ஜெனிவாவில் இரகசிய பேச்சு நடத்திய பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும்

05 10 2015

ஜெனிவாவில் இரகசிய பேச்சு நடத்திய பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும்

தமிழ் மக்களுக்கு நீதியான நிரந்தர தீர்வு கிடைப்பதற்காக பொது அரங்கில் இணைந்து செயல்பட வேண்டிய தமிழ் அரசியல் கட்சிகளும் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களும் ஜெனிவாவில் பிளவு பட்டு நின்றது மட்டுமன்றி அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை நிராகரித்தும் வரவேற்றும் அறிக்கைகளும் வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரிப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் 40 பொது அமைப்புக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை அரசாங்கமே வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதானது எந்தவகையிலும் உள்ளக விசாரணையின் கட்டமைப்புசார் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாது என அவர்கள் குற்றம் சாட்டி அறிக்கை வெளியி;ட்டிருந்தார்கள்.

ஆனால் இந்த அறிக்கையில் தமது கட்சிக்கு தெரியாமல் தமது கட்சியின் சம்மதம் இன்றி தமது கட்சி பெயரை பாவித்திருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கும் தமது கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமது கட்சித்தலைமையின் முடிவுகளுக்கு கட்டுப்படாது எதிராக செயல்படும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரேரணையை எதிர்த்து வெளியிட்ட அறிக்கையில் ரெலோவின் பெயரும் குறிப்பிடப்படுவதற்கு சிவாஜிலிங்கமே காரணம் என ரெலோ தலைமை நம்புகிறது. தமது கட்சியின் தலைமைக்கு தெரியாது சிவாஜிலிங்கம் தனிப்பட்ட ரீதியில் இத்தீர்மானத்தை எடுத்து கட்சியின் பெயரை பாவித்ததற்காக அவர் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றும் ரெலோ தற்போது அறிவித்திருக்கிறது. அடிக்கடி குழப்பங்களை விளைவித்து வரும் சிவாஜிலிங்கத்தை தாம் கட்சியிலிருந்து நீக்கி வைத்திருந்ததாகவும், ஆனால் தமக்கு தெரியாமல் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியிலில் சேர்த்துக்கொண்டார் என்றும் ரெலோ கூறுகிறது. அதேபோன்றுதான் தற்போது கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாது மாவை, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவிகளை இழுத்து திரியும் அனந்தியையும் அரசியலுக்கு கொண்டுவந்து தமிழரசுக்கட்சி மூலம் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட வைத்து அவரை மாகாணசபை உறுப்பினர் ஆக்கியது மாவை சேனாதிராசாதான் என தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

அது போன்று புளொட் என்ற அரசியல் கட்சியும் இந்த அறிக்கை பற்றி தமக்கு தெரியாது என கூறியிருக்கிறது. இந்த அறிக்கையில் 40 பொதுஅமைப்புக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான அமைப்புக்களுக்கு இப்படி ஒரு அறிக்கையில் தமது அமைப்பின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது என தெரியாது. உதாரணமாக மட்டக்களப்பை சேர்ந்த அமைப்புகள் சிலவற்றின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அமைப்புக்களுக்கு இந்த அறிக்கை பற்றி எதுவுமே தெரியாது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் இது போன்று முன்னரும் ஒரு தடவை தமிழ் அரசியல் கட்சி ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தமது அமைப்பின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் இதை அறிந்து தாம் அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினர். இந்த அறிக்கையை தயாரித்து வெளியிடுவதில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியுமே ஈடுபாடு காட்டியதாகவும் ஏனைய அரசியல் கட்சிகளின் சம்மதத்தை பெறாது அவர்களின் பெயர்களை இணைத்ததால் அந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதனை மறுத்திருக்கிறார்கள். அது போன்றுதான் பொது அமைப்புக்களின் பெயர்களும் அவர்களின் சம்மதம் இன்றியே சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. அறிக்கையில் கட்சி ஒன்றின் பெயரையும் இணைக்கும் போது கட்சித்தலைமையின் சம்மதத்தை பெற வேண்டும் என்பது நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இது தவிர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு வந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்களாகிக்கட்சிகள் ஒவ்வொரு அணியாக எதிரும் புதிருமாக செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இம்முறை ஜெனிவாவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோவுடன் நேருக்கு நேர் பேசவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்யும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடனேயே பல சந்தரப்பங்களிலும் காணப்பட்டார். இங்குள்ள விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரலிலேயே அவர்கள் செயற்பட்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் இங்குள்ள விடுதலைப்புலிகளின் ஒருங்கிணைப்பிலேயே செயல்பட்டனர். இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த இவர்களுடன் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புக்களான ஈழத்தமிழரவை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்ற விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் இணைந்து ஒரு நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டனர். இது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட போது ஐரோப்பாவில் உள்ள புலிகள் தான் பிரயாண செலவு தங்குமிட வசதி சாப்பாடு உட்பட அனைத்தும் கொடுத்து சுரேஷ், கஜேந்திரகுமார், அனந்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்களை அழைத்தனர். எனவே புலிகள் சொல்வதை மீறி இவர்களால் எதுவும் செய்ய முடியாது என சொன்னார். மனித உரிமை பேரவையில் முறைசாராக் கூட்டங்களை இம்முறை விடுதலைப்புலிகளுக்கு சார்பான ஈழத்தமிழர் அவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரே முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.

இலங்கையிலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிமலநாதன், கோடீஸ்வர்ன் மாகாணசபை உறுப்பினர்களான சயந்தன், ஆனொல்ட், கருணாகரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும் செயல்பட்டனர். இவர்களுடன் கனடிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை உலக தமிழர் பேரவையும் இணைந்து செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது. அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத்தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை அமெரிக்க தமிழர் அமைப்பு ஆகியன கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு ஆதரவை தெரிவித்தன. இதேவேளை விடுதலைப்புலிகளின் கீழ் செயல்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் எந்த கட்சிகளும் இன்றி தன்னிச்சையாக செயல்படும் அனந்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இப்பிரேரணையை தாம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணையையும் கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவினர் எதிர்த்திருந்தனர். இதேவேளை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் முக்கிய சில விடயங்களும் நடைபெற்றிருக்கின்றன. இது எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் மேலும் பிளவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருந்த கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கிய சந்திப்பு ஒன்றையும் நடத்தினர். லண்டனிலிருந்து வருகை தந்திருந்த மாற்றத்தின் குரல் என்ற அமைப்பை சேர்ந்த கோபிரத்தினம் என்பவரும் இதில் கலந்து கொண்டார்,

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது முரண்பாட்டு நிலையில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி கஜேந்திரகுமாரின் கட்சியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து செயற்படுவது என இந்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தோல்விக்கான காரணம் பற்றி ஆரம்பத்தில் ஆராய்ந்ததாகவும் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தியில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரை இணைத்து கொண்டு புதிய கூட்டமைப்பாக செயல்படுவது என்றும் இந்த கூட்டமைப்புக்கு தலைமை தாங்குமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கோருவது என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்த முடிவு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சி ஒன்றின் தலைவரிடம் கேட்டேன். அவர் ஒரு வசனத்தில் பதில் சொன்னார். சுரேஷ் போனால் போகட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நட்டமில்லை என பதிலளித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பலம் மிக்க ஒருவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற உயர் நிலையில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனிவாவில் சில செல்லாக்காசுகளுக்கு பின்னால் அநாதையாக அலைந்து திரிந்ததை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் என்பது தமிழ் கட்சிகளின் பிளவுகளும் போட்டிகளும் மோதல்களும் வெடித்து கிளம்பிய களமாக மாறியிருந்தது.

இரா.துரைரத்தினம் /thinakkathir.com 03 10 2015