11 04 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 23

(1938 சூன் மாதம் 1, 2ஆம் நாள்களில் விடுதலையில் இந்தி கட்டாயப் பாட மர்மம் என்றத் தலைப்பில் இரண்டு தலையங்கள் எழுதப்பட்டன. இரண்டாவது நாள் வெளியான தலையங்கம் இன்றைக்கும் (மோடி அரசு இந்தியைத் திணிக்கும் சூழலில்) பொருத்தப்பாடு உடையதாக இருப்பதால் அத்தலையங்கத்தை அப்படியே வெளியிடுகிறோம்) இந்தி கட்டாயப் பாட மர்மம் : 2 தேசியப் பொது மொழியொன்று இல்லாவிட்டால் தேச பக்தி வளராதா? ஒற்றுமை நிலவாதா? தேசம் முன்னேற்றம் அடையாதா? என முதலில் கவனிப்போம். ஒரே பாஷை பேசம் நாடு உலகத்திலேயே இல்லை. சுலபமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டு விட்டதினாலும், வயிற்றுப் பிழைப்புக்காக பரதேசம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதினாலும் ஒரு சிறு நாட்டிலும்கூட பல மொழி பேசுவோர் உயிர் வாழும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பூரண சுயராஜ் யம் பெற்ற ஐரோப்பிய நாடுகளில் பல மொழிகள் சர்க்கார் பாஷையாக இருந்து வருவதை காஞ்சி மகாநாட்டுத் தலைவர் ஸர். கே.வி. ரெட்டி நாயுடு அவர்களும் சோழவந்தான் மகாநாட்டுத் தலைவர் தோழர் தளவாய் குமாரசாமி முதலியாரவர்களும் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியுள்ளார்கள். சோழ வந்தான் மகாநாட்டில் தளவாய் முதலியார் அவர்கள் எடுத்துக்காட்டிய உதாரணங்கள் பொது பாஷைப் புரளியின் யோக்கியதைகளை வெட்ட வெளிச்சமாக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. தோசைப் புரட்டான சீர்த்திருத்தங்கள் திடும்பிரவேசமாய்ச் செய்யப்படும் ருஷிய நாட்டிலே - பண்டித ஜவஹர்லாலின் கனவுப் பொன்னுலகத்திலே - 18 பாஷைகள் சர்க்கார் பாஷை களாக இருந்து வருவதாயும் அவைகளை யொழித்து ருஷிய மக்களுக்கெல்லாம் பொதுவான ஒருமொழியை ஏற்படுத்த சோவியத் சர்க்கார் முயற்சி செய்யவில்லை யென்றும், தோழர் தளவாய் முதலியார் கூறுகிறார். ஒரு பொதுமொழி பேசாது 18 மொழிகள் பேசும் காரணத் தால் ருஷியர்களின் தேச பக்தி குன்றிவிட்டதா? ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதா? ருஷிய நாடு முன்னேறவில்லையா?

முழு முட்டாள்தனம்

மற்றும் மதுரை ஜில்லாவைவிடச் சிறிய நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மூன்று மொழி கள் சர்க்காரால் ஒப்புக்கொள் ளப்பட்ட மொழிகளாக இருந்தன வென்றும், இப்பொழுது ஒரு மைனாரிட்டி சமூகத்தின் விருத்தி யடையாத சமானிய மொழியும் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டு அம்மொழியில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும், தோழர் தளவாய் முதலியார் சொல்லுகிறார். தேச மக்களுக்கெல்லாம் பொதுவான ஒரு மொழியில்லாக் குறைவினால் சுவிட்சர் லாந்து மக்களுக்குத் தேசாபிமானம் இல்லாமல் ஆக விடவில்லை. ஒற்றுமைக்குறைவு ஏற்படவில்லை; நாடு பிற்போக்கடையவுமில்லை. ஆகவே 35 கோடி மக்க ளைக் கொண்ட இந்தியாவுக்கு - பல விருத்தியடைந்த பாஷைகள் பேசப்பட்டுவரும் இந்தியாவுக்கு - ஒரு பொது மொழி இன்றியமையாதது என்று கூறுவது முழு முட்டாள்தனமாகும். அவ்வாறு கூறுவது முட்டாளதன மென பாஷை விஷயமாக அபிப்பிராயம் கூறவல்லார் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் இலட்சியம் செய்யாது “நான் கூறுவதே சரி”யென அசட்டுப் பிடி வாதம் செய்வது எவ்வளவு அக்கிரமமானது! அநீதி யானது! ஜனநாயகத்துவத்துக்கு முரணானது! என்ப தைத் தமிழ் மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

ஹிந்தி பெரும்பாலார் பேசும் மொழியா?

அப்பால், ஹிந்தி இந்திய மக்கள் பெரும்பாலரால் பேசப்படும் மொழி தானா என்பதை ஆராய்வோம். பல பாஷைகளில் பாண்டித்தியம் பெற்ற நிபுணரான சுவாமி வேதாசலம் அவர்கள் “ஹிந்தி பெரும்பாலரால் பேசப்படும் மொழி” என்ற கட்டுக்கதை பொய்யெனக் காட்டியும் உள்ளார். ஒருகால் அவர் தமிழ் பக்தர் என்ற காரணத்தினால் அவரது அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ள ஆச்சாரியார் கோஷ்டியார் தயங்கக்கூடும். ஆனால் அமல்யா சாமிகள் அபிப்பிராயத்தை ஆச் சாரியார் கோஷ்டியாருக்கு அலக்ஷ்யம் செய்ய முடியுமா? “இந்தி பேசுவோர் தொகை அதிகமென்று சொல்லப்படுகிறது. டர்பங்கா, டில்லி, லக்ஷ்மணபுரி, மீரட், ஆக்ரா ஆகிய ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக ஹிந்தி பேசப்படுகிறது. தற்போதைய ஹிந்திக் கும் அம்மொழிகளுக்கும் சம்பந்தமே காணோம்” என “பங்கீய மகாகோச” ஆசிரியர் பண்டித அமில்யா சரணவித்யா பூஷணர் கூறுகிறாரே! “பதினொரு கோடி மக்கள் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது ஆதாரமற்ற பேச்சு, பீஹாரில் பேசப்படும் ஹிந்தி வேறு; ராஜ புதனத்தில் பேசப்படும் ஹிந்தி வேறு. ஒரு தேசத்தின் பொது பாஷையென்றால் அதைக் கட்டாயம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எந்த நாட்டிலும் இவ்விதம் நடந்ததில்லை” என, கல்கத்தா ஆனந்த பஜார் பத்திரிகையின் உதவி ஆசிரியரான தோழர் பிரபுல்லா குமார சர்க்கார் சொல்லுகிறாரே! இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவே! தமிழ் அபிமானிகளுமல்லவே! இவ்விருவரும் தேசபக்தர்கள் அல்ல என்றும், இந்திய முன்னேற்றத்தில் ஆர்வமுடையவர் களல்ல என்றும் கனம் ஆச்சாரியாருக்கு நெஞ்சில் கைவைத்துக் கூறமுடியுமா? இவ்விருவரும் “அறிவிலி கள்” என அலக்ஷ்யம் செய்யும் அளவுக்கு கனம் ஆச்சாரியார் அவ்வளவு பெரிய மேதாவியா! ஆகவே, ‘ஹிந்தியே பெரும்பாலோர் பேசும் பாஷை’யென்பதும் ஒரு சுயநலம் கொண்ட கட்டுக்கதையே.

பொதுமொழி வகுக்கும் பொறுப்பு யாருக்கு?

கடைசியாகத் தேசியப் பொதுமொழியை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருக்கு என்பதையும், பொது மொழியை வகுக்கும் காலம் எது என்பதையும் அலசிப் பார்ப்போம். ஹிந்தி கட்டாயா பாடத்துக்குக் கூறப்படும் காரணங் களில் ஒன்று சமஷ்டி அரசியலுக்கு ஒரு பொது பாஷை அவசியம் என்பதாகும். ஆகவே சமஷ்டி ஏற்பட்ட பிறகு, சமஷ்டியில் சேரும் தேசங்களே பொதுமொழியை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்தியாவிலே நான்கு சக்திகள் இருப்பதாயும், எதிர்கால அரசியல் பொருளா தாரத் திட்டங்கள் எல்லாம் அந்நான்கு சக்திகளும் சேர்ந்தே வகுக்க வேண்டும் என்றும் லார்டு லோதியன் கூறுகிறார். லார்டு லோதியன் ஒரு பிரபல ராஜ்யதந்திரி. இந்திய நிலைமையை நன்குணர்ந்தவர். சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய விஷயங்களை நேர்முகமாக உணர்ந்தவர். அரசியல் விஷயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அவரை வட பாண்டித்தியம் பெற்றவர்கள் எனக் கூறமுடியாது. அவர் கூறிய நான்கு சக்திகள் எவை? இந்திய சம°தானங்கள் - பிரிட்டிஷ் சர்க்கார் - முஸ்லிம்லீக் - காங்கிரஸ் ஆகியவைகளே. அந்த நான்கில் சிறிய ஸ்தாபனமாக இருந்தாலும் சரி - பிரம்மாண்டமான ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - அதிக மெம்பர்களுடைய ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - தியாகிகள் நிறைந்த ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - “மகாத்மாவை”ப் போல் நூறு “மகாத்மாக்களை” சர்வாதிகாரிகளாயுடைய ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - காங்கிரசுக்குத் தனிமையாக ஒரு சிறு புல்லைக்கூட அசைக்க முடியாது என்பது உறுதி. வகுப்புவாதியென் றும், பிற்போக்காளர் என்றும் அலக்ஷ்யம் செய்யப்பட்ட ஜனாப் ஜின்னாவின் வீட்டு வாயிலில் காங்கிரஸ் சர்வாதிகாரி காந்தியாரும், “ராஷ்டிரபதி” சுபாஷ் சந்திர போசும் வலியச் சென்று தவங்கிடப்பதே அதற்கு மறுக்க முடியாத ஆதாரம். மற்றும் சமஸ்தானங்களையும் பிரிட்டிஷ் சர்க்காரையும் கூட காங்கிரசு அலக்ஷ்யம் செய்ய முடியாது.

சமஷ்டியை “எதிர்ப்போம், தகர்ப் போம், கிழிப்போம்” என்றெல்லாம் ஜவஹர்லால் கம்பெனியார் ஆர்ப்பாட்டம் செய்வது வீண் மிரட்டலே. தேசிய பாஷை விஷயத்தில் சமஸ்தானங்கள், முஸ்லிம் லீக், பிரிட்டன் அபிப்பிராயங்களை அறியத் தேவை யில்லையென வைத்துக் கொண்டாலும், காங்கிர சாவது இவ்விஷயமாக ஒரு முடிவுக்கு வந்ததுண்டா? சமீபத்தில் கூடிய “ஹரிபுரா” காங்கிரசில் தேசிய பாஷையைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசப்பட்ட துண்டா? காரியக் கமிட்டியாவது ஒரு முடிவு செய்த துண்டா? பம்பாயில் கூடிய பிரதம மந்திரிகள் மாநாட்டி லாவது தேசிய பாஷை விஷயம் யோசனை செய்யப் பட்ட துண்டா? காங்கிரசோ, காரியக் கமிட்டியோ, மற்ற காங்கிரஸ் மாகாணங்களோ தேசீய பாஷையைப் பற்றி சிந்தனை செய்யக்கூட முன்வராதிருக்கையில் ஒரு “தமிழன்” எனக் கூறிக்கொள்ளும் கனம் ஆச்சாரியார் அவசரப்பட்டு ஹிந்தியைத் தமிழர் தலையி லேற்ற முற்படக் காரணம் என்ன? ஹிந்தி கட்டாயப் பாட விஷயமாகத் தமது சகாக்களான மந்திரிகளிடமோ தம்மை ஆதரிக்கும் சட்டசபை பொம்மைகளிடமோ யோசித்ததுண்டா? கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்ப ராயனும், அசம்பிளி, கௌன்சில் மெம்பர்களான தோழர்கள் நாடிமுத்துப்பிள்ளை, நாச்சியப்ப கவுண்டர், டி.எ. ராமலிங்க செட்டியார், போன்றோரும் ஹிந்தி கட்டாயப்பாடத்தை ஆதரிக்கவில்லையெனப் பகிரங்க மாகக் கூறப்படுகிறதே.

அசட்டுப் பிடிவாதமேன்?

கனம் ஆச்சாரியார் தமக்கு வேண்டிய சிலரிடம் அந்தரங்க ஆலோசனை நடத்தியபோது திருச்சி நாஷனல் காலேஜ் பிரின்சிபால் தோழர் சாராநாதஅய்யங்கார் ஹிந்தி கட்டாய பாடத்தை எதிர்க்கவில்லையா? மாஜி சட்ட மந்திரி டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் ஹிந்தி கட்டாயப் பாடத்தைக் கண்டிப்பதை கனம் ஆச்சாரியார் அறியாரா? ஹிந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் அனுப்பிய பகிரங்கக் கடிதத்தை கனம் ஆச்சாரியார் அலக்ஷ்யம் செய்த தேன்? ஹிந்தி கட்டாய பாடத்துக்கு ஆதரவான காரணங் கள் கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி இருக்கு மாயின் ஹிந்தியை எதிர்க்கும் இந்த அறிவாளிகளுடன் மரியாதைக்காகவாவது பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு முடிவுக்கு வர கனம் ஆச்சாரியார் ஏன் முயற்சித் திருக்கக் கூடாது? ஜனநாயக ஸ்தாபனமெனப்படும் காங்கிரசின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் கனம் ஆச்சாரியார், இம்மாதிரி தான்தோன்றித்தன மாய் தர்பார் நடத்தக் காரணமென்ன? அகந்தையா? அகம்பாவமா? அல்லது அதிகார வெறியா? நல்லார் வார்த்தைகளுக்குக் காது கொடாமல் தம்மிஷ்டப்படி நடந்தோர் கதியை கனம் ஆச்சாரியார் அறியாரா? அவரது அதிகார வெறிக்குக் காரணமாயிருக்கும் “பொது ஜன ஆதரவு” நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் தன்மையது என அறியும் அளவுக்காவது கடுகத்தனை அரசியல் ஞானம் கனம் ஆச்சாரியாருக்கு இல்லாமலா போய்விட்டது?

அன்பர் ஸ்டாலின் ஜெகதீசன் செய்யப்போகும் பிராணத் தியாகம் பாப்பா விளையொட்டென கனம் ஆச்சாரியார் எண்ணிக் கொண்டிருக்கிறாரா? ஜெகதீசன் பிராணத்தியாகம் - ஆத்மயக்ஞம் - ஹிந்தி கட்டாயப் பாடத்தால் நலம்பெற விரும்புவோர் துராக்கிரகத் தையே சாம்பலாக்கும் பெரும் தீயாக மூண்டுவிடக் கூடும் என ஆச்சாரியார் இனியாவது உணர்வாரா? தமிழர்கள் எல்லாம் அறிவிலிகள், புழுக்கள், அப்பாவி கள் என கனம் ஆச்சாரியார் எண்ணிக்கொண்டிருக் கலாம். ஆனால் தமிழச்சாதி பச்சை ரத்தம் குடித்து வாழ்ந்த சாதியென்பதை கனம் ஆச்சாரியார் அறிய வேண்டும். தலைநாள் கணவன் இறந்த சோகத் தையும் மறந்து, தன் ஒரே இளவலை தலைசீவி பூ முடித்துப் புத்தாடையுடுத்தி, வேலையும் கொடுத்து, போர்க்களத்துக்கனுப்பிய வீரத்தாயின் சாதி தமிழ்ச் சாதி என்பதை கனம் ஆச்சாரியார் கருத்தில் பதிக்க வேண்டும். என் மகன் போரில் புறங்கண்டானாயின் அவனுக்குப் பாலூட்டிய இம்முலையைப் பறித்தெறி வேன் என வீறு கொண்டெழுந்த சுத்த வீரத்தாயின் மரபிற்றோன்றிய சாதி தமிழ்ச்சாதி என்பதை கனம் ஆச்சாரியார் உணரவேண்டும்.

தமிழர்களில் பெரும்பாலோர் பார்ப்பன பக்தர்களாயிருக்கலாம். ஆரிய விஷம் பருகி மயங்கிக் கிடக்கலாம். புராண பக்தர்களா யிருக்கலாம். தம் இனத்தாரை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்கும் விபீஷணர்களாக - அனுமார்களாக - சுக்ரீவர்களாக - அங்கதர்களாக இருக்கலாம். ஆனால் நான்கு கோடி தமிழர்களில் பத்துப் பேராவது சுத்தரத் ----- கொள்ளிக்கே உலகத்தையழிக்கும் சக்தியிருக்கையில், அந்தப் பத்துப்பேருக்கும் ஆச்சாரியார் ஆணவத்தைச் சுட்டெரிக்கும் ஆற்றல் இல்லாமலா போய்விடும்? சுத்தத் தமிழ் வீரர்கள் பத்துப் பேரல்ல - பல்லாயிரம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாக வீரத்தி யாகி ஜெகதீசன் அவரது அகக்கண்ணால் காண்கிறார்; வாய்விட்டுச் சொல்லுகிறார். அந்தத் தீரன் வாய்மொழி பொய் மொழியாகாது! அந்த வீரன்சொல் வீண் சொல் ஆகாது! அந்த ஆண்மகன் வார்த்தை அவலமாகாது. ஆச்சாரியாரே! அறிவீர்! அறிவீர்!! அறிவீர்!! (“விடுதலை”, 2-6-1938) (தொடரும்) keetru.com sep 2014

04 04 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 22
சிந்தனையாளன்

சென்னையில் 3.6.1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரி செ.தெ. நாயகம் கைது செய்யப்பட்டவுடன், ஈழத்து அடிகளை இரண்டாவது சர்வாதிகாரியாக அன்றே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். போராட்டக்களம் தியாகராயர் நகர் முதலமைச்சர் வீட்டின் முன் நடைபெற்றதை மாற்றி, சென்னை பெத்துநாயக்கன்பேட்டை உயர்நிலைப்பள்ளிக்கு முன்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. ஏனெனில் அந்தப் பள்ளி யில் சமஸ்கிருதமும் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. 28.7.1938இல் ஈழத்து அடிகள் கைது செய்யப் பட்டவுடன், தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் மூன் றாவது செயல் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண் டார். அதன்பின் அருணகிரி அடிகளார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரும் 6.8.1938இல் கைது செய்யப் பட்டார். அதன்பிறகு மறைமலையடிகளாரின் இளைய மகன் மறை திருநாவுக்கரசு தமிழாசிரியர் பணியைத் துறந்து இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் குதித்தார். 9.8.1938இல் அவர் கைது செய்யப்பட்டார்.

26.9.1938இல் சி.என். அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டச் செயல் தலைவர் திரு. ஜி.என். ராசு, குடந்தை எஸ்.கே. சாமி, எம்.சு. மொய்தீன், புவனகிரி நமச்சிவாயம், மயிலாடுதுறை சம்பந்தம், காஞ்சி பரவஸ்து இராசகோபாலாச்சாரியார், பெரியகுளம் அரங்கசாமி, கந்தம் ரோசம்மாள், டி.என். மாரியம்மாள், நெல்லை புலவர். இராமநாதன் ஆகி யோர் தலைமையில் போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வந்தது. செயல் தலைவர்கள் (சர்வாதிகாரிகள்) ஒருவர் பின் ஒருவராகத் தலைமையேற்றுப் போராட் டத்தை நடத்தும் போது கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்பட்டபோதும், போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வந்தது. குடிஅரசு இதழில் ‘இந்தி எதிர்ப்பும், அரசாங்கமும், எதிரிகளும்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள் மீது எப்படியெல்லாம் வீண்பழி சுமத்து கிறார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள். அந்தத் தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

இந்தி எதிர்ப்பும், அரசாங்கமும், எதிரிகளும்

“இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக இதுவரை 197 பேர்கள் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்று இருபது பேர்கள் வரை தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள். இவர்களில் பல ருக்கு 4 மாதம், 5 மாதம், 6 மாதம் கடினக் காவலும், ஒரு மடாதிபதி சந்நியாசிக்கு 2 வருஷக் கடினக் காவலும், மற்றொரு பி.ஏ. படித்த யாழ்ப்பாணத்துச் சன்யாசியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் அளித் திருப்பதோடு இவர்கள் எல்லோருக்கும் ஜெயிலில் ஊ (சி) கிளாஸ் உணவும் தகுதியும் தான் கொடுக்கப்பட வேண்டும்மென்றும் தீர்ப்பளித்து அந்தப்படியே அவர் கள் அத்தனை பேரையும் மொட்டை அடித்து கிரிமினல் கைதிகள் உடுப்புக் கொடுத்து மிகக் கொடூர வாழ்வு வாழும்படி நடத்தப்பட்டு வருகிறார்கள். சிறைசென்ற தொண்டர்களில் பலர் பெருத்த செல்வவான்களின் பிள்ளைகள். சிலர் மாதம் 100, 200 ரூபாய் சம்பாதிக்கக் கூடியவர்கள். சில தொண்டர் களின் பெற்றோர்கள் சென்னை வந்து தொண்டர்களுக்குப் பலவித உபசாரங்கள் சொல்லி காங்கிரஸ்காரர்கள் தயவு பிடித்து அழைத்துப் போக முயற்சித்தும் தொண் டர்கள் மறுத்துவிட்டார்கள். இரண்டொரு லட்சாதி பதிகள் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஒரு முக்கிய விஷயம்

ஒரு விஷயத்தை வாசகர்கள் நினைவில் இருத்த விரும்புகிறோம். அதாவது இந்தி எதிர்ப்புக் கமிட்டியார் தங்கள் கிளர்ச்சிகளைச் சட்டத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்றும், எவ்வித நிலைமையிலும் சட்டம் மீறுதல் கூடாது என்றும், சர்க்கார் உத்திரவுகளைக் கூட மீறி ஒன்றும் செய்யக்கூடாது என்றும் தீர்மானித் திருப்பதுடன், இம்முடிவை இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உணர்ந்து வெகு கண்டிப் பாய் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கும் போதே பதட்டமுள்ள - சர்க்கார் அக்கிரமத்தை சகிக்க முடியாத - பல தோழர்கள் சிறை பிடிக்க இணங்கி இருக்கிறார்கள் என்றாலும் இவர்களில் எவரும் சட்டம் மீறத் தீர்மானித்துச் சிறை சென்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

மறியலுக்குக் காரணம்

உண்மையிலேயே யாரும் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று கருதிக்கூட சிறை செல்ல வில்லை. நடந்த காரியம் என்னவென்றால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது ஒரு தோழர் ‘ராமசாமி நாயக்கரா’லும், மற்றொரு காங்கிரஸ்-ஆரிய விரோதி யாலும் நடக்கின்றதே ஒழிய பொது ஜனங்களின் எதிர்ப்பல்ல என்று கனம் ஆச்சாரியார் வெளியிலும், சட்டசபையிலும் கூறிய கூற்று தவறு என்று நிரூபிப் பதற்காக “நாங்களும் எதிர்க்கின்றோம்”. “நாங்களும் எதிர்க்கின்றோம்” என்பதைக் காட்ட வேண்டிப் பல தோழர்கள் முயற்சித்தார்கள். அம்முயற்சியில் ஒன்று தான் ஆச்சாரியார் வீட்டுக்கு பக்கத்தில் ஆச்சாரியார் கண்ணில் படும்படி நின்றதாகும். அதுவும்கூட அப்படி நின்ற தோழர்கள் “தமிழ் வாழ்க - இந்தி ஒழிக” என்று சொல்லிக்கொண்டு நின்றதாகும். இதைத்தவிர அத்தொண்டர்கள் எந்த அடாதகாரியத்தையும் செய்யாது-யாருக்கும் எவ்வித அசௌகரியத்தையும் தொந்திர வையும் கொடுக்காது இருக்கும்போது (கொடுத்ததாக போலீசார் சாட்சியத்திலும் மற்றும் அவர்கள் கொடுத்த சார்ஜ் ஷீட் பிராதிலும் கூடக் காண முடியவில்லை) அந்தப்படி நடந்துகொண்டவர்களைத் தான் ஆச்சாரியார் சர்க்கார் கைது செய்து 200 பேர்கள் வரை கணக்குக் காட்டி இருக்கிறார்கள்.

மந்திரிமார் ஏளனம்

ஆனால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி கமிட்டியார் “நியாயமான முறையில் சமாதானத்துக்குப் பங்க மில்லாமல் செய்யப்படும் கிளர்ச்சியைச் சட்டம் மீறியது என்று சொன்னாலும் இலட்சியம் செய்ய வேண்டிய தில்லை” என்று தீர்மானித்திருப்பார்களேயானால்கூட, இதுவரை 2000 பேர்களாவது சிறைபிடிக்கப்பட்டிருப் பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அந்த நிலையை ஏற்படுத்தாமல் இனியும் பார்ப்போம்; இனியும் பார்ப்போம் என்று இந்தி எதிர்ப்புக் கமிட்டி பொறுமை காட்டி வருவதை மந்திரிகள் யோக்கியப் பொறுப் பற்ற முறையில் கருதி ஏளனம் செய்து வருகிறார்கள். “இந்தி எதிர்ப்புத் தலைவர்கள் ஏன் இன்னும் சிறைக்கு வரவில்லை?” என்று கூட்டங்களிலும் மேடை களிலும் இருந்து கேட்பதோடு தனிப் பேச்சு வார்த்தை களிலும் பேசி, பரிகாசம் செய்கிறார்கள். மந்திரிகள் என்னவோ சொல்லட்டும், அதைப்பற்றிக் கவலை இல்லை. அது பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட கூட்டமாகும். ஆனால் அற்பக் கூலிகளும் இதைப் பின்பற்றி சில அயோக்கிய காலிப் பத்திரிகைகளும் ஏளனம் செய்கின்றன.

அற்பர்கள் புரளி

மக்களுக்கு வாழ்க்கையின் கொடுமையால் மானம் ஈனம் இல்லாமல் போவது இயல்பு. ஆனால் புத்திகூட இல்லாமல் போகுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தி எதிர்ப்புக் கமிட்டித் தலைவர்கள் சட்டத்தையும் சர்க்கார் உத்திரவையும் இலட்சியம் செய்யாமல் சிறை செல்லும்படி அபிப்பிராயப்பட்டு விட்டார்களா, தீர்மானம் போட்டு அனுமதித்து விட்டார்களா, என்றுகூடக் கவனிக் காத இந்த அற்பர்கள், அயோக்கியர்கள் தங்களிடம் பத்திரிகை இருப்பதாலும் தங்களுக்கு வாய் இருப்ப தாலும் அவைகளை ஒழுங்காக உபயோகப்படுத் தாமல் துஷ்ப்பிரயோகப்படுத்துகிறார்களே! இந்த இழிபிறப்பாளருக்குப் புத்தி வரும்படியான வார்த்தை கள் கிடைக்காமல் வெகு கஷ்டப் பட்டுக் கொண்டு இதை எழுத வேண்டியிருக்கிறது.

இந்திக் கிளர்ச்சி நடப்பதேன்?

இன்றைய நிலைமை இந்நாட்டுத் தமிழ் மக் களுக்குப் பேராபத்தாய் வெகு நெருக்கடியாய் இருக் கிறது என்று கருதியே இந்தி எதிர்ப்பையும் மற்றும் பல காரியங்களையும் செய்யப் பல சுயநலமற்ற மக்கள் கிளர்ச்சி துவக்கி இருக்கிறார்களே தவிர இதனால் எவ்விதக் கூலியும் பெறுவதற்கல்ல. இம்முயற்சியில் அவர்கள் படும்பாடும் அடையும் கஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஏற் படும் ஆபத்தும் கவலையும் அபாயகரமானதாக இருந்து வருகிறது. இவ்வளவு கஷ்டத்தில் அவர்கள் வேலை செய்து வரும்போது தங்களது மான ஈனத்தைக் காசுக்கு விற்று வயிறு வளர்க்கும், பதவி பெற்று வாழும் அற்பர்கள் இதைப் பரிகசிக்கவோ உண்மைக்கு விரோத மாகப் பேசவோ எழுதவோ என்ன யோக்கியதை என்று கேட்காமல் இருக்கவும் இந்த அயோக்கியர் களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத் தாமல் இருக்கவும் பொது நலத்தை உத்தேசித்து நம் மால் முடியவில்லை. ஆதலால் இதை விளக்குகிறோம். சர்க்காரை நடத்துகிறார்கள் என்கின்ற முறையில் மந்திரிகள் ஏதாவது பேசலாம். அவர்கள் சில சமயங் களில் வக்கீல்களைப் போலும் வியாபாரிகளைப் போலும் தாசி வேசிகளைப் போலும் உண்மைக்கு மாறாகவும், உணர்ச்சிக்கு மாறாகவும் பேசலாம், நடக்கலாம்.

பொது ஜனங்களுக்கு வேண்டுகோள்

ஆனால் மற்றவர்கள் அதிலும் பொதுநல சேவைப் பத்திரிகைகள், பொதுநலச் சேவைப் பிரசாரகர்கள் என்று சொல்லிக் கொண்டு இம்மாதிரி அற்பத்தனமாக அயோக்கியத்தனமாக நடந்து பொது ஜன சமூகத் துக்குக் கேடு உண்டாகும்படியான காரியத்தைச் செய்து வாழப் பார்ப்பதை எப்படிச் சற்றாவது மதித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகையால் பொது ஜனங்கள் இவ்விஷயங்களில் உண்மைகளை அறியக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம். தவிர இவ்வியக்கத்துக்குப் பணம் வசூல் செய்வதைப் பற்றியும் ஈனத்தனமாகச் சிலர் பேசி வருவதாக அறி கிறோம். “சில தலைவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தி வசூல் பணம் பயன்படுத்தப் படுகிறது” என்று பேசினார்களாம். இது எவ்வளவு கண்டிக் கப்படத்தக்கது என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் வீரர்களுக்கு ஒரு கேள்வி

காங்கிரஸ்காரர்கள் பலர் காங்கிரசில் வந்து சேரும் போது எச்சிலை நக்கிப் பிழைக்கும் யோக்கியதை யிலும் காமுகனுக்கும் காமக்கிழத்திக்கும் தரகனாய் இருந்து வயிறு வளர்த்துக் கொண்டும் இருந்தவர்கள் இன்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடை மைஸ்தர்களாய் இருக்கக் காரணம் என்ன? அவர் களது வரவு-செலவு என்ன? தொழில் வரி, வருமான வரி என்ன? என்று கணக்குச் சொல்ல முடியுமா என்று கேட்கிறோம். இந்நிலையுள்ள அயோக்கியக் கூட்டத்தார் மற்றவர்களைப் பார்த்து, அதுவும் பொதுநலச் சேவைக்கு வந்தபின்பு தங்களுடைய ஏராளமான வருவாய்களை இழந்து பல இலட்சக்கணக்கான ரூபாய்களையும் இழந்து பல நல்ல வீடுகள் மொத்தத்தில் மாதம் 1000, 1500 ரூ. வாடகை வந்த வீடுகள் குட்டிச் சுவராக நிற்க விட்டு விட்டும், பல பதினாயிரக்கணக்காகக் கடன் கொடுத்த ரூபாய்களை வசூலிக்காமல் (கடன் நிவாரண சட்டத்தால் அல்ல) விட்டு விட்டும் மற்றும் ஒருவர் தனது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகளின் சொந்த விவசாயத்தைப் பாழாக்கிக் கொண்டும், மற்ற ஒருவர் தனது, ஆண்டிற்கு 4000, 5000 இலாபம் தரும் வியா பாரத்தை இலட்சியம் செய்யாமல் இருந்து கொண்டும் எந்தப் பதவியையும் எந்த இலாபத்தையும் ஆசைப் படாமல் தமிழ் மக்கள் நலத்தையே கருதி பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் தங்கள் சொந்தச் செலவில் தொண்டாற்றி வருகிறவர்களைச் சிறிதும் நன்றிகெட்ட மிருகக் குழந்தைகள் போல் கேவலமாக இழிவாகப் பேசி விஷமப் பிரசாரம் செய்வதென்றால் இதை எப்படி சகிக்க முடியும் என்று கேட்கிறோம்.” இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடையவே ஆச் சாரியார், இந்தியில் நான்கு வார்த்தைகள் படித்தாலே போதும் என்று மழுப்பலாப் பேசிவந்தார். (குடிஅரசு 31-7-1938) தொடரும். keetru.com aug 2014

28 03 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 20
வாலாசா வல்லவன்

8-5-38, 15-5-38, 22-5-38, 29-5-38 ஆகிய நான்கு வார “குடி அரசு” இதழ்களில், “ஹிந்தி வந்து விட்டது. இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியது தான்” “நெருக்கடி-என்றுமில்லா நெருக்கடி”, “தொண்டர்களே சென்னை செல்க” “போர் மூண்டுவிட்டது-தமிழர் ஒன்று சேர்க” என்னும் தலைப்புகளில் தலைவர் பெரியார் அவர்கள் நான்கு தலையங்கங்களைத் தீட்டினார். அந்த எழுத்துகள் தமிழ்நாட்டில் பெருத்த பரபரப்பையும் ஆவேசத்தையும் மூட்டிவிட்டதோடு, கொஞ்சம் அப்படியும் இப்படியுமாய் இருந்த தமிழர்களைக்கூடக் கையைப்பிடித்து இழுத்து வந்து போர்க் களத்தில் நிறுத்திவிட்டன.

இந்திப்போர் - திருச்சி திட்டம் தீட்டுகிறது!

தமிழர் எதிர்ப்பு கண்டு சளைக்காது ஆச்சாரியார் அவர்கள் 21-4-1938-இல் இந்தி கட்டாயப் பாட உத்திரவைப் பிறப்பித்துவிட்டார். எனவே, தமிழ்ப் பெருமக்களும் மொழிப் போருக்கான நடைமுறைத் திட்டங்கள் தீட்ட மந்திராலோசனைக் கூட்டம் கூட்டினர் திருச்சியில் 28-5-38-இல். திருச்சிப் பாசறை : 28-5-38 : “நாட்டின் தமிழ் இருதய பீடமாயிருக்கும் திருச்சி நகரில் இந்திப் போருக்கான கொடிமரம் இன்று நாட்டப்பட்டுவிட்டது. பல இடங்களிலும் நிறுவப்பட்டிருந்த பல்வேறு இந்தி எதிர்ப்பு வாரியங்களின் மந்திராலோசனைக் கூட்டம் இன்று காலை திருச்சி தென்னூர் பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் பங்களாவில் பேராசிரியர் சோம சுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. இதற்காகத் தமிழ்நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் பல சேனைத் தலைவர்களும், தளபதிகளும், போர்வீரர்களும், வீராங் கனைகளும் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை ஒவ்வொரு இரயிலில் இருந்தும் இறங்கி வந்த வண்ணமாயிருந்தனர்.” திரண்டு குழுமி இருந்த வீரர்களை எதற்கும் தயாராய் இருக்கக்கூடிய துள்ளுகாளைகள் என்று சொன்னாலும் தகும். இந்தியை நுழைப்பதில்லை - அதற்குப் பதிலாக நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் உடம்பிலிருந்து ஒருபடி, இரத்தம் எடுத்துத் தரவேண்டு மென்று கேட்டிருந்தால் அதை முகஞ்சுளிக்காமல் செய்து கொடுக்கத்தக்க வீர உள்ளங் கொண்டவர்களே வந்திருந்த அத்தனைபேரும். கூட்ட நடவடிக்கைகளின்போது உண்ணாவிரத வீரர் (இவர் இந்தி ஒழியும்வரை உண்ணேன் என்று 1938 மே திங்கள் முழுவதும் உண்ணாநோன்பிலிருந்து பின்னர் விட்டுவிட்டார்) ஸ்டாலின் ஜெகதீசனைப் பற்றிப் பிரஸ்தா பித்த சமயம் சகலர் முகமும் வேற்றுருப்பட்டுத் தெரிந்தன வென்றே சொல்லவேண்டும்.

“சத்தியாக்கிரகம் - அதில் வெற்றி கிடைக்காவிடில் சட்ட மறுப்புத் தொடங்க வேண்டியதுதான் என்று தலைவர் பாரதியார் போர்முறைத் தீர்மானம் செய்ததும் சகலரும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினர் என்று சொன் னால் மிகையாகாது. மொத்தத்தில் இன்று செய்யப்பட்ட மந்திராலோசனைத் தீர்மானம் ஒவ்வொன்றும் உயி ருள்ளது என்றால் அது மிக மிகப் பொருந்தும். இன்று நிறைவேறிய தீர்மானங்கள் இவை :

1. சென்னை மாநிலம் முழுதும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயலும் அரசியலார் கொடுஞ் செயலை வீரத்துடன் எதிர்த்து உயிர் கொடுக்கவும் துணிந்து இன்றுவரை போராடி வருகின்ற தமிழ் மக்கள் அனைவரையும் இக்கூட்டம் பெரிதும் பாராட்டு கிறது.

2. இந்தியைக் கட்டாயப் பாடமாக வைக்கப் பெறும் பள்ளிக்கூடங்கள் உள்ள ஊர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்யவும், அந்தந்த ஊர்களில் இந்தி எதிர்ப்பு வாரியம் ((Committee)) அமைக்கவும், எல்லா ஊர்களிலும் பணந் திரட்டவும் செலவு செய்யவும், பொதுவாக இயக்கத்தை நடத்திச் செல்லவும் பின்கண்டவர்கள் அடங்கிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தை The Anti-Hindi High-Committee இக்கூட்டம் அமைக்கிறது :- வாரியத் தலைவர் : பேராசிரியர் பாரதியார், உறுப்பினர்கள் : பெரியார் ஈ.வெ.ரா., த.வே. உமாமகேசுவரனார், உ.பு.அ. சௌந்தர பாண்டியன், கே.எம். பாலசுப்பிரமணியம், கி.ஆ.பெ. விசுவநாதம் (செயலாளர்).

3. சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியமானது ஆங்காங்கு துணை வாரியங்களை (Sub-Committee) நிறுவி அடியிற்கண்ட வேலைத் திட்டங்களை அமலுக் குக் கொண்டுவர வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

போர்முறைத் திட்டம் :

அ. ஒரு வழிப்படை திரட்டிப் பல ஊர்களிலும் சென்று தமிழ் மக்களிடையே உணர்ச்சியை வளர்த்தல்.

ஆ. இந்தி கட்டாயப் பாடப் பள்ளிக்கூடங்களில் முதல் மூன்று பாரங்களுக்கு மாணாக்கர்களை அனுப் பாமல் வேறு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும்படி பெற்றோர்களையும் புரப்பவர்களையும் கேட்டுக் கொள்ளுதல்.

இ. இந்தி கட்டாயப் பாடத்தைத் தங்கள் பள்ளிகளில் வைத்து நடத்த வேண்டாமெனப் பள்ளிக்கூட முதல்வர்களைக் கேட்டுக் கொள்ளுதல்.

ஈ. மாணவர்களை இந்தி உள்ள பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்காமல் மறியல் செய்து தடைப்படுத்தல்.

உ. இந்தி ஆசிரியர்களை எல்லா வகையிலும் பகிஷ் காரஞ் செய்ய சமாதான முறையில் தக்க ஏற்பாடு களைச் செய்தல். ஊ. குறிப்பிடுகின்ற ஒரு நாளை இந்தி ஒழிப்பு நாளாக, சென்னை மாநிலம் முழுவதும் கொண்டாடி வர ஏற்பாடு செய்தல். எ. வாய்த்த போதெல்லாம் அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி பிடித்தல் முதலிய செயல்களால் கட்டாய இந்தி மீதுள்ள வெறுப்பைக் காட்டுதல்.

ஏ. மேற்கண்ட வேலைத் திட்டங்கள் வெற்றியைத் தராத வரையில் சட்டமறுப்புச் செய்தாவது இந்திக் கட்டாயத்தை ஒழித்தல்.

4. சென்னையில் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தவும், நடத்தும் முறைகளை வகுக்கவும், அப்போதைக்கப் போது ஆவன செய்யவும், தோழர் செ.தெ. நாயகம் அவர்களை முதல் சர்வாதிகாரியாக நியமிக்கிறது.

5. இந்திப் பயிற்சியை நமது மாநிலத்தில் பதவிகளுக்கு இன்றியமையாத தகுதியாக்குவது அமைச்சர்களின் நோக்கமென நன்கு புலப்படுவதால் இந்தி விருப்பப் பாடமாக வருவதையும் ஒழிக்க வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்கின்றது” (விடுதலை 30-5-38). கட்டாய இந்தியை யாருமே ஆதரிக்கவில்லை. ஜஸ் டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், முஸ்லீம் லீக், தாழ்த்தப்பட்டோர் மன்றம் இத்தனையும் அதை வெறுத்தன.

1. காங்கிரஸ் கட்சியிலும் அது கட்டாயப் பாடமாக்கப் பட வேண்டுமென இதுவரை எத்தகைய தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, 1938 அக்டோபர் திங்களில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் (A.I.C.C..) அத்தகைய ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்டு விட்டது. டாக்டர் வரதராசலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், பேராசிரியர் பாரதியார், கருமுத்து தியாகராச ரெட்டியார், என்.வி. நடராசன் (இவர் அப்போது சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்), வ.சு. தேவசுந்தரம் (இவர் அப்போது பெத்து நாயக்கன் பேட்டை காங்கிரஸ் கழகப் பொருளாளர். இந்தியை எதிர்ப்பதன் பொருட்டு இருவரும் காங்கிரசை விட்டு 1938-இல் விலகினர்) ம.பாலசுப்பிரமணியன், பி.ஏ., பி.எல்., கோபாலரத் தினம், பி.கே. விநாயக முதலியார் முதலிய பல காங்கிரஸ்காரர்களும், சென்னை “தமிழ்நாடு” போன்ற காங்கிரஸ் இதழ்களும் இந்தித் திட்டத்தை முழுமனதுடன் வெறுத்தனர்.

2. கல்வியாளர்கள் : கல்கத்தா பல்கலைக்கழகப் பேரா சிரியர் டாக்டர் சுனிதாகுமார் சாட்டர்ஜி (9-4-39-இல் வங்காளத்தில் நடைபெற்ற வங்கமொழி மாநாட்டில் தம் தலைமை உரையில் குறிப்பிட்டது: “ஆங்கிலத்தைத்தவிர வேறு எந்த மொழியை இந்தியத் தேசியமொழி ஆக்கினாலும் இந்தியரின் அறிவுக்கும் கலைகளுக்கும் ஆபத்து உண்டாவது உறுதி. மக்கள் வேண்டாத ஒரு மொழியை அவர் கள் தலைமீது வலுக்கட்டாயமாகச் சுமத்துவது பெரும் கொடுமையாகும். ஆகவே இப்பொழுது எழுந்திருக்கும் இந்த இந்திமொழி ஏகாதிபத்திய வெறியை எதிர்க்க ஒவ்வொருவரும் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டியது மிகமிக இன்றியமையாதது. இந்தி அறியாத மக்கள் அத னைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று ஏற்பட்டால் இந்தி பேசுவோர் வேறு ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும். இல்லை யேல் இந்தி பேசுவோர் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்”).

கொச்சி கிராம அபிவிருத்தி அமைச்சர் அம்பட்ராம மேனன், சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் இராமசாமிக் கவுண்டர் எம்.ஏ., எல்.டி., பேராசிரியர் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, பி.ஏ., எல்.டி., சென்னை பெடரல் சர்வீஸ் கமிஷனின் முன்னாள் உறுப்பினரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்றைய தலைவருமாகிய பேராசிரியர் இரத்தினசாமி, எம்.ஏ., திருச்சி தேசியக் கல்லூரித் தலைவர் சாரநாத அய்யங்கார், பி.ஏ., எல்.டி., கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரனார், கல்கத்தா பேராசிரியர் முகர்ஜி, “மார்டன் ரிவ்யூ” முன்னாள் ஆசிரியர் இராமாநந்த் சாட்டர்ஜி, தியாசாபிகல் சங்கத் தலைவர் டாக்டர் அருண்டேல் (டாக்டர் அருண்டேல் கூறியது. இப்போதே மாணவர்கள் படிக்க வேண்டிய பாட புத்தகங்களின் எண்ணிக் கைக்குக் குறைவில்லை. அவர்கள் சுமந்து செல்ல வேண்டிய நோட்டுப் புத்தகங்களுக்கும் கணக்கில்லை. இவ்வளவும் போதாதென்று பள்ளிக்கூடப் பாடத் திட்டத்தில் கட்டாயம் இந்தியையும் சேர்ப்பது எவ்வாறு பொருந்தும்? எப்படிச் சிறுவர்களால் கற்க முடியும்? கட்டாய இந்தி சிறிதும் தேவையில்லாதது சிறுவர்களால் தாங்க முடியாதது) இத்தனை பேர்க்கும் கட்டாய இந்தி உடன்பாடில்லை.

3. பொதுவுடைமையாளர்கள் : எம். சிங்காரவேலு, பி.ஏ., பி.எல்., போன்றவர்கள், இவர்கட்கும் இந்தி உடன்பாடில்லை.

4.கிறிஸ்தவர்கள் : சர்.பன்னீர்செல்வம், க.ப.மகிழ்நன், பி.ஏ., எல்.டி., ரெவரண்ட் அருள்தங்கையா, அனைத்து இந்தியக் கிறிஸ்துவப் பெருமன்றத் தலைவர் எம். இரத்தினசாமி முதலியோர் இவர்களெல்லோரும் இந்தி வேண்டாம் என்றனர்.

5.தாழ்த்தப்பட்டோர் : இராவ்சாகிப் என். சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், திவான்பகதூர் இரட்டை மலை சீனிவாசன், திவான்பகதூர் எம்.சி. ராஜா, இன்னபிறர் - இவர்கட்கும் இந்தி பிடிப்பில்லை.

6. முஸ்லிம்கள் : முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா (காங்கிரஸ்காரர்கள் பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்துவன் இரகசியமெல்லாம் முஸ்லிம் ஆண், பெண் குழந் தைகள் உள்ளத்தில் ஆரிய மத தத்துவத்தைக் கட்டாயமாகப் புகுத்துவதே ஆகும் என்று இவர் அப்போது அறிக்கை விடுத்தார்), கான்பகதூர் கலிபுல்லா, எம்.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ., திருச்சி சுல்தான் பாக்தாதி, அப்துல் அமீத்கான், அல்ஹாஜ் பா. தாவுத்ஷா, பி.ஏ., கான்சாகிப் கஜாமியான் ராவுத்தர், சென்னை மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஜமால் முகமது, காலஞ்சென்ற கொடைவள்ளல் நவாப் அப்துல் அகீம், இந்திய அரசின் வர்த்தக உறுப்பினர் சர். மகமது யாகூப் (சர். மகமது யாகூப் 22-7-38-இல் கூறியது : இந்தியாவுக்கு இந்தி ஒருநாளும் பொதுமொழி ஆகாது. ஒரு மொழி பேசப்படும் மாகாணத்தில் மற்றொரு மொழி கட்டாயப் பாடமானால் எதிர்ப்பு கட்டாயம் இருக்கும். என் மாகாணத்தில் தமிழோ, தெலுங்கோ கட்டாயப் பாடமானால் இந்தி எதிர்ப்பாளர் கருதுவது போல் தான் நானும் கருதுவேன், நானும் எதிர்ப்பேன்) இத்தனைப் பேரும் இந்தி தேவையில்லை என் கின்றனர்.

7. ஆந்திரர்கள் : ஆந்திர ரத்தின கோபால கிருஷ்ணய்யா, முன்னாள் சென்னை கவர்னர் சர். கே.வி. ரெட்டி நாயுடு போன்ற பலர். இவர்கள் உள்ளமும் இந்தி தேவையில்லை என்றே சொல்லிற்று.

8.மலையாளிகள் :முன்னாள் சட்ட அமைச்சர் சர்.எம். கிருஷ்ணநாயர் முதலியோர். இவர்களெல்லோரும் இந்தி எதற்கு என்றே கேட்கின்றனர்.

9. தமிழ்ப் புலவர்கள் : பேரறிஞர் மறைமலை அடிக ளார், பேராசிரியர் பாரதியார், தாகூர் சட்ட விரிவு ரையாளர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எல்.எல்., வித்துவான் மறை திருநாவுக்கரசு, காமக்கூர் வித்துவான் சுந்தர முதலியார், திருவத்திபுரம் வித்துவான் கோவிந்தன், கரந்தைத் தமிழ்ச் சங்கம் சிவ. குப்புசாமிப் பிள்ளை, திருவையாற்று அரசர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் கவியரசு வெங்கடாசலம் பிள்ளை, மேற்படி கல் லூரிப் பேராசிரியர்கள் இ. கோவிந்தசாமிப் பிள்ளை, ஜி. சோமசுந்தர தேசிகர், தமிழாசிரியர் மயிலை முத்துக்குமாரசாமி முதலியார், புலவர் செல்வராஜ் இன்ன பிறர். இந்தியால் தமிழ் கெடுமா? கெடாதா? என்பதைப் பற்றித் தீர்ப்பளிக்க வேண்டிய இவர்கள் அத்தனைப் பேரும் ஒரு முகமாகச் சொல்லி விட்டனர் இந்தியால் தமிழ் கெடும் என்று.

10. துறவிகள் : ஈழத்தடிகள், பி.ஏ., சாமி விபுலானந்தர், பி.எஸ்.சி., (லண்டன்), சாமி விமலானந்தர், சாமி அற்புதானந்தர், சாமி சண்முகாநந்தர், வள்ளல் சிவஞான தேசிகர், வண்ணாரப்பேட்டை சாது நாராயண தேசிகர், மடாலயம்-சாமி அருணகிரிநாதர், ஸ்ரீதரசுவாமிகள், சாமி கைவல்யம், இன்னும் பலர்: இவர்களும் இந்தி மொழியை வாழ்த்த வில்லை!

11. வியாபாரிகள் : காஞ்சி அ.க. தங்கவேலர், பி.எஸ். கந்தசாமி சா, திருச்சி விசுவநாதம், குடந்தை நீலமேகம் முதலிய பலர். இவர்களுக்கும் இந்தி வேம்பு.

12. பெண்கள் : தமிழறிஞர் நீலாம்பிகை அம்மையார், டாக்டர் தருமாம்பாள் அம்மையார், பண்டிதை அ. நாராயணி அம்மையார், சென்னை ஆர். நாராயணி அம்மையார், ஞானம் அம்மையார் (வித்துவான் மறை திருநாவுக்கரசின் துணைவியார்), சரோசினி அம்மையார் (மறைமாணிக்க வாசகத்தின் துணை வியார்), வ.பா. தாமரைக்கண்ணி அம்மையார்; மற்றும் பலர்-இவர்கட்கெல்லாம் கட்டாய இந்தி தொலையவேண்டும் என்பதே ஆசை.

13. ஜஸ்டிஸ் கட்சி : இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றிற்று. கட்சித் தலைவர் பொப்பிலி அரசர், துணைத் தலைவர்கள் சர். பி.டி. இராசன், சர். செல்வம், சர். பாத்ரோ, குமாரராஜா, சர். முத்தையா செட்டியார், இராவ்பகதூர் என்.ஆர். சாமியப்பா, இராவ் சாகிப், வி.வி. ராமசாமி, மேடைதளவாய் குமாரசாமி முதலியார், திவான் பகதூர் அப்பாதுரை, எம்.எல்.ஏ., - இந்தி வேண்டாம் என்பதே இவர்கள் உரை.

14. ஜனநாயகக் கட்சி : எஸ்.முத்தையா முதலியார், கே.எம். பாலசுப்பிரமணியம் இன்னும் பலர். இவர் கள் கருத்தும் அதுவே.

15.சுயமரியாதைக்காரர்கள் : இந்திப்போர் வெற்றி பெற்றதற்குக் காரணமே இவர்கள் தாம். மா.இளஞ்செழியனின் ‘தமிழன் தொடுத்த போர்’ (பக்கம் 43-49) - தொடரும் keetru.com june 2014

21 03 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 19
வாலாசா வல்லவன்

போர் மூண்டு விட்டது; தமிழர் ஒன்று சேர்க :

ஆரியச் சூழ்ச்சிக்கும், தமிழர் (திராவிடர்) வீரத்திற்கும் போர் மூண்டுவிட்டது. மூளாமல் தடுக்க தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் பயனற்ற தாகிவிட்டன. தமிழர்கட்குள் ஒற்றுமை இல்லை என்றும், தமிழர் களைக் காட்டிக் கொடுத்துத் தமிழர்களை அழிக்க, தமிழ் மக்களில் தங்களுக்கு வேண்டிய “அநுமார், சுக்கிரீவன், விபீஷணன்” போன்ற இழி மக்கள் கிடைத் திருக்கிறார்கள். இன்னும் கிடைப்பார்கள் என்றும் கருதியிருக்கும் இறுமாப்பால் “நான் செய்வதைச் செய்கிறேன். உன்னால் ஆனதைப் பார்” என்று சூழ்ச்சி யில் வல்ல நமது ஆச்சாரியார் போர்க்கோலம் கொண்டு விட்டார். பிரிட்டிஷ் ஆட்சியும் தனது சுயநலத்தையும், தமிழ் மக்களின் கதியற்ற நிலைமையும் கருதி தமிழர் மானத்தைச் சூறையாட ஆச்சாரியாருக்கு அனுமதிச் சீட்டு அளித்துவிட்டது. ஆதலால் எண்ணிக்கையில் பெருத்து ஒற்றுமையின்றிச் சிதறி வலிமையில் சிறுத் துக் கிடக்கும் தமிழ் மக்களுக்குப் போக்கிடம் இல்லாமல் இன்று நலிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஹிந்தி பலாத்காரம் :

ஹிந்தி பாஷை என்ற பாஷையை ஆச்சாரியார் ஆட்சியானது தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த சபதம் செய்து கொண்டதானது பொறுக்க முடியாத கொடுமையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்று 100க்கு 90 பேர்களுக்கு மேல் தங்கள் தாய் மொழியில் (தமிழில்) கூடக் கையெழுத் துப் போடத் தெரியாத அவ்வளவு தற்குறி - பாமரத் தன்மை இருந்து வருகிறது. இதில் ஒரு விகிதத்தையாவது குறைக்க ஆச்சாரியார் ஆட்சி இதுவரை ஒரு சிறு முயற்சியும் எடுத்துக் கொண்டதாகச் சொல்ல எவ்வித ஆதாரத்தையும் காண முடியவில்லை. இந் நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு மற்ற ஒரு அந்நிய பாஷையைக் கொண்டு வந்து “வலுவில் புகுத்தித்தான் தீருவேன்” என்று ஆச்சாரியார் ஆட்சி சொல்லுமே யானால், இதில் ஏதாவது சூழ்ச்சியோ வஞ்சகமோ இல்லாமல், சிறிதாவது யோக்கியப் பொறுப்பு இருக்க முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. உலகிலேயே இந்திய தேசம் கல்வி, அறிவற்ற நாடு என்கின்ற தன்மையில் இருக்கும்போது குறிப் பாகத் தமிழ்நாடு மிக்கப் பாமர மக்களைக் கொண்ட தாக இருக்கும்போதும் அதிலும் பழங்குடி மக்களாகிய தமிழர்களில் சராசரி 100க்கு 95 பேர் கள் தற்குறிகளாகவும், பெண்கள் 100க்கு 99 பேர் தற்குறிகளா கவும் இருக்கும் போதும் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பைக் கொடுக்க வழிகோலாமல் படித்து இருக்கும் மக்களுக்கே மற்றும் ஒரு பாஷையை படிப்பிக்க முயற்சிப்பதும், பணம், ஊக்கம், நேரம் ஆகியவைகளைப் பாழடிக்க முயற் சிப்பதும் எப்படி யோக்கியமானதும் நல்லெண்ண முடையதுமான காரியமாகுமென்று மறுபடியும் கேட்கின் றோம்.

மனு முறைக்குச் சூழ்ச்சி :

கல்விக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி கல்வி இல்லாதவர்களுக்குக் கல்வி கற்பிக்கவா அல்லது கற்றவர்களுக்கு மற்றுமொரு பாஷை கற்பிக்கவா என்று கேட்கின்றோம். இவைகளைப் பார்க்கும்போதும் தோழர் காந்தியார் முதலிய பல அரசியல் தலைவர்கள், “இந்தியா சுயராஜ்யம் பெறுவது என்றால் வரு ணாச்சிரம தர்மமாகிய மனுதர்ம ஆட்சி முறையை நிறுவுவதுதான்” என்று சொல்லி வந்ததை இப்போது எப்படியோ சமயம் கிடைத்த உடன் மனுதர்ம ஆட்சி ஏற்படுத்த காந்தியாரின் பிரதம சிஷியர் என்ற உரிமை பாராட்டிக் கொள்ளும் ஆச்சாரியாரின் ஆட்சி மூர்க்க முயற்சியில் இறங்கிவிட்டது. இந்த வருணாச்சிரம மனுதர்ம ஆட்சி நிறுவப்பட்டால் இந்நாட்டுத் தமிழ் மக்களுடைய சுதந்திரம், வீரம், தன்மானம் ஆகியவை அடியோடு புதைக்கப்பட்டது என்பதுதான் கருத்தாகும். ஹிந்தி வடமொழி பாஷையைத் தழுவியது என்ப தோடு ஹிந்தி பாஷையின் எழுத்துக்கள் அநேகமாக வடமொழிக்கு ஏற்பட்ட எழுத்துக்களேயாகும். சப்தமும் பெரிதும் அதுவேயாகும். அப்பாஷையில் படிக்க வேண் டிய விஷயங்களும், படிக்க நேரும் விஷயங்களும் மனுதர்மத்தை ஆதரிக்கத் தூண்டும் விஷயங்களும் மனுதர்மப்படி நடக்கச் செய்யும் விஷயங்களுமே யாகும்.

தமிழ்நாடும் சிறப்பாகத் தமிழ் மக்களும் இன் றுள்ள இந்த இழிநிலைக்கு அதாவது தன்மானமற்று, எதிரியைப் பணிந்தும், சார்ந்தும், வாழ்வு நடத்தும் மனப்பான்மை கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருப்பதற்குக் காரணம் ஆரிய சூழ்ச்சியால் மனுதர்ம முறையை ஒப்புக்கொண்டு இதுவரை வாழ்ந்து வந்த தேயாகும். ஏதோ இடைக்காலங்களில் அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழர்கள் தங்கள் நாட்டின் பழைய நிலைமையும், சமூகத்தின் பழந்தன்மையும், தங்கள் கலைகளின் உயர்வையும் ஓர் சிறிதாவது உணர்ந்து செய்து வந்த உண்மைத் தொண்டுகளினால் ‘தமிழர் ஆரியருக்கு அடிமைகளல்ல; ஆரியருக்குத் தொண்டு செய்யப் பிறந்தவரல்ல, ஆரியரின் போகப் பெண்டிர்களின் மக்களல்ல - சூத்திரர்களல்ல”என்று தலைநிமிர்ந்து பேசவும், பறைசாற்றவும் தமிழ் மக்களுக்கு உணர்த்தவு மான நிலை சற்று ஏற்பட்டும், மறைந்தும் மறுபடியும் தலைதூக்கியும் இப்படியே நடந்து வந்திருக்கிறது.

சைவரால் ஏற்பட்ட இழிவு :

பொதுவாக, தமிழ் மக்களை இம்மாதிரியான ஆரியப் படுகுழியில் தள்ளி என்றும் தலைதூக்காமல் இருக்கத்தக்கவண்ணம் ஆரியருக்குத் துணைபுரிந்து வந்தவர்கள் - வருகிறவர்கள் சைவர்களேயாகும். அவர் களும், அவர்களது சைவ சமூகமே தமிழ்நாட்டில் ஆரியத்தை வளர்த்து ஆரியர்களுக்குத் தமிழர்களை அடிமையாக்கிற்று. இன்றும் பெரும்பாலும் சைவனே தான் ஆரியர்களுக்குக் அனுமார், சுக்ரீவர்களாகவும், விபீஷணர்களாகவும் இருந்து வருகிறார்கள். இம்மாதிரி ஆரிய அடிமைச் சமய உணர்ச்சி ஏற்படாதிருந்திருக்கு மானால் இன்று ஆரியருக்கு எந்நாட்டையும் விட இத்தமிழ்நாட்டில் மாத்திரம் இத்தனை சிறப்பும் மூர்க்க உணர்ச்சியும் ஏற்பட்டிருக்க முடியாதென்றே சொல்ல லாம். எனவே ஆரியர்கள் நம் நாட்டில் சமயத்தின் பேரால் பெற்ற செல்வாக்கால், தான் சமூகத்தில் மேம்பாடடைந் தார்கள். சமூகத்தில் அடைந்த மேம்பாட்டால்தான் இன்று அரசியலில் ஆதிக்கம் பெற்றார்கள். அந்த அரசியல் ஆதிக்கத்தால்தான் நம்மை மநுமுறைக்குத் தள்ளுகிறார்கள். அப்படிப்பட்ட அவ்வாதிக்கத்திற்கு இன்றும் சைவர்களே பெரிதும் அனுமார்களாய் இருக்கிறார்கள் என்றால், சைவர்கள் தங்கள் அறிவற்ற செயலுக்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம். உண்மைச் சைவர்களுக்குக் கடுகளவா வது தன்மான உணர்ச்சி ஏற்பட்டு, தங்களுடைய சற்சூத்திரத் தத்துவத்தை சிறிதாவது பின்வாங்கிக் கொள்ள அறிவு கொள்ளுவார்களேயானால் ஆச்சாரி யாரின் மூர்க்க ஆட்சி அன்றோடு அழியத் தொடங்கி விடும் என்பதில் யாதொரு சந்தேகமும் கொள்ள இடமில்லை என்று உறுதி கூறலாம். அந்த உணர்ச்சி சைவர்களுக்குச் சுலபத்தில் ஏற்படாது என்கின்ற தைரி யத்தாலேயே இன்று ஆச்சாரியார் இவ்வளவு துணிச் சலுடனும், மூர்க்க உணர்ச்சியுடனும் காரியாதிகள் செய்ய முடிகின்றன.

ஹிந்தி இஷ்டப் பாடமாகவாவது ஏன்?

ஹிந்தி பாஷை கட்டாயப் பாடமாகக் கூடாது என்பது தான் இன்று தமிழ் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறதே தவிர மற்றபடி ஹிந்தி பாஷை தமிழர்கள் பள்ளியில் இஷ்டப் பாடமாகவாவது ஏன் நுழைய வேண் டும்? என்று கேட்பதற்கு இதுவரை எந்தத் தமிழனும் முன்வரவில்லை. இங்கிலீஷ் ஏன் வந்தது தமிழன் பள்ளியில் எப்படி நுழைந்தது என்று சிலர் கேட்கலாம். இங்கிலீஷைக் கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். இங்கி லீஷைப் பரப்பினவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷால் பயனடைந்தவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷைப் புகுத்த உத்தரவு போட்டது பிரிட்டிஷார். ஆதலால் இங்கிலீஷ், தமிழர்கள் பள்ளியில் புகுந்ததற்குத் தமிழர்கள் சிறிதும் பொறுப்பாளிகள் அல்ல. இங்கிலீஷின் உதவியில் ஆட்சி ஆதிக்கத்தைக் கைப்பற்றிய ஆரியர்கள் தங்களைத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, எதற்காக மற்றொரு அன்னிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்குப் பள்ளிகளில் புகுத்த வேண்டும்? அதுவும் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்பதுதான் நமது கேள்வியாகும். எவ்வளவோ அதிருப்தியையும், எதிர்ப்பையும், கெஞ்சுதல்களையும், பிரார்த்தனைகளையும் சிறிதும் லட்சியம் செய்யாது ஹிந்தியைத் தமிழன் பள்ளியில், தமிழன் வரிப்பணத்தில், தமிழன் சம்மதமின்றி புகுத்த உத்தரவு போட்டாய்விட்டது.

ராஜி முயற்சி :

மற்றும் சில தமிழ் மக்கள் ஆச்சாரியாருக்கும், தோழர் ஸ்டாலின் ஜெகதீசனுக்கும் ராஜி செய்ய முயற்சிப்பதாக வெளிவந்து ராஜி நிபந்தனையாக “ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக வைக்கப்படுமே ஒழிய அதில் பரீட்சை வைக்காமலே மற்ற படிப்புகளில் மாத்திரம் தேறி இருந்தால் மேல் வகுப்புக்கு அனுப்பப்படும்” என்று ஆச்சாரியார் ஒப்புக்கொள்வதாகச் சொல்லி ராஜி பேசுகிறார்கள். ஹிந்தியைப் பரீட்சை வைப்பதில்லை என்று கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் 3 மாதத்திற்கு முன்பே ஈரோட்டில் சொல்லிவிட்டார். இதில் ஆச்சாரியார் தயவு என்ன வேண்டியிருக்கிறது என்பது விளங்கவில்லை. என்னவானாலும் ஆச்சாரியார் பிடி வாதம் சிறிதும் குறையவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்பிடிவாதத்தைத் தமிழர் கள் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட முயற்சியாலும்தான் ஒழிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக 28.5.1938இல் திருச்சியில் ஒரு கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஹிந்தியை ஒழிக்கப் போர் தொடுக்க பல முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

பலாத்காரப் புரளி :

அம்முறைகளுக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்து, போரில் இறங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் நீங்காக் கடமையாகும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும் என்பதாக வேண்டிக் கொள்ளுகிறோம். போரில் காந்தியார் மிரட்டும் பலாத் காரத்தைப் பற்றி எவரும் கவலைப்படக்கூடாது. பலாத் காரத்துக்கு இந்த உலகில் காந்தியார் மாத்திரமே பாஷி யக்காரரென்று கருதும் முட்டாள் கோஷ்டியில் நாம் சேர்ந்தவரல்ல. உண்மையில் பலாத்காரம் என்றால் சரீரத்திற்கு நோவுண்டாகும்படி செய்வதும், மனிதனுடைய சரீர பலத்தை மற்றொரு மனித சரீரத்தின் மீது பிரயோகிப்பதையுமே நாம் பலாத்காரம் என்று கருதுகிறோம். அப்பேர்ப்பட்ட பலாத்காரம் நமக்கு சுமார் 20 - வருஷமாகவே கூடாத - கண்டிப்பாய் கூடாத காரியமாய் இருந்து வருகிறது. நாம் வகுக்கும் எந்தப் போர் முறையிலும் இம்மாதிரி பலாத்காரத்தை அறவே வெறுத்தும் நீக்கியும் வந்திருக்கிறோம். ஆதலால் திருச்சி போர் முறையானது இப்படிப்பட்ட பலாத்காரமில்லாமல் மற்றபடி எப்படிப்பட்ட முறையானாலும் அதற்குத் தமிழ் மக்கள் இசைந்து ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறோம். குடிஅரசு - தலையங்கம் - 29.5.1938 keetru.com may 2014

14 03 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 18
வாலாசா வல்லவன்

தந்தை பெரியாரின் குடிஅரசு 1938 மே மாதம் முதல், வாரந்தோறும் - கடுமையான அதே நேரத்தில் தமிழர்களுக்கு வீரமும், உணர்ச்சியும் ஏற்படுத்துகின்ற அளவுக்கு மிகக் கோபக்கனலைக் கொட்டுகின்ற தலையங்கங்களைத் தீட்டி வந்தது. 1938 மே மாதம் 15ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி’ என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், தமிழ் இனத்திற்குக் கேடு செய்யும்; துரோகம் இழைக்கும் தமிழர்களைக் கண் டனம் செய்தது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி இங்கே மறுவெளியீடு செய்யப்படுகிறது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்

“தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்றுப் பெரிய மனிதனாக உள்ள மக்களில் பெரும்பா லோர் இன்று நம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழிநிலைக்கு வந்துவிட்டார்கள். நாம் தமிழர், தமிழ் மக்கள் சந்ததி என்கின்ற சாக்கைச் சொல்லி உத்தியோகம் பெற்று, பணம் தேடி, அதனால் தங்களது பிள்ளைகளுக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக் கொண்ட தமிழ்மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம்மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டும் அறியாதவர்போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலைச் சூப்பிக் கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட் டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி

அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்ளின் வாக்குகளைப் பெற்றுப் பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள், இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண்புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்கக் கத்தி தீட்டிக் கொடுப்பதற்கான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால் தமிழ் மக்கள் இதுசமயம் சக்தியற்று, நாதியற்றுக்கிடக்கிறார்கள் என்பதற்கு இதை விட என்ன எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்கிறோம்.”

தந்தை பெரியாரின் குடி அரசு ஏடு அன்றைக்கு எழுப்பிய கேள்வி இன்றுவரை நிதர்சனமாக நூற்றுக்கு நூறு அப்படியே உள்ளது. அன்று இந்தி எதிர்ப்பின் போது இருந்த அதே நிலை, இன்று ஈழத் தமிழர் பிரச்சனையின் போதும் இருக்கிறது. அன்றைக்குப் பெரியார் ஓட்டு வாங்கிகளைப் பற்றிச் சொன்னவை அனைத்தும், இன்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழன் பேரைச் சொல்லி ஏமாற்றும் அத்தனைக் கட்சிகளுக்கும் அப்படியே பொருந்தும். என்ன ஒரு வித்தியாசம் என்றால், அன்றைக்கு வெற்றி பெற்றுச் சென்றவர்கள் தமிழர்க்குத் துரோகம் செய்து தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள். இன்று தங்கள் தொழிலைப் பெருக்கிக் கொண்டார்கள், அவ்வளவு தான் வேறுபாடு. இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. மேலும் அத்தலையங்கத்தில் பெரியார் எழுதுகிறார்:

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?

மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக்காட்டுவோம். இனி அடுத்தாற்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேம் பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும், இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும், இன்று இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் நினைத்துப் பாருங்கள். அதைப் பற்றியும் பின்னால் எழுதுவோம். இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்குப் பிரதி நிதியாய், பார்ப்பானுக்கு, காங்கிரசுக்கு எதிர்க்கட்சி யில் இருப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதை தான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம். இப்படியே தமிழுக்குத் துரோகம் செய்தவர்களையெல்லாம் பட்டியலிடுகிறார் பெரியார்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?

“வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ்மக்களுக்கு இந்தியாலும், வார்தாக் கல்வித் திட்டத்தாலும் ஆபத்து இல்லை; கேடில்லை. தமிழன் மனிதத்தன்மையோடு வாழுவதற்குத் தடையில்லை என்று எந்தத் தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே, எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும், வார்தாக் கல்வித் திட்டமும் தமிழனுக்குக் கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாய் ஒப்புக்கொண்டாய்விட்டது. இந் நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக்கொடுமையி லிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன்வருகிறார் கள்? என்று கேட்கின்றோம்.” நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சர்களாய் இருந்தவர் களையும் பெரியார் விட்டுவைக்கவில்லை. இந்தி எதிர்ப்புக்கு அவர்களின் பங்களிப்பு இல்லை என்பதைக் கூறி அவர்களையும் கண்டித்திருக்கிறார். மேலும், காங்கிரசில் உள்ள தமிழர்களின் செயல்களையும் பெரியார் வன்மையாகக் கண்டிக்கிறார்.

காங்கிரஸ் தமிழர்களின் நிலை என்ன?

“தேசத்திற்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கிரஸ் தான்” என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனர்களுடன் சேர்ந்துக்கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர்குலையச் செய்யச் சம்மதித்துப் பார்ப்பனர்களைத் தஞ்சமடைந்து வயிறு வளர்க்கும் தமிழ் மக்கள் தானா கட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடி யான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.”

தமிழன் செய்ய வேண்டியதென்ன?

தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றித் தீவிர யோசனை செய்ய வேண்டும். இந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும், தாங்கள் யோசனை செய்வதற்குமுன் மனத்திலிருத்திக்கொள்ள வேண்டும். பார்ப்பனியக் கொடுமையில் இருந்து நாமும், நமக்கு பின் சந்ததிகளும் தப்புவதற்காகச் செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதிச் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படிச் சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ்மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?

இந்த இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய சுதந்தர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும். ஏனெனில், பார்ப்பனியம் இன்று இந்தியைத் தமிழ் மகக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்னவென்றால், அரசியலுக்காக அல்ல; பொருளியலுக்காக அல்ல; அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்காக அல்ல. இவைகளுக்காக என்று சொல்லுவதும், நம்மைக் கருதும்படிச் செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்.

இந்திப் புரட்டின் அந்தரங்க நோக்கம்

மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால், இன்று தமிழ்மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியைத் தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி, அதைக் கெட்டிப்படுத்திப் பார்ப்பனியத்துக்குத் தமிழ் மக்களைப் புராணக் காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். பெரியாரின் இந்த தீர்க்கதரிசனம் நூற்றுக்கு நூறு உண்மையானதாகும். அதனால்தான் உ.வே. சாமிநா தய்யர் உட்பட எல்லா பார்ப்பனர்களும் இராசாசியின் கட்டாய இந்தித் திணிப்பை ஆதரித்தார்கள். (தொடரும்) keetru.com mar 2014

07 03 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? – 17
வாலாசா வல்லவன்

இராசாசி 1938 ஏப்பிரலில் கட்டாய இந்தி ஆணை பிறப்பித்தவுடன் தந்தை பெரியாரின் குடிஅரசு இதழும் விடுதலை நாளேடும் தான் போர்வாளாகச் செயல் பட்டன. தமிழக இளைஞர்களைப் போர்க்களத்திற்கு முரசறைந்து அழைத்தன என்பது தான் கடந்த கால வரலாறு. சென்ற சிந்தனையாளன் இதழ் கட்டுரைத் தொடர் எண்.16இல் எப்படிப்பட்ட இளைஞர்கள் போராட்டத்திற்குத் தேவை என்பதை 8.5.1938 குடி அரசில் தலையங்கம் தீட்டப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக இங்கே மறுவெளியீடு செய்யப்படுகிறது. மாண வர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும், சைவ மடாதிபதிகளையும் அறைகூவல் விட்டு அழைத்தது.

“கோடை விடுமுறை முடிந்தவுடன் இந்தி கட்டாயப் பாடமுறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதைiயும் அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும். தோழர்கள் எஸ்.எஸ்.பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர் களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.

சிறைபுகுவது அற்ப விஷயம் :

தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்குச் சிறை செல்லுவது என்பது மிகச் சாதாரண காரியமாகும். அதுவே கடைசிக் காரியமாகவும் கருதிவிடக் கூடாது. ஆச்சாரியார் அதைச் சுலபத்தில் கையாள சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராய் இருந் தால் மட்டும் போதாதா? என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக்காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ, நஷ்டமோ கிடையாது. அதை மூன்றாந்தரக்காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும் பொறுப்பாளிகளும் அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக்கமற்ற மறத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொரு வினை ஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராட எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும் சூழ்ச்சியில் திறமை உடையவர்களு மான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ் வொரு எதிர்ப்பாளனும் மனத்தில் இருத்த வேண்டும். இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து அதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் அய்யம் இல்லை.

இளைஞர்களுக்கு வேண்டுகோள் :

இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை இந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” “நான் தயார்” நானும் என் மனைவியும் தயார், “உண்ணாவிரதத்திற்குத் தயார்”, “உயிர் விடத் தயார்” என்பதாகத் தெரிவித் துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்டஜீவனம் நடத்தவும், அடிபடவும், இராப் பட்டினி கிடக்கவும், தொலை வழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனைச் சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.

பெரியோர்களுக்கு விண்ணப்பம் :

பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்குப் புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்குக் கருதப்படும், மானம் அபிமானம் வேறு; பொது நலத் தொண்டுக்குக் கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங் களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய்க் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளை ஞர்களுக்கு நீங்கள் வழிகாட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஞாபகத்தில் வையுங்கள்.

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை :

தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண் ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா? இறப்பதா? என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும் பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு (கோபம்) கொள்ளாதீர்கள். நடந்தது நடந்துவிட்டது. அதைப் பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது, நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தைத் தாராளமாக இக்கருமத் திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.

பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் :

பொதுத் தமிழ் மக்களுக்கு ஒரு மாபெரும் விண்ணப்பம். தமிழ்த் தோழர்களே! இந்த 50 வருட காலத் தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி யல்ல; வருணாச்சிரம புரோகித ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும், தமிழ் மக்களை விலங்குகளாக்கு வதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதைவிட மடிவது மேலான காரியமாகும். ஏதோ விளக்க முடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களும் நாமும் நம் பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சிப் போராக, முயற்சியாகக் கருதுங்கள். உங்கள் சௌகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களைப் போருக்குக் கச்சைகட்டி விரட்டி அடியுங்கள்.

மடாதிபதிகளுக்கு மன்னிப்பு :

தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே! நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்துவிடுகிறோம். இந்தச் சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களா லான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதை விட வேறு தக்கசமயம் இனி சுலபத்தில் கிடைக்காது. ஆகவே பொது மக்களே, இளைஞர்களே, தயாரா குங்கள்; முன்வாருங்கள் ஒரு கை பாருங்கள். இப்படி, அனைத்துத் தரப்பு மக்களையும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைத்தவரே பெரியார்தான். சுய மரியாதை இயக்கம்தான் தமிழ் மக்களுக்கு உணர்ச் சியை ஊட்டி இந்தி எதிர்ப்புப் போரில் குதிக்க வைத்த பெரியாரைப் பார்த்துத்தான், இன்றைய தமிழ்த் தேசியவாதிகள் “இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் அறிஞர் களால் நடத்தப்பட்டது. பெரியார் இடையில் வந்து சேர்ந்துகொண்டார்” என்று அப்பட்டமான பொய் யையே திரும்பத் திரும்ப எழுதுவது என்ன நியாயம் என்றே தெரியவில்லை. - தொடரும் keetru.com feb 2014

21 02 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா?
வாலாசா வல்லவன்15

இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் காலிகள் கலாட்டா

“திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடன், வாத்தியங் களுடனும், ஊர்கோலம் போகும் போது காங்கிரசாரும், அவர்களுடைய அடியாட்களும் ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளைக் கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டு போய்க் கொடுப்பதும், கோபமுண்டாகும் வண்ணம் ‘ஜே’ போடுவதுமான காரியங்களைச் செய்துகொண்டு வந்ததுமல்லாமல், கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்? போலீசார் இந்தக் காலிகளை விரட்டிவிட்டார்களே ஒழிய, அவர்களைக் கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை. ஊர்கோலம் மாநாட்டு மண்டபத்துக்கு வந்தபிறகும், மாநாட்டுக் கொட்டகை மீதும் கற்கள் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” (‘குடிஅரசு’ தலையங்கம், 2.1.1938).

‘தினமணி’யின் குறும்புத்தனம்

“சென்ற மாதம் சேலத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலனார் பேசும்போதும் காங்கிர° காலிகள், கூட்டத்தில் கல் போட்டு கலவரம் செய்தனர். அவர்களைத் தூண்டிவிடும் நோக்கில் ‘தினமணி’ தலையங்கங்களைத் தீட்டி வந்துள்ளது. ‘தினமணி’ யின் ஒரு தலையங்கத்தில் “இந்தி எதிர்ப்புத் தீர் மானம் நிறைவேறாமல் பொது ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பச்சையாகத் தூண்டி விட்டிருக்கிறது. மற்றொரு சமயம் “பொது ஜனங் களுக்குக் கோபம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று எழுதி இருக்கிறது. மற்றும் சில சமயம் “பொது ஜனங்களும் சும்மா இருப்பார்களா?” என்றெல்லாம் எழுதி, பொது மக்களை இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உசுப்பிவிடுவதை “குடிஅரசு” ஏடு 2.1.1938 தலையங்கத்தில் கண்டித்துள்ளது. வ.ஆ.மா. 2வது சுயமரியாதை மாநாடு ஆம்பூரில் நீதிக்கட்சியின் துணைத் தலைவர் கான்பகதூர் கலி புல்லா தலைமையில் 28.11.1937இல் நடைபெற்றது. கான்பகதூர் கலிபுல்லா தமது தலைமையுரையில் இராசாசி ஆட்சிக்கு வந்ததும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் வந்தே மாதரம் பாடலைப் பாட வைத்ததைக் கண்டித்தார். மேலும் அவர் பேசுகையில் “வந்தே மாதர கீதப் பிரச்சனை ஒரு புறம் இருக்க, இந்தியைக் கட் டாயப் பாடமாக்கப் போகிறோம்” என்று வீண் சபதம் போட்டுக் கொண்டு அலைகின்றார்கள். அதற்கு அவசியம் என்னவென்று கேட்டால் “இந்தியைப் படித்துக் கொண்ட மாத்திரத்தில் வடஇந்தியாவுக்குச் சென்று சம்பாதிக்கலாம். துளசிதா° ராமாயணம் படிக்கலாம்” என்கிறார், கனம் ராஜகோபாலாச்சாரியர். “10,000க்கு ஒருவர் கூட வடஇந்தியா போகிறவர்கள் இல்லையே, அப்படியிருக்க ஒருவருக்காக வேண்டி 10,000 பேர் கல்வி கற்பதைக் கொலை செய்ய லாமா?” என்று கேட்டால், “இந்தியா முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். அதற்காகத்தான் நான் இந்தி மொழியை வலுக்கட்டாயப்படுத்துகிறேன்” என்கிறார்.

உண்மையை விளக்க வேண்டுமானால் கனம் ராஜகோபாலாச்சாரியாரை நம்பி, பிழைப்பில்லாத ஏழை பிராமணர்கள் இந்தியைப் படித்துவிட்டுத் தெருத் தெருவாய் அலைந்து கொண்டிருப்பதாயும், அப்படி ஆயிரக்கணக்கான பிராமணர்கள் திண்டாடிக் கொண்டி ருப்பதைப் பார்த்துக் கொண்டு, சென்னை மாகாணப் பிரதம மந்திரி °தானத்தை வகிக்கும், கனம் ராஜ கோபாலாச்சாரியார் வாளாயிருக்க முடியாமல் அவர் களுக்கு எப்படியாவது பிழைப்புக்கு வழிகாட்ட வேண்டி யது அவரது கடமையாகையால், அவர் இந்தியைக் கட்டாயமாக்குவது என்று கங்கணங்கட்டிக் கொண்டு அலைகிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்” என்று பேசினார். இந்தக் கருத்திலும் உண்மை இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இராசாசி இந்தியைக் கட்டாய மாக்கி, 21.4.1938இல் ஆணையிட்டவுடன், 125 உயர்நிலைப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுமுதல், முதல் மூன்று வாரங்களில் இந்தி கட்டாயப்பாடம் என்று ஆணைப் பிறப்பித்தார். அரசாணை எண். M.R.C. Miscellaneous, Public Education, G.O.No.911, Date 21 April, 1938 இந்தத் திட்டம் நிறைவேற, இராசாசி அரசு கூடுத லாக ரூ.20,000 நிதி ஒதுக்கி, அப்பணத்தை இந்தி ஆசிரியர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என ஆணையிட்டது (Mail 30 April, 1938).

இராசாசி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிவித்த நாள் முதல், தந்தை பெரியாரின் “குடிஅரசு” ஏடும் “விடுதலை”யும் தமிழர்களுக்குத் தன்மான உணர் வூட்ட வாளும் கேடயமும் போல் பயன்பட்டு வந்துள்ள தை வரலாறு நமக்குக் காட்டுகிறது. குடிஅரசு 1937, திசம்பர் 19 இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் கடந்தும் அயல்நாடு களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேயா, சிங்கப்பூரிலும் பல கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. 9.1.1938இல் சிங்கையில் சுயமரியா தை இயக்கத் தலைவர் கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. “இந்தி தமிழ்நாட்டில் அழிந்தேதீரும்” என்ற தலைப் பில் அவர் நெடிய சொற்பொழிவாற்றினார். (‘குடிஅரசு’, 28 சனவரி 1938). திருச்சியில் கூடிய தமிழர் மாநாட்டின் தீர்மானத் தின்படி, ஒரு குழுவை அமைத்து கவர்னரிடம் சென்று முறையிடுவது என்று முயற்சி செய்தனர். அந்தக் குழுவினரைப் பார்க்கவும், அவர்களின் கோரிக்கை யை ஏற்கவும் கவர்னர் மறுத்துவிட்டார். இந்த நிகழ் வைக் கண்டித்துத் தந்தை பெரியாரின் “குடிஅரசு” இதழ் சீறிப் பாய்ந்தது.

“தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார் கள்?” என்று துணைத் தலையங்கத்தைத் தீட்டியது குடிஅரசு இதழ். “சரணாகதி மந்திரிசபை, தமிழ்நாட்டிலே, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம் வர்ணாச்சிரமமாகிய, விஷங்கலந்த இத்திட்டத்தை, தமிழர் உண்டு மாள்வ ரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரி சபை யின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்கா திருக்க வேண்டுமே எனக் கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற, மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மை போன்றே தமிழ் உலகும் கருதிற்று. தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு கொந் தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக் கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி, பிரதிதினம் இந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “தமிழ்மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளிலும் எழும்பின. தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்புச் சங்கங்களென்ன, இந்தி எதிர்ப்புச் சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ்நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும், மாஜி மந்திரிகளும், காங்கிரஸ் மீது காதல் கொண் டோரும், பிரபலஸ்தர்களும் வாலிபர்களும் பொது மக்களிடையே நிரந்தரமான தொடர்பைக் கொண்டுள்ள சு.ம. இயக்கத்தலைவரும், தோழர்களும் இத்திட்டத் தைக் கண்டித்துப் பலத்த பிரச்சாரத்தை இடைவிடாது தென்னாடு முழுவதும் நடத்தினார்கள். இக்கிளர்ச்சி யின் பயனாகவே பல பிரத்தியேக மாநாடுகள் நடை பெற்றன. கிளர்ச்சி, கண்டனம் ஆகியவற்றைக் கண்ட மந்திரி கனம் சுப்பராயனே கோவையில் செய்தியாளர் களிடம், “இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக மும்முரமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதிகார அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆச்சாரியார் இந்த பலத்த கிளர்ச்சிக்கு விடுத்த பதில் “தமிழர்கள் அறிவிலிகள் - குரங்குகள்” என்பதேயாகும்.

1937-1938 இராசாசி ஆட்சிக் காலத்தில் டாக்டர் சுப்பராயன் தான் கல்வி அமைச்சராக இருந்தார். “தமிழர்கள் தமது கிளர்ச்சியைக் கூடுமான வரை யில் நல்ல முறையிலே நடத்திக் காட்டினார்கள். தமிழர் கள் தமது அதிருப்தியையும் தெரிவித்துவிட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்களுக்குக் கவர்னர் தந்த பதில் “தூது “கோஷ்டியைப் பார்க்க முடியாது” என்பதுதான். தமிழர்களே! இதுதான் உங்கள் நிலைமை; தமிழர்களைப் பற்றி கவர்னர் கொண்டுள்ள எண் ணமும் தமிழர்களிடம் நடந்துகொள்ளும் போக்கும் இதுதான்; இனி தமிழர்களே என்ன செய்யப் போகி றீர்கள் என்று கேட்கிறோம்” (‘குடிஅரசு’ துணைத் தலையங்கம், 23.1.1938) (குறிப்பு : சென்னை மாகாண கவர்னர் இந்தி மொழிக்கு ஆதரவுதான். அவரைச் சந்தித்துப் பயன் இல்லை என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிலே பெரியார் கூறியிருந்தது உண்மையாகிவிட்டது.) பெரியார் 16.01.1938இல் நீடாமங்கலத்தில் ஆற்றிய சொற்பொழிவில் “இப்போது உள்ள மந்திரிகள் காலேஜ் களை ஒழிக்க வேண்டும்; உயர்தரப் பாடசாலைகளை மூடவேண்டும்; 60 பிள்ளைகளுக்குக் குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை எடுத்துவிட வேண்டும்; கட்டாய இலவசப் படிப்பு வேண்டியதில்லை; கல்வி மானியம் குறைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்...

இந்த லட்சணத்தில் இந்தித் திட்டம் எதற்காக? சுத்தத் தமிழ் - நல்ல அழகிய தமிழ் - பிறவித் தமிழ் - தினமும் பேசும் பாஷை நமக்கு சௌகரியமாக இருக்கும் போது, அதிலும் படித்த மக்கள் 100க்கு 8 பேரே தான் இருக்கிற நிலையில், இந்தி வந்தால் என்னவாகும்? ல, ழ, ள எழுத்து களுக்கு வித்தியாசமே நம்ம ஆட்களுக்கு இன்னமும் சரியாகத் தெரியவில்லை. பள்ளிக்குப் படிக்கவரும் நம் பிள்ளைகளைப் பார்த்து “உனக்குப் படிப்பு வராது வீட்டுக்குப்போய் வண்டியோட்டுகிறவன் மகனாயிருந் தால் வண்டியோட்டு; உழுகிறவன் மகனாயிருந்தால் உழு” என்றெல்லாம் சொல்லி விரட்டிவிட்டு, இப்போது மாத்திரம் இந்த இந்திக் கல்வியைக் கொண்டுவந்து அதையும் சேர்த்துக் கட்டாயமாகப் படிக்கும்படி சொன்னால் எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடியும்?

‘ஏழையைக் கெடுக்க ஒரு யானையைக் கொடு’ என்று சொல்லுவார்கள். அதுபோல் படிப்பில் மிக ஏழையாய் இருக்கும் நம் மக்களுக்கு யானை போன்ற இந்தி உயர்வாயிருந்தாலும், அது இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருமா? அவர்கள் வாயில் நுழையுமா? ஒரு எழுத்துக்கு 4 சப்தமிருக்கிற உச்சரிப்பு கடினம்; எழுத்துகள் அதிகம். 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் நம் பிள்ளைகள் இரண்டு அந்நிய பாஷைகளைப் படிக்க முடியுமா? அதில் போதுமான மதிப்பெண் வாங்க முடியுமா? இந்த இந்தி படித்து நன்றாய்த் தேர்ச்சி பெறுகிற அந்தக் காலத்திற்குள்ளே ஒருவன் பி.ஏ. பட்டதாரியாக வந்துவிடலாம்” (குடிஅரசு, 6.2.1938) என்று பேசினார். தந்தை பெரியாரின் தமிழர் நல நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். - தொடரும் keetru.com december 2013

15 02 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 14
வாலாசா வல்லவன்

முதல் ‘இந்தி’ எதிர்ப்புப் போர்

வரலாற்றில் ‘இந்தியா’ என்கிற நாடு என்றைக் கும் ஒரே நாடாக இருந்தது இல்லை. அரசர்கள் காலங்களில் பல்வேறு தனித்தனி நாடுகளாகவே இருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டியர்களும் பல்லவர்களும் ஆட்சி செய்து வந்தனர். இந்தியாவைப் பேரரசாக ஆண்ட ஒளரங்கசீப் ஆட்சியில்கூடத் தமிழகம் இணையவில்லை; தனித்தே இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ‘இந்தியா’ என்கிற ஒரு கட்டமைப்பை உருவாக்கி னார்கள். முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி சில பகுதி களையும், சிற்றரசர்கள் சிலப் பகுதிகளையும் ஆண்டு வந்தனர். முதல் சுதந்தரப்போர் என அழைக்கப்படும் இராணுவப் புரட்சிக்குப் பிறகு, 1857இல் பிரிட்டிஷ் அரசு தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா வைக் கொண்டு வந்தது. அப்போது ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸ் என்கிற கட்சி 1885இல் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கக் காலங்களில் அதன் மாநாட்டு நடவடிக்கைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. இந்தியாவுக்கு இந்திதான் பொதுமொழியாக வர வேண்டுமென திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரசார் அறிவித்தனர். அப்போது அந்த அமைப் பில் இருந்த சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தி பொது மொழியாக வரவேண்டியதின் அவசியம் பற்றி ‘இந்தியா’ ஏட்டில் எழுதினார்.

1919 முதல் இந்தியத் தேசிய காங்கிரசில் காந்தி யின் சகாப்தம் தொடங்கியது. அதுவரையில் தமிழகத்தில் இந்தி மொழிக்கான பள்ளி எதுவும் இல்லை. சமஸ்கிருதத்திற்கு வேதபாடசாலைகள் இருந்தன. காந்தி குசராத்தி மொழி பேசுபவர். அவருடைய ‘யங் இந்தியா‘ இதழின் தலையங்கங்கள், கட்டுரைகள் முதலானவற்றை குசராத்தி மொழியிலேதான் எழுதிக் கொடுத்தார். அவை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டன. இந்தியாவை ஒரே தேசிய இன மாகக் கட்டமைக்க விரும்பினார். அதனால் ‘நாம் இந்தியத் தேசிய இனம்’, ‘நாம் அனைவரும் இந்தியர்கள்’ என்ற உணர்வு வரவேண்டுமென்பதற்காக இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டும்; அது இந்தி மொழி யாகத்தான் இருக்கவேண்டும் என்று திட்டம் தீட்டினார். இஸ்லாமியர்களைத் திருப்திபடுத்துவதற்காக சமஸ்கிருதம் கலந்த இந்தியாக இல்லாமல் உருது கலந்த இந்தியான ‘இந்துஸ்தானி’ மொழியையே முன்னி லைப்படுத்தினார். 1919இல் சென்னையில் இந்திப் பிரச்சார சபை ஒன்றை உருவாக்கினார். சென்னையில் இந்தி பிரச் சார சபைக்குக் காந்தியாரால் பணம் வசூலிக்க முடிய வில்லை. எனவே வடஇந்தியாவில் குசராத்திகள், மார்வாடிகளிடம் பணத்தைத் திரட்டி வந்து 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒப்புதலைப் பெற்று ரூ.50,000த்தை இந்திப் பிரச்சார சபைக்கு அளித்தார்.

1918இல் கும்கோணத்தைச் சேர்ந்த 18 பார்ப்பன வழக்குரைஞர்களும் சில பார்ப்பனப் பட்டதாரிகளும் தாங்கள் இந்திப் பள்ளிக்கூடம் தொடங்கத் தயாரா யிருப்பதாகவும் இந்தி சொல்லிக்கொடுக்க ஆசிரியர் யாரும் இல்லையே என்றும் காந்திக்குக் கடிதம் எழுதினர். காந்தி தன் மகன் தேவதாஸ் காந்தியை இந்தியைச் சொல்லித்தரும் ஆசிரியராக அனுப்பி வைத்தார். (The Political Career of E.V. Ramasamy Naicker, Dr. E.Sa. Viswanathan, p.p.193)காந்தி ஒவ்வொருமுறையும் தமிழகத்திற்கு வரும் போது இந்தியின் தேவையை வலியுறுத்தி எல்லாக் கூட்டங்களிலும் பேசிவந்தார். ஆனால் இங்கு திராவிடர் இயக்கம் வளர்ந்து ஓங்கி இருந்த காரணத்தால் காந்தியின் பேச்சு எடுபடவில்லை. 1926 வரை இந்திப் பிரச்சாரசபைக்கு காந்தி வடஇந்தியாவில் இருந்தே நிதி திரட்டிக் கொடுத்தார். காங்கிரசுக் கட்சி தமிழகத்தில் இந்தி மொழிக்குச் செல்வாக்கு வளரத் தொடர்ந்து பாடுபட்டு வந்தது. நீதி கட்சி ஆட்சியில் இருந்த 1936 வரை காங்கிரசாரின் முயற்சி பலிக்கவில்லை. காந்தி இதோடு விடவில்லை. அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டு நடவடிக்கைகள் 1924 வரை ஆங்கிலத்திலேயே நடைபெற்று வந்ததை மாற்றினார். 1925இல் கான்பூரில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டில், காங்கிரசுக் கட்சியின் விதி 33இல் திருத்தம் செய்து, இனி காங்கிரசு மாநாட்டின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியிலோ (அ) மாகாண மொழிகளிலோதான் இருக்க nண்டும் என்று ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் பெரும்பாலும் இந்திமொழியிலேயே நடைபெற்று வந்தது.

இந்த நிலையில்தான், நீதிகட்சி தோல்வியுற்று 1937இல் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட இராசாசி, தமிழகத்தின் உயர்நிலைப் பள்ளிகளில் ‘இந்தி’ கட்டாயப் பாடமாக்கப்படும் என்று 10-8-1937இல் அறிவித்தார். 27-8-1937இல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில், கட்டாய இந்தியின் கொடுமையை விளக்க மாபெரும் கூட்டம் நடத்தப்பட்டது. நீதிகட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் தா.வே.உமாமகேசுவரம் பிள்ளைதான் இச்சங்கத்தின் நிறுவனர் ஆவார். 29.08.1937இல் திருவையாற்றுச் செந்தமிழ்க் கழகத்தின் சார்பில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது. அரசர் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். 5.09.1937இல் சென்னை சௌந்தர்ய மகாலில் ‘தமிழர் கூட்டத்தில்’ நாவலர் சோமசுந்தர பாரதியார் எம்.ஏ., பி.எல்.,-(இவர் மறைமலையடிகளின் ஆசிரியர் சூளை சோமசுந்தர நாயகரின் உறவினர் ஆவார்.) மிகச் சிறந்த வழக்குரைஞரான இவர் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ப தற்காக வழக்குரைஞர் தொழிலை விடுத்து, அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட் டத்தின் போது முதலமைச்சர் இராசாசிக்கு இந்தி கட்டாயப்பாடம்; தேவையா என்ற நீண்ட மடல் எழுதி விட்டு, பல்கலைத் தமிழ்த் துறைத்தலைவர் பதவி யையும் உதறிவிட்டு, இந்தி எதிர்ப்பு போரில் களம் புகுந்தார். இத்தனைக்கும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார் இவருடைய பூவாளூர் தலைமையில் தா.வே. உமாமகேசுவரம் பிள்ளை கே.எம்.பாலசுப்பிரமணியம், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினார்.

4.10.1937 அன்று சென்னை கோகலே மண்டபத்தில், மறைமலையடிகள் தலைமையில், சோமசுந்தர பாரதியார் இந்தி வேண்டாம் என்பதற்கான காரணங் களை விரிவாக விளக்கினார். 12.10.1937 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில ஏட்டின் ஆசிரியர், ‘Ravana The Great’, ‘History of Tamil Literature’, ‘Tamil India’ உள்ளிட்ட-தமிழனின் பெருமையைப் பாருக்குப் பறை சாற்றும்-27 ஆங்கில நூல்களை எழுதிய மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ‘கட்டாய இந்தி தொலைக’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகளை சுயமரியாதை இயக்கம் நடத்தியது.

7.11.1937இல், சேலம் மாவட்ட சுயமரியாதை மூன்றாவது மாநாடு தலைவர் தி.பொ. வேதாசலம் தலை மையில் நடைபெற்றது. இம்மாநாட்டை கி.ஆ.பெ. விசுவநாதம் தொடக்கி வைத்தார். இம்மாநாட்டில் கட்டாய இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8.11.1937 இராசிபுரம் வட்டார மூன்றாவது சுயமரியாதை மாநாடு எம்.என்.நஞ்சையா தலைமையில் நடை பெற்றது, இம்மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தினர் இந்தியை எதிர்த்து உரையாற்றினர்.

14.11.1937இல் வடஆர்க்காடு மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஆம்பூரில் நடைபெற்றது. கான் பகதூர் கலிபுல்லா தலைவர், என்.சிவராஜ், பி.ஏ., பி.எல்., கே.எம்.பாலசுப்பிரமணியம் சி.என்.அண்ணா துரை ஆகியோர் உரையாற்றினர். கட்டாய இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12.12.1937இல் நாமக்கல் வட்டார சுயமரியாதை இயக்க மாநாட்டுக்கு அண்ணாதுரை தலைமை ஏற்றார். கே.எம்.பாலசுப்பிரமணியம், கி.ஆ.பெ.விசுவநாதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பல மாவட்டங்களில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாவட்ட மாநாடுகளில் இந்தியை எதிர்த்து வீரமுழக்கம் செய்யப்பட்டது.

26.12.1937இல், இந்தியை எதிர்க்க தமிழகம் தழுவிய அளவிற்கு ஒரு குடை அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, கி.ஆ.பெ.விசுவநாதம் முயற்சி யால் ஒரு பெரிய மாநாடு கூட்டப்பட்டது. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 1917 முதல் நீதிகட்சியில் உறுப்பினராய் இருந்தவர், தந்தை பெரியார் 1926இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன் அதன்பால் ஈர்க்கப்பட்டவர். கி.ஆ.பெ. விசுவநாதம் 1938 முதல் 1942 வரை நீதிக்கட்சிக்குப் பொதுச் செயலாளராய் இருந்தவர். 1944 திராவிடர் கழகம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டுக்குப் பிறகு, பி.டி.இராசன் அவர்களுடன் பிரிந்து சென்றவர். 1948 தமிழர்கழகம் என்ற அமைப்பையும் ‘தமிழர் நாடு’ என்ற இதழையும் சில காலம் நடத்தி, சில ஆண்டுகளில் நிறுத்திவிட்டு, தமிழ், தமிழன் என்ற உணர்வோடு செயல்பட்டு வந்தார். தமிழ்த் தேசியவாதிகளில் பலரும் கி.ஆ.பெ. தனிநபர் போலவும், அவர் கூட்டிய திருச்சி மாநாட்டுக்குப் பெரியார் வேடிக்கைப் பார்ப்பதற்காகச் சென்றதாகவும் இதழ்களில் தவறான செய்திகளை எழுதுகின்றனர். இவர்களின் கூற்று பொய்யானது. கி.ஆ.பெ. திராவிட இயக்கத்திலிருந்து வெளியேறிய பின்புகூட, அவர் பெரியாரைக் கன்னடியர் என்ற பார்வையில் என்றுமே விமர்ச்சித்தது இல்லை.

இனி திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாட்டைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம்.

அன்று காலை திருச்சியில் மாபெரும் ஊர்வலம் நடந்தது. சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். 500 தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர், நான்கு யானைகள் ஊர்வலத்தில் முன்சென்றன. ‘தமிழ் வாழ்க, கட்டாய இந்தி ஒழிக’ தமிழர்கள் வாழ்க, என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. மாநாட்டில் புலவர் கா.சுப்பிரமணியப்பிள்ளை சிறப்புரையாற்றினார். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை வரவேற்புரையாற்றினார். நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையுரையாற்றினார். பெரியார் சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் காலிகள் இந்த மாநாட்டைக் களைக்க கல்லெறிந்து கலகங்களை விளைவித்தனர். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

* இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அதனால் தமிழ்க் கலை அழிந்துவிடுமென்று கருதுகிறது.

* தமிழ் மாகாணம் ஒன்று தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்.

* தமிழ் வளர்ச்சிக்காகத் தனியாக ஒரு தனிப் பல் கலைக்கழகம் ஏற்படுத்தவேண்டும் என்று அரசின ரைக் கேட்டுக் கொள்கிறது.

* இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதால் தமிழர்க்கு ஏற்படும் தொல்லைகளைக் கவர்னரிடம் நேரில் எடுத்துரைக்க எஸ்.எஸ்.பாரதியார், பெரியார், உமாமகேசுவரனார் தலைமையில் குழு அமைக் கப்பட்டது.

கவர்னர் மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானத் தைப் பெரியார் கொண்டு வந்தார். தலைவர் சோம சுந்தர பாரதியார் இதை ஏற்றுக் கொள்ளாததால், பெரியார் தன் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். (“தமிழன் தொடுத்த போர்”- மா. இளஞ்செழியன், பக்.73-75) (தொடரும்) keetru.com nov 2013

08 02 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 13

வாலாசா வல்லவன்

சென்னையில் 1933ஆம் ஆண்டு கே.வி. கிருஷ்ண சாமி அய்யர் என்பவர் தமிழன்பர் மாநாடு ஒன்றை நடத்த முயன்றபோது சுயமரியாதை இயக்கம் தலை யிட்டு அம்மாநாட்டை உண்மையான தமிழ் வளர்ச்சிக் குரிய மாநாடாக அமைவதற்கான முன் முயற்சிகளை எடுத்தது. மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாட்டிற்கு 15 நாட் களுக்கு முன்பே சுயமரியாதை இயக்கத்தின் தீர்மா னங்களை அச்சிட்டு, மாநாட்டின் தலைவர் கே.வி. கிருஷ்ணசாமி அய்யருக்கு அனுப்பி வைத்தது. அதன் விவரம் வருமாறு :

அன்புள்ள ஐயா!

இம்மாதம் 23, 24ம் தேதிகளில் நடக்கும் தமிழன்பர் மகாநாட்டில் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பப் பட்டிருக்கும் கீழ்க்கண்ட தீர்மானங்களை மகாநாட்டில் வைக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானங்கள் :

1. பொதுப் பள்ளிக்கூடங்களின் பாடப் புத்தகங்கள் அனைத்தும் அரசாங்கத்தாராலேயே பிரசுரிக்கப் பட வேண்டுமேயொழிய அவைகள் தனிப்பட்ட நபர்களுக்கோ, சங்கங்களுக்கோ; சிறிதும் சம்பந் தம் இருக்கக் கூடாதென்று இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

2. தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள் பொது ஜனங் களிடையே பரவ வேண்டுமானால் அவ்விலக் கியங்கள் ஜாதி மதப் பாகுபாடுகளைக் குறிக்கும் விஷயங்கள்; ஒரு சிறிதும் சம்மந்தப்படாதவை களாக இருக்க வேண்டுமாகையால் அவ்விதப் பாகுபாடுகளையும் ஜாதிமத சம்பந்தமான விஷயங் களையும் கொண்ட புத்தகங்களைப் பொதுப் பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களாக வைக்கக் கூடாதென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

3. பொதுப் பள்ளிக்கூடங்களில் தமிழ்மொழியும் இலக்கியங்களும் வளம்பெறுவதற்குக் கல்வியறி விற்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் தமிழ்மொழியிலேயே கற்றுக்கொடுக்க வேண்டு மென்றும், சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பிற மொழிகளைப் பொதுப் பள்ளிக்கூடங்களில் கற்பிப் பதினால் மாணவர்களுடைய கவனங்கள் சித றுண்டு போய்விடுமாதலால், அவைகளைப் பொதுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக் கக் கூடாதென்றும் இம்மகா நாடு தீர்மானிக்கிறது.

4. அறிவைப் பரப்புவதற்கும் இலக்கியங்களைக் கற்பிப்ப தற்கும் ஏற்படுத்தப்படுகிற கல்வி சம்பந்தமான புத்த கங்களில் பகுத்தறிவுக்கும் தன் நம்பிக்கைக்கும் முர ணான கடவுள் வாழ்த்து, கடவுள் வணக்கம் முதலிய விஷயங்கள் அடி யோடு குறிப்பிடாமல் இருக்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானக்கிறது.

5. தமிழ் நெடுங்கணக்கில் 216 எழுத்துக்கள் இருப்ப தால் புதிதாகத் தமிழ் படிப்பவர்களுக்கும், அச்சு வேலை, டைப்ரைட்டிங் வேலை முதலியவை களுக்கும் சௌகரியம் ஏற்படும்படி, அவசியமற்ற பல எழுத்துகளையும், குறிகளையும் நீக்க வேண்டு மென்றும், புதிய சப்தங்களுக்காக சில புதிய எழுத் துக்களைச் சேர்க்க வேண்டுமென்றும் இம்மகா நாடு தீர்மானிக்கிறது.

6. அரசாங்கப் பொதுக் கல்லூரிகளில், தென்னிந்திய பாஷையல்லாததும், பேச்சு வழக்குக்குப் பயன் படாததுமான சமஸ்கிருத பாஷைக்குத் தனிப்பிரதா னத்துவம் கொடுத்திருப்பதோடு, பொது மக்களாகிய தமிழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து சமஸ்கிருத பாஷை புரொபசருக்கென்று தமிழ் பாஷைப் பண்டிதர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிட 4, 5 மடங்கு அதிகமான சம்பளம் கொடுப்பதையும், பதினாயிரக்கணக்கான ரூபாய்களை சமஸ்கிருத பாஷைக்கென்று உதவித் தொகையாகக் கொடுப் பதையும் நிறுத்தி, அவற்றை முறையே தமிழ் மொழிக்கும், தமிழ் மொழி மூலம் அறிவு வளர்ச்சி உண்டாக்குவதற்கும் பயன்படுத்த வேண்டுமென்று இம்மகாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது.

7. தமிழ் அல்லாத பிறமொழிப் பயிற்சியுடையவர்கள் அரசாங்கத்திற்குத் தேவையிருக்குமானால் அதற் காகத் தெரிந்தெடுக்கப்படும். மக்களை அளவு படுத்த வேண்டுமென்றும் அந்த அளவை வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறைப்படி தெரிந்தெடுக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது. தங்கள் அன்புள்ள,

தங்கள் அன்புள்ள,

கே.எம். பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல்., ஆர். நடேசன், எஸ். குருசாமி அ. பொன்னம்பலனார், அ. இராகவன் -

(புரட்சி ஏடு, 1933, டிசம்பர் 10)

18.3.1939இல் காஞ்சிபுரத்தில் பனகல் வாசக சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பெரியார் “நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும் தன்மான உணர்ச் சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிசமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந் திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமா னால், பரப்ப வேண்டுமானால், மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும் வெறும் அரசியலும் மதமுமாகத்தான் இருக்கிறதே தவிர, பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை (குடிஅரசு 6-3-1933).

பெரியாருடைய கருத்து என்னவென்பதை சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் முதல் அவ்வப்போது சுட்டிக்காட் டியே வந்துள்ளார். தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும்; தமிழர்களை அறிவாளிகளாக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசையாகும். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களையும் தமிழ்ப் பேராசிரியர் கா. நவச்சிவாய முதலியார் அவர்களை யும் மேடையில் வைத்துக் கொண்டு, பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று தமிழ்த் திருநாள் கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சிலிருந்து அவர் கொள்கைகளை அறிந்து கொள்ள முடியும்.

தமிழுக்கு வாழ்த்துக்கூற தலைவரும், எனது நண்பருமான தோழர் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் அவர்களும், தமிழ்ச்சங்க அமைச்சர் தோழர் கா. நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர்கள் போன்ற பெரியார்களே உண்மையில் தகுதி உள்ள வர்கள். தலைவர் கல்யாணசுந்தர முதலியார் அவர்களின் தமிழ்த் தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டு மானால் நானேயாவேன். நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக்கொலை புரியும் மாதிரியானா லும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாண சுந்தர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் தேச பக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளைக் கைப்பற்றிற்று என்று சொல்லுவேன். அரசியல் தலைவர்களையும் தமிழ் அடிமை கொண்டதற்குக் காரணமும் அவர்களது பத்திரிக்கைகளேயாகும்.

அப்பத்திரிகைகள் என்னைவிட மோசமானவர் களையும், தமிழ் பாஷையில் அரசியலை உணரவும், தமிழ்பேசவும் செய்துவிட்டதால், தமிழ் பாஷையைக் காதில் கேட்டால் தோஷம் எனக்கருதும் ஜாதியாரும் தமிழில் கலந்து கொள்ளவும், தமிழை வேஷத்துக் காவது மதிக்கவும் செய்துவிட்டது. பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும் தமிழுக்கு மிகப்பெரியதொன்றும், தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும். பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லாதிருக்குமானால் இன்று தமிழ்ப்பாடப் புத்தகங் கள் பெரிதும் ஆரியமத உபாக்கியானங்களாகவும், ஆரியமும் தமிழும் விபசாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகள் போலவும் காணப்படும். ஆதலால் தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற, அப் பெரியார்களும் அவர் கள் போன்றார்களுமே தக்கார் என்று உரைத்தேன்.

தோழர்களே! எனக்கிட்ட கட்டளையில் ஏதேனும் ஒரு சிறு பாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமா னால் தமிழைப்பற்றிய எனது உள்ளக் கிடக்கையை உண்மையாய் எடுத்துரைத்தாக வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்வது பற்றி நீங்கள் தவறாகக் கரு தாமல் என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்குச் சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்று மற்ற தைத் தள்ளி விடுங்கள். அதற்கு ஆக என் மீது கோப முறாதீர்கள்.

தமிழும் மதமும்

முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளிவைக்க வேண்டும். மதசம்மந்தமற்ற ஒருவனுக்குத் தமிழில் இலக் கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப்பட்டே இருக்கிறது.

மதமும் இலக்கணமும்

உதாரணமாக ``மக்கள் தேவர் நரகர் உயர்திணை'' என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சி தானே இது? இப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமா யணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய் மொழி போன்ற மதத் தத்துவங்களையும், ஆரிய மதத் தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மான மற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லா மல் வேறு இலக்கியங்கள் மிகுந்து காணப்படுகின் றனவா? இன்றைய பண்டிதர்களுக்கு உலக ஞானத் தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக் கின்றன?

மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிற தாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக் கிறது! சுயமரியாதை விரும்புகிறவன் எப்படிக் கம்ப ராமாயண இலக்கியத்தைப் படிப்பான். இன்று கம்ப ராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பர விற்றா, இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் பாஷை உயராது

தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதி யிடம் பேசிய பாஷை என்றோ சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பைப் பெண் ணாக்கினதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும். பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால் பார்ப் பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லு வானா? என்று யோசித்துப் பாருங்கள்.

இந்திப் புரட்டு

இன்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனார்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அர சாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தி மயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்கு மென்கிறார்கள். தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதிகளின் கூச்ச லுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

செத்த பாம்பு

பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப்பணம் சமஸ்கிருதத்தின பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின் வரிப் பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ், தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக் கும் கேபினெட் மெம்பர்கள் ஐகோர்ட் ஜட்ஜிகள் முதல் எல்லாப் பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழபிமானம் தேசத்துரோகம்

தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந் தாலே அவன் தேசத் துரோகி, வகுப்புவாதி, பிராமணத் துவேஷி என்றெல்லாம் ஆகிவிடுகிறான். ஆதலால் மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.

எங்கும் திருநாள்

எப்படி ஆனாலும் தமிழ்ப் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க. அவர்களும், அமைச்சர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும் உண்டாக்கும் திரு நாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண் டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரி யாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களைப் பரப்பவேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும், ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையை யும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன்.

கடைசியாகத் தோழர்களே தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன அதென்ன வென்றால் என்னை இங்கு உள்ளே விட உங்களுக்குத் தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போது மான ஆதாரமாகும். அன்றியும் இந்தப்பெருமை என்னையும் ஒருபடி உயர்த்திவிட்டது. என்னவென்றால் தமிழ்ப் பண்டிதர் கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியான பெருமை ஏற்பட்டுவிட்டதல்லவா? நான் எவ்வளவு தமிழ் அறியாத வனாய் இருந்தாலும், தமிழில் எனக்கு உள்ள ஆசை உங்கள் யாரையும்விடக் குறைந்ததல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு, அந்த ஆசையின் மயக்கத்தால் நான் பேசியவற்றுள் ஏதும் குற்றம் குறைகள் இருப் பின் அவற்றை மன்னித்துக் களைந்துவிட்டு, சரி என்று பட்டவையை மாத்திரம் ஏற்று அதற்காவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன். (குடிஅரசு - சொற்பொழிவு - 26.01.1936)

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தமிழை வெறுக்கவில்லை. தமிழ் மொழியில் உள்ள ஆரியச் சார்பான இலக்கியங்களையே வெறுத்தனர். தமிழர் சமூக வளர்ச்சிக்கு அவை பெரிய தடைகற்களாய் இருப்பதை உணர்ந்து அவற்றை எதிர்த்தனர். மற்ற படி தமிழ்மொழியின் மீது வெறுப்பு எதுவும் சுயமரி யாதை இயக்கத்தினருக்கு இல்லை என்பது இவற்றால் புலனாகும். (தொடரும்)

keetru.com october 2013

31 01 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 11
வாலாசா வல்லவன்

சென்ற இதழில் உ.வே.சா. இந்தி ஆதரவாளர் என்பதை எழுதியிருந்தேன். உ.வே.சாவைப் பார்ப் பனர்கள் எப்படியெல்லாம் விளம்பரப்படுத்தி பெரிய மனிதராக்குகிறார்கள்; பார்ப்பனரல்லாத தமிழறிஞர் களை எவ்வாறு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்ப தைப் பற்றி உ.வே.சா. எண்பத்தோராம் பிறந்தநாள் விழா நடைபெற்ற காலக்கட்டத்தில், 1935இல், குடி அரசு இதழ் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தினை மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருக்கிறது.

“இன்று தமிழ்ப்பாஷை விஷயத்தில் உழைப் பவர்களும், அதில் தேர்ந்த விற்பன்னர்களும் பார்ப் பனரல்லாத மக்களிலேயே ஏராளமாக நிரம்பி இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாததல்ல. தோழர் களான சுவாமி வேதாச்சலம் (மறைமலையடிகள்), எஸ்.சோமசுந்தர பாரதியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கா.நமச்சிவாய முதலியார் போன்ற எவ்வளவோ சிறந்த புலவர்கள் இருந்தும், அவர்களை யெல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் மனதினால் நினைப் பது கூடப் பாவமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோழர்கள் உ.வே.சாமிநாதய்யர், ராகவையங்கார், ராமாநுஜாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களுக்கே தமிழ்ப் பாஷையின் பெயரினால் பெரிய விளம்பரமும் அவர்களால் தான் தமிழ்ப் பாஷையே நிலைத்திருக்கிறது என்ற பிரச்சாரமும் செய்துவருகிறார்கள்.

இந்த வாரத்தில் சென்னையில் மகாமகோத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் எண்பத் தோராம் வருஷம் பிறந்த நாள் கொண்டாட்டம் சம்பந்த மாகப் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாகச் செய்த விளம்பரத் தையும், பிரசாரத்தையும் முயற்சியையும் கவனித் தால், இதன் உண்மையைக் கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் மானமிருந்தால் தெரிந்துகொள் வார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள், அவருக்கு முன்னிருந்தத சில புலவர்களாலும், சென்னைச் சர்வ கலா சங்கத்தாராலும், சில புத்தகங்களின் மூலப் பாடங்களும், சில புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் உரைகளும் வெளியிடப்பட்டிருந்த சங்க இலக்கியங்களையும், முழுப்பாகமும் வெளியிடப்படாமலிருந்த சில புத்தகங்களையும், பெரும்பாலும் பார்ப்பனரல்லா தாரின் துணைக்கொண்டு தேடிப்பிடித்து இராமநாதபுரம் அரசர், திருவாடுதுறை மடத்தார் போன்றவர்களின் உதவிபெற்று அவைகளை அச்சிட்டு வெளியிட்டு, அதன்மூலம் பிரயாசைப்பட்டதற்கு ஏற்ற பொருள் லாபமும் பெற்றிருந்தாலுங்கூட, விடாமுயற்சியுடன் தமிழ்ப் புத்த கங்களை, அதிலும் பழைய சங்க இலக்கியங்கள் என்பன பலவற்றை ஒழுங்கான முறையில் சீர்திருத்தி வெளியிட்டமைக்காகத் தமிழாபி மானிகள் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பதை நாமும் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்.

ஆனால் நேற்று, தோழர் இராஜகோபாலாச்சாரியார் போன்ற அரசியல் பார்ப்பனர் முதல் தமிழ் என்னும் வார்த்தையை உச்சரித்தாலே “சூத்திர பாஷை”யைச் சொன்ன பாவம் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டி ருக்கிற உஞ்சவிருத்திக்கார வைதிகப் பார்ப்பனர் வரை எல்லோரும் டாக்டர் அய்யர் அவர்களைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து, மகாமகோபாத்தியாயர், தாக்ஷ ணாத்க்ய கலாநிதி, டாக்டர் என ஏற்கனவே அவருக்கு கிடைத்திருக்கும் பட்டங்களைப் பாராட்டியதோடு, “தமிழ் வியாசர்” என்னும் புதிய பட்டத்தையும் சூட்டுவதாகப் பத்திரிகைகளில் விளம்பரம் பண்ணினார்கள். இவரு டைய புகழ்ச்சிக் கொண்டாட்டத்தை முன்னிட்டுப் பத்திரிகைகளில் அநுபந்தங்களும், புகழ் மாலைகளும் வெளியிட்டார்கள். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிக்கைகளும், பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரியும் தேசியக் கூச்சல் போடும் பத்திரிகைகளும் நாலைந்து தினங்கள் சர்வம் சாமிநாதய்யர்மயமாகவே விளங்கும் படிச்செய்தார்கள். இவ்வாறு செய்தமைக்காக நாம் பொறாமையோ, துவேஷமோ, வயிற்றெரிச்சலோ ஒரு சிறிதும் அடையவில்லை. பார்ப்பனர்களால் “சூத்திர பாஷை” என்று அலட்சியம் செய்யப்படுகின்ற தமிழ்ப் பாஷையின் மூலம் ஒரு பிராமணர் கௌரவிக்கப்பட்ட தற்காகச் சந்தோஷமே அடைகிறோம். பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக்கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பனரல்லாதார் நன் றாகத் தெரிந்துகொள்ளும்படி வெளிப்படுத்த விரும் பியே இவ்விஷயங்களை எழுத முன்வந்தோம்.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்ப் பாஷையின் மேலும் தமிழ் அபிவிருத்தியிலும் ஆசை யுடையவர்களானால், இந்த டாக்டர் அய்யர் அவர் களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற் குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜியில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்துகொள்ளும்படிச் செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை. அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்பாருக்கு உதவியளிப்பாரும், இல்லாதிருந்த காலத் தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும் படிச் செய்து, அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித் துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதிலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங் களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா? தற்போது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்துப் பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணி வரும் தோழர் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும் கூட, பாதகஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறதுண்டா? உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ்மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகிறவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அல்லாது யாராகிலும் பார்ப்பனர்களுக்கே பெருமை யும், விளம்பரமும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பதை மேலே எடுத்துக் காட்டியதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.”

“சில வருஷங்களாக அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற்று வருவத னாலும், பார்ப்பனருக்கு முன்போல அப்பதவிகளில் ஏகபோக உரிமை பெறுவதற்கு இடமில்லாமற் போனதனாலும் உத்தியோகப் பார்ப்பனர், அரசியல் பார்ப்பனர், வைதிகப் பார்ப்பனர், சீர்திருத்தக்காரப் பார்ப்பனர், உஞ்சவிருத்தி பார்ப்பனர், பத்திரிகைப் பார்ப்பனர் ஆகிய எல்லாப் பார்ப்பனர்களும் இப் பொழுது ஒன்றுசேர்ந்து பார்ப்பனரல்லாதாரை ஒரு துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்காகவே அவர்கள் காங்கிர° போர்வை, தேசியப் போர்வை, தீண்டாமை விலக்குப் போர்வை, கிராமப் பிரச்சாரப் போர்வை, சங்கீதப் போர்வை, இந்தி பிரச்சாரப் போர்வை, தமிழ்ப்பாஷைப் போர்வை முதலிய பலவகையான போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சூழ்ச்சிப் பிரச்சாரம் பண்ணப் புறப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாதார் சமூகமானது மானத்தோடும் சுதந்தரத்தோடும், சுய மரியாதையோடும் வாழவேண்டுமென்று கருதுகின்ற சுத்த ரத்தமும் பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல் லாதார் ஒவ்வொருவரும் இந்தப் பார்ப்பனர்களுடைய சூழ்ச்சிக்குக் கொஞ்சமும் ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்” (குடிஅரசுத் தலையங்கம் 10.3.1935).

பார்ப்பனரல்லாத தமிழ்ப் புலவர்களுக்குப் பாது காப்பு அரணாக விளங்க அவர்களைத் தூக்கி நிறுத்தி மக்களிடம் அவர்களுக்குச் செல்வாக்கு ஏற்படச் செய்தது திராவிடர் இயக்கம் தான். சென்னையில் 1933இல் தமிழ் அன்பர் மகாநாடு என்ற பெயரில் சில பார்ப்பனர்கள் மாநாடு நடத்த முயன்றபோது, சுயமரியாதை இயக்க ஏடான குடிஅரசு இதழ் அந்த மாநாட்டின் சூழ்ச்சியை விளக்கி எழுதியது.

“இம்மகாநாட்டின் சூழ்ச்சிகளிலெல்லாம் முதன் மையான சூழ்ச்சி என்னவென்றால், பார்ப்பனர்கள் தமிழர்கள் என்னும் தலைப்புக்கள் புகுந்துகொண்டு மக்களுக்குள் இருந்துவரும் பார்ப்பனர்-பார்ப்பன ரல்லாதார் என்கின்ற உணர்ச்சியை நசுக்கி, பழையபடி பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரமே இந்நாட்டில் இருக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதும் அதற்காக, சில பார்ப்பனரல்லாத செல்வான்களையும், எதையும் விற்றுத் தங்கள் சுயநலத்தையே நாடும் சில பார்ப்ப னரல்லாத மக்களையும் சேர்த்துக்கொண்டு பார்ப்பன ரல்லாத சமூகம் முழுவதையுமே ஏமாற்றிவிடலாம் என்பதேயாகும்.

நமது நாட்டில் தமிழ் கற்றறிந்த பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையானவர்களுக்கு பகுத்தறி வில்லை என்று நாம் சொல்லுவதற்குத் தமிழ்ப் பண்டி தர்கள் மன்னிக்க வேண்டுமென்று கோருகிறோம். ஏனெனில் தமிழ்பாஷையைக் கற்று பண்டிதர்களா னவர்கள் 100க்கு 99 பேர்கள் மதவாதிகளாகவும், மதத்துக்காகத் தமிழைக் கற்றவர்களாகவும், தமிழில் மதத்தைக் காண்கிறவர்களாகவும் இருந்து வருவ துடன் தங்கள் புத்தியை மதத்துக்குப் பறிகொடுத்து மதக் கண்ணால் தமிழைப் பார்க்கின்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அறிவுக்கு மரியாதை கொடுத்த பண்டிதர் ஒருவரையாவது காண்பது கஷ்ட மாகவே இருக்கின்றது. உதாரணமாக மதத்தையும் மத மேற்கோள்களையும் தள்ளிவைத்துவிட்டு, ஒரு பதினைந்து நிமிஷம் பேசுங்கள் பார்ப்போம் என்றால், பேசக் கூடிய தமிழ்ப் பண்டிதர்கள் எத்தனைப் பேர் நம் நாட்டில் கிடைப் பார்கள் என்று பார்த்தால் உண்மை விளங்கிவிடும். மதத்தை நீக்கிய - மத சம்பந்தப்படாத தமிழ்ப் புத்தகம் இலக்கிய வடிவத்திலோ, இலக்கண வடிவத்திலோ, சரித்திர வடிவத்திலோ, விஞ்ஞான ஆராய்ச்சி வடிவத் திலோ காண்பதென்பது “குதிரைக்கொம்பாக” இருக் கிறது. இப்படிப்பட்ட நூல்களைப் படித்த பண்டிதர்கள் பரிசுத்த பகுத்தறிவுவாதிகளாக இருப்பார்கள் என்று எப்படி எண்ண முடியும்? பகுத்தறிவுக்காரருக்குப் பயந்த சில பண்டிதர்கள் தங்கள் வாய் சமார்த்தியத் தால் மத சம்பந்தமான சில கோட்பாடுகளையும் ஈரருத்தம் உள்ள சில வாக்கியங்களையும் விஞ்ஞான முறைக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்த முயற்சிக்கிறார் கள் என்றாலும், விஞ்ஞானத்துக்கு மாறுபட்டதையும் பகுத்தறிவுக்கு மாறுபட்டதையும் தள்ளி வைக்கச் சம்மதிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு நம்மை வையத்தான் அல்லது நம் மீது குறைகூறத்தான் தெரியுமே ஒழியத் தங்கள் நிலைக்கு வெட்கப்படவோ, வருந்தவோ சிறிதும் தெரியவே தெரியாது.

இந்த நிலையில் தமிழ்க்கல்வி அமைந்துவிட்டதால், இந்தப் படிப்பு படித்த தமிழ்ப் பண்டிதர்களைப் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டப்படிக்கு ஆட்டிவைத்துத் தங்கள் காரியங் களைச் சாதித்து கொள்ளத் துணிவதில் அதிசய மொன்றுமில்லை. இந்த நிலையுள்ள தமிழ்ப் பண்டி தர்கள் “மயிலைக் கண்ட பச்சோந்தியானது தானா கவே வந்து கண்ணைக் கொத்திக் கொள்ள வசதி கொடுக்கும்” என்று சொல்லும் வாசகம் போல், தமிழ்ப் பண்டிதர்கள் தாங்களாகவே பார்ப்பனர்களுக்கு அடிமையென்று ஒப்புக்கொள்ளுவதில் அதிசயமில்லை. தமிழ்த்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் அட்டூ ழியங்களை இதுவரை எந்தப் பார்ப்பனரல்லாத பண்டிதர்களாவது எடுத்துச்சொன்னதே கிடையாது. இங்கிலீஷ் பாஷையில் பார்ப்பனர்களுக்கே எல்லா ஆதிக்கமும் இருந்துவருகிறது. உபாத்தியாயர்கள் பார்ப் பனர்கள்; புத்தகம் எழுதுகிறவர்கள் பார்ப்பனர்கள்; இலாக்கா அதிகாரிகள் பார்ப்பனர்கள்; பரிக்ஷகர்கள் பார்ப்பனர்கள். சமஸ்கிருத பாஷையிலோ இதைவிட அதிகமான ஆதிக்கம். புதியதாக வந்து நுழைந்த ஒரு அனாமதேய இந்தி பாஷையிலோ இன்னும் அதிக மான ஆதிக்கம். தமிழ்ப்பாஷையில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துடன் பார்ப்பனரல்லாதவர்கள் ஆதிக்கமும் சிறிது உண்டு என்று சொல்லக்கூடுமானால், அந்தச் சிறிதும் பார்ப்பனர்களின் அடிமைகளான பார்ப்பன ரல்லாதார்களாய்த்தான் இருக்க முடியுமே ஒழிய, மற்றபடி சுதந்தரப் பார்ப்பனரல்லாதாரைச் சுலபத்தில் காணமுடியாது. இந்தப் படியான கல்வியின் ஆதிக்கம், பாஷையின் ஆதிக்கம், இலாக்காவின் ஆதிக்கம், அவர்கள் இருந்துவருகின்றதை இன்னும் அதிகமாய்ப் பலப்படுத்திக்கொள்ளவே இந்த சூழ்ச்சி மாநாடு கூட்டப் படுகின்றது என்பதே நம்முடைய அபிப்பிராயமாகும்.

பார்ப்பனரல்லாத தமிழ்ப் பண்டிதர்களையும் தமிழில் ஞானமோ, தமிழ் மக்களிடத்தில் அன்போ, தமிழ்ப் பாஷைக்கும் தமிழ் மக்களுக்கும் உலகில் சுயமரியாதை இருக்கவேண்டும் என்ற கருத்தோ கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் இம்மாநாடு சம்பந் தத்தில் இருந்து கண்டிப்பாய் விலகிக் கொண்டு இதன் சூழ்ச்சியைத் தைரியமாய் வெளியாக்க வேண்டு மென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்தப் பண்டிதர்கள் சுமார் 40, 50 வருஷங் களுக்கு முன்னால் இருந்தே பார்ப்பனர்களை விட்டு விலகி இருப்பார்களேயானால், இன்றைய தமிழின் நிலைமையும், தமிழ்ப் பண்டிதர்களின் நிலைமையும் வேறாக இருந்திருக்கும். இன்று அப்படியில்லாமல் பண்டார சன்னதிகள் என்பவர்களிடம் கூடப் பார்ப் பனத் தமிழ்ப் பண்டிதர்களுக்கே மதிப்பு இருக்கிறது. தமிழ்ச்சங்கம் என்பதில் கூடப் பார்ப்பனர்களுக்கே ஆதிக்கம் இருந்து வருகின்றது. அது மாத்திரமில் லாமல் பார்ப்பனரல்லாத தமிழ் கற்ற வித்துவான்கள் என்பவர்களைப் பார்ப்பன வித்துவான்கள் அழுத்தி வைக்கவே பார்க்கிறார்கள். சமீப காலத்தில் தமிழில் மிக மேன்மையாய்த் தேறிய ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு அதாவது சென்னை டி.பி. மீனாட்சிசுந்தரம், எம்.ஏ., பி.எல். இவர் கல்வி விஷயத்தில் மிக்கத் தேர்ச்சியுடையவர். பல விஷயங் களில் பண்டிதர் தமிழை ஒரு சந்தோஷத்திற்காகப் படித்து இம்மாகாண மாணவர்களில் உயர்தர வகுப் பில் தேறியவர். தமிழில் உயர்தர வகுப்பில் தேறிய வருக்குப் பரிசளிக்கவென்று திருவாவடுதுறை பண்டார சன்னதியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 1,000 ரூபா பரிசை, பரிசு முறைப்படிக்கு அடையத் தகுதி உடையவர். இப்படிப்பட்ட இவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்ப தால் இவ்வருஷப் பரிசு இவருக்கு வழங்கப்படாமல் போயிற்று. இந்தப் பெருமை தோழர் மகா மகோபாத்தி யாயர் வே. சுவாமிநாதய்யர் அவர்களுக்கே சேர்ந் தது. பார்ப்பனரல்லாதார் செய்யும் தற்காப்புக் காரியங் கள் பார்ப்பன துவேஷமாய்ப் போய்விடுகிறது. பார்ப் பனர் செய்யும் சகல விதக் கொடுமைகளும் அவர் களைப் பட்டதாரிகளாகவும் பதவிதாரர்களாகவும் ஆக்கி விடுகிறது.

இம்மாநாட்டுக்குப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயப் படாத “தமிழன்பர்கள்” யாராவது போவார்களானால் “புத்தகங்கள் பிரசுரிப்பதில் அறிவுக்கல்வி வேறு, மதக்கல்வி வேறு” என்று பிரித்துத் தனித்தனியாய் புத்தகம் எழுதப்பட வேண்டும் என்றும், அப்புதத்தகம் எழுதும் இலாக்கா அரசாங்கத்திற்கே உட்பட்டிருக்க வேண்டுமே ஒழிய தனிப்பட்ட நபர்களுக்கோ சங்கங் களுக்கோ சற்றும் சம்பந்தம் இருக்கக் கூடாது” என்றும் ஒரு தீர்மானம் செய்ய முயற்சிக்க வேண்டும். சர்க்கார் கொடுக்கும் படிப்பு என்பது அறிவுக்காகவே ஒழிய, மதத்துக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விஞ்ஞானத்திலும் பகுத்தறிவிலும் யார் மேன்மையுற்றிருக்கிறார்களோ அவர்கள்தான் அறிவுக் கல்வி புத்தகங்கள் எழுதத் தகுதியுடையவர்கள் என்றும் தீர்மானிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மகாநாட்டின் யோக்கியதை தானகவே வெளிப்பட்டுவிடும் (குடிஅரசு-தலையங்கம் 19.11.1933).

தமிழின் பெயரைச் சொல்லி மதத்தையும், பார்ப் பனிய ஆதிக்கத்தையும் வளர்க்கக் கூடாது என்பதே சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாகும்.1932 ஆகசுட்டு 6, 7 தேதிகளில் துறையூரில் நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாடு, தமிழ் மாணவர் மாநாடு, தமிழர் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த வர்கள் பெரும்திரளாகக் கலந்துகொண்டு, அதை சைவ மாநாடாக மாறிவிடாமல் தடுத்து நிறுத்தி, உண்மை யான தமிழ் வளர்ச்சி மாநாடாக மாற்றினார்கள் என்பது தான் வரலாறு. அம்மாநாடு முடிந்தவுடன் அம்மாநாட் டைப் பற்றிக் குடிஅரசு ஏட்டில் தலையங்கம் எழுதப்பட்டது.

“இச்சமயத்தில், தமிழ்ப் பண்டிதர்களுக்கும், தமிழ் அபிமானிகளுக்கும் சில வார்த்தைகள் கூற விரும்பு கிறோம். சுயமரியாதைத் தோழர்கள் தமிழ்மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டி தர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்ட வர்கள் அல்லர் என்று தெரிவிக்கின்றோம். இதற்கு, சுயமரியாதைத் தோழர்கள் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் “ஹிந்தி” மொழியைக் கண்டிப்பதாக மகாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். “ஹிந்தி” கண்டனத் தீர்மானத் தைச் சிலர் எதிர்த்தபொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரி யான பதில் இறுத்தி “ஹிந்தி” கூடாது என்பதைப் பெரிய “மெஜாரிட்டி”யாரை ஒப்புக்கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களேயாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை.

ஆனால் மற்ற பண்டிதர்களில் பலர் விரும்புவது போல, புராணங்களை எழுதுவதும், அவைகளைப் பற்றிப் பேசுவதும் தேவார, திருவாசகங்களைப் பாடு வதும்தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை. மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம் மக்களுடைய அறிவையும், தமிழ்மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று கருதியிருப்பவர்கள் என்று கூறுகிறோம். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச் சிக்கான வழியுமாகும். ஆகையினால் இனியேனும் “மதம்” என்றும் “சமய உணர்ச்சி” என்றும் “தெய்விகப் பாடல்கள்” என்றும் சொல்லுகின்ற பல்லவிகளை விட்டுவிட்டு உண்மையான தமிழ் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டுகிறோம். இவ்வகைக்கு, சுயமரி யாதைத் தோழர்களும் மற்றவர்களும் துணை நிற் பார்கள் என்பதில் அய்யமில்லை என்று கடைசியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். (குடிஅரசு தலையங்கம் 14.8.1932). சுயமரியாதை இயக்கம் (திராவிடர் இயக்கம்) என்பது தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக, மற்ற புலவர்களை விட மிக அதிக அளவில் பங்களிப்புச் செய்தே வந்தி ருக்கிறது என்பதைக் கடந்தகால வரலாறு நமக்குக் காட்டுகிறது. (தொடரும்) keetru.com aug 2013

Page 5 of 6