வரலாறு தெரியாத சுரேஷ் பிரேமச்சந்திரனும்! சிங்கள தேச விசுவாசியாக மாறிய சம்பந்தனும்!

29 11 2015

வரலாறு தெரியாத சுரேஷ் பிரேமச்சந்திரனும்! சிங்கள தேச விசுவாசியாக மாறிய சம்பந்தனும்!!

தமிழின விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர்நாள் நிகழ்வுகள் தழிழர்கள் வாழும் மேற்குலக நாடுகளிலும் தமிழகத்திலும் நடைபெற்றிருக்கிறது. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் கூட இம்முறை சில இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் இருந்த கெடுபிடிகள் இம்முறை இருக்கவில்லை என்ற போதிலும் இராணுவ புலனாய்வாளர்களின் மறைமுறை அச்சுறுத்தல்களின் மத்தியிலும் யாழ். பல்கலைக்கழகம் உட்பட சில இடங்களில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. தமிழர்கள் ஒரே அணியில் நின்று உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட போராளிகள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். ஆனால் அந்த போராளிகளின் இலட்சியத்தின் வழியில் இப்போது உள்ள தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புக்களும் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்ற போது கசப்பான பதிலே கிடைக்கிறது. ஆயுதப்போராட்டம் நடைபெற்ற சமகாலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுதியான பலமான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் சிலரின் முயற்சியின் பயனாக 2001ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நான்கு கட்சிகளை ஒன்றிணைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமை உருவானது. அதற்கு 2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 15 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 18ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றுக்கொண்டது.

அதற்கு பிறகு நடந்த தேர்தலில் தமிழ் கட்சி ஒன்று ஆகக்கூடிய ஆசனங்களை பெற்றது 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் ஆகும். 2004ல் நடந்த தேர்தலில் 22ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. இதற்கு காரணம் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் நின்று போட்டியிட்டதுதான். ஆனால் ஒற்றுமையையும் பலத்தையும் இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அந்த ஒற்றுமையும் பலமும் நிலைத்திருக்கிறதா, எதிர்காலத்தில் அதன் பலம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகங்கள் வலுவடைந்து வருகின்றன. பதவிகளுக்காகவும் சுயநல நோக்கத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்படுவதை தற்போது வெளிப்படையாக காணமுடிகிறது. 2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி வந்ததோ அன்றிலிருந்து சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னிச்சையாகவும் சுயநல நோக்கோடும் செயல்பட ஆரம்பித்தனர். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சுயநல நோக்கோடு சர்வாதிகார போக்கில் முடிவுகளை எடுப்பதும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் செயல்படுவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய முடிவுகள் அனைத்தும் சம்பந்தனும் அவரை சார்ந்தவர்களாலுமே எடுக்கப்பட்டு வருகிறது. 2010, 2015 தேசிய பட்டியல் நியமனங்கள், வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு, சிறிலங்கா சுதந்திர தின வைபவங்களில் பங்கேற்றமை, தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையின் குறியீடாக காட்சியளிக்கும் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடித்தமை, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏனைய பங்காளி கட்சிகளின் ஒப்புதல் இன்றி ஏற்றுக்கொண்டமை, உட்பட பல விடயங்களில் சம்பந்தன் சர்வாதிகாரப் போக்கில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயல்பட்டமை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தி உள்ளன.

எதிர்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக சுமந்தன் சிங்கள தேசத்திற்கு காட்டும் விசுவாசம் தமிழ் மக்களை வெறுப்படை வைத்திருக்கிறது. அதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரவில்லை என்பதற்காக ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெற்ற காலத்திலும் சரி, அதன் பின்னரான காலங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் வகையிலேயே செயல்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை விடுதலைப்புலிகள் தான் சூட்டினார்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் வெளியிட்ட கருத்து கூட வரலாற்றை திரிபு படுத்தும் செயலாகும். உண்மையில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே அணியில் இணைக்க வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெற்ற போது அந்த விடயங்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன் பங்கு கொண்டவர் அல்ல. தமிழ் கட்சிகளை இணைத்து ஒரே அணியில் கொண்டுவந்த வேளையில் மட்டக்களப்பு கல்லாற்றில் ஒரு வீட்டில் சந்தித்த சிவராம், கெனடி போன்றவர்கள் அதற்கான ஒரு வரைபையும் அதற்கான பெயரையும் பற்றி ஆலோசித்தனர். அந்த வேளையில் சிவராம் ரி.என்.ஏ. (tamil national alliance ) என்ற பெயரை முன்மொழிந்தார். ரி.என்.ஏ என்ற பெயர் இந்திய இராணுவ காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவத்தை குறிக்கும் பெயர் அல்லவா, இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனினும் ரி.என்.ஏ. என்பதே பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது வரலாற்றை அறியாதவராக சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுதலைப்புலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை வைத்தார்கள் என்ற புதுக்கதையை சொல்ல முற்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் மீது கொண்ட பற்றுக்காரணமாக சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை சொல்கிறார் என நம்பமுடியாது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என செயல்படும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் செயல்பாட்டாளர்களின் தயவை பெற வேண்டிய நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளார். இதனாலேயே சுரேஷ் பிரேமச்சந்திரனின் செயல்பாடுகளும் பேச்சுக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

சம்பந்தனுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு சுமந்திரனின் பிரவேசம், சிறிதரனின் மக்கள் ஆதரவு போன்றன பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போவதில்லை என நம்பும் சுரேஷ் பிரேமச்சந்திரன் புதிய அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2001ஆம் ஆண்டு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருந்தது. இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் 1989ஆம் ஆண்டு தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் அதற்கு பின்னர் நடந்த தேர்தல்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் 2001ஆம் ஆண்டு போட்டியிட்ட போது வன்னி மாவட்டத்தில் மட்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது. 2004ல் தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றி பெற்றார். 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் எந்த நிபந்தனையும் இன்றி தங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொண்டால் போதும் என்ற நிலையில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்;.எல்.எவ் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தி புதிய தலைமை ஒன்றை உருவாக்க முற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. பொதுவாகவே கட்சிகளுக்கு வெளியில் இருந்துதான் விமர்சனங்களும் போட்டிகளும் வருவது வழமை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருப்பவர்கள் தான் விமர்சனங்களையும் பிளவுகளையும் கொண்டு வருகின்றனர். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களே அக்கட்சியில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வடமாகாணசபை தேர்தல் நடைபெற்ற போது மாகாணசபை தேர்தலை புலம்பெயர் தேசங்களில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு தமிழ் அமைப்புக்களும், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் புறக்கணித்தன. மாகாணசபை முறையை அவர்கள் நிராகரித்தனர்.

மாகாணசபையை நிராகரித்த தரப்புடன் தான் தற்போது வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைகோர்த்துள்ளார். மாகாணசபையை நிராகரிப்பவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு எவ்வாறு மாகாணசபையை விக்னேஸ்வரனால் திறம்பட செயல்படுத்து முடியும்? எந்த நோக்கத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த தடத்தை விட்டு அக்கட்சி விலகி சென்றால் அதன் எதிர்காலம் சூனியமாகவே இருக்கும். அது போன்றுதான் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிவரை புலம்பெயர் தேசத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுமையாக பலமாக செயற்பட்டன. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச்செய்தி வெளிவந்த அடுத்த கணமே புலம்பெயர் தேசங்களில் இருந்த தமிழ் அமைப்புக்களில் பிளவுகளும் போட்டிகளும் குத்து வெட்டுக்களும் ஆரம்பமாகின. 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் போர் ஓய்ந்த நிலையில் பிரபாகரனின் மரணச்செய்தியை கே.பி. என்றழைக்கப்படும் பத்மநாதன் அறிவித்த போது புலம்பெயர் தேசங்களில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு இரண்டாக பிளவு பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை, இனிமேல் ஆயுதப்போராட்டத்திற்கான வழிகள் கிடையாது, சர்வதேசத்தின் ஆதரவுடன் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் மூலமே தமிழர்களின் உரிமைகளை மீண்டெடுக்க முடியும் என்ற முடிவுகளோடு சில அமைப்புக்கள் செயல்பட ஆரம்பித்தன. தமிழீழம் தான் முடிந்த முடிவு, மீண்டும் ஆயுதப்போராட்டம் தொடங்கும், பிரபாகரன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையுடன் சில அமைப்புக்கள் செயல்பட ஆரம்பித்தன. ஈழத்தமிழ் மக்களை வைத்து வியாபாரம் நடத்தும் தரப்புக்களும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் தோற்றம் பெற்றன. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடை செய்து மகிந்த ராசபக்ச அரசாங்கம் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்வாண்டு மைத்திரிபால அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அண்மையில் புலம்பெயர் தேசங்களில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என கோரிவந்தவர்கள் சில அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டவுடன் அந்த அமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் சோரம்போய்விட்டார்கள் என துரோகி பட்டங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, ஒஸ்ரேலிய தமிழ் கொங்கிரஸ், கனேடிய தமிழர் தேசிய அவை, கனேடிய தமிழ் கொங்கிரஷ், தமிழ்த் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு ஆகிய 7 அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசியே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்பிக்கை கொண்டவையாகும்.

தடை நீடிக்கப்பட்ட தமிழர் ஒருக்கிணைப்புக்குழு, உலகத் தமிழீழ மக்கள் அவை, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ இராச்சியம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு ஆகிய தமிழீழமே முடிந்த முடிவு, சிறிலங்கா அரசுடன் சமாதான பேச்சுக்கு இடமில்லை என்ற கடும்போக்கை கொண்டவை. தடை நீடிக்கப்பட்ட தரப்பு தற்போது தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் மீது சிறிலங்கா அரசுக்கு சோரம் போய்விட்டதாக குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளன. ஒரு வகையில் சில அமைப்புக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் தடை நீக்கியமை கூட புலம்பெயர் தேசங்களில் பிளவுகளை ஏற்படுத்தி உள்ளது. மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய அரசாங்கம் நீடித்து நிலைக்க கூடிய ஒன்று அல்ல. அதன் ஆயுள்காலம் எந்த நேரத்திலும் முடியலாம். இரு பெரும் சிங்கள கட்சிகள் ஒன்றாக இருக்கும் இவ்வேளையில் தமிழர்களுக்கான தீர்வை பெறுவதற்கு தமிழ் தலைமைகள் சரியான பாதையில் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் இனிமேல் எந்த ஒரு காலகட்டத்திலும் தமிழர்களுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

thinakkathir.com 29 11 2015 இரா.துரைரத்தினம்