29 07 2018

‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்

இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள். நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும்.

சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதாரிகள் மட்டுமன்றி, முழு நாடும் இன்றுவரை விலை கொடுத்து வருகிறது. இனிமேலும் விலை கொடுக்கக் காத்திருக்கிறது. காரணம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காமையே ஆகும். அன்று இடம்பெற்ற, அந்தக் கொடுமையின் பயங்கரத்தை, போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டவர்கள் தவிர்ந்த, தமிழ்ச் சமூகத்தின் இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவோ, உணரவோ வாய்ப்பில்லை. பொதுவாகச் சிங்கள, முஸ்லிம் இளம் தலைமுறையினர் அந்தப் பயங்கரத்தை உணர மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அது போன்றதொரு நிலைமையை, புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் வாசித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை.

எனினும், 2013 ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம பகுதிகளிலும் கடந்த பெப்ரவரி மாதம், கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் போது, அப்பகுதிகளில் முஸ்லிம்கள், ஓரளவுக்கு அந்தப் பயங்கரத்தை உணர்ந்திருப்பார்கள். அது ஒரு பயங்கரமான காட்சி. வவுனியாவுக்குத் தெற்கே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், அங்காங்கே சிறு தொகுதிகளாக வாழும் தமிழ் மக்கள், முற்றுகையிடப்பட்டுத் தாக்கப்படும் ஒரு நிலைமைக்குள் தள்ளப்பட்டார்கள். சுமார் ஐந்து நாட்களாக, நாட்டில், அரசாங்கம் ஒன்று இல்லாத, அராஜக நிலைமை காணப்பட்டது. தப்பிச் செல்ல இடமோ, உதவி கேட்க நண்பர்களோ, பாதுகாப்பைக் கேட்க அரசாங்கப் படைகளோ இல்லை. காடையர்கள் தம்மைத் தாக்க வரும் வரை, வீட்டிலோ, கடையிலோ அல்லது வாகனத்திலோ பதுங்கியிருந்து, “உயிரைப் பாதுகாத்துக் கொடு” என்று, இறைவனை மன்றாடுவதைத் தவிர, அன்று தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. பெரும்பாலான சிங்கள மக்கள், தீவைத்தல், தாக்குதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல் போன்ற அடாவடித் தனங்களில் ஈடுபடாவிட்டாலும், தம்மைச் சூழ இருந்த, எந்தச் சிங்களவரை நம்புவது, எந்தச் சிங்களவரைக் கண்டு பயப்படுவது என்று தெரியாமல் தமிழ் மக்கள் திகைத்து நின்றனர். கொலை, குறிப்பாகத் தீவைத்தல், கொள்ளையடித்தல் ஆகிய சம்பவங்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் முன்னிலையிலேயே இடம்பெற்றன. இறுதியில் தீ வைத்தது, கொலை செய்தது போதும் என, அரசாங்கமே நினைத்ததோ என்னவோ, ஐந்து நாள்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் துறையினர் கலகத்தை அடக்க முற்பட்டனர். அப்போது, நடக்கக் கூடியதும் கூடாததும் நடந்து முடிந்துவிட்டிருந்தன. இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் புலிகளால் 13 இராணுவத்தினரைக் கண்ணிவெடி வெடிக்கவைத்துக் கொன்றதன் விளைவு என்றே, பொதுவாகக் கூறப்படுகிறது. அது உடனடிக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கு முன்னர், சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் மனதில் விஷத்தை ஊட்டும் சம்பவங்கள் பல நடந்து இருந்தன.

1977 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஜே.ஆர் ஜெயவர்தனவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் எந்தவொரு கட்சியும் பெறாத வகையில், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. அத்தோடு, நாட்டில் அரசியல் கலவரங்கள் இடம்பெற்று, முன்னைய அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்தக் கலவரங்கள், ஏதோ சில காரணங்களால், ஓரிரு வாரங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாக மாறி, நாடு முழுவதிலும் பரவின. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவிருந்த அ. அமிர்தலிங்கம், இதை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதையடுத்து, அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தின் தலைவர்கள், த.வி.கூ தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர். அவர்களுக்கு அதற்காகப் போதிய காரணங்கள் இருந்தன. ஏனெனில், அதற்கு முந்திய ஆண்டில் தான், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காகத் தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டு இருந்தது. தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தனித் தமிழ் நாடொன்று வேண்டும் என்றதோர் அபிப்பிராயம், தமிழ் மக்களிடையே இருக்கவில்லை என்பதை அக்காலத் தமிழ்ப் பத்திரிகைகளை ஆராயும் போது, மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதுதான், சர்ச்சை கிளப்பியது. ஏனெனில், கூட்டணியினர் தமிழீழத்துக்காகத் தான், அத்தேர்தலின் போது, மக்களிடம் ஆணையை கேட்டனர். தேர்தல் மேடைகளில் ஆற்றப்பட்ட அந்த உரைகள் தான், தெற்கில் தமிழர் விரோத உணர்வுகளை, ஒரு போதுமில்லாத அளவுக்குத் தூண்டின. இந்த நிலையில் தான், தேர்தல் வன்செயல்கள், இனக்கலவரமாக உருமாற்றம் பெற்றன. அந்தநிலையில், அந்தச் சம்பவங்களைப் பற்றி, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, தமிழ்த் தலைவர்களைப் பார்த்து “போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்” என, நாகரிகமற்ற முறையில் சவால்விடுத்தார். அது, கலவரங்களைத் தணிப்பதற்குப் பதிலாக, மேலும் பரவவே காரணமாகியது. அதையடுத்து, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போதுதான், யாழ்ப்பாணப் பொது நூலகம், தெற்கிலிருந்து சென்ற காடையர்களால் எரிக்கப்பட்டது. அத்தோடு, வடக்கில் ஆயுதக் குழுக்களுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றதோடு, ஏதோ ஒரு காரணத்தால், அந்த மோதல்கள் தணியும் போது, மலையகமெங்கும் குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில், தமிழ் மக்களுக்கு எதிராகக் காடையர்களின் தாக்குதல்கள் இடம்பெறலாயின.

இது, ஜே.ஆரின் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இனக் கலவரமாகும். பொதுவாக, இவை இனக் கலவரங்களாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையிலேயே தமிழர்களைச் சில சிங்களக் காடையர் குழுக்கள், தாக்கியமையே நடைமுறையில் காணக்கூடியதாக இருந்தது. இது போன்ற​தொரு பின்னணியில் தான், 1983 ஆம் ஆண்டு ‘இனக் கலவரம்’ இடம்பெற்றது. அதற்கு முந்திய சில மாதங்களில் வௌிவந்த ஊடகங்களைப் பரிசீலித்தால், திருநெல்வேலிச் சம்பவப் பின்னணி மட்டுமல்லாது, ஊடகங்களும் இந்தக் ‘கலவரத்துக்கு’ எந்தளவு காரணமாகி இருந்தன என்பதை உணர முடிகிறது. அந்தச் சம்பவத்துக்கு முன்னைய நாட்களில், சில சிங்களப் பத்திரிகைகள், மிக மோசமான முறையில் இந்திய விரோதத்தையும் தமிழ் விரோதத்தையும் கக்கியதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை, தமிழ் ஊடகங்கள், பிரிவினைவாதத்தை மிகச் சாதுரியமாகவும் சூட்சுமமாகவும் ஊக்குவிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

கறுப்பு ஜூலையின் மூலமும் அதற்குப் பின்னரான பயங்கரப் போர்க் கால அனுபவங்கள் மூலமும் பெற்ற பாடங்களை, ஊடகங்கள் இன்னமும் உணரவில்லை என்பதை, தற்போதைய ஊடகங்களைப் பார்க்கும் போது தெளிவாகிறது. இன்னமும் சிங்களப் பத்திரிகைகள், பேரினவாதத்தை மூடி மறைப்பதையும் பல காரணங்களைக் காட்டி ஊக்குவிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருப்பதோடு, சிறுபான்மை மக்களின் உரிமைகளை முற்றாகப் புறக்கணித்தும் ஏளனம் செய்துமே, செய்திகளையும் ஏனைய ஆக்கங்களையும் வெளியிடுகின்றன. அதேவேளை, தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போர்வையில் சில தமிழ் ஊடகங்கள், வட பகுதி அரசியல்வாதிகளின் பிரிவினைவாத அல்லது பிரிவினைவாத அமைப்புகளுக்குச் சாதகமான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. தமிழ் அரசியல்வாதிகள், தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதை எவரும் குறைகூற முடியாது. அது அவர்களது உரிமை மட்டுமல்லாது கடமையும் கூட. ஆனால், இலங்கைக்கு வடக்கே, இந்தியா இருக்கும் வரை, இலங்கையில் தனித் தமிழ் நாடு என்பது சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர்களுக்குத் தனியாக வாழும் உரிமை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியைப் பிராந்திய பூகோள அரசியல் நிலைமை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. ஏனெனில், இலங்கையில் பிரிவினைக்கு, இந்தியா ஒரு போதும் இடமளிப்பதில்லை.

1988 ஆம் ஆண்டே, இந்தியா இந்தக் கொள்கையைப் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டது. அந்த ஆண்டு பாகிஸ்தானில், இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ். கே. சிங், அதை அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழீழ விடுதலை புலிகள், அந்தப் பாரதூரமான அரசியல் செய்தியை, பொருட்படுத்தவில்லை; புரிந்து கொள்ளவில்லை. எனவே தான், தமிழீழ விடுதலைப் புலிகள், உலகம் வியக்கும் வகையிலான தியாகங்களைச் செய்தும், அவர்களது போராட்டம் பெரும் அழிவோடு தோல்வியடைந்தது. இந்தப் பூகோள அரசியல் நிலைமை மாறாதிருக்கப் பிரிவினையை மீண்டும் ஊக்குவிப்பதானது, சம்பந்தப்பட்டவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனால், புலிகளின் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம், இந்த நிலைமையை உணர்ந்து இருந்தார் போலும். 2002 ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர்- டிசெம்பர் மாதங்களில், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் மூன்றாம் சுற்றின் போது, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அமைப்புக்குள்ளான தீர்வொன்றைக் காண, பாலசிங்கத்தின் தலைமையிலான புலிகளின் குழு இணங்கியது.

ஆனால், பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த இணக்கத்தை நிராகரித்தார். 2003 ஆம் ஆண்டு, புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாலசிங்கம், “1995 ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த ‘பக்கேஜ்’ ஐ (அப்போது பொதுவாக தீர்வுத் திட்டம் ‘பக்கேஜ்’ என்றே அழைக்கப்பட்டது) புலிகள் ஏற்று இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இவை தமிழர்களால், அதாவது புலிகளால் நழுவவிடப்பட்ட பெறுமதியான இரண்டு சந்தர்ப்பங்களாகும். சிங்களத் தலைவர்களின் நிலைமையும் இதுவே. பிரிவினை மூலமும் அதிகாரப் பரவலாக்கல் மூலமும் தமிழர்கள் சமமாக வாழும் உரிமையையே கேட்கிறார்கள். உலகில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள, இலங்கையிலும் 1987 ஆம் ஆண்டு முதல் ஓரளவுக்கு நடைமுறையிலுள்ள அதிகாரப் பரவலாக்கலைப் பயங்கர பூதமாக்கியவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. எவ்வாறு சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்களப் ‘பேயை’ தமது மக்களுக்குக் காட்டி, தமது சமூகத்தின் மத்தியில் அரசியலை நடாத்தி வருகிறார்களோ, அதேபோல், சில சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ், முஸ்லிம் ‘பேயை’ சிங்கள மக்களுக்குக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் நடாத்துகிறார்கள். அதன் காரணமாக, சிறுபான்மை மக்களின், குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது பிரிவினையை ஊக்குவித்து, அரசியல் இலாபம் தேடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சாதகமாகி விடுகிறது. எனவே, தமிழ்ச் சமூகம், சிறிது சிறிதாகவேனும் தற்போது, பிரிவினையை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகிறது. புலிகள் மீண்டும் வர வேண்டும் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் உரைக்குக் கிடைத்த, பகிரங்க வரவேற்பு அதையே காட்டுகிறது.

எனவே தான், ‘கறுப்பு ஜூலை’ இலங்கை மக்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளது என்கிறோம்.

tamilmirror.lk எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஜூலை 25

Published in Tamil

24 07 2018

சர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள்

ஒரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் இலையில் காணப்படும் அளவற்ற சத்துகளின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். அந்த இலைகளில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உண்டு. வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கிறது.

ஒரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் இலையில் காணப்படும் அளவற்ற சத்துகளின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். அந்த இலைகளில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உண்டு. வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கிறது. சித்த வைத்தியத்திலே உபயோகப்படுத்தப் படுகின்ற முக்கியமான தற்சரக்குகளோடு இதுவும் ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.முருங்கை இலை எதைக் குணமாக்கும்? என்று கேட்பதைவிட எதைக் குணமாக்காது? என்று கேட்கலாம். பாலுணர்வு தொட்டுப் பார்வைத் திறன் வரை, அதிகரிக்கக் கூடிய சக்தி முருங்கைக்கு உண்டென்று சித்த வைத்தியக் குறிப்புகள் சொல்லுகின்றன. அப்படிப்பட்ட முருங்கையின் இலைகள் இன்று ஒரு முக்கிய பேசு பொருளாக இருக்கிறது. யாழ். மண்ணில் விளைகின்ற அந்த முருங்கை இலை உலர்ந்த பொடி வடிவில் சர்வ தேசச் சந்தையை சென்றடைகிறது. யாழ்ப்பாணத்தில் இது ஒரு புது முயற்சியாக மட்டுமல்ல இதற்காகப் பெறப்படும் இலைக் கொள்வனவால் பலர் பயனடைகின்றனர். அவர்களின் வாழ்வதாரத்திற்குரிய முக்கிய விளைபொருளாகவும் முருங்கை இலை காணப்படுகிறது.

அந்த முருங்கை இலைகளைப் பதனிட்டுப் பொடியாக்கி பொதிசெய்து ஏற்றுமதி வியாபாரிகளுக்கு விநியோகிக்கின்ற வியாபாரத்தைத் தனதாக்கிக்கொண்டிருக்கின்ற சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரனையே இன்றைய நேர்முகத்தினூடாகச் சந்திக்கிறோம். உணவே மருந்து என்ற கூற்று இங்கேதான் சரியாகிறது என்கிறார் அவர். 1970 களில் வட மாகாணத்தில் இயங்கிய அரஸ்கோ மற்றும் முருகன் இன்டஸ்றீஸ் ஆகிய வியாபார நிலையங்களிலே பணியாற்றியபோதுதான் இதன் அடிப்படை பற்றித் தெரிந்து கொண்டதாகச் சொல்லுகிறார் நகுலேஸ்வரன். அன்றைய நாட்களில், இந்த இரண்டு ஸ்தாபனங்களும் வட பகுதியில் மிகவும் திறம்பட இயங்கியவை என்பது குறிப்பிடத் தக்கது. பெருமளவில் மேற்கொள்ளப்படாத இந்த முயற்சியை வெற்றிகரமாக நீங்கள் இயக்கக் காரணம் என்ன? ஏன் இதைத் தெரிவு செய்தீர்கள்? இதன் ஆரம்பம் எப்படி இருந்தது? இன்று உங்கள் முயற்சிகள் எவ்வளவு தூரத்தை எட்டியிருக்கிறது? என்று நகுலேஸ்வரனிடம் கேட்டேன்.

தமிழ் நாட்டில் இலைகளைப் பதனிடுவது மற்றும் இயற்கை விளை பொருட்களை வத்தலிடுவது பற்றிய தொழில் முயற்சியையும்,தொழில் நுட்பத்தையும் முறைப்படி நான் கற்றிருக்கிறேன். நான் முன்னர் பணியாற்றிய நிறுவனங்கள் இயற்கை பழரச விற்பனையில் ஈடுபட்டிருந்தன. அவைகள் தான் என்னுள் இந்த வேட்கையைத் தோற்றுவித்தன. தற்பொழுது கோப்பாயில் எனது தொழிலகத்தை அமைத்து அங்கேயே வாழ்ந்து வருகிறேன். தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற கிராமமே எனது பூர்வீகம். 1990 களில் அங்கே இராணுவமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்தோம். 2009இல் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தபோது, வாழ்வாதாரத்துக்கான வழி என்ன? என்ற வினா மேலெழுந்தது. தெரிந்ததைச் செய்யலாம் என்ற எனது எண்ணத்துக்கு, எனது மகள் உதவிக்கரம் நீட்டினார். நானும் எனது மகளும் இணைந்து ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்தத் தொழிலைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் எதுவித தொழில் நுட்ப வாய்ப்பும், வசதியுமின்றி ஒரு குடிசைக் கைத்தொழில் போன்றே ஆரம்பித்தோம். பின்பு சிறுகச் சிறுக வளர்ந்து வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டனர்.

2016 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் எமது உற்பத்திகளைக் காட்சிப்படுத்தினோம். அந்த நேரத்தில் தென்னிலங்கையிலிருந்து பலர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் எமது பொருட்களின்பால் ஈர்க்கப்பட்டனர். தாம் ஏற்றுமதி செய்கின்ற உணவுப் போருட்களோடு எமது தயாரிப்புகளையும் இணைக்கலாம் என்று யோசனை சொன்னார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தற்போது, நேரடியாக ஏற்றுமதி செய்யாவிட்டாலும், ஏற்றுமதியாளர்களினூடாக எமது உற்பத்திகள் சர்வதேசச் சந்தையைச் சென்றடைகின்றன. அவற்றிற்கு நல்ல வரவேற்பும் உண்டு. Nutri Food Packers என எனது தொழிலகத்திற்குப் பெயரிட்டிருக்கிறேன். இந்த முருங்கை இலைப் பொடியை எப்படி உட்கொள்வது? நேரடியாக உட்கொள்வது ஒரு மருந்தை எடுப்பதை ஒத்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை உட்கொள்ள எந்த வழியை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்? பிட்டு, இடியப்பம் என்பனவற்றைச் சமைக்கும்போது முருங்கை இலைப் பொடியையும் கலந்து அவித்துப் பரிமாறலாம். ஆபிரிக்காவில், கோதுமை மாவுடன் கலந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்கள். இதனால் போசணைப் பெறுமானம் அதிகரிப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். தொன்று தொட்டு எமது சமூகத்திலும் இதுபோன்று பிட்டுக்கு முருங்கை இலையைக் கலந்து அவித்துப் பரிமாறுகின்ற வழக்கம் இருந்துவருகிறது. சிறிது சிறிதாக மறந்தும், மறைந்தும் வருகின்ற அந்தப் பழக்கம் தற்போது மீண்டும் புத்தியிர் பெற்றுக்கொண்டு வருகிறது. தொற்றா நோய்களின் அதிகரிப்பே அதற்குரிய காரணங்களில் முக்கியமானது எனலாம். தேநீரைப் போன்று அருந்தக் கூடியதாக முருங்கை இலைப் பொடியைப் பொதி செய்து விற்கிறோம். முன்னையவிடத் தற்போது மக்களும் தமது ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

உங்கள் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களை எப்படிப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள்? இதில் சமூக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு என்ன? நீங்கள் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பம் பற்றியும் சொல்லலாம். இந்தத் தொழிலில் பிரதானமான சவால்களாக விளங்குவது மூலப்பொருட்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றைத் தொடர்ச்சியாகப் பெறுவதில் இருக்கின்ற சிரமங்களை அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் தவிர்க்கலாம் என்று எண்ணுகிறேன்.யாழ்ப்பாணம் ஒரு வரட்சிப் பிரதேசம்.எனவே பசுமைக் குடில்களை (Green House) அமைப்பதன் மூலம் தொடர்ச்சியான பயிரிடல்களை மேற்கொண்டு மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பாகற்காயை அப்படித்தான் தற்போது உற்பத்தி செய்கிறேன். இந்தப் பசுமைக் குடில்களைக் கிளிநொச்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். இப்படியான புதிய தொழில் நுட்பங்களை உட்புகுத்த ஏனைய விவசாயிகளும் முன்வர வேண்டும். ஆரம்பத்தில் பதனிடலையும், பொதி செய்வதையும் பல நிறுவனங்கள் நடத்திய பயிற்சிப் பட்டறைகளிலே தான் சென்று கற்றுக் கொண்டேன். இதனால் எமது பிராந்தியத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம். பாலைவனமே தங்களுக்குரிய வளம் என்று இஸ்ரேலியர்கள் சொல்லுகின்றனர். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் கைகோர்த்துப் பயணிக்கும் போதுதான் பொருளாதாரத்தில் மேன்மையடையலாம். முறைப்படி கரிசனையோடு முயற்சித்தால் எமது பொருளாதாரம் பெருமளவில் அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய தொன்றாக வருவதற்கு வாய்ப்புகள் அதிக முண்டு. எம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளுகிறோம். எமக்கு வழங்குநர்களாக இருப்பவர்கள் அதனால் பொருளாதார மேம்பாட்டைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள் என்று சொல்கிறார் நகுலேஸ்வரன். கிடைக்கின்ற போது அவற்றைப் பதனிட்டுப் பாதுகாத்து, கிடையாத போது அவற்றைப் பாவனைக்கு உட்படுத்துவதென்பது ஒரு சிறந்த சேமிப்பை ஒத்தவிடயம். அதனால் பலவிதமான நன்மை உண்டு. உணவை மருந்தாக்கக் கற்றுக் கொண்டவர்கள் பலர் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பிறருக்குப் பாரமற்றவர்களாகவும் வாழ்வதை இன்றும் காணலாம்.

இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அத்தனை பொருட்களையும் சேமிக்கக் கூடிய முறையினை சித்தர்கள் கூறிச் சென்றிருக்கின்றனர். நகுலேஸ்வரனின் முயற்சியும் அத்தகையதொன்றாகவே காணப்படுகிறது. அவர் வெப்பத்தை விரைவாகக் கடத்தித் தக்க வைத்திருக்கும் மேற்கூரையுடன் கூடிய அறைகளை அமைத்து அதில் முருங்கை இலை, பாகற்காய், இராசவள்ளிக் கிழங்கு என்பனவற்றை உலர்த்திப் பெற்றுக் கொள்ளுகிறார். அத்துடன் பருவகாலங்களில் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் பூவைக் கொண்டு வடகம், மற்றும் பாகற்காய் வடகம், மோர் மிளகாய் என்பனவற்றை அறிமுகப்படுத்தி நல்ல சந்தை வாய்

பொன்றையும் பெற்றிருக்கிறார். இவர் அண்மையில் தாய்லாந்துக்குச் சென்று அவர்களின் முயற்சிகளையும் அறிந்து கொண்டவர். அங்கு நடைபெறுகின்ற பனம்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் பற்றி வியந்து போற்றுகிறார். அதன் மூலம் அந்த நாடு பெற்றுக் கொள்ளும் அந்நிய வருமானம் பெரியதாம். ஏற்றுமதிக்கேற்றவாறு தொழில் நுட்ப வளர்ச்சியையும் அந்த நாட்டுமக்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அங்கு கிடைக்கின்ற மூலப்பொருளான மூங்கிலை வைத்துச் சிறப்பான முறையில் பசுமைக் குடில்களை அமைத்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது நாங்கள் பின்னிலையில்தான் இருக்கிறோம். அங்கே தொழில் முயற்சியாளரின் வளர்ச்சிக்கு வங்கிகளும் அந்த முயற்சி தொடர்பான நிறுவனங்களும் அவர்களுக்குத் துணை புரிகின்றன. சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் வட பகுதியிலிருந்து மாம்பழங்கள் பெருமளவில் ஏற்றுமதியாகி இருக்கிறது. இங்கே பெருந்தொகையாக முருங்கையைப் பயிரிட விரும்புபவர்கள் PKM என்ற இந்திய இனத்தையே அதிகம் பயிரிட விரும்புகிறார்கள். ஆனால் அந்த இனம் நீண்டகால அடிப்படையில் நிலைத்து நின்று பயன்தரக் கூடியதொரு இனமல்ல. இந்தியாவில் இருக்கின்ற விவசாய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், உலகத்திலே சிறந்த இனம் யாழ்ப்பாண முருங்கை இனம். இதைவிட்டு நீங்கள் ஏன் இந்த இந்திய Hybrite கலப்பினவகைகளை விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகின்றனர். எனவே எமது சூழலுக் கேற்றவாறு வளர்ந்து நீண்டகாலம் பயன்தரக் கூடிய யாழ்ப்பாணத்து இனங்களை விருத்தி செய்யலாமே! என்று ஆதங்கப்படுகிறார் நகுலேஸ்வரன். முருங்கை விடயத்தில் மட்டுமல்ல பல விடயங்களில் எம்மிடையே காணப்பட்ட பல சிறப்புகளைத் தொலைத்துவிட்ட இனமாகத் தமிழ் இனம் காணப்படுகிறது. அத்துடன் அந்நியர்களிடமுள்ள எமக்கு ஒவ்வாத பல தரம் குறைந்த பழக்க வழங்களுக்கு அடிமையாகிச் சுயத்தை இழந்துவிட்ட சமூகம் வாள் கொண்டு அலைவதைவிட்டு வேறென்னத்தை செய்ய முடியும்

கணபதி சர்வானந்தா thinakkural.lk 21 june 2018

Published in Tamil

19 07 2018

தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா?

ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்தி இந்தக் காலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை ஒரு தீர்வுக்குள்ளாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு எங்களுக்குள் இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.

கேள்வி: 2015 ஆட்சி மாற்றம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல எதிர்பார்ப்புகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. அதில் புதிய அரசியலமைப்புத் திருத்தம் அந்த அடிப்படையில், தொடர்ந்தும் நீங்கள் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் இது சம்பந்தமான பேச்சகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி நிறைவு பெறுவதற்கு முன்னர் அரசியல் தீர்வொன்று தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: நிச்சயமாக அந்த நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. நம்பிக்கை இருப்பதனால்தான் தொடர்ந்தும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். நம்பிக்கை இல்லாவிட்டால் முயற்சி எடுப்பதில் பயனில்லாமல் போய்விடும். ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்தி இந்தக் காலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை ஒரு தீர்வுக்குள்ளாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு எங்களுக்குள் இருக்கிறது.

கேள்வி: ஆனால், கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு விடயத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறுகிறார்களே?

பதில்: இந்தக் கேள்விக்கு அவர்கள் தான் பதில் கூற வேண்டும். ஆனால் இங்கு நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் நானும் தான் வழிநடத்தல் குழுவில் அங்கத்தவர்களாக இருக்கிறோம். அதேபோல் அந்தப் பணியில் நாங்கள் இருவரும் தான் ஈடுபாட்டோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் சம்பந்தன் தனக்கு நம்பிக்கையிருப்பதாகத் தான் இன்றும் கூறிக் கொண்டிருக்கிறார். என்னென்ன விடயங்கள் அரசியலமைப்புப் பணியில் நடந்திருக்கிறது. இன்னும் என்னென்ன விடயங்கள் நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்த எங்களுக்கு அந்தப் பணி நிறைவு பெறும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது. நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடாதவர்களுக்கு சில வேளைகளில் இந்தப் பணி நடைபெற்று முடியாது என்று தோன்றலாம். அல்லது அதற்கான நம்பிக்கையை அவர்கள் இழந்து போயிருக்கலாம். இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு கூறவேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பு பணி நிறைவேறும் என்ற நம்பிக்கையில்லை என்பது உண்மை. அதற்கு மக்களைக் குறை கூற முடியாது. ஏனென்றால் கடந்தகால கசாப்பான வரலாறுகள் அவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. தொடர்ந்தும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வந்ததுதான் வரலாறு. அந்த அடிப்படையில் இன்று முன்னெடுக்கப்படும் முயற்சியும் தோல்வியில், ஏமாற்றத்தில் தான் முடிவடையும் என்ற எண்ணத்தை தான் அநேகமான தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைதான் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்கொண்டிருக்கக் கூடும்.

கேள்வி: இன்று அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சி போன்ற சூழ்நிலைகளைத் தகர்த்தெறிந்து புதிய அரசியலமைப்புப் பணிகளை முன்கொண்டு செல்வதற்காக கூட்டமைப்பு எவ்வாறான பணிகளை ஆற்றி வருகின்றது?

பதில்: இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான காலத்தில் என்று மில்லாதவாறு இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து கூட்டாட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுதான் எங்களுடைய நம்பிக்கைக்கான அடிப்படை. முன்னர் ஒரு பிரதான கட்சி ஒரு தீர்வைக் கொண்டுவர எத்தனித்தால் மற்றைய பிரதான கட்சி எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு எதிர்த்து வந்தது தான் வரலாறு. ஆனால் இன்று அந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்த காரணத்தால் அரசியலமைப்புக்கான முயற்சியை ஒரு வித்தியாசமான முயற்சியாக நாங்கள் பார்த்தோம். ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிரிந்திருந்த வேளையில்கூட புதிய அரசியலமைப்புப் பணியை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் வலுவாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கத்திலிருந்த 16 பேர் பிரிந்து எதிர்க்கட்சியில் இணைந்திருக்கின்ற சூழ்நிலையில் மாற்று வழிகளைக் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அண்மையில் அரசியலமைப்புப் பணி தொடர்பில் கதைத்திருந்தார். அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுடனும் நாங்கள் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இன்று ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளில் பொது எதிரணி உறுப்பினர்களுடனும் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கின்றோம். கடந்த வாரம்கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சிறிது நேரம் அரசியலமைப்புப் பணி தொடர்பில் நான் உரையாடியிருந்தேன். அந்த உரையாடலில் சில யோசனைகளை முன்வைத்திருந்தேன். அது தொடர்பில் ஆராய்வதாக மகிந்த ராஜபக்ஷ என்னிடம் கூறியிருந்தார். அத்தோடு எங்களுடைய யோசனைகளை ஒரு குழுவிடம் அவர் கையளித்திருக்கிறார்.

அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களும் என்னுடன் பேசியிருந்தார்கள். எதிர்வரும் சில நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. எனவே, புதிய அரசியலமைப்புப் பணியில் அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற்று முன்னேறுவது தான் சாலச்சிறந்தது என்பது எங்களுடைய நிலைப்பாடு. மகிந்த தரப்பு அணியில் இருக்கின்ற மூவர் அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இறுதியாக நடந்த வழிநடத்தல் குழுக் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கும் சுசில் பிரேம் ஜயந்தவும், டிலான் பெரேராவும் கூட இறுதியாக நடந்த வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். எனவே மேற்படி கருமம் நிறைவேற வேண்டுமாகவிருந்தால் எல்லாத் தரப்பினருடைய ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் உருவாக்கவிருக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு சட்டமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சட்டமாக அது இருந்தால் தான் நிலைக்கக் கூடியதாகவும், நீடித்து நிற்கக் கூடியதொன்றாகவும் அது இருக்கும். அந்த அடிப்படையில் தான் நாங்கள் தற்பொழுது விசேடமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து சில தினங்களுக்கு முன்னதாக பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். இதனூடாக வடமாகாண மக்கள் எவ்வாறான அபிவிருத்திகளை எதிர்பார்க்க முடியும்?

பதில்: ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று வருடங்களில் பல தடவைகள் அபிவிருத்தி பற்றிப் பேசப்பட்டிருந்தாலும் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் விஷேட கவனம் எடுத்திருக்கிறார். அதேபோல் ஜனாதிபதியும் இது தொடர்பில் கவனமெடுத்திருப்பதாக தோன்றுகிறது. அதற்காக அவர் ஒரு செயலணியையும் உருவாக்கியிருக்கிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தடவைகள் யாழ்ப்பாணம் சென்று கூட்டங்களை நடத்தியிருந்த அடிப்படையில், அதனை மிளாய்வு செய்யும் நோக்கின் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் எங்களைச் சந்தித்திருந்தார். அதற்கிணங்க காணி விடுவிப்பு, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பான விசாலமான திட்டம், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவது, காங்கேசன் துறை துறைமுகத்தை சர்வதேச பயணிகள் பயன்படுத்துகின்ற துறைமுகமாக அபிவிருத்தி செய்து அதனூடாக பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பது, கைத்தொழில் பேட்டைகளை காங்கேசன் துறை, பரந்தன் ஆகிய பிரதேசங்களில் உருவாக்குவது, காணி விடுவிப்பில் எஞ்சியிருக்கின்ற காணிகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு, எந்த அடிப்படையில் விடுவிப்பது என்பது தொடர்பிலும் அந்த சந்திப்பில் நாங்கள் பேசியிருந்தோம். அதே போல் கிளிநொச்சியில் இராணுவம் கையகப்படுத்தி நடத்திக் கொண்டிருக்கின்ற பண்ணைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதியளிக்கப்பட்டது. வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பிலும் பேசியிருந்தோம். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அடிக்கடி மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னேற்றங்கள் பற்றியும் அதில் இருக்கின்ற தடைகள் பற்றியும் தொடர்ந்து பேச்சுகள் நடத்தி மேற்படி அபிவிருத்தி வேலைகள் நிறுத்தப்படாது தொடர்ந்து நடைபெறும் என நம்புகின்றோம். அதற்கான முன்னேற்றங்களை எதிர்வரும் வாரங்களில் காணக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட பல பிரச்சினைகளில் ஒன்று அரசியல் கைதிகளுடைய விடுதலை. இந்தப் பிரச்சினைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி முடிவடைவதற்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கலாமா?

பதில்: முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. 2015 நவம்பரில் ஜனாதிபதியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய வேளையில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எங்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார். பிரதமரும் இந்தவிடயம் சம்பந்தமாக சட்டமா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அதற்கிணங்க அரைவாசிக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்களுடைய விடுதலை தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும் கூட, பல்வேறுபட்ட காரணங்களினால் அவர்களுடைய விடுதலை தள்ளிக் கொண்டே போகிறது. அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேளையில் பிரதமருடன் இணைந்து இந்த விவகாரம் தொடர்பில் பேசி ஒரு முடிவை எட்டுவதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். எனவே எதிர்வரும் வாரமளவில் இந்த விவகாரம் சம்பந்தமான சந்திப் பொன்று நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சந்திப்பின் பின்னர் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என நம்புகின்றோம்.

கேள்வி: நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வீழ்ச்சியொன்று ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இந்த வீழ்ச்சிக்கான காரணம் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி இது. இது தொடர்பாக பல வழிகளிலும் நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். இந்த விடயத்தில் பல்வேறு காரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த தடவை உள்ளூராட்சி சபைகளை நாங்கள் நிர்வகித்தது சம்பந்தமாக மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை ஒரு காரணம். அதேபோல் அங்கு ஏற்பட்ட ஊழல்களை சரியான முறையில் சபைகள் கையாளப்படாமை என்று பல காரணங்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம் அதேபோல் கடந்த மூன்று வருடங்களாக மைத்திரி ரணில் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக கூட்டமைப்பு மத்தியில் செயற்பட்டது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அது தவறான எண்ணமும் இல்லை. ஆனால் மத்திய அரசுடன் இருந்தும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதுவும் முழுமையடையவில்லை என்ற ஆதங்கமும் மக்களிடம் இருக்கிறது. இவை போன்ற விடயங்கள் தான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நாங்கள் அடையாளம் கண்டிருக்கின்றோம். மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் பாரியளவில் இருந்தமையினாலும் அவை முழுமை பெறாமல் இருப்பதனாலும் பல விடயங்கள் இழுத்தடிப்பு செய்யப்படுவதனாலும் அதனால் ஏற்பட்ட நம்பிக்கையிழப்பு விரக்தியைக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவ்வாறு எதிர்த்து வாக்களிக்கின்ற பொழுது ஒரு திசையில் செல்லாது பல திசைகளிலும் தங்களுடைய வாக்குகளை வாக்களித்திருக்கிறார்கள். எனவே இதனை கொள்கை மாற்றத்தினால் மக்கள் அளித்த வாக்குகளாகவோ அல்லது இன்னொருவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக அளித்த வாக்குகளாகவோ நாங்கள் கருதவில்லை. எங்கள் மீது ஏற்பட்ட நம்பிக்கையீனம் காரணமாக எல்லா வழிகளிலும் தங்களுடைய வாக்குகளை அளித்த தேர்தலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

கேள்வி : வடக்குகிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுகள் எந்தக்கட்டத்தில் இருக்கின்றன.

பதில்: இதுவரை அது சம்பந்தமாக எந்தவித முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. வட மாகாண சபைக்கான காலம் முடிவடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன. வடக்குக்கும் கிழக்குக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே அவ்வேளையில் இரு மாகாண சபைகளுக்குமான வேட்பாளர்களை ஒரே நேரத்தில் தீர்மானிப்போம்.

கேள்வி: கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் வியூகம் எவ்வாறு அமையும். கடந்த முறை போன்று விட்டுக் கொடுப்புகள் ஏதாவது நடைபெறுமா?

பதில்: கடந்த ஆட்சிக்காலத்தில் எங்களுடைய விட்டுக் கொடுப்பு எங்களுடைய பங்களிப்பின் காரணமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இந்தத் தடவை எங்களுக்கு இறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட நாங்கள் (கூட்டமைப்பு) ஆட்சியை அமைப்பதற்கான தார்மீக உரிமை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே இந்தத் தடவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுகளை நடத்தி எங்களுடைய முதலமைச்சர் ஒருவரின் தலைமையில் முஸ்லிம் மக்களோடும் இணைந்த கூட்டு ஆட்சியொன்றை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்துவோம்.

கேள்வி: வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாகக் களமிறங்குவார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. அவ்வாறு அவர் ஒரு முடிவை எடுத்தால் கூட்டமைப்பு அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

பதில்: அவர் அவ்வாறு ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்பது எங்களுடைய திடமான நிலைப்பாடு. அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டு வருவதில் சம்பந்தன் முக்கியமான பங்கு வகித்திருந்தார். அதே வேளை எனக்கு அதில் பங்கு இருக்கிறது. அவரை ( விக்னேஸ்வரனை) வற்புறுத்தி முதலமைச்சராகக் கொண்டு வந்திருந்தோம். அன்று அதற்கான ஒரு தேவை இருந்தது. அதற்கிணங்க அவரும் அதனைப் பூர்த்தி செய்திருந்தார். அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இதுவரை திர்மானிக்கவில்லை. அந்தத் திர்மானத்தை நாங்கள் எடுக்கின்ற பொழுது என்னவிதமாகக் கடந்த முறை விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் திர்மானித்த பொழுது கட்சியிலிருந்தவர்கள் ஆரம்பத்தில் அதற்கு இணங்கியிருக்காத போதிலும் கூட ஒற்றுமையைக் கருதி அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை ஏற்றுக் கொண்டது போன்று இந்தத்தடவையும் விக்னேஸ்வரன் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த முடிவை எடுக்க முன்வர வேண்டும். அவ்வாறான தொரு சூழலைத்தான் எங்களுடைய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த சூழல் தான் இன்று எங்களுடைய மக்களுக்கு தேலையானது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. கட்சி தீர்மானிக்கின்ற வேட்பாளரை பங்காளிக்கட்சிகளும் விக்னேஸ்வரனும் ஏற்று ஒத்துழைப்பு தர வேண்டும். அது தான் எங்களுடைய மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

கேள்வி: முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நிறுத்தப்படலாம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றனவே?

பதில்: முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் தீர்மானிக்கவில்லை. மாவை சேனாதிராஜாவினுடைய பெயர் அடிபடுவதற்கான காரணம், கடந்த முறை அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூட்டமைப்பின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் அவர் தானாக முன்வந்து விட்டுக் கொடுத்ததன் காரணமாக விக்னேஸ்வரனை நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தோம். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராவதற்கு சம்மதித்த பொழுது இரண்டு வருடங்கள் மாத்திரம் தான் முதலமைச்சராக இருப்பேன், அதன் பிறகு மாவை சேனாதிராஜா அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களுக்காக ஐந்து வருடங்களும் முதலமைச்சராக இருந்திருக்கிறார். கடந்த முறை அனைத்துக் கட்சிகளும் இணைந்து மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானித்திருந்தன் காரணத்தினாலோ என்னவோ அவருடைய பெயர் தற்பொழுது பேசப்பட்டு வருகிறது. ஆனால் யார் வேட்பாளர் என்பதைக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை.

கேள்வி: முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய ஐந்து வருட கால நிர்வாகத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: பல சந்தர்ப்பங்களை அந்த நிர்வாகம் தவறவிட்டிருக்கின்றது. இது சுய விமர்சனமாக இருந்தாலும் கூட இது தான் பெரும்பாலானவர்களுடைய கருத்தாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்காலத்தில் ஒரு இராணுவ அதிகாரியின் ( ஆளுநர்) கீழ் பல விடயங்களைச் செய்ய முடியாமல் இருந்தது. அந்த நாட்களில் ஆளுநருடன், ஜனாதிபதியுடனான சந்திப்புகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். அன்று பல கட்டுப்பாடுகள் இருந்த வேளையிலும் கூட அவற்றை எதிர் கொள்கின்ற ஆளுமை விக்னேஸ்வரனிடம் இருந்தது. அவற்றை அவர் செய்துமிருந்தார். ஆனால் பின்னர் ஆளுநரை மாற்றி மத்தியுடன் இணைந்து செயலாற்றக்கூடிய சூழல் ஏற்பட்ட வேளையில் அதனை மாகாண சபை சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை. எனவே அடுத்த வரவிருக்கின்ற மாகாண சபை நிர்வாகத்தில் அவ்வாறான தவறுகள் இடம் பெறக் கூடாது என்பதில் நாங்கள் கரிசனையாக இருக்கின்றோம். மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். அதன் காரணத்தினால் புதிய அரசியலமைப்புச் சட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். நாங்கள் மாகாண சபைத் தேர்தலில் பங்கெடுத்ததன் நோக்கம் இருக்கிற அதிகாரங்களையாவது வைத்துக் கொண்டு போருக்குப் பின்னரான காலத்தில் எங்களுடைய மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் 1987 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் நிராகரித்து வந்த மாகாண சபை முறையிலேயே 2009க்கு பின்னர் பங்கு பெற வேண்டும் என்று நாங்களும் மக்களும் தீர்மானித்தற்குக் காரணம் போரில் ஏற்பட்ட அமிவுகளிலிருந்து மீண்டுவருவதற்கு இந்த மாகாண சபையைப் பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே. ஆனால் அந்த மாகாண சபைக்குத் தெரிவானவர்கள் பதவிகளை எடுத்தார்களே தவிர, அதனைச் சரியான முறையில் நிர்வகித்து மக்களுக்கு வழங்கக் கூடிய நிவாரணங்களை சரியாக வழங்கவில்லை என்பது தான் இன்று எல்லோருடைய சிந்தனையாகவும் இருக்கிறது. எனவே வரவிருக்கின்ற மாகாண சபைக்கு சரியான வழியில் அந்த சபையை நிர்வகிக்கக் கூடியவராக இணைந்து செயற்படக் கூடியவராக ஆற்றலுள்ள ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற சிந்தனையை நாங்கள் கொண்டிருக்கின்றோம். thinakkural.lk july 4 2018

Published in Tamil