நிஷாவின் வருகை... தேய்ந்து மறைந்த சர்வதேச விசாரணை

05 09 2015

நிஷாவின் வருகை... தேய்ந்து மறைந்த சர்வதேச விசாரணை

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை (ஓகஸ்ட் 26, 2015) கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின் பின் வெளியிடப்பட்ட படத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் நிஷா தேசாய் பிஸ்வால் உள்ளிட்ட அமெரிக்க தூதுக்குழுவினரும் பெரும் புன்னகையோடு காட்சியளித்தனர். குறித்த படம் தமிழ் ஊடக மற்றும் சமூக சூழலில் பெரும் சினத்தோடு எதிர்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் பத்தியாளரும் அப்படியொரு மனநிலையை வெளிப்படுத்தினார்.

இராஜதந்திர சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் தரப்புக்கள் ஊடகங்களை புன்னகையோடு எதிர்கொள்வது வழக்கமானதுதான். எனினும், 'எந்தவித உத்தரவாதமுமின்றி நாம் முழுமையாக ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றோம்' என்று உணரும் மக்களோ- அவர்களைப் பிரதிபலிக்கும் சமூக கூறுகளோ சினம் கொள்வது இயல்பானது. அப்படியான பிரதிபலிப்பொன்றையே தமிழ் மக்களும்- அவர்கள் சார் சமூகக் கூறுகளும் வெளிப்படுத்தினர். அதன் போக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது பலத்த குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மீதான சினம் என்பது இயல்பாக தம்மீதான சினமாகவும், ஆற்றாமையாகவும் தமிழ் மக்களின் பெரும்பான்மையினர் கொண்டிருக்கின்றனர் என்பது வெளிப்படையானது. ஏனெனில், தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பெரும் குற்றங்களுக்கான நீதியை எவ்வாறு கோருவது என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டின் பக்கத்தில் நகர்வதற்கான வாய்ப்புக்களோ, அதிகார சமநிலையோ தமிழ் மக்களிடம் தற்போது இல்லை. அதுபோக, பூகோள ரீதியிலான அதிகார சதிராட்டத்துக்குள் கருவி நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கான இயங்குநிலை என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அல்லது, அது முழுமையாக பிற தரப்பினரால் கையாளப்படுகின்றது. அதனை, வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல நேரங்களில் பிரதிபலிக்கின்றது. அது, தமிழ் மக்களின் தற்போதைய நிலை எப்படிப்பட்டது என்பதன் வெளிப்பாடுதான். அப்படிப்பட்ட நிலையில், தம்மீதுள்ள குறைபாடுகளை தாங்கள் முன்வைக்கும் தரப்பு மீது கொட்டி தம்மை ஆற்றுப்படுத்துவது தொடர்பில் தமிழ் மக்களும் அவர்கள் சார் சமூக கூறுகளும் பெரும்பாலும் ஈடுபடுகின்றன.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் பொதுத் தேர்தலோடு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பொதுத் தேர்தல் முடிவுற்று அரசாங்கமொன்று பூரணமாக பதவியேற்றிருக்காத நிலையில், அவசர அவசரமாக கொழும்பு வந்த நிஷா தேசாய் பிஸ்வால், ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துச் சென்றிருக்கின்றார். இதன்போது, இலங்கை மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும், இராஜதந்திர ரீதியிலான புதிய பாசத்தினையும் நிஷா தேசாய் பிஸ்வால் தெளிவாக வெளியிட்டிருக்கின்றார். அத்தோடு அந்தச் சந்திப்பு முடிவுற்றிருக்கவில்லை. மாறாக, இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறையூடான விசாரணையொன்றுக்கான ஒத்துழைப்பை உறுதி செய்து சென்றிருக்கின்றார். அதற்கான அர்ப்பணிப்பான செயற்றிட்டம் இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரின் போது தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்றும் அமெரிக்காவின் சார்பில் நிஷா தேசாய் பிஸ்வால் உறுதியளித்திருக்கின்றார்.

இறுதி மோதல்களின் போது தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று தமிழ் மக்களின் பெருமெடுப்பிலான அங்கிகாரத்தோடு தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (மாகாண அலகினை தமிழ் மக்கள் அங்கிகரிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அங்கிகரித்திருக்கின்றார்கள் என்று பொருள் கொள்க) இன அழிப்பு ஒன்றுக்கான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான தார்மீக உரிமை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சாசனம் உறுதியளிக்கின்றது. எனினும், இதன்பின்னாலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் எப்படிப்பட்டது, அதன் போக்கில் நீதியைப் பெற்றுக்கொள்வது சாத்தியமானதா?, என்கிற கேள்விகள் தமிழ் மக்களிடம் எழாமலும் இல்லை.

ஐக்கிய நாடுகளை நீதியின் கட்டமைப்பு பீடமொன்றோ, தார்மீகங்கள் நிறைவேற்றப்படும் அவை என்றோ கொள்ள முடியாது. அது, உலக வல்லரசுகளின் சதிராட்டத்துக்கான பெரும் சபை. அங்கு எப்போதாவது சில நீதிகள் கிடைக்கின்றன. அந்த நீதிகள் உலக வல்லரசுகளை பாதிக்காத வகையில் இருந்தால் மாத்திரம் சாத்தியப்படுகின்றன. மற்றப்படி, காலம் தாழ்த்தாத நீயாயமான நீதி ஐக்கிய நாடுகளினூடு கிடைத்த வரலாறுகள் இல்லை. அப்படியானதொரு அவையிடமே எமக்கான நீதி தொடர்பில் நாம் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றோம். அது, ஒப்பீட்டளவில் இலங்கை அரசாங்கத்திடம் நம்பிக்கை கொள்வதற்கு சற்று மேம்பட்டது என்பது மட்டுமே யதார்த்தமானது. இவ்வளவு விடயங்களையும் உணர்ந்த நிலையில் தான் தமிழ் மக்கள் தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடும் குற்றங்கள் தொடர்பில் விசாரணையொன்றைக் கோருகின்றார்கள். இந்தக் கோரிக்கை, அவநம்பிக்கைகளின் மீது கட்டப்படும் சிறுநம்பிக்கையென்று கொள்ளலாம். அது, சர்வதேச ரீதியிலான சதிராடுகையில் நாம் அகப்பட்டு முழுவதுமாக காணாமற்போவதற்குப் பதில், அதன்போக்கில் அரங்காற்றுகைகளை நிகழ்த்தி நிலை பெறுவது தொடர்பிலானது.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றுக்கான சாத்தியம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காணப்பட்டிருக்கவில்லை. அதுவும், ஐக்கிய நாடுகளின் வல்லரசு சதிராட்டத்தில் அதற்கான சந்தர்ப்பமே இல்லை. அத்தோடு, உரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டிருக்காத நிலையில், இலங்கையின் உள்விவகாரங்களில், சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கான சட்ட வலுவும் கிடையாது. இப்படியான நிலைப்பாடுகளும் எம்முன்னே இருக்கின்றன. இதன் மறுபக்க வெளிப்பாடுகள் பெரும்பாலும் தார்மீக அடிப்படைகளோடு முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைக் கோருவதற்கான தார்மீக உரிமை தொடர்பிலானது அது. ஆனால், அந்தத் தார்மீக உரிமையை முன்வைத்து இயங்குவது தொடர்பில் தமிழ்த் தரப்பிடம் போதிய விவாதங்களோ, தெளிவூட்டல்களோ சரியாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு ஊடகங்கள் இடமளிக்கவில்லை. அல்லது, புத்திஜீவிகளோ, சட்டவாளர்களோ போதிய நேரமொதுக்கவில்லை என்கிற மேம்போக்கான குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, நம்பிக்கையீனத்தின் பெரும் வெளிப்பாடும் காணப்பட்டது என்பதுதான் உண்மை. அதுதான், சர்வதேச விசாரணை தொடர்பிலான கோரிக்கைகளை மனதளவில் வைத்தாலும், யதார்த்த ரீதியில் சாத்தியமாக்குவதற்கான ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அக்கறையற்று இருக்கவும் காரணமாகியிருக்கின்றன.

இலங்கையின் உள்ளக விசாரணைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுத்த வரலாறுகள் இதுவரையில் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியவர்கள் என்கிற பட்டியலில் முதலாவது இடத்தில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிரான குற்றங்களை இலங்கை அரசின் விசாரணைக்குழுவே விசாரிப்பது என்பது நீதியின் அடிப்படைகளே அற்றவை. இறுதி மோதல்களில் சம்பந்தப்பட்ட இன்னொரு தரப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணை என்பது அவர்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் சாத்தியமில்லை. இது, இலங்கையினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில், இல்லாத தரப்பொன்றின் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் சுமத்திவிட்டு தன் மீது புனித நீர் ஊற்றும் வேலைகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டது. அதுவும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் அனுசரணை பெற்ற (மைத்திரிபால சிறிசேன-) ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அதனை மிகத் தெளிவாக நீதி நிலைநாட்டும். ஆயுத மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே தொடர்ந்தும் அதிருப்திகள் காணப்படுகின்றன. விசாரணை நியமங்கள் எவையும் சரியாக கையாளப்படாமல் வாக்குமூலங்களைப் பதிவதை மாத்திரமே தன்னுடைய இலக்கு என்கிற ரீதியில் வேண்டாவெறுப்பாக குறித்த ஆணைக்குழு செயற்படுவதாக மனித உரிமை அமைப்புக்களும்- செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். காணாமற்போனோர் தொடர்பிலான பொறுப்புக் கூறலை சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்பதற்கான அர்ப்பணிப்பையே குறித்த ஆணைக்குழு செய்யத்தயாராக இல்லை என்கிற நிலையில், இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்ட பெரும் குற்றங்களுக்கு (இன அழிப்புக்கு) நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நிலைக்கு இலங்கை அரசு நகரும் என்று கொள்ள முடியாது. அப்படி நம்புவது அசட்டுத்தனமானது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இம்மாத கூட்டத் தொடரில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படும். அதன்பின்னர் இலங்கையின் உள்ளக பொறிமுறையூடான விசாரணைக்கு ஒத்துழைப்பது என்கிற தீர்மானத்தினை அமெரிக்கா உள்ளிட்ட தரப்புக்கள் நிறைவேற்றும். இந்த இடத்தில் தமிழ் மக்களின் கூறுகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புத்திஜீவிகள், சட்டவாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் செயற்பாடு மிக தெளிவாக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுண்டு. அது, மறுக்கப்படுகின்ற நீதியை பெற்றுக் கொள்வதற்கான உயர்ந்த பட்ச அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். எவ்வகையானது என்றால், இல்லாத ஒன்றுக்குள் எதையாவது தேடிப்பிடிப்பதற்கு ஒப்பானது. அது, தமிழ் மக்களின் எதிர்கால நம்பிக்கைகளின் போக்கில் நிகழ்த்தப்பட வேண்டியிருக்கின்றது. எமக்கான விதி எங்களை மீறி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அதீத பிரயத்தனம் செய்து சில எழுத்துக்களையாவது எங்களின் சார்பில் எழுதுவதற்கு முற்பட வேண்டும். அது, எமது நீட்சிக்கு அவசியமானது.

tamilmirror.lk 02 09 2015  புருஜோத்தமன் தங்கமயில்-