20 01 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 10

வாலாசா வல்லவன்

“சமஸ்கிருத சனியன்”

1930 களில் உலக அளவில், பொருளாதாரப் பெருமந்தம் ஒன்று ஏற்பட்டது. அரசு தன் செலவு களைக் குறைக்க வேண்டி வந்தது. சென்னை மாகாண அரசு அமைத்த சிக்கனக் கமிட்டியினர் அரசுக்கு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கச் சில பரிந்துரைகளைச் செய்திருந்தனர். அதில் மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதை வரவேற்று 17.01.1932 குடிஅரசு ஏட்டில் ‘சமஸ்கிருத சனியன்’ என்ற தலைப்பில் தேசியத் துரோகி என்ற புனை பெயரில் ஒரு சிறப்பான கட்டுரையும் தமிழ் மக்களுக்கு வேண்டுகோளும் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரை இப்படி தொடங்குகிறது :“தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடைய வர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக்கொண்டு முன்வந்தோம்...

உண்மையில் “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்துவிடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த சாதிக் கொடுமை, சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள்தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும் தலைவிரித்தாடி, அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்தரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்குக் காரணம் சமஸ்கிருதமேயாகும். இன்று வருணாச்சிரம தருமக்காரர்கள், சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும் வருணாசிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும், சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும்.

தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக்கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று சொல்லுவதற்குக் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர் திருத்த சட்டங்களைச் செய்யக் கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் (மக்கள் தொகைப் பெருக்கத்தைக்) கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்களின் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறி தடுப்பதற்கும், திரு. என்.சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத் தினராகச் சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே ஆகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து, குறைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வருணாச்சிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத வேத, புராண, இதிகாச ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றனவென்று கவனிக்கிறார்களே ஒழிய, தங்கள் அறிவு என்ன சொல்கின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங் கூடக் கவனிக்கிறார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்த சமஸ்கிருதப் பழங்குப்பைகளான சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சிவிட்டன. ஆகையால் இனி வருங்காலத்தில் இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படா மலிருக்க வேண்டுமானால், அவர்களிடம் மூடநம்பிக்கைகளும் சுயநலமும் உண்டாகாமல், பகுத்தறிவும் சமதர்ம நோக்கும் உண்டாக வேண்டுமானால், சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப் புராணக் கூளங்களாலும் குடிகொண் டிருக்கும் மூடநம்பிக்கைகள் போதாதென, தேசிய ஆடைகளைப் புனைந்து “ஹிந்தி” என்னும் பாஷையையும் கொண்டுவந்து நுழைத்துக் கொண்டு பார்ப் பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஹிந்தியைப் பரப்புவதற்காக பார்ப்பனர் பிரயாசைப்படுவ தற்குக் காரணம் அதன்மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே, என்பது சுயமரியாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த ஹிந்தி பாஷை முதலியவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிடச் சம்மதிப்பார்களா? ஒருகாலும் சம்மதிக்கமாட்டார்கள். ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி, சென்னை அரசாங்கச் சிக்கன கமிட்டியார் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக் கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றி அவர் களுக்குக் கவலையில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாக இருப்பவை களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பி கிளப்புப் பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்டமறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடா மலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டி ருக்கிறார்கள். ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சலுக்குப் பயந்துகொண்டு அரசாங்கத்தார் சிக்கனக் கமிட்டியின் சிபாரிசைக் கைவிட்டுவிடக் கூடாதென எச்சரிக்கை செய்ய வேண்டும். சில பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட் டியும் இன்னும் சமஸ்கிருதக் கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும் படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது தான் சமஸ்கிருதச் “சனியன் ஒழியும்” என்று ‘குடிஅரசு ஏடு’ எழுதியது.

இந்த அறிக்கையால், சென்னை மாகாணத்தை அன்று ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சி அரசுக்கும் ஒரு துணிச்சல் ஏற்பட்டது. மாநிலக் கல்லூரியில் இருந்த சமஸ்கிருதத் துறையையும், மத பாடங்களையே தத்துவம் என்று சொல்லி போதித்துவந்த தத்துவத் துறையையும் அடியோடு மூடிவிட்டார்கள் (1930களில் தமிழகம், பொருளாதாரம் பெருமந்தம் - ஓர் ஆய்வு-கா.அ. மணிக்குமார், பக்கம் 132, அலைகள் வெளியீட்டகம்). சுயமரியாதை இயக்கத்தினரின் சமஸ்கிருத எதிர்ப்பும், அரசின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவுப் போக் கும் மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதத்தை ஒழித்துக் கட்டியது. பார்ப்பனர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கு எப்போதும் சமஸ்கிருத மொழியின் மீதும் இந்தி மொழியின் மீதும் காதல் இருந்துகொண்டேதான் இருக்கும். பாரதியார் முதல் உ.வே.சா. வரை இதற்கு விதிவிலக்கில்லை. இந்தியாவுக்குப் பொதுமொழியாக இந்திதான் வர வேண்டும் என்று முதன்முதலில் எழுதியவர் சி.சுப்பிரமணிய பாரதியாரே ஆவார். 15.12.1906 இந்தியா ஏட்டில் இந்தி பாஷை பக்கம் என்ற தலைப்பில் எழுதிய போது, “இந்தியா பலவித பிரிவுக்குடையதாய் இருந்த போதிலும், உண்மையில் ஒன்றாய் இருப்பதற்கு இணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும், முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் இந்தியும், தெலுங்கர்கள் தெலுங்கும் இந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப் பாஷை ஒன்றிருக்கும். தமிழர்களாகிய நாம் இந்தி பாஷையில் பயிற்சி பெறுதல் மிகவும் அவசியம்” என்று எழுதினார். பிறகு அவரே 1920இல் சமஸ்கிருதம் இந்தியாவுக்குப் பொதுமொழியாக வரவேண்டும் என்று எழுதினார். 11.1.1920 சுதேசமித்திரன் இதழில் ஒளிர்மணிக்கோவை என்ற தலைப்பில் எழுதிய பாரதியார், காந்தி முதலானவர்கள் இந்தியாவுக்குப் பொது பாஷையாக இந்தியை வழங்கலாமென்று அபிப்பிராயப் படுகிறார்கள்; அரவிந்தர் முதலியவர்கள் சமஸ்கிருத பாஷையையே இந்தியாவுக்குப் பொது பாஷை என்றும்; நாம் அதைப் புதிதாக அங்கனம் சமைக்க வேண்டிய தில்லை என்றும், ஏற்கெனவே ஆதிகாலந்தொட்டு அதுவே பொது பாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்கிறார். இப்போது சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது மிகவும் எளிது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய் பண்டிதர் உபாத்தியாயர் இல்லாமலே சமஸ்கிருத பாஷையை ஏழெட்டு மாதங்களில் கற்றுக்கொள்ளும் படியான நூல்கள் எழுதியுள்ளார். தமிழர்கள் இதைப் படித்தால் விரைந்து சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் பாரதியார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று, மதுரை தமிழ்ச்சங்கப் போட்டிக்கு, 1915இல் கவிதை எழுதிய அதே பாரதியார், அடுத்த ஆண்டே தமிழ்த்தாய் கூறு வதாக என்ன எழுதியுள்ளார் தெரியுமா? “ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத் தான். மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் அன்பொடு நித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளினுள்ளே - உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (பாரதியார் கவிதைகள், நியு செஞ்சுரி புத்தக நிலையம், பக்.113). பார்ப்பனர்கள் தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தாகவும், ஆரியம் உயர்ந்த மொழி, தமிழ் அதற்குத் இணையான மொழி என்று தான் எழுதியுள்ளார். 1938 முதல் இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் சமஸ்கிருதக் கல்லூரியில் பேசிய எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், “கொஞ்சம் முயற்சி செய்தால் சமஸ்கிருதத்தை இந்தியாவின் பொது மொழியாக ஆக்கிவிட முடியும்” என்று பேசினார் (கு.நம்பி ஆரூரன், தமிழ் மறு மலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்கம் 331). வரலாற்றுப் பேராசிரியரான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி என்னும் பார்ப்பனர் 1953இல் மலேசியா சென்றிருந்த போது, அந்த நாட்டு அரசு இந்திய மொழி களில் ஏதாவது ஒன்றை மலேயாப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்க இவரிடம் கருத்துக் கேட்டனர். அவர் சமஸ்கிருத மொழியைப் பாடமாக வைக்கலாம்; தமிழைத் துணைப் பாடமாக வைக்கலாம் என்று பரிந் துரை செய்தார். மலேயா பல்கலைக்கழகமும், அந்த நாட்டு அரசும் அவர் கருத்தை ஏற்க மறுத்துவிட்டு, தமிழைப் பாட மொழியாகச் செய்தனர். ‘நீலகண்ட சாஸ்திரியின் சமஸ்கிருத வெறி, மலேயாவில் மூக்கறுக் கப்பட்டது’ என்று ‘நம் நாடு’ ஏட்டில் 4.5.1953 அன்று எழுதியுள்ளனர்.

இந்திய அரசு 1955இல், சமஸ்கிருதத்தை எப்படி யெல்லாம் வளர்க்கலாம் என்பதற்காக ஒரு குழுவை அமைத்தது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி வரலாற்றுப் பேராசிரியர்தான் மொழியியல் பேராசிரியர் அல்ல. இருந்தபோதிலும் இந்திய அரசு அமைத்த ‘சமஸ்கிருதக் குழு’வின் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார் (1955இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட சமஸ்கிருத குழு அறிக்கை, பக்கம் 3). இக்குழு இந்தியா முழுவதி லும் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் சமஸ் கிருதத் துறை தொடங்கப்பட வேண்டும் என்று பரிந் துரை செய்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முதலமைச்சர் இராசாசியால் நியமிக்கப்பட்ட சர். சி.பி. இராமசாமி அய்யர், அப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை வளர்க்க முனைந்தார். இதை நாவலர் சோமசுந்தர பாரதியார், “இறந்த மொழியாம் வட மொழிக்கு ஏன் இந்த வாழ்வு” என்று வன்மையாகக் கண்டித்தார் (நம் நாடு, 5.12.1953). இராசாசி, சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும்; என எழுத்து மூலம் இந்தி ஆட்சி மொழிக் குழுவிடம் அளித்தார். 1955இல் இந்திய அரசு ‘ஆட்சி மொழிக் குழு‘ ஒன்றை அமைத்து இந்தியை எப்படி யெல்லாம் வளர்க்கலாம் என்று இந்தியா முழுவதும் ஆய்வு செய்ய அக்குழுவை அனுப்பியது. சென்னை வந்த அக்குழுவிடம் சாட்சியமளித்த இராசாசி “உங்களால் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க முடியு மானால், ஏன் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஆக்கக்கூடாது. சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கு வதில் வெற்றி பெற்றால் தான் நமது உண்மையான கௌரவம் காப்பாற்றப்படும்” என்று எழுதிக் கொடுத் தார் (நம்; நாடு, 11.1.1956). இராசாசிக்கு எவ்வளவு சமஸ்கிருத வெறி இருந்தது என்பது இதன்மூலம் புலப்படும்.

தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும், போற்றப்படும் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் 27.3.1937 அன்று சென்னையில் காந்தியின் தலைமையில் நடைபெற்ற ‘பாரதிய சாகித்திய பரிஷத்’ என்ற அமைப் பின் கூட்டத்திற்கு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சா. தமிழில் பேசினாலும், “நம்மு டைய பொது பாஷையாக இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார் (அ. இராமசாமி, தமிழ் நாட்டில் காந்தி, பக்கம் 328, காந்தி நூல் வெளியீட்டு கழகம், மதுரை, முதற் பதிப்பு 1969). தமிழ்த் தாத்தா என்று கூறப்படும் உ.வே.சா. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்தி ஆதரவாளராகவே இருந்தார். அந்தக் கூட்டத்தில் காந்தி தம் தலைமை உரையை முழுவதுமாக இந்தியிலே பேசினார். இந்தியாவிலுள்ள தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளின் எழுத்துகளின் வரி வடிவத்தை யும் தேவநாகரியாக மாற்ற வேண்டும் என்றும் பேசினார். அதற்கும் உ.வே.சா. மறுப்பு எதுவும் பேசவில்லை. இவரைத்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கிறார்கள். தமிழ்மொழியை “செம்மொழி” என்று சொல்லி விட்டார் என்பதற்காக, வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியை நாம் புகழ்ந்து போற்றுகிறோம். அவர் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளவில்லை. அவருடைய ஒரு நூலில் அதைப் புனைப்பெயராகக் குறிப்பிட்டிருந்தார். “தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் யாவரும் இந் நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்ல. மத்திய ஆசியாவில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக வட இந்தியா வந்து, பின்பு தென்இந்தியா வந்தவர்கள்” (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி, தமிழ்மொழியின் வரலாறு, பக்கம் 14, பூம்புகார் பதிப்பகம், சென்னை) என்று வரலாற்றைத் திரித்து எழுதியுள்ளார். நாமெல்லாம் ஆரியர்கள்தான்; கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றுதான் வரலாற்றில் படித்திருக்கிறோம். தமிழ்நாட்டுத் தமிழர்களை வந்தேறிகள் என்று எழுதியவருக்குத் தான் பாராட்டுச் செய்கின்றோம். - தொடரும்   keetru.com july 2013

11 01 2018

திராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 9

எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

பெரியார் என்றாலே தமிழ்மொழிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரோதமானவர் என்ற தன்மையில் தமிழ்த் தேசியம் பேசுவோரில் பலர் பேசுவதையும், எழுதுவதையும் தொடர்ந்து செய்துவருகின்றனர். அவர்கள் கூற்றில் ஒரு சிறிதும் உண்மை இல்லை. பெரியார் தமிழ்ப் புலவர்களை இரண்டு வகையாகப் பிரித்தார்.முதல்வகை,ஆரியப் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள். இரண்டாவதுவகை ஆரியப் பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள். முதல்வகைப் புலவர்களைப் பெரியார் எப்போதுமே எதிர்த்து வந்ததில்லை.உதாரணமாகப் பெரியாருக்குக் கிடைத்த முதல் புலவர் சாமி சிதம்பரனார் -மனைவியை இழந்த அவருக்கு இரண்டாவது திருமணத்தைப் பெரியார் தன் சொந்தச் செலவிலேயே 5.5.1930இல் சிவகாமி-சிதம்பரனார் இணையரின் விதவைத் திருமணத்தை ஈரோட்டில் தன் வீட்டிலேயே நடத்தினார்.

பெரியார் வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் சாமி சிதம்பரனாருக்குத் தந்தி கொடுத்துவிடுவார்.ஈரோடு வந்து குடிஅரசு இதழைப் பார்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வார்.சாமி சிதம்பரனார் நாகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்தார். தஞ்சை மாவட்டத் தலைவராக சர். ஏ.டி. பன்னீர்செல்வம் இருந்ததால் சாமி சிதம்பரனாருக்குத் தேவைப்பட்ட அளவிற்கு விடுப்பு அளிக்கப்பட்டது.இதன் காரணமாக,அவருக்கு இதழ் நடத்தும் ஆசை ஏற்பட்டுப் பிற்காலத்தில் அறிவுக்கொடி என்ற இதழை நடத்தினார்.தன்னுடைய மனைவி சிவகாமி,பெரியாரின் மனைவி நாகம்மையாருடன் பழகியதை வைத்தே பெரியாரின் இளமைக் கால நிகழ்வுகளைக் குத்தூசி குருசாமியின் வேண்டுகோளின்படி,தாம் எழுதிய ‘தமிழர் தலைவர்’என்ற வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.

அதேபோல மறை மலையடிகள், கா.நமச்சிவாய முதலியார்,வ.உ.சிதம்பரனார், திரு.வி.கலியாணசுந்தரனார்,நாவலர் சோமசுந்தர பாரதியார்,கா.சுப்பிரமணியப் பிள்ளை, கரந்தை தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த உமாமகேசுவரம்பிள்ளை, தமிழறிஞரும் பொறியா ளருமான பா.வெ.மாணிக்கநாயக்கர்,சந்திரசேகரப் பாவலர் என்ற பெயரில் இராமாயண ஆராய்ச்சி,மாகாபாரத ஆராய்ச்சி என்ற தொடர் கட்டுரைகளை குடிஅரசு ஏட்டில் எழுதிய புலவர் இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, புலவர் குழந்தை, பாரதிதாசன், சி. இலக்குவனார், வை. பொன்னம் பலனார்,டாக்டர் பொற்கோ,சாலை இளந்திரையன்,பெருஞ் சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்றவர்களைப் பெரியார் ஒரு போதும் கண்டித்ததில்லை. மறைமலையடிகள் கூட்டத்தில்,சுயமரியாதை இயக்கத்தினர் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டு,அவரைத் திக்கு முக்காடவைத்தனர்.பெரியார் வெளியூரில் இருந்து வந்த பிறகு, செய்தி அறிந்து குடிஅரசு இதழில் வருத்தம் தெரிவித்து அறிக்கைவிட்டார்.

பெரியாருக்குத் திருக்குறளின் மீது பற்று ஏற்படக் காரணமாக இருந்தவர் பொறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர்.பெரியார் திருக்குறளில் இப்படியெல்லாம் இருக்கிறதே என்று கேட்டபோது “அது உரை ஆசிரியர்களின் கருத்தே அன்றி திருவள்ளுவரின் கருத்து அன்று” என்று கூறிய பெருமாகனார் ஆவர்.அவர் மறைந்த போது பெரியார் எழுதிய இரங்கலுரையில், “பெருந் தமிழறிஞரும் ரிட்டயரான சூப்பிரண்டென்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாரருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம்.இவர் தமிழ் மொழியில் சிறந்த ஆராய்ச்சியுள்ளவராகவும் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தில் ஊக்கமுடையவராகவும் இருந்தார்.இவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் மொழிக்கு நன்மையும்,பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டாயிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெரும் நஷ்டமே யாகும். இவரை இழந்து வருத்தமடையும் அவர் மனைவிமார்களுக்கும்,பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் (குடிஅரசு 3.1.1932).

பா.வெ.மாணிக்கநாயக்கர் அவர்கள் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணத்தில் மாத்திரை அளவுகளைச் சொல்லியிருக்கிறார் அல்லவா?அதை அறிவியல் தன்மையில் மெய்ப்பிக்க பலூன்களை எடுத்துக்கொண்டு எழுத்துக்களை உச்சரித்துக் கொண்டே அதை ஊதுவார் பின்னர் அந்த பலூனில் எவ்வளவு காற்று அடைப்பட்டு இருக்கிறது என்பதை எடைபோட்டுப் பார்த்துக் குறித்து வைப்பார். இதுபோல பல ஆய்வுகளைச் செய்து, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனருக்குத் தெரிவித்து எழுதிய மடல்கள் பல மறைமலையடிகள் நூல் நிலையத்தில் உள்ளன.அப்படிப்பட்ட தமிழறிஞரைப் பெரியார் போற்றினார். இன்றைய தமிழுலகம் அவரை மறந்துவிட்டது. கா. நமச்சிவாய முதலியார்தான் அக்காலத்தில் அதிகம் படித்த தமிழ்ப் பேராசிரியர். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.அதே கல்லூரியில் பணியாற்றிய சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு ரூ.150மாத ஊதியமும் தமிழ்ப் பேராசிரியர் கா.நமச்சிவாயருக்கு ரூ.90 ஊதியமும் கொடுக்கப்பட்டதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது நீதிகட்சி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.அப்போது முதலமைச் சராக இருந்த பொப்பிலி அரசரிடம் பெரியார் எடுத்துரைத்து,1932இல் இந்த ஊதிய முரண்பாட்டைப் போக்கித் தமிழ்ப் பேராசிரியரின்-ஏன் தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலை முறிடியத்தார். தமிழில் மிகச் சிறந்த பாடநூல்களை எழுதிய நமச்சிவாயர் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் நீதிக்கட்சி ஆதரவாளராகவும் விளங்கியவர்.

அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவைப் திராவிடன் இதழ் முழுமையாக வெளியிட்டது. அதைத் தந்தை பெரியார் அவர்கள் ‘அகத்தியர் ஆராய்ச்சி’என்ற நூலாக்கி அச்சிட்டு குடிஅரசு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு விற்பனை செய்து வந்தார். அகத்தியர் ஒரு கற்பனைப் பாத்திரம். ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறியதையும் தமிழை தாங்கள் தான் (அகத்தியர்) உருவாக்கியதாகக் கூறி வந்ததையும் வேதகாலம் முதல் ஆய்வு செய்து அக்கருத்துகளைத் தவிடுபொடி யாக்கினார் நமச்சிவாயர். அதனால்தான் பெரியார் அவர்கள் கா.நமச்சிவாயர் மறைந்தபோது,“பண்டிதர் தோழர் கா. நமச்சிவாய முதலியார் பிரிவினால் தமிழகத்தாருக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தில் நாமும் மனமாரப் பங்கு கொள்கிறோம்; பிறந்தாரெல்லாம் இறப்பது இயற்கை யாயினும் நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் செய்வோர் பிரிவு நாட்டு மக்கள் உள்ளத்தைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்தச் செய்யும்.

தற்காலத்துத் தமிழர் முன்னேற் றத்துக்காக உழைப்பவர் மிகச் சிலரே எனவே, கண் மூடும் வரை தமிழர் நலத்துக்காக அல்லும் பகலும் உழைத்துள்ள ஒரு பெரியார் பிரிவை யார்தான் தாங்கவல்லார்?தமிழ்மொழிக்குத் தோழர் முதலியார் செய்த தொண்டு மலையினும் பெரியது.கடலினும் அகன்றது.தமிழ் உரைநடைக்கு முதன்முதல் அடி கோலிய ஆறுமுகநாவலருக்குப் பிறகு,நூற்றுக்கணக் கான வசன நூல்கள் இயற்றி தமிழ் செம்மையுறச் செய்த பெருமை காலஞ்சென்ற முதலியாருக்கே சொந்தம்.வடமொழிச் சொற்களை அறவே வெறுக்கும் தமிழபிமானியல்ல அவர். இன்றியமையாவிடத்து வடமொழிகளை ஆளுவதே அவரது போக்காயிருந்தது. அவரது நடை எளிதாயும் இனிதாயும் தெளிவாயும் விளங்குகிறது. அவர் எழுதிய நூல்கள் தமிழிலக்கியத் துக்கு அழகு செய்யும் அணிகலன் என்பதற்கும் சந்தேகமே இல்லை.தமிழ்மொழிக்கு இவ்வண்ணம் அரிய சேவை செய்த தோழர் முதலியார் பெயர் அழியாதிருக்கும்படி ஏதேனும் ஒரு ஞாபகச் சின்னம் நிறுவ தமிழகத்தார்முன்வர வேண்டுவது தமிழ் வளர்ச்சிக்கு ஞாபகக் குறிப்பிடுவதாகும்.முதலியார் பிரிவால் வாடும் மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபம் உரியதாகும் (குடிஅரசு 22.3.1936).

காஞ்சிபுரம் காங்கிரஸ்மாநாட்டில் திரு.வி.க. பெரியாருக்கு எதிராக நடந்துகொண்டபோதிலும், அதனால் பெரியார் காங்கிரசை விட்டே வெளியேறிவிட்ட போதிலும், திரு.வி.க.வின் மீதும் திரு.வி.க.வின் தமிழ் மீதும் பெரியாருக்கு உள்ளூர நல்லெண்ணம் என்றும் இருந்துவந்தது. 1948இல் காந்தி மறைவிற்குப் பிறகு திரு.வி.க.காங்கிரசை விட்டு வெளியேறிப் பெரியாரிடம் வந்தார். 1948 ஈரோடு மாநாட்டில் திரு.வி.க. திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். 1953இல் திரு.வி.க. மறைந்தபோது இடுகாடு வரை சென்று அழுதுபுலம்பிய ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. அவருடைய நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு பெரியார் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தகைய பெரியாரைப் பார்த்து, தமிழ்ப்புலவர் களுக்கு எதிரி என்பதா? பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியதே திராவிடர் இயக்கந்தான்.

தொடரும்... keetru.com 27 06 2013

30 12 2017

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்கு தடைக்கல்லா? படிக்கல்லா?

எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

பெரியாருக்கு தமிழ்மொழி, தமிழர் என்றாலே பிடிக்காது என்று சிலர் எழுதுகிறார்கள் அது உண்மையல்ல. ‘தமிழர் சங்கம்’ என்ற அமைப்பை மணி திருநாவுக்கரசு முதலியார் தொடங்கியபோது அதை வரவேற்றுக் குடிஅரசு ஏட்டில் எழுதியதோடு இதே போன்ற அமைப்புகளைத் தமிழகம் முழுவதும் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் பண்டிதர். திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொது மக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றி வருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன் படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன்குறிப்பிட்டபடி சமூகச் சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்ற படி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டி ருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகா தாரத்தை ஏற்படுத்துவது, தமிழ்மொழியை வளர்ப் பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்துச் சிக்கன முறையில் நடத்தச் செய்வது, கலப்பு மணம், மறுமணம் ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமூகச் சீர்திருத்தக் காரியங் களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

 நிர்வாகஸ்தர்கள் :

திரு. டாக்டர் எம். மாசிலாமணி முதலியார் போஷ கராகவும், திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தம் உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்நாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங் கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். “சமய”ப் பற்றில் மூழ்கி, “பரலோகத்திற்கும்” “பரலோகக் கடவுளுக்கும்” பாடுபட்ட பெரியார் கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன்வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின் றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும், ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்கவண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

“குடிஅரசு - துணைத் தலையங்கம் -7.7.1929”

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் முதலே இந்தியைக் கண்டித்து வந்துள்ளார் 1931இல் குடிஅரசு இதழில் கதரும் இந்தியும் என்ற துணைத் தலையங்கத்தில் இந்தியைக் கடுமையாகக் கண்டித்துத் துணைத் தலையங்கம் எழுதியுள்ளார். "ஹிந்தியென்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத்தவிர அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதை அறிவுள்ள எவரும் ஆnக்ஷபிக்கமாட்டார்கள் என்றே கருதுகின் றோம். இந்திய நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரீகம், பல நடை, உடை பாவனைகளாக இருந்து வருவதை யாவரும் மறுக்கமுடியாது. அப்படி இருந்தாலும் மக் களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும், போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம். இந்த நிலைமையிலுள்ள சமூகங்களைப் பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பதை கண்டுபிடித்து அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் கண்மூடித்தன மாய் எல்லோரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டு மென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும் என்று கேட்கின்றோம். ஹிந்தி என்பது அநேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வடமொழிக்கு உயர்வு கொடுக்கப் பல வழிகளிலும் சூக்ஷி செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய அவ்வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாகத் தமிழ்மக்கள் கவனித்துவரும் சங்கதியாகும். இப்போது மறைமுக மாய் வடமொழியை ஆதரிக்கவும் ஆரிய நாகரீகம் சமயக் கொள்கை ஆகியவைகளை நிலைநிறுத்தவும் ஹிந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி அதைக் கதரைப் போல் ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக் குள்ளும் புகுத்தப் பார்ப்பது எவ்வளவு வஞ்சமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அநேகர் இன் னும் உணரவே இல்லை. தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்து சூடுபோட்டது போல் மேலெல்லாம் தீட்டிக்கொண்டு சிவ, சிவ, சிவ என்பதற்கும் ராம, ராம, ராம என்பதற்கும் உதவு வார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனா வசியமான ஒரு பாஷை சூக்ஷித்திறத்தில் சுமத்தப்படு கின்றதே என்கின்ற அறிவும், கவலையும் சிறிதும் கிடையாது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இன்றைய தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறுபாஷை தெரிய வேண்டுமானால் அது இங்லீஷ் பாஷை என்றே நாம் தைரியமாய்ச் சொல்லுவோம். உலகமே உங்கள் கிராமம்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி இப்போது நிலப் பரப்பு, நீர்பரப்பு முழுதும் தெரிந்து 200 கோடி மக்களை யும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலக செலாவணி பாஷை ஏதோ அதை மனிதன் அறியாமல் கபீர்தா° இராமாய ணத்தைப் படிக்க வேண்டிய ஹிந்தி பாஷை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்களுக்குச் சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வரவேண்டியிருப்பதை ஹிந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறத்துகின்றது என்றே சொல்லுவோம். தமிழ்பாஷையின் பாண்டித்தியம் என்பது இப்போதே அநேகமாய் பார்ப்பனர்களிடமேயிருக்கின்றது. தமிழ் பாஷையின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனர் களாய் இருக்கின்றார்கள் என்பதோடு இந்தப் பார்ப்ப னர்கள் தமிழர்களை ஹிந்தி படிக்கக் கட்டாயப்படுத்து கின்றார்கள் என்றால் தமிழ் பாஷைக்காரர்களின் சுய மரியாதை எவ்வளவு என்பதை தமிழர்களே உணர் வார்களாக. அரசியல் தத்துவத்தின் பயனாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பணத்தில் ஹிந்தி கற்று இந்தியத் தலைவர்களாகிய வடநாட்டுத் தலை வர்கள் இடமெல்லாம் பார்ப்பனர்களே போய் காரிய தரிசிகளாய் அமர்ந்து அவர்களே தென்னாட்டுப் பிரதி நிதிகளாகி அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசிய லைத் திருப்பிப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே அரசியல் துறையில் இருக்கும் பார்ப்பன ரல்லாதாருக்கும் அறிவு இருந்தாலும் அதை பார்ப் பனர்களுக்குத் தக்கவிலைக்கு விற்றுவிட்டார்கள் என் றாலும் அரசியலில் இல்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்கவழியில் உபயோகித்து தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா என்று கேட்கின்றோம்.

“குடிஅரசு - துணைத் தலையங்கம், 10.5.1931”

இந்தியைக் கண்டித்து பெரியார் அவர்கள் 15.7.1931 இல் மாயவரத்திலும், 16.7.1931 பட்டுக்கோட்டையிலும் நடைபெற்ற சுயமரியாதை இயக்க கூட்டங்களில் பேசி யுள்ளார். அப்பேச்சின் சுருக்கம் இந்திப் புரட்டு என்ற தலைப்பில் குடிஅரசு ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை மாகாணத்திற்குச் சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வரு கின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வ தோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிட மிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருடக் காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம் ரூபாய்க்குத் திட்டம் போட்டு சில பார்ப்பனர்வெளிக்கிளம்பியிருப்பது பார்ப்பனர்களின் சாமர்த்தியமா அல்லது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள் தனமா என்பது நமக்கு பூரணமாய் விளங்கவில்லை யானாலும் ஒருவாறு இது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள்தனமான இளிச்சவாய்த்தன்மை என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனர்கள் வந்து எதற்காகப் பணம் வேண்டுமென்று கேட்டாலும் நம்மவர்கள் கொடுக்கத் தயாராகியிருக்கின்றார்கள். வருணாசிரம மகாநாடு நடத்த பார்ப்பனர்களுக்குக் பணம் கொடுக் கும் பார்ப்பனரல்லாதவர்கள் இந்திக்கு பணம் கொடுப்பது ஒரு அதிசயமல்ல. எனவே, பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்தியினுடையவும் இந்தி பிரச்சாரத்தினுடையவும் புரட்டையாவது பொது ஜனங்கள் அறியட்டுமென்றே இதை எழுதுகின்றோம். முதலாவது இந்தி பாஷை என்றால் என்ன? அதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்? அதைப் படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? என்பது போன்றவைகளை முதலில் கவனிப்போம். பிறகு இந்தி பாஷை என்பதை அகில இந்தியப் பாஷையாகக் கருதவேண்டும் என்பது பற்றிப் பின்னால் யோசிப்போம். இந்தி பாஷை படித்த தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் காங் கிர° பணத்திலிருந்தும் மற்றும் பொது மக்களிட மிருந்தும் இந்திக்காகச் செலவு செய்யப்பட்ட பணத்தில் அவர்களது குறைகளைத்தான் உலகக் குறைகளாகக் கருதுகின்றார். ஆதலால் திரு. காந்தியவர்களின் திட்ட மெல்லாம் அவ்விருவருடைய அதாவது பணக்காரன் பார்ப்பான் ஆகிய இவர்களுடைய குறைகளைத் தீர்ப்ப தாகத்தான் இருக்குமே ஒழிய ஏழைகள், தாழ்த்தப் பட்டவர்கள் கஷ்டங்களையும், குறைகளையும் நீக்கு வதாக இருக்க முடியாது. ஏழைகள் பிழைக்கவும், தாழ்த்தப்பட்டவர்கள் உயரவும் அவருக்கு இரண்டு வழிதான் தெரியும். ஒன்று இராட்டினம் சுற்றுவது இரண்டாவது “தீண்டாமை பாராட்டுவது பாவம்” என்று வாயால் சொல்லுவது. இந்த இரண்டும்கூட மில்லுக் காரனையும், பார்ப்பானையும் கண்ட மாத்திரத்தில் தத்துவார்த்தம் சொல்ல வேண்டி வந்துவிடும். ஆகவே சகோதரர்களே! எனக்குக் கொடுத்த விஷயத்தை தலையாய்க் கொண்டு என் மனதில் உண்மையென்று பட்டதை நான் ஒளிக்காமல் சொல்லிவிட்டேன். இவை அவ்வளவையும் கலப்பற்ற உண்மையென்றோ முடிந்த முடிவு என்றோ கருதி கண் மூடித்தனமாய் ஒப்புக் கொள்ளாதீர்கள். நான் இந்தப்படி சொல்லுவதற்கு எனக்குப் பல காரணங்கள் இருக்கலாம். சுயநலமிருக் கலாம். பொறாமை இருக்கலாம். வெறுப்பு இருக்கலாம். ஆகையால் நீங்கள் இவற்றை ஒவ்வொன்றையும் வைத்து உங்கள் சொந்தப் பகுத்தறிவை நடுநிலை தன்மையையும் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்களுக்குட்பட்டபடி முடீவு செய்து கொள்ளுங்கள்.

“குடிஅரசு - சொற்பொழிவு, 26.7.1931”

1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே தாய்மொழிவழி கல்வி, அரசு மொழி ஆங்கில மொழி ஆகியவற்றுக்கு மட்டுமே அரசின் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 14ஆவது தீர்மானம் கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக்கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்துக் கட்டாயமாய்க் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்குப் பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்குத் தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களைத் தெரிந்தெடுத்துப் படிப்பிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்படுகின்றது. 7.6.1931இல் நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரி யாதை இயக்க, தாலுக்கா மாநாட்டில் இந்தி மொழி யைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நன்னிலம் மாநாட்டுத் தீர்மானத்தின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

இந்நாட்டில் பார்ப்பனீயம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களை யும், பார்ப்பனீயங்களையும் பரப்பும் நோக்கத்துட னேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம் பெற்று வந்திருக்கின்றன. உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக் கும் பயன்படாத சம°கிருதப் பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதீக்கமும், அதற்கெ னவே பல ஏற்பாடும், செலவும், மெனக்கேடும் பார்ப் பனீயத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன. சமஸ்கிருதக் காலேஜ், சமஸ்கிருதப் பாடசாலை மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சம°கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செலவிலேயே நடை பெற்று வருகின்றன. இது இந்த நாட்டு மக்களின் சுய மரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரண மாகும். இதைத் தட்டிப் பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சுவிடவும் ஆள்கள் இல்லை. போதாக்குறைக்கு இன்று ஹிந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப் பட்டு வருகின்றது. இது இந்நாட்டு மக்களுக்குப் பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கு ஒரு உதாரணமாகும். தமிழ்நாட்டுக்கு ஹிந்தி என்ன அவசியத்திற்கு என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசீய வாழ்வில் இல்லை. தேச பக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர்களாலேயே நிரப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களால் பிடித்து வைக் கப்பட்ட தலைவர்களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசீய மந்திரத்தை உருப்போட்டு ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.

“குடிஅரசு - சொற்பாழிவு, 14.6.1931”

பெரியார் 1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திடீரென பாதியில் வந்துசேர்ந்து கொண்டார் என்று தமிழ்த்தேசியம் பேசுவோர் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பெரியார் மீது சுமத்துவதால் மேலேயுள்ள செய்திகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. - தொடரும்....

 keetru.com 22 04 2013

23 12 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -7

எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

அதே 1926 ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் செல்வி மாத இதழுக்கும் மிகச் சிறந்த மதிப்புரையை 10.10.1926 குடிஅரசு ஏட்டில் எழுதி தமிழ் மக்கள் அந்த இதழை வாங்கி ஆதரிக்கும்படி பெரியார் எழுதியுள்ளார்.“நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும் மேனாடுகளை நோக்க, நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல் வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துகளை ஒருங்கு திரட்டி உணர்த்தலால், மக்கள் அறிவைப் பண்படுத்துவதால், பத்திரிக்கைகள் வல்லன வாகத் திகழ்கின்றன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் ‘அரசியல் கிளர்ச்சியில்’ பாய்ந்து செல்லும் வேகத்தில் சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு ஸ்திரமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத் தைப் பிணித்திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்ய வல்லன மாத வெளியீடு களேயாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதானமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளிவர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடு களிற் சிறந்தது நமது “செந்தமிழ் செல்வி” எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனியத்தின் மாயப் புரட்டுகள் வெளியாக்கப்படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெளிய விளக்கப்படுகிறது.

பண்டைய இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக்கும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறைக்கும் ஆராய்ச்சி வல்லுநரால் பொருத்தமாய் எழுதப்படுகின்றன. மதுரையிலிருந்து வெளிவரும் ‘செந்தமிழ்’ வெளியீடு பார்ப்பன கோஷ்டியிலகப்பட்டு பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்று வித்த ஸ்ரீமான் பாண்டித்துரை தேவரவர்களின் உத் தேசம் அடியோடு புறக்கணிக்கப்படுகிறது. பார்ப்ப னரல்லாதார் பொருள் ஏராளமாய் இருந்தும், சேதுபதி மகாராஜா தலைவராயிருந்தும், தமிழ்ச் சங்கத் தையும், அதைச் சார்ந்த கலாசாலையையும் ‘செந்தமிழ்’ மாதச் சஞ்சிகையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்ப டைக்கப்பட்டிருப்பது பரிதபிக்கத்தக்கது. இக்குறைகளைக் கண்டே பல தமிழபிமானிகள் தென்இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மைத் தமிழ்க் கழகம் கண்டனர்... செந்தமிழ்ச் செல்வி யும் இக்கழகத்தினின்று வெளி வருவதுதான். உயர் திருவாளர் கள் கா.சுப்பிரமணியப் பிள்ளைய வர்கள், பா.வெ.மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர் களின் பேராதரவைப் பெற்ற “செந்தமிழ்ச் செல்வி யின்” மாட்சியை விரிக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது ‘செல்வி’யின் ஆசிரியராவர்கள். வடமொழிக் கலப்பில்லாத ‘தனிச் செந்தமிழ் நடை’ படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக”.

10.10.1926 குடிஅரசு ஏட்டில் மிகச்சிறந்த முறையில் செந்தமிழ் செல்வியைத் தமிழ் மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தது - தந்தை பெரியாரின் குடிஅரசு ஏடேயாகும்.மறைமலைஅடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் 1926இல் ‘தனித்தமிழ்க் கட்டுரைகள்’ என்ற நூலைக் குடிஅரசு இதழுக்கு அனுப்பி இருந்தார். அந்நூலுக்கு மிகச்சிறந்த மதிப்புரையைக் குடிஅரசு ஏட்டில் எழுதியது மட்டுமல்லாமல், அந்நூலில் இருந்த கட்டுரைகளின் முதன்மையான கட்டுரையான “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்ற கட்டுரையை 31.01.1926 குடிஅரசு இதழில் வெளியிட்டார்.

தனித்தமிழ்க் கட்டுரைகள் :

இப்பெயர் கொண்ட புத்தகமொன்று வரப்பெற் றோம். இஃது பல்லாவரம் வித்யோதயா மகளிர் கல்லூரியின் தமிழாசிரியர் திருமதி. நாகை. நீலாம் பிகை அம்மையாரால் எழுதப்பட்டது. தமிழ் பாஷையின் வளர்ச்சி தானே குறைந்துகொண்டுவரும் இக்காலத்தில், வடமொழி கலவாது, தனித்தமிழில் கட்டுரைகள் வரையப்பட்டு, அதுவும் ஓர் புத்தக ரூபமாக வெளிவந்திருப்பது தமிழுலகுக்கு ஓர் நல் விருந்தென்றே கூறுவோம். இத்தகைய புத்தகங்களே தமிழ் வளர்ச்சிக்கு, உற்ற சாதனங்களாகும். நமக்கு அனுப்பப்பட்டுள்ள இப்புத்தகத்தின்கண், வடமொழி சொற்கள் எங்கணும் கண்டோமில்லை. அதன் அருமை பெருமையை நன்கு விளக்குவான் வேண்டி “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்னும் கட்டுரையை இதனடியில் பிரசுரித்திருக்கின்றோம்.

“தமிழ் மொழியில் வடசொற்களைக் கொண்டு வந்து கட்டாயம் சேர்த்தல் வேண்டுமென்றும், தமிழையும், வடமொழியையும் நாம், நம் இரண்டு கண்களைப் போல் நினைத்தல் வேண்டுமென்றும், உயிரோடிருக்கும் மொழியாகிய தமிழிற் பிறமொழிகள் கலப்பது இயற்கையென்றும் சிலர் தத்தமக்குத் தோன்றியவாரெல்லாம் ஏதுவின்றிக் கூறுகிறார்கள். இவைகளை ஆராய்வோம். தமிழ் மொழிக்கு வட மொழிக் கலப்பு எதற்காகக் கட்டாயம் வேண்டும்? தமிழ் ஏதேனும் குறைபாடுடைய மொழியா? தமிழிலே போதுமான சொற்கள் நிறைந்து கிடக்கின்றன.

வடமொழிக் கலப்பின்றி முற்காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் தூய செந்தமிழ் நடைப்போக்கின் இன்சுவையினையும், பொருள் ஆழத்தினையும் உற்று நோக்கி மகிழாத அறிஞர் யார்? திருக்குறள் ஒன்றை நோக்கினும் யாம் கூறும் உண்மை விளங்கும். திருக் குறளில் உணர்த்தப்படாத பொருள்கள் இல்லை. அப் பொருட்கட்கெல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன.சமஸ்கிருதத்தைக் கண்போல் காப்பதற்கும் மேலாகப் பார்ப்பனர்கள் தம் உயிர் போல் அதைக் காக்கின்றனர். ஆனால் தமிழ்மொழியைக் காப்பதற்கு ஒரு சிலரே உள்ளனர்.

‘தமிழரும் நாகரிகமும்’ என்ற தலைப்பில் எஸ்.ஜே. கோவிந்தராசர் எழுதிய மிகச்சிறந்த கட்டுரையைக் குடிஅரசு ஏடு வெளியிட்டது. அக்கட்டுரையில், பழந்தமிழ்க் குடிகளாகிய நாம் ஆரியர்களிடம் அல்லலுறுவதற்கு முகாந்திரங்கள் யாவை என்பதைப் பற்றிச் சற்று எண்ணுவோம்.முதலில் தமிழர்களாகிய நாம் ஆரியப் பாடையின் பித்துக்கொண்டு, நமது இல்லங்களில் நடக்கும் இனியவை, இன்னாதவை எல்லாவற்றிற்கும் பார்ப்ப னரால் கூறப்படும் உலக வழக்குகளில் பேச்சற்ற புரோகிதத் தன்மைக்கும் தர்ப்பைக்கும் பெருமை கொடுக்கும் ஆரியாப்பாடையை ஒரே வழக்கில் நடக்கச் செய்து ஆரியன் காலில் அருந்தமிழன் வீழ்ந்து பெருமை கொடுப்பதினாலேயே நமது தமிழன்னை யானவள் தலைசிறந்த நாகரிகத்தை விட்டுத் தட்டுத் தடுமாறி நிற்கின்றாள்.தமிழர் நாகரிகம் தலைசிறக்க வேண்டுமானால் புரோகிதத் தன்மையையும், பார்ப்பனக் கொடுமை யையும், பேச்சளவிலும், ஏட்டளவிலும் மாத்திரம் அன்றி கருமத்திலும் ஒழிக்கத் தமிழர்கள் உலகமானது முன்னணியில் வரவேண்டும்.

தமிழர் நாகரிகம் அரியணை ஏற ஆரியக் கலப்பற்ற தமிழ்க் கல்வியே சாலச் சிறப்புடைத்து. தமிழன்னையானவள் தங்கத் தகட்டில் - தனியரசில் வீற்றிருப்பாளானால் தமிழர் நாகரிகம் தானே சிறந்து ஆரியம், ஆங்கிலம் முதலிய நாகரிக வழக்கப் பழக்கங்களை உதறி, புரோகிதத் தன்மை, சாஸ்திரம், அடிமை முதலிய இழி துறைகளினின்றும் விலகி இன்னலை நீக்கி இன்பமடையும்.

13.2.1927 குடிஅரசு ஏட்டில் கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் ‘தமிழர் முன்னேற்றம்’ என்ற தலைப்பிலமைந்த சொற்பொழிவின் சுருக்கத்தை இரண்டு பக்கம் வெளியிட்டார்கள். அதில் அவர் ‘தமிழ ரென்பார், தமிழைத் தாய்மொழியாக உடையவர் யாவரும் ஆவர். ஆயினும், தமிழ்மொழி தனி மொழி யென்ற கொள்கையும், தமிழர் பண்டைக் காலத்தி லேயே உயர்ந்த நாகரிகமுள்ள மரபினருள் ஒரு மரபினரென்ற கொள்கையும் இல்லாதவர்களைத் தமிழரென்று கூறுதல் தக்கதன்று.சுயராஜ்யம் வேண்டாமென்று ஜஸ்டிஸ் கட்சியா ளர்கள் சொல்வதில்லை. அரசாங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கையும், காங்கிரசார் கொள்கையும் ஒத்தனவே.

காங்கிரஸ் என்ற லேபிபினால் பிராமணரையே காட்டுவாரை நன்கறிதல் வேண்டும். பிராமணருள்ளும் பெரும்பாலார் உத்தியோக வேட்டையை மேற்கொண்ட வர்களே! பிராமணரல்லாதாருள் உத்தியோகமில்லா தார்கள் பலர் உள்ளனர். இதனைப் பிராமணரல் லாதார் உணர வேண்டும். உணர்வாராயின், காங்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சியென்பது சமுதாயம் பற்றி எழுந்தனவேயன்றி அரசாங்கம் பற்றி எழுந்தன அல்ல என்பதை இனி அறிந்து அரசாங்கக் காரணமாக காங்கிரஸ் கட்சியோடு கூடமாட்டார்கள்.

செல்வமிக்க சைவ மடத்தார் பெரும்பான்மையும் தற்காலத்திலும் பிராமணர்க்கே பெரும் பயன் விளைத்தற் பொருட்டு இலவசப் பள்ளிக்கூடங்களும் ஆஸ்டல்களும் ஏற்படுத்திச் சைவ சமய மக்களைச் சிறிதுங் கவனியாது இருப்பதற்குக் காரணமென்ன? பிராமணரல்லாதாருள் செல்வவான்களுடைய பொருள் கள் பிராமணரது நாடகங்களுக்கும், சங்கீதக் கச்சேரி களுக்கும் சாப்பாட்டு விடுதிகளுக்கும், பிராமண வக்கீல் களுக்கும் இன்னும் பிராமணருக்கே பயன்படும் மணச்சடங்கு, பிணச்சடங்கு முதலிய பல சடங்கு களுக்கும் ஏராளமாகச் செலவாகிக் கொண்டிருக்க பிராமணரல்லாதாருடைய பிள்ளைகள் கல்வியின்றிப் பிழைக்கும் வழியறியாது மயங்கித் தயங்கித் தெருவில் நின்று திகைப்பானேன்? இவற்றையெல் லாம் பிராமணரல்லாதாருட் செல்வவான்கள் கவனிப் பார்களாயின் பிராமணரல்லாதார் நிலை இற்றைக்கு இருக்கிறவிதம் இராது.

இதைப் பெரியார் அல்ல தமிழ்ப் பெரும்புலவர் கா.த.பிள்ளை ஆவார். 14.8.1927 குடிஅரசு ஏட்டில் “தமிழ்த்தாய்” என்ற தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்று “அன்பு” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையில் யாம் தமிழைப் பற்றி எழுதும் நிலையில் நமது தமிழ்த்தாய் இருக்கின்றாள். தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமிழ்மொழியைப் போற்றாது, மேனாட்டு மொழியில் மோகங்கொண்டும், அதனைப் பேசுவ தாலும், எழுதுவதாலும் பெரும்புகழ் உண்டாகிறதென்றும் வீணே அருமைத் தமிழ்த்தாயை மறந்திருக் கின்றனர். மேனாட்டு மொழியைப் படிப்பது வயிற்றை வளர்ப்பதற்காக என்பதை அறவே மறந்துவிட்டனர்.

தமிழ்மொழியாலே எந்த நாட்டுப் பொருள்களை யும் ஒலித்திட முடியும். எழுதுவதும் தமிழ் எழுத்தா லேயே எழுதிடவும் முடியும். பிறநாட்டுப் பொருள் களைப் பற்றி ஒலிக்குமிடத்து ஒலித்திறம் அறிந்து ஒலித்திடின் ஒரு சிறிதும் குற்றமில்லாது ஒலிக்கலாம். தமிழில் திருவன், திருவாளர், திருமிகு, திருவாட்டி என்று வழங்குவது சாலச் சிறந்ததாகாதோ? தமிழ் மொழியில் இயன்றவரை வடமொழிகளையும் கல வாமல் வருவதே சாலச்சிறந்ததாகும். வடமொழி எழுத்துக்களையேனும், மேனாட்டு மொழி எழுத்துக் களையேனும் கண்டிப்பாய் அகற்றித் தொலைக்க வேண்டும்.

தமிழ்க்கொடி வாடிக் கிடந்தது. இப்போது வணிக நாட்டிற் சிறிது தலைதூக்கி நிமிரப் பார்க்கிறது. பிற ஒவ்வொரு ஊரார்களும் தமிழ்த்தாயைப் போற்ற எழுங்கள்! விடிந்துவிட்டது, இன்னும் தூங்கா தேயுங்கள்! உங்கள் பொருளையெல்லாம் தமிழுக்காகச் செலவு செய்யுங்கள்! உங்கள் முயற்சி எல்லாம் தமிழுக்கே கொடுங்கள்! உங்கள் இளமையைத் தமிழுக்காகப் பயன்படுத்துங்கள்! உங்கள் மொழிக்காகப் பாடுபடுங் கள்! அப்போதுதான் நாடு உரிமை பெறும்.” தனித்தமிழ் இயக்கமே சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவுடன்தான் வளர்ந்தது. கரந்தை தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய உமாமகேசுவரனார் நீதிக்கட்சியைச் சார்ந்தவரே ஆவார்.

தமிழ்மொழியைச் சிறந்த முறையில் பாராட்டி எழுதி வந்த அதே வேளையில் அவ்வப்போது இந்தியைக் கண்டித்தும் வந்திருக்கிறது. 1929இல் சென்னையில் இந்திப் பிரச்சார சபைக்குக் கட்டடம் கட்ட ஒரு இலட்சம் நிதி திரட்டப், பார்ப்பனர்களும் காங்கிரசுகாரர்களும் முயற்சி செய்து வந்தனர். அந்த முயற்சியை அப்போதே வன்மை யாகக் கண்டித்து எழுதியது தந்தை பெரியாரின் குடிஅரசு ஏடு. இந்திப் புரட்டு என்றத் தலைப்பில் 20.1.1929 குடிஅரசு ஏட்டில் தலையங்கம் எழுதப் பட்டது. அத்தலையங்கத்தின் ஒரு பகுதி வருமாறு :

“சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு, சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர் களை இந்திப் பிரச்சாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரச்சாரம் செய்ய அழைத்து வரப்போகின்றதாகத் தெரியவருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரச்சாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல், பார்ப்பனரல் லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள்.

கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய அய்ந்து லட்சம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பனர்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருடம் காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க, இப்போது இன்னும் ஒரு லட்சம் ரூபாய்க்குத் திட்டம் போட்டுச் சில பார்ப்பனர்கள் வெளிக்கிளம்பி இருப்பது பார்ப்பனர் களின் சமார்த்தியமா, பார்ப்பனரல்லாதார் களின் முட்டாள்தனமா என்பது நமக்குப் பூரணமாய் விளங்க வில்லையானாலும் ஒருவாறு இது பார்ப்பன ரல்லா தர்களின் முட்டாள்தனமான இளிச்சவாய்த் தன்மை என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனர்கள் வந்து எதற்காகப் பணம் வேண்டுமென்று கேட்டாலும் நம்மவர் கள் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள். வருணாசிரம மாநாடு நடத்தப் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுக்கும் பார்ப்பனல்லாதவர்கள், இந்திக்குப் பணம் கொடுப்பது ஒரு அதிசயமல்ல. எனவே பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், இந்தியினுடை யவும், இந்தி பிரச்சாரத்தினுடையவும் ஆன புரட்டையாவது பொது ஜனங்கள் அறியட்டுமென்றே இதை எழுது கின்றோம்.

முதலாவது இந்திபாஷை என்றால் என்ன? அதற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்? அதைப் படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன?...

இந்தி பாஷை என்பது தமிழ் மக்களுக்கு விரோத மான ஆரிய பாஷையாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுவதும் புராணங்களும் மூடப்பழக்க வழக்கங்கள் கொண்டதும், பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏற்படுத் தப்பட்டதுமாகும்.

“இப்போது தமிழ்நாட்டில் இந்தி பாஷை பரப்ப வந்திருப்பதுதென்பது தற்காலம் தமிழ்நாட்டில் உள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியாகும். ஆதலால் இதற்கு எந்தப் பார்ப்பனல்லாதாராவது பணம் கொடுத்தால் அது பெரிய சமூகத் துரோகமாகும்.”

ஆக சுயமரியாதை இயக்கம் தொடங்கியது முதலே தமிழை ஆதரித்தும் இந்தியை எதிர்த்தும் வந்திருப் பதை அறியலாம்.

- தொடரும் keetru.com 08 01 2013

16 12 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 5

 காங்கிரசில் மனக்கசப்பு

ஈ.வெ.ராவுக்குக் காங்கிரசில் மனக்கசப்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை 13.8.1950இல் சென்னை பெரம்பூரில் அவரே கூறுகிறார்.

“1924ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் என்னுடைய தலைமையின்கீழ்க் காங்கிரசு மாகாண மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் ஆகியவர்களின் ஆள்கள் தியாகராயச் செட்டியார் அவர்களையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மோசமாக, அளவுக்கு மீறித் தாக்கிப் பேசினார்கள். இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. எனவே, அவர்கள் பேசியதற்கு எதிராக நானும் இராமநாதனும் பேச முயன்றோம். மாநாட்டின் தலைவர் என்றதால் நான் பேச முடியாமல் போகவே, இராமநாதன் அவர்கள் பேச ஆரம்பித்தார். அப்போது நமது ஷாபி அவர்கள் இராமநாதனை எதிர்த்து வாய்க்கு வந்தபடிக் கேவலமாகப் பேசினார். அப்போது நமது ஆள்களாக இருந்த அண்ணாமலைப் பிள்ளையும் தஞ்சாவூர் வெங்கிடகிருஷ்ண பிள்ளையும் - ரெங்கசாமி அய்யங்காரையும், சீனிவாச அய்யங்காரையும் எதிர்த்து, அவர்கள் தியாகராயரைத் தாக்கியதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்தார்கள். அந்த மாநாட்டிலேயே எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார் (ஈ.வெ.ரா. சிந்தனைகள், 2ஆம் பதிப்பு, தொகுதி 2, பக்கம் 603).

பார்ப்பனர்களின் செயல்பாட்டில் வெறுப்புற்ற ஈ.வெ.ரா. அவர்கள் பார்ப்பனர்களின் கட்டுக்கதையே இந்தியத் தேசியம் என்பதைப் புரிந்து கொண்டார்.

“பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம், தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறோம். ‘தேசியம்’ என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனியமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கிற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்தின் பழைய நாகரிகம், சனாதன தர்மம், பழைய பழக்க வழக்கம் என்பவைகளையே பிரதானமாகக் கொள்ளும்படிப் பிரச்சாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியப் புராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக்காட்டிப் பிரச்சாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இந்தக் கருத்தைக் கொண்டே தான் கராச்சி காங்கிரசு சுயராஜ்யத் திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டைப் பாரத மாதா (பூமி தேவி) என்று அழைப்பதும், பாரத தேசம் என்று சொல்லுவதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டதே ஒழிய வேறில்லை”. இந்தியத் தேசியம் என்பதே பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே ஆகும். (சித்திரபுத்திரன் கட்டுரை, குடிஅரசு 19.3.1933).

பெரியார் ஈ.வெ.ரா. அவர் கள் 1919 முதல் 1925 வரை இந்திய தேசியக் காங்கிரசில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். அந்த ஆறு ஆண்டுகள் அனுபவத்தில் அவர் காங்கிரசில் உணர்ந்தது- காங்கிரசு என்பது முழுக்கப் பார்ப்பனர்களின் நலனுக்கான அமைப்பு என்பதுதான்.

சேரன்மாதேவி போராட்டத்தின்போது எல்லாச் சாதியினரும் ஒன்றாக உணவருந்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் காங்கிரசில் நிறைவேற்றியபோது, மதுரை வைத்தியநாத அய்யர், சி.இராசகோபாலாச் சாரி, டி.எஸ்.எஸ்.இராசன் போன்ற பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டே விலகுவதாக விலகல் கடிதம் கொடுத்தனர்.

பனகல் அரசர் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றிய போதும் எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாய் அதை எதிர்த்தனர். வகுப்புரிமைக் கோரிக்கையின் போதும் பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்தனர். இதனால் காங்கிரசின் மீது பெரியாருக்கு வெறுப்பு ஏற்பட்டது. பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், இந்திய தேசியக் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற பெரியாரின் அனுபவ வாயிலான முடிவுதான் - அவர் காங்கிரசை விட்டு வெளியேறக் காரணமாக இருந்தது. பெரியார் 1925 நவம்பரில் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் இருந்து வெளியேறியபோதிலும், காந்தியின் மீது மட்டும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. 1927 சூலை மத்தியில் பெங்களூரில் எஸ்.இராமநாதனும், பெரியாரும் காந்தியைச் சந்தித்து வருணாசிரமம் தொடர் பான அவருடையக் கருத்தை அறிய நேரில் விவாதித்தனர். பிறப்பின் அடிப்படையில்தான் வருணம், அவரவர் வருணத் தொழிலைச் செய்வதே உயர்வுக்கு வழி என்று காந்தி கூறினார். இனிமேல் காந்தியைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தார் பெரியார். ஆனால் 1927 வரை அவருடைய குடிஅரசு இதழில் ‘இராட்டை’ இடம் பெற்றிருந்தது.

மதுரையில் 12.12.1926இல் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத மாநாட்டில்தான் சுயமரியாதை இயக்கத்திற்கான கொள்கைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன:

1. (அ) மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றும், சமூக வாழ்வில் எல்லோரையும் சமமாய்ப் பாவிக்க வேண்டும் என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

ஆ.தீண்டாமை என்னும் கொடிய வழக்கமானது, மனிதருக்குள் மனிதரைப் பிரித்து வைக்கவும், நிரந்தரமாய் ஒற்றுமை இல்லாமல் செய்யவும், மனிதனின் பிறப்புரிமையான சுயமரியாதையைக் கெடுப்பதுமாய் இருப்பதால் இதை அடியுடன் ஒழிக்க வேண்டுமென்று இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

2.            பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்போர் தங்களது மதசம்பந்தமான சுப-அசுப சடங்குகளுக்குத் தங்களைவிட உயர்ந்த வகுப்பார் என்கிற எண்ணத்தின்பேரில் வேறு வகுப்பாரைக் கொண்டு செய்து கொள்வது நாமே நம்மைத் தாழ்ந்த வகுப்பார் என்று ஒப்புக் கொள்வதாயிருப்பதாலும், இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாராமாயிருப்பதாலும், இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம் மாநாடு தீர்மானிக்கிறது.

3.            இந்துக் கோவில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூசை யிலும், தொழுகையிலும் சமஉரிமை உண்டென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. (வே.ஆனைமுத்து பெரியாரியல் தொகுதி-1, பக்கங்கள் 129, 130)

அதே மாநாட்டில்தான் பெரியாரின் முயற்சியால் கதர் பற்றிய தீர்மானமும் மதுவிலக்கு பற்றிய தீர்மான மும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 2

“நாட்டின் ஜீவாதாரமான கைத்தொழிலை விருத்தி செய்யவும், நிரந்தரமாக வறுமையைப் போக்கவும், ஏழை மக்களைக் காப்பாற்றவும், கைராட்டினத்தால் நூல் நூற்றுக் கைத்தறியினால் நெய்யப்பட்ட கதர் வஸ்திரத்தை ஒவ்வொருவரும் அணிவதே முக்கியமான மார்க்கமானதால் எல்லோரும் கதரையே உடுத்த வேண்டுமென்று இம்மாநாடு வற்புறுத்துகிறது. (1927 சூலையில் பெரியார் காந்தியை நேரில் சந்தித்து விவாதித்த பிறகு, காந்தியத்தை எதிர்த்தது போலவே கதரையும் எதிர்த்தார்).

தீர்மானம் : 6

நாட்டின் ஒழுக்கத்திற்குக் கேடானதும் வறுமைக்கும் குற்றங்களுக்கும் காரணமானதுமான மதுபானத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. (குடிஅரசு 2-1-1927)

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 26.12.1926இல் நீதிகட்சியினர் மதுரையில் நடத்திய 10ஆவது பார்ப்பனரல்லாதார் மாநாட்டையே, சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஏற்கும்படியும், காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் முதன்மையான, கதர், மதுவிலக்குத் தீர்மானங்களையும் ஏற்க வைத்துள்ளார்.

பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறிவந்த காலந்தொட்டே பார்ப்பனர்களின் சூழ்ச்சியான இந்தியத் தேசியத்தையும், இந்திமொழியையும் கண்டித்து வந்துள்ளார்.

பெரியார் ‘தமிழிற்குத் துரோகமும் இந்தி மொழியின் இரகசியமும்’ என்ற கட்டுரையை 7-3-1926 குடிஅரசு இதழிலேயே எழுதியுள்ளார். அதில் அவர்

“இதுவரை இந்திக்காகச் செலவாயிருக்கும் பணத்தில் பெரும்பாகம் பிராமணரல்லாதாருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர் பிராமணர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மொத்தத் தொகையில் 100க்கு 97 பேர் பிராமண ரல்லாதாராய் இருந்தும் 100க்கு 3 வீதம் உள்ள பிராமணர்கள்தான் இந்தி படித்தவர்களில் 100க்கு 97 பேர்களாயிருக்கிறார்கள். பிராமணரல்லாதார் 100க்கு 3 பேராவது இந்தி படித்திருப்பார்களா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலை ஒன்றுமில்லை. ஆனால் இதில் 100க்கு ஒரு பங்கு கவலைகூட தமிழ்பாஷைக்கு எடுத்துக் கொள்ளுவதில்லை. இந்தி படித்த பிராமணர்கள் நமக்குச் செய்துள்ள கெடுதியை நினைக்கும் போது இதைப்பற்றி வருந்தாமலும், இம்மாதிரி பலன் தரத்தக்க ஹிந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும் நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரனத்திற்கும் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை.”

மோதிலால் நேரு ஈரோட்டுக்கு வந்தபோது பெரியார் வீட்டில் இந்திப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. பாதிப் பணம் பெரியாரின் சொந்தப்பணம், மீதம் பாதி காங்கிரஸ் கட்சிப் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலுக்காகத்தான் பெரியார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இந்த இந்தி பாஷையானது நம் பணத்தில், நம் பிரயத்தனத்தில்-நமது நாட்டில் பல பிராமணர்கள் படித்து வெளி மாகாணங்களுக்குபோய், ஆங்காங்கு நமக்கு விரோதமாய் பிரச்சாரம் செய்வதும், நம்மைச் சூத்திரர்கள், புத்தி இல்லாதவர்கள், முட்டாள்கள் என்றும், தென்னாட்டுப் பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்று சொல்வதும், வெளி மாகாணங்களில் உள்ள வர்த்தமான பத்திரிகைகளில் போய் அமர்ந்து கொண்டு, பிராமணர் ஆதிக்கத்தைத் தேசமெல்லாம் நிலை நிறுத்தவும், பிரமணரல்லாதாரை அழுத்தப் பிரச்சாரம் செய்யவும், வெளி மாகாண காங்கிரஸ் முதலிய பொது ஸ்தாபனங்களிலும் இவர்களே தலைவர்களாகவும், அவற்றில் மாதம் ரூ.100, 200, 300 வீதம் சம்பளம் பெற்றுப் பிழைப்பதுமான காரியத்திற்கல்லாமால் வேறு வழியில் நமக்கு ஒரு பலனையும் அளிப்பதில்லை.” (பெரியார் 1926 இல் சொன்னது இன்றுவரையில் மாற்றமில்லாமல் உள்ளது)

அதே கட்டுரையில் மேலும் பெரியார் எழுதுகிறார்.

“நமது நாட்டில் சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லட்சம் ரூபாய் செலவாகிறது’ அது அவ்வளவும் யாருடைய பணம்? சமஸ்கிருத்திற்கென்று தனியாக எவ்வளவோ பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதில் படிக்கிறவர்கள் எல்லாம் யார்? இதன் உபாதியாயர்கள் எல்லாம் யார்? பிராமணரல்லாத உபாத்தியாயரை யாவது, பிராமணரல்லாத பிள்ளைகளையாவது இதில் சேர்த்துக் கொள்கிறார்களா? அரசாங்கத்திலாவது சமஸ்கிருத்திற்கு இருக்கிற யோக்கியதை தமிழுக்கு இருக்கிறதா?...”

“இந்தியும் சமஸ்கிருதமும் இப்படியிருக்கத் தமிழைப் பற்றியோவென்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கென்று தனித்தனியாய் எத்தனைப் பள்ளிக்கூடம் இருக்கிறது. சமஸ்கிருத்திற்கு இருக்கும் பள்ளிக்கூடம் அளவில் நாலில் ஒரு பங்காவது இருக்கிறதா? பிராமணரல்லாத தமிழ் வித்துவான்கள் பேராவது பொது ஜெனங்களுக்குத் தெரியக்கூடியதாய் இருக்கிறதா?...”

“தமிழ்த் புத்தகம் என்பது சுத்தத் தமிழில் எழுத வேண்டாமா? அவற்றிற்கு ஏற்ற தமிழ்வார்தைகள் இல்லையா? நமது தமிழ்நாட்டின் பழக்கம் வழக்கம் அதில் இருக்க வேண்டாமா? என்று கேட்டால் நம்மவர்களுக்குள்ளாகவே பாஷபிமானம். பாஷாபிமானம் என்று பேசி நம்மை ஏமாற்றுபவரும் பிராமணசிஷ்யருமான சிலர் உடனே பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலந்தால் தமிழுக்கு யோக்கியதை குறைந்து போகாது, அப்படிக் கலப்பதுதான் பாஷையின் முன்னேற்றம் என்கிறார்கள்.”

“பழையன கழிந்து புதியன புகுவதாயிருந்தால் நமக்குக் கவலையில்லை. புதியவை வந்து பலாத்காரத்தில் புகுந்துகொண்டு பழையவைகளைக் கழுத்தைப் பிடித்து தள்ளுவதானால் அதையும் சகித்துக் கொண்டு அதற்கு வக்காலத்து பேசுவது என்பது பாஷைத் துரோகமும் சமூகத் துரோகமும் ஆவதோடல்லாமல், தமிழ்த்தாயின் கற்பை, தமிழ்த் துரோகிகளுக்குச் சுய நலத்திற்காக விற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.”

1926 இல் பெரியார், தமிழ்மொழி பார்ப்பனர்களிடமும், அவர்களின் அடிமைப் புத்தி கொண்ட புலவர்களிடமும் அகப்பட்டுச் சீரழிவதைக் கண்டித்து எழுதியுள்ளார்.தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ் அறிஞர்கள் இடம் பெறவில்லை என்பதைப் பெரியார் 1926 இல் கண்டித்து எழுதியுள்ளார். இது குறித்துத் தமிழ் சர்வகலா சாலைக் கமிட்டி என்ற தலைப்பில் 1-8-1926 இல் பெரியார் எழுதியது:

“தமிழ் நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சில நாட்களாகத் தமிழர் பலர் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ்க் கலாசாலையே ஏற்படாதிருக்கப் பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசியில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலாசாலை (பல்கலைக்கழகம்) ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.

இக்கமிட்டியும் பெருங்கபடத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும் ஏனெனில் தமிழ் மொழியில் ஆணிவேர் முதல் நுனிவரை நுணுகி ஆராய்ந்து தமிழ்மொழியே உயர் தனிச் செம்மொழியெனக் கொண்டு தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்காகவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார் (மறைமலையடிகள்) ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமா மகேசுவரம்பிள்ளை, பா.வெ.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணியப்பிள்ளை, மு.சா. பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள பதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.”

பெரியார் ஆரம்பத்தில் சொன்னவாறே அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பல்கலைக்கழகமாக அமையாமல் போயிற்று.

1928 இல் சென்னை மாகாண அரசு அளித்த 27 இலட்சம் உருபாயையும் அண்ணாமலைச் செட்டியார் அளித்த 20 இலட்சம் உருபாயையும் சேர்த்து அண் ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் உருபாய் பணத்தைத் தொடர் மானியமாக அரசு அளித்து வந்தது.

1925இல் கரந்தை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பொழில் திங்கள் ஏட்டின் நற்பயனைப் பாராட்டி அதனைத் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டுமென்று 24.10.1926 குடிஅரசு ஏட்டில் வேண்டுகோள் விடப்பட்டது.“தஞ்சாவூர் “கரந்தை தமிழ்ச்சங்க”த்தினின்றும் “தமிழ்பொழில்” என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளை அவர்களைக் ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப்போந்து நற்பயன் அளித்தமை நேயர்கள் அறிந்திருக்கலாம்...

செந்தமிழ்ச் செல்வர்கள் ஊதியம் கருதாது தமிழில் தொண்டொன்றே கருதித் தனித்தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம்.தமிழ்ப்பொழில் ஏட்டினை சுயமரியாதை இயக்கத் தோழர்களிடையே குடிஅரசு இதழ் வாயிலாக நல்ல வண்ணம் விளம்பரம் செய்வித்தார்.

- தொடரும் keetru.com 14 12 2912

09 12 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 4

காங்கிரசில் பெரியார் ஈ.வெ.இராமசாமி

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஈரோட்டில் வள மான குடும்பத்தில் பிறந்தவர். வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1917 முதல் 1919 வரை ஈரோடு நகர மன்றத் தலைவராக விளங்கினார். 1914 முதல் காங்கிரசு மாநாடுகளுக்குச் சென்று வந்தார். 1914இல் சென்னையில் நடைபெற்ற மாநாட் டிற்குச் சென்றிருந்த அனுபவத்தை அவரே கோட்டாறு சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கூறியுள்ளார்.

சென்னை காங்கிரசு இராஜ விசுவாசத் தீர்மானம் :

“அப்பொழுதெல்லாம் காங்கிரசின் முதல் தீர்மானம் இராஜவிசுவாசத் தீர்மானமேயாகும். உதாரணமாக, 1914ஆம் வருடம் சென்னையில் கூடிய காங்கிரசுக்கு நான் சென்றிருந்தபோது, கல்கத்தா திருவாளர் பூலேந்திநாத் போஸ் தலைமை வகித்திருந்தார். காங்கிரசு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கையில் சென்னை கவர்னர் லார்ட் பெண்ட்லண்ட் துரைய வர்கள் காங்கிரசுக்கு விஜயம் ஆனார். அவர் விஜய மானதும் மற்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட்டுத் திருவாளர் சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் உடனே எழுந்து ஒரு இராஜ்ய விசுவாசத் தீர்மானத்தைப் பிரேரேபித்து, வெகு அழகாக - அதாவது, இந்தியா வுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் கடவுளால் அனுப்பப் பட்டது என்றும், இந்திய மக்கள் தலைமுறை தலை முறையாய் இராஜ விசுவாசிகளாய் இருக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார். பலர் ஆமோதித்துப் பேசிய பின் 5 நிமிட கரகோசத்துடன் அதை (இராஜ விசுவாசத் தீர்மானம்) நிறைவேற்றினர். சென்னை அமிதவாத தேசியவாதிகளான அய்யங்கார் கூட்டத்தினர்கள் சமீப காலம் வரை, எட்வர்டு மன்னரும், ஜார்ஜ் மன்னரும் விஷ்ணு அம்சமென்றே பேசி, வேதங்களிலிருந்தும் சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக்காட்டி வந்தார்கள். அதாவது அவர்கள் விஷ்ணு அம்சமென்று வேதம் கூறுவதாக உரைத்துக் கொண்டு வந்தார்கள்”. (ஈ.வெ.ரா. சிந்தனைகள்-தொகுதி 3, 2ஆம் பதிப்பு, பக்கம் 580-81, குடிஅரசு 4.7.31).

இந்தியத் தேசியக் காங்கிரசின் கோவை மாவட்ட இரண்டாவது மாவட்ட மாநாடு ஈரோட்டில் டாக்டர் டி.எம். நாயர் தலைமையில் 24, 25.7.1915 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஈ.வெ.ரா. வரவேற்புக் குழுத்தலைவராக இருந்து மாநாட்டைச் சிறப்பாக நடத்தி வைத்தார். பெரியார் ஈ.வெ.ராவும் டாக்டர் டி.எம். நாயரும் சந்தித் தது இதுவே முதல் முறையாகும்.இம்மாநாட்டில் “தர்ம ஸ்தா பனங்கள் மதம் சம்பந்தமான தேவாலயங்கள் சரிவரப் பரிபா லனம் செய்யப்படாததால் கிரம மமாய் நடக்கும் வண்ணம் இப் போதிருக்கிற சட்டத்தைக் கொஞ்ச மேனும் தாமதிக்காமல் சீர்திருத் தம் செய்து மாற்றிட வேண்டு மென்று கவர்ன்மெண்டாரை இக்கூட்டம் வற்புறுத்து கிறது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பனகல் அரசர் இந்து அறநிலையச் சட்டம் கொண்டு வந்த போது பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தபோது பெரியார் இப்படி ஒரு சட்டம் தேவையென்று 1915 காங்கிரசு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார் (குடிஅரசு 22.11.1925).

வகுப்புரிமைத் தீர்மானம்

1919இல் திரு. சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வகுப்புரி மைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரசின் 26ஆம் மாகாண மாநாட்டின் போது சாப்பாட்டு விடுதியில் ஈ.வெ.ரா. தலைமையில் பார்ப்பனரல்லாதார் கூட்டம் நடைபெற்றது. சட்ட சபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகத்திலும் விகிதாச்சாரப்படி வகுப்புரிமைப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்த முடிவு செய்தனர். சோமசுந்தரம்பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, வைகுண்டம் முதலிய வழக்குரைஞர்கள் ஒன்றுசேர்ந்து விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய அத்தீர்மானத்தை ஈ.வெ.ரா. முன்மொழிய, வ.உ. சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை ஆகியோர் வழிமொழிந்து பேசினர். கஸ்தூரி ரங்க அய்யர் எழுந்து விகிதாச்சாரம் (Percentage) என்கிற வார்த்தைக்குப் பதிலாகப் ‘போதுமான’ என்னும் அர்த்தத்தைக் கொடுக்கும் அடிக்குவேட்லி (Adequately) என்கிற வார்த்தையைப் போட்டுக் கொள்ளும்படி ஒரு திருத்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தக் ‘அடிக்குவேட்லி’ என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று ஈ.வெ.ரா. அவர்கள் மாநாட்டின் தலைவர் சீனிவாச அய்யங்காரைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தம்தான். ஆனால் ‘பெர்சன்டேஜ்’ என்பதை விட ‘அடிக்குவேட்லி’ என்பது நல்ல வார்த்தையென்று சொல்லிவிட்டார். மாநாட்டின் இறுதியில் பொது நன்மைக்கு விரோதமென்றுக் கூறி இத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்.“அரசாங்கக் கல்வித்துறையில் சமஸ்கிருதக் கல்விக்கு இருக்கும் பயிற்சியும் யோக்கியதையும் செய்முறையும், தமிழ்க் கல்விக்கும் இருக்க வேண்டுமென்ற மற்றொரு தீர்மானத்தை ஈ.வெ.ரா. முன் மொழிய வ.உ.சிதம்பரம்பிள்ளையால் வழிமொழியப்பட்டு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (குடிஅரசு 6.12.1925).

1921இல் தஞ்சையில் நடைபெற்ற மாகாண மாநாட்டிலும், 1922இல் திருப்பூரில் கூடிய மாநாட் டிலும், 1923 சேலத்தில் கூடிய மாநாட்டிலும், 1924இல் திருவண்ணாமலையில் பெரியாரின் தலைமையில் கூடிய மாநாட்டிலும் கடைசியாக 1925இல் காஞ்சிபுரம் மாநாட்டிலும், வகுப்புரிமைத் தீர்மானங்கள் நிறை வேற்றப்படாமல் போகவே கொதித்தெழுந்த பெரியார் இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று கூறி மாநாட்டுப் பந்தலிலிருந்து தன் தோழர்களுடன் வெளியேறினார்.நீதிகட்சிக்குப் போட்டியாகச் சென்னை மாகாணச் சங்கம் என்ற அமைப்பைக் காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் தோற்றுவித்தார்கள். பி. கேசவபிள்ளை அதன் தலைவராக இருந்தார். துணைத் தலைவர் ஈ.வெ.ரா. செயலாளராக வரதராசலு நாயுடு முதலி யோர் இருந்தனர். இதன் நோக்கம் பார்ப்பனரல்லா தாருக்கு வகுப்புரிமை பெற்றுத்தருவது ஆகும். இந்த இயக்கத்திற்காகத் திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு ‘தேசபக்தன்’ என்ற ஏடும், ஆங்கிலத்தில் கருணாகர மேனனை ஆசிரியராகக் கொண்டு ‘இண்டியன் பேட்ரி யாட்’ என்ற இதழும் தொடங்கி நடத்தப்பட்டன. இது ஒரு வரையறுக்கப்பட்ட குழுமமாகும். ஈ.வெ.இராமசாமி 1000 செலுத்தி அந்த குழுமத்தின் ஒர் இயக்குனராக இருந்தார். காங்கிரசு மாநாடுகள் கூடும்போது இந்தச் சென்னை மாகாணச் சங்கமும் தனியேக் கூடி வகுப்புரி மைக் கோரிக்கைக்காகப் பாடுபட்டு வந்தது. ஆனால் பார்ப்பனர்கள் நீதிகட்சியை வீழ்த்துவதற்கு இதைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனரே தவிர, வகுப்புரிமைத் தீர்மானம் வெற்றி பெற வழிவிடவே இல்லை.

நம்பிக்கைத் துரோகம் என்ற தலைப்பில் 20.12.1925 நாளிட்ட குடிஅரசு ஏட்டில் ஈ.வெ.ரா. அவர்கள் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார். “ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரசைப் பின்பற்றுவது; தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது; பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகிய வையே ஆகும். இக்கொள்கைகளைத் தென்னாட்டுத் தேசியப் பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்ததோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாய் இருப்பதாகச் சொல்லி நமது கூடவே இருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு இப்பொழுது “நீக்குப் பெப்பப்பே, நீவு தாதாவுக்குப் பெப்பப்பே” என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு இதற்குச் சிலப் பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களைச் சுவாதினமாக்கிக் கொண்டு அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசியத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனச் சாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்துவிட்டார்கள் என்று பெரியார் எழுதினார்.

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத் திற்காகச் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே நீதிக்கட்சியைத் திட்டமிட்டு அழித்து வருவதை ஈ.வெ.ரா. உணர்ந்தார்.துறவறத்திற்குக் காவி வேஷ்டி உடுத்திக் கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ அதுபோல் ராஜீயத்திலும் உரிமை, சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும் மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் பல காரியங்களுக்கு உப யோகப்படுத்தக் கூடிய சாதனமாய்ப் போய்விட்டது என்று பெரியார் கூறினார்.ஈ.வெ.ரா.வின் துணைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் 1921 முதலே காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டனர். 1922இல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் முன்னின்று போராடினர். ஈ.வெ.ரா. தன் வீட்டுத் தென்னை மரங்களில் கள் இறக்க வேண்டாம். குத்தகைத் தொகையைத் திருப்பித் தருகிறேன் என்று கேட்டுக் கொண்டார். குத்தகைக்கு எடுத்தவர்கள் மறுத்த காரணத்தால் கோபமுற்ற ஈ.வெ.ரா. சேலம் தாதம்பட்டியில் தம் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

1922இல் மும்பையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் காந்தியாருக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்டுச் சொல்லும்படி மாநாட்டின் தலைவர் சர்.சி. சங்கரன் நாயர் அவர்களிடம் லார்ட் ஆர்டிஞ் பிரபு கேட்டிருந்தார். சங்கரன் நாயரும் காந்தியைப் பார்த்து “உமக்கு என்ன வேண்டும்” என்றார். காந்தி எனக்கு என்ன வேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களைக் கேட்டு சொல்கிறேன் என்றார். அவர்கள் இருவரும் ஈ.வெ.ரா.வின் மனைவி நாகம் மாளும், தங்கை கண்ணம்மாளும் ஆவர். இச்செய்தி 19.1.1922 இந்து நாளேட்டிலும் வந்துள்ளது (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் பதிப்பு, தொகுதி 12, பக்கம் 1188).கதர் விற்பனையில் ஈ.வெ.ரா. தீவிரம் காட்டினார். தன் வீட்டுப் பெண்களைக் கதர் உடுத்த வைத்தார். இவ்வாறு காந்திய நிர்மாணத் திட்டத்தில் பெரியார் தீவிரமாகப் பாடுபட்டு வந்தார்.

சேரன்மாதேவிக் குருகுலப் போராட்டம் :

சேரன்மகாதேவியில் வ.வே.சு. அய்யர் காங்கிரசின் நிதியுதவியுடன் தேசியப் பள்ளி ஒன்றை நடத்தினார். அப்பள்ளியில் பார்ப்பன மாணவர்களுக்கு உயர்ந்த உணவும், “அதாவது ஸ்ரீமான் மகாதேவ அய்யர் என்று சொல்லப்படுகிறவரும் அவர் குழந்தைகளும் கூனி முறை என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டு தாங்கள் பழங்களும் தேங்காயும் வெல்லமும் கரும்பும் மாம் பழமும் முந்திரிப் பருப்பும் பேரீச்சம் பழமும், சாரப் பருப்பும் சாப்பிட்டுக் கொண்டு மற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குக் கஞ்சிச் சாதமும், அரிசிக் களியும், உப்புக் காரமில்லாத அரிசி உப்புமாவும் புளியில்லாத குழம்பும் ஜெயிலைவிட மோசமான நிலையில் இருந் ததைப் பெரியாரும் அவர் நண்பர்களும் நேரிலேயே பார்த்துள்ளதை அய்யாவே எழுதி உள்ளார் (குடிஅரசு, 10.01.1926).

இந்தச் சேரன்மாதேவிப் பார்ப்பனக் கொடுமையை முதன்முதலில் வன்மையாகக் கண்டித்து எழுதியவர் டாக்டர் வரதராசுலு நாயுடு ஆவார். தம் ‘தமிழ்நாடு’ இதழில் 12.10.1924 அன்று கீழ்க்காணுமாறு எழுதினார்.“சாப்பாட்டில் பிராமணர் ஒரு பக்கமாகவும், சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதார் ஒரு பக்கமாகவும் இருந்து சாப்பிட வேண்டும். இதை நான் நேரில் அறிவேன். குருகுலத்தில் இம்மாதிரி வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்று மையை ஒழிக்க முடியாதென்று அவர் (வ.வே.சு. அய்யர்) சொன்னார்.இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். இதைத் தெரிந்ததும் காங்கிரசிலிருந்து மறுபடியும் ரூ.5000 கொடுக்கவிருந்ததை நிறுத்திவிட்டோம். இது சென்ற வருடம் நடந்த சங்கதி. ஆனால் இதைப்பற்றி இதுவரை ‘தமிழ்நாட்டில்’ நான் குறிப்பிடவில்லை. வித்தியாசம் ஒழிந்துபோகும் என்று எண்ணியிருந்தேன்.சமீபத்தில் மலாய் நாட்டிலிருந்து ஸ்ரீமான் அமரபுரி என்ற நண்பர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ஸ்ரீ மகாதேவய்யர் அங்கே குருகுலத்திற்காக ரூ.20 ஆயிரம் வரை வசூல் செய்திருப்பதாகவும் மேலும் 22 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பதாக ஜனங்கள் வாக்குக் கொடுத்திருப்பதாகவும் அதில் பெரும்பான்மையோர் பிராமணரல்லாதார் என்றும் குருகுலத்தில் எந்தச் சாதி வித்தியாசமும் இல்லை என்று மகாதேவய்யர் சொன்னதாகவும் அது உண் மையா என்று கேட்டு எழுதியிருந்தார். எனவே குருகுலத்தைப் பற்றி இவ்வாரம் எழுத நேரிட்டது. சமபந்தி போஜனம், சமமான கல்வி முதலியவை கொடுத்துச் சமதிருஷ்டியுடன் நடத்தத் தயாராகவிருப் பதாக ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அறிவித்தாலன்றி இந்தக் குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்யக் கூடாதென்று பிராமணரல்லாதாரைக் கேட்டுக் கொள்கி றேன்” என்று எழுதியிருந்தார்.

டாக்டர் வரதராசலு குருகுலம் பற்றி மேலும் விரிவான ஒரு கண்டன அறிக்கையையும் எழுதியிருந் ததை சூ.ஆ. முத்துநாடார் அவர்கள் தம் நாடார் குலமித்திரன் இதழில் 1924 நவம்பர் 17, 24 இதழ் களில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.இந்தக் குருகுலப் போராட்டம் தீவிரமாக நடை பெற்ற போதுதான் வ.வே.சு. அய்யர், தமிழர், தெலுங்கர், கன்னடியர் என்ற பிரச்சினையைக் காங்கிரசுக் கட்சி யில் உருவாக்கினார் என்பதைப் பகுத்தறிவு ஏடு படம்பிடித்துக் காட்டியது.

“தமிழ்நாட்டு விசயத்தைப் பற்றி ஆந்திரத் தேசத் தாரான ஒரு நாயுடுவும் (டாக்டர் வரதராசலு நாயுடு) கன்னடத் தேசத்தாரான ஒரு நாயக்கரும் (ஈ.வெ.ரா.) கிளர்ச்சி செய்வது நமக்கு வெட்கமாக இல்லையா? ஆதலால் அவர்களது கிளர்ச்சியை ஆதரிக்கக் கூடாது” என்று காலஞ்சென்ற வி.வி.எஸ். அய்யர் அவர்களே கிளப்பிவிட்டார்கள்” (பகுத்தறிவு, கட்டுரை 16.12.1934; ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் பதிப்பு, தொகுதி 12, பக்கம் 1111).பொப்பிலி அரசருக்கும், முத்தையா செட்டியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தது. 1934 டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தோல்விக்கு முத்தையா செட்டியார்தான் காரணம் என்று நீதிகட்சியினர் குற்றம் சுமத்திய போது பொப்பிலி ஆந்திரர் என்று முத்தையா செட்டியார் கிளப்பிவிட்டார். அப்போதுதான் இக்கட்டுரை எழுதப்பட்டது. வ.வே.சு. அய்யர் 1925இல் இறந்துவிட்டார். மகாதேவ அய்யர் எவ்வளவோ முயன்றும் பார்ப்பனரல்லாதார் ஒத்து ழைப்பு அளிக்காததால் குருகுலம் மூடப்பட்டது.குருகுலப் போராட்டம் குறித்து காந்தி 13.7.1927, 27.7.1927 நாள்களில் எஸ். இராமநாதனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார். “மகாதேவ அய்யர் இங்கே என்னுடன் தங்கியுள்ளார். நீங்கள் என்ன முடிவு செய் துள்ளீர்கள் அய்யர் தன் நிலையை மாற்றிக் கொள்ளா தவரை ஆதரிக்கமுடியாது” என்று எழுதிவிட்டார். இறுதியில் குருகுலம் இழுத்து மூடப்பட்டது. (M.K.Gandhi

Collected Works, Vol.39, P.215, 304).

வைக்கம் சத்தியாகிரகம்

வைக்கம் சத்தியாகிரகத்தில் பெரியார் கலந்து கொண்டதுடன் தனது மனைவி நாகம்மையாரையும் தங்கை கண்ணம்மாளையும் அழைத்துச் சென்றார். பெரியார் கைது செய்யப்பட்ட போதிலும் நாகம்மாள் மக்கள் திரளைக் கூட்டிப் போராட்டம் நடத்தினார். 1924 முதல் ஓராண்டுக்கும் மேலாக நடந்த இப்போராட் டத்தில் ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் வைக்கம் தெருவில் நடக்கும் உரிமையைப் பெற்றனர்.பெரியாருக்குப் பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பன இராசாசி காந்தியாரை வர வழைத்து மகாராணியுடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார். உண்மையிலேயே காந்தி வைக்கம் போராட் டத்தை ஆதரிக்கவில்லை என்பது அவருடைய எழுத்துகள் மூலமே அறியலாம். ஜார்ஜ் ஜோசப் கிறித்தவர். ஆகவே அவர் இப்போ ராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அவருக்கு மடல் எழுதினார்.சீக்கியர்கள் வந்து உணவு சமைத்துக் கொடுத்து வந்தனர். நீங்கள் வேறு சமயம் இதில் நீங்கள் உதவிச் செய்யக்கூடாது என்று கூறி அவர்களையும் திரும்பப் போகச் சொல்லிவிட்டார்.

“இந்த இயக்கத்தை (வைக்கம் சத்தியாகிரகத்தை) ஆதரித்துக் காங்கிரசில் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூடாதா என்று கேரளப் பிரதிநிதிகள் கேட்டார்கள். அந்த யோசனை எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன்” (யங் இந்தியா, 3.7.1924). “வைக்கம் சத்தியாகிரகிகள் என்னை நம்புவார்களே யானால் காய்ந்து ஒடிந்த நாணல் புல்லின் மீது சாய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும்”.“வைக்கத்தைப் பற்றியும் நெருங்காமையை எதிர்த்தும் அங்கே நடந்து வரும் போராட்டத்தைப் பற்றியும் ‘யங் இந்தியா’வில் நீண்டகாலமாக நான் வேண்டுமென்றே எதுவும் எழுதவில்லை. இப்போதும் கூட அதையொட்டி நேரடியாக நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்று காந்தி தன் ‘யங் இந்தியா’ 19.2.1925இல் எழுதினார். இந்தக் காந்தி தான் வைக்கம் சத்தியாகிரகத்தை நடத்தியதாக காங்கிரசுக் காரர்கள் குறிப்பாக ஜெயமோகன் போன்றவர்கள் எழுதிவருவது வரலாற்று அறியாமையே ஆகும்.

- தொடரும் keetru.ccm 20112012    எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

29 11 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -3

வாலாசா வல்லவன்

4.1.1932 திராவிடன் ஏட்டில் சென்னைப் பல் கலைக்கழகம் சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட்டதைப் பாராட்டி எழுதப்பட்டது.14.9.1931 அன்று திருவல்லிக்கேணியில் நடை பெற்ற ‘இந்தி’ வகுப்புத் திறப்பு விழாவில் உரை யாற்றிய எஸ். சத்தியமூர்த்தி இந்தியாவுக்குப் பொது மொழியாக இந்தித்தான் வரவேண்டும். அதனால் அனைவரும் கண்டிப்பாக இந்தி படிக்க வேண்டும் என்று பேசியதை எஸ்.வி. லிங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளார் (திராவிடன் 24.9.1931).

1931ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி சென்னை நகராட்சியில் இந்தியை 5ஆம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளில் விருப்பப்பாடமாக வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.319).
1934ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் இந்தி கற்பிப்பது பற்றியத் திட்டத் தை விவரித்துச் சென்னை மாகாண அரசுக்குப் பரிந்துரைத்தது. அந்தத் திட்டத்தை அரசு திருப்பி அனுப்பியதோடு அதை iவிடுமாறும் ஆணையிட்டது (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.319).

1935ஆம் ஆண்டு ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்க ஏற்பாடு செய்துதரும்படி அரசைக் கேட்டுக் கொண்டது. மீண்டும் இந்தத் தீர்மானத்தை நீக்கிடச் செய்து மாநகராட்சிக்குத் திருப்பி அனுப்பியது நீதிக்கட்சி அரசு (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.320).மிகப்பெரும் தலைவராக அன்று இந்தியா முழுவதும் வலம்வந்த காந்தியும், தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலை வர்களும் இந்தியைத் தென்நாட்டில், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் பரப்புவதற்கு-ஏன் திணிப்பதற்குச் செய்த முயற்சிகளை எல்லாம் முறியடித்தது நீதிக்கட்சி அரசு.

ஆங்கிலத்தை நீதிக்கட்சி அரசு திணிக்கவில்லை. அது ஏற்கெனவே 150 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்ததுதான். அப்போது இரட்டை ஆட்சியில் இவர்களுக்குப் போதுமான அதிகாரம் இல்லாததால் ஆங்கிலத்தை அகற்ற முடியவில்லை. ஆங்கிலேயரும் ஆட்சியில் சம பங்கு பொறுப்பு வகித்தனர்.நீதிக்கட்சி ஆட்சியில் தொடக் கப் பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்வியே இருந்தது. மூன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. தாய்மொழி யும் ஒரு கட்டாயப் பாடமாக இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
எஸ்.சத்தியமூர்த்தி அய்யரின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) 7 தொகுதிகள் 1921 முதல் 1937க்குள் நீதிக்கட்சி ஆட்சி யில்தான் உருவாக்கப்பட்டது. வேறு எந்த மொழிக்கும் அந்த காலக்கட்டத்தில் இப்படி ஓர் அகராதி உருவாக்கப் படவில்லை.

1921 முதலே சட்டமன்றத்தில் அவரவர் தாய்மொழி களில் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. மதுரைப்பிள்ளை, டி.சி. தங்கவேலுப்பிள்ளை முதலானவர்கள் 1921 முதல் தமிழிலேயே சட்டமன்றத்தில் பேசியுள்ளார். சுவாமி சகஜானந்தம் 1927 முதல் தமிழிலேயே பேசியுள்ளார். அதேபோல தெலுங்கு மொழி உறுப்பினர்கள் தெலுங் கிலும், மலையாள மொழி உறுப்பினர்கள் மலையாளத் திலும், கன்னட மொழி உறுப்பினர்கள் கன்னடத்திலும் பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. உறுப்பினர்கள் தாய் மொழியில் பேசச் சபைத்தலைவரிடம் முன்கூட்டித் தெரிவிக்க வேண்டும். சுருக்கெழுத்தரை ஏற்பாடு செய்வதற்காக என்ற முறை நடைமுறையில் இருந்தது.

நீதிகட்சி ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட முக்கிய அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றித் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளி லும் வெளியிடப்பட்டன.நீதிக்கட்சியினர் ஆட்சியில் இருந்த போது ஆந்திர தனி மாகாணக் கோரிக்கை சட்டமன்றத்தில் 19.3.1928 இல் விவாதத்திற்கு வந்தபோது நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடுநிலை வகித்தனர். பனகல் அரசர் எதிர்த்து வாக்களித்தார். (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் தொகுதி 41, பக்கங்கள் 363-377, நாள் 19.3.1928)பொப்பிலி அரசர் முதலமைச்சராக இருந்த போதும் ஆந்திரா தனி மாகாணக் கோரிக்கை சட்டமன்றத்தில் 2.8.1933 அன்று விவாதத்திற்கு வந்த போதும் முதலமைச்சர் பொப்பிலி அரசர் உட்பட நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர் யாரும் அதற்கு ஆதரவாக இல்லை. (சட்டமன்ற விவாதக் குறிப்புகள் தொகுதி 67, பக்கங்கள் 198-227, நாள் 2.8.1933)

எனவே நீதிக்கட்சியைச் சார்ந்த முதல்வர்கள், தலைவர்கள் தெலுங்கர்களுக்கு ஆதரவாளர்களாக செயல்பட்டார்கள் என்பது உண்மையல்ல.தனி ஆந்திர மாகாணக் கோரிக்கை எழுந்ததற்கு காரணம் சென்னை மாகாண அரசில் ஆந்திரப் பகுதி யைச் சேர்ந்தவர்களுக்குப் போதிய அளவு கல்வி வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்பதுதான். தனி ஆந்திர மாகாணக் கோரிக்கையை எழுப்பியவர்கள் ஆந்திரா பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்களும், காங்கிரசுகாரர்களும் தான் என்பதை கே.வி. நாராயணராவ் என்பவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளார். (K.V.Narayana Rao, Emergence of Andra Pradesh.363)

நீதிக்கட்சியின் ஆட்சியின் போதுதான் 1924-25இல் மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு அது மிகப்பெரிய அளவில் பயன்பட்டு வருகிறது.நீதிக்கட்சி 1937 தேர்தலில் தோல்வி அடைந்த போது பார்ப்பனர்கள் மிகப் பெரிய அளவுக்குக் கொண் டாடி மகிழ்ந்தனர். ஏனென்றால் பல நூறு ஆண்டு களாகச் சமூகத்தில், கல்வியில், வேலையில் உச்ச நிலையில் இருந்த பார்ப்பனர்களின் கொட்டத்தைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைத்துக் கீழ்த்தட்டு மக்களை சற்று கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற வழி வகை செய்தது நீதிக்கட்சி ஆட்சியேயாகும்.நீதிக்கட்சியின் தோல்வியைக் குறிப்பாகப் பொப்பிலி அரசரின் தோல்வியை ஆனந்த விகடன் மகிழ்ச்சி பொங்க எழுதியது.“கடைசியாகப் பொப்பிலி விழுந்தார். அந்தக் காலத்தில் இராவணன், கும்பகர்ணன், இரணியன் முதலியோர் விழுந்தபோது உலகம் சந்தோஷித்தது போல் சென்னை மாகாண வாசிகள் குதூகலமடைந் தனர் (‘ஆனந்தவிகடன்’ 7.3.1937).

பார்ப்பனர்கள் நீதிக் கட்சியினரைப் பரம எதிரி களாக கருதி செயல்பட்டனர்.
சுமார் நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழிசை யில் மாற்றம் கொண்டு வந்தவர்கள் நீதிக்கட்சியினரே ஆவர். தமிழிசைச் சங்கத்தை நிறுவியவர்கள் ராஜா சர். அண்ணாமலை அரசரும், சர். ஆ.கே. சண்முகம் இருவருமே ஆவர். தமிழகத்தில் தெலுங்கு, சமஸ் கிருதம் கலவாமல் முழுவதுமாக தமிழில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி சர். ஏ.டி. பன்னீர்ச்செல்வம் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியே ஆகும். இதைப்பற்றி ஆனந்தவிகடன் ஏட்டில் எழுதியிருந்ததாவது : சென்ற பிப்ரவரி 26இல் “தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை கோகலே மண்டபத்தில் தமிழ்ச் சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. இச்சங்கத்தார் தமிழைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சர்.ஏ.டி. பன்னீர்ச் செல்வத்தின் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.எம்.எம். தண்டபாணி தேசிகர் தொடக்கம் முதல் தமிழ்ப் பாட்டுகளையே பாடி ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

நமது சங்கீத வித்வான்கள் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுகளுக்கு அதிகமாக இடம் கொடுக்க வேண்டு மென்ற கிளர்ச்சி சில காலமாகத் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. முழுக்க முழுக்கத் தமிழில் பாடிய தண்ட பாணி தேசிகருக்கு ‘இசை அரசு’ என்ற பட்டம் வழங் கப்பட்டது.இன்னொரு விஷேசம் பன்னீர்ச்செல்வம் கச்சேரிக்கு விஜயம் செய்ததும் அதில் ஊக்கம் காட்டியதுமாகும். இந்தி எதிர்ப்புக் கேலிக் கூத்தில் ஈடுபட்டிருக்கும் அவர் இந்த மாதிரி உபயோகமான காரியத்தில் தலையிடு வதைப் பாராட்டுகிறேன். ஆனால் இது விஷயத்தில் அவருடைய உற்சாகம் அளவுக்கு மீறிப் போய் விடுமோ என்ற பயமும் நமக்கு இருக்கிறது. கீர்த்தனைகளும் பாட்டுகளும் தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் வற்புறுத்துவதில் நமக்குப் பூரண சம்பந்தம், இதற்கு மேலே போய் “ராகங்களும் தமிழில் பாட வேண்டும் என்று வற்புறுத்துவாரானால் அங்கே நாம் ஆட்சே பிக்க வேண்டியதாயிருக்கும்”. பன்னீர்ச்செல்வத்தை நான் கேட்டுக் கொள்வது ஐயா, உங்கள் தமிழன்பை அளவுக்கு மீறிக் காட்டாதீர்கள். ராக ஆலாபனத்தின் விஷயத்தில் வித்துவான்கள் பிழைத்துப் போகட்டும். ராகமும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள் (ஆனந்த விகடன் 5.3.1939).

ஆக தமிழகத்தில் விஜயநகர ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் திசைமாறிப் போன தமிழ் இசையை மீட்டுக் கொண்டு வந்தவர்கள் சுயமரியாதை இயக்கத் தைச் சார்ந்தவர்களும், நீதிக்கட்சியைச் சார்ந்தவர் களுமே யாவர்.தமிழ் இசைக்குத் திராவிடர் இயக்கத்தவர்களின் பங்களிப்புக் குறித்து எஸ்.வி. ராஜதுரை ‘கலை எனப் படுவது இனக்கொலை என்றால்’ எனும் தலைப்பில் தனி நூலே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1938 இந்தி எதிர்ப்பிற்குப் பிறகு தான் தமிழ் நாட்டில் நாம் தமிழர்கள்; நாம் இந்தியர்கள் அல்ல என்ற உணர்வே ஏற்பட்டது. எனவே 1920 முதல் 1936 வரை ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியை இனப் பிரச்சனை அடிப்படையில் பார்ப்பது சரியன்று.தந்தை பெரியார் அவர்களையும் வரதராசலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்களையும் நீதிக்கட்சி யைப் பலவீனப்படுத்துவதற்கென்றே காங்கிரசுக் கட்சிக்குள் பார்ப்பனர்கள் இழுத்தனர்.கேசவப்பிள்ளை தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்பது நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரசுக் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் அமைப்பாகும். இதை முதலில் புரிந்து கொண்டவர் பெரியார். பின்பு வரதராசலு நாயுடு, இறுதிக்காலத்தில் திரு.வி.க.வும் அதை உணர்ந்து பெரியாரிடம் வந்து சேர்ந்தார்.

இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனர்களின் பித்தலாட்டம், பொய் என்று பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே விமர்சிக்கத் தொடங்கினார்.தமிழ்நாட்டு மக்களை இந்தியத் தேசியத்தில் இரண்டற கலந்துவிடாமல் செய்தது நீதிக்கட்சியே ஆகும். நீதிக்கட்சி ஆண்டுதோறும் நடத்திய மாநாடு களும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் என்ற பெயரி லேயே நடத்தப்பட்டன. நீதிக்கட்சி பார்ப்பனரல்லாதார் நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது. மிகக்குறைந்த அதிகாரத்தில் மிக அதிக நன்மைகளை இம்மக்களுக்கு அளித்தது. தேசிய இனப்பிரச்சினை அந்தக் காலத்தில் பெரிய அளவுக்கு எழவில்லை. ஆகவே தமிழர் தெலுங்கர் என்ற கண்கொண்டு நீதிக்கட்சி ஆட்சியை நோக்குவது முறையன்று.
தொடரும்.... keetru.com 08 அக்டோபர் 2012

12 11 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -1

எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

திராவிடர் இயக்கம் என்பது 1912இல் டாக்டர் சி. நடேசனாரால் திராவிடர் சங்கமாகத் தொடங்கப்பட்டு, பின்பு 1916இல் சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் முயற்சியால் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கமாக மலர்ந்தது (South Indian Liberal Federation – S.I.L.F.).

இந்தக் கட்சி பார்ப்பனரல்லாதாரின் நலன்களைப் பேணிக்காப்பதற்காக உருவாக்கப்பட்டது. பார்ப்பனரல் லாதாரின் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் உரிமை ஆகியவற்றை மய்யப்படுத்தியே இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பார்ப்ப னர்கள் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய தேசிய காங்கிரசு என்கிற ஒரே அரசியல் கட்சி தான் இருந்தது. அதிலும் பார்ப்பனர் ஆதிக்கமே தலைதூக்கி நின்றது.இந்த அமைப்பிற்காக 1917இல் மூன்று நாளேடுகள் தொடங்கப்பட்டன. அவை தமிழில் ‘திராவிடன்’, ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’, தெலுங்கில் ‘ஆந்திரபிரகாசிகா’ ஆகும். அந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பனர் இந்தியையும், அதற்கு முன்பே சமஸ்கிருதத்தையும் தமிழ் மக்கள் மீது திணித்து, தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு, அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

காங்கிரசுக் கட்சியும், காந்தியும், இந்தியை இந்தி யாவின் பொது மொழியாக்க 1917லிருந்தே ஆயத்தம் செய்தனர். இதை அப்போதே எதிர்த்தது திராவிடர் இயக்கம்தான்.காந்தி இந்தியாவின் பொது மொழியாக இந்தியை ஏற்படுத்த வேண்டும் என்று மும்பையில் பேசினார். அதைக் கண்டித்து திராவிடன் ஏட்டில் தலையங்கம் எழுதப்பட்டது. “மிஸ்டர் காந்தியும் இந்தியும்” என்ற தலையங்கத்தில் காந்தியின் கூற்று எவ்வளவு பொருத்தமற்றது; நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதைச் சான்றுகளுடன் எழுதி இருந்தது. (திராவிடன் 1.8.1917).

மீண்டும் “இந்தியாவின் பொது பாஷை இந்தியா?” என்ற கட்டுரையில், “இந்தி பேசுவார் 6.5 கோடி மக்கள்; மற்றவர்கள் 23.5 கோடி மக்கள். இந்தியாவின் சிறுபான்மை மக்கள் பேசும் ஒரு மொழியைப் பெரும்பான் மை மக்கள் மீது திணிக்க முற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று எழுதி எதிர்ப்புத் தெரிவித்தது (திராவிடன் 24.8.1917).இந்தியும், சமஸ்கிருதமும் திணிக்கப்படுவது பார்ப்பனரல் லாத மக்களை அடிமைப்படுத்துவதற்குப் பார்ப்பனர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி முறையேயாகும். இந்தியும், சமஸ்கிருதமும் தென்னாட்டிற்குத் தேவையற்ற மொழி கள். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திராவிடன் ஏடு எழுதியது (திராவிடன் 25.8.1917).

‘ஆரியமும் திராவிடமும்’ என்ற கட்டுரையில் ஆரிய மொழியின் வளர்ச்சியின்மையையும் திராவிட மொழிகளின் வளர்ச்சியுற்றிருந்த நிலையையும் விளக்கி எழுதி, ஆரிய மொழியைத் திராவிட மொழிகளின் மீது திணிக்கக் கூடாது என்று திராவிடன் ஏடு எழுதியது (23.8.1917).‘தமிழர்களின் நாகரிகம்’ என்ற தலைப்பில், சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் எவ்வாறு சிறப் புற்று வாழ்ந்திருந்தார்கள்-இடையில் ஏற்பட்ட ஆரிய ஆதிக்கத்தால் எவ்வாறு வீழ்ந்துவிட்டார்கள் என்பதை விளக்கி எழுதியிருந்தது (திராவிடன் 16.6.1917).தாய்மொழி வழியாகக் (சுயபாஷை) கல்வி போதிக் கப்பட வேண்டும்; அதுதான் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு ஏற்றது என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகள் எழுதப்பட்டன.

14.6.1917 திராவிடனில் ‘சுயபாஷை வழியாகக் கல்வி’ என்ற கட்டுரையும், 22.6.1917 திராவிடனில் ‘சுயபாஷை வழியாகக் கல்வி போதித்தல் வேண்டும்’ என்ற கட்டுரையும் எழுதப்பட்டன.‘இந்தியாவிற்குப் பொது மொழி ஆங்கிலமே’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதப்பட்டது (திராவிடன் 27.10.1917).பி.ஏ. பட்டப்படிப்பில் தமிழ்க் கட்டுரைப்பாடமும், பி.ஏ.ஆனர்ஸ் படிப்புத் தொகுதியில் திராவிட மொழி களைப் பயிலும் வாய்ப்பும் ஏற்படுத்தித்தர வேண்டும் என அரசப் பிரதிநிதி (Vice-Roy) விண்ணப்பம் அளிக்கத் திராவிடர் சங்கம் 1918இல் ஏற்பாடு செய்தது. (நம்பி ஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.138). தாய்மொழியில் கட்டுரை கட்டாயம் என்பதை எதிர்த்து எழுந்த கிளர்ச்சியை முதன்முதலில் தொடங்கியவர்களே (Board of Sanskrit) சமஸ்கிருதக் கல்விக் கழகத்தினர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.130).
1918 மார்ச்சு 30, 31 தேதிகளில் தஞ்சை, திருச்சி மாவட்டப் பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் சமஸ்கிருதச் சார்புடன் செயல்படு வதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ் மொழியின் சிறப்புக் கூறுகளை நுணுகிப் பயின்று உயராய்வு மேற்கொள்ளும் நோக்குடன் தமிழின் எல்லாத் துறைகளிலும் சிறப்புத் தேர்வுகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அந்த மாநாடு வற்புறுத்தியது. (நம்பிஆரூரன்,

தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.139).
1919 சூன் மாதத்தில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் ‘இந்திய அரசுப் பணித் தேர்வுகளிலும், சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகளிலும், சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளை செம்மொழிப் பாடமாக வைப்ப தைப் போல, அதே அடிப்படையில் வளஞ்செறிந்த பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்ட தமிழ்மொழி யையும் செம்மொழியாக ஏற்கவேண்டும்’ என்று உரிமையுடன் கோரி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.139).

1918ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் இந்தி யைப் பரப்புவதற்காக, காந்தி, சென்னையில் இந்தி பிரச்சாரச் சபையைத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு சூன் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் ஒரு மார்வாடியிடம் ரூ.50,000 த்தை, சென்னை மாகாணத்தில் இந்தியைப் பரப்பு வதற்காக நன்கொடையாகப் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. (நம்பி ஆருரன் தமிழ் மனுமலர்ச்சியும், திராவிடத் தேசியமும்).பெரியாரிடம் மார்வாடிகள் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள் என்று குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலில் குறிப்பிட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. மார்வாடிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது-பெரியாரிடம் கொடுப்பதற்கு.
மீண்டும் மீண்டும் காந்தி சென்னை வந்தபோ தெல்லாம் மார்வாடிகளைப் பார்த்து ‘இந்தி பிரச்சாரச் சபா; அது உங்கள் சபா; இந்திப் பிரச்சாரச்’ சபாவிற்குத் தாராளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று வேண்டு கோள் வைத்தார்.
I appeal to the Marwaries; Gujaratis and other northern settlers here to regard this institution as their own and pay more attention to the work in all possible ways - 6.9.1927இல் இந்தி பிரச்சாரச் சபாவில் காந்தி பேசியது. (Collected Works of Mahatma Gandhi Vol.40 pp 31, 32).

காந்தி எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்தா ரோ அப்பொழுதெல்லாம் இந்தியைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.நீதிக்கட்சியின் சார்பில் இலண்டன் கூட்டுக் குழு முன் சாட்சியமளிக்க இலண்டன் சென்ற டாக்டர் டி.எம். நாயர் அங்கேயே மறைவுற்றார். அவருக்கு உதவி யாகச் சென்ற ஆர்க்காடு ஏ.இராமசாமி முதலியாரும், சர்.கே.வி. ரெட்டிநாயுடுவும் இங்கிலாந்து நாடாளு மன்றக் கூட்டுக்குழு முன் அறிக்கை அளித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது.“இந்தியாவை ஒரே நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், திராவிடர் நாகரிகம் வேறு, ஆரியர் நாகரிகம் வேறு; எங்களை ஒன்றாகப் பிணைக்கக் கூடாது என்றும்” கோரிக்கை வைத்தனர் (politics and Social Conflict in South India Eugene F. Irschic page No.150).

1919இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை 1920இல் ஏற்பட்டது. அதன்படி தேர்தலில் வென்று, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி 1920 டிசம்பரில் ஆட்சிக்கு வந்தது. சென்னை மாகாணம் போன்றே இந்தியாவில் மீதமிருந்த ஒன்பது மாகாணங்களிலும் இரட்டை ஆட்சி ஏற்பட்டது. சென்னை மாகாணத்தில் மட்டும் சிறப்பான ஆட்சியாக நடைபெற்றது. நீதிக்கட்சி ஆட்சி வந்தவுடனேயே முதலில் வகுப்புரிமை ஆணை யை வெளியிட்டது. 16.9.1921இல் அரசு வேலையில் இடஒதுக்கீடு ஆணை வெளியிடப்பட்டது.

கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது தொடர் பாகக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவை அமைத்தது. பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.மாநிலக் கல்லூரியில் மொத்த மாணவர் எண் ணிக்கை 242 ஆகும். 1922ஆம் ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடும்போது 167 பார்ப்பன மாணவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். கல்லூரிச் சேர்க்கைக் குழுவில் சி. நடேசமுதலியார் இருந்ததால் அவர் 50 விழுக்காடு என்ற அளவுகோல் அடிப் படையில் 121 பார்ப்பன மாணவர்களுக்குமேல் இடம் அளிக்கவில்லை. அதனால் 121 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. அதனால் பார்ப்ப னரல்லாத மாணவர்களைவிட 46 பார்ப்பன மாண வர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தும் அனுமதி மறுக்கப்பட்டனர். தமிழகக் கல்வி வரலாற்றில் இது ஒரு புரட்சியாகும். அதேபோல மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைகளிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை 1921-ஆண்டு 1922-ஆண்டு
பார்ப்பனர்                                     58          33

பார்ப்பனரல்லாத இந்துக்கள்   15           36

கிறித்தவர்                                   9               5

ஆங்கிலோ-இந்தியர்               6                2

மொத்தம்                                   88             76

(குறிப்பு : 1921ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து 7.12.1921 டாக்டர் நடேச முதலியார் கேள்விக்கு அரசு அளித்த பதில்
18.9.1922இல், எஸ். சீனிவாச அய்யர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த கேள்விக்கு அரசு அளித்த பதில்.கல்லூரிச் சேர்க்கைக் குழு அமைக்கப்பட்டதால், பார்ப்பனரல்லாத மாணவர்கள் பெற்ற பயனை இப் புள்ளி விவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது.சென்னைப் பல்கலைக்கழகத்தின், சிண்டிகேட்டி லும், செனட்டிலும், பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலை தூக்கி விட்டது. முன்பு கட்டாயப்பாடமாக இருந்த தமிழ் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கிய, செயலை வன்மையாகக் கண்டித்துத் திராவிடன் ஏடு எழுதியது (14.2.1922). பார்ப்பனரல்லாதார் ஒருவரா வது சிண்டிகேட்டில் இருந்திருந்தால் இந்நிலை ஏற் பட்டிருக்குமா என்றும் அவ்வேட்டில் எழுதப்பட்டது.

1922 டிசம்பர் 26இல் சென்னையில் நடைபெற்ற ஆறாவது பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் பேசிய சி. நடேச முதலியார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட், சிண்டிகேட், அகாதெமிக் கவுன்சில் போன்ற அதிகார அமைப்புகளில் பார்ப்பனர் அல்லாதார் உரிய அளவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கத் தேவை யான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டு மென்று தீர்மானம் கொண்டுவந்தார் (Madras Mail 27, Dec 1922).1923இல் நீதிக்கட்சி ஆட்சி சென்னைப் பல்கலைக் கழகச் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி துணைவேந்தர் பதவிக்கும் மேலாக இணைவேந்தர் பதவி உருவாக்கப்பட்டது. கல்வி அமைச்சரே இணை வேந்தராக இருந்து வர வழிவகை செய்யப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம் செனட், சிண்டிகேட் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு விரிவுபடுத்தியது. சென்னைப் பல்கலைக்கழகத்தால் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளால் முப்பது உறுப்பி னர்கள் ஆட்சிக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்க வகை செய் யப்பட்டிருந்தது. இந்த மசோதாவைப் பற்றி விவாதம் நடைபெற்ற போது, இந்த முப்பது உறுப்பினர்களில் இருபது பேர், பதிவு செய்த பார்ப்பனர் அல்லாத பட்ட தாரிகளிடையேயிருந்து அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். மீதமுள்ள பத்துப் பேர் பதிவு செய்த பார்ப்பனப் பட்டதாரிகளிடையி லிருந்து அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் சி. நடேச முதலியார்.
நீதிக்கட்சி ஆட்சியின் மேற்கண்ட முயற்சியின் பயனாகத்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட்டில், டாக்டர் சி. நடேசமுதலியார், டாக்டர் சர்.ஏ. இராமசாமி முதலியார், நல்மணி திருநாவுக்கரசு முதலியார், தமிழ்ப் பேராசிரியர் நமச்சிவாய முதலி யார், தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. இராசா போன்றோர்க்கு 1923இல் பல்கலைக்கழக ஆளவைக் குழுவில் இடம் கிடைத்தது.1924 பிப்பிரவரியில் சென்னைத் தமிழ்ச் சங்கமும் வேறு சில இலக்கிய அமைப்புகளும் இணைந்து சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடத்திய ஒரு பொதுக் கூட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இண்டர் மீடியட், பி.ஏ. பட்டப் படிப்புத் தேர்வுகளில் தாய்மொழி இலக்கியங்கள் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளையும், சென்னைப் பல்கலைக்கழகத்தையும் வற்புறுத்துவ தென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த நீதிக்கட்சி அமைச்சர் டி.என். சிவஞானம்பிள்ளை, “உண்மைத் தமிழர்களாகிய நாம் பல்கலைக்கழகப் பாடத் திட்டங் களில் தாய்மொழிப் பாடங்களைக் கட்டாயமாக்க வேண்டும். அதன்மூலம் நமது பழமைமிக்க தமிழ் மொழியின் மீது அதிகம் அக்கறைகாட்ட முடியும், என்று வலியுறுத்திப் பேசினார் (Madras Mail 5, Feb, 1924).
- தொடரும்

keetru.com 29 08  2012

20 11 2017

திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -2

எழுத்தாளர்: வாலாசா வல்லவன்

தமிழ் உள்ளிட்ட திராவிடப் மொழிகளைப் பயிற்றுவிப்பதற்குச் சென்னைப் பல்கலை ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.1925 அக்டோபரில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கீழ்த்திசை மொழிகளுக்கான மய்யம் அமைப்பதில் நிதி ஒதுக்குவது குறித்த விவாதத்தில் திராவிட மொழிகளுக்கு எதிராகச் சமஸ்கிருதம் என்ற கருத்து வெளிப்படையாகப் பேசப்பட்டது.திராவிட மொழிகளைப் பட்டினி போட்டுவிட்டு, சமஸ்கிருதத்துக்கு விருந்து வைப்பது போல இருக்கிறது என்று புர்ரா சத்திய நாராயணா தம் கருத்தைத் தெரிவித்தார். ஏ.இராமசாமி முதலியார் இந்தக் குழுவில் திராவிட மொழிகளுக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று கண்டித்தார். திராவிட மொழிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதி ஆதார ஒதுக்கீடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார். டி.வி.சேசகிரி அய்யர் சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று பேசினார். ஆகவே அதற்குத்தான் அதிக நிதி வேண்டும் என்று கூறினார். இதை வன்மையாக எஸ்.முத்தையா முதலியார் கண்டித்தார். “திராவிட மொழிகள் வட மொழியிலிருந்து கிளைத்தவை அல்ல. அவை வேறுபட்ட இன்னொரு தனிமொழிக் குழுவைச் சேர்ந்தவை” என்று சுட்டிக்காட்டினார். (நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும், திராவிடத் தேசியமும், பக்.161, 162).

சென்னை மாகாண அரசு, பல்கலைக்கழக ஆட்சிக் குழு பரிந்துரைத்த அதே வடிவத்தில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக, திராவிட மொழிகளுக்கான ஆய்வு மையமாக மட்டும் அமைக்கும்படி யோசனை கூறியது. அதற்கு மட்டும் மூன்றில் இரு பங்கு நிதி அளிக்க ஒப்புக்கொண்டது.ஒரு பல்கலைக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் கூட அரசு தலையிடுகிறது என்பது போன்ற அநீதி வேறெதுவும் இல்லை என்றும் எஸ்.சத்தியமூர்த்தி கூறினார். மேலும் அவர் “சமஸ்கிருதப் பேராசிரியர்களைப் பணி அமர்த்துவதற்கு அரசு நிதி ஆதாரம் வழங்கவில்லையானால், பல்கலைக்கழக நிதிப் பயன்பாட்டில் கூட அரசு தலையிடுகிறது என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டுவேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.நீதிக்கட்சியின் ஆதரவாளரான டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார், திராவிட மொழிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதாலேயே சமஸ்கிருதத்தை அரசு முற்றிலுமாக ஒதுக்குகிறது என்று பொருள் கொள்ளக்கூடாது என்றார். இப்படிப் பார்ப்பனர்களுடன் நீண்ட போர் நடத்திய பிறகே சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1926-1927 கீழையியல் மொழிகள் ஆய்வு மையத்தை நிறுவ முடிந்தது.

இன்னொரு பெரிய கொடுமையும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வந்தது. மருத்துவம் படிக்க வேண்டும் என்றாலும் சமஸ்கிருத்தைப் படித்திருக்க வேண்டும். ஏன் தமிழ் வித்துவான் (புலவர்) படிக்க வேண்டும் என்றாலும் கூட, கண்டிப்பாக சமஸ்கிருதப் பாடத்தில் தேர்ச்சி பெற்றால்தான் வித்துவான் பட்டமே பெறமுடியும். இதற்காக செனட்டில் நீண்ட தகராறுகள் நடைபெற்று வந்தன. கடைசியாக வேறு வழியின்றி அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் இது திராவிட அரசு, திராவிட மொழிகளுக்கு மட்டும் தான் அரசின் பணத்தைச் செலவழிக்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததோடு அவ்வாறே அரசாணையும் பிறப்பித்தார் (அரசாணை எண்.2123 சட்டம் (கல்வி) நாள் 8.12.1925). அதன் பிறகுதான் பார்ப்பனர்கள் சற்று இறங்கி வந்து வித்துவான் படிப்பிற்கு இனி சமஸ்கிருதம் தேவையில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். தமிழ்மொழி மட்டுமே படித்து வித்துவான் ஆகும் முறை 1927-28இல் தான் நடைமுறைக்கு வந்தது.

கோயில்களில் வரையறையின்றி பார்ப்பனர்கள் கொள்ளையடித்து வந்ததைத் தடுப்பதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை நீதிக்கட்சி அரசு கொண்டு வந்தது. 1922 டிசம்பரில் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவுக்குக் கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் இரண்டாவது முறை 1923 கடைசியில் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசு மீண்டும் அம்மசோதாவைச் சட்டமன்றத்தில் வைத்தது. அப்போது எஸ்.சத்தியமூர்த்தி கடுமையாக அதை எதிர்த்தார். அய்ந்நூறு திருத்தங்களுக்குமேல் அவர் மட்டுமே கொடுத்தார். மொத்தம் எண்ணூறு திருத்தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன.

22.2.1922 அன்று சட்டப்பேரவையில் இதன் மீது உரையாற்றிய டாக்டர் சி.நடேசமுதலியார் “செத்துப் போய்விட்ட மொழியான சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்குத் தர்ம ஸ்தாபனங்களின் சொத்துக்கள் தண்ணீரெனச் செலவழிக்கப்பட்டது. அன்றும், இன்றும், என்றும் இயங்கிய, இயங்குகிற, இயங்கும் கலைச் செல்வமாம் தமிழ் இலக்கியங்களைப் படுபாதாளத்தில் புதைத்தனர்” என்று கூறினார்.இச்சட்டம் 1925இல் நிறைவேறியது. கோவில்களில் மீதமாகும் பணத்தைக் கொண்டு கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்த முடிவு செய்தனர். கோவில் சொத்து வரவு-செலவு கணக்குகள் அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. மக்களிடையே நிலவி வந்த சாதி வேற்றுமைகளைக் களைவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டது.

ஆதிதிராவிட மாணவர்களைப் பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண்.87, கல்வி, நாள் 6.1.1923.)ஆதிதிராவிட மாணவர்களைப் பள்ளிகளில் சேர்க்காவிட்டால் அரசு மானியம் தராது. அந்தக் காலத்தில் வட்டாரக் கழகம், மாவட்டக் கழகம், நகராட்சி இவைகள் தாம் கல்வி நிறுவனங்களை அரசிடம் மானியம் பெற்று நடத்தி வந்தன. சில தனி நபர்களும் அரசு மானியம் பெற்றுப் பள்ளிகளை நடத்திவந்தனர். இவர்கள் எல்லோருக்குமாகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண்.88, கல்வி, நாள் 16.1.1923)

திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதிதிராவிடப் பிள்ளைகளை ஒரு பள்ளியில் தனிக் கட்டடத்தில் வைத்துப் பாடம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். அரசு இதை மறுத்துவிட்டது. எல்லா மாணவர்களையும் ஒன்றாகத் தான் ஒரே வகுப்பில் தான் அமர வைத்துப் பாடம் நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. (அரசாணை எண்.கல்வி 205, நாள் 11.2.1924)20.1.1922 அன்று சட்டமன்றத்தில் எம்.சி. இராசா அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு இனி தாழ்த்தப்பட்டவர்களைப் பறையன், பள்ளன் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சில பள்ளிக் கட்டிடங்கள் கோயில்களின் அருகில் இருந்ததால் அவை ஆதித்திராவிட மாணவர்கள் அணுக முடியாமலிருந்தது. ஆகவே புதிய பள்ளிக் கட்டடங்களைக் கட்டும் பொழுது அவை எல்லா மக்களும் அணுகக் கூடிய இடத்தில் இருக்கின்றனவா என்பதைக் கருத்தில் கொண்டு தொடங்க வேண்டும் என அரசாணை பிறப்பித்தது.

அரசு ஆணை எண்.2333, நாள் 27.11.1922 இன்படி, இந்தியாவிலேயே முதன்முதலாக ஆதி திராவிட மாணவர்களுக்குத் தங்கும் விடுதி 1923இல் தொடங்கப்பட்டது.ஆதிதிராவிட மக்கள் பொது இடங்களில் புழங்குவதற்கு இருந்த தொல்லைகளை நீக்க 22.8.1924இல் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அரசு கெசட் வெளியிட்டது. அரசாணை எண்.2563, நாள் 24.10.1923, பொதுச்சாலைகளில், பொதுக் கிணறுகளில், பொது இடங்களில், சந்தை, அரசு அலுவலகங்கள் இருந்த தடை நீக்கப்பட்டது. (எல்.&எம். 2666, நாள் 25.8.1924.)

ஆதிதிராவிடத் தலைவர் வீரய்யன் அவர்கள் 24.9.1925 அன்று உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். “பொதுச்சாலைகள், பொதுக்குளங்கள், கிணறுகள், மார்க்கெட், சத்திரம் சாவடி போன்ற பொது இடங்களில் செல்லும் ஆதிதிராவிடர்களைத் தடுப்பவர்களுக்கு ரூ.100 தண்டம் விதிக்க வேண்டும்" என்பதே அத்தீர்மானம். அதை அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் பிறப்பித்தது. 28.9.1926 இத்தீர்மானத்தைப் பெரியார் அவர்களும் வரவேற்று குடிஅரசு இதழில் எழுதியுள்ளார் (குடிஅரசு 5.9.1926).ஆதிதிராவிட மக்களுக்கு, பஞ்சமி நிலங்கள் 1920-21 வரை வழங்கப்பட்டவை 19,251 ஏக்கர்கள் ஆகும். 1931 மார்ச் முடிய நீதிக்கட்சி ஆட்சி அமைந்தபிறகு வழங்கப்பட்டவை 3,42,611 ஏக்கர்கள் ஆகும். இது டி.ஜி. போக் ஐ.சி.எஸ். என்ற புள்ளியல் துறை அரசு செயலர் கொடுத்த கணக்காகும். (T.G.Boag ICS, Madras Presidency 1881-1931, pp 132).

1935 ஜூலை வரையில் 4,40,000 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது (Justice, 19th July 1935). நீதிக்கட்சி அரசு, பொதுக் கல்விக்கும் பெண் கல்விக்கும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளது. மக்கள் தொகை 500 பேர் உள்ள பகுதிக்கு ஒரு தொடக்கப் பள்ளி என்ற கொள்கை வகுக்கப்பட்டது. 1923இல் இலவசக் கட்டாயத் தொடக்கக் கல்வி முறை அமுலுக்கு வந்தது (அரசாணை எண்.376, கல்வி நாள் 9.3.1923). 28.7.1929 அன்று சட்டசபையில் கே.வி.சாமி என்ற உறுப்பினர் 1921 முதல் 1928 வரை இந்த அரசு புதியதாகத் தொடங்கிய பள்ளிகள் எத்தனை என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அரசின் பதிலில் 19,095 என்று கூறப்பட்டது. காமராசரின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 10,000 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. நீதிக்கட்சியின் முதல் 9 ஆண்டுகளில் புதியதாக 19,095 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபோது சென்னை மாகாணத்தில் 35,895 தொடக்கப் பள்ளிகள் இருந்தன. 1931 மார்ச் முடிய அவை 56,993 பள்ளிகளாக உயர்ந்தன. இது டி.ஜி.போக் என்ற ஆங்கில அரசுச் செயலர் அளித்துள்ள கணக்காகும்.
ஆதிதிராவிடர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை எல்லா உள்ளாட்சி நிறுவனங்களிலும் நியமனம் செய்தது நீதிக்கட்சி ஆட்சி மட்டுமே.தாய்மொழிகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் ஆக்கமளிக்கவில்லை என்ற நிலை உருவானபோது தான் இந்து அறநிலையச் சட்டத்தின்படி 50 விழுக்காட்டுப் பணத்தைத் திருப்பதி கோவிலும், மீதம் 50 விழுக்காட்டுப் பணத்தைச் சென்னை மாகாண அரசும் செலவு செய்து ஆந்திராப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

தமிழ்மொழிக்குத் தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற குரலும் தமிழகத்தில் ஓங்கி ஒலித்தது. தமிழ் மொழிக்கு ஓரு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று நீதிக்கட்சியின் அமைச்சர் டி.என்.சிவஞானம் பிள்ளை திருச்சியில் நடைபெற்ற தமிழ்ப் புலவர்கள் மாநாட்டில் பேசினார். (குடிஅரசு 10.5.1925)நீதிக்கட்சி அரசு சேதுபதி மன்னர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 1926இல் நீதிக்கட்சி தேர்தலில் தோல்வியுற்று சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைந்தது. தமிழ்ப் பல்கலைக்கு சைவ மடங்கள் 50 விழுக்காடு நிதி அளிக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புப் பலனற்றதாகிவிட்டது.

1920 முதல் சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரி நடத்தி வந்த ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் பல்கலைக்கழகம் தொடங்க ரூ.20 இலட்சம் கொடுக்க 1928இல் முன்வந்தார். அன்றைய அரசு தமிழ்மொழி மேம்பாடு, தமிழ் கலை இலக்கியம் வளர்ச்சிக்கு இந்தப் பல்கலைக்கழகம் பாடுபட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 27 இலட்சம் நிதி அளித்தது. மேலும் 1 ஆண்டுக்கு 1.5 இலட்சம் வீதம் தொடர் மானியமும் அளித்து வந்தது. இதனால்தான் 1929இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரி நிறுவப்பட்டது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவும், அதன் செனட் கட்டடத்தையும் திறந்து வைத்துப் பேசிய அன்றைய ஆளுநர் “இம்மாகாணத்தில் வசிக்கும் 180 இலட்சம் மக்கள் தமிழ் கலைகளையும், தமிழ் இலக்கியங்களையும் ஆய்ந்து கற்று உலகுக்கு அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் ஒரு மத்திய பல்கலைக்கழகம் வேண்டும் என்று விரும்பினார்கள். அதன் விளைவே இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகும்" என்று கூறினார். (திராவிடன் 30.10.1931).

அதற்குமுன் சமஸ்கிருத கல்லூரி நிறுவி தீட்சிதர்களையே முதல்வராகக் கொண்டிருந்த கல்லூரியைத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சித்தவர்கள் அன்றைய ஆட்சியாளர் ஆவர்.தென் தமிழகப் பகுதி மக்களுக்கு அந்தப் பல்கலைக்கழகம் மிகப் பெரிய அளவில் பயன்பட்டது.நீதிக்கட்சியின் திராவிடன் ஏடு ஒரு கேடயம் போல் இருந்து தமிழ் மக்களைக் காத்து வந்தது. 1931 சூன் 9ஆம் திராவிடன் தலையங்கத்தில் இந்தி மொழியால் வரும் கேடுகளைப் பற்றி எழுதியது.1931 ஆகசுட்டு 31 திராவிடனில் இந்தி, இந்தியாவின் பொது மொழியா என்ற தலையங்கம் எழுதப்பட்டது.

1931 சூன் 20இல் தமிழே உன் நிலை என்ன? என்ற அருமையான தலையங்கம் எழுதப்பட்டது.
1931 சூலை 27இல் இந்தியாவின் பொது மொழி பாஷை எது? என்ற தலையங்கம் எழுதப்பட்டது.
1931 மே 12 தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற தலையங்கம் எழுதப்பட்டது.
1924இல் கல்வி மாநாட்டில் பேசிய சத்தியமூர்த்தி, இந்தியாவினுடைய பொது மொழி பற்றிய கொள்கையில் உணர்ச்சிபூர்வமாக நான் என்னை இணைத்துக் கொள்கிறேன். வயதானவர் இந்தியை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் எல்லா ஆரம்பப் பள்ளிகளிலும் இந்தி இரண்டாவது மொழியாகக் கட்டாயப் பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்படுமானால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவினுடைய பொது மொழியாக இந்தியை ஆக்கிக் கொள்ள முடியும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்று கூறினார். (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.314).

1924 முதல் அகில இந்திய காங்கிரசு மாநாடுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது போல அகில இந்திய இந்தி மாநாடும் நடைபெற்று வந்தது (கு. நம்பி ஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசி யமும், பக்.316).இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றியடைய முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருத முடியாது என்று சேலம் விஜயராகவாச்சாரியார் பேசினார். இந்து ஏடும் இதை ஆதரித்து எழுதியது (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.317).

9.8.1932 நாளிட்ட திராவிடன் ஏடு துறையூரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் க. நமச்சிவாய முதலியார் ஆற்றிய தலைமை உரையை முழுமையாக வெளியிட்டிருந்தது.தமிழ்வழிக் கல்வியே சிறந்தது என்ற தீர்மானம் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. சிறந்த அறிவியல் நூல்களை எழுதுபவர்களுக்குப் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- தொடரும்   keetru.com 13 09  2012

Page 6 of 6