குடாநாட்டு குற்றச்செயல்கள்; விழிப்புணர்வு அவசியத்தேவை

07 06 2015

 குடாநாட்டு குற்றச்செயல்கள்; விழிப்புணர்வு அவசியத்தேவை 

புங்குடுதீவு மாணவி வித்தியா வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவம் உட்பட கடந்த இரு வாரங்களில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சியும் வேதனையும் தரும் தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் இதற்கு சட்ட ஆட்சி சீர்குலைந்திருப்பதைத் தவிர முக்கியமான காரணம் வேறு எதுவாக அமைய முடியும் ? பாடசாலைக்கு வெளியேயுள்ள சிலரால் மட்டுமன்றி ஆசிரியர்கள் ஒரு சிலரால் கூட இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருப்பது அருவருப்பையும் விசனத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. யாழ். குடாநாட்டில் பாலியல் துஷ்பிரயோகங்கள், சுரண்டல்கள், சட்ட விரோதமாக மதுபானம், போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவது குறித்தும் அது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் யாழ். மாவட்ட அரச அதிபர் பொலிஸாரை வலியுறுத்தி அறிக்கையொன்றை அனுப்பியிருந்த ஒரு மாதத்திற்குப் பின்னரே புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு இந்தத் துர்ப்பாக்கியமான கதி ஏற்பட்டிருக்கிறது.

அது மாத்திரமன்றி 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் துஷ்பிரயோகத்திற் குள்ளாக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாவது நன்கு திட்டமிடப்பட்ட தந்திரோபாயமாக காணப்படுவதாகவும் அரச அதிபர் பொலிஸாருக்கு அனுப்பி வைத்திருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதையும் காண முடிகிறது. வடக்கில் சமூகக் கட்டமைப்பை குழப்புவதை நோக்கமாகக் கொண்டதாக தற்போதைய போக்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டி யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அரச அதிபர் அறிக்கையொன்றை அனுப்பி வைத்திருந்தார். அவரின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடலின் பெறுபேறாகவே இந்த அறிக்கை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன் மது, போதைப் பொருள் பாவனையால் வன்முறைகள், குற்றச் செயல்களில் பாடசாலை மாணவர்கள் ஈடுபடுவதற்கான தாக்கங்கள் பற்றியும் அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

அதேசமயம் இந்த மோசமான சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தும் நலிந்த நிலையிலுள்ள பாடசாலைகள், அமைவிடங்கள், கிராமங்களில் பெயர்களும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அறியவருகிறது. 4 பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளவையெனவும் கூறப்படுகிறது. யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகளாகின்ற நிலையில் சட்டவிரோத போதைப் பொருட்களின் கேந்திர நிலையமாக வட மாகாணம் உருவாகியிருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. கேரளக் கஞ்சா, போதைப் பொருள் கலந்த பாக்கு போன்றவை அதிகளவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவதுடன் மாதகல் போன்ற பகுதிகளூடாக போதை வஸ்துகள் வடக்கிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உணவு விற்பனை நிலையங்களில் போதைப் பொருள் வர்த்தகர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இந்தப் போதைப் பொருள் வர்த்தகம் இலகுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். குடா நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு, பாலியல் வன்முறைகள், குற்றச் செயல்கள் தொடர்பாக மாவட்டச் செயலாளரின் அறிக்கை கிடைத்திருப்பதை பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் இடங்களில் காண்காணிப்பை மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது குறித்தும் நிலைமையை விரைவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரது தொடர்பாகவும் பொலில் தரப்பு உறுதியளித்திருப்பதையும் காண முடிகிறது. மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் கேடுகள் குறித்தும் பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் அவசரமாகத் தேவைப்படுகிறது. சிவில் சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள் இந்த விடயத்தில் அதிகளவுக்கு செயற்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய கடப்பாடு உடைய பொலிஸாருக்கு சிவில் சமூகங்கள், மத ஸ்தாபனங்கள் அதிகளவு ஒத்துழைப்பை வழங்கி அவர்கள் துரிதமாக செயற்படுவதற்கான அழுத்தத்தை கொடுக்க முடியும். யாவற்றிலும் மேலாக பெற்றோர்களின் பொறுப்பும் விழிப்புணர்வுமே முக்கியமானதாக தேவைப்படுகிறது.

thinakkural.lk 01 06 2015