்தை ஈர்த்து அரசியலில் தளம் பதித்த திரு அ.அமிர்தலிங்கத்தின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு, ஈழத்தமிழர் அரசியல் வாழ்விலே பின்னிப் பினைந்தது. தமிழ்ப் பிரதேசங்களின் மூலைமுடுக்கெல்லாம் அவர் பயணித்திருக்கிறார். பொதுமேடைகளே அரசியல் போதனையின் களமாக அமைந்த நிலையினால் அமிர்தலிங்கத்தின் பொருள் பொதிந்த பேச்சுக்கள் அவரை தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக நிலைநிறுத்தின.

ஈழத்தமிழ்ர் பிரச்சனை இந்தியாவின் அனுசரணையுடன்தான் தீர்க்கப்படமுடியும் என்பது அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் சிந்தனையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்களை ஆணித்தரமாகவும், அவர்கள் அதனைப் புரணமாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடனும் எடுத்துரைத்திருக்கிறார். ஈழத்தமிழ்ர் பிரச்சனையை சர்வதேச சமுகத்தின் முன்வைக்கும் பொறுப்பினை அவர் வெற்றிகரமாக சாதித்திருக்கிறார். பத்திரிகையாளர்களுடன் அவர் என்றும் அணுகுவதற்கு எளியவராக - இனியவராக இருந்திருக்கிறார். கடந்த

20 ஆண்டுகால யுத்தம் தமிழ்ப்பகுதிகளில் மேற்கொண்ட நாசகார அழிப்பு நடவடிக்கைகளில் தமிழரசுக் கட்சி சார்ந்த அரிய ஆவணங்களும் அழிந்துபோயின. ஒவ்வொரு முறையும் இலங்கை இராணுவம் முன்னோக்கி நகரும்பொழூது தம் கைவசமிருந்த அரசியல்புகைப்படங்களை நிலத்தில் புதைத்துப் பாதுகாக்க முயன்றும் அவை அழிந்துவிட்டன. 1986இல் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் இல்லம் ஆயுததாரிகளால் சூறையாடப்பட்டு அங்கு அவர் சேர்த்துவைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. "முடிவற்ற ஏமாற்றுகளின் வலைப்பின்னலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அதிகாரத்தின் கட்டளைகளாலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சமூகத்தில், உண்மைகள்தான் மிக எளிதாக நழூவிப் போய்விடுகின்றன" என்று அறிஞர் நோம் சொம்ஸ்கி அறிவுறுத்துகிறார். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட தமிழர்களின் சாத்வீகப் போராட்ட வரலாற்றினை முதல் தடவையாக அபூர்வமான புகைப்படங்கள், மற்றவர்களின் கருத்துரைகள், திரு. அ. அமிர்தலிங்கத்தின் வாழ்க்கைத் தரவுகள், கவிதைகள் மற்றும் அவரைப்பற்றி வந்த புத்தகங்களின் பார்வை என்று ஒரு நிகழ்கால தொகுப்பாக இந்த வெப் தளம் ஒரு அத்தியாவசியமான ஆவணமாக திகழம் என்று நம்புகின்றோம்.

amirthalingam.com