முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்ற ஒவ்வொரு விடயங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் போன்றது!

திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, valampurii.com

இந்த நாட்டின் உச்சநீதிமன்றில் நீதியரசராக இருந்த, வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்களின் உரையை இலங்கை அரசு எந்த வகையிலும் நிராகரிக்க முடியாது. எனவே, இப்போது அவர் நீதியரசர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பினும் அவர் கூறுகின்ற ஒவ்வொரு விடயங்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் போன்றது. இந்த நாட்டின் நீதியரசராக இருந்த ஒருவரை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆக்கியமை தமிழ் மக்களின் சமயோசித இராஜதந்திரத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இலங்கையின் உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவருக்கு இதுபோன்ற உயர்ந்த பதவியை கால நேரம் அறிந்து வழங்கிய பெருமை தமிழ் மக்களையே சாரும். அதேநேரம் இந்த நாட்டின் பொது நிர்வாகம், பாராளுமன்றம், நீதி பரிபாலனம் என அனைத்தினதும் அங்கீகாரம் பெற்ற ஒரு நீதியரசர் ஓய்வு நிலையில் இருந்தாலும் அவரின் உரைகளும் கருத்துக்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஒப்பானவை. எனவே, அதற்கு உரிய மதிப்பை, மரியாதையை வழங்க வேண்டிய தார்மீகக் கடமை

இலங்கைத் திருநாட்டின் அத்தனை பிரஜைகளுக்கும் உண்டு. அந்த வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு மாகாண அரசின் முதலாவது அமர்வில் ஆற்றிய உரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒத்ததாகும். ஆகவே இதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய பெறுமானத்தைக் கொடுக்க வேண்டும். அதேநேரம்; தான், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்பதற்கு அப்பால் இந்த நாட்டின் நீதிபரிபாலன உயர் பீடத்தின் நீதியரசர் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார் அதாவது கடந்த 25ம் திகதி வடக்கு மாகாண அரசின் முதலாவது அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதற்கு முன்னதாக அந்தக் கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கின் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியும் கலந்து கொண்டார்.

வடக்கின் முதல்வரும் ஆளுநருமாக இணைந்து வடக்கு மாகாண சபைக்குரிய கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின் போது வெல்கம்... வெல்கம்... என்றவாறு ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கு கைலாகு கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், ஒரு மணித்தியால இடைவெளியில் நடந்த தனது முதலாவது கன்னி உரையில் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியை மாற்றவேண்டும் எனக் கூறினார். இந்தத் துணிச்சலையும் வெளிப்படைத் தன்மையையும் சீ. வி. விக்னேஸ்வரனைத் தவிர்ந்த வேறு எவரிடமும் எதிர்பார்த்திருக்க முடியாது. திறப்பு விழாவின் போது கைலாகு கொடுத்து ஆளுநரை வரவேற்பது மானிடப் பண்பாட்டின் பாற்பட்டது. அதேநேரம் சரியானதை வெளிப்படுத்துவது நீதியரசரின் பண்புடைமை. ஆக, காலை வேளையிமானிடப் பண்போடு நடந்து கொண்ட வடக்கின் முதல்வர் தனது கன்னி உரையில் நீதியரசருக்குரிய அதே பண்புடைமையில் வடக்கின் ஆளுநரை மாற்ற வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். இதற்காக அவர் சில காரணங்களையும் முன் வைத்தார். நாம் இங்கு குறிப்பிடுவது முதல்வர் விக்னேஸ்வரனின் துணிவையும் வெளிப்படைத் தீர்ப்பையும் மனிதத் தன்மையையுமேயாகும்.