நாடாளுமன்றக் கலகத்தின் பின்னனி!!
06 12 2018
நாடாளுமன்றக் கலகத்தின் பின்னனி!!
நாடாளுமன்றத்தைக் கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான நகர்வுகள் கனகச்சிதமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் நாடாளுமன்றம் – அதி உயர் சபை என்று சொல்லப்படுகின்றது. அங்கு நடக்கின்ற கூத்துக்களைப் பார்க்கின்றபோது, பட்டவர்த்தனமாகத் தெரிவது இழிநிலையே. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் மீதான தீர்ப்பு டிசெம்பர் 7ஆம் திகதியன்று வெளிவரவுள்ளது. அன்றைய தினத்துக்கு முன்னர் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வுகள் அனைத்தும் மகிந்த அணியினரால் குழப்பப்படும் என்பது திண்ணம். இலங்கை அரசியல் போக்கு கடந்த மாதம் 26ஆம் திகதி சடுதியாக மாற்றமடைந்தது. அந்த மாற்றம் எந்தத் திசையில் பயணிக்கின்றதென்றே தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
மைத்திரியின் முடிவுக்கு பின்னால் ஒளிந்திருந்த விடயம்
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கும் முடிவை எடுத்ததுடன் மகிந்தவைத் தலைமை அமைச்சராக நியமித்தார். நாடாளுமன்றத்தில் மகிந்த தரப்புக்குப் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் அவர் அந்த முடிவை எடுத்தமைக்குப் பின்னால் சில விடயங்கள் ஒளிந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்கா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்கா மற்றும் திலங்க சுமதிபாலவிடம் சில விடயங்களைப் பகிர்ந்திருக்கின்றார். மகிந்த தலைமையில் ஆட்சி அமைக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தன்னுடன் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவார்கள் என்றும் கூறியிருக்கின் றார். இந்தக் கதையை, மைத்திரியிடம் ஒப்புவித்தார் எஸ்.பி.திசாநாயக்கா. இதனையடுத்து அவசர அவசரமாக ஆட்சி மாற்றம் நடந்தது. ரவி கருணாநாயக்கா புதிய அரசில் தனக்கு நிதி அமைச்சு வேண்டும் என்று அடம்பிடித்திருக்கின்றார். இங்கேதான் சிக்கல் எழுந்தது. அதற்கு இணங்குவதற்கு மைத்திரி மறுத்துவிட்டார். வேறுவழியின்றி ரவி மீண்டும் ஐ.தே.க. வின் கோட்டைக்குள் சென்றுவிட்டார்.
பேரம் பேசுதல்கள் தோல்வியில் முடிந்ததும் மகிந்தவின் கோரிக்கையை நிறைவேற்றினார் மைத்திரி
இதன் பின்னர், பசில் ராஜபக்ச களமிறக்கப்பட்டுக் குதிரைப் பேரம்பேசல்கள் அரங்கே றின. நினைத்த அளவுக்கு, ஐ.தே.கவினரை மகிந்த தரப்பால் விலைக்கு வாங்க முடிய வில்லை. பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இந்தப் பேரம்பேசல்கள் படிந்து வருவதற்கே, மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்திருந்தார். ஒரு கட்டத்தில், மகிந்த தரப்பால் பெரும்பான்மை நிரூபிப்பது முடியாது என்றாகிய நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தார். மகிந்த தரப்பும் இதைத்தான் எதிர்பார்த்திருந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த உற்சாகம், இனிவரும் தேர்தல்களிலும் கிடைக்கும். அதை நோக்கி நகர்வதை அவர்களும் விரும்பி யிருந்தார்கள். மகிந்தவின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த மைத்திரி அதனைச் செய்தார். அரசமைப்புக்கு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக உயர் நீதிமன்றில், மைத்திரியின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்குகள் பதிவாகின. உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்களைக் கொண்ட ஆயம் விசாரணையை முன்னெடுத்தது. மைத்திரியின் அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலக் கட்டளை பிறப்பித்தது. டிசெம்பர் 7ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியது.
நாடாளுமன்றில் குழப்பம் மைத்திரி
மகிந்த தரப்பு இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் கடந்த 14ஆம் திகதி கூடியது. மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மகிந்த தரப்பு நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் விளைவித்தது. ஆனாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியதாகச் சபாநாயகர் அறிவித்தார். மைத்திரிபால சிறிசேனவோ அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். மறுநாள் நாடாளுமன்றம் கூடியதும், மகிந்தவை தலைமை அமைச்சர் என்று அறிவிக்க மறுத்த சபாநாயகர் அவரை உரையாற்ற அனுமதித்தார். அவரது உரைக்கு, ஐ.தே.க. நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோரியது. மகிந்த அணியினர் உடனே களேபரத்தை ஆரம்பித்தனர். அடிதடி வரையில் சென்ற நாடாளுமன்ற அமர்வு குழப்பத்தில் முடிந்தது. ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்களும், ஜே.வி.பி., கூட்டமைப்புத் தலைவர்களும் மைத்திரியுடன் கடந்த வியாழக் கிழமை இரவு 2 மணி நேரம் சந்திப்பு நடத்தினார்கள். அந்தச் சந்திப்பு சுமுகமான சந்திப்பாக இருக்கவில்லை. ஆனாலும், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முதலாவது பந்தி, அரசமைப்பை மீறி மகிந்தவை தலைமை அமைச்சராக நியமித்ததைத் தவறு என்று சுட்டிக்காட்டும் பந்தியை நீக்கிவிட்டு, மகிந்த அரசு மீது நம்பிக்கையில்லை என்பதை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்துமாறு மைத்திரி தெரிவித்தார். ஒவ்வொரு உறுப்பினர்களாகப் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று அறிவித்துள்ளார். இதன்போது சபாநாயகர் கரு ெஜயசூரிய, மகிந்த அணியினர் குழப்பங்கள் விளைவித்தால் என்ன செய்வது என்று வினவியுள்ளார். அவர்களைத் தான் கட்டுப்படுத்துவார் என்று மைத்திரி கூறியுள்ளார்.
மைத்திரியின் நிராகரிப்புக்கள்
மைத்திரி கூறியதற்கு அமைவாகப் புதியதொரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட இருந்தது. நாடாளுமன்ற அமர்வு பி.ப. 1.30 இக்கு ஆரம்பமாகும் என்று கூறப்பட்ட நிலையில், பி.ப. ஒரு மணிக்கே சபைக்குள் நுழைந்த மகிந்த அணியினர் சபாநாயகரின் இருக்கையைக் கைப்பற்றினர். சபாநாயகர் பி.ப. 2.15 மணிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் வருகை தந்தார். மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, உரியமுறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்து அதையும் நிராகரித்தார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தான் கூறியது சரி என்பதையும், தனது நடவடிக்கை நியாயமானது என்பதையும் காண்பிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் நடக்கும் முழு அத்துமீறல்களையும் அனுமதித்துக் கொண்டிருக்கின்றார். கட்சித் தலைவர்களின் ஆசீர்வாதம் இன்றி அதாவது மகிந்த– மைத்திரி ஒத்துழைப்பு இன்றி அல்லது அவர்களுக்குத் தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இவ்வளவு அகோரத் தாண்டவம் ஆடியிருக்க மாட்டார்கள்.
மைத்திரியின் காய் நகர்த்தல்கள்
நாடாளுமன்றத்தைக் கலைத்ததை மைத்திரி நியாயப்படுத்தி ஆற்றிய உரையில், நாடாளுமன்றம் கூடினால் அங்கு குருதிக் களேபரம் ஏற்படும். உயிரிழப்புக்கூடச் சம்பவிக்கலாம். அதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்தேன் என்று கூறியிருந்தார். இந்தக் கூற்றை மெய்பிக்கவோ என்னவோ, மைத்திரி காய்களை நகர்த்துகிறார் போன்றே தெரிகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதன் ஊடாக மாத்திரமே, ரணிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினரோ ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியும். மைத்திரி -– மகிந்த கூட்டு நீடிப்பதற்கு, ஆட்சி அதிகாரத்தைத் தொடர்வதற்கு இதுவே வழி. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கில் இடைக்காலக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அது தமக்குச் சாதகமில்லாமல் கிடைத்தமை மகிந்த -– மைத்திரி கூட்டை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்று நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தின் முன்பாகவே இடைக்காலக் கட்டளை வழங்கப்பட்டதால், முழு நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தின் முன்பாக வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு மகிந்த அணியைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனூடாக, மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புச் சரியானது என்ற தீர்ப்பை நோக்கி நகர முடியும் என்று மகிந்த – மைத்திரி தரப்பு நம்புகின்றது. மைத்திரியின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த மூத்த சட்டத்தரணி ஒருவர் கூட, தீர்ப்பு அப்படி அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக எதிர்வுகூறியுள்ளார். எனவே டிசெம்பர் 7 ஆம் திகதி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானது என்ற தீர்ப்பு வரும் வரையில், நாடாளுமன்ற அமர்வு நடக்கக் கூடாது என்பதில் மைத்திரி -– மகிந்த தரப்பு மிக மிகக் கவனமாக உள்ளது. அதற்கிடையில் எத்தனை தடவைகள் எந்த வாசகங்களைப் பயன்படுத்தி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும் அதனை மைத்திரி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நாடாளுமன்ற அமர்வை இனிக் கூட்டினால், இதுவரை நடந்ததை விட மிக மோசமாக நடப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.
டிசம்பர் 7வரை குழப்பங்கள் தொடரலாம்
எப்பாடுபட்டாவது டிசெம்பர் 7ஆம் திகதி வரையில் நாடாளுமன்றத்தைக் குழப்பி, இழுத்தடித்துச் செல்வதற்கு மைத்திரி–மகிந்த கூட்டு முடிவு செய்து விட்டது. அதற்காகத் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எந்தளவு எல்லை வரையில் சென்றாலும் அவர்கள் கவலைப்படப் போவதுமில்லை, கட்டுப்படுத்தப் போவதுமில்லை. டிசெம்பர் 7ஆம் திகதி தீர்ப்பு தமக்குச் சாதகமாகக் கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் மைத்திரி–மகிந்த தரப்பு, இந்தக் காய் நகர்த்தல்களை திட்டமிட்டு, துல்லியமாக மேற்கொள்கின்றது. மைத்திரி – – மகிந்த ஆட்சியில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களும் நடந்த சம்பவங்கள் தேர்தலிலும் நடக்கும். ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு அதிதீவிர சர்வாதிகாரத்துக்குள் நாடு செல்லும். newuthyan.com nov18 2018