குடிதண்ணீரும் குடாநாடும்

29 05 2015

குடிதண்ணீரும் குடாநாடும்

குடிதண்ணீருக்காக மக்கள் ஒற்றைக் குடத்துடன் இடுப்புடைய பல நூறு கிலோ மீற்றர்கள் பயணிக்கின்ற காலத்தில் வீட்டின் எல்லையோரம் வட்டக்கிணறு, துலா உழண்டி என பங்குக் கிணறுகளுடன் பங்குபோட்டு அள்ளிப் பருகிய இனம் எம் இனம். கால ஓட்டத்தில் பங்குக்கிணறுகள் பாழ். கிணறுகள் ஆகிப்போக வீட்டுக்குள் கிணறு ஊற்றெடுக்க ஆரம்பித்தன. சொந்தமண், சொந்த நீர், எம் உயிர், எம் தண்ணீர் என அள்ளிப்பருகி தாகம் தீர்த்துக் கொண்டது முழுக் குடாநாடும். இத்தனைக்கும் பூமி மாதாவைக் குளிர்விக்க ஓடிய நிலத்தடி நீர் ஓடையே எமக்கெல்லாம் வரப் பிரசாதமாகிக்கிடந்தது. ஆனால் குடிதண்ணீரில் கழிவு கலந்ததாகக் கூறி இன்று ஏன் ஊரெங்கும் போர்க்கொடி, ஊடகமெங்கும் செய்தி. உலகெங்கும் ஆர்ப்பாட்டம். ஏன் இந்த அவலம்? 

"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே'' என்றான் ஆதித் தமிழன். ஆனால் இன்றோ பழ மொழிகள் பாழ்படும் அளவுக்கு கிணற்றுத்தண்ணீர் கறுப்பாகிப் பாழாகிக் போய்விட்டது. குடாநாட்டில் குடித்தொகைச் செறிவுக்கு முக்கியமான காரணமாக அமைவது நிலத்தடி நன்னீர் வளமே. அதுவும் இல்லாதுவிடின் எப்போதே குடாநாட்டின் வரலாறு முடிந்திருக்கும். நல்ல சுத்தமான குடிதண்ணீர் குடாநாட்டின் நிலத்தின் கீழ் உள்ள பாறையிடுக்குகளில் கிடைத்தமை பெரும் இயற்கைக் கொடையாகும். ஆனால் அதைக் கழிவு ஒயிலால் பாழ்படுத்தியது மனிதர்களின் செயலாகும். நன்னீர் என்பது உவர்த் தன்மையல்லாத தேவையான கனிமங்கள் நிறைந்த மாசுகளற்ற நீராகும். நன்னீர் பின்வரும் பயன்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மனிதர், விலங்குகளின் குடிதண்ணீர் தேவைகளுக்கு, விவசாய நடவடிக்கைகளுக்கு, அன்றாட செயற்பாடுகளுக்கு மேற்குறிப்பிட்ட முக்கிய செயன்முறைகளுக்கு நன்னீரே அவசியமாகும். உவர் நீர், சவர்நீர் என்பன பொருத்த மல்லாத நீர் வகைகளாகும். உவர் நீர் என்பது உப்புச் செறிவு அதிகமாக உள்ள நீராகும். (கடல் நீர்) இது குடிப்பதற்கோ விவசாயத்துக்கோ பொருத்தமில்லாத ஒன்றாகும். சவர்நீர் என்பது உவர்நீரும், நன்னீரும் கலந்த கலவையொன்றாகும். இந்த நீரும் அதிகளவு பொருத்தமற்ற நீராகும்.

நன்னீர் ஆனது ஆறுகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் என்பனவற்றின் ஊடாக பெறப்படும் உன்னத வளமாகும். இந்த நன்னீரானது மனித செயற்பாடுகள் மூலமாக மாசடைந்து உபயோகத்துக்கு உகந்ததல்லாததாக மாறிவருகிறது. பின்வரும் செயற் பாடுகளினால் நன்னீர் மாசாக்கம் ஏற்படுகின்றது. வீட்டுக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மலக் கழிவுகள், இரசாயனப் பொருள் கள், எண்ணெய் மற்றும் கழிவு ஒயில் என்பன நீருடன் சேருதல். இதுபோன்ற மனித நடவடிக்கை கள் குடிதண்ணீரைப் படிப்படியாக மாசடையச் செய்து முழுமையான உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றிவிடும். யாழ்.குடா மக்களின் கலாசாரத்தின் பிரகாரம் வீட்டுக்கு ஒரு மல சலகூடம் பேணப்படுகிறது. முன்னர் பொதுக் கிணறுகளே இருந்ததால் மலக்கழிவுகள் நீருடன் கலப்பது பெரிய பிரச்சினையாக இருக்க வில்லை. ஆனால் தற்போது தனிக் கிணறு, தனி மலசல கூடங்கள் இருப்பதனாலும் குடித்தொகை பரம்பல் அதிகரிப்பதனாலும், மலசல கூடத்துக்கும், கிணற்றுக்கும் இருக்க வேண்டிய தூரத்தை கருத்தில் எடுக்காது பலர் மலசல கூடங்களை அமைத்துவருகின்றனர். இதனால் மலக்கழிவுகள் நிலத் தினூடாகச் சென்று விரைவாக நிலத்தடி நீருடன் கலக்கின்றன. மலக்கழிவில் பிரதானமாகக் காணப்படும் சி-உலியிஷ் வகை பக்ரீரியாக்கள் மலத்தினால் மாச டைந்த நீரில் காணப்படுகின்றன. E-coli பக்ரீரியாவினால் மாசடைந்த நீரை மனிதன் பருகவே கூடாது. இதனால் பல மருத்துவப் பிரச்சி னைகள் ஏற்படலாம். ஆனால் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளிலு முள்ள கிணறுகளில் E-coli பக் ரீரியா நினைக்கமுடியாத அளவு செறிந்துள்ளதை நீரியல் சம்பந்தமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனாலும் குடாநாட்டு மனிதன் மறைமுகமாக மலம் கலந்த நீரையே பருகிக் கொண்டிருக்கிறான் என்பதில் வாசிக்கும் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கிணற்றுக்கும், மலசல கூடத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை சட்டத்தின் பிரகாரம் அமைத்தல் அல்லது மலக்குழி அற்ற மலசல கூடங்களை அமைத்து அந்த மலக் கழிவுகளை குழாய் வழியாகச் சேகரித்து, அகற்றி பொது மலக் குழியொன்றை அமைக்க அரசு திட்டமிடுதல் போன்றவற்றினூடாக கட்டுப்படுத்தலாம். மற்று மொரு நிலத்தடி நீர் மாசாக்கம் விவசாய நிலங்களில் பிரயோகிக்கப்படும் இரசாயன வளமாக்கிகளினால் ஏற்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் அளவுக்கதி கமான இரசாயன வளமாக்கிகள், பூச்சி பீடை கொல்லிகளை பிரயோ கிப்பதனால் வயல் நிலங்களில் தேங்கியுள்ள இரசாயனங்கள் புவியீர்ப்பு நீர் வழியே அசைந்து நிலத்தடி நீருடன் கலப்புறும். இதனால் நிலத்தடி நீர்மாசாக்க மடைந்து நஞ்சேற்றமடையும். நிலத்தடி நன்னீரில் இரசாயன வளமாக்கிகளிலுள்ள நைத்தி ரேற்று அயன் பொசுபேற்று அயன் செறிவு அதிகரிப் பதால் நன்னீர் மாசடைகின்றது. இந்த இரசாயன மாசாக்கமடைந்த நீரைப் பருகினால் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த மாசாக்கத்தை நீக்குவதற்கு பின்வரும் நடைமுறைகளை மேற் கொள்ளலாம். இரசாயன வள மாக்கிய பாவனையை இயன்ற ளவு குறைத்தல், சேதன பயிர்ச் செய் கையை Organic farming மேற்கொள்ளல், பரிந்துரைக்கப் பட்ட அளவுகளில் இரசாயன வள மாக்கிகளை பயன்படுத்தல், சிறந்த அணைக்கட்டுக்கள், கிணற் றுக்கட்டு களை ஏற்படுத்தல். மூன்றாவது முக்கிய பிரச்சினை குடாநாட்டு நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை. சுன்னாகம் அனல் மின் நிலையத்தினால் நிலத்துக்குள் தகுந்த சுத்திகரிப்பு இன்றி கொட்டப்பட்ட கழிவு ஒயில் வருடக் கணக்கில் கசிந்து நிலத்தடி நீருடன் கலந்த மையினால் ஓர் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த நிலைமை சுன்னாகம் பகுதியிலிருந்து அதை அண்டிய பகுதிக் கிணறுகளிலும் வேகமாகப் பரவி வருகின்றது. புத்திசாதுரியமற்ற தொலை நோக்கற்ற, சூழலியம் பற்றி நோக்காத நிறுவனம் ஒன்றினால் இந்த அவலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரை வாங்குவதற்கு வசதியில் லாதவர்கள், நல்ல கிணற்றை நோக்கி நாள்தோறும் அலைந்து திரிகிறார்கள். இது ஒரு பரிதாபமான நிலைதான். இதனைத் தடுக்க அரசே முன்வரவேண்டும். விரைவாக இந்த நீரை முழுமையான செம்மையான ஆராய்ச் சிக்குட்படுத்தி அதில் ஐதரோ காபன்களின் அளவு கனிமங்களின் அளவு, பார உலோகங்களின் அளவு என அனைத்தையும் கண்டு கொண்டு மனிதப் பேரவலத்துக்கு விரைவாக தீர்வெடுக்க விரைய வேண்டும். எனவே குடாநாட்டு நன்னீரிலுள்ள இந்த மூன்று பிரச்சினைகளும் தீர்ந்தால்தான் எம் தாயும் நாமும் பரம்பரையாக இங்கே வாழலாம். இல்லாது போனால் குடாநாடு விடுபட்டுபோன நாடாக மாறும் காலம் கண்ணெதிரே வந்து விடும்.காலம் வெகு தொலைவில் இல்லை.

onlineeuthayan.com