சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இதுவரை என்ன சாதித்தது?

20 06 2015

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இதுவரை என்ன சாதித்தது? 

இருபதாவது அரசியலமைப்புத் திருத்த ஆலோசனைக்கு எதிராகச் சிறுபான்மையினக் கட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதாக இத்திருத்தம் அமையும் என்பது பிரதான குற்றச் சாட்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இத்திருத்தம் ஒப்பீட்டளவில் பெரிய பாதிப்பாக இருக்கப் போவதில்லை. மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும் புதிய தேர்தல் முறையின் கீழ் கணிசமான பாதிப்புக்குள்ளாவார்கள் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் கூறுகின்றார்கள். நாடு முழுவதற்கும் இந்தத் தர்க்கம் பொருந்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தொடங்கி இன்றைய விகிதாசாரத் தேர்தல் முறை நடைமுறைக்கு வரும் வரையிலும்புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டார். -

தற்போதைய தேர்தல் முறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து புத்தளம் மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிமாவது தெரிவு செய்யப்படவில்லை. இதுவும் சிறுபான்மையினக் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். எவ்வாறாயினும் சிறுபான்மை இனங்கள் அனுபவிக்கும் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது அவர்களின் பிரதிநிதித்துவத்தை பறித்தெடுப்பதற்குச் சமன். இது ஜனநாயகமல்ல. இப்போது சிறுபான்மையினருக்குள்ள பிரதிநிதித்துவத்தில் குறைவு ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறையைக் கொண்டு வருவதுதான் உண்மையான ஜனநாயகம். புதிய தேர்தல் முறை சிறுபான்மையினரின் பேரம் பேசும் பலத்தை இல்லாதொழிக்கின்றது என்பது பிரதானமான வாதம். இதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் இந்தப் பேரம் பேசும் பலம் சிறுபான்மையினருக்கு எந்தளவுக்கு நன்மை புரிந்திருக்கின்றது என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இதில் வெளிப்படையாக நன்மை அடைந்தவர்கள் மலையகத் தமிழ் மக்கள். பிரதிநிதிகளின் பலத்தை கொண்டு மாத்திரமன்றி வாக்காளரின் பலத்தைக் கொண்டும் பேரம் பேசியதன் விளைவாக அம்மக்கள் தங்கள் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் இப்போது முழுமையாகப் பெற்றிருக்கின்றார்கள்

முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு நன்மை பெற்றார்கள் என்று சொல்ல முடியாது. ஏதாவது நன்மை பெற்றார்களா என்பது கேள்வியாகவே இருக்கின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அண்மைக் காலமாக நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்து வந்திருக்கின்றார்கள். கூட்டமைப்புத் தலைவர்களும் தமிழ் மக்கள் தங்களையே தெரிவு செய்கின்றார்கள் என்று பெருமையாகக் கூறுவதுண்டு. இவர்கள் கூறும் பேரம் பேசும் பலம் இவர்களுக்குத் தாராளமாக உண்டு. தமிழ் மக்களின் நன்மைக்காக இதுவரை யாரோடு பேரம் பேசி எதைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள்? சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றோம் என்று ஒருவேளை இவர்கள் கூறலாம். இது வெறும் சப்பைக்கட்டு. ஆறு வருடங்களாகச் சர்வதேச புராணம் பாடியும் உருப்படியாக எதுவும் இல்லை. அரசாங்கத்தோடு பேசுங்கள் என்பதுதான் சர்வதேச சமூகத்தின் அண்மைக்கால பங்களிப்பு. பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதற்காக போராடத்தான் வேண்டும். அது தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்துக்கு அடுத்தபடியாகவே முக்கியத்துவம் பெற வேண்டும்.

கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக பேரம் பேசாத போதிலும் அண்மையில் கூட சில கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் ஆட்சியாளர்களிடமிருந்து பெருந்தொகை பணம் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகிருந்தன. இதில் பல கேள்விகள் எழுகின்றன. அபிவிருத்திக்காகப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுக்கும் சட்ட ஏற்பாடு இருக்கின்றதா? அப்படியானால் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏன் கொடுக்கவில்லை? தனக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி கூறியிருப்பதால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் பணமா? சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைமையுடன் ஏன் முன்கூட்டியே பேசவில்லை? இது அரசாங்கத்தின் பணமென்றால் கணக்காய்வுச் செயற்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும்? ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால அணியிடமிருந்து பெருந்தொகைப் பணம் பெற்றதாக செய்திகள் வெளியாகின. கூட்டமைப்புத் தரப்பிலிருந்து அதற்கு மறுப்பு வரவில்லை. யார் யாருடனோ தமிழ் மக்களை விலை பேசுவதற்காகவே பிரதிநிதித்துவப் போராட்டமென்றால் அது தேவைதானா? அரசியலில் நேர்மையாக நடப்பதாகத் தெரிவதுதான் முக்கியமானது.

thinakkural.lk 17 06 2015