பரந்துபட்ட அறிவைத்தரும் கல்வி முறைமையே தேவை

09 06 2015

பரந்துபட்ட அறிவைத்தரும் கல்வி முறைமையே தேவை 

சுய அறிவை வளர்த்தெடுக்கும் நீண்டகால நடவடிக்கையாக "கல்வி' அமைந்திருக்கிறது. எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கும் அத்திபாரமாக அமைவது கல்வியறிவேயாகும். தனிப்பட்டவர்களையும் சமூகத்தையும் நேரிய வழியில் இட்டுச்செல்வதும் கல்வியே. பரந்துபட்ட அறிவை ஊட்டக்கூடிய கல்விமுறைமையே தரமான கல்வியாக அமையும். எமது நாட்டைப் பொறுத்தவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பரீட்சையில் அதிக புள்ளிகளைப்பெற்று சமூக மட்டத்தில் அதிகளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியே சிறப்பானதென்ற எண்ணப்பாடு பொதுவாகக் காணப்படுகிறது. இதனால் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றுவிட வேண்டுமென்ற போட்டித்தன்மை அதிகளவுக்கு ஏற்படுகின்றது. குறிப்பிட்ட தொழில் வாய்ப்பை அதாவது சமூகத்தில் அந்தஸ்து வாய்ந்ததாக பரவலாக கருதப்படுகின்ற தொழில்வாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய கல்வியையே பிள்ளைகளுக்கு வழங்கவேண்டுமென பெற்றோர் பலரும் விரும்புகின்றனர்.

அதனால் இதற்குரிய பாடவிதானங்களிலேயே பிள்ளைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுடன் சிருஷ்டித்திறன், கண்டுபிடிப்பு ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களும் மாணவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. வாழ்க்கைக்குத் தேவையான தொழில் திறன் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்காமல் சென்று விடுகிறது. பரீட்சையில் சித்தியடைந்து பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சிப் படுத்தும் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றபோதிலும் முழுமையான அறிவைப்பெற்றுக் கொள்ளுதல், நடைமுறை வாழ்வில் பிரயோகித்தல் போன்றவற்றை காணமுடியாமல் உள்ளது. தரமான கல்வியென்பது வெறுமனே பாடங்களை மட்டும் படித்து பரீட்சைக்கு தயார்படுத்துவதல்ல. அறிவு ரீதியாகவும் சூழலுடன் தொடர்புபட்டதாகவும் அமைந்திருப்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். உண்மையில் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை விருத்தி செய்வதற்கும், அவர்களின் ஆக்கத்திறன் மற்றும் ஆய்வுத்திறனை மேம்படுத்துவதற்கும் வழியமைத்துக் கொடுப்பதாக பாடவிதானங்கள் அமைந்திருக்க வேண்டும்.

வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தாத முறையில் பாடவிதானங்கள் வடிவமைக்கப்பட்டால் வெறுமனே இயந்திரத்தன்மையான மாணவர்களையே உருவாக்குவதாக அமைந்துவிடும். பாடவிதானங்களை தயாரிக்கும்போது அவை மாணவர்களை மையப்படுத்திய தரமான கல்வி முறைமையாக அமைய வேண்டுமெனவும் அதன்மூலமே தன்னைச் சூழவுள்ள விடயங்கள் பற்றியும் உலகில் இடம்பெற்றுக் கொண்டிருப்பவை தொடர்பாகவும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். அதேவேளை தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கு மரபுரீதியான முறைமையிலிருந்தும் சாதகமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. மரபுரீதியான முறைமை யதார்த்தமாக இல்லையென அடிக்கடி கல்விமான்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதை அவதானிக்கும் போது கலைத்துறை மாணவர்களே அதிகளவுக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதை அவதானிக்க முடியும்.

கணித, விஞ்ஞான பாடங்கள் கடினமானவையென்ற பாரம்பரியமாக கற்பனை செய்யும் எண்ணப்பாடுகளை அகற்றி விடுவதன் மூலமே பல்வேறு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அத்திபாரமாக அமையும். நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் யாவுமே கல்வித்துறையில் அவ்வப்போது குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்னெடுத்து வந்துள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்களின் பாடவிதானங்களில் மாற்றங்களைப் புகுத்தியும் பௌதிக வளங்களை வழங்கியும் கற்பித்தல் முறையில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தியும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோதிலும் மாணவர்களை மையப்படுத்தியதும் நடைமுறை வாழ்வுக்கு பொருத்தப்பாட்டைக் கொண்டதும் பாரபட்சமின்றி சமத்துவமான முறையில் அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடியதுமான முறைமையே தற்போது தேவைப்படுவதாக தோன்றுகிறது. அத்தகையதொரு முறைமையே மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டுவதற்கான தேர்ச்சியைப் பெற்றுக்கொடுக்கும். 

thinakkural.lk 04 06 2015