27 08 2016

தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்

கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”.கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக - ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது.இந்த இடத்தில், ஈழத் தமிழரின் அரசியல் என்ன, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது இங்குள்ளவர்களாலும், வெளியில் உள்ளவர்களாலும் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.விடுதலைப் புலிகளின் காலத்தில், ஓர் அரசியல் பின்பற்றப்பட்டது. ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளை, தராசின் ஒரு பக்கமும் எதிரான சக்திகளை இன்னொரு பக்கமும் நிறுத்தி வைத்து, அது எடை போட்டது.ஆனால், விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய ஈழத்தமிழர் அரசியல், குழப்பம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.தமிழகத்தைக் கையாளுவது உள்ளிட்ட அரசியலை, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகப் பார்க்கப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலோ, வேறெந்தத் தமிழ்க் கட்சிகளாலோ, சரியாக முன்னெடுக்க முடியவில்லை.முன்னர், தமிழக - ஈழ அரசியல் தலைவர்களுக்கிடையில், நெருக்கமான உறவுகள் இருந்தன. 2009 க்குப் பின்னர், தமிழக அரசியல் தலைவர்களுடன், ஈழத் தமிழ் அரசியல்வாதிகளால், நெருக்கமான உறவுகளைப் பேணமுடியவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு துருவநிலை அரசியல் தலைமைகளுக்கிடையில், சீரான உறவுகளைப் பேணக்கூடிய வழிமுறையை, இவர்களால் கண்டறிய முடியாததே அதற்குக் காரணம். இவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, விடயங்களைக் கையாளக்கூடிய வாய்ப்புகளையும் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தவற விட்டனர்.ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்த வரை, கூட்டமைப்பின் தலைவர்களையோ, முதலமைச்சர் விக்னேஸ்வரனையோ அவர் சந்திக்கவுமில்லை; அதற்கு வாய்ப்பு அளிக்கவுமில்லை. அதேவேளை, கருணாநிதியுடனும் இவர்கள் தொடர்புகளை நெருக்கமாக வைத்துக் கொள்ளவில்லை.இதனால், இரண்டு முக்கிய தலைமைத்துவ ஆளுமைகளில் இருந்தும், ஈழத்தமிழரின் பிரதான அரசியல், விலகியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இடையிலான அரசியல் மோதல்களும் இத்தகைய விலகியிருந்தலுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஈழத் தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், இது ஒரு பெரும் இடைவெளியே.ஈழத் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டத்தில், தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் இயக்கங்களான தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஏதோ ஒரு வகையில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. ஆனால், அந்த ஆதரவுத் தளத்தை, நெருக்கமான உறவுகளை, 2009 க்குப் பின்னர் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதில், ஈழத் தமிழ் அரசியல் தவறி விட்டிருக்கிறது.ஈழத் தமிழர் ஆதரவுக் கோசங்களுடன் புதிதாக முளைத்த கட்சிகள், தலைவர்களுடன் கைகோர்ப்பதில் அக்கறை காட்டிய ஈழத் தமிழ் அரசியல் சக்திகள், தமிழகத்தின் பிரதான அரசியல் சக்திகளை மறந்துபோயின. இந்த இடைவெளியின் தாக்கத்தை, இப்போதைக்கு உணர முடியா விட்டாலும், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடும்.

2016இல் ஜெயலலிதாவின் மறைவின் போதும், அண்மையில் மு.கருணாநிதியின் மறைவின் பின்னரும், ஈழத்தமிழ் அரசியல் சக்திகள் நடந்துகொண்ட முறை, ஒன்றுக்கொன்று எதிர்மாறானது.இவர்களின் மறைவுகளின் போது, மிதவாத ஈழத் தமிழ்த் தலைமைகள், வெறும் இரங்கல் அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டன. சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட யாரும், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க நேரில் செல்லவில்லை. தமது பிரதிநிதிகளையும் அனுப்பி வைக்கவில்லை.ஜெயலலிதாவின் மறைவை, மிகப்பெரிய துயரத்துடன் வெளிப்படுத்தி அஞ்சலிக் கூட்டம், அறிக்கைகள் என்று விளாசிய பெரும்பாலான ஈழத் தமிழ் அரசியல் சக்திகள், கருணாநிதியின் மறைவின்போது, ‘கள்ள’ மௌனத்தைக் கடைப்பிடித்தன.பெரும்பாலானவர்கள் இரங்கல் அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. குறிப்பாக, புலம்பெயர் தமிழர்கள் எட்ட நின்று கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பின்னரே, நாடு கடந்த தமிழீழ அரசு இரங்கல் அறிக்கையை வெளியிட்டது.

‘டெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மாத்திரம், கருணாநிதியின் இறுதிச்சடங்கில் ஏனைய மலையக அரசியல் தலைவர்களுடன் இணைந்து பங்கேற்றிருந்தார். ‘டெலோ’வுக்கும் கருணாநிதிக்கும் நெருங்கிய உறவுகள் இருந்தமையே, அவரது பங்கேற்புக்கு முக்கிய காரணம்.2009க்குப் பிற்பட்ட அரசியல் என்பது, ஈழத் தமிழரின் பிற்போக்கு நிலையைத் தெளிவாகக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அதாவது, ஓர் இறுதிச் சடங்கைக் கூட, கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. தாய்த் தமிழகம் என்றும் தொப்புள் கொடி உறவுகள் என்றும் போற்றப்பட்ட ஈழத்தமிழர் - தமிழகம் இடையிலான உறவு, இப்போதும் அந்த நிலையில் தான் இருக்கிறதா என்ற கேள்வியையே எழுப்ப வைத்திருக்கிறது.ஈழத் தமிழருக்கான அரசியல் என்பது, வெறுமனே வடக்கு, கிழக்கு என்ற எல்லைகளுடன் குறுகியதாக இருக்குமேயானால், நீண்டகால நோக்கில், ஈழத் தமிழரின் அரசியல், பலமிழந்து போகும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஈழத் தமிழரின் போராட்டம் பலம் பெறுவதற்கு, தமிழகத்தின் பின்புல ஆதரவு கணிசமாகக் கைகொடுத்தது என்பதை எவரும் எப்போதும், மறந்து விட முடியாது. அரசியல், விநியோக ரீதியிலான ஆதரவுகள் என்று பல்வேறு வழிகளிலும், ஈழத் தமிழரின் போராட்டத்துக்கு, தமிழகம் கைகொடுத்திருந்தது.அவ்வாறான ஆதரவு என்பது, தமிழக அரசியலையும் அரசியல் தலைவர்களையும் தாண்டியது. ஜெயலலிதா, விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தபோது கூட, அ.தி.மு.கவில் இருந்த காளிமுத்து போன்ற பல தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரமான உதவிகளை வழங்கினார்கள்.அதுபோலத் தான், கருணாநிதி பாராமுகமாக இருந்த தருணத்திலும், தி.மு.கவின் பல தலைவர்கள், உதவிகளை வழங்கினார்கள். ஈழத்தமிழர் ஆதரவு என்பது, தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளிலும், கடைசி மட்டத் தொண்டர்கள் வரை ஊறிப் போயிருந்தது.

கட்சிகளின் தலைமைகள் பலவேளைகளில் ஈழத் தமிழர் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகள், கடுமையானதாக இருந்திருக்கலாம்; ஈழத் தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்திருக்கலாம்; ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்காக ஒட்டு மொத்த தமிழகத்தையோ, குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியையோ புறக்கணித்து விட முடியாது.ஒரு சில தலைவர்களை முன்னிறுத்தி, அவர்கள் சார்ந்த அரசியல் இயக்கங்களைப் புறக்கணிக்கும் முடிவை, ஈழத் தமிழர்கள் எடுப்பார்களேயானால், அது ஈழத் தமிழ் அரசியலின் தோல்வியாகத் தான் அமையும்.ஜெயலலிதாவை முன்னிறுத்தியும் கருணாநிதியைப் பின்னிறுத்தியும் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான், தமிழகத்துக்கும், ஈழத் தமிழர் அரசியலுக்கும் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு, பரவலான ஒன்றாக இருந்தது. அதற்காக, ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழக மக்கள், தமிழக அரசியலுடன் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.

2009க்குப் பின்னர், ஈழத்தமிழரில் ஒரு தரப்பினர், குறுகிய அரசியல் வட்டத்துக்குள்ளேயே ஒட்டுமொத்தத் தமிழகத்துடனான அரசியல் உறவுகளைக் கையாள முயற்சித்தனர். இன்னொரு பகுதியினர் கருணாநிதி, ஜெயலலிதா மோதலுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவிக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று ஒதுங்கியிருந்தனர். இதனால், ஈழத் தமிழரின் போராட்டம் சார்ந்து, தமிழகத்தில் ஓர் ஆதரவுத் தளத்தை, அலையை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஈழத் தமிழர் நலன்களில் அக்கறையுள்ளவர்கள் கூட, ஈழத் தமிழ் அரசியலின் இந்தப் போக்கால், ஒதுங்கி நிற்க விரும்புகின்ற நிலைதான் காணப்படுகிறது.ஈழத் தமிழருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிக நீண்டது; வலுவானது; வலிமையானதும் கூட.கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பெரும் தமிழக அரசியல் தலைமைகளுக்குப் பின்னர், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு அரசியல் இயக்கங்களும் முன்னைய இறுக்கமான மோதல் போக்கில் இருந்து சற்று தளர்ந்திருக்கின்றன.இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் தமக்கான அரசியலைப் புதிதாகவேனும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில், தமிழகம் பக்க பலமாக இருக்கக் கூடியது. இத்தகைய நிலையில், ஈழத் தமிழர் அரசியல், எவ்வாறு தமிழகத்தில் மீண்டும் இடம்பிடிக்கப் போகிறது என்பது முக்கியமானது.

ஒதுங்கி நிற்கும் போக்கைக் கைவிட்டு, விருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடுக்காமல், நட்புச் சூழலை விரிவுபடுத்தும், தனித்துவமான அரசியலைக் கையாள வேண்டிய அவசியத்தை, ஈழத் தமிழ்த் தலைமைகள் இனியாவது உணருமா என்று தெரியவில்லை.
tamilmirror.lk கே. சஞ்சயன் / 2018 ஓகஸ்ட் 17

Published in Tamil

23 08 2018

புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்!

மக்களை ஏமாற்றி ....... வயிறு வளர்த்த கூட்டம் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும்.

“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள், மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

கடந்த காலத்தில் இவர்களில் பலர் விடுதலைப் போராட்டத்திற்கு மானசீகமாக உழைத்தவர்கள் அல்ல. மக்களை வற்புறுத்தி அச்சுறுத்தி பணம் சேர்த்த இவர்கள், தாம் சேர்த்த பணத்தில் 20% த்தினை கமிசனாக பெற்றுவந்துள்ளனர். அதாவது புலிகளிற்கு சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் தான் இவர்கள். மேலும் சிலர் புலிகளின் முதலீடுகளிற்கு பினாமிகளாக இருந்து, தமது பெயர்களில் வியாபார நிறுவனங்களை நடத்தினார்கள். புலிகளின் அழிவின் பின்னால் அவற்றினை தமது உடமையாக்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் போராட்டத்திற்க்காக ஒரு மயிரைத்தானும் தங்களிடமிருந்து இழந்தவர்கள் அல்லர். மாறாக மக்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டு உழைத்த பணத்தினையும், விடுதலை ஆர்வத்தினால் மக்கள் வங்கிகளில் கடனாகப் பெற்றுக் கொடுத்த பணத்தினையும், வர்த்தக நிறுவனம் (சிறு கடைகள்) நாடாத்துவோரிடம் மிரட்டி பறித்த பணத்தினையும் விடுதலையின் பேரில் தமதாக்கி சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்பவர்களே.

புலிகளால் புலம் பெயர்ந்த நாடுகளில் நினைவு கூறப்பட்டு வந்த மாவீரர் நிகழ்வு என்பது மக்களை அரசியல் மயப்படுத்தும் அல்லது மக்களின் அபிலாசைகளை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வாகவோ அல்லது உயிர் துறந்த வீரர்களின் இலட்சியங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான ஒரு நிகழ்வாகவோ கொண்டாடப்படுவதில்லை. மாறாக மாவீரர் நிகழ்வை வைத்து பணம் சம்பாதித்தலே நடைபெற்றது. அன்று அவ்வாறு சேர்த்த பணத்தில் பெரும் பகுதி ஆயுதம் வாங்க பயன்படுத்தப்பட்டது. இன்று நிலைமை வேறு. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கும் எஞ்சியுள்ள புலிகளிற்கும் மறுவாழ்வுக்கான உதவிகள் நிரம்பவே தேவைப்படுகின்றன. இவற்றினைப் பற்றி இவர்கள் கதைப்பது அரிது. சிலர் தம்மிடமுள்ள புலிகளின் பினாமி சொத்துக்களை காப்பாற்ற; தாம் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலையாகியும் கைதாகியும் உள்ள புலிகளின் மீது அக்கறை கொண்டவர்களாக நாடகமாடி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புலம்பெயர் மக்களிடம் தமக்கு ஊடாக உதவும்படி கோரிக்கையினை வைத்து மீண்டும் “வசூல் ராஜாக்களாக” வலம்வருகின்றனர்.

அன்று தாம் புலி அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை தாமே தம்பட்டம் அடித்துக் கொண்ட பலர், இன்று புலிகள் அமைப்பை பற்றி எதுவும் கதைப்பது கிடையாது. அரசு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுகின்றது என மகிந்தா மாமா பற்றி புகழ்பாடுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த புலம்பெயர்ந்த வியாபாரிகளின் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த எதுவித பிரஞ்சைகளும் அற்று பினாமி சொத்துக்களுக்கான நாய்ச் சண்டையிலும் மக்களை ஏய்த்து விடுதலையின் பேரால் இன்னும் ஏதாவது சுரட்டக் கூடிய வழிவகைகளை கண்டறிவதிலுமே தமது நேரத்தினை செலவிடுகின்றனர்.

இவ்வாறு மக்களை ஏமாற்றி கடந்த காலங்களில் வயிறு வளர்த்த கூட்டம் இன்றும் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும்.

மாவீரர்களின் கனவுகள் நினைவாக்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் முதலில் யார் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையாக மக்களை நேசிப்பவர்கள் யார் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாவீரர்கள் எனக் கூறுபவர்களின் கனவினை உண்மையான மக்கள் நலன் கொண்டவர்கள் மூலம் நிறைவேற்ற பாடுபட வேண்டும். இதை விடுத்து 27ம் திகதி மாவீரர் நாள், அதை கொண்டாடும் இடத்திற்கு சென்று பற்றுச்சீட்டு வாங்கி அந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டு, வெளியில் விற்கும் கொத்துரொட்டியையும் சாப்பிட்டுவிட்டு, வீடு திரும்பும் போது அந்த நிகழ்வு நன்றாக இருந்தது, இந்த நிகழ்வில் அவரின் நடனம் சரி இல்லை எனக் விமர்சனம் செய்தபடி வீடு வந்து குளிருக்கு நன்றாக போத்தி படுத்துவிட்டு, மறுநாள் காலை வழமைபோல தமது வேலைகளுக்கு செல்வதுடன் ஒவ்வோருவரின் கடமையும் முடிந்துவிடவில்லை.

எமது போராட்டம் எந்தவகையில் நியாயமானது? அதில் புலிகளின் அரசியலற்ற இராணுவாதப் போக்கு எந்தளவு தவறனது? என்பதை ஒவ்வோரும் விமர்சன ரீதியில் ஆராய முற்பட வேண்டும். அவ்வாறு ஆராய முற்படும் போது போலிப் பிழைப்புவாதிகள் முதலில் இனம் காணப்படுவார்கள். அவர்களை இனங்கண்டு தூக்கி எறிவதன் மூலம் தான் அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர முடியும் .

புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாது பார்வையாளர்களாகவே வைத்திருந்தனர். இன்று புலிகளின் முன்னாள் போராளிகளை வடகிழக்கு மக்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்துவதில் இருந்து நாம் மக்கள் எந்த அளவிற்கு கடந்த காலத்தில் அரசியல உணர்வுடன் பங்களிப்பு செய்திருந்தனர் என்பதனை கண்டுகொள்ளலாம். ஒரு போராட்டம் ஒரு இனத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்டதாயின் அந்த போராட்டம் தோற்கடிக்கப்படின்; போராட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கும், போராளிகளுக்கும் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். ஆனால் வடகிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளுக்கோ அல்லது புலிப்போராளிகளுக்கோ மக்கள் ஆதரவு இன்று இல்லை. இது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி சிந்தியுங்கள்.

புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாததால், போராட்டத்துக்கு மக்கள் தாமாக முன்வந்து எந்த செயற்பாடையும் செய்யாததால் மக்களை வலுக்கட்டாயமாக தமது போராட்டத்தில் இணைத்தனர். இதனால் மக்கள் புலிகள் மீது ஒரு பயத்திலான ஆதரவு நிலையினையே எடுத்திருந்தனர். இவற்றை எல்லாம் விட இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்களை இலங்கை அரசு கொன்று குவித்தது போதாதென்று புலிகளும் தம்மை காப்பாற்றுவதற்காக, தம்முடன் நிற்க மறுத்த மக்களை கொன்றனர். புலிகளின் உண்மை முகத்தினை வன்னியில் நின்ற மக்கள் கண்டு கொண்டனர். புலிகள் தம்மை பாதுகாக்க, எந்த மக்களின் விடுதலைக்கு போராடுவதாக கூறினரோ அந்த மக்களை கொலை செய்ததனை நேரில் மக்கள் கண்டு கொண்டனர். மக்கள் விரோதிகளாகவே மக்கள் புலிகளை அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த உண்மைகளை புரிய இயலாதவாறு புலி வெறி ஊட்டப்பட்ட ஒருபகுதி புலம்பெயர் சமூகத்திடம், இந்த அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு இன்னமும் எடுபடுவது வேதனை அளிக்கும் அதேவேளை, ஏனைய புலம்பெயர் மக்களிடம் இவர்களின் முகச்சாயம் வெளிறத் தொடங்கி விட்டதனை காணவும் முடிகின்றது. இந்த வியாபாரிகள் முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்குள் பல பிரிவுகளாக பிளவுண்டுகிடக்கின்றனர். ஒரு பகுதி ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக தோற்றம் பெற்றுள்ளனர். சொந்த மக்களின் அரசியலுக்கான செயற்பாடுகளை கைவிட்டு விட்டு வல்லரசுகளின் பிராந்திய நலனுக்கான அரசியல் காய்நகர்த்தல்களிற்கு பயன்படுபவர்களாக மாறி, தமிழ் மக்களின் விடுதலையின் பேரால் விபச்சாராம் செய்கின்றனர். ஏனையோர் தமக்குள் குத்து வெட்டுக்களுடன் மகிந்த அரசுடன் மறைமுகமான தொடர்வுகளை கொண்டவர்களாக மாறிவிட்டனர்.

இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்ற புலம்பெயர் வியாபாரிகளுக்கிடையேயான சண்டைகள் ஒரு திட்டவட்டமான ஒரு செய்தியினை வெளிக்காட்டியுள்ளது. அது இவர்களின் தலைவன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டு விட்டான். புலிகள் இயக்கம் பிரபாகரனை, தமது தலைவர் என்பதனை பிரதானமான தாரகமந்திரமாக வைத்து கட்டப்பட்டது. இந்த மந்திரத்திற்கு கடந்த காலத்தில் புலிகளை விடுதலை அமைப்பு என நம்பிய அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர். புலிகளின் அரசியலுக்காக அல்ல. தனிமனிதனை சுற்றி சுற்றி கட்டப்பட்ட அமைப்பு அந்த மனிதன் உயிருடன் இல்லை என்று தெரிந்ததும் சின்னா பின்னமாவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமே அல்ல.

இந்த வியாயாரிகள் உண்மையிலேயே மாவீரர்களை மதிப்பவர்களாயின் கிழே உள்ளவற்றினை செய்ய தயாராக இருக்க வேண்டும். செய்வார்களா?

1. புலம்பெயர் தேசமெங்கும் பினாமி சொத்துக்களாக குவிந்துகிடக்கின்ற புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை பொதுநிதியமாக்கி போரினால் பாதிப்புக்குள்ளாகிய வன்னி மக்கள் மற்றும் போராளிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த வழி செய்ய வேண்டும்.

2. புலிகளின் தோல்விக்கு பிரதான காரணமான மக்கள் விரோத அரசியலை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

3. புலிகளின் (இவர்களின்) தலைவன் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

pallavar.blogspot.com/ aug 9 2018

Published in Tamil

20 08 2018

சீச்சீ இவையும் சிலவோ?
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து,
தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண்,
இன்று துயிலெழாமல் பஞ்சணையில் பாசம் வைத்துப் படுத்துக் கிடக்கிறாள். வந்த தோழியர்க்கோ கோபம்.
நேற்றொரு வார்த்தை இன்றொரு வார்த்தை பேசுவது நியாயமா? தோழியர் குற்றம் உரைக்க,

அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளே உறங்கிக் கிடந்த தோழி,
தன்மேல் குற்றம் சொன்னவர்களைப் பார்த்து,
'இதென்ன, நீங்கள் சின்னவிஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசுகிறீர்கள்.
நீங்கள் குற்றம் சொல்லவேண்டிய நேரமா இது?" என்றுரைத்து,
தன் குற்றம் மறைக்க முனைகிறாள்.
இஃது மணிவாசகரின் திருவாசகத்தில் வரும், திருவெம்பாவைப் பாடல் ஒன்றின் செய்தி.

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போது எப்போதும் இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்! சீச்சீ இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர்ப்பாதம் தந்தருள வருந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்து ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்

இதென்ன! அரசியல் கட்டுரையில் திடீரென சமயம் எழுதுகிறார். இவருக்கென்ன கழண்டு கிழண்டு விட்டுதோ? உங்களில் சிலபேர் முணுமுணுப்பது தெரிகிறது. நீங்கள் நினைப்பதிலும் தவறில்லை. கழறக்கூடிய சூழ்நிலையில்தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. நமது தமிழ்த்தலைவர்கள் அடிக்கும் கூத்தை கவனித்துப் பார்த்தால், எவருக்கும் கழண்டுதான் போகும். அதென்ன கூத்து என்கிறீர்களா? அதைச் சொல்லத்தான் ஐயா இந்தக் கட்டுரை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகளை சரிசெய்யவென, சம்பந்தரால் வருந்தி அழைத்து வரப்பட்ட வடக்கின் முதலமைச்சர், சில காலங்களிலேயே தனது சுயரூபத்தைக் காட்ட  தொடங்கியதும், பிளவை அடைக்க வந்தவரே பிளவுகளை உருவாக்க, அவர் செய்த மித்திரபேதத்தால் கூட்டமைப்புக்குள் விரிசல்கள் பெரிதாகியதும், அனைவரும் அறிந்த செய்திகள்.

அதுவரை காலமும் கூட்டமைப்பின் ஏக சக்கரவர்த்தியாய் சம்பந்தர் இயங்க,(?) கட்சியின் அனைத்து விடயங்களையும் முழு உரிமை பெற்ற இளவரசராய், சர்வாதிகாரத் தன்மையோடு இயக்கி வந்தார் சுமந்திரன். கூட்டமைப்பைப் பொறுத்தவரை பறக்கும் பட்டமாய் சுமந்திரன் விளங்க, கூட்டமைப்பில் இணைந்திருந்த ஏனைய கட்சிகள் அப்பட்டத்தின் வாலாய்த் தொங்கிக்கொண்டிருந்தன. தான் பறக்கும் இடமெல்லாம் அவ்வால்கள் வரவேண்டியதுதான் என்ற, அதிகாரத்தொனியோடு இயங்கி வந்த சுமந்திரனுக்கு, முதலமைச்சரின் போக்கு தலையிடியைத் தரத்தொடங்கியது. கூட்டமைப்பின் வாலாய் வேறு வழியில்லாமல் தொங்கிக்கொண்டிருந்த மாற்றணிகளின் தலைவர்கள், பட்டம் பறக்க வாலும் அவசியம் என்பதை முதலமைச்சரை முன்வைத்துக் காட்டத் தொடங்கினர். சுமந்திரனின் நிலை இக்கட்டுக்குள்ளானது.

திடீரென கூட்டமைப்புக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து, அறிவிப்பின்றி ரகசியமாய் நடத்தப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு, தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்களைத் தவிர, அக்கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்கள் சிலரும், மாற்றணித்தலைவர்களும் அழைக்கப்பட்டபோது,கூட்டமைப்பின் மாற்றணித்தலைவர்கள்,அதுவரை தம்மனத்துள் மூளாத்தீப் போல் வைத்திருந்த தம் பகையை வெளிப்படுத்தி,கூட்டமைப்பின் அனுமதியின்றியே அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அச்சம்பவத்துடன் கூட்டமைப்பின் மீதான சுமந்திரனின் இரும்புப்பிடி மெல்ல தளரத் தொடங்கியது.

முதலமைச்சரைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று, அவுஸ்திரேலியாவில் வைத்து அறிக்கை விட்டார் சுமந்திரன் .இடைக் காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தனது புரட்சிக் கருத்துக்களால்,உணர்ச்சிவயப்பட்ட தமிழ்க்குழுவினரை ஈர்த்திருந்தார் முதலமைச்சர்.அவரது அவ் ஆதரவுக்குழுக்கள் சுமந்திரனது கருத்துக்களால் கடுப்பேறிப்போயின.அக்குழுக்கள் ஊடகங்கள் மூலமும் சமூகவலைத் தளங்கள் மூலமும் வெளியிட்ட கருத்துக்களால்,முதலமைச்சரின் செல்வாக்கு மெல்லமெல்ல வளர ஆரம்பித்தது.சுமந்திரனின் கருத்துப்பற்றி தலைவர் சம்பந்தரிடம் ஊடகங்கள் வினவ,நடந்தது ஏதும் தெரியாதவர் போல அது சுமந்திரனின் சொந்தக் கருத்து எனக் கூறி,சுமந்திரனை நட்டாற்றில் கைவிட்டார் சம்பந்தர்.பிற்காலத்தில் முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினரால்,நம்பிக்கையில்லாப் பிரேரணை கவர்னரிடம் கையளிக்கப்பட்டபோது,தம் கதை முடிந்துவிட்டது என முதலமைச்சர் தளர்ந்ததாய் செய்திகள் வெளிவந்தன.பின்னர் தமிழ்மக்கள் பேரவை, தமிழ்காங்கிரஸ் போன்றவற்றின் ஆதரவு அணிகள்,முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து புரட்சி கிளப்ப,பழையபடி துணிவுபெற்ற முதலமைச்சர்,தன்னை அஞ்ஞா நெஞ்சத்து அரசியல்வாதி போல் காட்டி பெருமை தேடிக்கொண்டார்.அப்போதும் சம்பந்தர் இச்சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதாய் காட்டியும் பேசியும்,தன் தலைமையின் நிமிர்வின்மையை மீண்டும் நிரூபித்தார்.

தமிழரசுக்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை,தலைவரின் அனுமதியில்லாமலா கொண்டுவந்தனர்? எனும் கேள்வி,மக்கள் மத்தியில் எழுமே என்ற அடிப்படை தர்க்க அறிவைக்கூடப் புறக்கணித்து,சிறிதும் நாணமின்றி அவர் உரைத்த பொய்ச்சமாதானம்,அவர்மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்தது உண்மை.ஒன்று பிரேரணை தன் அனுமதியுடன்தான் நகர்த்தப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.அது இல்லையெனின் தன் அனுமதியில்லாமல் பிரேரணையைக் கொண்டு வர முயன்றவர்களை,தண்டித்திருக்கவேண்டும்.இரண்டுமில்லாமல் 'அசுமந்தமாய்" அமர்ந்திருந்தார் சம்பந்தர்.மொத்தத்தில் கூட்டமைப்பினர் தமது திட்டமிடப்படாத குழப்பமான செயல்களால்,முதலமைச்சரின் மக்கள் ஆதரவை தாமே பெருக்கிக் கொடுத்துத் தத்தளித்தனர்.இனத்திற்காக எதுவுமே செய்யாமலும்,ஏற்றுக்கொண்ட பதவியில் எதையும் சாதிக்காமலும்,அதிஷ்டவசத்தாலும் மற்றவர் பலயீனத்தாலும் பெருமை தானே தேடிவர,தமிழ்மக்களை ஈர்க்க வெற்றுச்சவடால்கள் மட்டும் போதும் என்பதை தெரிந்துகொண்ட,முதலமைச்சரின் துணிவும் பதவி ஆசையும் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.இடையில் அடுத்த முதலமைச்சர் மாவைதான் என சுமந்திரன் அறிக்கைவிட,அதனை ஆதரித்துப் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செய்தி வெளியிட,தமது பதவி பறிபோகும் நிலையை உணர்ந்து முதலமைச்சர் உசாரானார்.கூட்டமைப்புக்குச் சவால் விடும் வகையில்,தனது ஆதரவுக்கட்சிகளை துணை சேர்த்து தனித்து தேர்தலில் நிற்கப் போவதாய்,முதலில் ஊகமான அறிக்கைகளை விடத்தொடங்கினார்.பின்னர் சாதனைகள் ஏதும் செய்யாமலே முடியப்போகும் தனது பதவிக்காலத்தை,தன்னை முதலமைச்சராய்க் கொண்டு நீட்டித்துத்தரவேண்டுமென,ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை வைத்ததாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இங்ஙனமாய் வேகவேகமாக கூட்டமைப்புக்கு எதிராக,காய்களை நகர்த்தத் தொடங்கினார் முதலமைச்சர்.முதலமைச்சருடன் சந்தர்ப்பவசத்தால் இணைந்திருந்த கஜேந்திரகுமார் போன்றோருக்கு,மேற் செய்திகள் தேனாய் இனிக்கத் தொடங்கின.கடைசியாய் நடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில்,முதலமைச்சரின் அணியைக் கைவிட்டு,திடீரென கூட்டணித்தலைவர் ஆனந்தசங்கரியுடன் இணைந்த,சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும்,வரும் தேர்தலில் முதலமைச்சர் அமைக்க நினைக்கும் தேர்தல் கூட்டில் இணையத்தயாரென அறிக்கை விட்டனர்.திடீரென ஏற்பட்டிருக்கும் முதலமைச்சருக்கான ஆதரவை,தமக்குச் சாதாகமாய்ப் பயன்படுத்துவதே மேற் சொன்ன கட்சித்தலைவர்களது நோக்கமாய் இருந்தது.தம்மைப் போல கட்சிப்பின்னணிகள் ஏதுமற்றும், தனிமனிதராய் செல்வாக்குப் பெற்றிருக்கும் முதலமைச்சரைப் பயன்படுத்தி, கூட்டமைப்பின் செல்வாக்கை உடைத்தால்முதுமையுற்ற முதலமைச்சரின் காலத்திற்குப் பின்னால்,தமிழினத்தின் தலைமையை கூட்டமைப்பிடமிருந்து தாம் கைப்பற்றலாம் என்பதே,அவர்தம் கனவாய் இருந்தது.

கிட்டத்தட்ட மேற் தலைவர்களின் புத்திக் கணக்குகள்,முற்றுப் பெற்ற நிலைக்கு வந்திருந்தன.மக்களும் ஒற்றுமைதான் உயர்வின் வழி என்பதை மறந்து,நம் தலைவர்களின் சுயநல ராஜதந்திரத்திற்குப் பின்னால்,குழுக்களாய்ப் பிரிந்து அணிதிரளத் தொடங்கினர்.பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல்குறும்பும் என,ஒரு நாட்டைச் சீரழிப்பதற்கான வள்ளுவன் சொன்ன காரணிகளை,பேரழிவு கண்ட நம் இனத்தில் தலைவர்களும் மக்களுமாக,பெருமையோடு நம் அரசியல் பாதையில் பதிக்கத் தொடங்கினர்.எல்லாம் முடிவாகிவிட்டது என்ற நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென ஒரு பெருமாற்றம்.யாரும் கணிக்காத யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் யாழில் நடந்து முடிந்துநம் அரசியல் பாதையின் எதிர்காலம் என்னாகப்போகிறதோ என,பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.முதலமைச்சரின் உரைகளின் எழுத்தாக்கங்களை புத்தகமாக்கி,இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட அவரது ஆதரவாளர்கள் ஒழுங்கு செய்தனர்.அவ்விழாவுக்கென அடிக்கப்பட்ட முதல் அழைப்பிதழில் சம்பந்தரின் பெயர் இருக்கவில்லையாம்.பிறகு சம்பந்தரின் பெயர் இணைக்கப்பட்டு புதிய அழைப்பிதழ் ஒன்று அடிக்கப்பட்டது.போடப்பட்ட அரசியற் கணக்குகள் அத்தனையும் தலைகீழாகும் வண்ணம்,தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும்,விழாவின் முன்வரிசையை நிரப்பினர்.சம்பந்தருடன் உடன் வந்த சுமந்திரனை,கைலாகு கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர்.சம்பந்தருக்கு மேடையில் இடம்.அதுவரை பிரிவுபற்றி பேசி வந்த முதலமைச்சர்,திடீரென இனநன்மைக்காய் கொள்கை அடிப்படையில் அனைவரும் உடன்படுவது பற்றிப் பேசி,அதுவரை எதிர்காலத் தலைமைக் கனவுகளுடன்,தன்னோடு உடன் இருந்தோர் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

நூல் வெளியீட்டன்றும் முதலமைச்சரின் 'குசும்பு" குறையவில்லை.பகை மறந்து தன்னைத் தேடி வந்த சுமந்திரனை,குறிப்பால் தன் பகைவராய்ச்சுட்டி அவர் பேச,அவருக்கான கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்து,'தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி" இதிலென்ன ஆச்சரியம்?யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரையும்,மேடைக்கு அழைத்து நூல்களை வழங்கி கௌரவித்த முதல்வர்,ஏனோ சுமந்திரன், மாவை போன்றோரை மேடைக்கு அழைக்காமல்,வேண்டுமென்றே அலட்சியம் செய்தார்.நாகரீகம் மறந்து வலிய வந்தோரை இழிவு செய்த முதலமைச்சரின் ஆணவப்போக்கு,பலரையும் முகம் சுழிக்கவைத்தது.விழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் வெளிச்சென்ற பின்பு,அரச அட்டவணையில் இயங்கும் டக்ளஸ் போன்றவர்களை,கொள்கை ரீதியான இணைப்பில் இணைக்கமுடியாது என,பகிரங்கமாய் திருவாய் மொழிந்தார் முதலமைச்சர்.இதே டக்ளஸை சில காலத்தின் முன்,முதலமைச்சர் பாராட்டியதை தமிழ் மக்கள் மறக்கவில்லை.சரி அதைத்தான் விடுவோம்.இணைப்பில் சேர்க்கமுடியாத டக்ளஸை தனது புத்தக வெளியீட்டில் மட்டும்,அழைப்பு விடுத்து முதல்வர் இணைத்துக் கொண்டது எங்ஙனம்?ஆட்டுமந்தை மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் எனும் துணிவேயாம்.

ஏதோ ஒரு வெளிச் சக்தியின் அழுத்தமே முரண்டுபிடித்து நின்ற,இவ்விரு குழுவினரையும் ஒன்றாக்கி இருக்கவேண்டும் என்பதைக் கணிக்க,பெரிய அரசியல் ஞானம் ஏதும் தேவையில்லை.தமிழரசுக்கட்சியின் சரணாகதி நிலை,அந்த வெளிச்சக்தியின் அழுத்தத்தாலேயே நிகழ்ந்திருக்கவேண்டும்.ஆனால் தன்மானம் அற்ற அவர்களின் அச்சரணாகதி நிலையை,எவராலும் ரசிக்கமுடியாது என்பது திண்ணம்.யாரை நீக்கப்போகிறோம் என்றார்களோ அவர் முன்னால்,அவரது புறக்கணிப்புக்களைப் பொறுப்படுத்தாது கைகட்டி பணிந்து நின்ற,தமிழரசுக்கட்சியினரின் செயலை எந்த தன்மானம் உள்ள தமிழனும் ரசிக்கமாட்டான்.தம் பதவிப்பித்திற்காக தன்மானத்தை இழக்கத் தயாராகவிருக்கும் இவர்களாதமிழினத்தின் தன்மானத்தைக் காக்கப் போகிறார்கள்?வெளி அழுத்தங்களால் இணைப்பு என்ற நிலை வந்திருந்தாலும் கூட,ஒரு பாரம்பரியமிக்க கட்சி,தன்னால் நியமிக்கப்பட்டு பதவி பெற்றபின் தலையிடி தரும் முதல்வரை,வலிய தேடிச் சென்று இந்த அளவுக்கு தாழ்ந்து போகாமல்,தமது நிகழ்ச்சி ஒன்றிற்கு முதலமைச்சரை அழைத்து மதித்து இணைந்திருக்கவேண்டும்.அவர்களது இந்த விட்டுக்கொடுப்பில் நாகரீகத்தினதோ இன நன்மையினதோ,சிறிய சாயலைத்தானும் காணமுடியவில்லை என்பது மட்டும் உறுதி.அத்தனையும் பதவிப்பயத்தால் விளைந்த அசிங்கங்கள் என்றே தோன்றுகின்றன.

முதல்வரின் செயற்பாட்டிலும் அதே பதவிப்பரிதவிப்பைத்தான் காணமுடிகிறது.நேற்றுவரை புதுக்கட்சி தொடங்குகிறேன் என்று மிரட்டிக்கொண்டிருந்தவர் அவர்.இவரது துணிவையும் மக்கள் ஆதரவையும் கண்டு,கட்சிகள் சில, 'கூட்டமைப்பு உடைந்தது" என்று ஆரவாரித்து,'நீயே கதி ஈஸ்வரா!" என்று பஜனைபாடி,முதலமைச்சருக்காக இணையங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியிலும் கூட,கொடிபிடித்துக் கூக்குரலிட்டு நின்றனர்.இன்று திடீரென முதலமைச்சர் தமிழரசுக்கட்சியினரை கைபிடித்து வரவேற்ற காட்சி கண்டு,அவர்தம் தலைகளெல்லாம் கவிழ்ந்து கிடக்கின்றன.அடிக்கடி நிறம் மாறும் நிலையான புத்தி இல்லாத,இந்த மனிதனை நம்பினால் இதுதான் கதி என்று,அவர்களில் பலர் விழா மண்டபத்தில் முணுமுணுத்து நின்றதாய்க் கேள்வி.இவர் எவரது நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார் என்பது தெரியாமல்,கூட நிற்பவர்களே இன்று குழம்பி நிற்கின்றனராம்.

எப்படிப் பேசினால் தமிழ்மக்களுக்குப் பிடிக்கும் என்பதை நன்கு அறிந்துவிட்ட முதலமைச்சர்,அன்றைய கூட்டத்திலும் மற்றவர்கள்மேல் 'நொட்டை" வாசித்து,மற்றவர்களெல்லாம் குற்றவாளிகள் என்பது போலவும்,தான் ஒருவரே தூயவர் என்பது போலவும் காட்டி,மற்றவர்களுக்கு நிபந்தனை விதித்து எக்காளமிட்டு உரையாற்றியிருக்கிறார்.அடுத்தடுத்த நாட்களிலேயே வந்த முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன்முறையீட்டுத் தீர்ப்பு,சத்திய வித்தகரின் உண்மைத் தன்மையை ஐயத்திற்கு இடமாக்கியிருப்பது வேறு விடயம்.அன்றைய நிகழ்வில் சாத்தியமற்ற முதலமைச்சரது நிபந்தனையை,தலைகுனிந்து கேட்டிருந்த சம்பந்தர்,திடீரென ஞானம் உதித்தவர் போல் இன்றைய நிலையில் இன ஒற்றுமையின் அவசியத்தை,வலியுறுத்திப் பேசி அமர்ந்திருக்கிறார்.முன்பு உடன் கூடியிருந்த கட்சிகளை உதாசீனம் செய்கையிலும்,'வீட்டுக்குள்" அடங்காத எவரும் நாட்டுக்கு உதவார் என்றாற்போல் அலட்சியமாய் நடக்கையிலும்,கூட்டமைப்பை ஒரு கட்சியாய்ப் பதிவு செய்யும் கோரிக்கை வந்தபோது,அதைத் துச்சமாய் நினைந்து மறுக்கையிலும்,இன நன்மைக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணராத, உரைக்காத சம்பந்தர்,'தேர்தல் காய்ச்சல்" வந்ததும் அவ் அவசியத்தை உணர்ந்து உரைப்பதன் பின்னணி,பதவி ஆசையே என்பதை எவர்தான் உணரார்?

மாவையே அடுத்த முதலமைச்சர் என்று,முன்பு அடித்துப் பேசிய சுமந்திரன்,இப்போது அது தன் சொந்தக்கருத்து என்றும்,கட்சியின் முடிவு எது என்று தனக்குத் தெரியவில்லை என்றும்,கட்சியின் முடிவை அனுசரித்து தான் நடப்பேன் என்றும்,உரைத்திருப்பது வேடிக்கையின் உச்சம்.வருங்காலத்திலேனும் எது தம் சொந்தக் கருத்து,எது தம் கட்சியின் கருத்து என்பதை நம் தலைவர்கள் பிரித்துரைப்பார்களாயின்,தமிழ் மக்களும் ஏன் ஒருசில தமிழ்க்கட்சிகளும் கூட ஏமாளிகள் ஆகாமல் இருக்கலாம்.மொத்தத்தில் ஒன்று தெரிகிறது.முதலமைச்சரானாலும் சம்பந்தரானாலும்,இன நன்மை அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.பதவிச்சுகமே அவர்களது முதல் பற்றுதல் என்பதே அது.அப்பதவிச் சுகத்திற்காகவே இன நன்மை பற்றி,அவர்கள் இராப்பகலாய்ப் பேசுகின்றனர்.பின் நாற்காலிச் சுகம் கிடைத்துவிட்டால் எல்லாம் மறக்கின்றனர்.முன்னர் இப்படி இப்படிச் சொன்னீர்களே என,எவராவது அவர்களது குறைகளை சுட்டிக்காட்டினால்,'சீச்சீ இவையெல்லாம் தீர்வு நோக்கி நகரும் இவ்வேளையில் பேசுகிற பேச்சா?"எனக் கேட்டு வாய் அடைத்து விடுகின்றனர்.மொத்தத்தில்,முதல் பந்தியில் நான் சொன்ன,திருவெம்பாவை பெண்களின் நிலைதான் நம் தலைவர்களின் நிலையும்.பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போ தெப்போ(து) இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்! சீச்சீ இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ!மேற்பாடலில் பரஞ்சோதி என்பதற்குப் பதிலாக இனநன்மை என்றும்,போதார் அமளிக்கு என்பதற்குப் பதிலாக பதவி நாற்காலிக்கு என்றும்,நேரிழையாய் என்பதற்குப் பதிலாக தலைவனே என்றும்,நேரிழையீர் என்பதற்குப் பதிலாக மக்களே என்றும் சொற்களை மாற்றிப் பாருங்கள்.பாசம் இன நன்மைக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போ தெப்போ(து) இப்போ பதவி நாற்காலிக்கு நேசமும் வைத்தனையோ தலைவனே? என்று மக்கள் கேட்க,மக்களே! சீச்சீ இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ!என்கின்றனர் தலைவர்கள்.இவ்வளவும் என் மனத்தில் உதித்தவை.இன்னும் சில குசும்பர்கள்விண்ணோர்கள் ஏத்துதற்குகூசும் மலர்ப்பாதம் தந்தருள வருந்தருளும் என்ற அடிக்கு,உலக நாடுகள் நினைக்க முடியாத,தீர்வுத் திட்டத்தை தருவதற்காய் வந்து அருள இருக்கின்ற என்றும்,தேசன் சிவலோகன் தில்லைச்சிற்றம்பலத்து ஈசனார்க்கு எனும் அடிநமது மாண்புமிகு ஜனாதிபதியையும் பிரதமரையும் குறிக்கும் என்றும்,அன்பார் யாம் ஆடேலோ ரெம்பாவாய் எனும் அடிக்கு,அத்தலைவர்களுக்கு நாம் அன்புடையோம் என்றும்,பொருளுரைக்கத் தலைப்பட்டால்,அதற்கு நான் பொறுப்பாளி அல்லன் என்று இப்போதே சொல்லிவிட்டேன்.

இப்போது தெரிகிறதா?நம் தலைவர்கள் செய்வதும் திருவெம்பாவை கூட்டுப் பிரார்த்தனையை ஒத்த ஒன்றுதான் என்று.தாளம் போடவும் சங்கூதவும் அங்கு போலவே இங்கும் நம்மக்கள் தயாராக இருக்கிறார்கள்.என்ன? ஒரே ஒரு வித்தியாசம் என்றால்,திருவெம்பாவை பஜனையில் துயின்றவர்கள் எழுப்பப்படுகிறார்கள்.நம் தலைவர்களின் பஜனையிலோ,விழித்திருப்போரும் உறங்க வைக்கப் படுகிறார்கள்.ஏமாற்றுபவனில் குற்றமில்லை ஏமாளிகளில்தான் குற்றம்!

✜ ✜ ✜✜ ✜   uharam.com  jul 06 2018

Published in Tamil

10 08 2018

தமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்!

kamadenu.in dated on 8th aug 2018

ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அந்தத் தலைவரின் சமீபத்திய நடவடிகைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது பொதுவெளியில் உருவான கருத்துகளால் மறைக்கப்படுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது...

 

Published in Tamil

05 08 2018

தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?- நிலாந்தன்

“தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்”…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

இதே கருத்துப்பட அமைச்சர் மனோகணேசனும் அண்மைக் காலமாகப் பேசி வருகிறார். முஸ்லிம் தலைவர்களைப் போல கூட்டமைப்பும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத் தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தொனிப்பட அவர் கூறியிருக்கிறார்.அதே சமயம் கடந்த வாதத்திற்கு முதல் வாரம் முதுலமைச்சர் விக்னேஸ்வரன் “முதலில் அரசியற் தீர்வு பின்னரே அபிவிருத்தி” என்று கூறியிருக்கிறார்.

வடமாகாண ஆளுநர் குரே.

ஆளுனர் குரேயும் அமைச்சர் மனோகணேசனும் கூற வருவது இணக்க அரசியலைத்தான். அதற்கவர்கள் முஸ்லிம் தலைவர்களை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்.

ஆனால் இணக்க அரசியல் என்பது என்ன? சம அந்தஸ்துள்ள தரப்புக்கள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து இணங்கி அரசியல் செய்வதுதான் அது.

இங்கு சம அந்தஸ்துள்ள தரப்புக்களாயிருப்பது என்பது ஓர் அடிப்படையான முன் நிபந்தனையாகும். ஒருவர் மற்றவரை மதித்து பரஸ்பரம் நலன்களின் அடிப்படையில் விட்டுக்கொடுத்து இணங்க வேண்டும்.ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரம் அதற்கு இடம் கொடுக்குமா? இல்லை. தமிழ் முஸ்லிம் மலையகத் தலைவர்கள் அரசாங்கத்தை எதிர்க்காமல் அரசாங்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வதுதான் இங்கு இணக்க அரசியல் எனப்படுகிறது.அதாவது கடலில் சிறிய மீன்களைத் தின்னும் பெரிய மீனின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு சிறிய மீன்கள் தங்களைச் சுதாகரித்துக் கொள்ளும் ஒரு நடைமுறைதான். ஒருவர் மற்றவரை மதிக்கின்ற ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற நிலையில் இங்கு இணக்கம் ஏற்பட முடியுமா?

இணக்க அரசியல் என்றதும் இலங்கைத் தீவில் முன்னுதாரணமாகக் காட்டப்படுவது முஸ்லிம் அரசியல் ஆகும். ஆனால் மலையக அரசியலை ஏன் ஒருவரும் முன்னுதாரனம் காட்டுவதில்லை? கடந்த பல தசாப்தங்களாக மலையகத் தலைவர்கள் அரசாங்கங்களோடு இணங்கிச் சென்று சாதித்தவை எவை?முஸ்லிம்களின் விடயத்தில் முதலாவது சிறுபான்மைக்கு எதிராக இரண்டாவது சிறுபான்மையை அரவணைக்க வேண்டிய தேவை கொழும்புக்குண்டு.இனப்பிரச்சினையின் விளைவாகத்தான் முஸ்லிம் இணக்க அரசியல் ஒப்பீட்டளவில் வெற்றி பெற முடிந்தது. மாறாக முஸ்லிம்களை இச்சிறு தீவின் சம அந்தஸ்துள்ள சகஜீவிகளாகவும் சக நிர்மாணிகளாகவும் சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் அல்ல.எனவே இலங்கைத்தீவின் அரசியல் கலாசாரத்தைப் பொறுத்தவரை இணக்க அரசியல் எனப்படுவது பிரயோகத்தில் சுதாகரிப்பு அரசியல்தான் அல்லது முகவர் அரசியல் தான்.

அதாவது அரசாங்கத்தின் முகவராகச் செயற்படுவது. மாறாக தனது மக்களின் மதிப்புக்குரிய பிரதிநிதியாக, தமிழ் அரசியல்வாதி ஒருவர் கொழும்பில் சம அந்தஸ்துடன் விட்டுக்கொடுத்து ஏற்படுத்தும் ஓர் இணக்கம் அல்ல.

இங்கு மேலும் ஓர் உதாரணத்தைக் கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வன்னியில் உள்ள ஓர் அரசியல் ஆர்வலர் என்னைச் சந்தித்தார். ஊரில் மிகவும் செல்வாக்குள்ள அவரை தென்னிலங்கை மையக்கட்சி ஒன்று அணுகியிருக்கிறது.அக்கட்சியுடனான பேச்சுக்களின் பின் அவர் என்னிடம் வந்தார். “அவர்கள் என்னை அமைப்பாளராக இருக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் அமைப்பாளருக்குரிய அதிகாரத்தையும் அந்தஸ்தையும் தரத்தயாரில்லை.அந்தக்கட்சியின் அமைப்பாளராக எனது பிரதேசத்தில் எனது மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பதற்கு உரிய ஏற்பாடு எதுவும் இல்லை.எங்களோடு சேர்ந்து வேலை செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். கை குலுக்குவோம் வாருங்கள் என்கிறாரகள். ஆனால் இரண்டு கைகளையும் இறுகப் பொத்திக் கொண்டு கை குலுக்கக் கேட்கிறார்கள்.குறைந்தது ஒரு கையையாவது விரிக்கலாம்தானே? அவர்களுக்குத் தேவைப்படுவது முகவர்கள்தான். அமைப்பாளர்கள் அல்ல” என்று அவர் என்னிடம் சொன்னார்.

அண்மை வாரங்களாக விஜயகலாவிற்கு நடப்பவற்றையும் இங்கு சுட்டிக்காட்டலாம். விஜயகலா புலிகளைப் பற்றிப் பேசியது பொய், அவர் புலிகளுக்கு விசுவாசமில்லை.ஆனால் தனது வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கு அது அவசியம் என்று அவர் கருதியிருக்கலாம். தனது வாக்காளர்களின் பொது உளவியலைக் கவனத்திலெடுத்து ஒரு தமிழ்த்தலைவர் பொய்ப் பிரகடனங்களைக்கூடச் செய்ய முடியாத அளவுக்குத் தான் வடக்கில் முகவர் அரசியல் காணப்படுகிறது.அதாவது மெய்யான இணக்க அரசியலுக்குரிய ஓர் அரசியற் கலாச்சாரம் இலங்கைத் தீவில் கிடையாது. மாறாக சரணாகதி அரசியல் அல்லது முகவர் அரசியல் தான் இங்கு உண்டு.பெரிய மீன், சிறிய மீனை விழுங்கிக் கொண்டிருக்கும் வரை இரண்டுக்குமிடையே சமத்துவமும் சம அந்தஸ்தும் இருக்காது. மாறாக சின்ன மீன்களுக்குரிய சட்டப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு சின்ன மீன்களும் பெரிய மீனும் இச்சிறிய தீவின் சக நிர்மானிகள் என்ற அடிப்படையில் ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.அண்மையில் விக்னேஸ்வரன் “முதலில் அரசியற் தீர்வு பின்னரே அபிவிருத்தி” என்று கூறியதும் அதைத்தான். மெய்யான இணக்கஅரசியல் எனப்படுவது தமிழ் மக்களின் கூட்டுரிமைகளை ஏற்றுக் கொள்வதிலிருந்துதான் தொடங்குகிறது.விக்னேஸ்வரன் ஒரு முதலமைச்சராக, நிர்வாகியாக, தலைவராக கெட்டித்தனமாகச் செயற்படவில்லை என்று கூறுபவர்கள் அவர் தன்னுடைய இயலாமையை மறைக்க எதிர்ப்பு அரசியல் கதைக்கிறார் என்று விமர்சிக்கப் பார்க்கிறார்கள்.மாகாணசபை எனப்படுவது சட்டவாக்க அந்தஸ்துள்ள ஒரு சபை, அதன் தலைவரான விக்னேஸ்வரன் கிழக்கில் பிள்ளையான் சாதித்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.ஆனால் விக்னேஸ்வரன் கூறுவது கொள்கை அடிப்படையிலும் சரி பிரயோக அடிப்படையிலும் சரி. ஏனெனில் அபிவிருத்தி எனப்படுவதே ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமைகளில் ஒன்றுதான்.

உரிமையில்லாத தூய அபிவிருத்தி அரசியல் என்று ஒன்று கிடையாது. அபிவிருத்தி சார் உரிமைகளின் ஒரு பகுதிதான் திட்டமிடும் உரிமைகளும். எனவே அபிவிருத்தி சார் உரிமைகனற்ற மக்களால் தமது தலைமுறைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துத் திட்டங்களைத் தீட்டவும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அவர்களால் முடியாது.

எதை அபிவிருத்தி செய்வது? எங்கு செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாமும் அபிவிருத்தி உரிமைகள் தான்.

தனது நிலத்தின் மீதும் நிலம் சார் வளங்களின் மீதும் கடலின் மீதும் கடல் படு திரவங்களின் மீதும் காட்டின் மீதும் ஏனைய இயற்கை வளங்களின் மீதும் உரிமையற்ற ஒரு மக்கள் கூட்டம் அபிவிருத்தி தொடர்பாக முடிவெடுக்க முடியாது.எனவே உரிமைகளற்ற அபிவிருத்தி அரசியல் என்று ஒன்றே கிடையாது. அவ்வாறு உரிமையற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மீது அபிவிருத்தித் திட்டங்களைத் திணிப்பதும் ஒடுக்குமுறையின் ஒரு வடிவம்தான். அம்மக்களுக்குச் சொந்தமான வளங்களை கோப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு அனுமதிப்பதுதான்.எனவே அபிவிருத்தி எனப்படுவது சலுகையோ சன்மானமோ அல்ல. அது உரிமை. சம அந்தஸ்தில்லாத தரப்புக்களுக்கிடையிலான இணக்க அரசியலால் அதை முன்னெடுக்க முடியாது.முகவர்களாலும் அதை முன்னெடுக்க முடியாது. முகவர்கள் உள்ளுர் எஜமானர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டு கோப்பரேற்றுக்களுக்கும் தரகர்களாகச் செயற்படுவார்கள்.எனவே அவர்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தியானது வளச் சுரண்டலாகவும் இயற்கை அழிவாகவும் முடியும். அது அபிவிருத்தி; அல்ல. சுரண்டல்தான். கொள்ளைதான். கட்டமைப்பு சார் இனப்படுகொலைதான்.எனவே ஓர் அபிவிருத்தித் திட்டத்தைத் தெரிவு செய்யும் போது அது அதன் மெய்யான பொருளில் நீண்டகால நோக்கில் அபிவிருத்தியா? அல்லது இயற்கை அழிவா? என்பது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு விக்னேஸ்வரனுடன் ஒரு சந்திப்பின் போது அவர் ஒரு விடயத்தைக் குறித்துப் பேசினார். மன்னாரில் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை அமைப்பதற்கு மாகாண சபையிடம் கேட்கப்பட்டதாகவும் தாம் அதை நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.அத்திட்டம் முதலில் அம்பாந்தோட்டைக்கு கொண்டு வரப்பட்டது எனவும் அது சுற்றுச்சூழலுக்குத் தீங்கானது என்று அங்கு எதிர்ப்புக் காட்டப்பட்டதையடுத்து அது கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.அம்பாந்தோட்டையில் கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை மன்னாரில் அமுல்படுத்த முற்பட்டிருக்கிறார்கள். அதை விக்னேஸ்வரன் எதிர்த்திருக்கிறார். ஆனால் வெளித் தோற்றத்திற்கு அவர் ஓர் அபிவிருத்தித் திட்டத்தை எதிர்க்கிறார் என்றே காட்டப்படும்.இவ்வாறானதோர் பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் வரும் சமூகத்திற்கும் இயற்கைக்கும் தீங்கான திட்டங்கைள நிராகரிப்பதற்கு வேண்டிய உரிமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றே விக்னேஸ்வரன் கேட்கிறார்.அவ்வாறான கூட்டுரிமைகளை பாதுகாக்கும் விதத்திலான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்றே அவர் கேட்கிறார். அவ்வாறான ஒரு தீர்வை முன்வைக்காமல் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைக் குறித்தே அவர் கேள்வி கேட்கிறார்.

அதற்காக அவரைப் பிள்ளையானோடு ஒப்பிட முடியாது. பிள்ளையான் யார்? மகிந்த ஆட்சியில் கிழக்கில் அரசாங்கத்தின் முகவராகத் தொழிற்பட்டவர். அவர் ஓர் எதிர்ப்பு அரசியல் வாதியல்ல. முகவர் அரசியல்வாதி.தனது முகவருக்கு அவர் கேட்டதை அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஆனால் அதைக்கூட அப்போதிருந்த அரசாங்கம் செய்யவில்லை என்று பிள்ளையான் ஒருமுறை குறைபட்டுக் கொண்டார்.ஒரு பியோனை நியமிக்கவும் தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியதாக ஒரு ஞாபகம். தனது முகவரிற்கே ஒரு கட்டத்துக்கும் மேல் அதிகாரங்களை வழங்கத் தயாரற்ற தலைவர்களே தெற்கில் இருக்கிறார்கள்.இந்த லட்சணத்தில் பிள்ளையானுடன் விக்னேஸ்வரனை ஒப்பிட முடியாது. விக்னேஸ்வரன் துலக்கமாகவும் கூராகவும் எதிர்ப்பு அரசியல் கதைக்கிறார். அவர் கதைக்க மட்டும்தான் செய்கிறார் என்றுதான் அவரை விமர்சிக்கலாம். ஆனால் அதற்காக அவரை அரசாங்கத்தின் முகவர்களோடு ஒப்பிட முடியாது.

எனவே அபிவிருத்தியா? தீர்வா? என்ற விடயத்தில் விக்னேஸ்வரன் கூறுவது சரி. ஆனால் அவர் எங்கே பிழை விடுகிறார் என்றால், அவருடைய எதிர்ப்பு அரசியல் அதிகபட்சம் அறிக்கை அரசியலாகக் காணப்படுவதுதான். இது முதலாவது. இரண்டவாது அவர் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை போதியளவுக்குத் தீர்க்கத் தவறிவிட்டார் என்பதுதான்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரதானமாக இரண்டு வகைப்படும். ஒன்று நீண்டகாலத் தீர்வுக்குரியவை. மற்றது உடனடித் தீர்வுக்குரியவை. இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது நீண்டகாலத்துக்குரியது.அதே சமயம் போரின் விளைவுகளிற் பல உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய உடனடிப் பிரச்சினைகள். அவற்றுக்குரிய உடனடித் தீர்வுகளை உள்ளடக்கிய ஒரு பொருளாதார கொள்கைத்திட்ட வரைபை மாகாணசபை அதன் தொடக்கத்திலேயே உருவாக்கியிருந்திருக்க வேண்டும்.இது தொடர்பில் விக்னேஸ்வரன் பதவியேற்ற கையோடு நான் எழுதியிருக்கிறேன். வேறு சிலரும் எழுதியிருக்கிறார்கள். மாகாண சபையின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் கிட்டத்தட்ட சில மாதங்களே இருக்கும் ஒரு பின்னணியில் இதை நினைவூட்ட வேண்டியிருப்பது துயரமானது.விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலை விமர்சிப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பான பரப்பு இது. எனினும் சம அந்தஸ்தில்லாத சரணாகதி அரசியலை அல்லது சலுகை மைய அரசியலை அல்லது முகவர் அரசியலை இதை வைத்து நியாயப்படுத்திவிட முடியாது.

ஆளுநர் குரே தொழில் வழி அரசுத் தலைவரின் பிரதிநிதியாக அல்லது முகவராகச் செயற்படுபவர். அவர் இணக்க அரசியலைப் பற்றிப் பேசுவார்தான்.ஆனால் மனோ கணேசன் அப்படிப்பட்டவர் அல்ல. தெற்கு மையத்திலிருந்து கொண்டு வட – கிழக்கு அரசியலைக் குறித்து அக்கறையுடன் வெளிப்படையாகப் பேசுபவர் அவர்.மகிந்தவின் காலத்தில் அவர் காட்டிய துணிச்சலை தமிழ் மக்கள் மதிப்புடன் நினைவு கூர்வார்கள். கொழும்பு மைய அரசியலில் மனோகணேசனின் பாத்திரம் குறிப்பாகத் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.தமிழ்த் தலைவர்களில் அதிகம் வெளிப்படையாகவும் ஒளிவு மறைவின்றியும் அதே சமயம் கூராகவும் கருத்துத் தெரிவிப்பவர் அவர். தமிழ் முகநூல் பரப்பில் துணிச்சலோடும் ஜனநாயகப் பண்போடும் தனது பிரசன்னத்தைத் தொடர்ச்சியாகப் பேணி வரும் மிகச்சில அரசியல்வாதிகளில் ஒருவர்;,யாப்புருவாக்கம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு அதிகம் உண்மைகளைச் சொன்னவரும் அவர்தான். அண்மையில் கூட கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அவர் யாப்பைப் பற்றிப் பேசியிருந்தார்.இத்தனைக்கும் அவர் ஓர் அமைச்சர். அரசாங்கத்தின் ஓர் அங்கமாயிருப்பவர். முஸ்லிம் தலைவர்களை முன்னுதாரணமாகக் காட்டி கூட்டமைப்பையும் அரசாங்கத்துடன் இணையுமாறு அவர் கேட்கிறார். ஆனால் யாப்புருவாக்கம் பிழைத்து வருகிறது என்றும் அவரே கூறுகிறார்.

யாப்பை ஏன் மாற்ற வேண்டும்? விக்னேஸ்வரன் கூறுவது போல தீர்வை முதலில் கொண்டுவரத்தானே? தீர்வு வராது என்றால் என்ன பொருள்? தமிழ் மக்களின் கூட்டுரிமைகளுக்குச் சட்டப்படியான அந்தஸ்து கிடைக்காது என்பதுதானே? ஆயின் உரிமையில்லாத இடத்தில் எப்படி இணக்க அரசியல் சரிப்பட்டு வரும்? தமிழ் மக்களின் கூட்டுரிமையை அங்கீகரிக்க முடியாத ஒரு கூட்டரசாங்ககத்தின் அங்கமாய் உள்ள ஓர் அமைச்சர் யாப்பு முயற்சிகள் பிசகும் போது அரசாங்கத்துடன் மோத வேண்டும்.அவர் தனது துணிச்சலையும் வெளிப்படைத் தன்மையையும் தமிழ் மக்கள் மீதான நேசத்தையும் நிரூபித்துக் காட்ட வேண்டிய இடம் அதுதான். மாறாக தமிழ்த் தலைவர்களை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என்று கேட்கலாமா? 

அல்லது சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையே இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று கேட்க வேண்டுமா? தமிழ் மக்களை இச்சிறிய தீவின் சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளும் ஓர் உடன்படிக்கை எழுதப்படாத வரையிலும் தமிழ்த் தலைவர்களின் இணக்க அரசியல் எனப்படுவது அதிக பட்சம் ஒன்றில் முகவர் அரசியலாக இருக்கும் அல்லது சலுகை மைய அரசியலாகத்தான் இருக்கும்.ஒரு புறம் உரிமைகளை வழங்கத் தயாரற்ற ஆனால் முகவர் அரசியலை ஊக்குவிக்கும் தென்னிலங்கைத் தலைவர்கள். இன்னொரு புறம் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும், உடனடிப் பிரச்சினைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து உரிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்கத் தவறும் தமிழ் எதிர்ப்பு அரசியல்வாதிகள்.இந்த இருவருக்குமிடையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ காணிக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தெருவோரங்களிலும், காட்டோரங்களிலும் 500 நாட்களுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

- நிலாந்தன் ilakkiyainfo.com 01 08 2018

Published in Tamil