விழிப்புணர்வு கொண்ட சிவில் சமூகமே தேவை

27 06 2015

விழிப்புணர்வு கொண்ட சிவில் சமூகமே தேவை 

அரசியல், பொருளாதாரம், சுற்றாடல், சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளையே இப்போது பொதுமக்கள் அதிகளவுக்கு எதிர் நோக்குகின்றனர். இந்தச் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது கலாசார ரீதியான வேறுபாடுகளை வெற்றி கொள்வதற்கான தேவைப்பாடு காணப்படுவதாக கல்விமான்களும் புத்திஜீவிகளும் கூறுகின்றனர். எம்மிடமிருந்து கலாசார ரீதியில் வித்தியாசப்படும் மக்களுடன் ஒத்துழைத்து செயற்படும் வழிமுறைகளைக் கண்டு கொள்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பது அவர்களின் கருத்தாக காணப்படுகிறது. உண்மையில் இந்தப் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை எட்டுவதற்கு எம்மை நாம் பல் கலாசாரத்தை உள்வாங்கிக் கொள்பவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

இதற்கு சமகாலக் கல்வி முறைமையை பல்கலாசாரத் தன்மை கொண்டதாக மாற்றுவது அவசியமெனக் கூறப்படுகிறது. வெவ்வேறு இன, மதக் குழுக்களின் வரலாறுகள், கலாசாரங்கள் தொடர்பாக மாணவர்கள் கற்றுக் கொள்வதற்குரியதாக பாடவிதானங்களை வகுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை எட்ட முடியுமென நம்பிக்கை காணப்படுகிறது. விசேடமாக நாட்டில் வெவ்வேறான இனக் குழுக்கள் பேசும் மொழிகளை கற்றுக் கொள்ளுதல், வரலாறுகளை அறிந்து கொள்ளுதல், மதக் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளுதல் என்பனவற்றின் மூலம் பரஸ்பரம் கௌரவத்தை கொடுப்பதை மேம்படுத்த முடியும். அதேசமயம் பல் கலாசாரப் புரிந்துணர்வை வளர்த்தெடுப்பதற்கு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான ஆற்றலை கட்டியெழுப்ப வேண்டும்.

அத்தகைய உரையாடல்கள் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும் கௌரவத்துடன் கூடியதாகவும் சமத்துவ உணர்வைக் கொண்டதாகவும் மற்றொருவரின் ஆளுமை அனுபவத்தை உணர்ந்து கொள்வதாகவும் அமைய வேண்டும். அதேசமயம் ஒருவரின் தப்பபிப்பிராயங்கள் பற்றி அறிந்து கொண்டிருப்பதும் அவசியம். நல்லெண்ணமானது சாதகமானதாகவும் பாதகமானதாகவும் இருக்க முடியும். அதனுடன் நாம் முரண்படும் போதும் அதனை இல்லாமல் செய்வதற்கு நாங்கள் செயற்படும் போதும் மட்டுமே தப்பபிப்பிராயம் சாதகமானதாக உருவாகிறது. அத்துடன் அடக்கம், பணிவு, உணர்வுகளை கட்டியெழுப்புவது மிகவும் இன்றியமையாததாகும். கலாசாரமான நபரொருவர் வெளிப்படைத் தன்மை, நெகிழ்வுப் போக்கு, அடக்கம் என்பவற்றைக் கொண்டிருப்பார். இத்தகைய குணாம்சங்களை கொண்டிருப்பவர்களே புதியதும் மாற்றீடானதுமான சாத்தியப்பாடுகள் குறித்து பரிசீலிப்பதற்கு முன்வருவார்கள். அடுத்ததாக மிக முக்கியமானது சகிப்புணர்வாகும். அறியாத சிக்கலான விடயங்களை கையாள வேண்டிய சூழ்நிலைகளில் சகிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

யாவற்றுக்கும் மேலாக சமூக நீதி தொடர்பான உறுதிப்பாடும் ஈடுபாடும் முக்கியமானதாகும். உண்மையான கல்வியானது சமூக நீதி பற்றியதாக இருக்க வேண்டுமென்று ஜேர்மன் தத்துவஞானி ஹான்ஸ் ஜோரிக் காடமெர் கூறியிருக்கிறார். 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி தத்துவஞானிகளில் ஒருவரான காடமெர் பிறர் மீதான அனுபவத்துடனான புரிந்துணர்வு குறைவாக இருப்பதே பல பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமென்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். பல்கலாசாரத் தன்மை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சிவில் சமூகத்தின் பங்களிப்பே அதிகளவுக்கு தேவைப்படுவதாக தோன்றுகிறது. அரசியல் அதிகார சக்திகளை சார்ந்திருக்கும் நடைமுறையானது அரசியல் வாதிகள் பண, அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஊழல் ஒழுங்கீனங்களுக்கு துணை போவதற்கு அதிகளவுக்கு இடமளித்திருப்பதை காண முடிகிறது.

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறான செயற்பாடுகளை அரசியல்வாதிகள் பலர் முன்னெடுப்பதையும் அவதானிக்க முடிகிறது. பல்லின, பல்மத, பல்கலாசாரத் தன்மைகளுக்கு மதிப்பளிக்காமல் அரசியல் வாதிகள் செயற்படும் போது பொது மக்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் வெவ்வேறு இன, மத கலாசார குழுக்கள், சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பவும் காத்திரமான சிவில் சமூகமே தேவைப்படுகிறது. வாக்கு வங்கியில் தங்கியிருக்க வேண்டிய தேவையில்லாத சிவில் சமூகமே ஜனநாயகத்தில் நியாயபூர்வமான சக்தியாக விளங்குகிறது. அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் வெறுமனே அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவதில்லையென்பதையும் நாடொன்றின் உயிர் நாடியாக விளங்கும் சிவில் சமூகமே விழித்தெழுந்து மாற்றத்திற்கான வலியுறுத்தலை உறுதிப்பாட்டுடன் இலக்கை எட்டும் வரை விடுத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.

யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன நெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வொன்று எட்டப்படாமலிருக்கும் நிலையில் பல் கலாசாரத் தன்மை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் செயற்பாட்டுத் திறன் கொண்ட சிவில் சமூகத்தின் விழிப்புணர்வே அவசியத் தேவைப்பாடாகத் தோன்றுகிறது.

thinakkural.lk 16 06 2015