இலங்கையின் விருப்பம்: ஜனாதிபதி முறைமையா? பாராளுமன்ற முறைமையா?

12 05 2015

 இலங்கையின் விருப்பம்: ஜனாதிபதி முறைமையா? பாராளுமன்ற முறைமையா?  

இலங்கையில் முறையான அரசியலமைப்பு சீர்திருத்தம் இன்னும் இடம்பெறவில்லை என்பது யாவரும் அறிந்ததே. 19 ஆவது திருத்தத்துடன் மட்டுப்பட்டு தற்போதைய நிலைமையில் காணப்படுகிறது. உண்மையில் இலங்கை விரும்புவது ஜனாதிபதி முறைமையா ? அல்லது பாராளுமன்ற முறைமையா ? என்பதில் இதுவரையில் தெளிவில்லை. பிரதமர் வேட்பாளர் என்ற ஒரு அம்சம் அரசியலமைப்பிலோ அல்லது தேர்தல் சட்டத்திலோ கிடையாது. ஆனால், அதற்கான வெளிப்படையான போராட்டம் நடக்கிறது.

பாராளுமன்றத்தின் நம்பி க்கையை பெறுபவராக இருப்பவரை பிரதமராக நியமித்தல் என்பதையும் விட ஜனாதிபதியின் முழு நம்பிக்கையை பெறுபவராக இருக்கக் கூடியவரே பிரதமர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதற்குரிய தனிப்பட்ட ரீதியான உறுதிமொழிகள் கூட முன்பதாக பெற்றுக் கொள்ளப்படவும் இடமுண்டு. எது எவ்வாறாக உள்ள போதிலும் இரட்டை முகத்தைக் காட்டி நிற்கும் இலங்கையின் அரசியல் மற்றும் அரசாங்க முறைமையில் திட்டவட்டமாக ஏதாவது ஒருமுறைமைக்கு இலங்கை மாற வேண்டும்.

ஜனாதிபதியின் செயலுக்கு பிரதமர் கேள்விக்குள்ளாகாவிட்டாலும் பிரதமரின் அதிகார பிரயோகத்துக்கு ஜனாதிபதி கேள்விக்குட்படுத்தப்படுவதை அறிய முடிகிறது. அதிகாரங்கள் பகிரப்பட்டவையாக இருக்க முடியும். ஆனால், கேள்விக்குட்படுத்தப்படுபவையாக இருக்க முடியாது. அவ்வாறிருந்தால் சமநிலைச் செயற்பாடுகள் பெறுமானங் கொண்டவையாக இல்லாமல் போய்விடலாம். சீர்திருத்தம் என்பது ஏற்கனவே பழக்கப்பட்டுப் போய்விட்ட அம்சங்களையும் மறக்க வேண்டியதையும் உள்ளடக்கியதே. எந்த முறைமையாக இருந்தாலும் நன்மையும் இருக்கலாம். தீமையும் இருக்கலாம். எப்படியும் தக்கவைத்துக் கொள்வது ஒரு முறைமையாகவே இருக்க வேண்டும்.

பாராளுமன்ற முறைமை

ஒரு நாட்டின் ஜனநாயக ஆளுகை முறைக்கு சிறந்த எடுத்துக் காட்டு பாராளுமன்ற முறைமை எனப்படுகிறது. இதில் ஜனநாயகச் சட்ட பூர்வத் தன்மை, பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறல், இயல்பாகவே உதயமாகிவிடுகிறது. அந்த வகையில் நிறைவேற்றுத் துறை மற்றும் சட்டவாக்க கிளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. ஒரு பாராளுமன்ற முறைமையில் தேசத் தலைவர் வழக்கமாக அரசாங்கத் தலைவரிலிருந்து வேறான ஒருவராக இருப்பார் . ஜனநாயக கட்டமைப்பில் ஜனாதிபதி முறைமைக்கு இது வித்தியாசமானது. ஜனாதிபதி முறைமையில் தேசத்தின் தலைவரே அரச தலைவராக இருப்பார்.

மிக முக்கியமாக நிறைவேற்றுத் துறை சட்டவாக்கத்துறையிலிருந்து ஜனநாயக முறைப்படியான சட்டபூர்வப்பாட்டினை வருவிப்பதில்லை. சட்டமாக்கல் தத்துவத்தை பாராளுமன்றம் கொண்டிருக்கின்ற போதிலும் ஜனாதிபதி முறையில் பிரகடனத்துக்குப் பிறகு குறித்த பிரகடனம் தொடர்பான விளக்கங்களையும் விபரங்களையும் சட்டமாக்கும் கைங்கரியம் பாராளுமன்றத்துக்கு இருப்பதுண்டு.

பாராளுமன்ற முறைமைகளுடன் கூடிய நாடுகளில் முடிக்குரிய இளவரசர்கள், இளவரசிகள் சடங்கு ரீதியான தேசத் தலைவர்களாகத் திகழ்வர். அரச தலைவராக எப்பொழுது இருப்பது சட்டவாக்கத்துறை அங்கத்தவரே. இதனை ஐக்கிய இராச்சியம், சுவீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் காண முடிகிறது. அல்லது பாராளுமன்ற குடியரசுகள் எனும் போது அநேகமாக சடங்கு முறையான அல்லது பெயரளவான ஜனாதிபதிகள் தேசத் தலைவராக காணப்படுகின்ற அதேவேளை வழக்கமாக சட்ட வாக்கத்துறையிலிருந்து உறுப்பினர் ஒருவர் அரசுக்கு தலைமை வகிக்கிறார். இதனை அயர்லாந்து, ஜேர்மனி, பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி போன்ற நாடுகளில் காண முடிகிறது. பொட்சுவானா, தென்னாபிரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் அரச தலைவரே தேசத் தலைவராக காணப்படுகிறார். ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்டு சட்ட வாக்கத்துறைக்கு பதிலளிப்பவராக உள்ளார்.

பிரதமர் முறை தோற்றம்

பிரதமர் முறையிலான அரசாங்கம் என்ற நவீன எண்ணக்கரு 1707 1800 காலப் பகுதியில் பெரிய பிரித்தானிய இராச்சியத்திலிருந்து தோற்றம் கண்டது. 1721 1772 இல் சுவீடனில் பாராளுமன்ற முறைமை உருவகம் கண்டது. 1714 இல் இளவரசர் இலக்டர் ஜோர்ஜ் லுட்விக் இளவரசி ஏன் முடிக்குரிய வாரிசு எவருமின்றி இறந்துவிட்டதால் மைத்துனரான லட்விக் பெரிய பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் நிலையை அடைந்தார். அமைச்சரவைக்கு தலைமை தாங்கினார். அரச அமைச்சர்களை தேர்ந்தெடுத்தார். எவ்வாறாயினும் பூர்வாங்கத்தில் அவரால் ஆங்கிலம் கதைக்க முடியவில்லை. இந்த நிலைமை அதிகாரச் சமநிலையை முன்னணி அமைச்சர் ஒருவரை நோக்கி நகரச் செய்தது. இவரே முதல் அமைச்சர் போன்று அமைச்சரவைக்கு தலைமை தாங்கினார்.

அவரது ஆட்சிக் காலத்திலேயே அரசைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் எந்த அரசர் ஒரு அரசாங்கத்தை அமைக்குமாறு கோரலாம் போன்ற விடயங்கள் படிப்படியாக விருத்தியடைந்தன. அன்றைய அவரது ஆட்சிக் கால முடிவை நோக்கியதாக உண்மையான அதிகாரம் 1721 முதல் 1742 வரையான காலப் பகுதியில் பிரிட்டனின் முதல் பிரதம அமைச்சராக இருந்த சேர் றொபட் வல்போலினால் அனுபவிக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் 1832 ஆம் ஆண்டின் பெரும் சீர்திருத்தச் சட்டம், விரிவான பாராளுமன்ற ஆதிக்கம், வாக்குரிமை போன்றன எப்பொழுதும் முதன்மையானவர் யார் என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்கும் வகையிலான ஏற்பாட்டுடன் விரிவாக்கம் கண்டது.

அனுகூலங்கள் பிரதி கூலங்கள்

பாராளுமன்ற முறைமைகளில் பொதுவாக கூறப்படுகின்ற நன்மைகளில் ஒன்று சட்ட வாக்கங்களை நிறைவேற்றி எடுப்பது விரைவானதும் இலகுவானதுமாகும். ஏனெனில் நிறைவேற்றுத் துறை, சட்டவாக்கத்துறையின் நேரடியான அல்லது முறைமுகமான ஆதரவுடன் தாபிக்கப்படுகிறது. அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்குகிறது. அந்த வகையில் பெரும்பான்மைக் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டு சட்ட வாக்க மன்றத்தில் இருக்கும் நிறைவேற்றுத் துறை பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு விருப்பப்படி சட்டங்களை நிறைவேற்றலாம்.

ஜனாதிபதி முறைமையில் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மூலமாக சுயாதீனமாகத் தெரிவு செய்யப்படுகிறது. நிறைவேற்றுத்துறையும் சட்டமன்றப் பெரும்பான்மையும் இருவேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்ததாக இருந்தால் அவ்வேளை முட்டுக்கட்டை நிலை எழலாம். அத்தகைய நிலையில் நிறைவேற்றுத்துறை அதன் சட்டவாக்க மொழிவுகளை அமுலாக்க முடியாது போகலாம். பாராளுமன்ற அல்லது ஜனாதிபதி அல்லது பாதி ஜனாதிபதி முறைமை எதுவாக இருந்தாலும் ஒரு நிறைவேற்றுத்துறை பிரதானமாக அவரது/ அவளது கட்சியின் பிரசார மேடை, விஞ்ஞாபனம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்டு பதவியேற்கச் செய்யப்படுகிறது. சட்ட வாக்கத்துறைக்கும் இதே நிலைமையே. சட்டவாக்கத்துறையின் விரைவான நடவடிக்கைக்கு மேலதிகமாக இன ரீதியாக, மொழி ரீதியாக , சமய ரீதியாக பிரிவடைந்து காணப்படக் கூடிய தேசங்களுக்கு கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி முறைமையில் ஜனாதிபதி எனும் ஒரு நபரிடம் சகல நிறைவேற்று அதிகாரமும் காணப்படுகிறது. பாராளுமன்ற முறைமையில் ஒரு கல்லூரி முறை நிறைவேற்றுத்துறையுடன் அதிகாரம் மேலும் பிரிக்கப்படுகிறது. பாராளுமன்ற அரசாங்க முறைமையில் அதிகாரம் பரவச் செய்யப்படுகிறது. ஆளும் ஜனாதிபதி ஒருவரை விடவும் பிரதமர் முக்கியத்துவம் பெறுவது அரிதானது. கட்சிக்கும் அதன் அரசியல் கொள்கைகளுக்குமாக வாக்களிக்கும் நோக்கு உயர்வடைகிறது. தனிப்பட்ட நபர் ஒருவருக்காக வாக்களிக்கும் தன்மை முக்கியத்துவமற்றதாகிவிடுகிறது.

எந்த நேரத்திலும் தேர்தலுக்கான வாய்ப்பு காரசாரமான விவாதங்கள் தேர்தல் இல்லாமல் அதிகார மாற்றத்துக்கான சந்தர்ப்பம் போன்றவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படுவதன் காரணமாக பாராளுமன்ற அரசாங்க முறைமையை 1867 ஆம் ஆண்டின் ஆங்கில அரசியலமைப்பு என்ற தனது நூலில் வோல்டர் பெக்ஹொட் புகழ்ந்தார். ஐக்கிய அமெரிக்காவின் நான்கு வருடகால தேர்தல் விதிமுறையை இயற்கைக்கு முரணானது என்று கருதினார். ஏகாதிபத்திய சீர்குலைவுக்கு பாராளுமன்ற அரசாங்க முறைமை குறைந்தளவிலேயே ஆட்பட்டதாக ஜூவான் லின்ஸ் பிறட் றிக்ஸ், புரூஸ் அக்கர்மேன், றொபட்டல் போன்ற சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போரிலிருந்து மூன்றில் இரண்டு பகுதியான பாராளுமன்ற அரச முறைமையைத் தாபித்த மூன்றாம் உலக நாடுகள் வெற்றிகரமான முறையில் ஜனநாயகத்துக்கு திரும்பின. மாறாக ஜனாதிபதி முறையைப் பின்பற்றிய மூன்றாம் உ லக நாடுகள் எதுவும் வெற்றிகரமான முறையில் ஜனநாயகத்துக்கு நிலை மாறவில்லை. அரசியலமைப்பு சதிகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க நேரிட்டது. பாராளுமன்ற முறைமை குறைந்தளவான ஊழலுடனேயே காணப்படுவதாக சமீபத்திய உலகவங்கி ஆய்வு கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளக்கங்கள் விமர்சனங்கள்

பெக்ஹொட் என்ற அறிஞர் எந்தவேளையிலும் தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான தருணத்தை அனுமதிக்கின்றமைக்காக பாராளுமன்ற அரசாங்க முறைமையை புகழ்ந்த போதிலும் திட்டமான தேர்தல் அட்டவணை இல்லாதுள்ளமை துஷ்பிரயோகத்துக்கு இட்டுச் செல்லத்தக்கதாகும். முன்பதாக சில முறைமைகளின் கீழ் பிரிட்டனில் ஒரு ஆளும் கட்சி தன்னால் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமான காலகட்டத்தில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும். பிரபல்யம் குறைந்து காணப்படுகையில் தேர்தலை தவிர்த்துக் கொள்ளும். எவ்வாறாயினும் திட்டமான பாராளுமன்ற தவணைக் காலம் என்ற சட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சிய தேர்தல் காலம் பகுதியளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற முறைமையின் விமர்சகர்கள் கூறுவதாவது, சமூகத்தில் குறிப்பிடத்தக்க பிரபல்யத்துடன்கூடிய மக்கள் பாராளுமன்றத்துக்கு நேர்த்தெடுக்கப்படாவிட்டால் பிரதமராகுவதிலிருந்து எடுக்கப்படுகின்றனர். அந்த நிலையில் ஜனாதிபதி முறைமையின் கீழ் ஒருவரால் ஜனாதிபதி பதவிக்காக போட்டி போட முடியுமானாலும் பிரதமர் பதவிக்க õன முயற்சியை மேற்கொள்ளும் தருணம் கிடையாது. இதற்கு மேலதிகமாக தேசிய ரீதியாக புகழ்பெற்றவராக அப்போதைய காலத்திலும் தேர்தல் நடைபெற்ற காலத்திலும் இருந்து வரக் கூடிய பிரதமர்கள் தங்களது பாராளுமன்ற ஆசனங்களை இழக்கையில் பிரதமர் பதவிகளையும் இழந்து விடுகின்றனர்.

இதே நிலைமை தான் தற்போதைய இலங்கை நிலைமையிலும் காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய 100 % விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை காரணமாக பிரதமராக இருக்கக் கூடியவர் தமது தொகுதியை இழந்தாலும் மாவட்டத்துக்கான வாக்குகள் மூலமாக முன்னணி பெற்று தெரிவாகி விடுவதன் காரணமாக இருப்பை தக்கவைத்துக் கொள்கின்ற சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றமை உண்மையே.

கீழ் சபை மேல் சபை

பாராளுமன்ற முறைமையானது தெரிவு செய்யப்பட்ட கீழ் சபை மற்றும் கீழ் சபையின் வித்தியாசமான பொறிமுறையூடாக நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் அல்லது மேல் சபையுடன் இரு சபைகளைக் கொண்டிருக்கலாம். ஒரே ஒரு பாராளுமன்ற சபையைக் கொண்டதாகவும் இருக்கலாம். வெஸ்ட் மினிஸ்டர் முறைமை மற்றும் இணக்கப்பாட்டு முறைமை என ஜனநாயகம் தொடர்பான அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர். பொதுவாக வெஸ்ட் மினிஸ்டர் முறைமை பொது நலவாய தேசங்களிலேயே காணப்படுகிறது. சில பாராளுமன்றங்கள் இந்த முறைமையில் பன்மைத் தன்மை வாக்களிப்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐக்கிய இராச்சியம், கனடா, இந்தியா போன்ற நாடுகளில் தொகுதிகள் மூலமாக பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுகின்றது.

எந்தமுறைமை பயன்படுத்தப்படுகின்றது என்பதை பொருட்படுத்தாமல் வாக்களிப்பு முறை மூடப்பட்டபட்டியலைவிடவும் பெயர் குறிக்கப்பட்ட வேட்பாளருக்காக வாக்களிக்கும்படி வாக்காளருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. பாராளுமன்ற முறைமை அமுலாக்கங்கள் பிரதமர் மற்றும் அரசாங்கம் நியமிக்கப்படும் முறை, அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தின் வெளிப்படையான அனுமதி தேவையா போன்ற அம்சங்களில் தங்கியுள்ளன. சில நாடுகளில் பிரதமர் பதவி மரபு முறைமையை ஒத்திருந்தாலும் இந்தியா போன்ற வேறு சில நாடுகளில் பிரதமர் பதவி வகிப்பவர் சட்ட மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

கட்டுரையாளர் சட்டத்தரணியும் சுயாதீன தேசிய முன்னணியின் தலைவரும்,ஒலி, ஒளி பரப்பாளருமாவார்.  thinakkural.lk 11 05 2015