வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? 1
06 06 25
வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? - 1
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.சிந்தாந்தங்களைத் திணிப்பதிலும், அதன் இலக்குகளைச் செயல்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறார். ஒரு ஆளுநர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்துச் செய்து வருகிறார். அண்மையில் பி.ஜே.பி. தலைவர் நட்டா அவர்களும், ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் ஆளுநர் பேசுகையில், இந்தியாவின் பண்பாடு வேதங்கள், ஆகமங்களின் அடிப்படையில் அமைந்தது என்று பேசியுள்ளார்! முதலில் வேதங்களில் என்ன உள்ளன; ஆகமங்களில் கூறப்படுபவை எவை என்பது இவருக்குத் தெரியுமா? என்றால் உறுதியாகக் கூறலாம். இவருக்கு அவை பற்றி எதுவும் தெரியாது என்று. வேதங்களைப் படித்தவர் எவரும் வேதத்தை உயர்த்திப் பேச மாட்டார்கள். இதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவே சான்று.
‘‘வேதங்கள் உலகிலே உயர்ந்தவை என்று எல்லோரும் கூறுவதை நம்பி நானும் அவை உயர்ந்தவை, சிறந்தவை ஒப்பில்லாதவை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர், அவற்றுள் என்னதான் இருக்கிறது என்று அறிந்துகொள்ளப் படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் மலத்தை மிதித்ததைப் போன்ற உணர்வு பெற்றேன். அவ்வளவு கேவலங்களின் தொகுப்பு அவை’’ என்று எழுதியுள்ளார். அப்படியிருக்க வேதம் உயர்ந்தது என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை! இது கடவுளையே கேவலப்படுத்தும் கீழ்மைக் கருத்து அல்லவா?
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஆரியர்களுக்கு உருவ வழிபாடே கிடையாது; கோயிலும் சிலையும் இல்லையென்றால் ஆகமம் என்பதற்கே வேலையில்லை. ஆக, ஆகமங்கள் என்பவை ஆரியர்கள் கோயிலை வைத்துச் சுரண்ட, பிழைக்க உருவாக்கப்பட்டவை. எனவே, கேவலமான வேதம், ஆகமம் இவைதான் இந்தியப் பண்பாட்டிற்கு அடிப்படை என்பது எவ்வளவு கேவலமான மோசடிக் கருத்து!
வேதமும், ஆகமமும் ஆரியர்கள் உருவாக்கியவை. ஆரியர்களே இந்த மண்ணிற்கு, இந்த நாட்டிற்கு அயல் நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள். இந்த மண்ணின் மக்களை அடக்கவும், ஒடுக்கவும், ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும், அடிமைகளாக வேலை வாங்கவும், இழிவுபடுத்தவும் உருவாக்கப்பட இந்த இரண்டும் இந்த நாட்டின் பண்பாடு என்றால், இந்த மண்ணின் மக்களுக்கான பண்பாடுகள் இல்லையா? இது எவ்வளவு பெரிய பித்தலாட்டப் பிரச்சாரம்?
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு உரிமையான மண்ணின் மக்கள் தமிழர்கள் ஆரியர் வருகையால், இனக்கலப்பு, மொழிக் கலப்பு உருவாயிற்று. இங்கிருந்த மண்ணின் மக்கள் பேசிய தமிழ் சிதைந்தது. அடுத்து இஸ்லாமியர் வந்ததால் கலப்பு, தமிழ், சமஸ்கிருதம், உருது சேர்ந்து ஹிந்தி உருவாக்கப்பட்டது. தமிழர்க்கென்று இருந்த தனிப் பண்பாடுகளும் சிதைக்கப்பட்டன. இந்த வரலாறு ஏதும் அறியாமல் நினைத்தபடி பிதற்றுவது கண்டிக்கத்தக்கதல்லவா?
ஆரியர்கள், சூரியன், வாயு, வருணன் போன்ற இயற்கைச் சக்திகளைப் பார்த்து எங்களுக்கு நன்மை செய்யுங்கள். எதிரிகளை அழியுங்கள். மாறாக உங்களுக்கு நாங்கள் போதை தரும் கஞ்சா சாறு (சோம பானம்) தருகிறோம் என்று வேண்டுவதே வேதங்களில் உள்ள பாடல்கள். இதைத் தவிர வேறு எதுவும் வேதத்தில் இல்லை. இப்படிப்பட்ட கழிசடை குப்பையைக் கடவுள் தந்தது, உலகில் உயர்ந்தது என்று ஏற்றிப் போற்றுவது மோசடியின் உச்சம் அல்லவா?
கடவுள் தந்தவை வேதம் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி அதில் இருக்குமா? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, ரிக் வேதத்தில் முதலாம் மண்டலத்தில் 12ஆவது, 13ஆவது பாடல்கள் அக்னியைப் பார்த்து வேண்டுவன.
”வேள்விக்கு முதன்மையானவனே! எங்கள் பகைவர்களை அழி! எங்கள் வேள்வியைக் காண வாருங்கள். நாங்கள் தரும் கஞ்சா சாற்றைப் (சோம பானத்தைப்) பருகுங்கள்! எங்களுக்கு நன்மை செய்யுங்கள்!’’
வேதங்கள் முழுக்க இப்படிப்பட்ட மிகக் கேவலமான பிரார்த்தனைப் பாடல்கள்தான்
உள்ளன. இவைதான் உலகத்தில் உயர்ந்தவை யாம்; கடவுளால் படைக்கப்பட்டனவாம். எப்படிப்பட்ட மோசடி! சிந்தித்துப் பாருங்கள்.
அதேபோல் ஆகமம் என்பதும் பித்தலாட்டங்களின் தொகுப்பு. விளக்கமாகத் தெரிந்துகொள்ள நான் எழுதிய ‘‘காவிகளுக்கு கருப்பின் பதிலடி’’ என்ற நூலைப் படிக்கவும். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் கோயிலில் பூஜை செய்யவேண்டும். மற்றவர்கள் அதைச் செய்ய உரிமையில்லை; உயர்ஜாதியில் பிறந்தாலும் பெண்களுக்கு அந்த உரிமையில்லை என்கிறது ஆகமம். இது சரியா? நீதியா? இதைக் கடவுள் படைத்தது. வேதப்பண்பாடு என்பது ஆரியப் பண்பாடு ஆரியர்கள் இந்நாட்டில் வருவதற்கு முன் இங்கு இருந்தது. தமிழர்ப் பண்பாடு மட்டுமே. தமிழர் பண்பாட்டில் சமத்துவம், சமூகநீதி, பெண் உயர்வு, காதல் மணம், நன்றியின்பாற்பட்ட வழிபாடு, நகர நாகரிகம், கடல் வணிகம், பிறப்பால் சமம் பல நாட்டுத் தொடர்பு, உழவை மதித்தல் இப்படி பல. ஆனால் ஆரியப்பண்பாடு என்பது எது?
பெண்ணடிமை, சடங்குகள், மூடநம்பிக்கை, ஆதிக்கம், உயர்வு தாழ்வு, பெண்ணைப் பொருளாகக் கருதி தானம் செய்தல், பிறப்பால் ஏற்றத்தாழ்வு, பொருள்களை, உயிர்களைத்தீயில் அழித்தல், உழவை ஒதுக்கல், உரிமை மறுத்தல் இப்படிப்பல.
unmai.in 16 05 25 மஞ்சை வசந்தன்