22 08 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 47

(1938இல் திசம்பரில் சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநில மாநாட்டில் பெரியாரின் தலைமையுரை-சென்ற இதழ் தொடர்ச்சி...)
தோழர்களே!
நம் தற்கால நிலைமையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
மேலும் அரசியல் துறையில் நாம் மிகப் பிற்போக்காளர்கள் என்றும், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் தேசீய உணர்ச்சியற்றவர்களென்றும் ஜமீன்தார் கட்சியினர் என்றும் நம் எதிரிகள் நம்மை அழைக்கின்றனர்.அரசியலில் நாம் எவ்வகையில் பிற்போக்காளர்கள்? நமது அடிப்படையான அரசியல் கொள்கை எல்லா மக்களும் சம நீதியும், சம உரிமையும், சம சந்தர்ப்பமும் பெற வேண்டுமென்பதே. இக்கொள்கையை இந்நாட்டுத் தீவிர அரசியல் கட்சியான காங்கிரஸ் கைக்கொண்டிருக்கின்றதாவென்று கேட்கின்றேன்?அப்படியிருந்தால் இன்று காங்கிரசில் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றிருக்கவும், மற்றவர்கள் கைதூக்க மாத்திரம் உரிமை கொண்டவர்களாகவும் இருக்க யாது காரணம்?அரசியல் துறையில் காங்கிரஸ்காரர்கள் அந்நியர்கள் இந்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமென்று சொன்னால் நாங்கள் வேண்டாமென்கிறோமா? காங்கிரஸ்காரர்கள் பூரண சுயேச்சை வேண்டுமென்றால் நாங்கள் கூடாது; கால் சுயேச்சை, அல்லது அரை சுயேச்சையே போதுமென்கிறோமா? காங்கிரஸ்காரர்கள் குடிகளுக்கு வரியே போடக்கூடாதென்றால், நாங்கள் வரி போட்டுத் தான் ஆகவேண்டுமென்று சொல்லுகிறோமா? காங்கிரஸ்காரர்கள் மக்கள் எல்லாம் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் அது தப்பு; ஒரு ஜாதி மட்டுந்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றமென்கின்றோமா? காங்கிரஸ்காரர்கள் ஜாதி வேற்றுமை கூடாது; எல்லோரும் ஒரு குலம் என்றால், நாங்கள் ஜாதி வேற்றுமை இருக்கத்தான் வேண்டும் என்கின்றோமா?

காங்கிரஸ்காரர்கள் மக்களெல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்றால், அது தவறு என்று கூறுகிறோமா? காங்கிரஸ்காரர்கள் இந்நாட்டில் வரிகொடுக்கும் சகல ஜாதி, மத, வகுப்புக்களுக்கும் நிர்வாகத்திலும், நீதியிலும், பதவியிலும் சம உரிமையளிக்கப்பட வேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்பட வேண்டும் என்றால், அது கூடாது என்கிறோமா? எந்த வகையில் நாம் பிற்போக்காளர் என்பதை அவர்கள் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுவார்களா? நாம் உத்தியோக மோகங்கொண்டவர்கள் என்று குறை கூறப்படுகின்றோம். ஆனால் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாசாரத்திற்கு அதிகப்படியான உத்தியோகம் பெறவேண்டும் என்று விரும்புகின்றோமா? பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்குப் பெற்றுள்ள அளவுக்கு மேல் உத்தியோகம் பெறவோ, அன்றி உத்தியோகங்களெல்லாம் நமக்குமாத்திரந்தான் இருக்க வேண்டு மென்றோ ஆசைப்படுகின்றோமா? அல்லது கடந்த 17 வருட ஆட்சியில் எந்த வகுப்பார்களை அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய விகிதத் தைப் பெறமுடியாமல் செய்துவிட்டோம்? அல்லது அவ்விகிதாசாரத்தைக் குறைத்து விட்டோம்? உத்தியோகம் பெற அனை வர்க்கும் உரிமை உண்டு. எல்லோரும் அதற்குத் தகுதியுடை யவர்களாக வேண்டியவர்களேயாவார்கள்.

உத்தியோகத்திற்குரிய அதிகாரம், பொறுப்பு, செல்வாக்கு எல்லாம் நாட்டு மக்களை நன்கு நடத்தவும், அவர்களுக்குத் தொண்டாற்றவுமேயாகும். உத்தியோகத்திற்கு ஏற்பட்டுள்ள சம்பளம் இந்நாட்டு மக்கள் கொடுக்கும் வரிப் பணத்திலிருந்தே கொடுக்கப்படுகின்றது. அத்தகைய உத்தியோகத்தைப் பெற விரும்புவது நாட்டிலுள்ள எல்லா வகுப்பு மக்களின் பிறப்புரிமை என்று சொல்வதும் உத்தியோகம் பெற முயற்சிப்பதும் எப்படி உத்தியோக வேட்டையாகு மென்பது நமக்கு விளங்கவில்லை. நமக்குத் தேசீய உணர்ச்சியில்லையா? ‘தேசீய’ என்ற ஆரிய (வட) மொழிச் சொல்லுக்குச் சரியான ஆங்கில மொழிச் சொல் நேஷனல் (National) என்பதாகும். ‘நேஷனல்’ என்ற சொல்லுக்கு ‘ஜாதியம்’ என்பதுதான் சரியான கருத்து எனக் கற்றோர் கூறுகின்றனர். அகராதியும் சொல்லுகிறது.ஐரோப்பாக் கண்டம் என்ற ஒரு பூபாகத்தில் ஜெர்மனி நேஷன் வேறு; இத்தலி நேஷன் வேறு. ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு முன்பு போலிஷ் ஜனங்கள் தனி நாடின்றி ருஷிய, ஆஸ்திரிய, பிரஷிய ஆதிக்கங்களுக்குட் பட்டிருந்தும் தங்களை ஒரு நேஷன் என்று சொல்லி வந்தனர். யூதர்களுக்கெனத் தனிப்பட்ட நாடொன்று தற்போது இல்லாவிடினும் யூதர்களும் ஒரு நேஷனே.

மேலே காட்டியபடி நேஷன் என்ற வார்த்தைக்கும் பொருள் கொண்டு பார்த்தால் இந்தியாவை ஒரு நேஷன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம். அல்லது அங்கமச்ச அடையாளத்தின் மீது பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் எனப் பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்கவழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும், அதுவும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புக்களாகப் பிரிக்கப்படும். மற்றும் எவ்வகையில் பார்த்தாலும் ‘இந்திய நேஷன்’ என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு மாத்திரம் என எவ்வாறு பொருள்படும்? ஆந்திர தேசீயவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டுப் பிரிந்து தனி மாகாணமொன்று ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்று முயற்சிக்கின்றனர். அவ்வாறே ஒரிசாவும், சிந்துவும் தனித்தனி மாகாணமாய் விட்டன. பர்மாக்காரர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து ‘பர்மா பர்மியருக்கே’ (Burma for Burmans) என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இலங்கைக்காரர்களும் இப்படியே. மற்றொரு வகையில் வடமேற்கெல்லை முஸ்லீம்கள் இந்துக்களிடமிருந்து பிரிந்து கொண்டார்கள். இப்படியே ஒரே மதத்தினரும், ஜாதியினரும் கூடத் தனித்தனி பிரிந்துபோக ஆசைப்படும்போது, இந்திய தேசிய சங்கம் என்னும் காங்கி ரஸும் இதை அனுமதிக்கும்போது, “தேசீயம்”, “தேசீயம்” என்று பறையறைவதின் அர்த்தந்தான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.

வங்காளிகளிடமிருந்தும், குஜராத்திகளிடமிருந்தும், காஷ்மீரி களிடமிருந்தும், சிந்திகளிடமிருந்தும், தமிழ்நாட்டினர், ஆந்திர நாட்டினர், மலையாள கன்னட நாட்டவர் பிரிந்து போக வேண்டு மென்று எண்ணுவது தேசீயத்திற்கு விரோதமா? அதேபோல் ஆரியர்களிடமிருந்தும் மங்கோலியர்களிடமிருந்தும், திராவிடர்கள் பிரிந்துபோக நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா? வெள்ளையர் ஆட்சியின்கீழ் இல்லாவிட்டால் அந்நியர் படையெடுப்பினின்று நம்மைக் காத்துக் கொள்ள முடியாதெனக் கூறப்படுமானால் சிலோன், பர்மா இவைகளைப் போலவோ அன்றி கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இவைகளைப் போன்றோ தமிழ்நாடோ திராவிட நாடோ பிரிந்திருக்கலா மல்லவா? வெள்ளையர் ஆட்சியின் கீழேயே இருக்கலாகாது; பூரண சுதந்தரம் பெற்ற தேசமாக இருக்கலாம் எனப்படுமானால் ஐரோப்பாவில் 3 கோடி 4 கோடி ஜனத்தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, ஸ்விட்ஸர்லாண்டு, டென்மார்க் போல சென்னை மாகாணமோ, தமிழ்நாடோ தனித்த நாடாக இருப்பது அசாத்தியமா?

அப்படிக்கின்றி இந்திய தேசீய சபையின் சர்வாதிகாரி குஜராத்தி நேஷனைச் சேர்ந்தவர்; பெருந்தலைவர் களிலே ஒருவர் காஷ்மீரி நேஷனைச் சேர்ந்தவர்; மற்றொருவர் வங்காளி நேஷனைச் சேர்ந்தவர். நிர்வாக சபையினர் அனைவரும் தமிழர்களோ, தமிழ் நாட்டினரோ அல்லாமல் இதரர்களாயிருந்துகொண்டு தேசீயம் பேசுவதென்றால் காங்கிரஸ் உண்மையில் எவ்வாறு தேசீய சபையாகும்? அன்றியும் இந்தியா முழுவதும் ஒரே நாடு என்று தான் எவ்வாறு சொல்வது? அவ்வாறு கூறுவதற்குப் பூகோளப் படம் தவிர வேறு என்ன ஆதாரமிருக்கிறது? ஐரோப்பிய பூகோளப் படத்தைப் போலவே இந்தியப் பூகோளப் படமும் வருடத்திற்கு ஒருமுறையில்லாவிட்டாலும் அடிக்கடி திருத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். இரண்டு ஜில்லாக்கள் ஒரு ஜில்லா வாகின்றன; பெரிய மாகாணங்கள் சிறியனவாகவும், சிறியன பெரியனவாகவும், மாற்றியமைக்கப்படுகின்றன. சென்னைக் காரனும் வங்காளியும் சுரண்டுவதை பர்மாக்காரன் பொறுக்க முடியாமல் துடிக்கிறான். தென்னாட்டான் சுரண்டுவதைப் பொறுக்கமாட்டாமல் சிங்களத்தான் சீறுகிறான். குஜராத்தி சுரண்டலும் இந்து மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் “பாப்பரா”க்குகிறது. இதற்கு நாம் துடிதுடித்தால் தேசீயத்திற்கு விரோதமாய் விடுகிறது! திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரீய மதம் சுமத்தப்பட்டு அத்தமிழர் உழைப்பின் பலனையெல் லாம் தமிழரல்லாத ஒரு சிறு கூட்டத்தவர்கள் பகற்கொள்ளை போல் சுரண்டுவதை, உறிஞ்சுவதை, இது நீதியா, முறையா, அடுக்குமா என்று கேட்கப் புகுந்தால் அது தேசீய துரோக மாவதுடன் ராஜதுவேஷமும், வகுப்புத் துவேஷமுமாகி விடுகிறது. இம்மாதிரி தேசீய வேஷம் போட்டு நாம் அழிந்து போவதா? அல்லது அதைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்வதா? தோழர்களே! ஆழ்ந்து யோசியுங்கள்.

உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல. உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து அவ்வுழைப்பின் பலனை விகிதாசாரம் பகிர்ந்து, தத்தம் தகுதிக்கும் தேவைக்கும் அவசியமான அளவு அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேசீயம் என்றும், தேச சேவையென்றும், தேச பக்தி என்றும், தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும், ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும் பல பல சொற்களைக் காட்டி மெய்வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொது மக்களை, கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல் வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார், வஞ்சித்து, ஏமாற்றி வயிறு வளர்ப்பதை, ஏன்? உழைப்பாளிகளைவிட அதிகச் சுகமான வாழ்வு வாழ்வதை அடியோடு ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன். ஆகவே தேசீயம் என்கின்ற பேச்சு ஆத்மார்த்த விஷயத்தில் மோக்ஷம் வாங்கித் தருவது என்ற கூற்றுக்குச் சரியான கருத்தைக் கொண்டதேயாகும்.

நாம் செய்தவை

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல் லாத மக்களடங்கிய ஸ்தாபனத்தின் பெயரால் 1920ஆம் ஆண்டு தொடங்கி 17 வருடகாலம் அரசியல் அதிகாரத்திலே ஆலோசனை கூறுபவர்களாகவும், சில இலாக்காக்களின் நிர்வாகத் தலைவர் களாகவுமிருந்து நம்மவர் நாட்டிற்குச் சேவை செய்துவந்த காலத்தில் சுயராஜ்யம் பெருவதற்குத் தடையாக அவர்கள் செய்த காரியம் யாவை என்றும், நாட்டு மக்கள், நலத்திற்குச் செய்ய வேண்டுவனவற்றில் செய்யத் தவறியன யாவை என்றும் யாராவது சொல்ல முன்வருவார்களா என நான் அவர்களை அறைகூவி அழைக்கின்றேன். சமுதாயத்தில் ஜாதிபேதக் கொடுமைகளை ஒழிக்க அரும்பாடுபட்டு, மக்களாயிருந்தும் கேவலம் விலங்குகள் போல நடத்தப்பட்ட, தெருவிலும் நடக்கத் தகுதியற்றவர்கள் எனக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்குச் சமுதாய உரிமைகளை வாங்கிக் கொடுத்தது யார்? சகல ஜாதி, மத வகுப்பினருக்கும் சமுதாய சேவையிலும், அரசாங்க சேவையிலும் பங்கெடுத்துக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தது யார்? கல்வித் துறையில் பிற்போக்கடைந்திருந்த மக்களுக்கு பலவகை வசதிகளையுண் டாக்கி அவர்களும் கல்விபெற்று எத்தகைய பணிக்கும், பதவிக்கும், சேவைக்கும் அருகதையுடையவர்களாகும்படி செய்தது யார்? ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளல்லவா?

1920ஆம் ஆண்டில் 1,25,00,000 ரூபாய் கல்விக்காக நம்மாகாணத்தில் சர்க்காரால் செலவு செய்யப்பட்டது. அத் தொகையில் பெரும்பாகம் மேல் ஜாதிப் பிள்ளைகள் படிக்கும் உயர்தரப் படிப்பிற்கே செலவிடப்பட்டு வந்தது. கல்வியிலாகா நிர்வாகமும், உத்தியோகமும் இந்துக்களில் 100க்கு 95ஙூ விகிதம் பார்ப்பனர் கையிலேயே இருந்து வந்தது.இக்காரணத்தால் பார்ப்பனரல்லாத மக்களின் பிள்ளைகள் ஆரம்பப் படிப்பு கூடப் படிக்க முடியாமற் போய்விட்டது. ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்தில் தாங்கள் விரும்பியபடி நிர்வாகத்திலும் உத்தியோகங்களிலும் போதிய அளவு மாறுதல்கள் செய்ய இயலவில்லை யெனினும் முன்பு கல்விக்குச் செலவு செய்யப்பட்ட தொகையைவிட இரண்டு மடங்கு தொகையான ரூ.2,50,00,000 செலவிட்டிருக்கின்றார்கள். 1937இல் கல்விக்காக 2,55,00,000 ரூபாய் செலவிட்டிருக்கின்றனர். இத்தொகையில் பெரும்பாகம் ஆரம்பக் கல்விக்கே செலவிடப்பட்டது. இம்மாதிரியே சுகாதாரம், வைத்தியம் முதலிய இலாக்காக்களும் பலவழிகளிலும் அவர்களாட்சியில் முன்னேற்றமடைந்து வந்திருக்கின்றன.

பொருளாதாரம்

சர்க்கார் அதிகாரிகள் சம்பளச் செலவில் சுமார் ஒரு கோடி ரூபாய் குறைப்பதற்கு வேண்டிய பிரயாசையை ஜஸ்டிஸ் கட்சியார் பதவிக்கு வந்தவுடன் எடுத்துக் கொண்டனர். வரி விஷயத்தில் 100க்கு 25 விகிதம் வரையில் குறைக்க ஏற்பாடு செய்தனர். பல துறைகளிலும் அபிவிர்த்தியும் செய்துகொண்டு, வரியையும் குறைப்பதென்றால் அதுவும் இன்று இருப்பதுபோல் பூரண அதிகாரமும், சட்டப்படி உரிமையும் இல்லாத காலத்தில் எவ்வளவு சிரமம் என்பதை ஆலோசியுங்கள். இதற்குமேல் அவர்களிட மிருந்து அதிகமாக யார் எதிர்பார்க்கக்கூடும்?

இன்றைய மந்திரிகள்

பூரண அதிகாரம் பெற்ற இன்றைய மந்திரிகளோ பள்ளிக்கூடங்களை எடுக்கின்றார்கள். பிள்ளைகள் சம்பளங்களை உயர்த்துகிறார்கள். கல்வி விஷயத்தில் பிற்போக்கான ஜாதி யார்களுக்கு இதுவரை இருந்து வந்த சில வசதிகளையும் குறைக்கின்றனர். பல உத்யோகங்களையும் நீக்குகின்றார்கள். ஆனால் கூடவே புது வரியும் போடத்தவறுவதில்லை. வரவு செலவுத் திட்டத்தைச் சரிப்படுத்த முடியாமல் புதுப் புதுக் கடன்கள் வாங்கி வருகின்றார்கள். ஏற்கனவே 18 மாதத்தில் 4ஙூ கோடி ரூபாய் கடன் வாங்கியாகிவிட்டது.

நிர்வாகத் திறமை

ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கு நிர்வாகத் திறமையில்லை யெனக் குறைகூறினார்கள். இன்று காங்கிரஸ் மந்திரிகள் தங்களால் நிர்வாகம் செய்ய முடியவில்லையே என வெளிப்படையாகவே சொல்லிக் கொள்ளுகின்றனர். தாங்கள் போட்ட நிர்வாக உத்தரவுகளை அடிக்கடி மாற்றிவருவதும் நாம் அறிந்ததே. அவர்கள் செய்யும் காரியங்கள் வகுப்புணர்ச்சியைக் கொண்டு செய்யப் படுவதாகப் பொது ஜனங்களால் குறைகூறப்படவும் அதைச் சரியென ஒப்புக்கொண்டு தங்கள் காரியங்களைத் திருத்திக்கொண்டு வருவதையும் யாரே உணராதார்? உத்தியோகங்களைச் சிருஷ்டிப்பதிலும், உத்யோகஸ்தர்களை நியமிப்பதிலும், தள்ளுவதிலும் வகுப்புணர்ச்சி ததும்பி நிற்பதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். தங்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் அதிகமான நட்பும் நம்பிக்கையும் வளரும் படியே நிர்வாகம் நடத்துகிறார்கள். இந்த அரசியலைத் தகர்த்துப் பொடி பண்ண தாங்கள் தான் தகுதியுள்ளவர்கள் எனத் தமுக்கடித்து ஓட்டுப் பெற்ற இவர்கள் அரசியலை நடத்துவதற்குத் தங்களாலன்றி வேறு யாராலும் முடியாதென பெருமை பாராட்டிக் கொள்ளுகிறார்கள். வைஸ்ராய் பிரபு, கவர்னர் பிரபு இன்னுமுள்ள இதர ஆங்கில அதிகாரிகளும் பலே பேஷ்! சபாஷ்! நல்ல அடிமைகள்! என மெச்சித் தட்டிக்கொடுத்து வருகின்றார்கள்.

தங்களால் நிர்மாணிக்கப்படாத எந்த அரசியல் திட்டத்தையும் தாங்கள் ஒப்புக்கொண்டு நடத்த முடியாது என்று வீம்பு பேசியவர்கள் எப்படிப்பட்ட மோசமான, பிற்போக்கான திட்டமானாலும் எங்களால் நடத்தமுடியுமென்று ஜம்பம் பேசுகிறார்கள். நம்மை வகுப்புவாதிகள் என்றும் தங்களுக்கு வகுப்புவாத உணர்ச்சியே கிடையாதென்றும் சொல்லி வந்த இவர்கள் மந்திரிசயைமைப்பில், கிறிஸ்தவர்களைப் புறக்கணித் தார்கள். தொழிலாளர் வகுப்புகளைப் புறக்கணித்தார்கள். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. அம்மட்டோ? இவர்களுடைய நலன்களைப் பாதிக்கும் விதத்திலும் நடந்து வருகிறார்கள். “ஜஸ்டிஸ் கட்சி ஜாதி அபிமானமுடையது; கட்டுப்பாடற்றது” என்றெல்லாம் குறைகூறினவர்கள் காங்கிரஸுக்கே இழிவு தேடினவர்களையும் காங்கிரசுக்குத் துரோகம் செய்தவர்கள் என்று காங்கிரஸ்காரர்களாலேயே குற்றஞ் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களையும் அவர்களிடமிருந்து மன்னிப்புக் கூடப் பெறாமல் கட்டுப்பாட்டை உதறித்தள்ளிவிட்டு சுயஜாதி அபிமானத்தால் மந்திரிகளாக்கிக் கொண்டனர்.

ஸ்தல ஸ்தாபனங்களில் முனிசிபல் கமிஷனர்களை ஏற்படுத்தியதைக் குறைகூறினார்கள். ஜில்லா போர்டுகளை எடுக்க வேண்டுமென்றார்கள். இவர்கள் பதவிக்குவந்து பதினெட்டு மாதங்களாகியும் பல காங்கிரஸ் மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் மேற்கண்ட மாறுதல்களைச் செய்யவோ அல்லது செய்யப் போவதாகச் சொல்லவோ முன்வரவில்லை. சகல துறைகளிலும் நடைபெற்றுவரும் பழைய முறையே சரியெனச் சொல்லிக் கொண்டு அம்முறைகளைத் தங்கள் வகுப்பிற்கு அனுகூலம் தரத்தக்க முறையில் மட்டும் மாற்றிக்கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றார்கள். தேர்தல் காலத்தில் பொது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளெல்லாம் காற்றில் தூற்றிவிடப்பட்டன. காங்கிரஸ் திட்டங்களுக்கும், பொது ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் நேர்மாறான பல காரியங்களை மட்டும் செய்து வருகின்றனர். பொதுஜன அபிப்பிராயத்தையோ, உணர்ச்சியையோ ஒரு சிறிதும் பொருட்படுத்துவதாகக் காணோம்.

- தொடரும் keetru.com  feb 2017

19 08 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 46

பெரியார் அவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை சென்ற பின்பும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வந்தது. ஆண் களும், கைக்குழந்தைகளுடன் பெண்களும் தொடர்ச்சி யாக மறியல் செய்து சிறை சென்றனர்.இங்கே சிறையில் அடைத்தால், தொண்டர்கள் அவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வருவார்கள் என்பதால், பெரியாரை, பெல்லாரி சிறையில் அடைத் தார் இராசாசி.

பெரியார் சிறை செல்லும் முன்னே நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாள் பெரியார் சிறையில் அடைக்கப் பட்டார். அதே திசம்பர் மாதம் இறுதியில் 29, 30, 31 நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது.கி.ஆ.பெ. விசுவநாதம், ஏ.டி. பன்னீர்செல்வம் இருவரும் பெல்லாரி சென்று பெரியாரைச் சிறையில் சந்தித்து, கட்சியின் எதிர்காலம் குறித்தும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்வது குறித்தும் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். நீதிக்கட்சியின் தலைவர் என்ற முறையில் மாநில மாநாட்டில் அவருடைய தலைமை உரையைப் படிப்பதற்காக எழுதி வாங்கி வந்தனர். மாநாட்டில் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு பெரியாரின் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் முதல் பாதியையும், இரண்டாவது பாதியை கி.ஆ.பெ. விசுவநாதமும் உணர்ச்சி பொங்கப் படித்தனர்.

அவ் உரை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாகும். அவ்வுரையின் முக்கியப் பகுதிகளைக் கீழே காணலாம்.

“தேசியம், ஆத்மார்த்தம் என்னும் பெயர்களால் ஒரு சிறு கூட்டத்தினரால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சமுதாயம், கல்வி, செல்வம், அரசியல் இத்துறைகளிலே பின்தள்ளப்பட்டு, தாழ்த்தப்பட்டு, தீண்டப்படாதவராகவும், கீழ்ச் சாதியாராகவும், மிலேச்சர்களாகவும், பிறவி அடிமை (சூத்திரர்)களாகவும் இழிவுபடுத்திவைக்கப்பட்டுமுள்ள 100க்கு 97 பகுதியுள்ள இம்மாகாணத்தின் பழம்பெருங்குடிகளும், பலகோடி மக்களுமான நம்மவரின் விடு தலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்த தற்கு உங்களுக்கு என் மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்

தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்னும் இந்த ஸ்தாபன மானது, இன்றைக்கு 22 வருடங் களுக்குமுன், அதாவது 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆந் தேதியன்று தோற்றுவிக்கப்பட்டதாகும். இதை ஆரம்பித்தவர்கள் முதிர்ந்த அனுபவமும், சிறந்த அறிவும், நிறைந்த ஆற்றலும், மக்கள் உண்மை விடுதலை பெற்று, உயர்நிலையடைந்து, இன்பமெய்தி வாழவேண்டும் என்ற பேரவாவுமுடைய சான்றோர்களாயிருந்ததோடுகூட, சிறிதும் தந்நலமற்ற பெருந்தியாகிகள் என்பதையும், அவர்கள் இவ்வியக்க வளர்ச்சிக்கு எவ்வளவு பாடு பட்டார்கள் என்பதையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.இந்த ஸ்தாபனத்தை அவர்கள் ஏற்படுத்திய காலை, நாம் எந்நிலையில் இருந்தோம் என்பதும், இத்தகைய ஒரு இயக்கத்திற்கு அக்காலத்தில் எவ்வளவு அவசியம் இருந்தது என்பதும், இன்றுள்ள நம் வாலிபர்களுக்கோ, அன்றிப் பள்ளிப்படிப்பை விட்டவுடன் தேசபக்தியில் மூழ்கி, தேசிய வீரர்களெனப் பட்டம் பெற்ற தேசாபி மானிகள் எனக் கூறிக்கொள்ளும் சிலருக்கோ சரியாகத் தெரியாதென்றே சொல்லுவேன். ஏனெனில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றைக்கு 22 ஆண்டுகள் கழிந்துவிட்டபடியால், நமது அன்றைய நிலைமையைப் பலர் மறந்திருக்கக்கூடும்.

சர். பி. தியாகராயரும், டாக்டர் நாயர் பெருமானும் எவ்வளவு இன்னல்களுக்கிடையிலும், எதிர்ப்புகளுக் கிடையிலும் அக்காலத்தில் இவ்வியக்கத்தை ஆரம்பித்து, அதை வளர்த்து நமக்கு அழியாத பெரும் பொக்கிஷமாக வைத்து விட்டுப் போனார்கள் என்பதை உணர்ந்தவர்கள் அப்பெரியோர்களுக்கு என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த இயக்கத்தை ஒழிப்பதற்கு இதன் எதிரிகள் அன்று தொடங்கி இன்றளவும் கையாண்டுவரும் சூழ்ச்சிகளுக்கும், கொடுத்துவரும் இடையூறுகளுக்கும் ஓர் அளவுண்டோ?

உரிமை வேண்டுவது வகுப்புவாதமா?

இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலமுதற் கொண்டு இன்றுவரை நம் எதிரிகள் இதை “வகுப்புவாத இயக்கமென்று” சொல்லி இதை நசுக்க முயற்சிகள் பல செய்து வருகின்றனர். ஒரு நாட்டில் 100க்கு 97 பெயரினராக உள்ள மக்கள் ஒன்றுபட்டுத் தங்களுக்கு உரிய சமுதாய உரிமைகளைப் பெற முயற்சிப்பது வகுப்புவாதமானால் 100க்கு 3 பெயராகவுள்ள ஒரு சிறு கூட்டத்தினர் நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதும், அந்நிலை என்றும் மாறாமல் அப்படியே நிலைத்திருப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு வருவதும் என்ன வாதமாகும்? நம்மில் ஒரு சிலர் நெஞ்சுரமில்லாததாலும், நேர்மைக் குணமில்லாததாலும், பேராசையாலும், சமூகத்தை விற்றாவது தான் வாழ்வது குற்றமன்று என்று கருதி எதிரிகட்குக் கையாளாகி, அவர்கள் பின்னின்று தாளம் போடுவதாலேயே நமது எதிரிகள் நமது உரிமைகளைப் பெற நாம் முயற்சிப்பதை வகுப்புவாதம் என்று சொல்லத் துணிந்துவிட்டனர். நாம் இந்த நாட்டின் எந்த ஒரு தனி வகுப்புக்கோ, சிறுபான்மை சாதிக்கோ தனி உரிமைகள் வேண்டுமென்று கேட்கின்றோமோ? அல்லது நம்மில் எந்தக் கூட்டத்தாராவது இந்நாட்டிலுள்ள எல்லோரினும் தாங்களே உயர்ந்த சாதியினராதலால் தனிச்சலுகை தங்களுக்குக் காட்டப்பட வேண்டுமென்று கேட்கின்றோமா? சூழ்ச்சியிலும், சுயநலத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு சிறு-மிகச் சிறு கூட்டத்தாரால், அதுவும் அவர்கள் வஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட பெருஞ் சமூகம் விழிப்படைவது வகுப்புவாதமானால், அந்த வகுப்பு வாதம் நம் உரிமைகளை நாம் பெறும்வரை நம்மை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்பதே நமது ஜீவாதார கோரிக்கையாக இருக்க வேண்டுமென்று கூற ஆசைப்படுகின்றேன்.

இந்நாட்டில், இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும், அல்லது தென்னிந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டாலும் சரித்திர காலந்தொட்டே வகுப்புவாதம், வகுப்புவாதப் போர் இல்லாத காலம் எப்போதாவது இருந்ததா என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? ஒரு சிலரடங்கிய ஒரு சிறு கூட்டத்தினர் தங்கள் நாகரிகம், கலைகள், ஆசார அனுஷ்டானம், பழக்க வழக்கங்கள் இவைகளில் 100க்கு 97 பேர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும், தம்மை ஒப்பாரும், மிக்காரும் இல்லையென்றும், பூதேவரென்றும் ஆதலால் தங்களுக்குத் தனி உரிமை வேண்டுமென்றும், தாங்கள் மெய் வருந்தி உழைக்கக் கூடாதவர்கள் என்றும் சொல்லிக் கொண்டும் மற்றவர்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து “வகுப்புவாதிகள்” என்று சொல்வது யோக்கியமாகுமா என்றும், அவர்கள் சொல்வது சரியென மற்றவர்கள் ஒப்புக்கொள்வது வீரமாகுமா என்றும் கேட்கின்றேன்.

நம்மை வகுப்புவாதிகள் என்று அழைக்கும் நம் எதிரிகள் நாம் அரசியல் சுதந்தரங்களிலும், அரசாங்கப் பதவிகளிலுந்தான் மிகுதியாக வகுப்புவாத உணர்ச்சி காட்டி, நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் விளைவிக்கின்றோம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். 100க்கு 97 பேர்களாக உள்ள நாம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நம் பங்கு உரிமைகளைப் பெற விரும்புகின்றோமா? அன்றி அளவுக்கு மீறிய உரிமை களை அநியாயமாக அனுபவிக்க விரும்புகின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும்.

நமது நிலை

இவ்வியக்க ஆரம்பகாலத்தில் நம் நிலை எப்படி இருந்தது?

ஹிட்லர் ஜெர்மன் யூதர்களிடம் கொண்டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்னென்னவென்று அவர் சொல்லுகின்றாரோ-அவைகளும் அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நமது பெருந்தலை வர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங் களாயிருந்தன.

கல்வி

1916-வது ஆண்டில், நம்இயக்கம் ஆரம்பிக்கப்படுமுன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலை யிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப்போம்.

கல்வி இலாகா நிர்வாகத்தில் மொத்தம் 518 உத்தியோகங்களில் 400 உத்தியோகங்கள் பார்ப்பனர் கள் கையிலிருந்தன. 73 உத்தியோகங்களை ஆங்கிலோ இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர் இம்மூன்று வகுப்பினரும், 28 உத்தியோகங்களை முஸ்லீம்களும் வகித்து வந்தனர். வகுப்புவாதம் பேசுவதாகச் சொல்லப்படும் நமக்கு, அதாவது “பார்ப்பனரல்லாத இந்துக்கள்” என்பவர்களுக்கு 18 உத்யோகங்களே இருந்தன. 400 எங்கே? 18 எங்கே?ஜெர்மனியில் அப்பொழுதிருந்த யூதர்கள் நம் நாட்டுச் சிறு கூட்டத்தாரைப்போல இவ்வளவு அதிகப்படியான உத்தியோகங்களைக் கைப்பற்றியிருந்திருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கின்றது.

நம் இயக்கம் தோன்றிய காலத்தில் இந்நாட்டில் 100க்கு 7 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அந்த எழுதப் படிக்கத் தெரிந்த மக்களில் 100க்கு 90 பேருக்கு மேல் பார்ப்பனர்களே. படித்த இந்தியரில் “பார்ப்பனரல்லாத இந்துக்கள்” தொகை 100க்கு 5-க்கு மேல் இருந்திருக்க முடியாது. நூற்றுக்குத் தொண்ணூறு எங்கே? ஐந்தெங்கே! ஆனால் கல்வித் திறமையிலோ பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு இளைக்காமலே இருந்து வந்திருக்கின்றார்கள்.1915-ம் வருடத்திய சென்னைப் பல்கலைக்கழக அறிக்கைப்படி, 1914-ம் ஆண்டில் எப்.ஏ. (F.A.) பரீட் சைக்கு அனுப்பப்பட்ட 1900 பார்ப்பனப் பிள்ளைகளில் 775 பேர் தேறியிருந்தால், 340 பார்ப்பனரல்லாத இந்து மாணவர்களில் 240 பேர் தேறியிருக்கின்றார்கள். பி.ஏ. பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் பரீட்சை கொடுத்த 469 பார்ப்பனப் பிள்ளைகளில் 210 பேர் தேறியிருந்தால், 133 பார்ப்பனரல்லாத மாணவர்களில் 60 பேர் தேறியிருக் கின்றனர். பி.ஏ. சையன்ஸ் பரீட்சையில் 442 பார்ப்பனப் பிள்ளைகளில் 159 பேர் தேறியிருந்தால், பார்ப்பனரல் லாத பிள்ளைகளில் 107க்கு 49 பேர்கள் தேறியிருக் கிறார்கள். பி.ஏ. (புதிது) முதல் பகுதியில் 430க்கு 270 பார்ப்பனப் பிள்ளைகளும் 108க்கு 64 நம் சமூகப் பிள்ளைகளும் தேறியிருக்கின்றனர். இரண்டாவது பகுதியில் 426 பார்ப்பனப் பிள்ளைகளுக்கு 203 பேரும், 117 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 63 பேரும் தேறியிருக்கிறார்கள். எம்.ஏ. (M.A.) பரீட்சையில் பரீட்சைக்கு அனுப்பப்பட்ட 157 பார்ப்பனப் பிள்ளைகளுள் 67 பேரும் பார்ப்பனரல்லாதவர்களில் 20 மாணவர் களுக்கு 9 பேரும் தேறியிருக்கின்றனர். பி.ஏ., எல்.டி., (B.A., L.T.)) என்ற உபாத்திமைத் தொழிற் பரீட்சைக்குச் சென்ற 104 பார்ப்பனப் பிள்ளைகளில் 95 பேர் தேறியிருந்தால் நமது சமூக மாணவர்கள் 11 பேரில் 10 பேர் தேறியிருக்கின்றார்கள்.

பரீட்சைத்தாள் திருத்துபவர்கள் எல்லோரும் அநேகமாகப் பார்ப்பனர்களாகவே இருந்தும்- கல்வி யிலாகா அவர்கள் கையிலிருந்தும் நம் மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு மேலாகவே அநேக பரீட்சைகளில் தேறியிருப்பது கவனிக்கத் தக்கது. கூடவே இன்னொன்றும் கவனியுங்கள். பார்ப்பனப் பிள்ளைகள் 100 பேர் ஒரு பரீட்சைக்கு அனுப்பப்பட்டால், பார்ப்பனரல் லாத பிள்ளைகள் அதில் 4-இல் ஒரு பாகத்திற்குக் குறைவாகவும் சில பரீட்சைகளுக்கு 100க்கு 10 விகிதத் துக்குக்கூட குறைவாகவுமேதான் அனுப்பப்பட்டிருக் கின்றார்கள்.

இவற்றிற்குக் காரணம் யாதாக இருந்திருக்கலாம்?

பரீட்சை கொடுக்கும் திறமையில் சரி சமமான, ஏன், மேலான சக்தி உடையவர்களாக இருந்தும் பரீட்சைக்கு அனுப்பப்படும் கணக்கு விகிதத்தில் மாத்திரம் நம் மாணவர்கள் இவ்வளவு குறைந்திருப்பதற்குக் காரணம், கல்வி இலாகாவை அவர்கள் கைப்பற்றிவிட்ட ஒரு காரணம் அல்லாமல் வேறு என்னவாக இருக்கக்கூடும்? இவ்வொரு காரணத்தாலேயே உத்தியோகங்களிலும் நம்மவர்கள் சரியான விகிதம் பெற முடியாமல் செய்யப் பட்டுப் போய்விட்டது என்று கூசாமல் சொல்லலாம்.

உத்தியோகம்

1916ஆம் ஆண்டில் புரோவின்ஷியல் சிவில் சர்வீஸ் என்னும் உயர்தர நிர்வாக உத்தியோகத்தில் ஜனத்தொகையில் 100க்கு 3 பேர் எண்ணிக்கை கொண்ட பார்ப்பனர்களில் 100 உத்தியோகஸ்தர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அப்பதவியிலிருந்த பார்ப்பனரல்லாதவர்கள் 29 பேரேயாகும். நீதி இலாகா வில் 190 பார்ப்பனர்கள் பதவி வகித்திருந்தார்கள். பார்ப்பனரல்லாதவர்களில் 35 பேர்தான் பதவி வகித்திருந்தார்கள்.

மற்றும் கொழுத்த சம்பளங்களும், ஏகபோக அதிகாரங்களுமிருந்த எல்லா உத்தியோகங்களிலும் இவ்விரண்டு வகுப்பாருக்கும் மேல்காட்டிய விகிதாசார முறையிலோ, அன்றி, இதைவிட மோசமான விகிதாசார முறையிலோ தான் உத்தியோகங்கள் இருந்து வந்திருக்கின்றன.

மேலும், “உத்தியோகத்தில் கெட்டிக்காரர் பார்ப்பனர்; வக்கீல்களிலே கெட்டிக்காரர் பார்ப்பனர்; ஆங்கில அறிவிலே சிறந்தவர்கள் பார்ப்பனர்; தமிழில் பாண்டித் தியம் உடையவர்கள் பார்ப்பனர்; அறிவு நூல் தேர்ச்சி மிக்கவர்கள் பார்ப்பனர்; ஆராய்ச்சியில் வல்லவர்கள் பார்ப்பனர்” என்று கெட்டிக்காரப் பட்டமெல்லாம் பார்ப்பனர்களுக்கே ஒழிய, மற்றவர்களுக்குக் கிடையாது என்ற நிலை இருந்து வந்தது.

பொருளாதாரம்

பாடுபடாமல் பொருள் திரட்டுவதில் பார்ப்பனர்களுக்கே சகல வசதியும் இருந்து வந்தது. பார்ப்பனரல்லாதாரோ நெற்றி வேர்வை நிலத்திற் சொட்ட பாடுபட்டு ஈட்டும் பொருளையும் பல வழிகளிலும் பார்ப்பனர்களுக்கே கொடுக்க வேண்டியவர்களாயிருந்து வந்தார்கள்.

சமுதாயத் துறை

சமுதாயத் துறையிலோ, மிக்க இழிந்த பார்ப்பனன் கூட, உயர்ந்த சாதியான் ஆகவும்; மிகச்சிறந்த, அறிவுள்ள, ஒழுக்கம் பூண்ட செல்வந்தனான பார்ப்பனரல்லாதான் கீழ்ச் சாதியானாகவும் மதிக்கப்படுவதாக இருந்தது. ஆகவே கல்வி, பதவி, நிபுணத்வம், செல்வம், சமூக உயர்வு, இதுபோன்ற நன்மைகள் எல்லாம் ஒரு சிறு சாதிக்கும், அதற்கு மாறுபட்டதெல்லாம் நமக்கும், என்ற நிலையிருந்தால் இது, ஹிட்லர், ஜெர்மன் யூதர்களைப் பற்றிக் கூறும் குறைகளுக்கு அதிகமாக இருந்தனவா, அன்றிக் குறைவாக இருந்தனவா? என்பதை ஆலோசித் துப் பாருங்கள்.

துவேஷம் உண்டா?

நம் நிலைமை இப்படியிருந்தும், நாம் யாதேனும் ஒரு தனிமனிதன் மீதோ, அன்றி வகுப்பு மீதோ வெறுப்புக் கொண்டிருக்கின்றோமா? எங்களது வீழ்ச்சிக்குக் காரண மான தடைகளை நீக்கி, தளைகளை அறுத்து மேல் நிலை அடைய வேண்டுமென்றும், மக்கள் அனைவரும் சமமாகவும், சகல உரிமைகளையும் அனுபவிக்க சம சந்தர்ப்பம் உடையவர்களாகவும் இருக்க வேண்டு மென்றுந் தானே விரும்புகின்றோம்? இது துவேஷமா?

கொசுவலை உபயோகிப்பதால் நாம் கொசுக்களுக்கு துவேஷிகளாகி விடுவோமா? மூட்டைப்பூச்சி பிடிக்காமலிருப்பதற்கு நம் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதால் நாம் மூட்டைப்பூச்சி துரோகிகள் ஆகிவிடுவோமா? இப்படிப்பட்ட துவேஷத்திற்கும் துரோகத்திற்கும் நாம் ஆளாகக் கூடாது என்று பயந்து பயந்து, பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி நடுங்கி நம் குறைகளை வெளியிலே எடுத்துச் சொல்வதற்கும் அவைகளை நிவர்த்திப்பதற்கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளிகளாக ஆகிவிட்டோம்.

இன்றுதான் என்ன?

இப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவித்தும் நம்மில் தலைசிறந்த அறிவாளிகளும், செல்வந்தர்களும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களும், கடந்த 22 வருடங்களாக, இந்த ஸ்தாபனத்திற்காக எவ்வளவோ பாடுபட்டு வந்திருந்தும் நமது தற்போதைய நிலைமை தான் என்னவென்று பாருங்கள்.

அநேக விஷயங்களில் முன்நிலை சிறிதும் மாறுதல் அடையாமல் பழையபடி தானேயிருந்து வருகிறது? இந்த 22 வருடங்களில் நமது நிலைமையை உயர்த்துவதற் குச் செய்துவந்த வெகு சிறு காரியங்களும் இப்பொழுது நம் எதிரிகளால் அழிக்கப்படுகின்றன. நாம் என்றென்றும் தலைதூக்க முடியாவண்ணம் எவ்வித முன்னேற்றத் திற்கும் முயற்சிகூட செய்ய முடியாதபடி நம் எதிரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நம் இயக்கத்திற்கும் நம் நன்மைக்கும் உண்மையாக உழைத்துவந்த பெரியோர் களில் ஏதோ இரண்டொருவர் தவிர மற்றவர்களெல்லாம் தங்கள் செல்வத்தை இழந்தார்கள்; தங்கள் வருவாயைக் கெடுத்துக் கொண்டார்கள்; குடும்பப் பெருமையை இழந்தார்கள்; கெட்ட பெயரும் சுமத்தப்பட்டார்கள். மற்றும் பல வழிகளிலும் துன்பப்பட்டிருக்கிறார்கள். உண்மை இப்படியிருந்தும், நம் இயக்கம், தனிப்பட்ட சிலருடைய சுயநல இயக்கம் என்றும், பணம், உத்தியோகம், இவைகள் தேடும் இயக்கம் என்றும், அழிவு வேலை செய்யும் இயக்கம் என்றும், தேசத் துரோகமும், வகுப்புத் துவேஷமும் கொண்ட இயக்கம் என்றும், ஒரு சுயநலக் கூட்டத்தாரால் கூறப்படுவது விந்தையினும் விந்தையே!

தோழர்களே!

இந்தச் சந்தர்ப்பத்தில் நமது தலைவர் பொப்பிலி அரசர் அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நமது கட்சியானது பல வழிகளிலும் சிதறுண்டு, பலஹீனப்பட்டிருந்த காலத்தில் பொப்பிலி அரசர் அவர்கள் தன் முயற்சியையும் செல் வத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தி னார்கள் என்பது நீங்கள் யாவரும் அறிந்ததேயாகும். எந்தக் காரணத்தைக் கொண்டு அவர் கட்சித் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரேதான் நம் கட்சிக்கு இன்னும் தலைவர் என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பொப்பிலி அரசர் அவர்களுடைய நெஞ்சுறுதி, கட்சிப் பற்றுதல், தியாகம் முதலிய அருங்குணங்கள் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக அருமையாகும். ஆகையால் இன்னமும் நான் அவர்கள் இட்ட கட்டளை யை மீறாமல் அவருக்கு ஒரு உதவித் தொண்டனாகவே இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன் என்பதே எனது எண்ணமாகும். இச்சந்தர்ப்பத்தில் இதுகாறும் என்னுடன் கூட, பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நம் மக்களுக்கு இடை விடாத் தொண்டு புரிந்து கொண்டு வருகின்ற என தருமைத் தோழர்களான, சௌந்திரபாண்டியர் அவர் களுக்கும் விசுவநாதம் அவர்களுக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

(தொடரும்) keetru.com jan 2017

13 08 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 45

பெரியார் 13.11.1938இல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பேசியதற்காக ஒரு ஆண்டு கடுங் காவல் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும், மறுநாள் 14.11.1938 அன்று பெத்துநாய்க்கன் பேட் டையில் பள்ளியின் முன் பெண்கள் மறியல் செய்வதற்குத் தயாராயிருந்தபோது நடைபெற்றக் கூட்டத்தில் பேசியதற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என்றும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி மாதவராவ் 6.12.1938 பிற்பகல் 3.15 மணிக்குத் தீர்ப்பளித்தார். பெரியார் எதிர் வழக்காடாமலும், அபராதம் கட்ட மறுத்தும் நீதிமன்றத்தில் தான் செய்ததில் சட்டமீறல் எதுவும் இல்லை என்ற அறிக்கையை மட்டும் படித்துக் கொடுத்துவிட்டு, மூன்றாண்டு கடுங் காவல் தண்டனையை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் சென்றுவிட்டார்.

பெரியார் அநியாயமாகச் சிறைக்கு அனுப்பப்பட்ட தைக் கண்டித்து மறுநாள் மாலை 6.30 மணிக்கு சென்னைக் கடற்கரையில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 30,000 பேர் கலந்துகொண்டனர். கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமை வகித்தார். சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கலிபுல்லா சாகிப், என்.வி. நடராசன், டி.ஏ.வி. நாதன் உட்பட பலர் முதலமைச்சர் இராசாசியின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டித்துப் பேசினர். கி.ஆ.பெ.விசுவ நாதம் இட்லரைவிட மோசமான கொடுங்கோலர் ஆச்சாரியார் என்று பேசினார். முன்னாள் ஹோம் மெம்பரும், முன்னாள் அமைச் சருமான சர். பன்னீர்செல்வம் ஆச்சாரியார் அடக்கு முறையினால் தென்னாட்டுக்கு ஏற்படப்போகும் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். அடக்குமுறையினால் ஆள்வோர் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஆள்வோருக்கு எதி ராகவே அது திரும்பும் என்று எச்சரித்தார்.

சென்னை மாநிலம் முழுவதும் பெரியார் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. 8.12.1938 அன்று திருச்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கூட்டத்தில் பேசிய கி.ஆ.பெ. விசுவநாதம் “ஈ.வெ.ரா. கிரிமினல் குற்றங்கள் எதையும் செய்ய வில்லை. ஆச்சாரியார் ஆட்சியில் ‘தமிழ் வாழ்க’ என்று சொன்னாலே போதும், நீங்கள் சிறை விருந்தி னராக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்” என்று பேசினார். பெரியாருடைய பிறந்த நாள் விழா 18.12.1938 அன்று தமிழ் நாடு முழுவதும் கொண்டாடும்படி 10.12.1938 விடுதலையில் கி.ஆ.பெ. அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

திருச்சி விசுவநாதம் அறிக்கை

சுயமரியாதை இயக்கத் தலைவரும், தமிழர் இயக்கத் தந்தையும், ஜஸ்டிஸ் கட்சியின் லீடரும், தமிழ்நாட்டுப் பெரியாருமாகிய பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள், டிசம்பர் 18ஆம் தேதி அன்று காங்கிரஸ் ஆட்சியின் சிறைச்சாலையில் தொடங்குகிறது.இவ்விழாவைப் பெருஞ் சிறப்பாகக் கொண்டாடி, “பெரியார் வாழ்க!” என்று பேரொலி முழக்க வேண்டி யது தமிழ்நாட்டு மக்கள் அனைவருடையவும் கடமை யாகும். சென்னை ராஜதானி தலைநகரத்திலிருந்து திரு நெல்வேலி ஜில்லாவின் கடைசிக் கிராமம் வரை உள்ள எல்லா ஊர்களும் இவ்விழாவை நடத்துவதில் பெரும் பங்கு எடுத்துக் கொள்ளுதல் இன்றியமையாத தாகும்.

பெரியார் பிறந்த நாள் கொண்டாட்ட விழாவைக் கீழ்க்கண்டவாறு நடத்தலாம்.

1. பொது ஜனங்களுக்கு 18ஆம் தேதிக்கு முன்பே தகுந்த முறையில் முன் அறிவிப்புச் செய்தல்.

2. 18ஆம் தேதி காலையில் தமிழ்க் கொடி, ஜஸ்டிஸ் கொடிகளை ஆங்காங்கு உயர்த்துதல்.

3. முற்பகல் முழுதும், பொய்ப் பிரச்சாரப் பத்திரிகை களை வாங்கிப் படித்துவரும் நண்பர்களிடம் “விடு தலை”யைப் படிக்க வேண்டிய அவசியத்தை, உண்மையை எடுத்துக் கூறுவதின் மூலம் நன்கு விளக்கிக் காட்டுகிற அரும்பணியைச் செய்து “விடுதலை”யை வளர்த்தல்.

4. பிற்பகலில் பெரியார் அவர்களின் உருவப் படத் துடன் ஊர்வலம் வருதல்.

5. மாலையில் பொதுக்கூட்டம் கூட்டி சொற்பொழிவு நிகழ்த்துதல்.

6. பெரியாரைப் பாராட்டுதல், கட்டாய இந்தியை வெறுத்தல், காங்கிரஸ் கட்சியின் அடக்குமுறை ஆட்சியைக் கண்டித்தல், வேலூர், சென்னை மகாநாடுகளில் கலந்துகொள்ளுதல் ஆகிய தீர்மா னங்களை நிறைவேற்றுதல்.

7. இரவு உணவுக்குப் பின்னும், உறங்குவதற்கு முன்னும் காங்கிரஸ் ஆட்சியின் வகுப்புவாதச் செயலை, வரிக்கொடுமையின் விளைவை, வாக்குறுதிக்கு மாறான செயலை, மகாத்மாவின் அஹிம்சா தர்ம ராம ராஜ்ய தடியடி துப்பாக்கிப் பிரயோக கட்டாய இந்தித் திட்ட சிறைச்சாலை தர்பாரைச் சிறிது நேரம் சிந்தித்து உணர்தல்.

இப்பெருநாளைக் கொண்டாடுவதில் ஜஸ்டிஸ் சங்கங்கள், தமிழர் சங்கங்கள், சுயமரியாதைச் சங்கங்கள், முஸ்லீம் லீக், கிறிஸ்தவ சங்கங்கள், ஆதி திராவிட மகாசபைகள், இளைஞர் சங்கங்கள் ஆகிய அனைத்தும் பெரும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டிக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு கி.ஆ.பெ.விசுவநாதம் அறிக்கை வெளியிட்டார்.

(விடுதலை 10-12-1938)

பெரியார் தண்டனை -

சட்டசபையில் சரமாரி கேள்விகள் பன்னீர்செல்வம், பக்தவத்சலம், குமாரராஜா முயற்சி “பெரியாருக்கு ஏ வகுப்பு”

“மகாநாட்டுத் தலைமை வகிக்க விடுதலை செய்வது பற்றி யோசிக்கப்படும்”

சர்க்கார் பதில்

நேற்று சென்னை சட்டசபையில் பெரியார் ஈ.வெ.ரா. தண்டனை விஷயமாக தோழர் பக்தவத்சலம் நாயுடு (1) ஜார்ஜ்டவுன் மாகாண மாஜிஸ்திரேட்டினால் பெரியார் ஈ.வெ.ரா. தண்டிக்கப்பட்டது. உண்மை தானா? (2) உண்மையானால் என்ன குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டது. (3) அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன? (4) அவருக்கு எந்த வகுப்பு அளிக்கப்பட்டிருக் கிறது என சிறை மந்தியை ஒரு அவசரக் கேள்வி கேட்டார்.

அக்கேள்விக்கு கனம் ராமநாதன் பதிலளித்த தாவது: மாகாண மாஜிஸ்திரேட்டினால் தண்டனையளிக் கப்பட்டது வாஸ்தவமே. இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் கட்டுப்பாடாகவும் தொடர்ச்சியாகவும் தொல்லை விளைவிக்கத் தூண்டியதற்காக ஒவ்வொரு குற்றத்துக் கும் ஒரு வருஷக் கடுங்காவல் தண்டனை யும் 1000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவருக்கு ஏ வகுப்பு அளிக்கப்பட்டது.

அப்பால் சரமாரியான உப கேள்விகள் கேட்கப்பட்டன.

ஸர் பன்னீர்செல்வம் : குற்றப் பத்திரிகை வாசகத் தைப் படித்துத்தானா இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டது?

மந்திரி : அவர் தூண்டியதாக குற்றப் பத்திரிகை கூறுகிறது.

குமாரராஜா : அவரே பள்ளிக்கூடம் முன் மறியல் செய்தாரா?

மந்திரி : அவர் தூண்டியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

ஸர். பன்னீர்செல்வம் : விடுதலை விஷயமாக அவர்அரசியல் கைதியாக மதிக்கப்படுவாரா, சாதாரண கைதியாக மதிக்கப்படுவாரா?

மந்திரி : விடுதலை விஷயம் வேறு; வகுப்பு நிர்ணயம் செய்யும் விஷயம் வேறு. வழக்கின் தராதம்மியங்களைப் பார்த்தே அரசியல் கைதிகளை சர்க்கார் விடுதலை செய்வார்கள். கேட்ட கேள்வி வகுப்பு நிர்ணயத்தைப் பற்றியதே.

ஸர். பன்னீர்செல்வம் : அவருக்கு ஏ-வகுப்பு அளிக்கப்பட்டது எப்போது?

மந்திரி : சமீபத்தில்.

ஸர். பன்னீர்செல்வம் : அது சம்பந்தமாக உத்தர வுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டனவா?

மந்திரி : ஆம்.

ஸர். பன்னீர்செல்வம் : பெரியார் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது சர்க்காருக்குத் தெரியுமா?

மந்திரி : அதுபற்றிப்பேச என்னைவிட கனம் மெம்பரே அதிக லாயக்குடையவர்.

தலைவர் : அதனாலேயே அவருக்கு ஏ-வகுப்பு அளிக்கப்பட்டிருக்கலாம்.

ஸர். பன்னீர்செல்வம் : பொது ஜனத் தொண்டாற்ற அவருக்கு வசதியளிப்பது பற்றி சர்க்கார் யோசிப்பார்களா?

மந்திரி : அவ்விஷயத்தைப் பற்றி சர்க்கார் யோசிப் பார்களா?

குமாரராஜா : சர்க்காரை எதிர்த்துக் கிளர்ச்சி செய் வதையடக்கும் சர்க்கார் கொள்கைப்படிதான் பெரியார் ஈ.வெ.ரா. தண்டிக்கப்பட்டாரா?

முதன் மந்திரி : அம்மாதிரி கொள்கை எதுவும் சர்க்காருக்கு இல்லை.

குமாரராஜா : கட்டாய இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததற்காகத் தானே பெரியார் ஈ.வெ.ரா.வும் ஏனை யோரும் தண்டிக்கப்ப்டடார்கள்?

மந்திரி : பெரியார் ஈ.வெ.ரா. சட்டத்தை மீறினார்.

குமாரராஜா : நான் கேட்ட கேள்வி அரசியல் கிளர்ச் சியைப் பற்றியது?

மந்திரி : இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்வது அனு மதிக்கக் கூடியதே. ஆனால் ஈ.வெ.ரா. சட்டத்தை மீறி னார்; அதனாலேயே அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது.

தலைவர் : சட்டசபை மெம்பர்கள் அறியும் பொருட்டு தாங்கள் குற்றப்பத்திரிகையைப் படித்துக் காட்டலாமே.

முதன் மந்திரி : அவர் செய்த குற்றம் என்ன என்பது தான் கேள்வி. குற்றப்பத்திரிகை இரண்டு பக்கம் கொண்டது.

பக்தவத்சலம் நாயுடு : போலீசார் குற்றப் பத்திரிகை தயார் செய்யும் முன் ஈ.வெ.ரா. மீது வழக்குத் தொடரப்படுவது பற்றி சர்க்காருக்குத் தெரியுமா?

முதன் மந்திரி : இம்மாதிரிக் கேள்விகளுக்கு சர்க் கார் பதிலளிக்கமாட்டார்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சர்க்காருக்குத் தெரியத்தான் செய்யும்.

கலா வெங்கடராவ் : பெரியார் என்றால் பொருள் என்ன? ஒருவரும் இக்கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

பெரியார் என்றால் மகாத்மா பட்டம் மாதிரி என ஸர். பன்னீர்செல்வம் அவர் போக்கில் கூறினார்.

அப்பாதுரைப் பிள்ளை : கடுங்காவல் தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டிருப்பதினால் அபராதத் தொகையையும் சர்க்கார் குறைப்பார்களா?

முதன் மந்திரி : இந்த விஷயங்கள் எல்லாம் உரிய காலத்து கவனிக்கப்படும். ஆனால் அபராதத் தொகை சர்க்காருக்குக் கிடைக்குமென நான் எண்ணவில்லை.

(விடுதலை 14-12-1938)  தொடரும் keetru.com dec 2016

09 08 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 44

பெரியாரும் சிறை புகுந்தார்

கடைசியாகப் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சிறை புகுந்துவிட்டார். சிறைவாசம் அவருக்குப் புதியதல்ல. நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இது அவரது எட்டாவது சிறைவாசமாகும். சிறைவாசத்துக்குப் பெரி யார் பயந்தவருமல்ல; சிறைக்கூடம் அவருக்கு மாமி யார் வீடு மாதிரி. சர்க்கார் அழைப்பு வரவேண்டியது தான் தாமதம். மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு தயங் காமல், சிறை நோக்கிப் புறப்பட்டு விடுவார். சிறை வாசத்தில் அவருக்கு அவ்வளவு காதல். எதிர் வழக் காடுவது அவருக்குப் பெரிய வெறுப்பு. ஏற்கெனவே ஏழு முறை இவ்வாறு சிறைபுகுந்திருக்கிறார். இப்பொ ழுது புகுவது எட்டாவது முறை. நம்மைப் பொறுத்த மட்டில் அவர் சிறைபுகுவது பற்றி வருத்தப்படவில்லை. ஏனெனில் அவருக்கு ஓய்வு மிகவும் தேவையாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஊணுறக்கமின்றி ஊரூராய்ச் சுற்றி யாருக்குத்தான் பாடுபட முடியும்! உடம்பு கல்லா? தொண்டை இரும்பா? பெரியார் உரு வத்திலும் பருத்துப் பொதிமாதிரி பருமனாயிருப்பதி னால் அவர் மகா பலசாலியென்றும், திடகாத்திரமுடை யவர் என்றும் எல்லாரும் எண்ணக்கூடும்.

உடல் நிலை
ஆனால் பெரியாரைப் போல பலவீனம் - நோயாளி - வலிவற்ற இருதயமுடையவர் - அவரது தோற்ற முடையவர்களில் அதிகப்பேர் இருக்கமாட்டார்கள் என்ற உண்மையைப் பலர் அறியமாட்டார்கள். அவரு டைய இருதயம் மிகவும் பலவீனமாக இருப்பதினால் ஒரு மாதம், இரண்டு மாதம் பரிபூரண ஓய்வெடுக்க வேண்டுமென டாக்டர்கள் எத்தனையோ முறை எச்சரிக்கை செய்திருக்கின்றனர். மன்னன் லக்ஷ்யம் செய்ய வேண்டுமே! சென்னை ஜெனரல் ஆஸ்பத் திரியில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது டாக்டர் குருசாமி முதலியார் எச்சரிக்கையையும் லக்ஷ்யம் செய்யாமல் தியாகராயநகர் பொதுக்கூடத்துக்குச் சென்று ஒரு மணிநேரம் பேசியதையும், அதற்காக டாக்டர் குருசாமி முதலியார் கோபித்துக் கொண்ட தையும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் அறிந்திருக்கலாம். ஆபீசில் வேலை செய்து கொண்டி ருக்கும்போது பலமுறை மயங்கி விழுந்திருக்கிறார். சில வாரங்களுக்குமுன் அவரது சகோதரி திருவாட்டி கண்ணம்மாள் பூந்தோட்டத்தில் உலாவிக் கொண்டி ருந்த போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். கடுமை யான நோயில் படுக்கையிலிருக்கும் போதும்கூட அவர் சும்மா இருப்பதில்லை. ஓயா உழைப்பில் அவருக்கு அவ்வளவு கிறுக்கு. இரவு 8 மணி வரை எழுத்து வேலை நடத்திய பின்பு 10 மணிவரை ‘விடுதலை’ “பார்சல்” கட்டவும் அவர் தயங்கு வதில்லை. உயிரையும் வெறுத்து வேலை செய்யும் இந்த உழைப் புக் கிறுக்கர் சிறைப்பட்டாலன்றி ஓய்வெடுக்க முடியுமா? ஆகவே அவரைச் சிறைப் படுத்தி ஒன்றரை வருஷகாலம் ஓய்வு கொடுக்கும் ஆச்சாரியார் சர்க்காருக்கு நமது மனமார்ந்த வந்தனம்.

காங்கிரஸ் வாழ்வு

பெரியார் காங்கிரஸ் வாதியாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். குக்கிராமங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு பரவியிருந்ததற்கு பெரியார் உழைப்பே காரணம் என்பதை அவருடைய பழைய நண்பர் கனம் ஆச்சாரியாரே ஒப்புக்கொள்ளக்கூடும். சிறை புகுவதை காங்கிரஸ் ஒரு வேலைத் திட்டமாக ஒப்புக்கொண்ட பிறகு, தற்கால காங்கிரஸ் தியாகிகள் சிறை புகுமுன் பேசி சிறைபுகுந்து “அக்கினி பரீட்சையில்” தேறிய பெருமை நமது பெரியாருக்கே. முதன்முதல் பெண்களை சுதந்தரப் போரில் ஈடுபடுத்திய புகழும் நமது பெரியா ருக்கே; வைக்கம் சத்தியாக்கிரகத்துக்குத் தமது அருமை மனைவியாரையும் அழைத்துக் கொண்டு போனார். வைக்கம் சத்தியாக்கிரகப் போரில் பெரியார் மனைவி யாரும் ஈடுபட்டார். ஆனால் திருவிதாங்கூர் சர்க்கார் அவரை சிறைப்படுத்தவில்லை. மனைவி சகிதம் விடுதலைப் போரில் ஈடுபட்டவர் இந்தியாவில் ஒருவர் உண்டானால், அவர் நமது பெரியாரே. அக்காலத்திலே காங்கிரசில் நமது பெரியாருக்கு இருந்த மதிப்பு அபார மானது.

அன்று காந்தியார் சொன்னது

பம்பாயில் சமாதான மகாநாடு கூடிற்று. காலஞ் சென்ற சர். சங்கரன் நாயர் அதன் தலைவர். மிதவாதி கள், அமிதவாதிகள், நடுநிலைமை வாதிகள் எல்லாம் அக்கூட்டத்துக்கு விஜயம் செய்திருந்தனர். அயல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் கூட்ட நடவடிக்கைகளைக் குறிப் பெடுக்கப் பிரசன்னமாயிருந்தார்கள். பொக்கைவாய் காந்தியார் இடுப்புத் துணியுடன் தலைவர் சர். சங்கரன் நாயர் வலப்பக்கத்தில் அர்ந்திருந்தார். முப்பதினாயிரம் தொண்டர்கள் சிறைக்கோட்டம் புகுந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறைபுக ஆயத்தமா யிருக்கிறார்கள். சர்க்காருக்கும் காந்தியாருக்கும் சமரசம் உண்டுபண்ண மகா கனம் ஸர். தெஜ் பகதூர் ஸாப்ரூவும், கனம் ஜெய்கரும் ஒரு பக்கம் அரும்பாடுபடுகிறார்கள். சர். சங்கரன் நாயர் தலைமை உரை முடிந்தது. காந்தி என்ன சொல்லப் போகிறார் எனக் கூட்டம் எதிர்நோக்கி நிற்கிறது. காந்தியார் எழுந்தார். புன்னகையுடன் “எனக் கும் சமாதானத்தில் விருப்பமே. ஆனால் ஈரோட்டில் என் அருமைச் சகோதரி நாகம்மாளையும் எனது ஆருயிர்த் தோழர் இ.வெ.ராமசாமியையும் கலக்காமல் முடிவு ஒன்றும் கூறமுடியாது” எனப் பளிச்சென்று கூறி னாராம்.

சமாதான மகாநாட்டார் வியப்பு

ஆச்சாரியாருடன் கலக்காமலோ, சத்தியமூர்த்தி யுடன் கலக்காமலோ, எஸ். ராமநாதனுடன் கலக்கா மலோ, முத்துரங்கத்துடன் கலக்காமலோ முடிவு கூறமுடியாதென்று காந்தியார் அன்று கூறவில்லை. அன்று இந்த தேசபக்தர்களில் பலர் அநாமதேயர்களா கவே இருந்தார்கள். ஆகவே காந்தியார் கூறியதைக் கேட்டு சமாதான மகாநாடு திகைப்படைந்தது. “நாகம் மாளாம், ராமசாமியாம்! அவர்கள் யாரப்பா! காந்தியார் மதிப்புக்குரிய அவர்கள் மகா மகா மேதாவிகளாய் - தியாகிகளாய் இருக்க வேண்டும்” என மகாநாட்டார் வியப்புற்றனராம். நமது நாடோடி ராமசாமிக்கு - பள்ளியில் பயின்றறியா ராமசாமிக்கு அன்று காங்கி ரசிலே அவ்வளவு மதிப்பிருந்தது. அந்த மதிப்பை இழந்து காங்கிரஸ் விரோதியென்றும், பார்ப்பன துவேஷியென்றும், தேசத் துரோகியென்றும் அவர் பெயர் வாங்கிக் கொண்டதற்குக் காரணமென்ன?

சுயநலக்காரராயிருந்தால்?

தமிழர்களே! நீங்கள் எப்பொழுதாவது எண்ணிப் பார்த்ததுண்டா? சுயநலத்தையே நமது பெரியார் பெரிதாக மதித்திருந்தால், அவர் இன்று காங்கிரசிலே ஒரு பரமாத்மாவாகவோ, மந்திரியாகவோ இருந் திருக்கலாம். நியாயமான வருமானம் எதுவுமில்லாமல் லட்சக்கணக்கில் சம்பாதித்து ராஜவாழ்வு நடத்தும் காங்கிரஸ் பக்தர்களைப் போலவே பெரியாரும் ஒரு காங்கிரஸ் பக்தராகவும் சீமானாகவும் இருந்திருக் கலாம். ஆனால் அவருக்கு சுயநலம் என்பதே இல்லை; தமிழர் நலமே அவரது குறிக்கோள். பிறப்பால் கன்னடராயினும் தாம் புகுந்த தமிழ்நாட்டின் பெருங்குடி மக்கள்மீது அவருக்கு அவ்வளவு அழியாத - அடக்க முடியாத பற்று. தமிழன் எவருக்கும் தலைகுனியலாகாது என்பது அவரது பேரவா. தேசிய நோக்கம் கொண்ட காங்கிரசிலே பார்ப்பனியமே ஆதிக்கம் வகித்து வருவதை சேரமாதேவி குருகுல ஸ்தாபனம் மூலம் உணர்ந்த பெரியார், காங்கிரசைத் தலைமுழுகிவிட்டு வெளியே வந்து தமிழர் உயர்ச்சிக் குப் பாடுபடக் கங்கணம் கட்டிக்கொண்டார். ஒரு காலத்திலே பெரியாரின் சிஷ்யனாக இருந்த தோழர் அய்யாமுத்து இவ்வாண்டு குடிநூல் ஆண்டுமலரில் பெரியாரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் “மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோரும் சமம்” என்பதாக ஒரு தீர்மானத்தை திருச்சியில் நடை பெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றி யதை ஆட்சேபித்து சில தலைவர்கள் கமிட்டியை விட்டு அந்நாளில் வெளியேறியதே நாயக்கர் காங்கிரசிலி ருந்து பிரிந்தமைக்கு ஒரு காரணமாயிருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸைத் தலைமுழுகியது தப்பா?

மக்கள் எல்லாம் பிறப்பினால் சமம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால், காங்கிரஸ் கமிட்டி மெம்பர்கள் சிலர் இராஜிநாமா செய்தனர் என்றால் எந்த சுயமரியாதையுடைய மனிதனாவது அந்த காங்கிரசில் ஒட்டிக்கொண்டு இருப்பானா? இப்பொழு தாவது அந்தத் தீர்மானம் காங்கிரஸ்காரரால் ஒப்புக் கொள்ளப்படுகிறதா? இல்லையே! ஆகவே நமது பெரியார் காங்கிரசிலிருந்து பிரிந்ததும் தனி இயக்கம் கண்டு உழைத்து வருவதும் ஆச்சரியமல்ல. சுய மரியாதை இயக்கம் கண்டது முதல் நாளிதுவரை நமது பெரியாரின் முக்கிய லக்ஷ்யமாக இருந்து வருவது தமிழரின் முன்னேற்றமே. வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் ஓரளவு தமிழர் முன்னேற முடியுமென்றெண்ணி அவ்வழியிலும் முயன்று பார்த்தார். பல சந்தர்ப்பங்களில் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒப்புக்கொள்ள காங்கிரஸ் தலைவர் களில் சிலர் இணங்கினராயினும், காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டிய தருணங்களில் சில பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்ததினால் காங்கிரஸ் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்துக்கு எதிரியாகவே இருந்து வருகிறது. ஆகவே காங்கிரஸ் மூலம் தமிழர்களுக்கு நலம் கிடை யாதென்பது பெரியார் துணிபு.

இந்தியை எதிர்க்கும் காங்கிரஸ் அபிமானிகள்

இந்தி கட்டாயப் பாட ஏற்பாடு தமிழர்களை வட நாட்டாருக்கு அடிமைப்படுத்தும் தந்திரம் என உணர்ந் ததும், கட்டாய இந்தியை, ஏனைய தமிழ்த் தலைவர் களையும், பார்ப்பனத் தலைவர்களையும் போல நமது பெரியாரும் எதிர்க்கத் தொடங்கினார். இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிரியான நமது பெரியாரின் புரளியென கனம் ஆச்சாரியார் கூறுவது உண்மைக்கு மாறானதாகும். தோழர்கள் டி.ஆர். வெங்கடராம சாஸ் திரியார், புரோபஸர் சாராநாத அய்யங்கார் போன்ற பார்ப்பனத் தலைவர்களும், விளம்பர மந்திரி கனம் ராமநாதனும் இந்தியை எதிர்த்திருக்கிறார்கள். இந்தி எதிர்ப்புத் தலைவர்களில் ஒருவரான தோழர்சோம சுந்தர பாரதியார் இப்பொழுதும் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். ஆகவே இந்தி எதிர்ப்பு இயக்கம் காங்கிரஸ் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது என்னும் கூற்றுக்கு ஆதாரமே இல்லை. பெரியார் சிறை புகுந்த பிறகும் இந்தி எதிர்ப்பு இயக்கம் முட்டின்றி நடைபெறு வதைப் பார்த்த பிறகாவது கனம் ஆச்சாரியார் உண் மையை உணர்வாரென்பது நிச்சயம்.

தமிழர் கடமை

ஆகவே சிறை புகுந்த பெரியார் உபதேசப்படி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சாத்வீகமாக இந்தி எதிர்ப் புக் கிளர்ச்சியைத் தமிழர்கள் தளர விடாமல் நடத்தி வருவார்கள் என நம்புகிறோம். சிறைபுகுந்த பெரியா ருக்குத் தன்னைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ கவலையில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கத் தைப் பற்றியும் அவரால் நடத்தப்படும் “விடுதலை”, “குடிஅரசு”, “பகுத்தறிவு”ப் பத்திரிகைகளைப் பற்றி யுமே அவருக்குப் பெரிய கவலை. இந்தி எதிர்ப்பு இயக்கமும் அவரது பத்திரிகைகளும் தடையின்றி நடைபெறுமாயின், அவர் நிம்மதியாக சிறைவாச நாளைக் கழிப்பார் என்பது நிச்சயம். தமிழருக்காகத் தன்னை யும் தன் குடும்பத்தையும் தன் செல்வத்தையும் அர்ப்பணம் செய்த ஒரு பெரியாருக்குத் தமிழர் நன்றி செலுத்த எண்ணினால் அவர் நிம்மதியாக சிறைவாச நாளைக் கழிப்பதற்குச் சாதகமாக இருக்கும். இந்தி எதிர்ப்பையும் பத்திரிகைகளையும் சட்டவரம்புக்குட் பட்டு ஆதரித்தால் போதுமானது. இந்தச் சிறுகாரியத் தைச் செய்யத்தயங்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இரார் என்றே நம்புகிறோம். மற்றும் ஒரு லக்ஷ்யத்தை முன்னிறுத்தி உழைத்தவர்கள் கஷ்டப்பட்டதனாலேயே அந்த லக்ஷ்யம் கைகூடியிருப்பதாக சரித்திரம் கூறுகிறது. ஆகவே நமது பெரியார் சிறைவாசம் அவரது லக்ஷ்ய வெறிக்கு ஒரு அறிகுறியேயாகும். நியாய பலமுள்ள எவருக்கும் ஒருக்காலும் தோல்வி கிடையாதென்ற நம்பிக்கையுடன் நாம் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டு சாத்வீக வழியில் உழைப்போமாக!

- விடுதலை தலையங்கம், 7.12.1938 (தொடரும்)  keetru.com nov 2016

03 08 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 43

கிராஸ் செய்ய பெரியார் மறுப்பு
ஈ.வெ.ரா. சாட்சியை ஒன்றும் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

நீதி :- உங்கள் பேரில் கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டிருக்கின்றதாகையால், வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மெண்டைத்தான் கொடுக்க வேண்டும். சம்பந்தப் படாத வெளி விஷயங்களை நான் ஏற்கமாட்டேன்.

ஈ.வெ.ரா. :- நான் சட்ட நிபுணனல்ல. சாட்சியங் களைக் காதில் கேட்டேன்; பார்த்தேன்; பதில் கூறு கிறேன். எனக்கு பதில் கூற உரிமையுண்டு. இயன் றால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தள்ளி விடுங்கள். நான் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவை களையே கூறுகின்றேன். பின்னர் பெரியார் தமது நீண்ட வாக்குமூலத்தைப் படித்து நீதிபதியிடம் கொடுத்தார். படிக்கும்போது நடுவில் நீதிபதி சரி சரியெனத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.பின்னர் கிரவுன் பிராசிக்கூட்டர் எழுந்து தங்களுக்கு இவ்வழக்கில் தண்டனையளிக்க வசதியாயிருக்கும் பொருட்டு எதிரியின் பேச்சுகளில் ஆட்சேபகரமான வற்றை சிகப்பு மையினால் மார்க் செய்கிறேன் என்று கூறி, மார்க் செய்து அப்பகுதிகளைக் கோர்ட்டில் வாசித்துக் காண்பித்தார்.

அதன்பின் நீதிபதி குற்றப் பத்திரிகை வாசித்தார்.

தீர்ப்புக்கூற ஒத்தி வைப்பு
பெரியார் தான் குற்றவாளியல்லவென்றார்.
மணி 1.30 ஆனமையால் தீர்ப்புக்கூற வழக்கை மாலை 2.00 மணிக்கு ஒத்திவைத்தார், நீதிபதி.
வழக்கைக் கவனிக்க வந்திருந்த முக்கிய பெரியார் கள் சர். எ.டி. பன்னீர்செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், டி. சுந்தரராவ் நாயுடு, பி.ஏ., பி.எல்., டி. சண்முகம் பிள்ளை, பாரிஸ்டர் கே.சி. சுப்பிரமணியம் செட்டியார், எம். தாமோதரம் நாயுடு, பி.ஏ., பி.எல்., ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம், டி.ஆர். கோதண்டராம முதலியார், சாமி அருணகிரி நாதர், கடலூர் தெய்வசிகாமணி முதலியார், சேலம் சித்தையன், சர்வாதிகாரி எஸ். சம்பந்தம், எர்னஸ்ட் காவேரிப்பாக்கம் சம்பந்தம் முதலிய பல பெரியார் களாகும்.

தண்டனை
சரியாக மாலை 3.25 மணி க்கு நீதிபதி வந்து தீர்ப்பை வாசித் தார்.
“இரண்டு பேச்சுகளும் 2 குற்றங்களாகின்றன. ஒரு குற் றத்திற்கு 1 வருஷம் கடுங்காவ லும் 1000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவலும் விதிக்கிறேன்” என்றார். ஆக இரண்டு குற்றங்கட்கு 2 வருடம் 2000 ரூபாய் அபராதம். அல் லது மேலும் 1 வருஷம் ஆக 3 வருஷம் கடுங்காவல் தண்டனையாகும். இரண்டு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறினார். பெரியார் அபராதம் கட்ட மறுத்து 3 வருஷம் கடுங் காவல் தண்டனையைப் பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஸர். பன்னீர்செல்வம் கண்ணீர் தண்டனை பெற்ற பெரியாரை சர். எ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் கோர்ட்டிலேயே கட்டித் தழுவிக் கண்ணீர் விட்டார். பெரியார் அவர்கள் தான் இனி ஒரு கைதி (Prisoner) என சிரித்துக் கொண்டே கூறினார்கள்.பின்னர் கோர்ட்டிற்கு வந்திருந்த எல்லாப் பெரியார் களும் வக்கீல்களும் தோழர்களும் பெரியார் ஈ.வெ.ரா. பாதத்தைத் தொட்டு இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.

சிறைக்குப் புறப்பாடு
காலையிலேயே பெரியார் படுக்கை பெட்டியுடன் வந்திருந்தார். அவைகளை எடுத்துக்கொண்டு மாலை 3.45 மணிக்கு ‘மோட்டார் வேனில்’ ஏறும் போது வெளியே ஆவலாகக் காத்து நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ‘பெரியார் வாழ்க’ என்று ஆரவாரித்துக் கரகோஷம் செய்தனர். பெரியாருக்கு மாலைகளிடப்பட்டன. பெரியார் ‘ஈ.வெ.ரா. வாழ்க’ என்ற வானளாவிய ஒலியி னிடை பெரியார் ஏறியிருந்த கார் புகுந்து சென்றது. வழக்கைக் கவனிக்க காலை 10.00 மணிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை 4.00 மணிக்கு வழக்கு முடியும் வரை மத்தியானம் சாப்பிடக்கூடப் போகாமல் காத்து நின்றனர். பெரியார் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்ட வுடன் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கரை கொள்ளாததாயிற்று.

சென்னை நகரத்தார் துயரம்
இச்செய்தியைக் கேட்டு சென்னைத் தமிழர்கள னைவரும் எல்லையில்லாத் துயரமடைகின்றனர். இச்செய்தி சிறிது நேரத்திற்கெல்லாம் காட்டுத்தீ போல் நகரெங்கும் பரவிவிட்டது. வழக்கைக் கவனிக்க ஏராள மான பார்ப்பன வக்கீல்களும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.

பெரியார் வாக்குமூலம்
பெரியார் கொடுத்த வாக்குமூலம் வருமாறு :-
நான் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி யானது காங்கிரசிற்கு விரோதமானது என்றும், காங்கிரஸ் கட்சியினரைக் கவிழ்ப்பதற்காக என்றும், பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம் முதல் மந்திரியாரே சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறார்.இந்தக் கோர்ட்டு காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத் திற்கு உட்பட்டது.

அடக்குமுறைக்காலத்து நியாயமேது?
தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதிதீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி யைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்கட்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்கு முறையே என்பது எனது கருத்து. அடக்குமுறை காலத் தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில் இந்த வழக் கில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்று நடக்கும் வழக்கு விசாரணையில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.

பொது மக்களுக்கு அறிக்கை
பொது மக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற் கும், தப்பு வழியில் செல்லாமலிருப்பதற்கும், நான் நிரபராதி என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் ஒரு அறிக்கை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்கிறேன். அதனை வழக்கு ஆதாரங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொள்ளுகிறேன்.நான் இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. வக்கீல் வைக்கவில்லை.சர்க்கார் கட்சி வக்கீல் ஆங்கிலத்தில் பேசினார். நான் எட்டி இருந்ததனாலும் ஆங்கிலம் சரியாய்த் தெரியாததனாலும் அவர்கள் பேசினதும் சில சாட்சியங் கள் சொன்னதும் சரியாய்ப் புரியவில்லை. ஆனால் பின்னால் நடந்த சங்கதிகளைக் கவனித்தேன். ஒரு அளவுக்குப் புரிந்தது.

இவற்றுள் பிராதில், முதலாவதாக 21.4.1938இல் கவர்ன்மெண்ட்டார் இந்தி கட்டாயமாய்ப் படிப்பிப்பதை அமலுக்குக் கொண்டுவர உத்தரவு பிறப்புவித்தார்கள் என்றும், அதற்குப் பிறகு சில சுயநலக்காரர்களால் தாங்களே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிப் பிரசாரகர் என்று பெயர் சூட்டிக் கொண்டு கனம் முதல் மந்திரியாரை நிர்ப்பந்தப்படுத்திஅந்த உத்தரவைக் கேன்சல் செய்யச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு கனம் மந்திரியாரின் உரிமையைத் தடைப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தி எதிர்ப்புத் தோன்றியது எப்பொழுது?
இது முழுவதும் உண்மைக்கு நேர் மாறானதாகும். மந்திரியார் ஜி.ஒ. 21.4.1938இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், கிளர்ச்சி ஸ்தாபனமும் அதற்கு முன்பே ஏற்பட்டதாகும். 1930இல் நடந்த நன்னிலம் சுயமரியாதை மகாநாட்டில் இந்தி புகுத்தும் நோக்கத்தையும், இந்தி புகுத்துவதால் ஏற்படும் கெடுதியையும் பற்றி இன் றைய காங்கிரஸ் விளம்பர மந்திரியார் கனம் ராமநாதன் அவர்களே தீர்மானம் கொண்டு வந்து கண்டித்துப் பேசி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தியை எதிர்ப்போர்
தமிழ்ப் பண்டிதரும், தமிழ்ப் பாஷை, கலைகள் ஆகியவற்றில் நிபுணருமான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இந்தி பொதுமொழியா குமா? என்று கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.அண்ணாமலை சர்வகலா சாலைப் புரபசர் எஸ். சோமசுந்தர பாரதிப் பெரியார் அவர்களும் 1937ஆம் வருஷத்திலேயே இந்தியைக் கண்டித்து கனம் முதல் மந்திரியாருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.1937 டிசம்பரில் மாகாணத் தமிழர் மகாநாடு கூடி சென்னை மாகாண கவர்னர் பிரபு அவர்களிடம் தூதுசென்று இந்திக் கட்டாயத்தை மாற்றும்படிக் கேட்டுக் கொள்ளத் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பல பெரியார்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதன்பின் 1938 பிப்ரவரி வாக்கில் காஞ்சிபுரத்தில் ஒரு தமிழர் மகாநாடு சர் கே.வி. ரெட்டி நாயுடு அவர் கள் தலைமையில் கூடி, காலம் சென்ற சர்.எம்.கிருஷ் ணன் நாயரால் திறக்கப்பட்டுப் பல பெரியார்கள் முன்னி லையில் பல தீர்மானங்கள் இந்தியைக் கட்டாயப் பாடமாய்ப் புகுத்துவதைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆதலால் கனம் முதல் மந்திரியாருடையவோ, சர்க்காருடையவோ ஜி.ஒ.வுக்குப் பிறகு சுயநலக் காரர்கள் கூடிக் கிளர்ச்சி செய்கிறார்கள் என்பது தவறு.

எதிர்ப்பின் நோக்கம்
கனம் முதல் மந்திரியார் இந்த வேண்டுகோள் களையும் பொதுஜன அபிலாஷைகளையும் லக்ஷ்யம் செய்யாமல் இவற்றை அலக்ஷியப்படுத்துவதற்குச் சாக்காக “இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி (அவரது) நண்பர் ஒரு இராமசாமி நாயக்கர் தான் செய்கிறாரே தவிர, இது பொதுஜனக் கிளர்ச்சி அல்ல” என்று சட்ட சபையிலேயே சொல்லிவிட்டதால், பொதுஜனங்கள், இதைப் பொது ஜனங்களது கிளர்ச்சியென்று கனம் முதல் மந்தியாரும், கவர்னர் பிரபுவும் அறியவேண்டும் என்பதற்காகவே, இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் (Demonstration) ஆகச் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்ப்பந் தப்படுத்தும் கருத்தும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காரியக் கமிட்டித் தீர்மானம்
அன்றியும் இந்தியைப் பொது பாஷையாக்கக் கூடா தென்றும், பள்ளியில் வைப்பது முதலிய இந்திப் பிரச்சாரம் செய்வது வகுப்புக் கலவரத்தை உண்டாக்குகின்ற தென்றும், காங்கிரஸ் கூட்ட நடவடிக்கைகளுக்கு இந்தி தெரிந்துகொள்ளும்படிச் செய்தால் போதுமென்றும், காங்கிரஸ் காரியக்கமிட்டி தீர்மானித்திருக்கிறது.சென்னை மாகாணத்தில் நடக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இந்தி மீதுள்ள அபிப்பிராய பேதத்தால் நடை பெறுவதாகவும் அதை விளக்கிக் காட்டிச் சரிசெய்யும் படிக் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர் களைக் கேட்டுக் கொண்டுமிருக்கிறது. ஆகவே இந்தக் கிளர்ச்சி காங்கிரஸ் துவேஷத்தால் செய்யப்படுவதும் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் போதுமென நினைக் கிறேன்.1938 ஜூன் மாதம் முதல் தேதி கனம் முதல் மந்திரியார் வீட்டிற்குமுன் செய்யப்பட்டதாகச் சொல்லப் படும் நடவடிக்கைகளுக்கும் எனக்குமாவது இந்தி எதிர்ப் புக் கிளர்ச்சி ஸ்தாபனத்திற்காவது யாதொரு சம்பந்தமு மில்லை.

எதிர்ப்பாளர் கொள்கை
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்தின் கொள்கை களில் சட்டம் மீறக் கூடாதென்பது முக்கிய காரியமாகும்.முதன் மந்திரியார் வீட்டிற்குமுன் தொண்டர்கள் எந்தக் காரியத்தை முன்னிட்டும் போகக்கூடாதென்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத் திருக்கிறேன். அந்த வேண்டுகோள் பொது ஜனங்களாலும், தொண்டர்களாலும் மதிக்கப்பட்டு, அது முதல் முதன் மந்திரியார் வீட்டின் முன் தொண்டர்கள் செல்லவில்லை. அதற்குப் பிறகு, பள்ளிக்கூடத்திற்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் காரியங்களும் சரியல்ல. அங்கு தொண் டர்கள் செல்வது உபாத்தியாயர்களையும், பிள்ளை களையும் தடுப்பதற்காகவல்ல; இந்தியைப் பொது ஜனங்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதற்காக வேயாகும்.எந்த உபாத்தியாயரும் எந்தப் பிள்ளை களும் தங்களைத் தடுத்ததாகவோ, அல்லது இந்தக் காரியத்தால் தங்கட்குப் பள்ளிக்கூடத்திற்குப் போகமுடி யாமல் போயிற்றென்றோ, இனியும் உபாத்தியாயரோ, மாணாக்கரோ இதனால் ஒருநாளாவது ‘ஆப்சென்ட்’ ஆனதாகவோ சொல்லப்படவோ இல்லை; ருசுக்களோ இல்லை. பிராதில் குறிப்பிட்ட விஷயங்கள் சரியல்ல. சட்டத்திற் கண்டபடி, குற்றமாவதற்கு ஜோடித்தவை களேயாகும். நான் பேசியிருப்பதாய்ச் சொல்லப்படும் 2 பேச்சுகளிலும் சட்டம் மீறும்படி நான் யாரையும் தூண்ட வேண்டுமென்றோ, தூண்டும் படியான கருத்துக் கொண்டோ பேசவில்லை.

அந்தக் கருத்துகள் கொண்ட வாக்கியம் பேசியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மை யல்ல. ஏனெனில் நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப் படி, சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த் தால் இது விளங்கும்.மற்றும் அப்பேச்சுகளில் சட்டம் மீறக்கூடாது; யாருக் கும் எவ்விதத் தடையும், சங்கடமும், மனநோவும் உண்டாக்கக் கூடாது; துவேஷ உணர்ச்சி, கட்டுப்பாட் டிற்கு விரோதமான உணர்ச்சி கூடாதென்றெல்லாம் வியக்தமாய்ப் பேசியிருப்பதை அதில் காணலாம்.

பெண்கள் மகாநாட்டுத் தீர்மானம்
என் பேச்சிற்குப் பிறகே பெண்கள் பள்ளிக்கு முன்போய் நின்றார்கள் என்று சொல்வதும் சரியல்ல. நான் பேசுவதற்கு முன்பேயே மகாநாட்டில் தீர்மானம் ஆகியிருக்கிறது. அதையும் என் பேச்சிலேயே காண லாம்.பெண்களும் எவ்விதத் தடங்கலான காரியம் செய்தார்களென்றும் எவ்விதக் குற்றமான காரியங்கள் செய்தார்களென்றும் எப்போதம் ருசு செய்யப்படவில்லை. ஏதாவது ஒரு கிளர்ச்சி நடக்க வேண்டுமென்றால், ஒருமுறை கொண்டுதான் நடத்த வேண்டும். அம் முறையால் குற்றம், தடை, பலாத்காரம், துவேஷம் உண்டாகும்படி இருக்கக்கூடாது என்பதில் நான் எப் போதும் கவலை கொண்டிருக்கிறேன்.

குற்றச்சாட்டு சரியானதல்ல
நான் சம்பந்தப்பட்ட எந்தஸ்தாபனத்திலும் இவ்வித தப்பான கொள்கைகட்கு இடம்கொடுக்கவேயில்லை. காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் மந்திரிகள் ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் பல தடையான காரியங்கள்-அதாவது கிராமப்புற மறியல் முதற்கொண்டு பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறாமல் தடை, குழப்பம், பலாத்காரம் முதலியன நடத்துவது வரையில் நடந்த காரியங்கள் குற்றமாகக் கருதப்படவில்லை.காங்கிரஸ் சர்க்காரும் அவை கூடா தென்று உத்தரவு போட்டதில்லை. தவிரவும் என்மீது சுமத்தப்பட்ட இந்த சட்டப்பிரிவும் கொஞ்சமும் சரியான தல்ல. இது ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்கை ஆகியவைகளைத் தடுப்பதற்கு என்பதும், அதையும் பொது மக்களும் குறிப்பாகக் காங்கிரஸ்காரர்களும் வெறுத்துக் குறைகூறிக் கண்டித்ததென்பதும் பொது மக்கள் அறிந்ததேயாகும். அப்படியிருக்க அந்தச் சட் டத்தை ஒரு நியாயமான உரிமையுள்ள காரியத்தைச் செய்ய தடுப்பதற்கு உபயோகப்படுத்துவது அந்தச் சட்டத்தின் தத்துவத்திற்கே முரண்பட்டதாகும்.சாட்சி சுயமரியாதை இயக்கம் பார்ப்பனருக்கு விரோதமான உணர்ச்சி ஊட்டக் கூடியது என்று சொன்னார். தோழர் வக்கீலும் அந்த உணர்ச்சி இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலுமிருப்பதாகக் கருதும்படிச் செய்யப் பிரயத்தனப்பட்டார். அந்தக் கருத்து சம்பந்தப் பட்ட விஷயங்கள் என் இரண்டாவது பேச்சாகக் கோர்ட் டில் ஒப்புவிக்கப்பட்ட சர்க்கார் ஆதாரத்திலேயே இருக்கிறது.

அறிக்கை வெளியிட்டதின் நோக்கம்
ஆகவே, இந்த விஷயங்களைத் தங்கள் கவனத் திற்கு என்றே நான் சமர்ப்பிக்கவில்லை. தங்களால் காங்கிரஸ் மந்திரிகள் இஷ்டத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம் தெரி யட்டும் என்றும், நான் சட்டம் மீறனேனென்றும் மற்றவர்கள் கருதி அதைச் செய்யத் துணிந்துவிடக்கூடாது என்பதற்கும், இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எவ்வித முயற்சியும் செயலையும் இன்று வரை யிலும்கூடச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவேயாகும். ஆகவே, கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இலட்சியத்துக்கு விலை
மற்றும் வழக்கை வக்கீல் முடித்துவிட்ட பிறகும் சட்டப்படிக் குற்றம் ஏற்படத் தகுந்த மாதிரி, வக்கீல் சாட்சியை மிரட்டி வாக்குமூலம் வாங்கி சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறதென்பதாகவும் எழுதிக் கொடுத்தார்.எவ்வளவு நியாயமான இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்கள டைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாத லால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.
(ஒப்பம்) ஈ.வெ. ராமசாமி
- தொடரும்  keetru.com oct 2016

27 07 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 42

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தீவிர மாகப் பங்கேற்றனர். இனி பெரியாரை கைது செய்தால் தான் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்று கருதிய முதலமைச்சர் இராசாசி, பெரியாரைக் கைது செய்ய முடிவு செய்தார். 1-1-1938 அன்று பெரியாருக்கு காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்தது. “13.11.1938இல் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பேசி அவர்களைக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினார். மறு நாள் 14.11.1938இல் பெண்கள் போராட்டக் களத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவர்களிடையே பேசி அவர்களை மறியலில் ஈடுபடத் தூண்டினார்” என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை 5.12.1938 அன்றும் 6.12.1938 அன்றும் நடைபெற்றது.

பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்குமூலம்

3 வருஷம் கடுங்காவல்-2000 ரூபாய் அபராதம்

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14ஆவது மகாநாட்டின் தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117ஆவது 7(1)ஏ செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11.25 மணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டு 4ஆவது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10.45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக் கவனிக்கத் தோழர்கள் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, டி. சுந்தரராவ் நாயுடு, பி.ஏ., பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி. ராஜன், பி.ஏ., பி.எல்., தாமோதரம் பிள்ளை, ராவ் சாகிப், தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார், பி.ஏ., பி.எல்., டி. நல்லசிவம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., சி.பாசுதேவ், பி.ஏ., பி.எல்., திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக் தம்பி மரைக்காயர், ஜமான் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி சிதம்பரனார், திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி நாயுடு, ஈரோடு வி. வேணுகோபால், பி.ஏ., பி.எல். ஆகியோர் வந்திருந்தனர். கோர்ட்டில் எல்லோரையும் அனுமதிக்காததால் ஏராளமான தமிழ் மக்கள் கோர்ட்டிற்கு வெளியே பீச் ரோட்டில் நின்று வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கினர். பெரி யார் ஈ.வெ.ரா. வந்திறங்கியதும் மக்கள் ஆரவாரித்து வாழ்த்தொலி செய்தனர்.

பெரியாருக்குப் பிராசிக்கியூஷன் மரியாதை

நீதிபதி 11.25 மணிக்கு வந்து வழக்கை ஆரம்பித் தார். கிரவுன் பிராசிகூடர் தோழர் டி.எஸ். அனந்த ராமன் சாட்சிகளை விசாரித்தார். கோர்ட் டார் பெரியாரைக் கூப்பிட்டதும், பெரியார் ஈ.வெ.ரா. எழுந்து நின்றார். உடனே கிரவுன் பிராசிக்கூட்டர் நீதிபதியிடம் தோழர் நாயக்கரவர்கள் உட்கார்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டு மென்று வேண்டினார். பின்னர் பெரியாரும் உட் கார்ந்து கொண்டார். ஆரம்பத்திலேயே ஈ.வெ.ரா. அவர்கள் தான் எதிர் வழக்காடப் போவதில்லை என்றும் தனக்கு யாரும் வக்கீல் இல்லை என்றும் கூறிவிட்டார்.

முதல் சாட்சி வாக்குமூலம்

சர்க்கார் தரப்பின் முதல் சாட்சியான சுருக்கெழுத்து சப்-இன்ஸ்பெக்டர் தோழர் கேசவ மேனன் தனது சாட்சியத்தில் கூறியதாவது :- “நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் டிபார்ட் மெண்டில் தமிழ் சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டராக சென்ற 5 வருடங்களாக இருந்து வருகிறேன். எனக்குத் தோழர் ஈ.வெ.ராமசாமியை நன்றாகத் தெரியும். அவரது சொந்த ஊர் ஈரோடு. அவர் 1923ஆம் வருஷம் வரை காங்கி ரசிலிருந்தார். பின்னர் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக் கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் பார்ப்பனரல்லா தாரின் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பார்ப்பனரை எதிர்க்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஜஸ்டிஸ், சுயமரியாதை இவை இரண்டுமே ஒரே கொள்கை கொண்டுள்ளவை. 21.4.38ந் தேதிய 911 நெ. இந்திக் கட்டாயப்பாட சர்க்கார் உத்தரவிற்குப் பிறகு இந்தி எதிர்ப்பு ஆரம்பிக் கப்பட்டது. அந்த உத்தரவிற்குப் பிறகே ஒரு பகுதி தமி ழர்கள் இந்தி எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்து கட்டாயப் பாட உத்தரவை ரத்து செய்யுமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி வருகின்றனர். பின்னர் சென்னை நகரத்தி லும், சென்னைக்கு வெளியிலும் இந்தியைக் கண்டித் துப் பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் முதல் கூட்டம்

சென்னையில் இந்தி எதிர்ப்பு முதல் கூட்டம் 31.5.1938 அன்று தியாகராய நகரில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பிற்கென கட்டப்பட்ட புதுக்கட்டடத்தில் (நிலை யம் ந.நி.) அக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாலை 6.30 முதல் 9.30 வரை நடைபெற்றது. சர், கே.வி. ரெட்டி நாயுடு தலைமை வகித்தார். தோழர் எஸ். முத்தையா முதலியார் தமிழ்க்கொடி ஏற்றினார். நான் அக்கூட்டத் திற்குச் சென்றிருந்தேன். அன்று எதிரியும், முதல் சர்வாதிகாரி-சி.டி. நாயகமும் மற்றும் பல இந்தி எதிர்ப்புத் தலைவர்களும் பேசினர். பல்லடம் பொன்னுசாமியை அவர் நாளை உண்ணாவிரதமிருக்கப் போவதாக, தோழர் சி.டி. நாயகம் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தினார். அடுத்த நாள் காலை 6.30 மணிக்குப் பல்லடம் பொன்னுசாமி, முதன் மந்திரி வீட்டின் முன் உண்ணா விரதமிருந்தார். அப்படியே 2 நாள்கள் உண்ணாவிரத மிருந்தார். 3.6.1938 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் ‘பேட்ச்’ தொண்டர்கள் மறியலுக் காக வந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இதேபோல 1.7.1938 அன்று இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன்பும் தொண்டர்கள் மறியல் செய்யத் தொடங்கினர். 3 மாதம் வரை முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் நடந்து வந்தது. தொண்டர்கள் அவ் வப்போது கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இரண்டு இடங்களிலுமாக நவம்பர் கடைசி வரை கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 400. இதில் முதன் மந்திரி வீட்டின் முன்பு கைதியானவர்கள் சுமார் 165. தியாகராய நகரிலிருந்த இந்தி எதிர்ப்பு நிலையம் பிரிக்கப்படும் வரை அங்கேயே மறியல் தொண்டர்கள் தங்கியும், உணவு உண்டும் வந்தனர்.

மே 28ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கமிட்டிக் கூட்டத்தில், எதிரி இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஒரு அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 69 பள்ளிகளிலும், ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், மலையாளத்தில் 11 பள்ளிகளிலும் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றது. கட்டாய இந்திக்கு மலையாளத்திலும், ஆந்திராவிலும் எதிர்ப் பில்லை. எதிரி முதன்முதல் 31.5.38 அன்று சென் னையில் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார். பின்னர் இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஆதரவில் நடைபெற்ற பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் ‘விடுதலை’ தினசரியும், ‘குடிஅரசு’ வார வெளியீடும் எனக்குத் தெரியும். தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவைகளின் வெளியிடுவோரும் ஆசிரியருமாவர், 13.11.38 ஒற்றைவாடைக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ் நாட்டுப் பெண்கள் மகாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.

நீதிபதி கேள்விக்குப் பெரியார் பதில்

நீதிபதி : நீங்கள் ஏதாவது சாட்சியைக் கேட்க வேண்டுமா? ஈ.வெ.ரா. : அவர் கூறியது என் காதில் சரியாக விழ வில்லை. இருந்தாலும் இந்தக் கோர்ட்டில் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை, எனவே சாட்சி யை நான் ஒன்றும் கேட்க வேண்டியதில்லை. கேட்ப தாலும் ஒன்றும் பயனில்லை.

2ஆவது சாட்சி வாக்குமூலம்

பின்னர் 2ஆவது சாட்சியாக தோழர் எ. கிருஷ் ணய்யர் (சுருக்கெழுத்து சப்-இன்ஸ்பெக்டர்) விசாரிக் கப்பட்டார். அவர் கூறியதாவது :- நான் சென்ற 20 வருஷங்களாக சுருக்கெழுத்து சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றேன். சென்னை யில் 13.11.1938 அன்று நடந்த தமிழ்நாட்டுப் பெண் கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு மாலை 2.45-க்கு ஆரம்பித்து இரவு 8.15-க்கு முடிவுற்றது. நான் கடைசி வரை இருந்தேன். மாநாட்டிற்கு வந் திருந்த 1500 பேரில் 700 பெண்கள் ஆகும். நடவடிக் கைகள் தமிழிலேயே நடைபெற்றன. தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அம்மாநாட்டில் எதிரி பேசினார். அவர் பேசும்பொழுதும் நான் அங்கிருந்தேன். நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து பின்னர் தமிழ் நெட்டெழுத்தில் எழுதி னேன். அவர் பேச்சை ஒழுங்காகவே குறிப்பெடுத் தேன். மறுநாள் 14.11.1938 பெத்துநாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன் சாமி-அருணகிரி நாதர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கும் சென்றிருந்தேன். அக்கூட்டம் மாலை 6.15-க்கு ஆரம்பித்து 9.15-க்கு முடிவுற்றது. அங்கு எதிரியும் பேசி னார். அவர் பேச்சை சிறிதும் விடாது குறிப்பெடுத் தேன். அவரது பேச்சுகள் பொது மக்களிடையே மிகுந்த உணர்ச்சியை உண்டாக்கின. பின்னர் சாட்சி பெரியார் ஈ.வெ.ரா.வின் 2 பிரசங்கங்களையும் கோர்ட்டில் படித்தார். நீதி : இதில் ஏதாவது தவறிருக்கின்றனவா? சாட்சியை ஏதாவது கேட்க வேண்டுமா? ஈ.வெ.ரா.:பல தவறுகள் காணப்படுகின்றன. ஆனால் அதுபற்றி நான் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.

3ஆவது சாட்சி வாக்குமூலம்

பின்னர் 3ஆவது சாட்சியாகத் தோழர் ரஞ்சித் சிங் (சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது : நான் சார்க்காரின் இன்டெலிஜென்ஸ் செக்ஷனில் சுருக்கெழுத்தாளனாக இருக்கிறேன். 13.11.1938இல் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கடைசிவரை இருந்தேன். அம்மா நாட்டிற்கு மறுநாள் 14ந் தேதியன்று பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன் மறியல் செய்தனர். அப்பெண்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்கள் அபராதம் செலுத்தவில்லை. இந்தி எதிர்ப்புக் கழக ஆதரவில் அன்று மாலை காசி விசுவநாதர் கோயில் முன்பு ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் கிரவுன் பிராசிக்கூடர் இந்தப் பிரசங்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருப் பதால் வாய்தா கொடுக்க வேண்டுமென்று கேட்டார். நீதிபதி : பிரசங்கங்கள் விளக்கமாக இருப்பதால் இதற்கு வாய்தா வேண்டியதில்லை, சில மணிநேரங் களில் மொழிபெயர்த்துவிடலாம் என்று கூறினார். பின்னர் சர்க்கார் சாட்சிகள் மீண்டும் கிரவுன் பிராசிகூடரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணையில் முதல் சாட்சி கேசவ மேனன் கூறியதாவது:- இந்தி உத்தரவை எடுக்குமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி முதன் மந்திரி வீட்டின் முன்பும் தியாலாஜிக்கல் பள்ளி முன்பும் மறியல் நடந்தன. அப்பள்ளியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டி ருப்பதால் பையன்களைப் படிக்கவிடாது தடுக்கவே மறியல் நடைபெறுகிறது. அப்படி பையன் கள் போகா விட்டால் பள்ளிக்கூடம் மூடப்படும் என்று கருதியே இம்மறியலால் ஏற்படும் கூச்சல் ஆசிரியர்களையும் வகுப்பு நடத்த முடியாமல் தடைசெய்கிறது.

3ஆவது சாட்சி தோழர் ரஞ்சித் சிங் கூறியதாவது : 1411.1938 அன்று 5 பெண்கள் இந்து தியாலாஜிக் கல் பள்ளி முன் நின்று ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று கூறி மறியல் செய்தனர். இதனால் ஆசிரியரும், பையன்களும் உள்ளே புக முடியாமலும், நடத்திக் கொண்டிருக்கும் வகுப்பு மேலும் நடைபெறாமலும் தடைப்படுகின்றது. வேடிக்கைப் பார்க்க ஆசிரியர்கள் வெளியே வந்துவிடுகின்றனர்.

நீதி:நீங்கள் ஏதாவது வாக்குமூலம் கொடுக்கின்றீர்களா? ஈ.வெ.ரா. : சிறிது அவகாசம் கொடுத்தால் சாட்சியங் களைப் பார்த்து வாக்குமூலம் கொடுக்கின்றேன். நீதி : சாட்சிக் காப்பிகள் மாலை தான் கிடைக்கும். எனவே வழக்கை நாளை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கிறேன். மீண்டும் வழக்கு நாளை நடைபெறும். 1.30 மணிக்கு வழக்கு முடிந்து பெரியார் கீழே வரும் வரை வெளியில் ஏராளமான மக்கள் காத்துக் கொண்டே நின்றனர். பெரியார் காரில் ஏறியதும் மக்கள் ‘பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க’ என ஆரவாரம் செய்த னர். மக்கள் காட்டிய உணர்ச்சி அளவுகடந்ததாயிருந் தது. கோர்ட்டிலும் வெளியிலும் பலமான போலீஸ் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது. (மறுநாள் நடவடிக்கை) சென்னை, டிச.6 - சென்னை அரசாங்கத்தாரால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மீது 117ஆவது செக்ஷன் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் 4ஆவது மாகாண நீதிபதி தோழர் மாத வராவ் முன்பு இன்று காலை 11.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது.

பெரியார் வருகை

சரியாகப் 11 மணிக்குப் பெரியார், சர். ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியவர்களுடன் படுக்கை சகிதமாகக் கோர்ட்டிற்கு வந்து சேர்ந்தார். கோர்ட்டிற்கு வெளியில் நின்றிருந்த பதினாயிரக்கணக் கான மக்கள் கைதட்டி வாழ்த்தொலி செய்தனர். இன்றும் கோர்ட்டுக்கு அருகில் யாரையும் வரவிடாது பலத்த போலீஸ் பந்தோபஸ்து இருந்தது. நேற்று இரவு 10 மணிக் குத்தான் பெரியாருக்கு சர்க்கார் சாட்சியத்தின் நகல் கிடைத்ததாகையால் கோர்ட்டில் வந்தும் விரைவாக வாக்கு மூலத்தின் எஞ்சிய பகுதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.

ரசாக்கான் சாட்சியம்

ஆரம்பத்தில் கிரவுன் பிராசிக்கூட்டர், சப்இன்ஸ் பெக்டர் தோழர் ரசாக்கானை சர்க்கார் சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவர் இந்து தியாலாஜிகல் பள்ளி இருக்கும் செக்ஷனின் சப்இன்ஸ்பெக்டர் என நீதிபதி யைக் கேட்டார். நீதிபதியும் சம்மதிக்க, தோழர் சப்-இன்ஸ்பெக்டர் ரசாக்கான் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது :- நான் யானை கவுணி போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர். இந்து தியாலாஜிக்கல் பள்ளி எனது ஜுரிஸ்டிக்ஷனில் உள்ளது. நாடோறும் நடைபெறும் மறியல் காலத்தில் நேரில் பள்ளி முன் இருந்து வருகிறேன். 14.11.1938 அன்று 5 பெண்கள் பெரிய ஊர்வல மாக வந்து, பள்ளியின் வாசற்படிக்கு அருகில் நின்று கொண்டு ‘தமிழ் வாழ்க’, ‘இந்தி வீழ்க’ எனக் கூச்ச லிட்டு மறியல் செய்தனர். அன்றும் நான் அங்கிருந் தேன். 2000 அல்லது 3000 பேர் ஊர்வலமாக வந்த னர். எதிரியும் ஊர்வலத்துடன் அன்று வந்தார். பெண் கள் மறியலால் ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளே போகத் தடங்கலாயிற்று. வகுப்பு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் வெளியே வந்துவிட்டனர். பெண்களை அங்கிருந்து போய்விடுமாறு நான் எச்சரித்தும், இந்தி ஒழிந்தால் ஒழிய, போகமாட்டோமென்றனர். பின்னர் அவர்களைக் கைது செய்தேன். எதிரியும் நான் கைது செய்யும் வரை அங்கேயே இருந்தார். பின்னர் இரண்டா வது மாகாண நீதிபதி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு பெண்கள் தண்டனை பெற்றனர். பெண்கள் அபராதங் கொடுக்க மறுத்தனர். கோர்ட்டிலும் எதிரி ஆஜராகியிருந்தார். இதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் மறியல் செய்து வருகின்றனர். 21.11.1938 அன்று 8 பெண்கள் மறியல் செய்த னர். அன்றும் பெரிய ஊர்வலமாக அவர்கள் வந்தனர். மேலும் அவர்கள் செய்யும் மறியலால் பெருங்கூட்டம் கூடி, போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகின்றது. அவர்களையும் நான் எச்சரித்தேன்.

கேட்காததால் கைது செய்தேன். அவர்களும் தண்டனை பெற்றார் கள். அன்று வழக்கு முடிந்த பிறகு வழக்கைப் பார்க்க வந்திருந்த ஏராளமான மக்கள் திரும்பி 2 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் போது பல இடங்களில் கல் லெறிந்து பலருக்கு நஷ்டம் உண்டாக்கியிருக்கின்றனர். முதன்முதலில் தினமணி ஆபிஸ் மீது கல் லெறிந்ததாக அறிந்தேன். அதற்குப்பின் மற்றும் சில இடங்களில் குழப்பம் நேரிட்டதாகத் தெரிகிறது. ஆனால், நேரில் நான் பார்க்கவில்லை, அதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் தொடர்ந்து மறியல் செய்து வருகின்றனர். (குடிஅரசு 11-12-1938 keetru.com sep 2016

20 07 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 41

சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு

சென்னை, பெத்துநாயக்கன்பேட்டைத் தமிழர் கழகத்தின் ஆதரவில் 14-11-1938 அன்று நடைபெற்ற 5000 மக்கள் கொண்ட பொதுக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமி பேசியதாவது :

தாய்மார்களே! தோழர்களே! அருமைச் சிறுவன் லூர்து சாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக்கருதியிருந் ததை மறந்தேன். நிற்க. காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர் கட்கும் 6 வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 மாதம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்க வேண்டிய நாளாகும். உண்மையுடன் சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமுமில்லை. கஷ்டமென்று நினைப்ப வர்க்கு வெளியில் கூடக் கஷ்டமாய்த் தானிருக்கும். என் அனுபவத்தில் 5, 6 முறை சிறை சென்றிருக்கின் றேன். 18 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைசென்ற காலத்து மூத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில்தான். அவ்வளவு கொடுமையாக இருந்தது. கேள்வி முறையில்லை. ஆனால் இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கிரஸ்காரர் சிறை சென்ற காலத்துப் பெருங் கூச்சலிட்டு, வேண்டிய வசதி கள் செய்துவிட்டார்கள். அங்குள்ள சில அதிகாரிகள் ஒருவித வன்மத்துடன் பார்த்தால், சிறிது கஷ்டம். உண் மையாகவே நடப்பார்களானால் சிறை செல்பவர்கட்கு ஒருவிதத் தொல்லையும் இல்லை. சிறையில் வார்டர்கள் நேசிக்கிறார்கள். சில அதிகாரிகள் மட்டும் வகுப்பு கருதி நம்மை வெறுக்கின்றார்களெனக் கேள்விப்படுகின் றேன்.

கடின மனம் மாறும் விதம்

வீட்டில் ராஜாவாயிருந்தாலும் தினம் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. சிறையில் ஏழையானாலும் நேரத்தில் உணவு; மணியடித்தால் சாப்பாடு (கைதட்டல்). அப்படிக் கஷ்டமென்றே வைத்துக் கொள்வோம். சாப்பாட்டை நினைத்தா சிறைக்குப் போகின் றோம்? காரியத்தின் மேலுள்ள ஊக்கம் உணர்ச்சி அல்லவோ நம்மைப் பிடித்துத் தள்ளுகிறது. யார்மேலும் கோபத் தாலோ அன்றி விரோதத்தாலோ நாம் சிறை செல்லவில்லை. தமிழர்கட்கு ஒரு சமூகத்தாரால் செய்யப்படும் இன்னல்களை, தொல்லைகளை ஒழிக்கவே செல்ல நேரிடுகிறது. நீங்கள் இந்தியை எதிர்ப்பது உண்மையானால், ஆயிரக்கணக்காகச் சிறை செல்ல வேண்டும். இந்நிலை யில் கவர்னர் கெட்டவருமல்ல; அவ்வளவு முட்டாளு மல்ல. அவருக்கு இன்னும் தமிழர்கள் இந்தியை உண் மையில் எதிர்க்கின்றார்களா என்பது சந்தேகமாக விருக்கின்றது. எனவே அவருக்கு நன்றாகத் தெரிவிப் பதற்காக, பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை செல்ல வேண்டும். பட்டினி கிடக்கச் செல்ல வேண்டும். ஒரு சிறிதும் நன்மை கேட்கக் கூடாது. இந்த உணர்ச்சி தமிழர்கட்கிருந்தால் அவர்களது கடின மனம் மாறும். தோழர் ஆச்சாரியார் புத்திசாலி. அவர் மனத்தில் இன்னும் படவில்லை. அவர் கூறுகின்ற மாதிரி, நீங்களும் சில சமயங்களில் உணர்ச்சி மிகுதியில் நானே தான் என்று கூச்சல் போட்டு விடுகின்றீர்கள். இந்தி எதிர்ப்பை விட்டு ராமசாமி ஓடினாலும் நாங்கள் விடப்போவ தில்லை என்று காட்டினீர்களானால் அவர் இந்தியை விட்டுவிடுவார்.

ஆச்சாரியாருக்கு நடுக்கம்

இன்று பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேட்டவுடன் ஆச்சாரியருக்கு நடுக்கமேற் பட்டிருக்கும். மேலும் அவர்கள் உற்சாகத்துடன் சிறைக் குச் சென்றனர் என்பதைக் கேட்க அளவுக்குமீறி நடுங்கி இருப்பார். இன்று கோர்ட்டில் தாய்மார்கள் இந்தி ஒழிய வேண்டும் - அல்லது நாங்கள் ஒழிய வேண்டும் என வீரத்துடன் பதில் கொடுத்தார்கள். ஆனால் ஆச்சாரியார் இனி வேறு பெண்களில்லை எனச் சமாதானப்பட்டிருப்பார். யாராவது துர்மந்திரிகளும் அவ்வளவுதான்-இனிப் பெண்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருப்பார்கள். இல்லாவிட்டால், நான் பழகியவரை ஆச்சாரியார் இப்படிக் கவலையில்லாதிருக்கமாட்டார். மேலும் 2, 3 சாமியார்கள் தான் இருக்கிறார்கள்; சிலர் தான் எதிர்க் கின்றார்கள் என்று அவர் கருதக் கூடாது. அதற்காவன நீங்கள் செய்ய வேண்டும். தோழர் பொன்னம்பலம் அவர்கள் கூறியதுபோல். ஒன்றரை ஆண்டில் 4.5 கோடி கடன் வாங்கிவிட்டனர். அதைப் பார்த்து கவர் னருக்கு இப்பொழுதுதான் சிறிது தலை வலிக்க ஆரம் பித்திருக்கின்றது. இது 2 நாளில் நின்றுவிடும் என ஆச்சாரியார் நினைக்கின்றார்.

நாட்டில் இந்நிலையை அவர் உண்டாக்கி இருக்கா விட்டால், இவர்கள்-எனது தாய்மார்கள் முன் வந்திருப் பார்களா? தாய்மார்கள் வந்து எங்கட்குப் புத்தி கற்பிக்க - ஊக்கமூட்ட - வேண்டுமென்றால் இது யாருடைய தர்மம்? தோழர் ஆச்சாரியார் அளித்தது தானே! அவர் அன்புடன் நல்கியது தானே! உண்மையோடு உழைப் பதன் மூலம் வெற்றியடைந்து, இனி தமிழர்களிடத்து ‘வால் நீட்டக்கூடாது’ என்ற எண்ணத்தை அவர்கள் அடையுமாறு செய்ய வேண்டும். தமிழர்கள் - தமிழ்ப் பெண்கள் - சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் அவர் கொடுமை செய்து வந்தார். இப்பொழுது சற்று யோக்கியமாக நடந்து வருகிறார். தமிழர்கள் வெறுப்பிற்குப் பயந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல் இரகசியங்களில் காரியங்கள் செய்து வருகிறார். இன்றைய தாய்மார்களைப் போல் நாமும் நடந்தால் நமது தொல்லைகள் நீங்கும். சிறை செல்லச் சிறிதும் பயப்படக்கூடாது. இத்தகைய நிலையில் பெண்களைச் சிறையிட்ட அரசு எங்கும் கிடையாது. அரசாங்கத் திற்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால், சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு. ஆனால் இன்றைய ராம ராஜ்யத்தில் தாய்மொழியிடத்து அன்பு கொண்டால் போதும்-உடனே சிறைத்தண் டனை. நமக்குப் பல காலமாகத் தொல்லை கொடுத்து வருவதோடில்லாது வீணே இன்று சிறை என்றால் என்ன நினைப்பது?

தமிழன் வாழ்வு அவருக்குப் பொறுக்கவில்லை

நேற்றுவரை சட்டமீறலைத் தவறெனக் கண்டித்து வந்தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக் கூடாது என நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக் கூடத்தை மாமனார் வீடுபோலவும், படுக்கையறை போவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. ஒருவரை வையவோ அன்றி அடிக்கவோ வேண்டுவதில்லை. ‘தமிழ் வாழ்க’ என்றால் போதும் உடனே ‘தம்பி! வா’வென ஆச்சாரி யார் அழைத்துக் கொள்ளுவார். நான் பிழைக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாக வேண்டுமென நினைக்க வேண்டாம். தமிழன் வாழ்வு அவர்கட்குப் பொறுக்கவில்லை. என்றென்றும் நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகின்றார்களென்று சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன். பனகல் அரசர் வெற்றி பெற்ற காலத்துப் ‘பனகல் இறந்தார்’ என ஒரு செய்தியைப் பரப்பிப் புகையிலை வழங்கினர். ஜஸ்டிஸ் மந்திரி களை இராட்சதர்களென்றும், அரக்கர்கள் என்றும், இராவணர் என்றும் கூறினர். ஆனால் இன்று ‘உச்சிக் குடுமி ஒழிக’ எனத் தொண்டர்களேக் கூறினார் களென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறார். உச்சிக்குடுமி ஒழிக என்றால், என்ன? உச்சிக்குடுமித் தன்மை தானே ஒழிய வேண்டுமென்பது-இதற்கு இவ்வளவு ரோஷம் வருவானேன்? சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று ‘சரிகைக் குல்லாய் ஒழிக’ என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000 - தர்ப்பையோ அன்றி உச்சிக்குடுமியோ ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிய என்றதற்குச் சரியாகாதே! (கைதட்டல்). பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டான், இராவணன் என்று எதை எழுதி வைத்து, அந்தப் பெயரால் தமிழர்களை அழைக்கும் போது உச்சிக் குடுமி, டவாலி, தர்ப்பை ஒழிக என்றால் என்ன? அத் தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள்.

விநோத சாட்சியம்

இன்று காலை, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் கவனித்தேன். ஒரு சாட்சியம் கூறும் சப்-இன்ஸ்பெக் டர் தாய்மார்கள் கூறாதவற்றைச் சேர்த்துக் கூறுகின் றார். அவரது மயிர்க்காம்பிலுள்ள ஒவ்வொரு துளி இரத்தமும் நம்முடைய உழைப்பினால் கிடைத்த பணத்தினால் ஊறியது என்பதை நினைக்கவில்லை. அவர் என்ன செய்வார்? மேலே உள்ளவர்களின் தயவுக்காகக் கிளிப்பிள்ளை போல் கூறுகிறார். அது பற்றி நமக்குக் கவலையில்லை. இதுதானா சத்திய ஆட்சி, ராமராஜ்ய ஆட்சி, காந்தியின் அகிம்சா ஆட்சி எனக் கேட்கின்றேன். எனக்குச் சத்தியத்தில் சிறிதும் நம்பிக்கையில்லை. ஆனால் உண்மைக்கு மதிப்புக் கொடுக்கின்றேன். சத்தியம் என்று நினைத்தால் பழுக்கக் காய்ந்த கொழுவை உருவலாம் என்றும் பண்டைப் பெண்கள் மணலைச் சோறு ஆக்கியிருக்கின்றனர் என்றும் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே கொழுவை இன்று சத்தியத்தில் நம்பிக்கையுள்ள சத்திய மூர்த்தியாலும் உருவ முடியாது. அல்லது காந்தியாலும் முடியாது (கைதட்டல்). எனவே எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கையில்லை. இன்று தாய்மார்கள் எந்தப் பையனை அல்லது உபாத்தியாயரைக் காலைக் கட்டிப் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாதெனத் தடுத்தனர். ஆனால் சென்ற ஆண்டு காங்கிரஸ்காரர்கள் கிராம்பு மறியலில், கப்பலை விட்டு மூட்டைகளை இறக்கக் கூடாதெனத் தடுத்தனர். மூட்டை ஏற்றிய வண்டியை ஓட்டவிடாது சக்கரத்தின் கீழ்படுத்துத் தடுத்தனர். கடை யில் விற்கக் கூடாதென்றும், வாங்க வருபவர்களையும் தடுத்தனர். இதற்குக் காங்கிரஸ் மந்திரிகள் உத்தரவு கொடுத்தனர். தொண்டர்களைப் பாராட்டினர். அதை விட ‘இந்தி ஒழிக’ என்று கூறுவது தவறானதா? இந்தி உண்மையில் ஒழிந்துவிட்டது. செத்த பாம்பை ஆச்சாரி யார் ஆட்டுகிறார். இந்தி எதிர்ப்பாளர்கள் என்ன செய் தார்கள்? அவர்களுக்கு 18 மாதம், 2 வருஷம் தண்டனை விதிக்கப்படுகின்றது.

மனம் மாறாவிட்டால்....?

உண்மையில் சொல்லுகிறேன் தினம் 5 பேர் வீதம் பெண்கள் ஒரு மாதம் தொடர்ச்சி யாகச் சென்றால் கட்டாயம் ஆச்சாரியார் நிலை மாறும். மாறாவிட்டால் தமிழர்கள் இரத்தம் கொதிக்கும்; உணர்ச்சி பெருகும். உதாரணமாகச் சென்ற வாரம் நான் திருவிதாங்கூர் சென்றிருந்த போது அங்கு நடைபெற்ற அடக்குமுறை காரணமாகத் தோழர் சி.பி. ராமசாமி அய்யர் எதேச் சையாக வெளியில் வர முடியவில்லை. பொதுமக்கள் மனத்தில் உண்டாயிருக்கும் கொதிப்பு கண்டு பயப்படு கிறார். இதைச் சமாளிக்க, சிறையிட்டவர்களையெல் லாம் வெளியில் திறந்துவிட்டார். மக்கள் மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மீண்டும் ஒரு வக்கீல் அம்மையார் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இதைப்பற்றித் தோழர் ராமசாமி அய்யரின் அடக்குமுறையைப் பற்றி எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது கண்டித்தெழுதிற்றா? கவர்னருக்கு பயந்து தேசியக் கொடி, மூவர்ணக் கொடியாயிற்று. இன்று காந்தியார் அக்கொடியைக் கண்ட இடத்தில் கட்ட வேண்டாம்; யூனியன் ஜாக் இருந்தால், அவிழ்த்து விடுங்கள் எனக் கூறுகிறார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே இன்னும் அதைத் தேசியக் கொடியென்றே பொய் சொல்லி வருகின்றனர். முஸ்லீம் கள் எதிர்ப்பிற்குப் பயந்து வந்தேமாதரம் கைவிடப்பட்டது. விசுவபிராமணருக்குப் பயந்து விசுவகர்மா உத்தரவு நீக்கப்பட்டது. பேரிச்செட்டிகளுக்குப் பயந்து, தணிகாசலம் ரோடின் பெயர் மாற்றம் தள்ளப்பட்டது. வக்கீல்கள் எல்லாம் சேரவே பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமன உத்தரவு பின்வாங்கிக்கொள்ளப்பட்டது. 1500 ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மாகாண அதி காரியைத் தள்ளி வைத்தனர். நமக்கு உண்மையான உணர்ச்சியிருக்கின்றதென்று தெரிந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது அவர்கட்குத் தெரியும். சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார் கள். எதற்கும், அவர்கள் பார்ப்பார்களல்லவா! (கைதட்டல்)

ஒரு கதை

நிற்க. சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந் தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந் தார். ‘தேங்காய் மூடி’ என்று அவரை ஒருவர் அழைத் தால் போதும் உடனே கோபம் வந்துவிடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று யார் சொன்னாலும் போதும், ஆச்லரி யார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன், இனி தேங்காய் மூடி என்றாலே போதும், அவர் நிச்சயம் வருவார் (கைதட்டல்). ஏன்? அவர் ஒரு பைத்தியக்காரர். உங் களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையைப் பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித் தால், நான் அடிக்கடி இங்கு வரவேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக் கதை. நமது நண்பர் இராமநாதன் ஆச்சாரியார் பக்கத்தி லிருந்து கொண்டு ‘நெருப்பு சிலீரென்றிருக்கிறது’ என்று கூறிவருகின்றார். அவருக்கும் சுட்டால் தெரியும். இன்று சென்ற தாய்மார்களைப் போல் நாளையும் தொடர்ந்து நடக்குமென்று நம்புகிறேன். தொண்டர்களும் கருத்து வேற்றுமைகளை விளக்கிக் கூறிவந் தால், இரண்டு கட்சிகளிலும் சேராது பொதுவிலிருக் கின்றவர்களும் இதலீடுபடுவார்கள். நாம் சொல்லும் காரணங்களைப் பார்த்து நம்மிடத்துக் குற்றமில்லை என்றால், தானே வருகின்றார்கள். 75 ரூபாய் வாங் கும் சில பெரியோர்களுக்குக்கூட இன்றைய நிகழ்ச்சி யால் மனமிளக்கம் ஏற்பட்டிருக்கும்.

தூங்கினால் தலையெடுக்க முடியாது

ஒரு எம்.எல்.சி. கூறினார் : ஆச்சாரியை விட டாக்டர் ராஜன் செய்வது பிடிக்கவில்லையென்று. நம்மைப் பற்றியும், நம் தாய்மார்களைப் பற்றியும் பல பத்திரி கைகள் கேவலமாக எழுதி வருவது எனக்குத் தெரியும். கொச்சி திவான் தோழர் சண்முகம் செட்டியார்யாராலும் செய்ய முடியாத பொறுப்பாட்சியை வழங்கி சுதேச சமஸ்தானங்கட்கு வழிகாட்டினார். இதைச் செய்ய மற்ற திவான்கள் பயப்படுகிறார்கள். செட்டியார் சிறந்த அரசியல் அறிவாளி. அவரைப் பற்றி ஒரு சமயம் ஒரு குரங்குப் பத்திரிகை அவர் சாதியை இழித்து ‘செக்கு’ப் படம் போட்டுக் கேலி செய்திருந்தது. ஆனால் இன்று திரு விதாங்கூரில் ஒரு அய்யர் அமளிப்படுத்துகின்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல் செக்கோவைப் பற்றியும், ஸ்பெயின், சீனாவைப் பற்றியும் உருகித் தலையங்கம் எழுதுகின்றன. இந்தச் சமயம் தூங்கிவிட்டார்களானால், இனி என் றென்றைக்கும் தலையெடுக்க முடியாது. தமிழர்களைப் பற்றிப் பேச, சட்டசபையில் சர். பன்னீர்செல்வம் 6 தடவை எழுந்தார். ஆனால் அவரைப் பேச விடாது அடக்கி விட்டனர். நிற்க. இன்று “விடுதலை” மேல் தொடுக்கப் பட்டிருக்கும் வழக்கில் வாதாட, பிரத்யேகமாக பல ஆயிரக்கணக்கான செலவில் தோழர் எத்தி ராஜைக் கோவைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஏன்? கோவையில் தகுந்த வக்கீலில்லையா? “விடுதலை”யை எப்படியாவது அழித்துவிட வேண்டு மென்றுதானே எண்ணம். எனவே இன்று ‘விடு தலை’ மயிர்ப்பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வழக்கில் நம்மவர் தோல்வியடைந்தால், நம்பின் சந்ததியின் கதி என்னாவது? தனிப்பட்ட முறையில் எங்கட்கு என்ன வேண்டும்? எங்கள் வாழ்க்கையை ஊரிலிருந்தே எங்களால் நடத்த முடியாதா? அல்லது தோழர் இராமநாதனைப்போல் ஆச்சாரியாரிடம் நான் சென்றால், எனக்கு ஒரு மந்திரி பதவி கிடைக்காதா? எனது காரோட்டிக்கு ஒரு மந்திரி பதவி கொடு என்றால் ஆச்சாரியார் கொடுக்க மாட்டாரா? ஆகவே நாமனைவரும் ஒற்றுமையுடன் பாடு பட்டால் தான் வெற்றியடைய முடியும். நம்மை சூத்திரன் என்றும், தாசிமகனென்றும் பலவிதத்தில் இழித்துக் கூறிவரும் அவர்களை, இன்றும், ‘சாமி இட்லி கொண்டு வா’ என்று தானே கேட்கின்றோம். நாட்டை யாராண்டாலும் நமக்குக் கவலையில்லை. நமக்கு வேண்டியது நன்மையே. எனவே நான் கூறியுள்ளவைகளை ஆராய்ந்து பாருங்கள். இன்று சென்னையை, ஏன் தமிழ் நாட்டையே சிறப்பித்த - தமிழ்ப்பெண்களின் வீரத் தை இந்தியா முழுவதும் அறியச் செய்த தாய்மார் களைத் தொடர்ந்து அவர்களுக்குக் கௌரவ மளிக்க வேண்டுகிறேன் (நீண்ட கைதட்டல்). (குடிஅரசு 27-11-1938) - தொடரும்  சிந்தனையாளன் aug 2016

13 07 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 40

சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா.வின் முழக்கம் 13.11.1938ஆம் நாள் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை வருமாறு :

“தலைவர் அவர்களே! தாய்மார்களே!

இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில், உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மை யிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இந்தக் கூட்டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலை கொள்ளா மகிழ்ச்சியடை கிறது. இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென் னையில் வரும் என நான் நினைக்கவில்லை. சென் னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம் பிக்கைக்கு இருப்பிடமானது என்று நான் சொல்லு வதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகை யிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள், பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத் தில், அவர்கள் ‘நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் தங்கள் வீட்டில் உள்ள பெண்கள் ஒப்புக்கொள்ளமாட் டேன் என்கிறார்களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பல தடவை கேட்டிருக்கிறேன்.’ அதனால்தான் வெளி ஜில்லாக் களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள் கைகள் அவ்வளவு அதிகமாக இல்லையோ என்றும் கருதுவதுண்டு, ஆனால் இன்று இப்பெண்கள் மாநாட் டையும், இன்றுள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபந்யாசங்களையும் தீர்மானங்களை யும் பார்க்கும்போது, எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது சென்னை பெண்மக்கள் ஆண் களைவிட எந்த வகையிலும் பின்னடைந்தவர்களல்ல என்பதைக் காட்டுகிறது.

இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண் கின்றேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரிய தொரு வெளிச்சத்தையும் தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழ ராகிய கனம் ஆச்சாரியாருடைய பெருங்கருணையே ஆகும். இதற்காக அவருக்கு நான் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக் கிளர்ச்சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால் இன்றைய அடக்குமுறை ஆட்சி யை இதுபோலவே குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்காவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். உண்மையில் இன்றைய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண் கள் பிரதிநிதித்துவம் வழிந்தோடு கின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக்கிறீர்கள். பல அருமையான தீர்மானங்களையும் செய்தீர்கள்.

ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரி யாத சில பெண்கள் கூடிக்கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்களபிப்பிராயத்துக்குத் நேர் மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப்படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச் செய்யப் பட்டது என்றால், இம்மாநாடு கூடப் போவது தெரிந்து இம்மாநாட்டுத் தீர்மானங்களை அசட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய்யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிநிதித்துவம் பெற்றதல்லவென்று கருதும் படி செய் வதற்காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மி டையில் (தமிழர்களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண் களைக்கொண்டு நம்மைக் கேலி செய்யவும், தாழ் வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.

வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக் காக இருக்கிறது என்றும் அவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்குப் புகட்டி நம்மக்கள் தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக்காரர்களிருக் கலாம். சைவ வைணவ மதக்காரர்களிருக் கலாம், முஸ்லிம், கிறித்துவர்கள் இருக்கலாம், மேல்சாதி, கீழ் சாதிக்காரர்கள் என்பவர்களிருக்கலாம், எந்த மதத் தையும், சாதியையும் நம்பாதவர்களுமிருக்கலாம்.

எனவே நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடுபட வேண்டுவது இன்றியமையாத தாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரணமாகவே நம் மானத்துக்கு ஏற்றவைகள், உணர்ச்சிகள் காரண மாகவே நாம் இன்று ஒன்றுகூடியுள்ளோம். உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மையில் ஏற்படுமானால் அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும் அவர் கடினமான அடக்குமுறைகளைக் கையாளுவாரானால் அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத்திலும் ஏன் ஹிட்லருணர்ச்சியை உண்டாக்காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?

இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மை யிலேயே எனக்குப் பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள் சென்றதைப்பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறை சென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்? நீங்கள் ஏன் செல்லக்கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோவில் பிரவேச விஷயத்தில் திருவிதாங்கூர் ராஜாவைப் பாராட்டி விட்டு தோழர் எம்.சி. ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக் கிறது (சிரிப்பு). இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது. ஆனால் அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் அதாவது, தமிழ்ப் பெண்களை சிறைசெல் லும் காலம் வந்தால்தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான்கூட அப்போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந் தோமா என்று கூட நினைத்தேன், அவ்வளவு பெருமை யாய்ப் பேசினார். ஆனால் பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவதுபோல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர்கள் கடமையைப் பற்றியும் பேசினால்தான் நீங்கள் உரிமை பெறலாம்-நன்மை அடையலாம். பெரியவர்கள் தேடி வைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கும் வகைக்கும், இன்னல்கbல்லாம்-பெண்கள் முன்னேற்றத்திற்கும் வீரத்திற்கும்-இம்மாநாடு ஒரு வழி காட்டிவிட்டது.

பார்ப்பனர்கள் ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்துத் தங்களைப் பற்றியே தங்களுக்கு தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம் பதவி வாங்கிக்கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாராக உள்ள-நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால் நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின்றனர். நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக்கும் கனம் சுப்பரா யனுக்கும் பல ஊர்களில் எத்தனையோ பார்ப்பனப் பெண்கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார்மீது அவர் கள் குறை கூறினார்கள்? பெண்களாகிய நீங்கள் தலை நிமிர்ந்து “எங்கள் உரிமையில் தலையிட்டால் நாங்கள் சும்மாயிரோம்” என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? ஆணுடன் பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத்தில் ஆணுக்கு ஒரு வேலை, பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே ஆண்களைப் போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.

நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக் கூடாது? சிறை என்றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டிய தில்லை. எந்தச் சட்டத்தையும் மீறவேண்டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்து வேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டிய தில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப்பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே ஆச்சாரியார் சிறைக்கு வா என அழைத்துக் கொள்வார் (கைதட்டல்). எனக்கு ஒரு பயம்! என்னவென்றால் எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால், பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போக வேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல் லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட்டுக்குப் பாடுபடாது ஆண் கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம்பார்த்து அவர்களைக் குத்தவேண்டும். வீட்டிற்குள்ளே அனுமதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதேபோல் அநேக நாடுகளில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துப் திருத்தியதாகச் சரித் திரம் கூறுகின்றது. அநேக ஆண்கள் நீங்கள் சிறைக் குப் போவதைக்காண பயப்படுகிறார்களாம். அவர்க ளைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப்போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட் குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்துவிடுவார்கள். நம்மில் சாதி மத உயர்வுகளையும், சுயநலத்தையும் மறக்கவேண்டும்.

இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்பட வில்லை) ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒருவரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப்பட்ட வனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோசிக்க வேண் டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால் நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின இரயில் வண்டியில் ஏறமாட்டீர் களா? அல்லது உங்கள் வண்டியில் தான் எனக்கு இடம்கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெ னில் இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக்கேட்டு சில சோணகிரிகள் ஏமாறலாம். இன்று தேசிய மகாசபை என்று கூறப்படும் காங்கிரஸ் தலைவராக ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவஹர் லால் தலைவராயிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல்லிக்கொள்கிற முறையில் எனக்கு சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கையில்லை யென்பதாகக் கூறி கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத்திருக்கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார்களே ஒழிய எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவஹர்லால் நாஸ்திகர் என் பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால் எங் களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.

ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிலிருந் தாலும், நாம் என்ன செய்தால் வாழ முடியும் என்பதை யோசிக்க வேண்டும். “காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது”. எனக்கு மட்டிலும் இதிலென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன் : பார்ப்பனர்கள் நாடோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார்கள் - எழுது கிறார்கள். ஒரு குரங்குப் பத்திரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்குப் போட்டு செக்கு ஆட்டுகிற மாதிரி படம் போட்டு இழிவுபடுத்திற்று. நம்மைக் கழுதை என்றும் நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர்களென்றும் கூறி வருகிறது. இதைப்பார்த்து உங்கள் இரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந்நிலையில் வீணே ‘தமிழ் நாடு தமிழனுக்கு’ என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம் காப்பாற்றப் பட நாடு வளர வேண்டுமானால், பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வர வேண்டும். இதைக் கருதியே இம்மாநாட்டைக் கூட்டினீர்கள்; பல தீர்மானங்கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மையில் வீரமுடை யவர்கள்தான்; நினைத்ததை முடிக்கும் ஆற்றலுடைய வர்கள்தான் என்பதை செயலில் காட்டவேண்டும். ஆனால் சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் சிறைச் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலா காது” (நீண்ட கைதட்டல்). - விடுதலை, 19-11-1938

தொடரும் keetru.com june 2016

06 07 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 39

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடவடிக்கை விபரம்; நிறைவேற்றிய தீர்மானங்கள் 

இன்று (நவம்பர் 13, 1938) பிற்பகல் 1 மணிக்கு சென்னை பெத்தநாய்க்கன் பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்த காசி விஸ்வநாதர் கோயில் முன் பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி-திரு வரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணி அம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவா லூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ. ராமசாமி, தோழர் அ. பொன்னம்பலம், உள்ளிட்ட 5000-த்திற்கும் மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்துவந்தனர். மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்துவரப் பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி, ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ்நாடு தமிழருக்கே’, ‘இந்தி வீழ்க’, ‘தமிழ்ப் பெண்கள் வாழ்க’, ‘தமிழர் வாழ்க’ என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர். ஊர்வலத்தில் பெண் கள் மட்டிலும் 2000 பேர்கட்கு மேலிருந்தனர். ஊர்வலம் குப்பையா தெரு, தங்கசாலைத் தெரு, ஆதியப்பன் நாயக்கன் தெரு, வால்டேக்ஸ் ரோடு ஆகியவைகளின் வழியாக வந்து சரியாக 2 மணிக்கு மாநாட்டுக் கொட்ட கையாகிய ஒற்றைவாடை நாடகக் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது.

ஊர்வலம் வரும் முன்பே கொட்டகையிலும், கொட்ட கைக்கு வெளியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். கொட்டகையில் ஒலிபெருக்கிக் கருவி அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் பெண்கள் 5000 பேர்கட்கு மேல் வந்து கலந்து கொண்டனர். மாநாட்டுக் கொட்டகை வாழை மரங்களாலும், கொடி களாலும் வரவேற்பு வளைவுகளாலும் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியில் நிற்போர்க்கும் கேட்குமாறு ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியிலிருந்தே பேச்சு களைக் கேட்டனர். முதலில் தலைவர், திறப்பாளர் முதலியவர்களை வைத்து ஒரு ‘குரூப்’ போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர், மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரின் வேண்டுகோளுக் கிணங்கி, திருவாட்டி மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் மூவரசர் தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். அக்காலை திருவாட்டி மீனாம் பாள் பேசியதாவது :- இம்மாபெரும் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் என்னைக் கொடி உயர்த்தப் பணியளித்த வரவேற்புக் கழகத்தாருக்கு எனது நன்றி. நாம் இக்கொடியை எதற்காக ஏற்ற வேண்டும்? அக்காலத்து நம் தமிழ் மொழியையும், நாட்டையும் நம் தமிழரசர்கள் மூவரும் மிகத்திறம்பட வளர்த்து வந்தார்கள். காலப்போக்கில் தமிழர் தங்கள் கலையை மறந்தனர். அதனால் தான் இன்று இத்தகைய கீழான நிலைமையிலிருக்கின்றோம்.

பண்டைக் காலத்து எத்துணையோ பெண்கள் வீரமுடையவராகவும், சிறந்த கல்வியறிவுடையவர்களாகவும் விளங்கி வந்த னர். இன்றோ நம் நாட்டில் பெண் கல்வி மிகக் குறை வாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியும் கட்டாயப் பாடமாம். இதை நீங்கள் அவசியம் எதிர்த்துப் போராட வேண்டும். பெண்கள் தலையிட்ட காரியம் வெற்றி பெறுவது நிச்சயம் எனக் கூற விரும்புகிறேன். நமது உரிமைக்காகப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஆண்கள் முயற்சிக்கு நாம் உறுதுணையா யிருந்து வெற்றி தேடவேண்டும். ஆண்மகனை உயர்த்தவோ தாழ்த்தவோ பெண்ணால் முடியும். எனவே ஆண்களும் பெண்களுக்குச் சமஉரிமை வழங்கிப் பெண்களை முன்னேற்ற வழிசெய்ய வேண்டும். நமது கலை, நாகரிகம் உயர்வடைய வேண்டும்.

தமிழ் நாடு தமிழருக்கென்றாகும்வரை உண்மையாகப் பாடுபட வேண்டும். இக்கொடியைப் போல் நம் நாடும் உயர்ந்து விளங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மீண்டும் உங்கட்கு வந்தனந் தெரிவித்து இத்தமிழ்க் கொடியை உயர்த்தி வைக்கிறேன். திருவாட்டிகள் சி. கலைமகள் பட்டு, தாமரைக் கண்ணியம்மையார், பார்வதியம்மையார் முதலியவர் கள் தமிழ்ப் பாட்டுகள் பாடினர். பின்னர் திருவாட்டி பண்டிதை அ. நாராயணியம் மையார் மாநாட்டைத் திறந்து வைத்தார் (பிரசங்கம் பின்னர் வெளிவரும்). பின்னர், திருவாட்டி - திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைமை வகிக்குமாறு வரவேற்புக் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார். அதை ஆதரித்து திருவாட்டிகள் மூவலூர் இராமாமிர்தம், மலர்முகத்தம் மையார், இராணியம்மாள் (தோழர் கண்ணுத்துரை யவர்களின் மனைவி) ஆகியோர் பேசினர்.

டாக்டர் எஸ். தருமாம்பாள், மாநாட்டுத் தலை வருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுத்தார். அது வருமாறு :

தமிழ்ப் புலமைத் தனியரசமைப்பு மறைமலையடிகள் பயக்த மாசிலா மாணிக்கமே! எங்கள்வே ண்டுகோட்டிற்கிணங்கி நானூறு கல் நடந்து இச்சென்னை நகர் போந்து இப்பேரவைக்குத் தலைமை தாங்கும்தங்களை உளம் ததும்பும் உவகையுடன் யாங்கள் வரவேற்கிறோம். தமிழ்ப்பாதுகாப்பிற்காகத் திடமுடன் உழைத்துச் சிறைபுகுந்த தமிழ்ப் புலவரான மறைத் திருநாவுக் கரசின் தமக்கையார் பேறு வாய்ந்த தமிழ்ப் பெரு மாட்டியே! தமிழுக்குப் பண்டெல்லாம் பேரிடர்கள் பல விளைந்தன. அவ்வப்போது அதற்கேற்ற தமிழ் வீரர்களும், வீரப் பெண்மணிகளும் தோன்றி அவ்விடர்களைக் களைந்தமை ஆராய்ச்சி வல்லார் நன்கறிந்ததே. அமிழ்தினுமினிய நந்தமிழ் மொழிக்கு இன்று நேரிட்டிருக்கும் பேரிடர்களைக் களைந்து அது மேன்மேலும் சிறப்புற்றோங்கும் திருப்பணியில் ஈடுபட்டுத் தலைமை தாங்கி நடத்தத் தங்களைக் காட்டிலும் சிறந்த ஒப்பற்ற தலைவியார் வேறெவருமில்லை என்பதை யாங்கள் எடுத்துக்கூறவும் வேண்டுமோ!

நூல் பல எழுதி நுண்பலம் தெரிந்த நங்கையர் திலகமே!

அரிதின் முயன்று தாங்கள் எழுதியுதவிய தனித் தமிழ்க் கட்டுரைகள், முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர், ஐரோப்பிய அருண் மாதரிருவர் என்ற தமிழ் நூல்களை எளிய இனிய தமிழ்க் கட்டுரைகள் எழுதுவதற்கு மேல் வரிச்சட்ட மாய் விளங்குகின்றன என்பதைத் தமிழ் நாட்டார் நன்கறிந்துள்ளனர். இவையெல்லாவற்றினும் மேலா கத் தாங்கள் இருபதாண்டுகளாகப் பற்பல இடைஞ்சல் களுக்கிடையில் அரும்பாடுபட்டு எழுதித் தொகுத்த வடசொல் தமிழ் அகரவரிசை தமிழுக்குரிய ஆக்க வேலைக்கு அடிப்படையாய் அமைவதொன்றாகு மென்பதை எண்ணி, எண்ணி மகிழ்கின்றோம்.

ஆலமர செல்வற் கன்புபூண்டொழுகும் நீலக்கண்ணியாம் நித்திலச்சுடரே!

பொருள் வசதியும் காலம் சதியும், பெருஞ்செல்வர் உதவியும் இன்றித் தமிழ்நாட்டை கிளர்ந்தெழுந்துள்ள புத்துணர்ச்சியே பற்றுக்கோடாகவும் தமிழ்த் தொண் டாற்ற அணிவகுத்து முன்வந்துள்ள பெண்மணிகளே துணியாகவுங் கொண்டு இம்மாநாட்டதனைத் திறனேதும் மில்லா நாங்கள் கூட்டி வைத்துள்ளதில் எத்தனையோ குறையிருக்கலாம். அவற்றையெல்லாம் பொருட்படுத் தாது கண்ணோடி எங்களை நல்லாற்றின் உய்ந்துத் தமிழ்நாடு நலம் பெறச் செய்ய வேண்டியதற்கான பணியை ஏற்றருளுமாறு பன்முறையும் இறைஞ்சித் தங்களை இச்சென்னை மாநகரின் கண் இன்று கூடும் இப்பேரவைக்கு வரவேற்கிறோம். தங்கள் வரவு பெரு நலனும் பெரும் புகழும் அளிக்கும் நல்வரவாகுக! செம்மனச் செல்வியாம் தாங்கள் எல்லா நலங்களுஞ் சிறந்து ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரோடிச் சீரும் சிறப்புமெய்துமாறு தமிழ்த்தாய் இணையங் களை வாழ்த்தி வணங்குகின்றோம்.

வரவேற்புக் கழகத்தார், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு.

தலைவர் தமது தலைமைப் பிரசங்கத்தை ஆற்றி னார் (அது நாளை வரும்). திருவாட்டி பார்வதியம் மையார் அவர்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் (சொற்பொழிவு பின்னர் வரும்). தலைவரால் கொண்டு வரப்பட்டு பல பெண்மணி களால் ஆதரிக்கப்பட்டு, தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின. தீர்மானங்கள் வருமாறு :

நிறைவேறிய தீர்மானங்கள் :

1. இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர் திருத்தத் தலைவர்கள் செய்ய விடலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவ தாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாக வும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொரு வருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போ தெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெய ரையே வழங்குதல் வேண்டுமென இம்மா நாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.

2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கி விடவேண்டு மென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்று பெருந் தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதிவேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமை யாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக் கின்றது.

4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்வது டன், பிற மொழிகள் தமிழ்மொழிக்கு விரோத மாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கக் கூடாதெனத் தீர்மானிக்கிறது.

5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாக இருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ் சென்ற பா.வே. மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறிய தையும், நாடார் சமூகத்தைக் கேவலமான வார்த் தைகளால் கூறியதையும், தோழர் மு. இராகவை யங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டு களுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்ப துடன், தமிழறிவும், நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டா ரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.

6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மது ரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசிய தைப் பார்த்தால், தங்கள் காரியம் நடந்தால் போது மானதென்றும், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலை யில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால் கவர் னர் அவர்களின் அவ்வபிப்பிராயத்தை வன்மை யாகக் கண்டிக்கிறது.

7. இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மகாநாட்டிலும், கட்டாய இந்தியை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றி யிருப்பதைக் கண்டிக்கின்றது.

8. இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும், பார்ப்பன அன்புபெற்ற தாய்மொழி யறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்ட மென்று கருதுகிறது.

9. இம்மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீர மிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்து பார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக் கிறது.

10. இந்தியை எதிர்த்துச் சிறைசென்ற ஈழத்துச் சிவா னந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என். அண்ணாதுரை, எம்.ஏ. உள்ளிட்ட பெரியோர் களையும் தொண்டர்களையும் பாராட்டுகின்றது.

11. வகுப்புத்துவேஷக் குற்றம்சாட்டி 153 ஏ, 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண் டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றுச் சிறை சென்ற தோழர் பி. சாமிநாததனை இம்மாநாடு பாராட்டுகிறது.

12. தோழர்கள் சண்முகானந்த அடிகளும், சி.டி. நாயக மும் சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.

13. சென்னை நகர் தமிழ்நாடாதலானும் தமிழர்கள் முக்கால் பாகத்துக்குமேல்வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரப் பலகை களில் போட்டு வந்திருக்க, இப்போது புதிதாக தெருக்களுக்கு பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடாமலிருப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ் மக்கள் தெருப் பெயர் தெரியாமல் தொல் லைப்படுவதை நீக்கி தமிழிலும் வீதிகளின் பெயர் போட வேண்டுமென, சென்னை நகர சபை யாரையும் மற்ற தமிழ்நாட்டு நகர சபைகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

14. சென்னை இரயில் நிலையத்தில் பீச், போர்ட்டு, பார்க் என தமிழில் எழுதியுள்ளதை முறையே கடற்கரை, கோட்டை, தோட்டம் என தமிழில் எழுத வேண்டுமெனவும் அப்படியே இரயில் பயணச்சீட்டு (டிக்கெட்)களினும் எழுதவேண்டு மெனவும் இரயில்வே கம்பெனியாரையும், சென்னை அரசாங்கத்தாரையும் இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகின்றது.

15. ஒரு அணா, நாலணா, நிக்கல் நாணயங்களின் மதிப்பைக் குறித்திருப்பதில் சுமார் மூன்று கோடிக்கு மேல் உள்ள தமிழ் மக்களுக்கு விளங்கும்படி யாகத் தமிழிலும் குறிப்பிட வேண்டுமென அரசாங் கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகின்றது.

16. சென்னை அரசாங்க இந்திய மருத்துவப் பள்ளி சித்த வகுப்பில் நடைபெறும் பாடங்கள் ஒவ்வொன் றும் ஆங்கிலத்திலேயே பெரும்பாகம் நடைபெற்று வருவதை நிறுத்தி எல்லாப் பாடங்களையும் தமிழி லேயே நடத்த வேண்டுமெனவும், சித்த வகுப்பில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கூடப் படிப்பை ஆங்கி லத்தில் படித்து முடித்திருக்க வேண்டும் என்று கட்டாயமிருப்பதை எடுத்து, தமிழில் ஓரளவு இலக்கிய அறிவுடைய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் சென்னை அரசாங்கத் தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகின்றது.

17. இந்திய மருத்துவப் பள்ளியில் சித்த மருத்துவ வகுப்புக்கு வேண்டிய பாடங்களில் உடற்கூறு, உடல்தொழில், கெமிஸ்ட்ரி எனும் இரசாயன நூல், மெட்ரியா மெடிக்கா, பிள்ளை பெறு நூல் முதலியவை தமிழில் இருப்பதாலும் அதனை அச்சிட்டு மாணவர்கட்கும் மற்றவர்கட்கும் பயன் படும்படிச் செய்விக்க அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

18. மேற்கண்ட பாடப் புத்தகங்களில் உடற்கூறு, கெமிஸ்ட்டரி, மெட்ரியா மெடிக்கல் முதலிய புத்த கங்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன் அச்சிடப்பட்டவைகளை அரசாங்கத்தாருக்கு அச்சிடக் கொடுக்க இசைந்துள்ள சென்னை தென் இந்திய வைத்தியச் சங்கம் நிறுவியவரும், அமைச்சரு மாகிய பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் அவர்கட்கு இம்மாநாடு நன்றி செலுத்துகிறது.

19. வியாபாரப் பத்திரிகைகளைப் போலல்லாமல், தமிழர் முன்னேற்றம் ஒன்றையே கருத்திற் கொண்டு பெரிய கஷ்ட நஷ்டங்களுக்கிடையே ஓயாது உண்மையாய் உழைத்துவரும் ‘விடு தலை’, ‘குடிஅரசு’, ‘நகரதூரன்’, ‘பகுத்தறிவு’, ‘ஜஸ்டிஸ்’, ‘சண்டே அப்சர்வர்’ முதலிய பத்திரிகைகளைத் தமிழ்ப் பெண்மணிகள் ஒவ்வொரு வரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

20. பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி, தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘தமிழ்மணி’ முதலிய பத்திரிகை களைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

21. கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.

22. தமிழநாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணி ருந்தும் குருடராய் தாய் மொழியில் கையெழுத் துப் போடத்தெரியாத நிலைமையில் இருக்கை யில், சென்னை முகன் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியைக் கட்டாய மாகச் செய்திருப்பதையும் அதனைக் கண்டிக்குமுகத் தான் தமிழ்நாட்டுப் பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும், இதைப்பற்றித் தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்ப வரைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்து வதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.

23. தமிழ்மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தி யைக் கண்டித்து மறியல் செய்து சிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது. தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விரித்தும் தோழர் ஈ.வெ. ரா. ஒரு சொற்பொழிவாற்றினார் (அது பின்னர் வரும்).

பின்னர் தீர்மானங்களை ஆதரித்தும் பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய நிலைமையை விளக்கியும் தோழர்கள் மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை ஆர். கண்ணம்மாள், கலைமகளம்மையார், இராமாமிர் தத்தம்மையார், கமலாம்பாள், சிறுமி குஞ்சிதமணி, நீலாயதாட்சி, பண்டித திருஞானசம்பந்தம், ஆர். நாராயணி அம்மாள், மலர்முகத்தம்மையார், சாமி அருணகிரிநாதர், இராணி அம்மையார் (தோழர் அண்ணாதுரை மனைவி), தோழர் அண்ணாதுரை அன்னையார் ஆகியோர் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பிறகு, தோழர் வ.பா. தாமரைக் கண்ணம்மையார் நன்றி கூறினார். தோழர் கள் பார்வதியம்மையார், தாமரைக் கண்ணம்மையார் வாழ்த்துப்பாடினர். இரவு 9 மணிக்கு தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! பெண்ணுலகு தழைக்க! என்ற பேரொலிகளிடையே மாநாடு இனிது முடிவுற்றது. (“குடிஅரசு” 20-11-1938) (தொடரும்) keetru.com May 2016 

28 06 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 36

ஆகஸ்ட்டு 1ஆம் தேதி திருச்சியில் புறப்பட்ட தமிழர் பெரும்படை 42வது நாளில் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னையை அடைந்தது. சென்னையில் சிறப்பான வர வேற்பு சென்னை கடற்கரையில் முப்பெரும் தலைவர்களின் முழக்கம் (மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈ.வெ.ரா.) 12-9-1938 விடுதலையில் வெளிவந்த செய்தியை அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.

தமிழர் பெரும்படைக்கு சென்னையில் வரவேற்பு

நேற்று காலை படை மைலாப்பூரில் தங்கி, மாலை 3 மணிக்குத் தண்டை விட்டுப் புறப்பட்டு, இராயப்பேட்டை, மவுண்ட்ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி வழியாக மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக்கேணி கடற் கரைக்கு வந்து சேர்ந்தது. ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் சிந்தாரிப் பேட்டை வந்ததும், தோழர் இராகவேலுவைத் தலைமையாகக் கொண்ட செஞ்சட்டை அணிந்த 100 தொண்டர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். ஆங்காங்கு பல பேட்டை களிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தி எதிர்ப்பு வாக்கியங்கள் எழுதப்பெற்ற பலவிதமான அட்டைகளுடனும், தமிழ்க்கொடிகளுடனும் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ‘தமிழ் வாழ்க’, ‘இந்தி வீழ்க’ என்ற பேரொலி காதைச் செவிடுபடச் செய்தது. படை ஊர்வலம் வரும் காரணமாகப் போக்குவரத்துகள் தடைபட்டன.

கடற்கரைக் கூட்டம்

சரியாக 5.30 மணிக்குக் கூட் டம் தொடங்கப் பெற்றது. கூட்டத் திற்கு மாகாணத்தின் பல பாகங்களி லிருந்தும், சென்னை நகரின் பல் வேறு இடங்களிலிருந்தும் சுமார் ஒன்றரை லட்சம் பேர்கட்கு அதிகமாக மக்கள் வந்திருந்தனர். அவர் களுள் மேடை மீதிருந்த முக்கியமானவர்கள் மறைமலை யடிகள். சர். கே.வி. ரெட்டி நாயுடுகாரு, ஈ.வெ. ராமசாமி, எஸ்.எஸ். பாரதியார், சர். பி.டி.ராஜன், மிட்டாதார் நஞ்சா செட்டியார், ஜோலார் பேட்டை வி. பார்த்தசாரதி, மீனாம்பாள் சிவராஜ், சாமி சண்முகானந்தா, மௌலானா மௌல்வி ஷர்புத்தீன் சாகிப் (வேலூர்), பரவஸ்து இராஜகோபாலாச் சாரியார், டாக்டர் தர்மாம்பாள், அ. பொன்னம்பலனார் ஆகியோராவர். மாலை 5.30-க்கு ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் இரவு 1 மணி அதாவது 7.30 மணி நேரம் மிக்க அமைதியாக வெற்றிகரமாக நடைபெற்றது. கூட்டத்தில் ஒலிபெருக்கிக் கருவிகள் வைக்கப் பெற்றி ருந்தன. பெண்மணிகட்காக ஒதுக்கப்பட்டிருந்த தனி இடத் தில் ஆயிரக்கணக்கான பெண் கள் அமர்ந்திருந்தனர். ‘சதிகார நெஞ்சங்கள் துடிக்க சட சட என விண்ணில்’ தமிழ்க் கொடி பறந்து கொண்டிருந் தது. தோழர் சாமி சண்முகா னந்தா முன்மொழிய, தோழர் அண்ணல் தங்கோ வழி மொழிய, பல்லாவரம் சுவாமி வேதாசலமென்னும் மறை மலையடிகள், நீண்ட கோஷத் திற்கிடையே தலைமை ஏற் றார். தோழர்கள் பெரியசாமி, வைலட் பத்மாபாய் (மாணவி), பொன்னுசாமி, சிறுவன் புருஷோத்தமன் ஆகியோர் இந்தி எதிர்ப்புப் பாடல்கள் பாடினர்.

தலைவர் முன்னுரை

தலைவர் தனது முன்னுரையில், ‘மிக்க நெருக்கமான காலத்தில் கூட்டப்பட்ட இம்மாபெரும் தமிழர் கூட்டத்திற்குத் தன்னைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டமைக்காக எல்லோருக்கும் வந்தனம் செலுத்துவதுடன், நிறைந்த தொல்லைகட்கிடையே தங்களுடைய உடல் நிலையைப் பொருட்படுத்தாது தமிழ்நாட்டிற்கு தமிழுக்குச் சேவை செய்வதே தங்கள் கடன் என நினைத்து திருச்சியிலிருந்து நடந்து ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்து கொண்டே சென்னை யை வந்தடைந்த தமிழர் பெரும் படைக்குச் சென்னை வாசிகளின் சார்பாக வந்தனங் கூறுகின்றேன்’ எனக் குறிப் பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது :

“தமிழர்கள் இனி ஒற்றுமையடையவார்களா? என நான் நீண்ட காலமாகச் சந்தேகித்ததுண்டு. அதற்கு மாறாக இன்று உங்கள் ஒற்றுமையைக் காண உள்ளம் பூரிக்கின் றேன். தமிழ்மொழி இனி முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் ஒற்றுமை நம்மிடை வளருமா னால் தான் நாம் முன்னேற முடியும். ஒன்றுக்கும் உதவாத இந்தியை நாம் அறவே விலக்க வேண்டும். அப்படி இந்தியாவுக்கும் பொதுமொழி ஒன்று இருக்க வேண்டுமென் றால், அது ஆங்கிலமாகத்தானிருக்க வேண்டும். ஆங்கிலம் வந்த பிறகுதான் நாம் மனிதராக வாழ முடிந்தது. ஆங்கில அறிவால்தான் காங்கிரஸ்காரர் கூட இன்று எங்கட்கு சுயராஜ் யம் வேண்டுமெனக் கேட்க ஆரம்பித்தனர். விஞ்ஞான அறிவு நிறைந்த ஆங்கிலத்தின் உதவியால் உலகம் முழுமையும் நாம் தொடர்பு கொள்ள முடியும். எனவே முதலில் நமது தாய்மொழியை வளர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே பொது மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு தமிழனுக்கே உரிமையாக வேண்டும். தமிழ் வேறு ஒருவனுக்கோ, ஒரு மொழிக்கோ, அடிமைப்பட இடமில்லை மீண்டும் உங்கட்கு எனது வந்தனம்.”

பின்னர் சென்னைப் பொது மக்கள் சார்பாக டாக்டர் தருமாம்பாள் அம்மையாரவர்கள் படைக்கு ஒரு வரவேற்பு இதழ் வாசித்தளித்தார். படையின் மந்திரி தோழர் மணவை ரெ. திருமலைசாமி அவர்கள், திருச்சியை விட்டுச் சென்னை அடைந்தது முதல் நடைபெற்ற படையின் செயல்முறைகளைத் தொகுத்த அறிக் கையைப் படித்தார். மேலும் இன்றைய கூட்டத்துடன் இப்படை கலைக்கப் பெறுகின்றது. ஆனால் எங்கள் களைப்புத் தீர ஐந்து நாள் சென்னையில் தங்கி ஊர் செல்வோமென உத்தி யோக முறையில் தெரிவித்தார். பின்னர், தோழர் பாரதியாரவர்கள் பேசுகையில், தமிழர் பெரும்படையின் சிறந்த தொண்டினைப் பாராட்டி, தானும் தனது உல் நலிவிலிருந்து நீங்கி மீண்டும் தமிழ்த் தொண்டு செய்யப் புறப்பட்டுவிட்டதாகவும், இந்தப் பத்துமாத காலத்திற்குள் நாமடைந்த ஒற்றுமை, வெற்றி ஆகியவைகட்கு மகிழ்ச்சி யடைவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், கனம்கள் இராஜகோபாலாச்சாரியார், இராமநாதன், கோபால் ரெட்டி ஆகியோர் பேச்சிற்கு ஆணித்தரமான பதிலளித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :

“நான் ஒரு காங்கிரஸ்காரனே. ஆனாலும், தலைவர் கூறுவதை ஆய்ந்து பார்க்காது அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையுள்ள சர்வாதிகாரக் காங்கிர சுக்கு நான் முதல் எதிரி, நிற்க. நான் இதுவரை பல துறைகளில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கைக்கு மாறாக நடந்ததுண்டு; அவரை எதிர்த்ததுண்டு. ஆனால் உண்மையை உணர்ந்த நான், இன்று இம்மாபெரும் கூட்டத்தின் மத்தியில் அவைகட்காக அவரிடம் நேரில் என்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். (கைதட்டல்). இனி தமிழ்நாடு தமிழனுக்கே ஒழிய, தமிழ்நாட்டில் ஒரு நேருக்கோ, போசுக்கோ, காந்திக்கோ அதிகாரம் செலுத்த இடமில்லை. எனவே நீங்கள் அடுத்த தேர்தலில் மஞ்சள் பெட்டியை மறந்து தமிழ்நாட்டுக்கு உழைக்கும் தமிழர்கட்கே உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுகின்றேன்.” பின்னர் தலைவர் ஈ.வெ.ரா. பேச எழுந்ததும், மக்கள் ஒரு நீண்ட கைதட்டல் மூலம் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சி யைக் காட்டினர்.

ஈ.வெ.ரா.

“தலைவர்களே! தோழர்களே! நான் இன்று இக்கூட்டத்தில் பேசமுடியும் என்று நினைத்து இங்கு வரவில்லை. பல இடங்களில் நான், ‘ஏன் இன்னும் சிறை புகவில்லை?’ என இன்றைய காங்கிரஸ் மந்திரிகள் பேசிவந்தனர். திருவாரூர், விருதுநகர் முதலிய இடங்களில் கனம் இராமநாதன், கனம் இராமன்மேனன் முதலியோர் சிறைக்கு என்னை அறைகூவி அழைத்தனர் (பேச்சு மூலமாக) மேலும் காங்கிரஸ் மந்திரிகள் என்னை சென்னையில் கைது செய்ய முடிவு செய்திருக்கின்றனர் எனக் கேள்வியுற்றேன். ஆனால் நான் சென்னைக்கு வெளியில் என்னைக் கைது செய்யட்டும் என்று 2 வாரம் தாமதித்துப் பார்த்தேன். ஆனால் இதுவரை அப்படியொன்றும் நேரவில்லை. எனவே, சென் னைக்கே சென்றுவிடுவோம் என, எனது மூட்டை முடிச்சு களைக் கட்டிக்கொண்டு கிளம்பி வந்துவிட்டேன். (கைதட்டல்). இன்றும், சென்டிரல் ஸ்டேஷனிலேயே கைது செய்யப்படு வோம் என நானும், பாரதியாரும் நினைத்தோம். பாரதியாரு டைய துணைவியாரும் மகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்பி வைத்தார்கள். நான் இனி சிறைபுகுவதன் மூலம் வீரனாக வேண்டுமென்று விரும்பவில்லை.

ஏதாவது ஒரு வருடம் தண்டனை கிடைத்தால் உழைப்புத் தொல்லையிலிருந்து சற்று நீங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்றும், அதனால் எனது ஆயுள் சற்று வளரும் என்றும் தான் நினைதேன். இக்கூட்டத்திலும் என்னைக் கைது செய்யலாம். ஆனால் தமிழர் பெரும்படையின் வரவால், மக்கள் உணர்ச்சியால் கலவரமேற்படுமென்று மந்திரிகள் பயப்படுகின்றார்கள் போலும்! மேலும் நாளை மாலை வரை இதற்காகவே சென்னையில் தங்கியிருக்கப் போகின்றேன். உண்மையிலேயே என்னிடத் தில் ஆச்சாரியாரவர்கட்கு நல்லெண்ணமிருந்தால் - அன் பிருந்தால் - எனக்கு ஓய்வு கொடுப்பதற்காக வேனும் சீக்கிரம் அழைத்துக் கொள்ள வேண்டுகின்றேன். (கைதட்டல்). ஆகஸ்ட் 1-ந் தேதி படைக்கு நல் வாழ்த்துக் கூறி, அனுப்பி வைத்தேன். தமிழ்நாட்டில் பலவிதத் தொல்லை களையும் சமாளித்து வெற்றியுடன் சென்னை வரும் படையை வரவேற்க வேண்டி, சென்னை வாசிகள் அழைப்பிற்கிணங்கி யும் இங்கு இன்று வந்தேன்.

படையின் அவசியம்

நிற்க. படையைப் பற்றிச் சிறிது பேச நினைக்கின்றேன். இத்தகைய படையினால் பெரும் பயன் உண்டு. அதில் பலவிதத் தொல்லைகள் ஏற்படும். ஆனால் அவைகளை மகிழ்ச்சியாக ஏற்றுத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை உலகத்திற்குக் காட்டிவிட்டது. எனவே, இத்தகைய படைகள் ஜில்லாக்கள் தோறும் கிளம்ப வேண்டும். அவைகளை நீங்கள் பெரிதும் ஆதரிக்க வேண்டும்.

படைத் தொண்டர் கட்கு நான் கூறுவதென்னவெனில், இக்காரியங்களினால் ஏற்படும் தொல்லைகளை ஒரு போக போக்கியமாக நினைக்க வேண்டும். கூடியவரை பிறருக்குத் தொல்லை கொடுக்காது-சுயநலங்கருதாது-நடந்து கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறுகின்றேன். சென்னையிலும் 25 பேர் கொண்ட ஒரு படையைக் கிளப்பிப் பேட்டை பேட்டையாகப் பிரசாரம் செய்ய வேண்டும். இத்தகைய காரியங்களை நாம் இதுவரை செய்யாததால்தான் இந்த நிலைக்கு வந்தோம்.

நியாயத்தைக்கூற உரிமையில்லையே?

இந்தியைப் பற்றி நான் அதிகம் கூறவேண்டுவதில்லை. சென்ற ஒருவருட காலமாகச் சதா நீங்கள் அதைப்பற்றிக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டீர்கள். இந்திப் பேய் ஆச்சாரி யாரை ஆட்டுகின்றது. “இந்தியை எனது நண்பர் ஈ.வெ.ரா. வும், ஒரு ஆரிய நாகரிக விரோதியும் தான் எதிர்க்கின்றார்கள்” என்று கூறுகிறார் கனம் ஆச்சாரியார். அது உண்மையா என்பதை இக்கூட்டத்தின் மூலம் அவர் அறிந்து கொள்ளட்டும். மேலும் அரசியல் எதிரிகள் இந்தியை எதிர்க்கின்றார்களாம். ஏன் நியாயத்தைக்கூற எங்கட்கு உரிமையில்லையா? “பின்னும் நாட்டை ஆளுவது யார்? ஒரு சில கிளர்ச் சிக்காரர்கட்கு பயந்து விட்டுவிடுவதா? அல்லது பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்ற - சட்டசபையில் மெஜாரிட்டி ஸ்தானத்திலுள்ள-நாங்கள் ஆளுவதா?” எனக் கேட்கின்றார். ஆம். உண்மைதான். இன்று சட்டசபை மெம்பர்கட்குக் கொடுக்கும் 75 ரூபாய் மாதச் சம்பளத்தை இல்லை என்று நிறுத்தி விடட்டும்; யாரிடத்தில் மெஜாரிட்டி இருக்கின்றதென்று பார்க்கின்றேன். (கைதட்டல்). நியாய முறையில் இந்தியை எதிர்க்கும் எங்களுக்குத் தண்டனை விதிக்கும் போது, தேர்தல் வாக்குறுதிகட்கு மாறாக நடந்ததன் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய இவர்கட்குத் தண்டனை வேண்டாமா? வடநாட்டாருக்கும், ஆரியர்கட்கும் அடிமையானதைத் தவிர சென்ற 52 வருடங்களாக காங்கிரஸ் நிலைத்திருப்ப தினால் நமக்கு ஏதாவது பலன் ஏற்பட்டதா?

தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும்

எனவே, நாம் சுயமரியாதையுடன் மனிதனாக வாழ வேண்டுமானால், வடநாட்டிலிருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும். ஒரு போஸோ, நேருவோ, பஜாஜோ, பட்டேலோ வேறு யாரோ நமக்குத் தலைவரல்ல. தமிழ்நாட்டில் ஒரு தமிழன் தான் தலைவனாக இருக்கவேண்டும். இவைக ளைக் கூறும், உங்கள் நன்மைக்காக உழைக்கும் நாங்கள், உண்மையிலேயே உங்கட்காக உழைக்கின்றோமா என்ப தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆரியர், புரோகிதத்திற்கு நாட்டில் இடமில்லை என்றவுடன் காங்கிரசின் பேரால் நம்மை கொள்ளையடிக்கின்றனர். “நீங்களே வெறுத்த அடக்குமுறைகளை ஏன் கையாளுகின்றீர்கள், கொடுமைப் படுத்துகின்றீர்கள்?” என்றால், “நான் கொடுமை செய்பவனாயிருந்தால் சென்னையில் படை பிரவேசிக்கவோ, இக்கூட்டத்தை நடத்தவோ, தண்டனையடைந்தவர்கள் அப்பீல் செய்யவோ அனுமதித்திருப்பேனா?” என இறுமாப்போடு கூறுகின்றாராம், நாங்கள் பயங்காளிகளல்ல என்பதை அவர் அறியட்டும்.

ஆதித்திராவிடர்கள் கல்வியில் கை வைத்தாய்விட்டது

ஆதித்திராவிட சமூகத்திற்குக் கல்வியளிக்கப் பின்வாங்கு கின்றனர். ஸ்காலர்ஷிப்புகள் மறைந்தன. ஆலயப் பிரவேசச் சட்டத்தை ஒழித்தனர். மேலும் இந்தி எதிர்ப்பாளர் “எங்களைக் கண்டவாறு திட்டுகின்றனர். அவைகள் சகிக்க முடியவில்லை. சத்யாக்கிரகத் தொண்டர்களும் வசை பாடுகின்றனர்” எனப் பிரலாபிக்கின்றார். நாங்கள் அவர்களைத் திட்டுகின்றோமா? எங்கள் கருத்துகளை நியாய முறையில் எடுத்துக் கூறுகின்றோம். நான் சுமார் 150 சத்யாக்கிரகத் தொண்டர்களின் வழக்குகள் நடக்கும்போது நேரில் கவனித்தேன். ஒரு தொண்டர் பேரிலாவது திட்டியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை - நிரூ பிக்கப்படவில்லை. அப்படி அவர்கள் திட்டியிருந்தாலும், பல வருடங்கள் வக்கீல் துறையில் பழகிய அவருக்கு வேறு சட்டம் அவர்கள்மேல் பிரயோகிக்கக் கிடைக்கவில்லையா? அவர் களாலேயே வெறுக்கப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களைத் தானா பிரயோகிக்க வேண்டும்? ஆம், ‘கையில் கிடைத்ததை எடுத்துத்தானே அடிக்க வேண்டும், திருடனை?’ (கைதட்டல்).

இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை

அவர்களைவிட நமக்கு நாட்டுத் தொண்டுபுரிய அதிக உரிமையுண்டு. ஆனால் நம்மில் ஒற்றுமையில்லை. நாம் கெடுகின்றோம். இந்த நிலையில் இளைஞர்கட்கு ஒரு வார்த்தை : தோழர்களே! தேசியம் என்ற கொடிய புழு உங்கள் மண்டையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. (கை தட்டல்). அது நீங்கினால் தான் நீங்கள் நன்மையடைய முடியும். அண்மை யில் சென்னையில் தேர்தல் வருகின்றது. நீங்கள் கட்டுப் பாடாக தமிழர்கட்காக உழைக்க வேண்டும். உங்கட்கு நாம் எல்லாம் ‘தமிழர்கள்’ என்ற உணர்ச்சி வரவேண்டும். இங்ஙனம் ஓராண்டு கட்டுப்பாடாக வேலை செய்வோமானால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். இறுதியாக சுபாஷ் போஸ் சென்னைக்கு வரப் போகின் றார். நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? இதுகாறும் கூறியவைகளை யோசித்து நீங்கள் ஒரு நன்மையான முடிவுக்கு வாருங்கள்” (நீண்ட கை தட்டல்). அவர் 1-மணி நேரம் பேசினார்.

பிறகு சேனாதிபதி தோழர் கே. வி. அழகர்சாமி அவர்கள் எழுந்து பேசியதாவது :

“தலைவர்களே! சகோதர, சகோதரிகளே! உங்கள் எல்லோருக்கும் முதன்முதல் எனது வணக்கம். நீங்கள் அளித்த வரவேற்பினையும், வாழ்த்தினையும் உவகையுடன் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் உங்கள் உதவியால், தமிழர்கள் ஆர்வத்தால் எங்கள் படையை வெற்றியுடன் நடத்தி, இன்று இம்மாபெரும் கூட்டத்திடையே வாகை மாலை சூடுகின்றோம். நாங்கள் சென்ற விடமெல்லாம் தோழர்கள் எங்களை ஆதரித்தனர். ஆனால் ஒரு சாரார் எங்களை வெறுக்கவும், எங்களுக்குத் தொல்லை விளைக்கவும் செய்தனர். ஆனால் நாங்கள் அவைகளைப் பொருட்படுத்தாது எங்கள் கருமமே கண்ணாக வந்தோம். இப்படையினால் தமிழ் நாட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இதுபோன்று இன்னும் அநேகம் படைகள் கிளம்ப வேண் டும். அதன் விளைவால் தமிழன் தமிழனாக வாழ வேண்டும். இதுவே எனது ஆசை. நிற்க.

“புலியைப் பார்த்து பூனை சூடு பேட்டுக் கொண்டது போல் (காந்தியின் தண்டி யாத்திரையைப் பார்த்து நாங்கள் தமிழர் படையைக் கிளப்பினோம்) நாங்கள் புறப்பட்டோம்” என்று இழிவுடன் கேலி செய்கின்றான். ஆம்! பல ஆட்டைத் தின்ற (தமிழர்களை அடிமையாக்கிய) புலிதான் காந்தி என நான் கூற ஆசைப்படுகின்றேன்.” மேலும் இந்தியை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, “சமீபத்தில் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலில் உண்மைத் தமிழர்களை ஆதரிக்க வேண்டும். மஞ்சள் பெட்டி மயக்கத் தைவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். பின்னர் தோழர்கள் அருள் தங்கையா, இராமாமிர்தத் தம்மாள், மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை நாராயணியம் மாள், டாக்டர் தர்மாம்பாள், மீனாட்சி, காந்தாமணி, மு.அண்ணல்தங்கோ, சாமி சண்முகானந்தா, முந்நகரழகியார், மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகை, வேலூர் ஷர்புதீன் சாகிப் உட்பட மற்றும் பலர் பேசினர். - விடுதலை, செப்டம்பர் 17, 1938 (தொடரும்) keetru sep 2015

Page 3 of 6