தமிழர் மத்தியிலே கட்டுக்கோப்பான அரசியல் அரங்கு அமையவேண்டும்

15 07 2015

 தமிழர் மத்தியிலே கட்டுக்கோப்பான அரசியல் அரங்கு அமையவேண்டும்

இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம்.

இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அரசியல் நிகழ்வுகளை, வரலாற்றை உற்றுநோக்கினால் அரசியல்வாதிகள் என்பதற்கு ஒத்த பதமாக நம்பத்தகாதவர்கள் என்பது பொருத்தமாக உள்ளது. இதை மறுப்பதற்கில்லை. அனுபவங்கள் அதையே சொல்கின்றன. நல்லாட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. அதை மீட்க என்னை, எம்மை நம்புங்கள் என்றவர்கள் உண்மையில் அப்படிச் சொன்னார்களா? அன்றி மக்களை ஏமாற்றித் திசை திருப்ப முயன்றார்களா என்பதற்குக் காலம்தான் பதில் கூறவேண்டும்.எது எவ்வாறிருந்தபோதிலும் இந்நாட்டின் பேரின அரசியலரங்காடிகள் சிங்கள மக்களை ஏமாற்றும் வித்தையைத் தெரிந்து வைத்துள்ளார்கள். இது கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இந்நாட்டின் எதிரிகள், வேண்டத்தகாதவர்கள், சிங்கள இனத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிடத் துடிக்கும் இராட்சதர்கள் என்றொரு பீதியைச் சிங்கள மக்களுக்கு உரத்துக் கூறி, அவர்களைப் பயமுறுத்தி, கிலிகொள்ளச் செய்யும் கேடுகெட்ட அலங்கோல, அபாயகரமான அரசியல்வாதிகளின் ஆளுகைக்குட்பட்ட இந்நாடு, இன்று உலக அரங்கில் விசாரணைக்குரியதாக ஆக்கப்பட்டு அதிலிருந்து தப்பிக்க வழிதேடி நிற்கின்றது. தமிழ் மக்களுக்கெதிராகப் பெரும்பான்மை மக்களை ஏவிவிட்டால் வாக்குகளை வாரிச்சுருட்டலாம் என்ற களிப்பில் நாடு எக்கேடு கெட்டாலென்ன தமக்குப் பதவி கிட்டினால் போதுமென்ற நிலையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகளின் தொடர் செயற்பாட்டின் விளைவுகளை அனுபவிக்கப் போவது இந்த நாடே. இது இவ்வாறிருக்க தமிழர் தரப்பிலும் அரசியலரங்கில் ஆடும் கலையில் கைதேர்ந்தவர்கள் பலர் உள்ளனர். தமிழ் மக்கள் இந்நாட்டில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் எவை என்பதைக் கிஞ்சித்தும் அறியாத, உணர முடியாத தமிழ் அரசியலரங்காடிகள் தமிழர்களின் வாக்குகளைச் சுருட்ட அல்லது பிளவுபடுத்த மாற்றினத்தவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அதன்மூலம் கையூட்டுப்பெற முன்வருவதும் இத்தேர்தல் காலங்களிலேயே.

திரைப்படங்களில் வரும் கேடுகெட்ட, கொடுமையான குணங்கொண்ட வில்லர்கள் போன்றவர்கள் பலர் அரசியல் அரங்காடிகளாக நம் மத்தியிலே செயற்படுவது நாம் செய்த பாவம். கதாநாயகனை விட வில்லன்களின் கில்லாடித்தனத்தை இரசிப்பவர்களும் நம்மத்தியிலே உள்ளனர். அரசியல் என்பது நாடகமோ, திரைப்படமோ அல்ல. தெருக்கூத்தும் அல்ல. நாட்டின் அரசியல் பீடத்தில் நமது கருத்தை, தேவையை வலியுறுத்தி நிறைவேற்ற தகைமை பெற்றவர்களுக்கான அரங்கு. அங்கும் இங்கும் சுய தேவைக்காகப் பாயும் குரங்கு மனங்கொண்டவர்களால் அரசியல் அசிங்கப்படுகின்றது, அசிங்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் வாக்காளப் பெருமக்கள் அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் கடந்துவந்த பாதையில் விட்ட தவறுகளை ஆய்வுசெய்து விட்ட தவறுகள் அரசியலரங்கில் மேலும் தொடராதிருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற பேரினவாத அரசியல்வாதிகள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழர் நிலையோ அதுவல்ல. இந்நாட்டின் தமிழ் மக்களுக்கு அளவிட முடியாத அடிப்படைப் பிரச்சினைகளுள்ளன. மொழி, கல்வி, தொழில், வாழ்விடம், பாதுகாப்பு என்று எண்ணிலடங்காப் பிரச்சினைகளுள்ளன. சொந்த நாட்டில், இந்நாட்டில் நிம்மதியாக வாழமுடியுமா என்று அங்கலாய்க்கும் அவல நிலையை மறுப்பதற்கில்லை. போதிய ஆதாரமின்றி எவரையும் தடுத்துவைக்கக்கூடாது என்ற நியதி புறந்தள்ளப்பட்டு பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டவர்களின் எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலையில் அந்தரிப்போர் விடயம் மறுக்க முடியாதது. சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்து, இடம்பெயர்க்கப்பட்டு அகதி வாழ்வு வாழ்வோரின் எதிர்காலம் என்ன? தமிழ்மொழியை தமிழர்கள் தமது அன்றாடக் கடமைகளிலும் அரசாங்கத்துடனான தொடர்புகளிலும் திருப்தியாகப் பயன்படுத்தப்பட வழியென்ன? இந்நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள தமிழர்கள் சமத்துவக் கல்வியை, தொழிலை, ஏனைய வசதிகளைப் பெற வழியென்ன? இவை போன்றவையே எம்முன் உள்ள வினாக்கள். விடைதேடப்பட வேண்டியவை. இதற்கு ஒரே வழி நம்மத்தியிலே அரசியல் ரீதியான கொள்கைப் பிடிப்புள்ள உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதாகும். இலங்கைவாழ் தமிழர்களை இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று பிளவுபடுத்தி சிந்திக்கும் தரங்கெட்ட அரசியலரங்காடிகளைத் தமிழர்கள் முதலில் ஓரங்கட்டவேண்டும்.

ஒதுக்கிவிட வேண்டும். அடையாளம் காண அவர்களது கடந்தகால வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டும். சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். இன்று புதிதாக, உரக்க தமிழ் மக்கள் நலன் மற்றும் உறவுகள், உணர்வுகள் பற்றிப் பேசுபவர்கள் கடந்த காலங்களில் எங்கிருந்தார்கள் யாருடன் ஒட்டி உறவாடினார்கள்? எங்கெங்கு பாய்ந்தார்கள் என்பதை ஆராயும் உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அன்று 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் தமிழ் மக்களது உரிமைகள் உள்வாங்கப்படாமையால் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த குரலை ஒலிக்கச் செய்யவே உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பான தமிழர் கூட்டணி. அதில் அங்கம் வகித்த சிலரின் போக்கு பிடிக்காமல் முதலில் தமிழ் சுயாட்சிக் கழகம் ஒதுங்கிக்கொண்டது. தமிழர் கூட்டணி என்று பெயரிடப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்பை அதில் அங்கம் வகித்த கட்சிகளின் அங்கீகாரமின்றியே சிலர் விடுதலை என்ற பெயரைப் புகுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியென்று பெயர் மாற்றம் செய்ததால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அதிலிருந்து வெளியேற்றிக்கொண்டார் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். 1965 இல் லங்கா சமசமாஜக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து 1970 பொதுத்தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கிளிநொச்சி தொகுதியில் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி வேட்பாளர் மு.ஆலாலசுந்தரத்தை தோற்கடித்து பாராளுமன்றம் சென்றவரும் தமிழ்க் காங்கிரஸின் ஏனைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களான நல்லூர் சி.அருளம்பலம் மற்றும் வட்டுக்கோட்டை ஆ.தியாகராஜா ஆகியோருடன் அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தவரும் தமிழர் கூட்டணி ஆரம்பித்தபோது அதில் மு.சிவசிதம்பரத்தின் வேண்டுகோளின் பேரில் பின்னாளில் இணைந்துகொண்டவருமான வீ.ஆனந்தசங்கரி ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தமிழர் கூட்டணியிலிருந்து உருமாறிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்றைய தலைவராகவுள்ளார்.

அதேபோல் அன்று தமிழர் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த எவரும் இன்றயை தமிழர் விடுதலைக் கூட்டணியிலோ தமிழர் கூட்டமைப்பிலோ இல்லையென்பதும் உண்மை. குறித்த தமிழர் கூட்டணி உருவாக்கப் பாடுபட்ட மொழிவழித் தொழிற்சங்கமான அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்து ஒற்றுமைக்குப் பாடுபட்டவன் என்ற முறையிலும் அதேபோல் மலையகத் தொழிற்சங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை அக்கூட்டமைப்பில் இணைத்தவன் என்ற முறையிலும் இன்று பரப்பப்படும் தவறான செய்திகளைச் சீர்செய்யவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. முதலாவது கூட்டம் 1972 ஜனவரி 19 ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியவர்களில் இன்று எம்முடன் இருப்பவர் அன்றைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி மட்டுமே. இன்று கூட்டணி உருவாக தாமும் கை கொடுத்தோம். கையொப்பமிட்டோம் என்று பலர் பகர்கின்றனர். அரசியல் என்பது பொய்யர்களின் கூடாரம் என்பது உண்மை. அதற்காக மக்கள் கடந்தகால உண்மை வரலாற்றை மறந்துவிட்டார்கள் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பொய் கூறுவது நாகரிகமல்ல.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமக்கு வெற்றி வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தபோதிலும் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி, சிதைத்து பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்களைக் குறைத்து அவ்விடங்களுக்கு மாற்றினப் பிரதிநிதித்துவங்களுக்கு இடமளிப்பதற்காக தேர்தல் களமிறங்கும் அன்பர்கள் அற்பர்களாகவே இனங்காணப்படுவர். வரலாறும் அவ்வாறே தெளிவாகப் பதிவுசெய்யும. தாய்மண்ணை, தாய்மொழியைக் காக்கக் குரல் கொடுப்போர் அணியெது? தமிழரின் தன்மானத்தை விலை பேசாதவர்கள் எவர் என்பது அடையாளம் காணப்படவேண்டும். அது இந்நாட்டின் ஒட்டுமொத்த எண்ணமாக அமையவும் வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு மட்டுமல்ல சாவும் என்றாகும் என்பதைப் புத்தியுள்ள, பகுத்தறியும் ஆற்றலுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். சிந்திப்போம், சிந்திக்கத் தூண்டுவோம்.

thinkkural.lk 07 07 2015